வர வர காதல் கசக்குதைய்யா – 26
ஆதித்யன் பேசிய பிறகும் கூட பாண்டியன் அமைதியாக இருக்க, அதன் பிறகு என்ன பேச எனத் தெரியாமல், மீண்டும் “அங்கிள் இங்க தேனியில ஒரு வீடு வாங்கியிருக்கேன். அம்மாவோட ஆசைக்காக, அம்மாவுக்கு ஹெல்த் இஸ்ஸூஸ்னால ஆல்ரெடி விஆர்எஸ் வாங்கிட்டாங்க. அப்பாவுக்கு இன்னும் ஃபைவ் யேர்ஸ் செர்விஸ் இருக்கு. இருந்தாலும் அவரையும் விஆர்எஸ் வாங்க சொல்லி இங்க வரவைக்கலாம்னு நானும் ஆதனும் ப்ளான் செய்துருக்கோம்.” என்றவன் சிறு இடைவெளிவிட்டு, “அவங்க வெட்டிங்க் டேக்கு அந்த வீடு கிப்டா கொடுக்கலாம்னு இருக்கோம். அதுக்குள்ள வேலை எல்லாம் முடியனும், எனக்கு இங்க யாரையும் தெரியாது. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணா பரவாயில்ல” என அவரைப் பேச வைத்தான்.
பாண்டியனும் மற்றப் பேச்சுக்களை விடுத்து, வேறு யோசிக்காமல் எந்த இடம், எங்கு இருக்கிறது, யார் கான்ட்ராக்டர், பணம் எவ்வளவு என எல்லாவற்றையும் கேட்டு, அவருக்குத் தெரிந்தவற்றையும் பேசிவிட்டு, “ஓக்கே நான் கிளம்புறேன்..” என்றவர் பின் திரும்பி “ஆருக்கிட்ட பேசுறீங்களா.?” என்றார் மிகவும் கூர்மையாக.
அந்தப் பேச்சிற்கு அவனால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை, இருந்தும் இப்போது நிதானமாக அதற்குப் பதில் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. பாதிப் பேச்சில் கிளம்புகிறேன் என்று சொன்னது, ஆதித்யனுக்கு கொஞ்சமே ஏமாற்றத்தைக் கொடுக்க, அது கொடுத்த எரிச்சலில் “நான் பேசுறது இல்ல அங்கிள், அதுக்குத் தேவையும் இல்ல, ஆனா பாருங்க உங்க பொண்ணுதான் பேசிட்டு இருக்கா..” என்றான் அவரை நேர்ப்பார்வைப் பார்த்து.
அந்தப் பார்வை அவரையும் உசுப்பிவிட்டது. இனி பேசமாட்டா, நான் பார்த்துக்குறேன் என்றவர் மனதுக்குள் ‘அப்பனுக்கும் புள்ளைக்கும் என் வீட்டுப் பொண்ணுங்கன்னா கிள்ளுக்கீரைங்க தான் போல’ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
இப்போது இவனுக்குப் பதில் சொல்லாமல் போகக் கூடாது என்று நினைத்தவர் “உங்க அப்பா என் தங்கச்சியை விரும்பிதான் கல்யாணம் செய்தார். அந்த ஒரு காரணம் தான் அவரை நான் மன்னிக்க ஏதுவாக இருந்தது. அவ வாழ்க்கை நல்லா இருக்கும்னு எனக்கு நம்பிக்கையும் வந்தது. ஆனா என் பொண்ணு வாழ்க்கையிலே அதே நிதானம் இருக்கும்னு சொல்ல முடியாது..” என்றவர் கிளம்பிவிட, ஆதித்யனின் முகத்தில் ஒரு விசமப் புன்னகை.
உடனே முத்துலிங்கத்திற்கு அழைத்து அணைத்தையும் சொல்லிவிட, அதற்குள் குருவம்மா வீட்டில் பிரச்சினை செய்ய ஆரம்பித்திருந்தார் ‘ஆதிக்குத்தான் ஆருவைக் கொடுக்க வேண்டும் என்று’ ரம்யா பேசிப் பார்த்தி பிரயோஜனம் இல்லை என்று அமைதியாகிவிட, பாண்டியனுக்குத்தான் தலைவலி ஆரம்பமானது.
என்ன செய்யலாம் என யோசிக்கும் முன்னே முத்துலிங்கம் பெண் பார்க்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துவிட, சரி நல்ல இடமாக இருந்தால் முடித்துவிடலாம் என்ற முடிவில் பெற்றோர் இருக்க, ஆதித்யன் வந்து பிரச்சினை செய்ய, வேறுவழியில்லாமல் பாண்டியன் தம்பதியினர் ஆதித்யனுக்கு பெண் கொடுக்க சம்மதித்திருந்தனர்.
நடந்த அனைத்தையும் ஆரணியிடம் சொல்லி முடித்திருந்தான் ஆதித்யன். என்ன சொல்லப் போகிறாள் என்று பார்க்க, அவளோ வேறு யோசனையில் இருந்தாள்.
அவள் கன்னத்தில் இருந்த கையைத் தட்டிவிட்டவன், “ஏண்டீ நான் தான் எல்லாமே சொல்லிட்டேனே இன்னும் என்னதான் யோசனை உனக்கு.. மனுஷன் எவ்வளவு தான் கெஞ்சுறது..” எனப் பல்லைக் கடிக்க,
“ம்ம்.. நீங்க சொன்னது எல்லாம் ஓக்கே தான். ஆனா அப்பாக்கிட்ட என்ன சொன்னீங்க, நான் தான் உங்களுக்கு கால் செஞ்சி டார்ச்சர் பன்றேன்னு சொல்லிருக்கீங்க. அப்போ அவர் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பார். என் பொண்ணை நான் சரியா வளர்க்கலன்னு ஃபீல் பண்ணிருப்பார். நீங்க இப்படித்தான் எப்பவும். என்னோட ஃபீலிங்க்ச புரிஞ்சிக்கிறதே இல்ல..” எனப் படபடவெனப் ஆரணி பொரிய, ஆதித்யனோ அப்படியேத் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
‘இந்த லவ்வ கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சான் அவனைக் கொல்லாம விடமாட்டேன்.. கருட புராணத்துல இருக்குற மொத்த தண்டனையும் அவனுக்குத்தான் கொடுப்பேன். பாவி.. பாவி.. எப்படியெல்லாம் மனுசங்களைக் கோர்த்துவிட்டு அலையுறான்’ என மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தான் ஆதித்யன்.
வெளியிலோ மிகவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, அதைவிடப் பாவமாக அவளைப் பார்த்திருந்தான். அவளோ இன்னும் விடாமல் தான் ஏதேதோப் பேசிக் கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், அவள் நிறுத்தும் வழியில்லாமல் போக, தன்னருகே இழுத்தவனின் இதழ்கள் கொண்டு அவளது இதழ்களை மூடியிருந்தான்.
என்ன நடக்கிறது என யோசிக்கும் முன்னமே அவள் இதழ்கள் மொத்தத்தையும் தனக்குள் இழுத்திருக்க, திமிறித் திமிறி அது முடியாமல் அவன் மீதே சாய்ந்திருந்தாள். சில நிமிடங்களில் விட்டவன், “ப்ளீஸ் ஆரு புரிஞ்சிக்கோடி. உண்மைதான் எனக்கு இந்த லவ்வெல்லாம் ஒன்னுமே தெரியலடி. ரொம்ப ரொம்பவே சொதப்புறேன். எனக்கும் புரியுது போகப்போக சரி பண்ணிடுறேன். இல்ல நீ சொல்லு நான் கேட்டுக்குறேன்.. அதுக்காக கோச்சுக்கிட்டு பேசாம எல்லாம் இருக்காதடி” என கலங்கியக் குரலில் பேச, அதுவரை வீம்புக்கென நின்றிருந்தவள் அவன் பேச்சில் அவளுக்குமே மனதை பிசைந்தது.
காதல் கொண்ட மனம் அவன் செய்த தவறுகளை மன்னிக்கும்படி கூற, அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், “நீங்க என்ன எப்ப இருந்து எப்படி லவ் பண்ணீங்க எல்லாம் எனக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம், ஆனா உங்களை காலேஜ்ல பார்த்ததுல இருந்து உங்களைத் தவிர வேற யாரையும் நான் நினைச்சது இல்ல.”
“பல நாள் நீங்க எப்போ திரும்பி வருவீங்கன்னு வெயிட் செஞ்சிட்டு இருந்துருக்கேன் லூசு மாதிரி. நீங்க வரவே மாட்டீங்க, இங்க உங்களுக்கு இனி வேலை இல்லன்னு எங்க HOD சொன்னதும் தான் என்னோட முட்டாள்தனம் புரிஞ்சது.”
“சரி கொஞ்ச நாள்ல நான் உங்களை மறந்துடுவேன்னு நினைச்சிட்டு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஆனா உங்களை மறக்கவே முடியாதுன்னு நீங்க இங்க ஊருக்கு வந்த அன்னைக்குத் தான் தெரியும். உங்களைப் பார்த்துட்டுத் தான் மரத்துல இருந்தே குதிச்சேன். ஆனா நீங்க என்னை தெரியாத மாதிரி பார்க்கவும் தான் நானும் அப்படி பேசினேன். உங்க மேல இருந்த லவ் தான் உங்கக்கிட்ட என்னைத் தேடி வரவச்சது, ஆனா நீங்க உங்க ஃபேமிலிக்காக என்னை யூஸ் செய்துக்கிட்டீங்க..” என்றவள் அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு அழ,
ஆரணி பேசப்பேசவே அவன் தரப்பின் தவறுகள் புரிய, அவளை மிகவும் வருத்திவிட்டது புரிந்தது. இதுவரை செய்தது எல்லாம் போதும். இனி அவள் மனம் வருந்தும்படி எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தவன், அவளை நெருங்கி முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கித் தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டவன், இறுக்கி அனைத்திருந்தான்.
வார்த்தைகள் கொடுக்காத சமாதானத்தையும், நிம்மதியையும் அந்த அனைப்பு அவளுக்குக் கொடுக்க, மெல்ல மெல்லத் தன் அழுகையில் இருந்து வெளிவந்திருந்தாள். அதன்பிறகு இருவரும் இதுவரை விட்டக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்க, குருவம்மா சாப்பிட அழைப்பது கேட்க, இருவரும் எழுந்தனர்.
அப்போது தான் அவள் இன்னும் பெரியவர்களிடம் பேசாமல் இருப்பது ஞாபகத்தில் வர, தனக்கு முன்னே நடந்த அவளைத் தனி கைப்பிடித்து இழுத்து, கைவளைவுகளுக்குள் கொண்டு வந்தவன், “ஆரு.. ப்ளீஸ் எனக்காக இதை செய்யனும். உனக்கு என் மேலத்தான கோபம். ஏன் அம்மத்தாக்கிட்டயும், அப்புச்சிக்கிட்டயும் பேச மாட்டேங்குற, பாவம்டா.. ப்ளீஸ் பேசுடா.. தாத்தா ரொம்பவே பாவம். நீ இப்படியெல்லாம் அவருக்கிட்ட கோபிச்சிட்டு இருந்ததே இல்லையாம். ரொம்ப வருத்தப்பட்டார்டா.” என அவசர அவசரமாக சொல்ல, அவனை ஒருப்பார்வைப் பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
‘எங்கிட்ட சமாதானம் ஆகவே இவ்ளோ நாள் ஆச்சு, உங்க பாடு திண்டாட்டம் தான்’ எனத் தன்னையேப் பாவமாகப் பார்த்திருந்த முத்துலிங்கத்தைத் தானும் பாவமாகப் பார்த்து “ப்ச்” எனத் தலையை ஆட்டிக் கொண்டான். அதில் பெரியவரது முகம் கூம்பிவிட்டது. அதைக் கவனித்த ஆரு பின்னால் திரும்பி ஆதித்யனை முறைத்துவிட்டு, நேராகத் தன் தாத்தாவிடம் சென்று அவர் அருகில் அமர்ந்துவிட்டாள்.
அவர் வியப்பாக அவளைப் பார்க்க வாயை ‘ஆ’வெனத் திறக்கத் தன் கையிலிருந்த உணவை வேகமாக அவளுக்கு ஊட்டிவிட்டார். “இந்த அப்புச்சியை மன்னிச்சிடு குட்டிம்மா.. உனக்கு இவ்ளோ கோபம் வரும்னு இந்தக் கிழவனுக்குத் தெரியாது..” எனக் கரகரத்தக் குரலில் பேச,
“ப்ச்… அதெல்லாம் இல்ல.. அப்போ கொஞ்சம் கோபமா இருந்தேன் தான். நீங்க செஞ்சது கூட அத்தை மேல இருக்குற பாசத்துல செஞ்சதுன்னு எடுத்துக்கலாம். ஆனா இந்தக் கெழவி நெஞ்சு வலி வந்த மாதிரி நடிச்சத தான் என்னால ஏத்துக்க முடியல. அன்னைக்கு நாம எல்லாரும் எவ்ளோ பயந்தோம். ஆனா இந்தக் கெழவி உள்ளப் படுத்து ஆக்டிங் விட்டுருக்கு” எனப் பல்லைக் கடிக்க,
“அடி என் சித்ராங்கி.. நானும் போனா போகுதுன்னு விட்டா என்ன ரொம்பத்தான் வாயி நீளுது, கெழவி கெழவினு வாய்க்கு வாய் வருது. பேசுற வாயத் தைச்சுப் போடுவேன் பார்த்துக்கோ, உடம்பெல்லாம் கொழுப்புக் கூடிப்போச்சுடி. எல்லாம் ஏன் பேரன் கொடுக்குற இடம்..” என குருவம்மாள் சண்டைக்கு வர்,
“ஏய் உன் பேரன் யாருக்கு வேனும். நீயே மூடி வச்சு ஊறுகா போட்டுக்கோ.. எனக்குத் தேவையில்லை..” என அவளும் பதிலுக்குப் பேச
“அம்மத்தா.. உங்க சண்டைல என்னை ஏன் இழுக்குறீங்க, நானே கஷ்டப்பட்டு இப்போதான் மஅவளை சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வந்துருக்கேன். மறுபடியும் முதல்ல இருந்தா..” என ஆதித்யன் அரண்டு விட, அதைப் பார்த்து அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்து விட்டனர்.
இங்கு அனைவரும் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்க, அந்த இடத்தில் இருக்க முடியாமல் வெளியில் வந்திருந்தான் ஆதன். தன் கையில் இருந்த மொபைலைப் பார்த்தான். நூறு தடவைகளுக்கும் மேல் அழைத்திருப்பான் தன்னவளுக்கு. ஒருமுறை கூட அதற்கு நிக்கி பதில் அளித்திருக்கவில்லை. அழைத்துப் பார்த்து சோர்ந்து போயிருந்தான், இனி அவளுக்கு அழைக்கவேக் கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தான். எல்லாம் சில நிமிடங்களுக்குத் தான். காதல் கொண்ட அவன் மனம் மீண்டும் மீண்டும் தன் காதலியையேத் தான் தேடியது. என்ன பிரச்சினையோ என மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
இப்போதும் தன் கோபத்தை எல்லாம் விட்டு அழைத்திருந்தான், ஆனால் வழக்கம்போல அவள் எடுத்திருக்கவில்லை. இருந்த கோபத்தில் போனைத் தூக்கி எறிந்தவன், யாரிடமும் சொல்லாமல் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
தேனியில் இருந்து கிளம்பிய அன்றே நிக்கியின் போனை வாங்கித் தன் கையில் வைத்துக் கொண்டார் தாரணி. முதல் இரண்டு நாட்கள் கேட்டுப் பார்த்தவள், அவர் மகளைக் கண்டபடி பேச, அதில் மனம் உடைந்தவள், அதன்பிறகு கேட்பதை மொத்தமாக நிறுத்தியிருந்தாள். தன்னை மொத்தமாகத் தனிமைப்படுத்திக் கொண்டாள், யாரையும் பார்ப்பதுமில்லை. யாரிடமும் பேசுவதுமில்லை.
சங்கருக்கேத் தன் மனைவியின் செயல் மீது சிறு எரிச்சல் வந்ததென்று கூட சொல்லலாம். அவரும் மனைவியிடம் பேசிப் பார்க்க, முடியாது என்ற வார்த்தையிலேயே நின்றார் தாரணி. இது எதுவும் ஆரணிக்கு கூடத் தெரியாது. அவள் ஒருமுறை அழைத்து நிக்கி எடுக்கவில்லை என்றால் உடனே தாரணிக்கு அழைத்துப் பேசுவாள்.
அதனால் இப்படி நடந்திருக்கும் என்று கூட ஆரு நினைத்திருக்கவில்லை. ஆரணிக்கேத் தெரியாது எனும் போது ஆதனுக்கு எப்படித் தெரிந்திருக்கும். சங்கரும் வீட்டில் நடக்கும் குளறுபடிகளை பாண்டியனிடம் மட்டும், அதுவும் அவர் கிளம்பும் போது தான் சொல்லியிருக்க, சாப்பிட்டு முடித்ததும் அதைப்பற்றி பேசலாம் என்று பாண்டியனும் நினைத்திருக்க, அதற்குள் ஆதன் ஒரு முடிவெடுத்துக் கிளம்பியிருந்தான்.
அப்போது தான் ஆதன் இல்லை என்பதே அனைவருக்கும் தெரிந்தது. அவனுக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆப் என்று வர அனைவருக்கும் பயம் சூழ்ந்தது. ஆதன் இப்படி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்புகிறவன் இல்லை, அதிலும் இன்று வீட்டில் விஷேசமும் நடந்து கொண்டிருக்க, அவன் இல்லையென்றால் நிச்சயம் ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.
அதிர்ச்சியில் பவித்ரா ஒருப் பக்கம் அமர்ந்து அழ ஆரம்பிக்க, முகுந்தனோ ஆதனின் நண்பர்களிடம் விசாரிக்க தொடங்கியிருந்தார். பாண்டியன் தன் க்காவல்துறை நண்பர்கள் மூலம் விசாரிக்க ஆரம்பிக்க, ஆதித்யன் தன்னுடையக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
நிமிடத்தில் அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும், காவலையின் ரேகை படர்ந்துவிட்டது. குருவம்மா மகளுக்கு ஆறுதல் சொல்லியபடி அவரிடம் அமர்ந்துவிட, ஆருவோ இப்போது நிக்கிக்கு அழைத்திருந்தாள்.
அதற்குள் ஆதித்யனிடம் இருந்து போன் வர வேகமாக அதை அட்டெண்ட் செய்தவள், அவன் சொன்ன செய்தியில் அதிர்ச்சியின் விழிம்பில், கண்ணில் நீர் கொட்டியது. மகளையேப் பார்த்துக் கொண்டிருந்தப் பாண்டியனுக்கு அவள் முகத்தில் தெரிந்த பயத்தில், போனை வாங்கிப் பேச, அவரிடமும் நடந்ததை ஆதித்யன் சொல்ல, பாண்டியன் முகத்திலும் இருள் படிந்தது.