Home Antiheroதளிர் – 09

தளிர் – 09

by Vathani S

தளிர் 9

‘உஷா… உஷா…’ என நரேனின் உள்மனம் ஓயாமல் மனைவியின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்க, கைகள் தன்பாட்டிற்கு வண்டியை ஒடித்து திருப்பிக் கொண்டிருந்தது. மருத்துவமனையில் இருந்து சாந்தோம் சர்ச்சிற்கு வர எடுத்துக்கொண்ட இந்த இடைப்பட்ட நேரத்தில் நரேன் அவனாகவே இல்லை.

என்னதான் உஷாவை அவனுக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டாலும், அவளை விட்டுவிட வேண்டும் என்று அவன் எப்போதும் நினைத்ததில்லை. விக்ரமின் பிரச்சனைகள் எல்லாம் ஓரளவிற்கு தீர்ந்து, நிசப்தியுடன் அவன் வாழ ஆரம்பிக்கும்போது உஷாவைத் தன்னுடன் அழைத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தான்.

அதனால்தான் அவளிடம் இந்த இரண்டாண்டுகளாக பாராமுகமாகத் திரிந்தான். ஆனால் இப்போது அதெல்லாம் தவறோ? என அவன் மனசாட்சி அவனைக் கேவலமாகத் திட்டியது. ஏன் நிசப்தி விழித்தவுடன் இதையும்விட மோசமாக நடக்கக்கூடும். அவளது உயிர்த்தோழி அல்லவா உஷா?

இங்கு நரேன் சர்ச்சை நெருங்கும் நேரம், ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். பக்கத்திலேயே நூற்றிஎட்டு ஆம்புலன்சும். அதைக் கவனித்ததும் அவனது இதயத்தின் துடிப்பு ஒவ்வொன்றும் போர்முரசு கொட்டுவது போல டம் டம்மென்று அபாயகரமாக ஒலித்தது.

வண்டியை அங்கேயே நிறுத்தியவன், வேகமாக ஓட அதற்குள் ஆம்புலன்ஸ் அங்கிருந்து பறந்திருந்தது. என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் பைத்தியம் போல் அந்த ஆம்புலன்சின் பின்னே ஓடியவன், அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓரிடத்தில் கால்கள் மடங்கி விழுந்தான்.

அருகில் இருந்தவர்கள் அவனைத் தூக்கிவிட, அவர்களுக்கு ஒரு நன்றியைச் சொன்னவன் மீண்டும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடினான்.

அப்போதுதான் கூட்டம் கலைய ஆரம்பிக்க அதில் ஒருவர், “இந்த பொண்ணுங்களுக்கு அப்படி என்னத்தான் கஷ்டம் வருமோ தெரில, உடனே தற்கொலை முடிவை எடுத்திடுறாங்க. ஆயிரம் கெட்டது செஞ்சவனே நெஞ்ச நிமித்திட்டு இந்த உலகத்துல சுத்தும்போது, இந்த பிள்ளைங்களுக்கு என்ன?” என போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போக, நரேனின் உலகம் மெல்ல இருள ஆரம்பித்தது போலொரு தோற்றம்.

ஆனால் அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாதே. ஆம்புலன்சில் செல்வது வேறு யாராகக்கூட இருக்கலாம், எதற்கு நானே தவறாக நினைக்க வேண்டும் என்று நினைத்து, தன் மொபைலை எடுத்து அதில் உஷாவின் போட்டோவைத் தேடியெடுத்து, அருகில் இருந்தவரிடம் காட்டி, “அம்மா இந்த பொண்ணை நீங்க எங்கையாச்சும் பார்த்தீங்களா?” என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கேட்க,

அவரோ அவனைக் குழப்பமாகப் பார்த்து, “தம்பி அந்த ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போறது இந்த பொண்ணைத்தான் தம்பி. ரொம்ப நேரமா அந்த தூன்ல சாஞ்சி உக்காந்திருந்துச்சு. திடீர்னு வாயிலயும் மூக்குலயும் ரத்தம் வர, அப்படியே மயங்கி விழுந்திடுச்சு. கை, காலெல்லாம் ஜில்லுனு இருக்கு தம்பி. நாங்க பார்த்துட்டு உடனே நூற்றி எட்டுக்கு கூப்பிட்டோம். அதுல வந்த பையன் பல்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு, கஷ்டம்ன்னு சொல்லிட்டுத்தான் ஏத்திட்டு போனான்.” எனக் கதையாகச் சொல்ல, இடி தன் இதயத்திலே விழுந்தது போல துடித்துப் போனான் நரேன்.

பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்று கொசுரு தகவலாக அந்தப் பெண்மணி சொல்லிவிட்டு செல்ல, இப்படி மரமாக நின்று நேரத்தை வீணாக்காமல் ஓடு என அறிவு சொல்ல, அதன்படியே தன் காரை எடுத்துக்கொண்டு மீண்டும் பறந்தான் நரேன்.

அவன் அங்கு சென்ற நேரம் ஆம்புலன்சில் இருந்து இறக்கி மட்டுமே வைத்திருந்தார்கள். இன்னும் முதலுதவி கூட ஆரம்பிக்கப்படாமல் இருக்க, அதைப் பார்த்ததும் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.

ஆனாலும் அடக்கிக்கொண்டு தன் காரியம் நடக்க வேண்டி அவர்களிடம் கெஞ்சித் தன் வேலையைக் காட்டி உடனே முதலுதவிக்கு ஏற்பாடு செய்தான்.

அடுத்து முகுந்தனுக்கு அழைத்து இப்போது யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டே, அவனது மருத்துவமனையில் அனைத்தும் தயாராக வைக்கும்படி கேட்டுக்கொண்டான்.

முதலில் அவனிடம் கத்திய முகுந்தனும் அவன் நிலை உணர்ந்து உடனே சரியென்றுவிட, முதலுதவி முடித்து உஷாவை முகுந்தனின் மருத்துவமனைக்கு கொண்டு வந்தான்.

ஆனால் இந்த இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் உஷாவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. அவள் சுயநினைவை இழந்து சில மணி நேரங்கள் ஆகிவிட்டது என்று மருத்துவர் சொல்லியிருக்க, அவள் திரும்பி தன்னிடம் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையை மட்டும் இறுகப் பற்றியபடி அடுத்து நடக்க வேண்டியதைக் கவனித்தான்.

சொன்னது போலவே முகுந்தனின் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள் உஷா. அவளைப் பார்த்த முகுந்த் “நரேன், இப்போதைக்கு நான் எந்த நம்பிக்கையும் உனக்கு கொடுக்க முடியாது. அவ என்ன பாய்சன் எடுத்தா, எப்போ எடுத்தா எல்லா விபரமும் வேணும். ஐ திங்க் அவ பாய்சன் எடுத்து டூ ஹவர்ஸ் கண்டிப்பா ஆகியிருக்கலாம்.” எனச் சொல்லிவிட்டுப் போக,

‘இன்னும் எத்தனை இடிகளைத்தான் இந்த இதயம் தாங்கும்’ என்பது போல அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான் நரேன்.

விழிகளில் நீர் வழியவில்லை என்றாலும், உள்ளுக்குள் ரத்தக் கண்ணீரே அருவியாகக் கொட்டியது அந்த ஆணவனுக்கு. வாழ்க்கையில் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்று உணர்ந்த நொடிதான், உஷா அவன் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக வந்தாள்.

வந்தவளையும் தேவையில்லை போ என்று துரத்தியும் விட்டான். அதன்பிறகு அவளைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்வில் சிதைந்து கொண்டிருந்தான்.

‘மனைவி என்று வந்தவளை வைத்து வாழத் தெரியாதவனா நீ!’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு இப்போது வரைக்கும் அவனால் பதில் கொடுக்க முடியவில்லை.

ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாதே! அவனுக்குப் பிடிக்குதோ இல்லையோ அவளுக்குப் பிடித்தம் தானே! அந்தப் பிடித்தம் காலப்போக்கில் அவனின் பிடித்தமாக மாறி, அவர்களது இல்லறம் சிறக்கவும் வாய்ப்பிருக்கிறதே!

அதனால் நிசப்தியின் வாழ்க்கை சீராகும் நேரம் அவளைத் தன்னிடம் அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்க, உஷா இப்படியொரு முடிவை எடுத்திருந்தாள்.

உனக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வை அவன் இதுவரை கொடுத்ததில்லை. தனக்கு யாருமே இல்லையென்ற ஒரு உணர்வில் வாழ்வை வெறுத்து உயிரை விடும் அளவிற்கு செல்கிறாள் என்றால், அவள் மனதளவில் எத்தனை வேதனைகளை அனுபவித்திருப்பாள். இதற்கெல்லாம் நீயும் ஒரு காரணம் என்று மனம் உரைக்க, குற்ற உணர்ச்சி அவனை நிம்மதியாக இருக்கவிடவில்லை.

அப்படியே அமர்ந்திருந்தவன் முன்னே வந்து நின்றார்கள், விக்ரமும் ரவியும். ரவியின் முகத்தில் தெரிந்த கோபத்தில் நரேன் பொசுங்காமல் போனதே பெரிய விஷயம்.

விக்ரமோ, “நரேன், ஜஸ்ட் லீவிட். அவளுக்கு ஒன்னுமில்ல, பார்த்துக்கலாம் விடு. இனி எல்லாம் சரியாகிடும்.” என்று மிகவும் கூலாகப் பேச,

‘நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல’ என்ற பார்வையை அவனை நோக்கி கொடுத்த ரவி, அருகில் இருந்தவனை வெட்டவா, குத்தவா என்பது போல் பார்த்தான்.

முகுந்தனோ, ‘இவன் இன்னைக்கு அடி வாங்காம போகமாட்டான்’ என நினைத்தபடியே அங்கிருந்து நகர, “டேய் டாக்டரு உன்னோட மைண்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன்.” எனச் சிரித்தபடியே சொல்ல,

“அது எனக்கும் தெரியும்டா வக்கீலு.” என முகுந்தனும் சிரித்தபடியே நகர்ந்துவிட, ரவி இப்போதும் முறைத்துக் கொண்டுதான் இருந்தான்.

‘அடுத்து என்ன?’ எனக் கேள்வியை நரேனை நோக்கி ரவி வீச,

“ப்ச்… அவ சரியாகட்டும். அப்புறம் பேசுவோம் ரவி.” என விக்ரம் இடைவெட்ட,

“முதல்ல நீ வாயை மூடுடா. இத்தனைக்கும் நீ மட்டும்தான் காரணம் ப்ளடி…” என்று, அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, அதற்குள் நரேனும் சற்று சரியாகிருக்க வேகமாக வந்து இருவரையும் பிரித்து விட்டவன், “அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ இனி அவ என் கூடத்தான்.” என்று உறுதியானக் குரலில் சொல்லி இருவரையும் அமைதிப்படுத்திவிட்டான்.

அதே நேரம் ரித்தியும், ரேணுகாவும் தசிராவை அழைத்துக்கொண்டு வர, ஆண்கள் இருவரும் குழந்தையை நோக்கி கையை நீட்ட, அது யாரிடம் செல்வது என்பது போல் திருதிருக்க, விக்ரமை ஒரு பார்வைப் பார்த்த ரவி சட்டென்று தன் கையை இறக்கிவிட்டான்.

அது வேகமாக வந்து விக்ரமின் காலைக் கட்டிக் கொண்டு, தன் அரிசிப் பற்களைக் காட்டிச் சிரிப்பொன்றைக் கொட்டியது. அந்த நொடி வாழ்வில் சொர்க்கம் எதுவென்று விக்ரமால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மகளை வாரியணைத்துக் கொண்டவன், “குட்டிம்மா என்னைத் தேடி வந்துட்டீங்களா? அப்பாவைத் தேடி வந்துட்டீங்களா?” என்று கொஞ்சியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

இப்போது ரேணுகா, நரேன் அருகில் அமர்ந்து, “நரேன் உஷாவுக்கு ஒன்னும் ஆகாது சரியா? அவ சீக்கிரம் சரியாகி உன்கூட வந்துடுவா பாரு. ஆனா இனியும் அவளைத் தனியா விடணும்னு மட்டும் யோசிக்காத. உனக்கு எப்படி யாருமே இல்லையோ, அப்படித்தான் அவளுக்கும் யாருமில்ல. அதை நீ புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன். இனிமேலாச்சும் அடுத்தவங்க வாழ்க்கையைப் பார்க்காம உன் வாழ்க்கையை வாழப் பாரு.” என்றவருக்கு மௌனமாகத் தலையை அசைத்தான் நரேன்.

அவன் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்திக்கு குற்ற உணர்ச்சிக் கொன்றது.

காதல் என்று அவன் பின்னே அலைந்தவளும் அவள்தான், காதல் பைத்தியம் தலைக்கேறி நீதான் என் உலகம் என்று தன் பின்னே வந்தவனை தூக்கி எறிந்தவளும் அவள்தான்.

அன்றைக்கு ஸ்வாதியின் பேச்சில் வானளவு தெரிந்த காரணங்கள் எல்லாம் இப்போது மடுவை விட சிறியதாகியிருந்தது. நரேனை வேண்டாம் என்று வந்த ஒரே வாரத்தில்தான் ரவியுடன் அவளது திருமணம் நடந்தது.

அன்று அவனிடமிருந்து அந்தக் காதலில் இருந்து தப்பிக்கத்தான் திருமணம், என்ற ஸ்வாதியின் பேச்சை நம்பி திருமணம் முடித்தாள். ஆனால் சில நாட்களிலேயே தன் காதலில் ஸ்வாதியின் பங்கு, அவளின் துரோகம் என அனைத்தையும் கண்டுகொண்டவள், தன்னை நம்பியவனை ஏமாற்றிய குற்ற உணர்வு அவன் கூறிய, ‘துரோகி’ எல்லாம் அவளைக் கொல்லாமல் கொன்றது.

இன்று அவள் குடும்பம், குழந்தை என நிம்மதியான ஒரு வாழ்க்கையில் இருக்க, அவனோ பட்டமரமாக சுற்றித் திரிவதா? என்று யோசித்தவள் ரவியிடமும், விக்ரமிடமும் இதைபற்றி பேசலாமா என்று கூட நினைத்தாள்.

ஆனால் அதன்பிறகு தன் வாழ்வில் என்ன நடக்கும் என்று நினைக்க முடியவில்லை. ரவி அவளை ஒதுக்கிவிட்டால், நரேன் கூறிய அதே, ‘துரோகி’ என்ற வார்த்தையை ரவியும் சொல்லிவிட்டால்?

அப்படி ஒரு நிகழ்வை கற்பனையில்கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்ன செய்வது? இதெற்கெல்லாம் தான் மட்டுமே காரணம் என்று அறிந்தவளுக்கு அதை சரி செய்துவிடும் தைரியம் மட்டும் இருக்கவில்லை.

“ரித்திம்மா…” என்ற ரவியின் அழைப்பில் தன் யோசனையில் இருந்து வந்தவள், ரேணுகா இன்னும் நரேனுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் கண்ணில் பட்டது.

அதைத் தவிர்க்கும் பொருட்டு, “ரவி போலாமா? எனக்கு கால் கொஞ்சம் நடுங்குற மாதிரி இருக்கு.” என இல்லாத ஒரு காரணத்தைச் சொல்ல அவனும் உடனே, “போலாம்.” என்று ரேணுகாவிடம் சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

இங்கு குழந்தையைத் தூக்கிக்கொண்டு நிசப்தியின் அறைக்குள் வந்தான் விக்ரம். அவளும் அப்போதுதான் விழித்திருப்பாள் போல.

குழந்தையை அவன் கையில் பார்த்ததும் கத்துவாள், திட்டுவாள் என்று பார்க்க, அப்படியொன்றும் அவள் முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. குழந்தையைப் பார்த்து மெல்லிய புன்னைகையை உதிர்த்தவள் விக்ரமைப் பார்த்து, “அவங்க டார்கெட் நானா?” என்றாள் பெரும் சிரமத்துடன் வாயசைத்து.

அந்த வார்த்தையில் திடுக்கிட்டாலும் நொடியில் தன்னை சமாளித்து, “எவங்க டார்கெட்? நீ யாரைச் சொல்ற? என்னோட ஆளுதான் என் மேல இருக்குற விசுவாசத்துல இப்படி செஞ்சிட்டான். இப்போ லாக்கப்ல இருக்கான். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல புரியுதா?” என அதிகாரமாகப் பேச,

அந்தக் குரலில் குழந்தை திடுக்கிட அதை உணர்ந்தவன் அணைத்துப் பிடித்து, “சும்மாடா குட்டிம்மா…” என குழைந்து பேச, குழந்தையின் முகமும் உடனே மாறியது. ஆனால் நிசப்தியின் முகம் யோசனையாக அவனைப் பார்த்தபடியேதான் இருந்தது.

அதைக் கண்டவன், “இப்போ எதுவும் யோசிக்காத. பார்த்துக்கலாம்.” என ஆருடம் சொல்ல,

‘சாத்தான் வேதம் ஓதின கதைதான் இது.’ எனப் பார்வையிலேயேப் பதிலைக் கொடுத்தவள், அவனைத் தீப்பார்வைப் பார்க்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குழந்தையிடம் ஐக்கியமாகியிருந்தான் அவன்.

அவளுக்கு நன்றாகத் தெரியும் இது விக்ரமின் வேலை இல்லையென்று. உயிரை எடுக்கும் அளவிற்கு அவன் செல்ல மாட்டான். அதோடு ரேணுகாவும் அப்படி வளர்த்திருக்க மாட்டார். மனைவிக்காக என்றாலும், இல்லாத மனைவிக்காக செய்வானா என்றொரு கேள்வி. அப்படியே செய்வான் என்றாலும் இந்த இரண்டு வருடத்தில் செய்யாமல் இப்போது ஏன்?

இல்லை… இது அவன் இல்லை. வேறு யாரோ ஒருவர். அந்த வேறொருவர் யார்? யார்? யாரென்று மூளையை கசக்க ஆரம்பிக்க,

அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், “இல்லாததை கசக்கி ஒரு பிரயோஜனமும் இல்ல. அதுதான் பார்த்துக்கலாம்னு சொன்னேன்ல. சொல்ற ஒன்னையும் கேட்குறது இல்ல, இனிமேலாச்சும் நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கப் பழகு.” எனக் கிண்டலாய் ஆரம்பித்து கட்டளையாய் முடிக்க,

அவளோ, ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா? போடா…’ என்பது போல்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் தி கிரேட் கிரிமினல் லாயர் விக்ரமை.

***

You may also like

1 comment

mriomrio28399 February 6, 2026 - 6:12 pm

அதானே, இந்த விக்ரம் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் சொல்றதை இவ கேட்கணுமா என்ன ? இவனே ஸ்வாதி பேச்சைக் கேட்டுட்டு எல்லாத்தையும் கொலாப்ஸ் பண்ணி வைச்சவன் தானே ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured