Home Anti Heroineஅகானா – 85

அகானா – 85

by Vathani S

அகானா – 85

பார்வையில், உடல்மொழியில், பேச்சில் என ஒட்டு மொத்தமும் வன்மமாக மாறிப்போயிருந்த மைதிலியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன்.

அவனின் வெறித்தப் பார்வையில் மைதிலியின் உடல்மொழி மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தது.

“ஏன் அப்படி பார்க்கிற?” என தன் கோபத்தை இழுத்து வைத்து கேட்க, அமைதியாக இருந்தானே தவிர, தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை ஆகன்.

“என்ன வேணும் உனக்கு.? எதுக்கு என்னை இங்க அடைச்சி வச்சிருக்கா உன் பொண்டாட்டி.? அவளை அப்படியே விட்டது என் தப்பு. இன்னைக்கு என் குடும்பத்தையே எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டா..” என ஆத்திரமாக கத்த,

“அவளுக்கு நீங்க என்ன செஞ்சீங்களோ? அதைத்தான் உங்களுக்கு திருப்பி செஞ்சிருக்கா.. இதுல என்ன தப்பு இருக்கு..?” என்றான் ஆகன் நிதானமாக.

“ஹான்.. நான் செஞ்சேனா? என்ன செஞ்சேன்..? உன் மாமா அவ கூட வாழ முடியாம தவிச்சிட்டு இருந்தார். பணம் இல்லைன்னா காதலும் இல்ல, கன்றாவியும் இல்லன்னு அவருக்கு புரிஞ்சிடுச்சு.. அவளை தலை முழுகிட்டு வந்துட்டார். உன் குடும்பமும் அவக்கிட்ட இருந்து உன் மாமாவை பிரிக்க காத்துட்டு இருந்தாங்க. என்னைப் பார்த்ததும், என்னோட ஆசை தெரிஞ்சதும், அதை அவங்களுக்கு சாதகமா மாத்திக்கிட்டாங்க. நான் எனக்கு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன். இதுல என்னோட தப்பு என்ன?” என்றார் ஆங்காரமாக.

“மஞ்சரி அத்தை இடத்துல நீங்க இருந்திருந்தா, அவங்க வலி உங்களுக்கு புரிஞ்சிருக்கும்..”

“ஹான்.. என்னை என்ன அவளை மாதிரி ஏமாளின்னு நினைச்சியா? ஒரு ஆம்பளையை எப்படி நம்புறது? அவன் புருசனா இருந்தாலும் ஆம்பளை. அவனை எப்படி நம்பி எப்படி போனா? காதலிச்சு, கல்யாணம் செஞ்சு, புள்ளையும் பெத்தவளுக்கு புருசனை கைக்குள்ள வச்சிக்கத் தெரியல. இவ எல்லாம் எப்படி குடும்பமா வாழ முடியும்..”

“போதும் அத்தை.. உங்க தப்பை நியாயப்படுத்தாதீங்க..”

“நான் ஒன்னும் தப்பே செய்யலன்னு சொல்லமாட்டேன். என் வாழ்க்கையை காப்பாத்திக்க எந்த எல்லைக்கும் போவேனு எல்லாருக்கும் காட்டினேன், அவ்ளோதான்.”

“அத்தை.. போதும் அத்தை.. ஏன் உங்க மனசுல இவ்ளோ கோபமும், ஆத்திரமும். நான் பார்த்த என்னோட அத்தை இல்ல நீங்க..”

“ஹான்.. நீ கூட நான் வளர்த்த ஆகன் இல்லையே கண்ணா. அவளைப் பார்த்ததும், என்னைத் தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டியே..”

“அத்தை.. எனக்கு அப்போ உங்க மேல கோபம். ஆனா அதுக்காக உங்க மேல பாசம் இல்லைன்னு முடிவு பண்ணிடுவீங்களா?”

“பாசம் இருந்திருந்தா இந்த அளவுக்கு என்னை வேதனை படுத்திருக்க மாட்ட.. எனக்கு பிடிக்காத ஒருத்தியை, நான் இல்லாமலே, எனக்குத் தெரியாமலே கல்யாணம் செஞ்சிட்ட. இதெல்லாம் கூட என்னால தாங்க முடியும். ஆனா சின்னப்பொண்ணுனு நினைச்சு பார்த்து பார்த்து வளர்த்த உன் தங்கச்சி பண்ணினதைத்தான் என்னால தாங்கிக்க முடியல…”

“அத்தை..”

“உங்களை என் பிள்ளைங்க மாதிரி தான வளர்த்தேன். உங்கக்கிட்ட கொஞ்சம் கோபமா நடந்துப்பேனே தவிர, உங்களுக்கு செய்றதுல என்னைக்காவது நானும், உங்க மாமாவும் குறை வச்சிருப்போமா? ஆனா நீங்க.. நொடியில என்னைத் தூக்கி எரிஞ்சிட்டு போயிட்டீங்க.. அந்த நிமிசம் தோணுச்சு.. என்ன இருந்தாலும், நீங்க எல்லாம் ஒன்னு.. நான் வேறன்னு.. இங்க வலிச்சது கண்ணா.. செத்துப் போயிடலாம்னு கூட தோனுச்சு. ஆனா நான் ஏன் சாகனும்.. சொல்லு.. நான் ஏன் சாகனும். உங்களை எல்லாம் எங்கிட்ட இருந்து பிரிச்ச அவளைத்தானே கொல்லனும்…”

“அத்தை.. அத்தை.. ஏன் இவ்ளோ கோபம்… அமைதியா இருங்க ப்ளீஸ்…”

“போதும்.. இனி எனக்கு நீங்க பேசுற எதையும் கேட்க வேண்டாம். ப்ளீஸ்.. நீ கிளம்பு..”

“அத்தை.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் எல்லாத்தையும் சரி பண்றேன். நீங்க பயப்படுற மாதிரி எதுவுமே நடக்காது அத்தை.. நம்புங்க ப்ளீஸ்.”

“உன்னால என்ன பண்ண முடியும்.? உன் பொண்டாட்டியை மறந்துட்டு வாக்கு கொடுக்காத..”

“போனதெல்லாம் போகட்டும் அத்தை. இப்போ நாங்களோ, இல்ல மாமாவோ என்ன செய்யனும்? இந்த கோபம், ஆத்திரம் எல்லாமே தீரணும்னா நாங்க என்னதான் செய்யனும்.? சொல்ளுங்க அத்த..” என்றான் ஆகன் மன்றாடலாகவே.

“ரொம்ப சிம்பிள் ஆகன். நான் இழந்த எல்லாமே எனக்கு திரும்ப கிடைக்கணும். அதை உன்னால கொடுக்க முடியுமா?” என அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்த,

“அத்தை ப்ளீஸ்.. நீங்களும் புரிஞ்சிக்கோங்க. மாமாவோட கடந்த காலம்தான் மஞ்சரி அத்தை. அவர் அதை எப்பவோ மறந்துட்டார். நீங்கதான் அவரோட காலம் முழுக்க என்பதில் உறுதியா இருக்கார். இதை நீங்க நம்பனும் அத்தை..”

“ஹான்.. என்னை என்ன அவ்ளோ பெரிய முட்டாளுன்னு நினைச்சியா? இதை நம்புறதுக்கு நான் ஒன்னும் பைத்தியமும் இல்ல.. உன் பொண்டாட்டியைப் பார்த்ததும், ‘என் பொண்ணுனு’ பின்னாடியே போனவர்தான் உன் மாமா.. அதை நான் எப்பவும் மறக்கமாட்டேன்..”

“அத்தை கொஞ்சம் பொறுமையா, நிதானமா யோசிச்சுப் பாருங்க. இந்த கோபம், ஆத்திரம் எல்லாத்தையும் விட்டுட்டு யோசிங்க. உண்மை என்னனு உங்களுக்கேத் தெரியும்..”

“எனக்கு இதெல்லாம் இப்போ கேட்குற மூடும் இல்ல. யோசிக்கிறதுக்கு நேரமும் இல்ல. என்னை எப்போ வெளிய விடுவா. இல்ல இப்படியே முடிச்சிடுவாளா?”

“அத்தை என்ன பேசுறீங்க? மாமா உங்களை கனடாக்கு கூப்பிட்டு போறதா பேசிட்டு இருக்கார். அதுக்கான வேலையை வேற ஆரம்பிச்சிட்டார் இனி அங்கையே செட்டிலாகப் போறதா வேற அப்பாக்கிட்ட சொல்லிருக்கார்.” என்றதும், மைதிலியின் அலைப்புறும் விழிகள் ஆகனையே கூர்மையாகப் பார்க்க,

“உண்மையா தான் சொல்றேன் அத்தை.. இனி இங்க இருந்து உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு முடிவு பண்ணிருக்காராம். உங்களுக்காகத்தான் மாமா இந்த முடிவே எடுத்திருக்கார். இதுக்கு மேல என்ன அத்தை செய்யனும்?” 

“நீ சொல்றது உண்மையா? நான் கூப்பிடும் போது, எனக்கு வெளிநாட்டுக்கு போறதுல எல்லாம் விருப்பமே இல்லன்னு சொல்லிட்டு இருந்தார்..”

“இல்ல அத்தை..” என்றவன் சுபாஷைப் பற்றியும், மஞ்சரியின் மீதான விருப்பத்தையும் கூறி, அகானாவின் ட்ரான்ஸ்ஃபரையும் கூற, பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருந்தார் மைதிலி.

அவர் மனதில் என்ன ஓடுகிறதென்று ஆகனால் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை. 

வந்த காரியம் தோல்வியடைந்து விட்டதோ என்று மிகவும் வருத்தமாக இருந்தது. 

அவரின் மனநிலையும் சூழ்நிலையும் அவனுக்குப் புரியாமல் இல்லை.. 

ஆனால்.. இப்போது அவனுக்கு முக்கியம் அவனுடைய மனைவியும், அவளது நிம்மதியான மனநிலையும் மட்டும்தான்.

அதற்கு மஞ்சரியின் திருமணமும், மைதிலியின் வெளிநாட்டுப் பயணமும் நடந்தே ஆகவேண்டும்..

நடக்குமா? 

பொறுத்திருந்து பார்ப்போம்…

You may also like

Leave a Comment

About Me

Featured