தளிர் 10
அடுத்த இரண்டாவது நாள் சொன்னது போலவே நிசப்தியை டிஸ்சார்ஜ் செய்திருந்தான் முகுந்தன். விக்ரம் தன் வீட்டிற்கு அழைக்க, அவள் பார்த்த ஒற்றைப் பார்வையில் புருவத்தை உயர்த்தியவன், ஒரு தோள் குலுக்கலுடன் அங்கிருந்து நகர்ந்துவிட, இப்போது ரேணுகா அவனை முறைத்தார்.
‘இதெல்லாம் எங்க திருந்த போகுது’ என வழக்கம்போல் மனதுக்குள் அவனை வறுத்து எடுத்துவிட்டு, நிசப்தியிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஆனால் அவளோ ஒரே முடிவாக விக்ரமின் வீட்டிற்கு வரவில்லை என்று கூறிவிட்டாள்.
விக்ரமும் இதை எதிர்பார்த்தானோ அல்லது அவளுக்கான பாதுகாப்பு அவள் வீடுதான் என்று நினைத்தானோ தெரியாது, அவளை பெரிதாக வற்புறுத்தவில்லை. யாரையும் வற்புறுத்த விடவுமில்லை.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டீற்கு வர அவளோடு ரேணுகாவும் வந்துவிட்டார். ‘ஏன் ஆன்ட்டி’ என்பது போல் பார்த்தவளிடம், “இதுவரை நீ தனியாக இருந்தது போதும் நிசாம்மா.” என்ற வார்த்தையில் அவள் வாயை அடைத்துவிட்டார்.
இவர்கள் வர வீட்டில் ரவி, ரித்தி அவர்களது இரண்டு குட்டீஸ்கள் மற்றும் மதியழகி என அனைவரும் அவளுக்காக காத்திருந்தனர்.
அவர்களைப் பார்த்து முகத்தைச் சுளித்தவள் ரவியை முறைத்துப் பார்க்க, அவனோ வழக்கம்போல் அதைக் கண்டுகொள்ளாமல், “இப்ப எப்படி இருக்கு நிஷா?” எனத் தெரிந்தும் தெரியாதது போல் ஆரம்பிக்க,
‘வாயை மூடிட்டு கிளம்பு’ என வாய் வரை வந்த வார்த்தைகளைத் தொண்டைக்குள்ளே விழுங்கிவிட்டு, ‘ஓகே’ என்பது போல் தலையாட்ட,
“ம்ம்… ஓகே நீ ரெஸ்ட் எடு, நான் ஆஃபிஸ் போய்ட்டு ஈவ்னிங் வரேன். வேறு எதுவும் வேண்டும்னா எனக்கு கால் பண்ணு.” அவள் அப்படியெல்லாம் அழைக்கமாட்டாள் என்றுத் தெரிந்தும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
இருந்தால் முதலில் இவர்களை இழுத்துக்கொண்டு கிளம்பு என முகத்திலடித்தாற் போல பேசுவாள் என்றுதான் அவனுக்குத் தெரியுமே.
அவன் ஓட்டத்தைப் பார்த்த ரித்தி, தன் கணவனை இப்படி ஓடவிட்டவளை கடுப்புடன் பார்த்து, “கொஞ்சமும் பெரியவங்கன்னு மரியாதைக் கிடையாது.” என அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுக்க, அது காதில் விழுந்தாலும் விழாததைப் போலவே நிசா அமர்ந்திருக்க, இப்போது ரித்திக்கு மேலும் எரிச்சல் கூடியது.
அதை யாரிடம் காட்டுவது எனத் தெரியாமல் “ம்மா… எனக்கு கால் வலிக்குது.” எனச் சத்தமாக சொல்ல,
அதற்கு, “நீ எதுக்கு ரித்தி இப்படி அலையுற? ஒழுங்கா உனக்கு வீட்டுல இருக்க முடியாதா? முதல்ல பிள்ளைங்களை கூப்பிட்டு கிளம்பு.” என ரேணுகா மகளை அதட்டினார்.
“ம்ம்ச்ச்… ம்மா நான் எப்படி இவங்க ரெண்டு பேரையும் வச்சிப் பார்க்குறது, என்னால முடியாது. அதுதான் அத்தைக்கூட வந்தேன். அத்தை கிளம்பும்போது நானும் கிளம்பிடுறேன். இப்போ என்ன? நான் வரக்கூடாதுன்னு சொல்றியா?” என்று அவரை முறைத்துக்கொண்டே தசியைத் தூக்க, அதுவோ ரேணுகாவை விட்டு வரமாட்டேன் என்றது.
“குழந்தைகூட அவள மாதிரியே முறைக்குது.” என முணுமுணுத்தபடி, முகத்தைத் தூக்கி வைத்தபடி சோபாவில் அமர்ந்தாள் கிருத்திகா.
நிசப்தி எல்லாவற்றையும் வேடிக்கைதான் பார்த்தாள். யாரிடமும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. மதியழகியின் பார்வை மொத்தமும் தசிராவிடம்தான்.
அவரது எண்ணங்கள் தன்னாலே ஸ்வாதியை நினைக்கத் தூண்டியது. எப்படி எப்படி வாழ வேண்டிய வாழ்க்கை. பழிவாங்குவதாக நினைத்து, அவள் வாழ்வை அழித்துக்கொண்டது மட்டுமில்லாமல் சுத்தியிருக்கிற அத்தனை பேர் வாழ்க்கையையும் கெடுத்து, நிம்மதியையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டாளே பாவி!
இவளையும் பத்து மாதம் இந்த வயிற்றில் சுமந்தேனே… என வழக்கம்போல் மனதுக்குள் வருந்தியவர், பார்வையை குழந்தையிடமிருந்து இப்போது நிசப்திக்கு மாற்றினார்.
அவளோ முகத்தைச் சுளித்து அமர்ந்திருக்க, என்ன நினைத்தாரோ ரித்தியிடம் திரும்பி, “ரித்தி நீ பிள்ளைங்கள விட்டுட்டு கிளம்பு, நான் வரும்போது கூப்பிட்டு வரேன். நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.” எனப் பட்டென்று சொல்ல,
“தனியா எல்லாம் போக முடியாது அத்த. வேணும்னா நான் அன்னைக்கு மாதிரி அந்த ரூம்ல ரெஸ்ட் எடுக்குறேன். ஈவ்னிங் ரவி வந்ததும் எல்லாரும் போகலாம்.” எனச் சொல்லிவிட்டு, யார் பதிலையும் எதிர்பார்க்காமல் அறைக்குள் நுழைந்துவிட, சம்மந்திகள் இருவரும் பல்லைக் கடித்தனர்.
‘இவளை எல்லாம்’ என எரிச்சலான ரேணுகா, தசிராவை மதியிடம் கொடுத்துவிட்டு நிசப்தியை, “நீ வா, கொஞ்சம் படு.” என அழைத்துக்கொண்டு அவளது அறைக்குச் சென்று படுக்கவைத்தார்.
“ஆன்ட்டி எதுக்கு இப்படி? எனக்கு நடக்க முடியும், அன்ட் கை மட்டும் தான் வலி. நீங்க கஷ்டப்படாதீங்க.” என்றவள், “ஆன்ட்டி ப்ளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் செய்யுங்க. தயவுசெய்து இவங்களை இங்க இருந்து போகச் சொல்லிடுங்க. எனக்கு இவங்களைப் பார்த்தாலே…” என கோபத்தில் முகம் சிவக்கப் பேச,
அவள் கோபம் அவருக்குப் புரியாமல் இல்லை. ஆனால் இன்னும் எத்தனைக் காலத்திற்கு இதையே இழுத்துப் பிடித்து வைத்திருக்க முடியும். அவளுக்கும் குழந்தைக்கும் என ஒரு வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கும் போது, அதை உதைத்து தள்ள அவர் விடுவாரா என்ன?
தன் வீட்டு வாரிசு! அதிலும் பெண் வாரிசு! முதல் வாரிசு பெண் குழந்தை என்றால் மகாலட்சுமியின் சொரூபம். அப்படியிருக்க, அந்தக் குழந்தையை இவர்களுக்காக, இவர்களது வீண் பிடிவாதத்திற்காக அப்படியே விட்டுவிடுவாரா? முடியவே முடியாது. விடவும் மாட்டார். ஒருமுறை மகனை நம்பி அவன் வாழ்க்கையை விட்டது போதும். இனியும் ஒரு தவறு செய்ய அவர் என்ன முட்டாளா? கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.
இதோ, ‘நான் கரைக்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் கரைய ஆரம்பித்து விட்டார்கள்.’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டவர் அதை வெளிக்காட்டாமல், “நிசாம்மா… இன்னைக்கு மட்டும் விட்டுடுடா, இனி இப்படி ஆகாம பார்த்துக்கலாம். வீட்டுக்கு வந்தவங்களை வெளியேப் போங்கன்னு எப்படி சொல்ல முடியும். எனக்காக கண்ணம்மா. ம்ம்…” என்றவரிடம் அவளால் என்ன பதில் சொல்ல முடியும்.
அமைதியாக திரும்பிப் படுத்தவளைப் பார்த்து சத்தமில்லாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், குழந்தைகள் சத்தம் உள்ளே கேட்காமல் இருக்க, கதவைச் சாத்திவிட்டு மற்ற வேலைகளைப் பார்த்தார்.
மதியழகியிடம் இருந்த தசிராவைப் பார்த்த ரவியின் மகன் நித்திஷ், “ஹாய் க்யூட்டி டால், நான் நித்திலன். இவ என்னோட சிஸ்டர் நிலா.” என கை கொடுக்க, அதுவோ விக்ரமைப் போல இருவரையும் மேலும் கீழும் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தது.
பிறகு அவன் கையைப் பட்டும் படாமலும் குலுக்கி, “நான் தசிரா, விக்கிப்பா பாப்பா.” எனத் திக்கித் திணறி மழலையில் சொன்னாலும் இப்போது இன்னும் திமிராகப் பார்த்தது.
அதைப் பார்த்த பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வாயில் கை வைத்துக்கொள்ள நித்திலனோ, “ஓ, ரியல்லி… அப்போ நீ எனக்கு மாமா பொண்ணு. நீ என்னை மாமான்னு சொல்லணும் டால். ஓகே கம் கம்… வெளியேப் போய் விளையாடலாம்.” என அழைக்க, அதுவோ இன்னும் யோசனையுடன்தான் பார்த்தது.
பெரியவர்களை இணைக்க வேண்டுமென்றால் முதலில் சிறியவர்களை இணைக்க வேண்டும் என்று உணர்ந்த ரேணுகா தசிராவிடம், “பாப்பும்மா, அம்மாவுக்கு காச்சல் வந்துடுச்சா, கைல அடிப்பட்டு ரத்தம் வந்துடுச்சா. அதனால அம்மா ரெஸ்ட் எடுக்கணும் தானே. குட்டிப் பொண்ணு அம்மாவைத் தொல்லை செய்யாம போய் இவங்ககூட விளையாடுவீங்களாம். பாட்டிம்மா உங்களுக்கு சாக்லேட் வாங்கித் தருவேனாம்.” எனப் பேச, அவர் பேச்சைக் கேட்டு அரைமனதாக அதுவும் தயங்கி தயங்கி அவர்களுடன் விளையாடச் சென்றது.
சிறிது நேரத்திலேயே அவர்களுடன் நன்றாக ஒன்றிப் போனது. அதிலும் நித்திலன், ‘டால் இங்க வா, டால் இப்படி செய்’ என ஒவ்வொன்றுக்கும் தசிராவிற்கு சொல்லிக் கொடுத்து விளையாட, அவனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது குழந்தை.
“அண்ணி…” என்று அழைத்த மதியழகியைப் பார்த்த ரேணுகா, “நாம இங்க ஒன்னும் பேச வேண்டாம் மதி. நிசாவுக்கு அது பிடிக்காது. நாம இதைப்பத்தி நெறையவே பேசிட்டோம். இன்னும் பேச என்ன இருக்கு? எனக்கு என் பையனோட வாழ்க்கை ரொம்ப முக்கியம். அவனும் பொண்டாட்டி, பிள்ளைங்கன்னு ஒரு வாழ்க்கை வாழுறதை நான் போய் சேர்றதுக்குள்ள பார்க்கணும் மதி. அதனால நிசா அவளா சமாதானம் ஆகுறவரை நீங்க பொறுமையாதான் இருக்கணும்.” எனப் படபடவென சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துவிட, பரிதாபமான நிலையில் நின்றார் மதியழகி.
அவரால் இப்போது எதுவும் செய்திட முடியாத நிலை. அப்படியொரு நிலையில்தான் மகள் விட்டுவிட்டு சென்றிருந்தாள்.
***
இங்கு இன்னும் மயக்கத்தில் இருந்து முழுதாக விழிக்கவில்லை உஷா. டோசேஜ் அதிகமான தூக்கமாத்திரையை எடுத்துக் கொண்டதால்தான் இந்த மயக்கமும், உறக்கமும் என்றுவிட்டான் முகுந்தன்.
வயிற்றைக் கழுவி ஓரளவுக்கு உள்ளிருந்த மருந்தை எடுத்திருந்தாலும், மருந்தின் வீரியம் அதிகமாகத்தான் இருந்தது. அதனால்தான் அவளால் சுற்றம்கூட உணர முடியவில்லை.
அடுத்த நாள் காலை வரைக்குமே உஷாவைப் பற்றி எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை முகுந்தன். அவள் ‘பிழைத்துவிட்டாள்’ என்ற வார்த்தைகளைக் கேட்கும் வரைக்கும், அவளை விட்டு இம்மியும் அகலவில்லை அவன்.
கல்லூரி நாட்களில் நிசப்தியின் தோழியாக உஷா நல்ல அறிமுகம்தான். தங்கையின் (நிசப்தி) மூலம் அவளது குடும்ப விவகாரங்கள் தெரிந்த போது, அவளின் தந்தையை சுத்தமாகப் பிடிக்கவில்லை நரேனுக்கு.
***
உஷாவின் தந்தை மீனாட்சி சுந்தரத்திற்கு திருமணம் முடிந்து மனைவியும் ஒரு மகனும் இருக்க, வேலைக்கு என்று மதுரை சென்றவருக்கு பழக்கமானவர் தான் உஷாவின் அம்மா முத்துலட்சுமி.
அங்கு அவர் ஒரு மெஸ் வைத்திருக்க, அந்த மெஸ்ஸில்தான் மீனாட்சி சுந்தரத்திற்கு மூன்று வேளையும் சாப்பாடு. அப்படியே இருவருக்கும் பழக்கம் ஏற்பட, நல்ல வேலையில் இருந்தவரை முத்துலட்சுமியின் பெற்றோருக்கும் பிடித்துவிட்டது.
இருவரின் பழக்கத்தையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் கிசுகிசுக்க, திருமணத்தைப் பற்றிய பேச்சை முத்துலட்சுமியின் பெற்றோர் எடுக்க, அப்போதும் தான் ஒரு திருமணமானவன் என்று சொல்லாமல், இப்போதைக்கு வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம், பிறகு வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என அவர்களை பேசிப்பேசியே கரைத்தார்.
தயங்கிய பெற்றோரிடம் முத்துலட்சுமி காதல் மயக்கத்தில் பேச, அவர்களும் வேறுவழியில்லாமல் ஒத்துக்கொள்ள மீனாட்சிசுந்தரம், முத்துலட்சுமி திருமணம் முடிந்தது. இருவரின் வாழ்க்கையும் ஆரம்பத்தில் இனிமையாகத்தான் கடந்தது.
திடீரென ஊருக்குச் சென்று வருகிறேன் எனச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, அதன்பிறகே சுற்றம் அவரைப் பற்றி அவரது அலுவலகத்தில் விசாரிக்க, கேட்ட செய்திகள் அனைத்தும் இடியை தலையில் இறக்க, அடுத்து என்ன செய்வது என்ற பிரம்மைப் பிடித்த நிலையில் இருந்தாள் முத்துலட்சுமி.
தான் கேட்ட செய்தியை எப்படி பெற்றவர்களிடம் சொல்வது என யோசித்துக்கொண்டே வரும் வழியில் மயங்கி விழ, அங்கே உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து வீட்டுக்கும் சொல்ல, பெற்றவர்களும் உடனே வந்துவிட, ‘கர்ப்பமாக’ இருக்கிறாள் என்ற இடியை அவர்களிடம் இறக்கிவிட்டு மருத்துவர் சென்றுவிட, தான் ஏமாந்து போன நிலையை எண்ணி துவண்டு போனாள் முத்துலட்சுமி.
துரோகம்! பச்சைத் துரோகம்! இப்படியா காதல் ஒரு பெண்ணின் கண்ணை மறைக்கும். தன்னையே மிகவும் கேவலமாக நினைத்தாள். இனி அவனிடம் போய் வாழ்க்கைக் கொடு என பிச்சை எடுக்க வேண்டுமா? என நினைக்கும் போதே தன் நிலையை எண்ணி அருவருத்துப் போனாள்.
தன் சுகம் மட்டுமே பெரிதென வாழ்ந்த பெற்றவர்களிடம் என்ன சொல்லி, எப்படி புரிய வைக்க? காதலிக்கிறேன் என்று தைரியமாக அவர்களிடம் சொன்னவளால் தான் ஏமாற்றப்பட்டேன் என்று அதே தைரியத்துடன் சொல்ல முடியவில்லை.
இனி என்ன? இனி என்ன? எனத் தீவிரமாக யோசித்தவளின் சிந்தனையில் உதித்தது தற்கொலை எண்ணம்.
இதற்கு ஒரே வழி இந்த உலகத்தில் இல்லாமல் போவதுதான், என இரவெல்லாம் யோசித்து வயிற்றுப் பிள்ளையோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள் முத்துலட்சுமி.
அதிகாலையில் திடீரென அவர்களது மெஸ்ஸில் இருந்து வெடிச்சத்தமும் புகை மண்டலமும் கதறலும் கேட்க, ஓடிவந்து பார்த்தவள் கண்ணில் பட்டது, அவர்களது மெஸ் முழுவதும் தீப்பிடித்து எரிவதுதான்.
அதற்குள் அக்கம்பக்கத்தினர் வந்துவிட, முத்துலட்சுமியின் பெற்றோர் இருவரும் அந்த தீக்கு இரையாகி அவளைத் தனியே விட்டுச் சென்றிருந்தனர். அப்போது இறுதிக் காரியங்களின் போது அவளின் கணவனைக் கேட்க என்ன சொல்வாள். ஏதேதோ சொல்லி சமாளித்தவளுக்கு பெற்றவர்கள் இல்லையென்ற உண்மையை ஏற்கவே சில நாட்கள் ஆகியிருந்தது.
அதுவரை இருந்த சிறுபிள்ளைத் தனம் எல்லாம் எங்கோ சென்றிட, இனி இங்கு இருக்க முடியாது என்ற நிதர்சனமும் உரைக்க, தெரிந்தவர்கள் மூலம் வீட்டை விற்றவள், கணவனிடம் செல்கிறேன் என்று எல்லோரிடம் விடைபெற்று சென்றது கொடைக்கானல் என்ற மலை வாசஸ்தளத்திற்கு.
அங்கு சென்று ஒரு சர்ச்சில் சேர்ந்தவள், அங்கேயே குழந்தையும் பெற்று படிக்கவும் வைத்தாள். அதன்பிறகு மீனாட்சி சுந்தரம் என்ற நபர் அவர்கள் வாழ்வில் இல்லவே இல்லை.
உஷாவின் பத்தாம் வகுப்பில் உடல்நிலை சரியில்லாமல் முத்துலட்சுமியும் இறந்துவிட, அப்போதுதான் மீனாட்சி சுந்தரத்தை வரவைத்து மிரட்டி, உஷாவின் பொறுப்பை அவர் கையில் கட்டாயமாகத் திணித்தார் அந்த தேவாலயத்தின் பொறுப்பாளர்.
அதன்பிறகான நாட்கள் மீனாட்சி சுந்தரத்திற்கு நரகம்தான். முதல் மனைவி அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட, ஆப்படித்த குரங்காய் மாற, அந்தக் கோபம் மொத்தமும் உஷாவின் மேல் திரும்பியது. வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் யாரென்றேத் தெரியாமல் அவர்களின் கோபமும் அவள் மேலே இருக்க, அந்த சின்னப் பெண்ணின் கவலையும் அழுகையும் யாருக்கும் தெரியாமலேப் போனது.
அன்பில்லாத அவளது உலகம் தனிமையே என்றாகிவிட, படிப்பும் அவளது அம்மா அவளுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில்தான் என்பதால் மீனாட்சி சுந்தரத்தின் குடும்பம் அவளை விட்டு வைத்தது.
இவை எல்லாம் நிசப்தி மூலம்தான் நரேனுக்குத் தெரிந்தது. அதிலிருந்து அவள் மேல் ஒரு சாஃப்ட் கார்னர். அவளைப் பார்க்கும் போது முன்னைப் போலக் கோபம் காட்டாமல் கரிசனையாகப் பேச, அன்பிற்காக ஏங்கியவள் இந்தக் கரிசனையில் கரைந்துப் போனாள்.
எல்லாம் காதல் என்று அவன் முன்னே நிற்கும் வரைதான்!
‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு என்று அவள் சொல்ல, அதற்கு அவன் சொல்லிய வார்த்தையில் இன்னும் ஏன் இந்த உயிர் இருக்கிறது என்று அதிர்ந்துதான் போனாள் பெண்.
***
தன்னவளின் கடந்த காலத்தை யோசித்தபடி அமர்ந்தவனின் முன்னே வந்து நின்றான் விக்ரம். அவனைப் பார்த்ததும், “பாஸ்” என எழுந்து நிற்க,
“நரேன் என்னோட கொச்சின் ட்ரிப்பை கேன்சல் செஞ்சிடு. அன்னைக்கு எனக்கு சென்னைல ஒரு ப்ரஸ்மீட் அரேஞ்ச் செய்திடு. இந்த மினிஸ்டர் பிஏக்கு நாளைக்கு அப்பாய்ன்மென்ட் பிக்ஸ் செய்திடு.” என வரிசையாகச் சொல்ல,
நரேனும், “எஸ் பாஸ்… எஸ் பாஸ்…” என்றானே தவிர, எதற்கும் மறுத்துப் பேசவில்லை.
ஒரு புன்னகையுடன் நரேனைப் பார்த்த விக்ரம், கட்டிலில் துவண்ட கொடியாய் படுத்திருந்த உஷாவைக் காட்டி, “இவதான் உனக்கு நிதர்சனம் நரேன். ரித்தி… அவ உனக்கு வெறும் கானல் நீர். அது உன் கண்ணுக்கு அகப்படுமே தவிர, கைக்கு சிக்காது. எனக்கு முன்னாடியே உங்க லவ் தெரிஞ்சிருந்தா…” எனத் தாடையைத் தடவியன், “ஓகே சொல்லிருப்பேனா தெரியாது, பட் கண்டிப்பா யோசிச்சிருப்பேன். ரித்தி அப்போ எடுப்பார் கைப்பிள்ளை, நானும் காதல் மயக்கத்துல… ம்ப்ச்… விடு, இனி எல்லாம் சரியாகிடும். சரி செஞ்சிடுவோம். இவளை மட்டும் நல்லா பார்த்துக்கோ நரேன். அன்புக்காக ரொம்பவே ஏங்கிப் போயிருக்கா.” எனப் பேச,
விக்ரமின் பேச்சில் இடையிட்ட நரேன், “நீங்க எனக்காக பேசினது எல்லாம் உங்களுக்கும் பொருந்தும் பாஸ். நான் இனி என் மனைவியை விட்டுடமாட்டேன். அவளுக்குப் பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும் என் கூடத்தான். ஆனா நீங்க…?” என்றுவிட்டு நேர்கொண்ட பார்வைப் பார்க்க,
“ஹா… ஹா…” என வாய்விட்டுச் சிரித்த விக்ரம், “என்னைச் சுத்தி, உன் தங்கையைச் சுத்தி இருக்கிற எல்லா பிரச்சனையும் உனக்குத் தெரியும். தெரிஞ்சும் தைரியமா கேட்குற பார்த்தியா?” என்றவன் சிரிப்பை நிறுத்திவிட்டு, “எனக்கு யாரும் அட்வைஸ் பண்ணா பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும். இனி செய்யாத. இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.” என்றவன் விறுவிறுவென வெளியேறிவிட,
‘பயம்… நிசாவை எப்படி எதிர்கொள்றதுன்னு பயம்’ இது ஆரம்பம் தானே, இனி தானே மெயின் பிக்சரே இருக்கு என மனதுக்குள் சிரித்துக்கொண்டவன், இப்போது உஷாவின் அருகில் போய் அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
***
1 comment
சாத்தான் வேதம் ஓதற மாதிரி, இந்த விக்ரம் போய் நரேனுக்கு அட்வைஸ் பண்றான் பாருங்களேன். எல்லாம் நேரம் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797