ஞாயிற்றுக்கிழமை விடியலில் எழுந்த மாதுளை வாயில் பெருக்கி, நீர் தெளிக்க, இரு வயதான பாதங்கள் அவளது பணிக்குக் குறுக்கே வந்தன. அவள் நிமிர்ந்து யாரென்று காண, அவளுடைய தந்தை நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையுமாக நின்றிருந்தார். உள்ளங்கையில் துடைப்பத்தின் அடியைத் தட்டிச் சீர்செய்தவாறு, அவள் அவரை ஆராய்ச்சியாக நோக்கினாள். வாவென்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவள் கீழே குனிந்து புள்ளி வைக்க ஆரம்பிக்க, 

“அப்பா மேல கோவமா, சாமி?” என்றார் இராமசாமி பதவிசாக.

காது கேளாதவள் போல கருமமே கண்ணாக அவள் கோலமிட, அந்நேரம் சிந்தாமணி வெளியே வந்தார்.

“பாப்பா, அப்பா வந்து நிக்கிறாரு; கவனிக்கலையா? நீங்க வாங்க, சம்பந்தி. உள்ள வாங்க” அவர் அழைத்தும் மகளின் உத்தரவிற்காக அவர் பெட்டிப் பாம்பாய் அடங்கி நின்றார்.

அங்கு வந்த மதுசூதனன் “மாமா, வாங்க.‌ இது நம்ம வீடு” என்று கூறவும் தான் அவர் அடங்கி ஒடுங்கி உள்ளே புகுந்தார்.

அவள் கோலமிட்டு முடிப்பதற்குள் அவளுடைய தம்பியும் தாயும் அங்கு வந்து சேர்ந்தனர். 

“டேய், தம்பு… வாடா! உள்ள போ. நான் வரேன்” என்று முத்துமாரியை வாயாற வரவேற்றாள் அவள்.

இவனும் உள்ளே புக, “அப்பா வந்தாரா?” என அங்கேயே நின்றபடி வினவினார் தாயார். 

“உன் புருஷனை முன்னாடி அனுப்பி வச்சுட்டுத் தான பின்னாடியே வர. அப்பறம் என்ன ஒன்னுந்தெரியாத மாதிரி கேள்வி!” அவள் ஒரேயடியாக முறுக்கினாள்.

“கோவத்தைக் குறைடி முதல்ல. கல்யாணமான பொண்ணு இப்படியா குதிக்கிறது!”

“எது, நான் குதிக்கிறனா? உன் புருசன் தான் கண்ணு மண்ணு தெரியாம குடிச்சுப்புட்டு, தலைகால் புரியாம குதிக்கிறாரு; ஆட்றாரு; கண்ட கண்ட காவால போய் விழுறாரு. இந்த அறிவுரையலாம் அங்கப் போய் ஓது”

“என் பேச்சைக் கேட்டு, அது இனிமேட்டா திருந்தப் போகுது! இப்படியே போனா, இன்னும் பத்து வருசம் கூட தாங்காது. விட்டுத் தள்ளு” அவர் சமாதானம் பேச

அவள் கையை உயர்த்தித் தடுத்தாள் “பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. என்னைப் பெத்தெடுத்த பாவத்துக்காக, என்ன செஞ்சாலும் பொறுத்துட்டுப்‌ போவாங்க; வாயேன். கொஞ்சம் சுதாரிக்கலைனா, அந்தாளு என்‌ தாலிய அறுத்துட்டுப் போயிருப்பான். இங்கிதம்னு ஒன்னு வேணாம்! எதேச்சையா என் புருஷனே நம்ம வீட்டுப் பக்கம் வந்திருந்தார்னு வையு. அப்பா நடந்துகிட்ட விதத்தைக் கண்ணால பாத்துருந்தா, எவ்ளோ வருத்தமா போயிருக்கும்”

“உங்க அப்பனை மாதிரியே சத்தம் போட்டு ஊரைக் கூட்டாத” என்றவரின் பார்வை சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்களா என நோட்டம் விட்டது “அன்னைக்கு அப்பா பண்ண அழிச்சாட்டியத்தலாம் உன் வூட்டுக்காரர்ட்ட அப்படியே ஒப்புச்சுட்டியாக்கும்!”

“இல்ல. காவால விழுந்தத மட்டுந்தான் சொன்னேன். ஏன் கேக்குற?” அவள் தன் குரலின் கனத்தை வெகுவாகக் குறைத்தாள்.

“அடுத்த நாளே மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தாரு. உங்க அப்பாவுக்குக் கை, கால்லலாம் சிராய்ச்சுருந்தது. இவரு தான் வண்டில வச்சு, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாரு”

“இந்தக் கதை எனக்குத் தெரியாதே!” அவள் வியப்போடு மோவாயில் விரல் வைத்தாள்.

“அதைச் சொல்லத் தான் உனக்கு ஃபோன் போட்டேன். நீ கோவத்துல ஃபோன எடுக்கல”

“தெரிஞ்சிருந்தா அந்த மனுசன வர விட்டுருக்கவே மாட்டேன். தப்பு நடந்து போச்சு!” வேண்டுமென்றே உச்சு கொட்டினாள் மகள்.

“மாது…” அர்ச்சனா தேவி‌ சற்றே எரிச்சல்பட்டார்.

“பின்ன என்ன? அந்த ஆளுக்குக் குடிக்குறதுக்குக் காசும் தந்துட்டு, குத்துதே குடையுதேங்குற! நீ இதுவரைக்கும் பட்டதுலாம் போதாது. இதுக்கு மேலயும் நிறைய நிறைய அவஸ்தைப்படணும்” அவள் தாயின் செயலில் குற்றம் கண்டறிந்து பொங்கினாள்.

“நானாருந்தா பணத்தை அளந்து கொடுப்பேன்.‌ அந்த ஆளா இருந்தா, ஒரு பைசா விடாம அள்ளிட்டுப் போயிடுவான். நாய்க்கு வாக்கப்பட்டா…” என்றதோடு இடைநிறுத்தினார் அவர்.

“என்ன இதுக்கே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குது! உள்ள நட, ஆத்தா. உனக்கு வெத்தலை, பாக்கு வச்சு அழைக்கணுமா?” என்றபடி தாயை அழைத்துக் கொண்டு அவளும் உட்சென்றாள்.

இராமசாமி அதிகாலையிலேயே கடைவீதிக்குப் போய், பார்த்துப் பதமாய் மீன் வாங்கி வந்திருந்தார். உள்ளே மனம் சஞ்சலப்பட்டாலும் அதை வெளிக்காட்டாமல், பக்குவமாகச் சமைத்து முடித்தாள் மாது. பிறந்த வீட்டினரையும் புகுந்த வீட்டினரையும் ஒருசேர உட்கார வைத்து உணவு பரிமாறியவள் தொலைக்காட்சியை ஓடவிட, அந்தப் பழைய எல். ஜி. டிவி அதன் முதுமையைக் காட்டியது. தயை தாட்சண்யம் பார்க்காமல் அதன் தலையில் தட்டி, மேலும் சில நாட்களுக்கு அதனுடைய ஓய்வு விண்ணப்பத்தை அவள் தள்ளிப் போட்டாள். குடும்பமாய் அமர்ந்து மீன் குழம்புச் சோற்றையும் மீன் வறுவலையும் அவர்கள் உண்டு மகிழ்ந்தனர். உணவு முடிந்த கையோடு நம் மது மது விடுதிக்குத் தயாராக, அவள் காரண காரியத்தோடு அவனை அணுகினாள்.

“உங்களுக்கு அப்பா மேல கோவம் வரலையா?”

“எதுக்கு?” கேள்வியில் அவன் நெற்றி சுருங்கியது.

“அவர் என்ன பண்ணாருன்னு உங்களுக்கு முழுசா தெரியாதில்ல. தெரிஞ்சா, இப்படி நடந்துக்க மாட்டீங்கன்னு தோனுது”

“முழுசும் தெரிய வந்தாலும் நான் இதையே தான் செஞ்சுருப்பேன். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு. இதெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டு!” என்றான் அவன் தணிவாக.

“நீங்க தான் இந்த மாதிரி ஆளுங்களத் தினம் தினம் பாக்குறீங்களே. உங்களுக்குப் பழகிடுச்சு போல. நீங்களும் இதே மாதிரி ஒரு நாள் வந்து நின்னுட மாட்டீங்களே?” அவளுடைய கவலை தந்தையிடமிருந்து அவன் மீது தாவிற்று.

அவன் அவளை அதிர்ச்சியோடு ஏறிட்டான் “உனக்கு இதுபோல சந்தேகம்லாம் கூட இருக்கா?” 

“யாரையும் அவ்ளோ சீக்கிரம் நம்ப முடியாதில்லையா?”

“கரெக்ட். கரெக்ட். இப்படியே மெய்ன்டய்ன் பண்ணு” அவன் சிகை வாரியபடியே கேலி செய்தான்.

“கேட்ட கேள்விக்குப் பதிலைக் காணோம்!”

“நீ தான சொன்ன; ஒருத்தங்க தன்னைப் பத்தி தானே தப்பா சொல்ல மாட்டாங்கன்னு. நீயே கூட இருந்து, பாத்து, தெரிஞ்சுக்க” என்றான் அவன் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிய வண்ணம். 

அனுதினமும் பேன்ட், சட்டையில் பார்த்துப் பழகியவன், அந்தத் திடீர் ஆடை மாற்றத்தால் ஆளுமை நிறைந்த அழகாளனாகத் தென்பட்டான். அவனின் மீது படிந்த விழிகளை மீட்க இயலாமல் பெண்ணவள் திணற, அதைக் கவனித்துவிட்டவன் தொண்டையைச் செறுமினான். கன்னத்தில் உரிமையுடன் நேசமாடிய கூந்தல் கற்றையை ஒதுக்கிய வண்ணம் அவள் தன் பார்வையைத் திருப்பினாள்.

“லுக்கு ஒன்னும் சரியில்லையே!” அவன் வெளிப்படையாக அவளை வம்பிழுத்தான்.

“இல்லை, புதுசா வேட்டி கட்டிருக்கீங்களேன்னு பாத்தேன்”

“நம்ம கல்யாணத்தன்னைக்கும் வேட்டி கட்டிருந்ததா ஞாபகம்”

“ஆமா தான்… சும்மா பாக்கக் கூட கூடாதா?”

“பாக்கலாமே. நான் உன் புருஷன்மா. தாராளமா பாக்கலாம். ஆனா, இப்படிக் கள்ளத்தனமா பாக்க வேணாம்னு தான் சொல்றேன். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி, திமிர்ந்த ஞானச் செருக்கு; இதுக்கெல்லாம் என்னாச்சு, மேடம்?”

“என்ன, நக்கலா? அதென்ன அடிக்கடி மேடம், மேடம்னுட்டு! கிண்டல் செய்யுறீங்களா?” அவள் கண்களை அகல விரித்து அவனிடம் மல்லுக்குப் பாய்ந்தாள்.

“உன் வேலையே அது தான. காலேஜ்ல எல்லாரும் அப்படித் தான கூப்புட்றாங்க?”

“அவங்க கூப்பிடலாம். அவங்களாம் என் ஸ்டூடன்ட்ஸ், கொலீக்ஸ்…” அவள் பதற்றத்தில் துப்பட்டா முனையைத் திருகினாள்‌.

“அப்போ, நான் மட்டும் உன்னை மேடம்னு கூப்பிடக் கூடாதுன்னு சொல்ல வரியா? அப்டீனா நான் உனக்கு சம்திங் ஸ்பெஷல்னு எடுத்துக்கலாமா?” அவளது புத்தம்புது நாணத்தை இரசித்தவாறு, அவன் நங்கையின் உள்ளத்தை ஆழம் காண முயன்றான்.

“வாட்எவெர்… எப்டியோ கூப்புட்டுக்கோங்க. இப்போ கிளம்புங்க” அவள் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனானாள்.

“நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி! நமைச் சேர்த்த இரவுக்கு… இல்லல்ல, இன்னும் அப்படி ஒரு இரவு வரல. வரும்போது பாடுறேன்”

“மது..‌. வார்த்தையாலே என்னைக் கொல்றீங்க!” அவளின் அதரங்கள் வெட்கத்தில் துடித்தன.

“நீ பார்வையாலயே கொல்லும்போது, குறைஞ்சது நான் எதிர்த்துப் போராடக் கூடாதா? இருந்தாலும் உன் பார்வைக்கு இருக்குற சக்தி, என் வார்த்தைகளுக்கு இல்ல. இதாவது, உன்னைக் கொல்றதாவது!” 

அவன் அவ்வாறு கூறி புன்சிரிப்பொன்றை உதிர்க்கவும், அவள் தன் இடையில் இரு கரம் தாங்கி அவனைக் கூர்மையாக உறுத்தாள்.

“ப்பா… அப்படிப் பாக்காத!” கண்களின் வழியே கதிரவனைப் பிரதிபலித்த கணக்காக, ஒரு கரத்தால் அவன் தன் முகத்தை மறைத்துக் கொண்டான்.

“உங்களுக்குப் பேசவா கத்துத் தரணும்! நான் கூட பொண்ணு பாக்க வந்த இடத்துல அமைதியா இருந்ததை வச்சு, என்னமோ நெனைச்சிட்டேன். இப்போல்ல நிஜ முகம் தெரியுது” அவள் சிருங்காரத்தோடு அங்கலாய்த்தாள்.

“என்ன நெனைச்ச?” அவன் ஆர்வமாக ஓரடி முன்னெடுத்து வைக்க

“அப்பா, கூப்டீங்களா? இதோ வரேன்” என்று வராத அழைப்பிற்கு இணங்கி, அவள் அங்கிருந்து தப்பியோடினாள். திருத்தம், அவனிடமிருந்து தப்பி ஓடி இருந்தாள்.

அவளின் செய்கையில் நாக்கை வளைத்து, பல்வரிசை தெரிய புன்னகைத்தவன் கைக்கடிகாரத்தை ஒழுங்கு செய்தபடியே ஒருமுறை கண்ணாடியில் முகம் பார்த்தான். சட்டையின் வெண்மையை விட அவனின் தேகம் அதிகமாகப் பிரகாசித்தது; முன்னொரு பொழுது காதலியாக இருந்து தற்போது மனைவியாக மாறியவளுடன் நடந்த இனிய அளவளாவலின் பலனாக. 

அடுத்த நாள் அவள் வழக்கம் போல கல்லூரிக்குக் கிளம்ப, சிந்தாமணி வழக்கத்திற்கு மாறான சோர்வுடன் காணப்பட்டார். 

“அத்தை, உடம்புக்கு எதுவும் பண்ணுதா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“இராத்திரில இருந்து கொஞ்சம் காச்சலா தான்மா இருக்கு”

“சொல்லிருந்தா நானே எழுந்து சமைச்சிருப்பனே. ஏன் உடம்ப அலட்டிக்கிறீங்க?”

“நேத்து பூரா எல்லா வேலையும் நீ தானம்மா இழுத்துப் போட்டுச் செஞ்ச. சுலோவும் பரீட்சை இருக்குனு நேரமா கிளம்புனா. என்னால முடிஞ்சது ஒரு இரசத்தையும் பொரியலையும் வச்சுட்டேன்”

“நீங்க முதல்ல வாங்க. இங்க உக்காருங்க, அத்தை” என்றவள் அவரை அந்தப் பழைய நாடாக் கட்டிலில் அமர்த்தினாள்.

சிறுதொலைவு தள்ளிச் சென்றவள் அவசரமாக முல்லைக்கு அழைத்தாள் “முல்லை, நான் மாது பேசுறேன். அத்தைக்கு நைட்டுலருந்து உடம்பு முடியல. என்னாலயும் சட்டுனு லீவ் எடுக்க முடியாது. முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணா தான் லீவ் தருவாங்க. நீங்க வீட்டுக்கு வந்து அவங்களைப் பாத்துக்கிறீங்களா?”

இருவரும் ஒத்த வயதினர் என்பதால் இவளும் பெயர் சொல்லியே அழைத்தாள் “பெரியவன் ஸ்கூல்ல இன்னைக்குப் பேரன்ட்ஸ் – டீச்சர் மீட்டிங், மாதுளை. நான் அங்கத் தான் போயிட்டுருக்கேன்‌. முன்னாடியே தெரிஞ்சுருந்தா, நான் அவங்க அப்பாவையாவது மீட்டிங்க்கு அனுப்பிருப்பேன்‌. இப்போ அவரும் ஆஃபிஸ் போயிட்டாரு. நான் தான் மீட்டிங்க்குப் போயாகணும்”

“சரி, முல்லை. பாருங்க” என்றவள் அடுத்ததாக ரம்யாவிற்கு அழைத்தாள் “ரம்யா, நான் மாது பேசுறேன். அத்தைக்குக் காய்ச்சலடிக்குது‌.‌ வீடு வரைக்கும் வர‌ முடியுமா?”

“அண்ணி‌, நான்‌ மட்டுந்தான் அண்ணி இப்போ கடையில இருக்கேன். மச்சான் சரக்கு எடுக்க டௌனுக்குப் போயிருக்காரு.‌ நைட் வந்து பாக்குறனே” என்று இவளும் அலுவல் காரணமாக வர மறுத்தாள்.

சுதா சென்னையில் இருக்கிறாள்‌. சுலோச்சனாவோ தேர்வு என்று கூறிவிட்டுப் போயிருக்கிறாள்.‌ வேறு யாரைத் தான் தருவிப்பது என்று அவள் யோசிக்கலானாள்.

“அத்தை, காலை சாப்பாடு சாப்டீங்களா? இந்தாங்க. இதைச் சாப்பிட்டதும் இந்தக் காய்ச்சல் மாத்திரைய போடுங்க. எந்த வேலையும் செய்யாம படுத்தே இருங்க. நான் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வந்துட்றேன்” என்றவள் அவருக்கு வேண்டியவற்றை எடுத்து அருகில் வைத்துவிட்டு, அலைபேசியைத் தட்டியவாறே வீதியில் இறங்கி நடந்தாள்.

இறுதி அழைப்பு மதுசூதனனுக்குப் பறந்தது “என்னங்க, சாப்பிட வீட்டுக்கு வரலையா?”

“காலையிலயே கடையில ஒரு பார்ட்டிமா. அதுக்காக ரெடி பண்ணிட்டுருக்கேன். வீட்டுக்கு வரதுக்கு நேரமில்ல”

“அத்தைக்கு உடம்பு முடியலைங்க. நீங்க வந்து அவங்களை ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டுப் போங்களேன்.‌ ரொம்ப கஷ்டப்படுறாங்க”

“பாக்குறேன்மா. பாக்குறேன்” பின்னணியில் கூச்சல் அதிகமாக இருக்கவே, அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான். 

கல்லூரி சென்றவள் முதலிரண்டு வேளைக்குள் பாடமெடுத்துவிட்டு, விடுப்பு பெற்ற கையோடு அவசர கதியில் வீடு திரும்பினாள். அவள் வந்து பார்த்தபோது, வீடும் சிந்தாமணியும் காலையில் விட்டுச் சென்ற நிலையிலேயே இருந்தனர். ஓர் ஆட்டோவை வரவழைத்தவள் அத்தையை அதிலேற்றிக் கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தாள். சிகிச்சை முடிந்து மருந்து, மாத்திரைகளோடு அவர்கள் வீடு திரும்பிய போது, மதுசூதனனின் இருசக்கர வாகனம் வாசலில் நின்றது.

“நீங்களே ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டீங்களா? நீ வேலைக்குப் போகலையா, மாது?” அவன் இயல்பாக விசாரிக்க, அவளோ வாயைத் திறவவில்லை.

சிந்தாமணிக்குச் சோற்றுக் கஞ்சி வைத்துக் கொடுத்து, மாத்திரைகளை விழுங்கச் செய்து படுக்க வைத்தவள் பின்னரே கணவனை ஏறிட்டாள்.

“மாது…” அவன் ஏதோ பேச முற்பட 

“உள்ள வாங்க” என்றவள் முந்தானையை இடையில் செருகி அறையினுள் நுழைந்தாள். 

அவன் உள்ளே வந்ததும் கதவடைத்தவள் “காலைல ஃபோன போட்டு உங்கள்ட்ட நான் என்ன சொன்னேன்?” என்றாள் மிகுந்த கடுப்புடன்.

“அது ஒரு விஐபி கஸ்டமர்மா. முக்கியமான ஆர்டர்” அவளின் குற்றப் பார்வையால் அவன் சற்றே தடுமாறினான்.

“வாழ்க்கைல எல்லாருக்கும் முத விஐபி அவங்கவங்க அம்மா தான். அப்பறந்தான் பொண்டாட்டி, பிள்ளை, கஸ்டமர்ஸ், எல்லாருமே. இத்தனை நாள் தெரியலைனா, இனிமேயாவாது புரிஞ்சுத் தெரிஞ்சு நடந்துக்கங்க”

“சரி, ஸாரி”

“பொல்லாத ஸாரி‌! இந்த ஸாரிய உங்க அம்மாகிட்ட போய்க் கேளுங்க”

அவனுக்கு அடுத்ததாகப் பேச தமிழிலுள்ள எந்தப் பதங்களும் துணைக்கு வரவில்லை.

“அஞ்சு புள்ளைங்களப் பெத்து வச்சுட்டு உடம்பு சுகமில்லாத இந்த நேரத்துல ஒரு புள்ளை கூட பக்கத்துல இல்லைனா, அவங்களுக்கு மனசு எப்படித் துடிச்சுருக்கும்! ஆளாளுக்கு வேலைங்குறீங்க; பணம்குறீங்க. என்னவோ‌ போங்க!” அவள் தன்னைத் தானே சமன்படுத்தும் நோக்கில் நெற்றியைத் தேய்த்தாள்.

அங்கிருந்து வெளியேறியவன் சிறிது நாழி தாயின்‌ அருகாமையில் அமர்ந்து நலம் விசாரித்தான். 

பின்னர் அவன் “கடைக்குப் போகணும்” என்று கூறவும் மாது அமைதியாக உணவு பரிமாறினாள்.

உண்டு முடித்து கை கழுவியவன் “சாயந்தரம் வந்துடுவேன்” என்று சொல்லிப் புறப்பட்டான்.

சற்று நேரத்தில் முல்லை இரு பிள்ளைகளுடன் தாயகம் வந்து சேர்ந்தாள். அடுத்து சுலோச்சனா கல்லூரி முடித்து வீடு திரும்பினாள். அடுத்ததாக ரம்யா இரு பெண் பிள்ளைகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தாள். அடுத்தடுத்து மதிவாணனும் மதுவும் வந்தனர். பல்பொருள் அங்காடியை அடைத்த பிற்பாடு ரிஷிவர்த்தனும் வருகை தந்தார். அந்தக் கூட்டத்தை மகிழ்ச்சியாகத் தன்னுள் நிரப்பிக் கொண்டது அச்சிறிய வீடு. இத்தனை நபர்களை முதல் முறையாக உபசரிக்கிறாள் மாது; அதுவும் மாமியாரின் துணியின்றி. யாருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்ற விவரம் ஏதும் அவளுக்குத் தெரியாது; உதவிக்கு ஒருவராவது இருந்தால் பரவாயில்லை எனத் தோன்றியது. அன்னையை வரவழைக்கலாமா என்று சிந்தித்து, அது சரிப்பட்டு வராது என்கிற முடிவோடு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்தாள். பேசாமல் கணவனிடமே விசாரித்துக் கொள்ளலாமா; அவனுக்குச் சமையலைப் பற்றி ஏதேனும் தெரிய வாய்ப்புண்டா; பெண்கள் அதிகம் இருக்கும் இவ்வீட்டில் அவனுக்கும் சமையற்கட்டிற்கும் சகவாசமே இருந்திருக்காது என்று அவள்‌ எண்ணலானாள்.‌ அத்தருணம் மனதின் குரலை அறிந்தவன் போல மது உள்ளே வந்தான். அவனைக் கண்டுவிட்டு எண்ண மேகங்களைக் கலைத்தவள், வெங்காயம் நறுக்குவதில் மும்முரம் காட்டினாள்.

“அங்க எல்லாரும் உக்காந்து பேசிட்டுருக்காங்க. நீ இங்கத் தனியா என்ன செய்யுற?”

“பேசுனா, பசியாறிடுமா?” அவள் எப்போதும் போல வியாக்கியானமாக வினவினாள்.

“அது சரி. யாரையாச்சும் துணைக்குக் கூப்பிட்டுக்கலாம்ல?”

“வீட்டுக்கு வந்துருக்கிற விருந்தாளிங்களைப் போய் வேலை வாங்க முடியுமா!”

“அவங்க வெறும் விருந்தாளி இல்லமா. அடிச்சாலும் புடிச்சாலும் உனக்கு அவங்க தான்; அவங்களுக்கு நீ தான். புரிஞ்சுதா?”

“அதுக்குனு… எனக்கு எப்படி உதவி கேக்குறதுனே தெரியல. அவங்க தப்பா எடுத்துப்பாங்களோன்னு தயக்கமா இருக்கு” என்று சொல்லி அவள் கண்களைத் துடைத்தாள்.

“மாது, இந்தச் சின்ன விஷயத்துக்கா அழற?” 

“வெங்காயம் வெட்டுனதுல கண்ணு எரியுது. நான் எதுக்கு அழப் போறேன்!”

“நான் பாத்த வரைக்குமே மூனு தடவை அழுதுட்ட. அதான் இதுக்கும் அழ ஆரம்பிச்சிட்டியோன்னு…” என்றதற்கு அவள் முறைத்தாள். 

அவன் இலகுவான இதழ் முறுவலோடு தங்கையின் பெயரை ஏலமிட்டான்‌ “முல்லை… ஏ, முல்லை…” 

இவள் விரைந்து சமையல் கூடத்தினுள் வருகைப் பதிவு செய்தாள்‌ “என்ன, ணா?” 

“உங்க அண்ணி இதுல எது துவரம்பருப்பு, கடலைப்பருப்புனு சந்தேகம் கேக்குறா. தெரிஞ்சா சொல்லிக் குடேன்”

நாத்தனாரின் முன்னிலையில் சரிக்குச் சமமாகப் பேச முடியாமல் மாது நிதானித்தாள். 

தமையனின் குறும்புக் குணம் ஓரளவு தெரிந்திருந்ததால், முல்லை அக்கூற்றை‌ப் பெரிதாய் இலட்சியப்படுத்தவில்லை‌ “இந்நேரத்துல எதுக்குப் பருப்பு? சப்பாத்தியும் குருமாவும் வச்சுடலாம், மாது”

“இவ்ளோ பேருக்கும் சப்பாத்தியா?” அவள் வாயைப் பிளந்தாள்.

“நாங்களாம் எதுக்கு இருக்கோம்! இந்த நண்டு, சிண்டுக இராத்திரி நேரத்துக்கு எதக் கொடுத்தாலும் முகத்தச் சுளிக்குங்க‌; ரொட்டினா சாப்டுப்பாங்க. கதை அடிச்சுட்டே சமைச்சா, வேலை ஆகறதே தெரியாது” என்றவள் மற்ற தங்கைகளையும் வேலை வாங்க முற்பட்டாள் “ரம்யா, சுலோ, இங்க வாங்கடி”

மாது மனதில் எண்ணியவற்றை அவளுக்கு நிறைவேற்றித் தந்தவனோ, வெற்றிப் பூரிப்பினில் புருவங்களை அலை அலையாக வளைத்தான். அவனின் அரிய பெரும் சாதனையை மெதுவாகத் தலையசைத்து அவள் அங்கீகரிக்க, அங்கிருந்து அகன்றான் அவன். 

“சுலோ, அந்தப் பாத்திரத்தை விலக்கி வை. கோதுமை மாவு அந்த வாளில இருக்கும்; எடுத்துப் பிசைடி, ரம்யா” என்று உத்தரவிட்டவாறு முல்லை உருளைக் கிழங்குகளை வேக வைத்தாள்.

“அண்ணி, நீங்க குருமா வச்சுடுங்க. நானும் முல்லையும் ரொட்டி போட்டு எடுத்துட்றோம்” என்று ரம்யா கூறிட, ஆமோதிப்பாய்த் தலையாட்டினாள் அவள்.

அதேவேளை சென்னையில் இருந்து சுதா காணொளி அழைப்பில் இணைய, கதையும் கலாட்டாவுமாகச் சமையல் பணிகள் களை கட்டின. மாது நினைத்தது போல் அவளது கணவனுக்குச் சமையல் தெரியவில்லை தான். ஆனால், சமையற்கட்டின் வாசமும் வாடிக்கையும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான் அந்த வித்தைக்காரன். ஒரு மணி நேரத்தில் எல்லா பணிகளும் ஓய்ந்து அவர்கள் உணவருந்த அமர்ந்தனர். குழுமியிருந்த பன்னிரண்டு நபர்களுக்கு பன்னிரண்டு தட்டுகளில் பரிமாற வேண்டும் என மாது கணக்கிட, அங்குத் தேவைப்பட்டவையோ ஆறு தட்டுகள் தான். முல்லையும் மதிவாணனும் ஒரு தட்டில் பகிர்ந்துண்ண, அதையே பிள்ளைகளும் பின்பற்றினர். ரம்யாவின் குடும்பத்திடமும் அதே நடைமுறையைக் காண முடிந்தது. சுலோ சிந்தாமணிக்கு ஊட்டிவிட்டவாறு தானும் உண்டாள். அங்ஙனமே தன் தட்டில் இரு ரொட்டிகளை எடுத்து வைத்து அவளின் வரவிற்காகக் காத்திருந்தான் மது. அவள் குருமாவை ஊற்றி தட்டில் கை வைக்கவும் அவன் உண்ணத் துவங்கினான்.

“அப்பறம், எப்போ விருந்துக்கு வரீங்க?” என்றார் மதிவாணன் தொலைக்காட்சிச் சேதியை உற்றுநோக்கியபடி.

“என்னைக் கேட்டு! அங்கக் கேளுங்க” என்று மது தப்பிக் கொள்ள, அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்பதே விளங்காமல் சப்பாத்தியைப் பிசைந்து கொண்டிருந்தாள் ஒருத்தி.

மதி தொண்டையைக் கனைக்க, “அம்மா, மாதுளை!” என்றழைத்தார் சிந்தாமணி.

பிறகு தான் சூழ்நிலை தெளிந்தவள் “அத்தைக்கு உடம்பு குணமாகட்டும், அண்ணா. எல்லாரும் சேந்தே வரோம்” என்றாள் மதியிடம்.

“அத்தையலாம் துணைக்கு அழைச்சுட்டு வர வேணாம். அவங்க எத்தனையோ தடவை நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க‌. நீங்க புருஷன், பொண்டாட்டி மட்டும் வாங்க”

அவள் மிகவும் சாந்தமாகச் சம்மதம் தெரிவித்தாள் “சரிங்க, அண்ணா” அவரைச் சந்திக்கும் போதெல்லாம் கண்டிப்பான ஆசிரியரைக் காண்பது போலவே அவளுக்குள் ஒரு பிரமை.

உண்டு முடித்து ஒருவர் ஒருவராய் உறங்கச் செல்ல, “பசங்கள வேணா எங்க ரூம்ல படுக்க வச்சுர்லாமா?” என்றாள் அவள் இடப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு.

“அதெல்லாம் வேண்டாங்க்கா. நீ போய்த் தூங்கு” என்று மறுத்துவிட்டான் ரிஷிவர்த்தன்.

அந்த வீட்டில் ஒரு சிறிய வரவேற்பறை இருந்தது. அதிலே ஒரு காலுடைந்த மேசை காலங்கடந்த தொலைக்காட்சிப் பெட்டியொன்றைத் தாங்க இயலாமல் தாங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த நார்க்கட்டிலில் அமர்ந்து மாத்திரையை விழுங்கிக் கொண்டிருந்தார் சிந்தாமணி. கீழே ஒரு நீண்ட விரிப்பை விரித்து, அதில் மதி, ரிஷி, மற்றும் குழந்தைகள் நால்வரும் படுத்துக் கொண்டனர். அதற்கு நேரெதிரில் சமையலறை அமைந்திருந்தது‌. ஒரே சமயத்தில் நான்கு பேருக்கு மேல் நிற்க இயலாத அளவிற்கு அது குறுகிக் கிடந்தது. அதன் விளக்கை அணைத்ததோடு மாது உள்ளே நடந்தாள். உட்புறம் ஒன்றன் பின் ஒன்றாக இரு அறைகள் அமைந்திருந்தன. முதல் அறையில், ஓர் இஞ்ச் பூர்வீகத்தை விட்டு நகர்த்தினாலும் அஸ்திவாரமே ஆடிப் போய்விடக் கூடிய பழைய மரக்கட்டில் இருந்தது. சுலோச்சனா வாசம் செய்யும் அக்கட்டில், தற்போது கூடுதலாக இரு மூத்த சகோதரிகளையும் சுமந்து காட்சியளித்தது‌. அங்கிருந்த கழிப்பறையுடன் கூடிய குளியலறை கேட்பாரற்று திறந்து கிடந்தது‌. அதை மூடிய மாது, அடுத்ததாக இருந்த தங்களது அறைக்குள் காலெடுத்து வைத்தாள். அவள் வருவதற்கு முன்னர் அவ்வறையை வீட்டின் பெண்கள் உபயோகித்ததாக, சுவற்றில் இருந்த ஸ்டிக்கர் பொட்டுகள் கட்டியம் கூறின. அத்தியாவசியத்திற்காக அந்த அறைக்கு மட்டும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கதவை அவள் தூக்கிப் பிடித்துத் தாழிட்டாள். இந்த வீட்டினைக் குறை சொல்லுமளவு கூட அவளின் வீடில்லை. சமையலறைக்குக் கூட தடுப்பில்லாத அவ்விடத்தில் இரண்டு ரொட்டிகள் சுட்டாலே, இந்நேரம் வீடு முழுக்க புகை மண்டலம் சூழ்ந்திருக்கும். சிரம பரிகாரங்களெல்லாம் வெளியே தெருவை ஒட்டியமைந்த ஆறடி‌க் கூடாரத்தில் தான். தெருவில் நடப்பவர்கள் எட்டிப் பார்த்தால் மானம் போகும் சங்கடமான நிலை. அதனுடன் ஒப்பிடும்போது புகுந்த வீட்டினில் அறைக்குள்ளேயே குளியலறை வாய்த்திருப்பது எத்துணை மேல்! வசதி என்றும் சிலாகித்துக் கொள்ளலாம்.

“மேடம்!” அவளின் நெடிய சிந்தனையை ஒரு விநாடியில் கலைத்தான் அவளவன்.

“ஆன்!” அவனது குறுக்கீட்டால் அவளின்‌ மூளை சம்பித்தது.

“வாட் திங்கிங்?” ஆங்கிலத்தில் அடித்துவிட்டான் ஆடவன்.

“உங்களோட மூனாவது தங்கச்சி குடும்பமும் வந்திருந்தா, இந்த வீட்டுல இடம் பத்திருக்குமான்னு யோசிச்சேன். சுலோவுக்குக் கல்யாணமாயிட்டா, கண்டிப்பா இது பத்தாது‌”

“இந்த வீட்டுல தங்கப் போற ஆட்கள் அவ்வளவு தானா?” அவன் தீவிர முக பாவத்துடன் கேட்டான்.

“நமக்கு அந்தளவு நெருக்கமானவங்க வேற யாரு இருக்கா?”

“எனக்குத் தெரிஞ்ச முக்கியமான ஒருத்தவங்க இருக்காங்க‌. அவங்களால நம்ம குடும்பத்துல ஒன்னு, ரெண்டு மக்கள்தொகை கூட வாய்ப்பிருக்கு” சிரித்த முகமாகக் கூறியவன் கட்டிலிலிருந்து கீழிறங்கி, அவள் படுக்க வசதி செய்தான். 

அவன் சொல்ல விழைவது யாதெனப் புரியாமல் நின்றவள், புரிந்த பின் அவன் மீது தலையணையைத் தூக்கி எறிந்தாள். அதைக் கச்சிதமாகக் கையில் பிடித்து, வீட்டு வாசலுக்கே கேட்கும்படி உரக்கக் கலகலத்து வைத்தான் மது.

***

You may also like

Leave a Comment

About Me

Latest Posts

Featured