தளிர் 11
உஷாவின் அருகில் அமர்ந்திருந்த நரேனின் பார்வை மொத்தமும் மனைவியின் மேல்தான். மிகவும் ஓய்ந்து போயிருப்பது அவளது துவண்டுக் கிடந்த தோற்றத்திலேயே தெரிந்தது.
வெளியில் தைரியமான பெண் என்றுக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவள் எந்தளவிற்கு பயந்தவள் என்பதை அவன் அறிவானே! அதனால்தான் அவளுக்குத் தெரியாமலே மனோவின் கீழ் வேலைக் கிடைக்கும்படி செய்தான்.
அவளது வேலையில் இருக்கும் ஆபத்தைப் பற்றி அறிந்ததாலயே, அவளுக்குப் பின்னே சேடோவாக மனோவை வைத்திருந்தான். என்னதான் மனோகர் அவளுக்கு சீனியர் கேமிராமேன் என்றாலும், நரேனின் கீழ்தான் அவனது வேலை. நரேன் சொல்வதை மட்டுமே செய்வான்.
அதனால் அவளது நடமாட்டங்கள் எல்லாம் அவன் கண் பார்வையில்தான் நடந்துகொண்டிருந்தது. ஆனால் அவனையும் மீறி சில வேலைகளை அவள் செய்யத்தான் செய்தாள். அதில் ஒன்று விக்ரமின் கேசை ஆராய்வது. உஷா இதில் தீவிரமாக இறங்கிவிட்டாள் என்றதுமே நரேனுக்கு கோபம்வர, அவளை எப்படித் தடுப்பது என்று யோசித்து விக்ரமிடம் சொல்லிவிட்டு செய்யலாம் என அவனிடம் சொல்ல,
அவனோ மிகவும் கூலாக, “டேய் விடுடா… அவ என்னைத்தானே பழிவாங்கத் துடிக்கிறா. அப்படித்தான் பழிவாங்கட்டுமே… விடு பார்த்துக்கலாம். அவளால வீட்டுல நிம்மதியா இருக்க முடியாதுன்னு நமக்குத் தெரியுமே. அதனாலகூட இப்படி நடக்கலாம். எதையோ சாதிக்கணும் அப்படிங்கிற வெறியாக்கூட இருக்கலாம். இல்லை அவளோட நிசாவுக்கு நியாயம் கிடைக்கிறதுக்கான போராட்டமாக்கூட இருக்கலாம்.” என்று சொல்லும்போது விக்ரமின் முகத்தில் ஒரு விரிந்தப் புன்னகை தோன்றியது.
அதனூடே, “ஆனா நீ இதையெல்லாம் உன் மைண்ட்ல ஏத்திக்காத, அவளைக் கவனமா பார்த்துக்கோ. அதுதான் முக்கியம். நம்ம மேல பார்வையை வச்சிட்டு, சுத்தி இருக்குற பிரச்சனையில மாட்டிக்கப் போறா கவனம்.” என்றுவிட எரிச்சல்தான் வந்தது அவனுக்கு.
வேறு வழியில்லாமல் மனோகரிடம் சொல்லி அவ்வப்போது அவளை எச்சரிக்கத்தான் செய்தான். அதை அவனின் மனைவி கேட்டால்தானே. அவனை எரிச்சல்படுத்த, கோபப்படுத்த என அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையும், அவளது எண்ணத்தைப் போலவே கோபத்தையும் எரிச்சலையும் கொடுக்கத்தான் செய்தது. ஆனாலும் மிகப் பொறுமையாகவே இருந்தான்.
எல்லாம் அவன் நிஷா இங்கு வர வேண்டும் என்பதற்காக. இதோ வந்துவிட்டாள். இனி அவன் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கும் நேரம் உஷா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறாள். எங்கோ பலமாகத் தோற்றுப்போன உணர்வு அவனுக்கு.
அவளிடம் சில நாட்களுக்கு முன்பாவது, அல்லது நிஷா இங்கு வரப் போகிறாள் என்றுத் தெரிந்த பிறகாவது பேசியிருக்கலாம். எல்லாம் முடியட்டும் பேசலாம் எனக் காலம் தாழ்த்த, அது இன்று அவளது உயிரைக் குடிக்கும் அளவிற்குச் சென்று விட்டதே, தன்னையே நொந்துகொண்டான் நரேன்.
தாயைப் பார்த்ததில்லை அவன். தந்தையும் அவனுக்காக எதையும் செய்ததில்லை. எடுத்துச் சொல்ல யாருமின்றி வளர்ந்தவன்தான், ஆனால் ஒழுக்கமாக வளர்ந்தவன்.
அப்படி சுய ஒழுக்கத்தோடு இருந்தவனின் வாழ்வில் தென்றலாய் வந்து, புயலைப் போல் புரட்டி எடுத்துவிட்டுக் கரையைக் கடந்தவள்தான் கிருத்திகா.
விக்ரமின் தங்கை எனும் முன்பே கிருத்தியை நரேனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் மனதில் தோன்றியது காதல்தான் என்று அவன் உணர்ந்துகொண்ட நொடி, அதை மறைக்கத் தோன்றாமல் அவளிடம் சொல்லிவிட, அவளும் அவன் காதலுக்காகக் காத்திருந்ததைப் போல உடனே சரியென்று ஒத்துக்கொண்டாள்.
எண்ணங்கள் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்க, அதைக் கடிவாளம் போட்டு இழுப்பது போல, உஷாவிடம் இருந்து சிறு முனங்கல் வந்தது. சட்டென்று தன் எண்ணங்களை விட்டவன், மனைவியின் அருகில் வேகமாக வந்தான்.
“லச்சுமா…” என்றவனின் குரல் காதில் விழுந்ததோ, அல்லது அவன் அழைப்பின்போது அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் பட்டதோ மெல்ல கண்விழித்தாள் பாவையவள்.
***
நிசப்தி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து முழுதாக ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்றைக்குப் பிறகு ரித்தியை அழைத்து வரவேண்டாம் என ரவியிடம் உறுதியாகச் சொல்லிவிட்டார் ரேணுகா. அவளுக்குத் துணையாக மதி இருக்க, குழந்தைகளை மட்டும் தினமும் ரவி கொண்டுவந்து விட்டு, பின் அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.
இதுவும் ரேணுகாவின் ஏற்பாடுதான். பிள்ளைகள் வந்து சென்றால் இங்கு தசிராவுக்கும் நேரம் போகும், நிசப்தியும் குழந்தையைத் தாண்டி வேறு யோசிப்பாள் என்று நினைத்துதான் இப்படியொரு முடிவை எடுத்தார்.
விக்ரமும் காலையும் இரவும் வந்து குழந்தையையும், அதை சாக்கிட்டு நிசப்தியையும் பார்த்துச் செல்வான். ஒன்றுமே நடவாதது போல, மிகவும் சாதாரணமாகவே நடந்துகொண்டான். அவன் இப்போது என்ன செய்கிறான், என்ன யோசிக்கிறான் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. இதனால் மிகவும் குழப்பத்தில் இருந்தாள் நிசப்தி.
முன்னே இருந்தது போல அவளின்மீது எந்த கோபமோ சீண்டலோ எதுவும் இல்லை. ஆனால் அவளை ஒரு முறைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பான்.
தசிராவும் விக்ரம் வந்ததும் அவனிடம் மட்டுமே இருப்பாள். சில நேரம் குழந்தையைச் சாக்கிட்டு இருவருக்கும் சில சின்ன சின்ன பேச்சு வார்த்தைகள் உண்டாகத்தான் செய்யும். ஆனால் அதை யாரும் கவனிக்கும் முன்பே தவிர்த்து விடுவாள் நிசப்தி.
ஏனோ அவளுக்கு விக்ரமின்மீது ஒரு கோபத்தையும் தாண்டி, ஒரு வெறுப்பு வந்திருந்தது. அதை ரேணுகாவின் முன் அவளால் விக்ரமிடம் காட்ட முடியாமல் போக, அந்த எரிச்சலும் சேர்ந்துகொள்ள, அவனையும் அவனது பேச்சையும் தவிர்க்க ஆரம்பித்தாள். அதனாலே அவன் இருக்கும் நேரம் குழந்தையைக் கூடத் தூக்கமாட்டாள் நிசப்தி.
அப்படி ஒரு நாள் நிசப்தி ஒதுங்கி இருந்த நேரம் நேராக அவளது அறைக்கு வந்தவன், “என்ன என்னை அவாய்ட் பண்றதா நினைப்பா உனக்கு? அது உன்னால முடியுமா என்ன?” எனக் கிண்டலாகக் கேட்டவன்,
“எங்கேயோ இருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டினவளை என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்கேன். இன்னும் என்னைப்பத்தி புரிஞ்சிக்கலைன்னா என்ன செய்றது? ஹ்ம்ம்…” எனத் தன் வளவளத்தத் தாடையை தடவியபடியே “இனிமே இப்படி சைல்டிஷா பிகேவ் பண்ணாத, நான் வர்றது என் அம்மாவையும் என் பொண்ணையும் பார்க்க மட்டும்தான். என் பொண்ணோட அம்மா என் எண்ணத்துல, ஏன் கண் பார்வையிலக்கூட எங்கேயும் இல்ல புரிஞ்சுதா?” எனக் கிண்டலாகக் கேட்க பற்றிக்கொண்டு வந்தது நிசப்திக்கு.
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், “ஹான்! அப்படியா…” என ஆச்சரியம் கலந்தக் குரலில் கேட்டவள், “அப்படியிருந்தா சரிதான்.” என நக்கலாகப் பேச,
அதுவரை இருந்த பொறுமை எல்லாம் பறந்துவிட, “என்கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்காதே!” என்றான் கர்ஜனையாக.
“வேற எப்படி நடந்துக்கணும்? நீதான் சொல்லேன்… உனக்கு கல்யாணமாகிடுச்சு, உனக்கு ஒரு பொண்டாட்டி இருந்தா. அப்புறம் ஏன் என்னையும் என் பொண்ணையும் இப்படி… நான் உன் வொய்ஃப் இல்ல.” என்று ஆத்திரமாகக் கத்தியவள்,
“முதல்ல இந்த ரூம்ல இருந்து வெளிய போ. அப்புறம் எங்க வாழ்க்கையில் இருந்தும்…” என்றாள் ஆத்திரம் கொஞ்சமும் அடங்காமல்.
“பொண்டாட்டி இருந்தா… அதுதான் உண்மைதான்” என்று கத்தியவனும், “ஆனா உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது போலவே, எங்கேயும் நீ என் வொய்ஃப் இல்லன்னு சொல்லவே இல்லையே?” என நக்கலாக கேட்டவனைப் பார்த்து, “ஏய்!” என்றுக் கத்தியபடி அவன் கன்னத்தில அறையப் போக,
லாவகமாக அதைத் தடுத்து இரு கைகளையும் சேர்த்துப் பிடிக்க, அதில் அடிப்பட்ட கை வலிக்க, அது அவளது முகத்திலும் தெரிந்தது.
“ஷிட்! உன்னை…” எனக் கைகளை விட்டு முன்னே வந்து கழுத்தை நெறிக்க வந்தவன், பின் தன் அந்த கையைத் தன் தொடையில் ஆக்ரோசமாகத் தட்டிவிட்டு, “உன்னைக் கொல்லணும் போல அவ்ளோ ஆத்திரம் வருது. ஆனா என் பொண்ணுக்காக உன்னை சும்மா விடவேண்டியாதா இருக்கு.” என கர்ஜித்துவிட்டு, அறையை விட்டு வெளியேற,
கட்டுப் போடப்பட்டிருந்தக் கையை அப்படியும் இப்படியுமாக லேசாக அசைத்த நிசப்தி, “பரவாயில்ல வலி குறைஞ்சுடுச்சே…” என சம்மந்தமே இல்லாமல் புலம்பி, பின் ஒரு தோள் குலுக்கலுடன் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
அவளுக்கு இப்போது விக்ரமின் எண்ணம் சற்று புரிவது போல் இருந்தது. அவனது இலக்கு குழந்தை அல்ல, அவள் தானென்று. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற யோசனையில் ஆழ ஆரம்பித்தாள் பெண்.
***
3 comments
O my god!
Ada paavi payale
அட ராமா ! இந்த விக்ரமை என்ன தான் பண்றது, நிசப்தி மேல ஆசை இல்லை, அக்கறை இல்லைன்னு சொல்லிட்டே அவளை வந்து தொட்டுப் பார்த்துட்டு (கழுத்தை பிடிச்சிட்டு) போறானே… இவனை என்ன பண்ண ?
😀😀😀
CRVS (or) CRVS 2797