தவிப்பு - 4 :
“அவன் எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டான்?” என்று ரகுவீர் பிரேமின் முகத்தை கூர்ந்து பார்த்துபடி கேட்டான்.
பிரேம் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தான்.
ரகுவீர் மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்த அமிர்தா “புஜ்ஜி ரிலாக்ஸ்” என்று தன் அண்ணனை அமைதிபடுத்தினாள்.
“இப்போ விஸ்வநாதன் சார் என்ன எல்லா வழியிலேயும் கம்பெல் பண்ண ட்ரை பண்ணுவார்” என்று ரகுவீர் தன் தலையை அழுந்த கோதியபடி சொன்னான்.
அதுநேரம் வரை அமைதியாக இருந்த பிரேம் “நீ எதுக்காக இப்போ ஓடி ஒளிய முயற்சி பண்ற ரகு? உனக்கு ஆத்விக்கை ஃபேஸ் பண்ண தைரியம் இல்லையா?” என்று கேட்டான்.
அவன் சொன்னதை கேட்ட அண்ணன், தங்கை இருவரும் திகைத்தனர்.
“நான் எதுக்காக அவனை பேஸ் பண்ண பயப்படணும்? என்று ரகுவீர் தன் பல்லை கடித்தபடி கேட்டான்.
“அப்போ எதுக்காக இப்போ கோபப்படற? உன்னோட பிரசன்ஸ் அவனை அஃபெக்ட் பண்ணல இல்லையா? அப்போ அவனோட பிரசன்ஸ் உன்னை அஃபெக்ட் பண்ணாம பார்த்துக்கோ” என்று சொல்லி பிரேம் ரகுவீரின் ஈகோவை தூண்டிவிட்டான்.
“இங்க பாரு… நான் விஸ்வநாதன் அங்கிள் கிட்ட ஏற்கனவே இதைப் பற்றி பேசிட்டேன்… இதுதான் எங்களோட லாஸ்ட் ப்ராஜெக்ட்னு சொல்லிட்டேன்… அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டார். இத நாம நல்லபடியா முடிச்சு கொடுத்துட்டா இனி அவர் நம்மை தொந்தரவு பண்ண மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்கார்… அம்மு கொஞ்சம் ரகுவுக்கு எடுத்து சொல்லேன்” என்றவன் அமிர்தாவை கெஞ்சலாக பார்த்தான்.
ஏனென்றால் ரகுவீரை சமாதானப்படுத்துவதை விட அமிர்தாவை சமாதானப்படுத்துவது எளிதென்று அவனுக்குத் தெரியும்.
“புஜ்ஜி இதுதான் லாஸ்ட் ப்ராஜெக்ட்னு பிரேம் அண்ணா சொல்றார் தானே… ப்ளீஸ் ஒத்துக்கோ” என்று அமிர்தா கெஞ்சலாக கேட்டாள்.
தங்களால் விஸ்வநாதன் பாதிக்கப்படுவதை அவள் விரும்பவில்லை.
“சரி… உங்க விருப்பம் அதுதான் என்றால் நான் ஒத்துக்கறேன்…” என்று சொன்ன ரகுவீர் அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
************************ ************************ *****************
“ரொம்ப நன்றி விஸ்வநாதன்… நீ எனக்கு பண்ணி இருக்கிறது மிகப்பெரிய உதவி” என்று தனசேகர் சக்கரவர்த்தி விஸ்வநாதனிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அட என்ன சேகர்… அவங்க எனக்கும் பசங்க மாதிரி தான்… இதுக்கெல்லாம் நன்றி சொல்லுவியா என்ன? இந்த கான்ட்ராக்ட் அவங்களை முன்ன மாதிரி ஒன்னு சேர்க்கும்னா இந்த மாதிரி எத்தனை காண்ட்ராக்ட் வேணும்னாலும் நான் ரெடி பண்ண தயாரா இருக்கேன்”
“இந்த சான்ஸை யூஸ் பண்ணி அவங்க தங்களுக்கு இடையே இருக்க பிரச்சனையை தீர்த்துப்பாங்கன்னு நான் நம்புறேன்”
“நிச்சயமா சேகர்… ஆனா எனக்கு ஒரு சந்தேகம்…. பெரியவங்க நீங்க ஏன் இந்த பிரச்சினையில் தலையிட்டு இதை சால்வ் பண்ண முயற்சி பண்ணல” என்று அவரது நீண்ட நாளைய சந்தேகத்தை விஸ்வநாதன் கேட்டார்.
“இந்தப் பிரச்சனைக்குள்ள பெரியவங்க யாரும் வரக்கூடாதுன்னு ரெண்டு பேருமே ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க… அதை மீறி உள்ள போக எங்களுக்கும் மனசு இல்ல. ஆயிரம் இருந்தாலும் அவங்க ரெண்டு பேருமே வளர்ந்த பசங்க. அவங்க வார்த்தைக்கு நாம மதிப்பு கொடுக்கணும் இல்லையா? அதனால தான் நாங்க எல்லாரும் கடந்த ரெண்டு வருஷமா அமைதியா இருந்தோம். ஆனால் இனியும் அப்படியே இருக்க முடியாது இல்லையா? அதனால தான் அவங்க தங்களுடைய பிரச்சனையை சால்வ் பண்ணிக்க மறைமுகமா உன்ன வச்சு ட்ரை பண்றேன்”
“ஓஹோ இப்படி பண்றதன் மூலமா நீ உன் பையன் பேச்சை மீறாமல் ரகுவுக்கு நல்ல அப்பாவாவும் இருக்க… அதேசமயம் என் மூலமா அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு அமிர்தாவுக்கும் நல்ல அப்பாவா இருக்க… உன்னைய பிசினஸ்ல புலின்னு ஏன் சொல்றாங்கன்னு எனக்கு இப்போதான் புரியுது”
“பிசினஸ்ல புலியா இருந்து என்னப்பா பண்றது? என் பசங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லையே… ஒரு அப்பாவா எனக்கு வேண்டியதெல்லாம் அவங்களோட சந்தோஷம் மட்டும்தான்” என்று சொன்ன தனசேகரின் குரல் கனத்திருந்தது.
அதை உணர்ந்து கொண்ட விஸ்வநாதன் “கவலைப்படாத சேகர்… அந்த கடவுள் மேல நம்பிக்கை வை… நிச்சயம் உன் பசங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க பாரு” என்று சொல்லிவிட்டு மேலும் சிறிது நேரம் பேசியவர் பின்னர் அழைப்பை துண்டித்தார்.
இரவு 11 மணி…
ஆத்விக்குடன் இணைந்து ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்த பிறகு ஒரு கணம் கூட ரகுவீரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் தங்கள் பிரச்சனைக்குள் மீண்டும் அமிர்தா சிக்கிக் கொள்வதை அவன் விரும்பவில்லை.
ஆத்விக்கை சந்திப்பது அவனுக்கே எளிதான காரியம் அல்ல. அப்படி இருக்கும் போது அமிர்தா அவனை சந்திக்க நேர்ந்தால் அவள் அப்படி எதிர்வினை ஆற்றுவாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. எனவே அவன் அவர்கள் இருவரையும் சந்திக்க விடாமல் தடுக்க நினைத்தான்.
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவன் பின்னர் தனது போனை எடுத்து பிரேமிற்கு அழைத்தான்.
மறுபுறம் இருந்து “ஹலோ” என்று தூக்க கலக்கத்துடன் பிரேமின் குரல் கேட்டது.
“ஹலோ நான் ரகு பேசுறேன்டா”
“சொல்லுடா… என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க?”
“காண்ட்ராக்ட் பத்தி கொஞ்சம் பேசணும்” என்று ரகு சொன்னதும் பிரேம் அரக்கப் பறக்க எழுந்து அமர்ந்தான்.
“என்ன மச்சான்? அதான் ஆத்விக் கூட சேர்ந்து ஒர்க் பண்ண ஒத்துக்கிட்டயே… அப்புறம் அத பத்தி பேச என்ன இருக்கு”
“இருக்கு… இங்க பார் எக்காரணம் கொண்டும் இந்த ப்ராஜெக்ட்ல அமிர்தா இன்வால்வ் ஆக மாட்டா… அதுக்கு விஸ்வநாதன் சார் ஒத்துக்கிட்டா மட்டும் தான் நான் இந்த ப்ராஜெக்ட் பண்ணுவேன்… அப்படி இல்லன்னா அவர் என்ன பண்ணாலும் சரி நான் இந்த ப்ராஜெக்ட்ல இல்ல” என்று அழுத்தமான குரலில் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்ட பிரேமிற்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
“அட இவ்வளவுதானா? நீ இதைத்தான் சொல்லுவேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… அதனால நீ இதை என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே நான் இதைப் பற்றி விஸ்வநாதன் அங்கிள் கிட்ட பேசிட்டேன். அவரும் புதுசா ஒருத்தவங்களை ஹையர் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாரு… அப்புறம் மச்சான் விஸ்வநாதன் அங்கிள் உன்னையும் ஆத்விக்கையும் நாளைக்கு மீட் பண்ணனும்னு சொன்னார்.”
"ஓஹ்... எப்போ? எங்கே?"
"காலைல சொல்றேன்னு சொன்னார். நானே வந்து உன்னை கூட்டிக்கிட்டு போறேன். இப்போ போய் நீயும் தூங்கு… என்னையும் தூங்க விடு” என்றவன் ரகுவீரின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.
மறுநாள்…
விஸ்வநாதன் தன் அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
ஒரு ஓரமாக நின்றிருந்த அவர் செக்ரட்டரி “நான் என்ன சார் பண்ணட்டும்? ஆத்விக், ரகு சார் இடையே இருக்கும் பிரச்சனை நம்ம கம்பெனியில் இருக்க எல்லாருக்குமே தெரியும். அதனால அவங்க யாரும் நம் கம்பெனி சார்பா அவங்க கோஆர்டினேட்டரா இருக்க பயப்படறாங்க… யாரும் ஒத்துக்க மாட்றாங்க” என்றார்.
“ஒரு கம்பெனியில இந்த வேலைய பார்க்கணும்னு சொன்னா பார்க்கணும்… அவங்க தானே நல்ல எம்ப்ளாயி… எனக்கு வர கோபத்துக்கு இவங்க எல்லாரையும் உடனே டிஸ்மிஸ் பண்ணிடலாமான்னு தோணுது” என்று விஸ்வநாதன் பல்லை கடித்தபடி சொன்னார்.
“சார்… இதுவரைக்கும் இவங்க யாராவது நாம சொன்னதை மீறி நடந்து இருக்காங்களா? ஆனா இப்போ இப்படி சொல்றாங்கன்னா அவங்க எல்லாருக்கும் ரகு, ஆத்விக் சார் மேல எவ்வளவு பயம் இருக்கும்னு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...”
“சரி… இப்போ நாம என்ன பண்றது?”
“சார் என்கிட்ட ஒரு யோசனை இருக்கு… சொல்லவா?”
“சொல்லுங்க”
“சார் நேத்து புதுசா ஒரு பொண்ணை வேலைக்கு எடுத்தோமே… அந்தப் பொண்ணு பார்க்க ரொம்ப புத்திசாலியா தெரியறா சார்… அவ இந்த மாதிரி ப்ராஜெக்ட்ல இதுக்கு முன்னாடி ஒர்க் பண்ணது இல்லைனாலும் அவளால நல்லா கோஆர்டினேட் பண்ண முடியும்னு எனக்கு தோணுது… அது மட்டும் இல்ல அவ பொண்ணா இருக்கறதால ரகு, ஆத்விக் இரண்டு பேரும் அவ மேல பாவப்பட்டு கொஞ்சம் மென்மையாக கூட நடந்துக்கலாம் இல்லையா?”
அவர் சொன்னதைக் கேட்ட விஸ்வநாதனுக்கு அதுவே சரியென்று பட்டது. ஏனென்றால் அனுபவம் வாய்ந்த கோஆர்டினேட்டர்கள் யாரும் ரகு மற்றும் ஆத்விக்குடன் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.
அது பற்றி யோசித்த விஸ்வநாதன் “சரி… அந்த பொண்ணுக்கு போன் பண்ணி மீட்டிங் ஸ்பாட்டுக்கு வர சொல்லிடுங்க” என்றவர் தன் அறையை விட்டு வெளியேறினார்.
அதேநேரம் வெளிர் நீல நிற சட்டை, பிளாக் கோட் அணிந்திருந்த சித்தார்த் வெளியே செல்வதற்கு தயாராகி வந்தான். இன்று என்ன நடந்தாலும் தான் கோபப்படக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என்று அவன் நேற்றிரவே முடிவெடுத்து இருந்தான். அவன் மாடிப்படி இறங்கி வரும் போது அமிர்தா அனார்கலி சுடிதார் அணிந்து தயாராக நின்றிருந்தாள்.
அவளைப் பார்த்தவன் “அம்மு நீ எங்கேயாவது வெளியே போறியா?” என்று தன் புருவத்தை உயர்த்தியபடி கேட்டான்.
“நானும் உன்னோட மீட்டிங்க்கு வரேன்”
“நோ… நீ வேண்டாம்” என்று ரகுவீர் அழுத்தமான குரலில் சொன்னான்.
“ஆனா புஜ்ஜி” என்ற அமிர்தா மேலே எதுவும் சொல்வதற்கு முன்பு
“இங்க பார் அம்மு… நீ சொன்னதுக்காக மட்டும்தான் நான் இந்த ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ண சம்மதித்தேன்… ஆனா அதுக்காக நீ இதுல இன்வால்வ் ஆகறதை நான் விரும்பல… நீ வர வேண்டாம்… அவ்வளவுதான்” என்றவன் அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரேமை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவன் முதுகை வெறித்துப் பார்த்த அமிர்தா “சாரி புஜ்ஜி… நான் கண்டிப்பா வந்தே தீருவேன்… உன்னை நான் எப்போதும் தனியா விடமாட்டேன்” என்று முணுமுணுத்தவள் ஆட்டோ பிடித்து அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
ரகுவீரை தனியாக விடக்கூடாது என்ற நினைப்பில் அவள் சென்று கொண்டிருந்தாலும் ஆத்விக்கை நீண்ட நாட்கள் கழித்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளை பதட்டப்பட வைத்தது. அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. பேசாமல் திரும்பிப் போய் விடலாமா என்று கூட ஒருகணம் நினைத்தாள்.
ஆனால் மறுகணமே தன் மனதை மாற்றிக் கொண்டு “இல்ல… இப்போ நான் என்னோட புஜ்ஜிக்கு சப்போர்ட்டா இருந்தே ஆகணும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மீட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்றாள்.