• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
831

அத்தியாயம் - 1

முருகா போற்றி..!

அன்றைய நாள் சிவனுக்கு மிகவும் பிடித்த நாளான பிரதோசத் திருநாள்.. முதல் நாள் இரவே அவளிடம் இதைச் சொல்லியிருக்க, கல்லூரி முடிந்ததும் நேராக கோவிலுக்கு வந்து விட வேண்டும் என்பதும் முடிவு செய்யப் பட்டிருக்க, விடிந்ததில் இருந்தே மழைக் கொட்டித் தீர்த்தது.

கல்லூரிக்கே மட்டம் போட்டு விடலாமா என அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம், “ஆரா, இன்னும் கிளம்பலையா? அப்பா உனக்காக வெளியே வெயிட் செஞ்சிட்டு இருக்கார்.”

என ஆரா என்றழைத்த ஆரணியைக் கிளப்பிக் கொண்டிருந்தார், ரம்யா.

அவள் ஆரணி!

ரம்யா – ஆரணியின் அம்மா – இந்தக் குட்டிக் குடும்பத்தின் தலைவி

பாண்டியன் – ஆரணியின் அப்பா – நேர்மையான ஒரு காவலதிகாரி

“ம்ம்மி.. ப்ளீஸ் வெளியே கொஞ்சம் எட்டிப்பாரு, மழை எப்படி ஊத்துதுன்னு. இந்த மழையில நான் எப்படி போவேன். அதுவும் இந்த சாரியில. என்னால முடியாது. என்ன காரணம் சொல்லியாச்சும் எனக்கு லீவு வாங்கிக்கொடு ப்ளீஸ்.” எனக் கொஞ்சியவாறே தாயின் தோளைப் பிடித்து, அவள் அறையின் ஜன்னல் வரை நகர்த்திச் சென்று கொட்டும் மழையைக் காட்ட,

“அய்யோ.. ஆமாம் மழைதான், அதுவும் பெரிய மழைதான். நீ இந்த மழையில் போனா நனைஞ்சு நாளைக்கே முளைச்சிடுவயே, உன் ஒருத்தியையே என்னால சமாளிக்க முடியல, இதுல உன்னை மாதிரியே இன்னொன்னு முளைச்சு வந்தா நானும் தாங்க மாட்டேன், இந்த நாடும் தாங்காது. இரு அப்பாக்கிட்ட நீ சொன்னதை சொல்லிப் பார்க்குறேன்..” என மகளுக்குச் சமமாக ரம்யாவும் கிண்டலில் இறங்க,

“மம்மி.. திஸ் இஸ் டூ மச்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ.” என்ற மகளை முறைத்துவிட்டு, “ஒழுங்கா கிளம்புற வழியைப் பாரு, இன்னைக்கு சனிப் பிரதோசம். அப்பாவோட 108 நாள் விரதமும் இன்னையோட முடியுது. அதனால எனக்கு வேலை அதிகம். கோவில்ல கொடுக்க பிரசாதம் செய்யனும். உன்னைக் கிளப்பிட்டுத் தான் நான் வேலையே ஆரம்பிக்கனும். நீ இருந்தா என் வேலை ரெண்டு வேலையாகும்.. நீ கிளம்பு.. கிளம்பு..” என ஆரணியை விரட்ட, அதற்குள் வெளியிலிருந்து ஹாரன் சத்தம் அலறியது.

“பாரு.. அப்பா வண்டி எடுத்துட்டாங்க.. ஓடு.. ஓடு போற வழியில அபிசேகத்துக்கு வாங்கி வச்சிருக்க சாமானையெல்லாம் கொடுத்துட்டுப் போயிடுங்க..” என்றவர் முன்னே நடக்க,

“மம்மி.. அந்த ஹிட்லர் டாடி முன்னாடி நீ டம்மின்னு எனக்குத் தெரியும்..” எனக் காலை உதைத்துக் கத்தியவள், வேறு வழியில்லாமல் தன் கல்லூரி பேக் சகிதம் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள் ஆரணி.

“மா..” என்ற வார்த்தையை ஆரம்பித்தவர் அப்படியே அதை முழுங்கி,

“என்னங்க.. எல்லாமே எடுத்து வச்சுட்டேன். ஐயர்ட்ட கொடுத்துட்டு, அப்புறம் பாப்பாவை காலேஜ்ல விடுங்க. இன்னும் டைம் இருக்கு..” என பாண்டியனிடம் சொல்ல,

“ம்ம்ம்…” என்ற சொல்லோடு மகளைப் பார்க்க, அதுவரை தாயை முறைத்துக் கொண்டிருந்த ஆரா, பாண்டியன் பார்வை தன் பக்கம் திரும்பவும், நல்லபிள்ளை போல வேகமாக காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.

ஒரு தலையசைப்போடு பாண்டியன் வண்டியைக் கிளப்ப, “ஹ்ஹ்ம்ம்” என்ற பெருமூச்சோடு ரம்யா வீட்டிற்குள் நுழைந்தார்

ரம்யா, பாண்டியன் இருவருக்கும் சொந்த ஊர் தேனிக்குப் பக்கத்தில் மீனாட்சிபுரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய கிராமம். ஆனால் அவர்கள் இப்போது இருப்பது சேலத்தில். மீனாட்சிபுரத்தின் பெயர் சொல்லக் கூடியளவிற்கு வசதியானவர் தான் முத்துலிங்கம் குருவம்மா தம்பதியினர்.

அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் தற்போது உயிருடன் இல்லை. பாண்டியன் காவல்துறை அதிகாரி. நேர்மையை ஆடையாகக் கொண்டவர். அதனாலயே அவர் இன்ஸ்பெக்டர் என்ற பதவியைத் தாண்டி மேலே சென்றதில்லை. ஆரணியின் பள்ளிப் படிப்பு ஆரம்பித்த நேரம் அவருக்கு சேலத்தில் மாற்றல் கிடைத்துவிட, அப்போது வீட்டில் பாண்டியனின் அம்மா குருவம்மாவிற்கும் ரம்யாவிற்கும் சிறு பிரச்சனை ஏற்பட்டது.

ரம்யா அதை பெரிதாக்கி விட, அதனால் பிரச்சனைகள் வேறு விதமாய் மாறி விட்டது. அதுவரை ரம்யாவை உயிராக நேசித்தவர், அந்தப் பிரச்சனைக்குப் பிறகு அன்றில் இருந்து, இன்று வரை பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டார். தாயின் மேல் தவறே இருந்திருந்தாலும், அவரின் வயதுக்கு மரியாதை கொடுத்து, பாண்டியன் வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கலாம். ஆனால் ரம்யா அதைச் செய்யவில்லை.

ரம்யாவையும் குறை சொல்ல முடியாது தான். மிகவும் பொறுமையாகப் போகக் கூடியவர் தான். ஆனால் அன்றைய அவர் நிலையில் பயத்தில் சிறு தவறு செய்து விட்டார். பாண்டியனிடம் சொல்வதற்கு முன்னே, தன் பிறந்த வீட்டில் சொல்ல, ஏற்கனவே பாண்டியன் குடும்பத்தின் மேல் கோபத்தில் இருந்தவர்கள் ரம்யா சொன்னதும், அவர்கள் வந்து வீதியில் நின்று பல பேர் பார்க்க அசிங்கமாகப் பேசியது மட்டும் அல்லாமல், அவன் குடும்பத்தையும் கேவலமாகப் பேசி குருவம்மாவின் மேல் போலீசிலும் புகார் கொடுத்து விட்டனர்.

ரம்யா இதைச் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை. தன் வீட்டில் உள்ளவர்கள் மாமியாரிடம் பேசி சமாதானம் செய்து போவார்கள் என்று நினைத்து தான் சொன்னார். ஆனால், அவர்களோ வேறுவிதமாக நடந்து கொள்ள, ரம்யாவிற்கு கணவனை நினைத்து மிகவும் பயமாகி விட்டது.

காலம் கடந்த யோசனை, முதலில் கணவனிடம் சொல்லியிருக்க வேண்டுமோ என யோசிக்க, ஆனால் காலம் கடந்து யோசித்து என்ன செய்ய, அணைத்தும் கைமீறிப் போயிருந்தது.

பாண்டியன் அன்று மதுரை வரை வேலை விடயமாகச் சென்றிருந்தார். அவர் வருவதற்கு உள்ளாகவே குருவம்மாவை மகளிர் காவல் நிலையத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால் முத்துலிங்கமோ என்ன செய்தாரோ, பெரிதாக எந்த அலட்டலும் இல்லாமல் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

செய்தி கேள்விப்பட்டு வந்த பாண்டியன் ரம்யாவைத் திரும்பியும் பார்க்கவில்லை. பெற்றவர்களின் காலில் விழுந்து கதற, முத்துலிங்கமோ ஒரே வார்த்தை தான் சொன்னார்.

“உன் பொண்டாட்டி பிள்ளையோட நீ இங்க இருந்து கிளம்பிடு..” என, பெண்கள் இருவரும் அதிர்ந்து விட,

பாண்டியன் ஒரு வித இயலாமையோடு தந்தையைப் பார்த்தார்.

“தம்பி.. நான் உன் நல்லதுக்கும், இந்தக் குடும்பம் உடைஞ்சிடக் கூடாதே அப்படிங்குற எண்ணத்துலயும் தான் சொல்றேன். நீ சின்னப் பையன் இல்ல. உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்.” என்று சொன்னதோடு, எழுந்து மனைவியையும் அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டார்.

“மாமா..” என்ற ரம்யா கணவனின் அருகில் வர, ஓங்கி ஒரு அறை அறைந்தார்.

அறைந்தவர் “இனிமேல் உன் வாயில இருந்து ஒரு வார்த்தை வரக்கூடாது. இனி என் முகத்துக்கு முன்னாடி நிற்காதே. ஒருநாள், ஒருநாள் உன்னால பொறுமையா இருக்க முடியாதா.? போனவன் அப்படியே போயிடுவான்னு நினைச்சிட்டியா.? என்கிட்ட சொல்லியிருந்தா நான் எதுவும் பண்ண மாட்டேன்னு தானே, உன் அண்ணன் தம்பிங்ககிட்ட சொல்லியிருக்க, இனியும் அவங்ககிட்டயே கேளு, உன்னைக் கல்யாணம் பண்ணதுக்கு உன் கூட வாழறேன். என் பொண்ணுக்காக உன் கூட வாழறேன். இல்லை அதுல உனக்கு விருப்பம் இல்லைன்னா இப்படியே என் பொண்ணை விட்டுட்டு உங்க வீட்டுக்கு கிளம்பிடு. எனக்கு வருத்தம் இல்ல.” என மனைவியின் முகத்தைப் பார்த்து இறுக்கமாகச் சொல்ல,

“மாமா..” என மீண்டும் ரம்யா அழைக்க, “வாயை மூடு..” என உச்சக்கட்டக் கோபத்தில் கத்தினார், பாண்டியன். “இனி இந்த வார்த்தை உன் வாயில இருந்து வரக் கூடாது, நான் கேட்கக்கூடாது. இன்னும் இரண்டு மணி நேரம் உனக்கு டைம் எல்லாம் எடுத்து வச்சுக்கோ, நான் வண்டிக்கு சொல்லிடுறேன். கிளம்பறோம் அவ்வளவுதான்…” என்றவர்,

பெற்றவர்களின் அறைக்குள் நுழைய, ரம்யா செய்வதறியாது திகைத்து விட்டார்.

அவனின் பெற்றோர் என்ன சொன்னார்களோ, பாண்டியன் சொன்ன அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் பயணம் சேலத்தை நோக்கிப் புறப்பட்டது.

“அப்பா கோவில் வந்துடுச்சு..” என்ற ஆரணியின் சத்தத்தில் தான் பாண்டியன் நினைவுக்கு வந்து காரை நிறுத்தி இருந்தார். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைய, இவர்களை எதிர்கொண்டு வந்தார் குருக்கள் கேசவன்.

“வாங்க பாண்டியன், வா குழந்தே எப்படி இருக்க, படிப்பு எப்படி போகுது..” எனக் கேள்விகளை அடுக்க,

“நல்லாருக்கேன் சாமி, படிப்புத்தான.. கொஞ்சம் சுமாரா தான் போகுது..” என அவர் காதுக்குள் குசுகுசுக்க,

“பாப்பா..” என பாண்டியன் அதட்ட, “எஸ் ப்பா..” என்றவள் அடுத்து எங்கும் வாயைத் திறக்கவில்லை.

சிவனை வணங்கி, பிரகாரம் சுத்தி ஆரணியை கல்லூரியில் விட, அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் பாண்டியன். கார் கிளம்பிய சில நிமிடங்கள் மௌனம் தான் இருவருக்குள்ளும், பிறகு “அப்பா.. அப்பத்தா என்னை வரச் சொன்னாங்கதானே, எப்ப போறோம்..” என மெல்லப் பேச்சை ஆரம்பிக்க,

“நீ அங்க போயி எந்த சேட்டையும், முக்கியமா மரம் மரமா ஏறமாட்டேன்னு சொல்லு, நாளைக்கே போகலாம்..” என கட் அன்ட் ரைட்டாகப் போலீசாகப் பேச,

“நோ.. அதெல்லாம் முடியாதுப்பா.. ப்ளீஸ் என்னை மட்டுமாச்சும் அனுப்பி வைங்க..” எனக் கெஞ்ச,

“முதல்ல உன்னோட செமஸ்டர் முடியட்டும், பிறகு பார்ப்போம்..” என்று முடித்து விட, “க்கும்..” எனத் தலையை சிலுப்பியவள் அமைதியாகிவிட்டாள்.

மகளைக் கல்லூரியில் இறக்கிவிட்டவர், “நானே வந்து பிக்கப் செய்துக்குறேன், இங்கயே ஃப்ரஷாகிடு, நேரா கோவிலுக்குப் போறோம்..” எனச் சொல்லி, மகள் மண்டையை பலமாக ஆட்டவும் தான் கிளம்பினார், பாண்டியன்.

நந்தவனம் மகளிர் பொறியியல் கல்லூரி.. வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்களை வாரி இறைத்தாற் போல, பல வண்ண்ங்களில் சுற்றித் திரிந்தனர் அந்தக் கல்லூரி பட்டாம்பூச்சிகள். பெயருக்கேற்றார் போலவே கல்லூரியைச் சுற்றிலும் பலவகை மரங்களும், பூக்களும் அமைந்திருந்தது. ஒவ்வொரு மரத்தையும் சுற்றி, சிமெண்டினாலான திண்டுகள் அமைக்கப் பட்டிருந்தது. பூச்செடிகளைச் சுற்றிலும் வேலிகள் சுற்றப்பட்டிருந்தது.

கல்லூரி ஆரம்பிக்கும் வரை அந்த சிமெண்ட் திட்டுகளில் அமர்ந்து அரட்டை அடிப்பது தான் அங்குள்ள மாணவிகளின் வாடிக்கை. ஆராவிற்கும் அவளது தோழி நிகிதாவிற்கும் அங்கு இருக்கும் ஒரு ஆலமரம் தான் அவர்களின் ஆஸ்தான இடம். ஆராவிற்கு ஆலமரம் என்றால் கொள்ளைப் பிரியம்.

மீனாட்சிபுரத்தில் அவர்கள் வீட்டை ஒட்டியே மிகப்பெரிய ஆலமரம் ஒன்று அகண்டு விரிந்து பெருங்குடை போல காட்சியளிக்கும். அந்த மரத்தின் கிளைகள் பெரும்பாலும் ஆராவின் வீட்டுக்குள் தான் இருக்கும். அந்தக் கிளையைப் பிடித்து, அதிலிருந்தே வீட்டின் வெளியில் வந்து விடுவாள் பெண். வெளியில் செல்லவும், உள்ளே வரவும் அவளுக்கான வழி அது தான்.

‘இவ்வளவு பெரியா வாசல் வச்சு எதுக்கு நான் வீடு கட்டினேன்னே தெரில குருவு, இந்தப் புள்ள கொரங்கு போல கெளைக்கு கெளை தாவிட்டு இருக்கு..’ என மனைவியிடம் புலம்புவார், முத்துலிங்கம். அதெல்லாம் ஆரா கண்டு கொண்டதில்லை. ஊருக்குச் சென்றால் அவளுக்கென ஒரு வானரக்கூட்டம் இருக்கும். அவர்களோடு சேர்ந்து, மரத்திற்கு மரம் ஏற, கிணத்தில் குதிக்க, கண்மாயில் தவளைகளையும், எலிகளையும் வேட்டையாட என அவளது பொழுதுகள் அமர்க்களமாக போகும். முத்துலிங்கம் அவளுக்குத் துணையாக சுற்றிக் கொண்டிருப்பார். சாப்பாட்டு வேலை வந்ததும் இருவருக்கும் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு, குருவம்மா ஒவ்வொரு இடமாக அழைவார். இதற்கு பயந்தே பாண்டியன் அவளை ஊருக்கு அனுப்புவதில் தயங்குவார்.

ஆனால் குருவம்மா “அனுப்பி வை தம்பி, புள்ளையை பார்க்கனும் போல இருக்கு..” என்ற வார்த்தையை சொன்னால் போதும், மறுவார்த்தை பேசாமல் மனைவி மகள் இருவரையும் ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துவிடுவார்.

இந்தக் கல்லூரியில் அவளுக்கு முதலில் பிடித்த இடமே அந்த ஆலமரம் தான். அதனாலே கல்லூரியை மிகவும் பிடித்துவிட்டது. வகுப்பு தொடங்க இன்னும் நேரம் இருக்க, தனது ஆஸ்தான இடத்தில் வந்தமர, அதே நேரம் நிகிதாவும் வந்தமர்ந்தாள்.

“என்ன மச்சி கோவிலுக்குப் போயிட்டு நல்லா.. வருவன்னு பார்த்தா, இப்படி டல்லா..வந்துருக்க,” என ராகமிழுக்க,

“ப்ச்.. கடுப்பு மச்சான்.. நானே ஹிட்லர் கூட கோவில்ல நல்ல பிள்ளை மாதிரி நின்னு சிவாக்கு குட்மார்னிங்க் சொல்லிட்டு இருக்கேன், அத கெடுத்துட்டான் மச்சான். சிவா என்னைத் தப்பா நினைக்க மாட்டார். ப்ச்…” எனக் கடுப்பாக சொல்ல

“என்னன்னு தெளிவா சொல்லு, அப்புறம் உன்னைப்பத்தி ஹிட்லருக்கும் தெரியும், அந்த சிவாவுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஓவர் ஆக்ட் பண்ணாம என்னன்னு சொல்லு..” எனப் பதிலுக்கு நிக்கியும் கடுப்பாகச் சொல்ல

“அது இல்ல மச்சி.. 108 நாள் ஹிட்லர் ஃபாஸ்டிங்க் மச்சி, இந்த 108 நாள் நான் வெஜ் சாப்பிடாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்கே தெரியும் தான, இன்னைக்கு விரதம் முடிஞ்சதும், நாளைக்கு அப்பா நான் வெஜ் சாப்பிடலாம்னு சொல்லிட்டார். நாளைக்கு எப்போடா வரும்னு, நானே எக்சைட்டா இருக்கேன், இதுல அந்தக் கோவிலுக்குப் பக்கத்துல இருக்க பிரியாணிக்காரன், காலையிலயே சிக்கன் பிரியாணி செஞ்சு என்னை சிவாவை நினைக்க விடாம டெம்ப்ட் பன்றான், மச்சி, எனக்கு வந்த கோபத்துக்கு, ஹிட்லர் மட்டும் அங்க இல்லாம இருந்திருக்கனும் அவனைக் கைமா ஆக்கிருபேன்..” எனப் படபடவெனப் பொறிய,

நிகிதாவோ ‘அடச்சண்டாளி..’ என்ற பார்வையைப் பார்க்க, “பாரு மச்சான் உனக்கே கோபம் வருதே, எனக்கு எப்படி இருக்கும்..” என மீண்டும் சொல்ல,

“போதும்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, இப்பவே உங்கப்பாவுக்கு போன் செஞ்சு முந்தா நாள் என்னோட மீன் குழம்ப ஆட்டையைப் போட்டுத் திண்ணதை சொல்லிடுவேன், அதெப்படி மச்சான் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம 108 நாளும் நான்வெஜ் சாப்பிடாம இருந்தேன்னு சொல்ற.. பொய் சொல்றதுக்கும் அளவு இருக்கு மச்சி.. நீ அளவுக்கு மீறிப் போற..” என ஏகத்துக்கும் எகிற,

“சரி சரி விடு மச்சி, அவனை இன்னொரு நாள் பார்த்துக்கலாம், நீ வீட்டுல சொல்லிட்டியா, ஈவ்னிங்க் என் கூட கோவிலுக்கு வரப் போறதை..” எனத் தன் குட்டு உடை பட்டதும், பேச்சை மாற்ற,

“உனக்கெல்லாம் ஃப்ரண்டாகி குப்பை கொட்டினா, பெர்மிஷன் வாங்காம வர முடியுமா.? அதெல்லாம் வாங்கியாச்சு, ஆனா ஈவ்னிங்க் வீட்டுல விட்டுடனும்.. இல்ல என் அம்மா என்னை சும்மா வச்சு செய்யும்..” என நிக்கி அழுவது போல் சொல்லவும், “டன் மச்சான்” எனப் பதிலுக்கு ஆராவும் சொல்ல, அவர்களது வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான மணியும் அடிக்க, வேகமாக தங்கள் பையைத் தூக்கிகொண்டு சிட்டாக பறந்தனர் இருவரும்.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
165
ஹாஹா
இதுவல்லவோ ஃப்ரண்ட்ஷிப்
ஆரா நீ கலக்கு மா
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
43
ஆரா வானரம் போல 🤣
போலீஸ்கார் ஏன் வெரப்பா இருக்கார்?🧐
பொண்டாட்டிகிட்ட ரொம்ப தான் முறுக்கிட்டு இருக்கார் 😬
 
Top