• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Oct 31, 2021
Messages
224
தெற்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்தில், சாளரக் கதவுகளுக்குப் போடப் பட்டிருந்த திரைச் சீலைகள், தேசியக்கொடி பறப்பது போல பறந்து கொண்டேயிருந்தன.

பூ மரங்களில் இருந்த பூக்களும் காற்றோடு சேர்ந்து வந்து அந்தப் பெரிய மொட்டை மாடியில், பூமழை தூவியது போலக் கொட்டிக் கிடக்க, அங்கே போடப் பட்டிருந்த பெரிய இருக்கையில் அமர்ந்து கொண்டு, மேலே வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்பீட்டர்.

அவன் மேல் விழுந்த ஒன்றிரண்டு பூக்களை, எரிச்சலோடும் அலட்சியத்தோடும் தட்டி விட்டவனின் கரம் பட்டே பூக்கள் கசங்கிப் போய் பாவமாகக் கீழே கிடந்தன.

மென்மை என்பதே பிடிக்காத அசுரனைப் பூக்களின் மெல்லிய ஸ்பரிசம் அவ்வப்போது எரிச்சல் படுத்திக் கொண்டிருந்த வேளை, கிட்டத்தட்ட வியாகேசின் முதுகுக்குப் பின்னால் மறைந்த படி அந்தப் பெரிய பங்களாவின் வளாகத்துக்குள் நுழைந்தான் வஞ்சிமாறன்.

உள்ளே நடந்து போய்க் கொண்டிருந்தவனின் பார்வையில், சாளரத்தின் திரைச்சீலைகள் காற்றில் பறந்து கொண்டிருப்பது படவும்,
"யோவ் பெரிசு.. எனக்கு தெரிஞ்சு பாஸோட பங்களாவுல மட்டும் தான் ஜன்னல் கதவுக்கு உள்ளயும் வெளியிலயும் திரைச்சீலை போட்டிருக்குது.. திரைச்சீலையும் மாத்தோணும் ரெண்டு கிழமை ஆயிட்டுது.."
எனச் சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்தார் வியாகேசு.

"ஏன் பெரிசு அப்புடிப் பாக்கிறாய்.."

"ஒண்டு செய்யன்.."

"சொல்லுங்கோ என்ன செய்ய.."

"நேராப் போய் உன்ரை பாஸிட்டை.. திரைச்சீலை எல்லாம் மாத்தோணும் என்ன கலருல மாத்திறது எண்டு கேட்டுக் கொண்டு வாவன்.."

"உது நல்ல ஐடியா.. அப்ப தானே அவருக்குப் புடிச்ச கலரை அவரும் சொல்லுவார்.."

"எனக்கு ஒரு உண்மை சொல்லு.."

"என்ன உண்மை பெரிசு.."

"நீ உண்மைக்கும் லூசு தானா இல்லாட்டிக்கு லூசு மாதிரி நடிக்கிறியா.."

"என்ன பெரிசு உப்புடி ஒரு கேள்வி கேட்டுப் போட்டியள்.. நான் கோபமாப் போறன்.."

"கோபமா எங்க போறாய்.."

"பாஸிட்டை தான்.."

"அப்ப சரி.. நான் போய் அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டு வாரன்.."

"ஏன்.."

"நீ தான பாஸிட்டை போறன் என்டனீ.."

"ஓம் சொன்னான்.."

"அவர் தூக்கி அடிக்கிற அடியில நீ கை வேறை கால் வேறையா விழுந்து கிடப்பாய்.. நான் தானே பிறகு அள்ளிக் கொண்டு போய் ஆசுப்பத்திரியில சேக்கோணும்.. அது தான் முன்னாயத்தமா அம்புலன்ஸுக்கு அடிச்சிட்டு வாரன் எண்டு சொன்னன்.."

"யோவ் பெரிசு இருந்தாலும் உனக்கு உந்த குசும்பு மட்டும் விட்டுப் போகேல்லை பாரன்.."

"என்ரை குசும்பு கிடக்கட்டும்.. வரேக்குள்ள உனக்கு என்ன சொல்லிக் கூட்டியந்தனான்.."

"என்ன.."

"உதைப்பன்டா உன்னைய.."

"ஐயையோ சாரி பெரிசு.. பாஸிட்டை இருந்து காப்பாத்துறன் எண்டு சொன்னியள்.. நீங்கள் பாஸோட பேசி முடிக்கும் வரை நான் தலைக் கறுப்பு கூடக் காட்டாமல் ஹெஸ்ட்ஹவுஸ்ல இருக்கோணும் எண்டு சொன்னியள்.."

"ஆ பிறகு திரைச்சீலையை மாத்திறன் குறைச்சீலையை மாத்திறன் எண்டு கதைச்சுக்கொண்டு நிண்டதும் இல்லாமல் பாஸிட்டை போவாராம் எல்லே.. போடா போ உனக்கெல்லாம் பூச்சட்டியால ரெண்டு வாங்கினால் தான் புத்தி வரும்.."

"ஐயோ மன்னிச்சுக் கொள்ளுங்கோ மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. இனி வாயே திறக்க மாட்டன்.."
என்று கொண்டு பக்கவாட்டில் இருந்த விருந்தினர் இல்லத்துக்கு ஓடி விட்டான் வஞ்சிமாறன்.

அவன் போன திக்கைப் பார்த்துக் கொண்டு
"ஒண்டு கதைச்சே கொல்லும்.."
என்றவர், மேலே மொட்டைமாடியைப் பார்த்து
"ஒண்டு கதைக்காமலே கொல்லும்.."
என்று முணுமுணுத்தபடி பெருமூச்சு விட்டுக் கொண்டு, உள்ளே போனார்.

மாடிப்படிகளில் ஒவ்வொரு படியாக ஏற ஏற, வியாகேசுக்கு போன விசியம் நமக்குச் சாதகமாக அமையவில்லை என்பதை எப்படி அவனிடம் தெரிவிப்பது என்ற பதட்டத்தையே ஏற்றிக் கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் தான் அந்த முப்பது படிகளையே அளந்து கொண்டு நிப்பது என யோசித்தவர், ஒரு வழியாக ஜேம்ஸின் பின்னால் போய் நின்றார்.

அவர் நடந்து வந்த விதத்திலேயே வந்தவர் யாரெனக் கண்டு கொண்டவன் போல, அண்ணாந்து பார்த்தபடியே வலது பக்க இருக்கையைக் காட்டினான் ஜேம்ஸ்.

திரும்பிப் பார்க்காமலேயே தன்னைக் கண்டு கொண்டவனது அந்தச் செயலை எப்பொழுதும் போல வியந்தபடி, அவனுக்கு முன்னால் வலது புறமாகப் போய் நின்றார் வியாகேசு.

சில நொடிகள் வானத்தையே பார்த்தபடி இருந்தவன் சட்டென்று நிமிர்ந்து வியாகேசைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினான்.

"அது வந்து.. எல்லாம் சரியாத் தான் போய்க் கொண்டு இருந்தது.. நடுவுல கொஞ்சம்.."
என வியாகேசு சொல்ல வந்த விடயத்தைச் சொல்ல முடியாமல் திக்கித் திணற, சட்டென்று கண்ணாடிக் குவளை ஒன்று கீழே விழுந்து நொறுங்க
"லாரன்ஸ் இடையில வந்து அந்த இடத்தைத் தட்டிப் பறிச்சிட்டான்.. அந்தளவுக்குப் போனதுக்கு காரணம் அந்த ஜீவராஜ் தான்.."
என வியாகேசின் வாயில் இருந்து வேகமாக வார்த்தைகள் வந்து விழுந்தன.

சொல்லி முடித்து விட்டு ஜேம்ஸ் அறியாமல் லேசாக நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.

அவர் சொல்லி முடித்ததும் தன் அடர்ந்த தாடியை நீவி விட்டபடி எதையோ தீவிரமாக யோசித்த ஜேம்ஸ்
சட்டென்று பக்கத்தில் இருந்த பட்டனை அழுத்தினான்.

அவன் பட்டனை அழுத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் அவனது இரண்டு பாடிகார்ட்ஸ்ஸும் அவன் முன்னால் ஆஜரானார்கள்.

தான் அதுவரை அமர்ந்திருந்த அந்தப் பெரிய கதிரையை ஒரே தள்ளில் தள்ளியபடி எழுந்தவன், தன் முன்னால் மேசை மேல் கிடந்த குட்டி அம்பை எடுத்து, தனக்கு நேராகக் கிடந்த போர்ட்டில் குறி பார்த்து அடித்தான். அது சரியாக மாலினி என்ற பெயரில் போய்க் குத்திக் கொண்டு நின்றது.

அந்தப் பெயரைத் தன் நீல விழிகளால் ஒரு நொடி உருத்து விழித்தவன், மறு கணம் தன் பின்னால் கைகட்டியபடி நின்ற பாடிகார்ட்ஸை ஒரு அழுத்தமான பார்வை ஒன்று பார்த்து விட்டு, வியாகேசையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து போய் விட்டான்.

அவனது கண்ணசைவிலேயே அவன் நினைத்ததை முடிக்கும் அவனது அந்த இரண்டு விசுவாசிகளும் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்கள்.

வியாகேசு மட்டும் போர்ட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திக்குத் திக்காக எழுதப் பட்டிருந்த பெயர்களையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய மனதோ
"சரி தான் புலி வழமை போல தன் வேட்டையைத் தொடங்கி விட்டது.. இனிமேல் யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.."
என எண்ணிக் கொண்டது.

ஆனாலும் தான் எதிர்பார்த்தது போல, தான் சொன்ன விடயத்தை ஜேம்ஸ் பெரிதாக எடுத்துக் கொண்டு ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை என்பதே அவருக்குப் பெரும் திருப்தியாக இருந்தது.

இந்த நிம்மதியான விடயத்தை உடனேயே வஞ்சிக்குச் சொல்ல வேண்டும் இல்லாது போனால் அவன் இங்கே என்ன நடக்கிறதோ ஏது நடக்கிறதோ எனப் பதட்டமாகியே பரலோகம் போய் விடுவான் என நினைத்தவர் வேகமாக வஞ்சிமாறனிடம் ஓடினார்.

விருந்தினர் இல்லத்தின் கதவை உள் பக்கமாகப் பூட்டி விட்டு, அங்கும் இங்குமாக நடைபயின்று கொண்டிருந்த வஞ்சிமாறன், கதவு வேகமாகத் தட்டப்படவும் உண்மையில் கொஞ்சம் பதறித் தான் போனான்.

கதவைத் திறக்கவோ வேண்டாமோ என அவன் தன்னுள் பெரிய பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்த வேளை
"டேய் மாறா.. நான் தான்டா பெரிசு வந்திருக்கிறன்.. கதவைத் திறந்து தொலையண்டா வெண்ணெய்.."
எனக் கிட்டத்தட்ட வியாகேசு கத்த,
"யோவ் பெரிசு அதை முதல்லயே வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே.. வாயில என்ன மோதகமா வைச்சிருக்கிறியள்.."
எனப் படபடத்துக் கொண்டு கதவை வேகமாகத் திறந்தான் வஞ்சிமாறன்.

"என்னய்யா போன வேகத்துல வந்திட்டாய்.. ஒரேடியா உன்னைய வீட்டை விட்டே பாஸ் விரட்டி விட்டுட்டாரோ.."

"உனக்கும் நல்ல ஆசை தான் என்ன.. எப்படா ஜேம்ஸ்ஸு என்னைய வீட்டை விட்டுத் துரத்துவான் எண்டே பாத்துக் கொண்டு திரி.."

"அப்புடி எல்லாம் இல்லை பெரிசு.. சரி போன விசியம் என்ன அதைச் சொல்லுங்கோ.. நான் வீட்டுக்குள்ள வரலாமோ கூடாதோ.. உள்ள பாஸ் என்ன மனநிலையில இருக்கிறார்.."

"உன்ரை பாஸ் எப்ப எந்த மனநிலையில இருப்பார் எண்டு அவருக்கே தெரியாது.. இதுல நான் என்னத்தைச் சொல்ல.. ஆனால் ஒண்டடா நாங்கள் பயந்தது போல ஜேம்ஸு ஒண்டும் கோபப் படேல்லை.. ஏனெண்டால் அவன்ரை மைண்டு முழுக்க.. வேறை எதிலையோ நிக்குது.. இப்பவும் அதுக்கான நடவடிக்கையில தான் நிக்கிறான்.."

"அப்புடி என்ன நடவடிக்கை அது.."

"அது தான்டா வழமை போல உள்ளூர்க் கிருமியளை களை எடுக்கிறது.."

"இந்த வாட்டி யார் பெரிசு ஊறுகாய்.."

"அந்த மாலினி தான்.."

"வேணும் வேணும் நல்லா வேணும் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடிச்சுது.. நல்லா வேணும்.. போனால் திரும்பி வராது தானே.."

"வாங்குறவங்கள் விட்டால் வரும்.. இல்லாட்டிக்கு வராது.."

"வருமெண்டு நினைக்கிறாய்.."

"அதிந்தை வாய்க் கொழுப்புக்கும்.. மற்றவையிந்தை குடியைக் கெடுக்கிற குணத்துக்கும் திரும்பி வராது எண்டு தான் நினைக்கிறன்.. பாப்பம் என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது.. உப்புடித் தானே போன தரம் போன மேரியாத்தா இப்ப திரும்பி வந்து நடு வீட்டுல குந்தி இருக்குது.."

"அதுவும் சரி தான் ஆனால் பெரிசு அந்தம்மா தனக்கு ஒண்டுமே நடக்காதது போல சுத்தித் திரியுதே அது தான் எனக்கு ஒரே யோசனை.. போன இடத்துல கவனிப்பு குறைவு போல.."

"அது அப்புடி இல்லையடா கவனிப்புப் பலமா இருந்தாலும் வெளியால காட்டிக் கொள்ளாது.. பிறகு அதிந்தை கெத்து என்னாகிறது சொல்லு.."

"அதுவும் சரி தான்.."
என்று வஞ்சிமாறன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் வெளியே வாகனம் இரையும் சத்தங் கேட்டது.

மாறன் சட்டென்று எட்டிப் பார்க்க
"அங்க என்னடா விடுப்புப் பாக்கிறாய்.. மாலினி ஐயர் தான் வேல்டு ரிப் போறா.. நீ தலையைக் காட்டி உன்ரை பாஸிட்டை வாங்கிக் கட்டிக் கொள்ளாத.."
எனச் சட்டென்று சொன்னார் வியாகேசு.

அதைக் கேட்டதும் எட்டிப் பார்த்த வேகத்தில் தலையை உள்ளே இழுத்துக் கொண்டான் வஞ்சிமாறன்.

இப்படியே இருவரும் கதைத்துக் கொண்டிருந்த வேளை மீண்டும் வாகனம் இரையும் சத்தங் கேட்க, எட்டிப் பார்க்கத் துடித்த மனதைப் பெரும்பாடு பட்டு அடக்கினான் மாறன்.

"என்னடா எட்டிப் பார்க்க ஆசையா இருக்கோ.."

"ஆனாப் பயமா இருக்கே.."

"இங்க வா இந்த ஜன்னல் பக்கத்தால பார்.. ஆனாக் கவனமாப் பார் உன்ரை பாஸுக்கு எல்லாப் பக்கமும் கண் இருக்கு.."

"அதுவும் சரி தான்.."

"அநேகமா மாலினிக்குப் பதில் ஆள் வந்திருக்கும் எண்டு நினைக்கிறன்.. ஆனா இந்த முறை ஆரிந்தை ஆள் வருதெண்டு தெரியேலையே.."

"அது தான் எனக்கும் தெரியேலை.."

"சரி சரி கவனமாப் பார்.."

"பொறுங்கோ பாக்கிறன்.. ஆரவோ பொம்பிளைப் பிள்ளை இறங்குது.."

"ஐயோ கடவுளே என்னடா சொல்லுறாய்.."

"ஓம் பெரிசு பொம்பிளைப் பிள்ளை தான்.."

"இறைவா இது என்ன சோதனை.."

"அதிந்தை முகத்தைப் பார்த்தால்.. அதுக்கு இங்க ஏன் வந்திருக்கிறம் எண்டே தெரியேல்லை.."
எனச் சொன்ன வஞ்சியைத் தள்ளி விட்டு வெளியே எட்டிப் பார்த்தார் வியாகேசு.

புலிக் குகைக்குள் நுழையும் புள்ளிமானின் மருட்சி துளி கூட இல்லாமல், பூங்காவனத்தைச் சுற்றிப் பார்க்க வந்த தட்டாரப்பூச்சியின் பூரிப்போடு கீழே இறங்கி நின்றாள் அந்தப் பாவை.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
169
Semma ppaa..
mikavum arumaiyaka kondu poreenka
waiting for next epi
 
Top