• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 1

மும்பை ஏர்போர்ட்டில் இறங்கியவனின் கால்கள் வேக நடையில் நடக்க, அவனுடைய நடையின் வேகத்தில், சிலுசிலுத்த அரபிக்கடலின் காற்று கூட அவனருகில் வர அஞ்சி நின்றது.

வெளியே வந்தவனின் கைகள் தன்னிச்சையாக கருப்புக் கண்ணாடியை கண்களில் அணிந்தது.

நிமிர்ந்த நடையும், அகன்ற நெஞ்சுரமும், ஆறடி உயரமும், அழுத்தமான உதடுகளுடன் நின்றவன், தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்க்க, அடுத்த நொடி அவன் மார்பை வெண்ணிறக் கரங்கள் பின்னிருந்து அணைத்துக் கொண்டது.

மென்மையும் வன்மையும் கலந்த அந்த கைப் பிடியின் இறுக்கம் அவர்களின் நெருக்கத்தை பறைசாற்றியது.

“ ஓ மை பேபி.... “ என்று கூறிக்கொண்டே அவளை கைகளால் வளைத்து தன் முன்னே இழுத்தான்.

ஹீல்ஸ் அணிந்த தன் பாதங்களை உயர்த்தி, கரங்களை கழுத்தில் படரவிட்டு, அவன் இதழோடு தன் இதழைச் சேர்த்தாள் அந்த அழகி. உயிர்ப்பில்லா அந்த உதட்டுச்சாய முத்தத்தை கை குட்டையால் நாசூக்காக துடைத்துவிட்டு அவளை அணைத்தபடியே தன்னிலிருந்து பிரித்தான்.

“ ஐ மிஸ் யூ டியர்... “ என்று கிள்ளை மொழியில் மிழற்றினாள் அந்த அழகி.

அவளின் முத்தத்திற்கு பரிசாக மோகனப் புன்னகையை சிந்தினான் அவன். ஆராவமுதன்.

கட்டுமானத் துறையில் முடிசூடா சக்கரவர்த்தி. உலகெங்கும் பல கட்டடங்களை வடிவமைத்துத் தருபவன். யாராலும் கட்டுப்படுத்த முடியாத காற்று அவன். தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்ற மனோ திடம் கொண்டவன்.

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த அவனை வளர்த்த, அவனது தந்தை வழிப் பாட்டி தேன்மொழிக்கு மட்டுமே கட்டுப்படும் காளையவன்.

புயல் காற்றாய் அனைவரையும் சுழற்றி அடிப்பவன், அவன் பாட்டி தேனம்மாவிற்கு மட்டும் குளிர்தரும் தென்றலாவான்.

அந்த அழகியை தன் கைவளைவில் வைத்துக்கொண்டு, சுற்றியிருக்கும் உலகைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தன் நடையைத் தொடர்ந்தான்.

“ ஆரா..... “ என்றாள் வார்த்தையில் இனிமை தடவி.

“எஸ்... பேபி... “ என்றான் உணர்வுகள் அற்ற குரலில்.

“ இல்லை.... இந்த.... திருமணம்... அப்புறம்... நான்.. “ என்றாள் பயத்தில் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திக்கித் திணறி.

சட்டெனத் தன் கருப்புக் கண்ணாடியை கழற்றி அவன் முறைத்த முறைப்பில் சர்வமும் நடுநடுங்கியது சாரா என்ற அந்த அழகிக்கு.

அடுத்த நொடி அவளை ஒரு உதறு உதறி விட்டு தன் காரில் ஏறி அமர்ந்தான்.

சாரா விழுந்த வேகத்தில் எழுந்து ஓடி வரும் முன், கார் அவள் கண்ணை விட்டு மறைந்து சென்றது.

அவனின் முன்கோபம் அறிந்தும், தான் செய்த அவசரத் தனத்தை எண்ணி மனம் நொந்தாள் சாரா.

அடுத்த நொடி அவனை வளைக்கும் அடுத்த திட்டத்திற்கு தயாரானாள், இதழ் சுமந்த ஏளனப் புன்னகையுடன்.

அன்று இரவு பத்து மணி. கோயில் நடை சாத்தும் நேரம். அங்கே போடப்பட்டிருந்த அலங்காரம் இல்லாத சிறிய கல்யாணப் பந்தலில், மணப் பலகையில் குத்துக்காலிட்டு கூரை புடவையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் கண்களில் துளியும் கலக்கமில்லை. எதிர்காலத்தை பற்றிய எந்த அச்சமும் இல்லை. மூழ்குபவனுக்கு கிடைத்த துடுப்புக் கட்டை போல் கிடைத்த நொடியை பற்றிக் கொள்ளவே நினைத்தாள்.

பிறை நெற்றியில் வில்லென வளைந்த புருவங்கள், அஞ்சன விழிக்கணைகளை தரை நோக்கி வீசியபடி, குவளை மலர் நிறத்தழகி நிலமகளையே உற்று நோக்கினாள்.

குனிந்திருந்த அவளது முகத்தில், வெட்கத்தின் சாயலோ, நாணத்தின் புன்னகையோ தென்படவில்லை. உணர்ச்சிகளைத் துடைத்த அந்த முகம், சில்லிட்ட பனிக்கட்டி போல் இறுகிக் கிடந்தது. அவள் சங்கமித்ரா.

கனத்த சரீரத்துடன் ஒரு பெண்மணி கல் மேடையில் அமர்ந்தபடியே, "ராசி கெட்டவ. எதற்கும் உதவாதவ. எங்களை விட்டு நீ தொலைவதற்கு இன்னும் நேரம் வரவில்லை பார் " என்று சங்கமித்ராவைப் பார்த்து முறைத்துக் கொண்டே, வாயினில் சொற்களை மெதுவான குரலில் அரைத்தபடி, மடி மீது படுத்திருந்த தனது மகளின் தலையை வருடிக் கொடுத்தார் ஆத்திரத்தோடு.

" இருக்கிற நாலு முடியையும் அவள்மேல் இருக்கிற கோபத்தில் பிடிங்கி எறிந்து விடாதீர்கள் அம்மா" என்று தனலட்சுமியின் கரத்தை தட்டிவிட்டாள் அவரது மகள் ஸ்வப்னா.

ஆடம்பரமான ஏற்பாடுகள் இல்லை. உறவுகள், நட்புகள் என்று யாரும் அருகில் இல்லை.

அர்ச்சகரோ கோவிலின் வெளி வாசலைப் பார்த்தபடியே, வெளியேறத் துடித்த கொட்டாவியை அடக்கியபடி, மந்திரம் என்ற பெயரில் இரண்டு வார்த்தைகளை இடைவெளிவிட்டு விட்டு கூறி, ஹோம குண்டத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.

வளர்பிறை நிலவொளியில், அந்த கருப்பு நிற ஜாகுவார் அதீத வேகத்தில் அந்த கோவிலின் வாசலில் வந்து நின்றது.

வாசலில் காரை கண்டதும் அதுவரை தூணில் சாய்ந்து, நம்பிக்கையை நெஞ்சில் சுமந்து நின்றிருந்த தேன்மொழி பாட்டி விழிகளில் கனிவுடன் தன் பேரனின் வரவுக்காக காத்திருந்தார்.

காரிலிருந்து இறங்கிய ஆராவமுதன், தன்னுடைய அக்மார்க் வேக நடையில் கோவிலுக்கு உள்ளே நுழைந்தான். அவனை எதிர்கொண்ட அவனுடைய தேனம்மா "வா ஆரா..." என்றார் அவனை வரவேற்கும் விதமாக.

'எல்லா ஏற்பாடுகளும் தயார் தானே?' மொழியில்லாமல் அவன் விழிகள் எழுப்பிய கேள்விக்கு ஆம் என்பது போல் இமை அசைத்து பெருமூச்சுடன் பதில் சொன்னார் தேனம்மா.

ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் சகிதம் வந்தவன், இரு கை விரல்களினால் தலையினை கோதி, வெகு அலட்சியமாக தலையைச் சிலுப்பியபடி, மணமேடையில் அமர்ந்து, தன் அருகில் அமர்ந்து இருக்கும் பெண்ணை மண்ணாய் பாவித்து, வளர்பிறை நிலவொளி சாட்சியாக சங்கமித்ராவின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான் மித்ராவின் அமுதன்.

மனநிறைவுடன் தேனம்மா தன் இரு கைகளால் அட்சதையை தூவி ஆத்ம திருப்தி அடைந்தார்.

தனலட்சுமியும் முகத்தில் வன்மம் கலந்த புன்னகையுடன் ஒருவித அலட்சியத்துடன் அட்சதையை எறிந்தார். அவரது சீமந்த புத்திரி ஸ்வப்னாவோ ' இந்த பிச்சைகாரிக்கு இப்படி ஒரு வாழ்வா?' என்று மனதிற்குள் சிடு சிடுத்தாள். கையில் இருந்த அட்சதையை தரையில் எறிந்து விட்டு , தனது வலது கையை முன்னும் பின்னும் ஸ்டைலாக திருப்பி இல்லாத தூசியை ஊதித் தள்ளினாள்.

கெட்டி மேளச் சத்தம் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லை. ஆரவாரம் இல்லை. ஆள் அரவம் இல்லை. மங்கையவளோ மன்னவனை விழி உயர்த்தி பார்க்கவும் இல்லை. நுனி விரலும் தீண்டாது முடி போட்டவனோ, தன் திருமதியின் திருமுகத்தை பார்க்கவும் விரும்பவில்லை.

" குங்குமம் வச்சு விடுங்கோ... " என்று குங்குமத்தை நீட்டிய அர்ச்சகரின் கை தாளமிட்டது ஆராவின் விழி முறைப்பில்.

சட்டென மணமேடையில் இருந்து எழுந்து நின்றவன் தேனம்மாவை நோக்கி எட்டு வைத்தான்.

"உங்களுக்காக.... உங்களுக்காக மட்டுமே. ரைட்...." என்றான் அழுத்தமான குரலில்.

அவனுடைய "ரைட்" என்ற சொல்லுக்கு "இதற்கு மேல் என்னை நெருங்காதே..." என்ற பொருளை உணர்ந்த தேனம்மாவும் அமைதி காத்தார்.

விருவிருவென கோவிலை விட்டு வெளியேறியவன் தன் காரில் ஏறிய அடுத்த நிமிடம் அந்த ஜாக்குவார் , அதன் வேகத்தில், அதனை ஓட்டுபவனின் ஆளுமையில் இருளில் புள்ளியாய் மறைந்தே போனது.

தங்கள் வேலை முடிந்தது என்ற நினைப்பில் தனலட்சுமியும், ஸ்வப்னாவும் சத்தம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றனர்

அர்ச்சகர் கோவிலின் நடை சாத்துவதற்காக பாவம் போல் தேனம்மாவையும், சங்கமித்ராவையும் மாறி மாறி பார்த்தார்.

சிலைபோல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த சங்கமித்ராவை பார்க்க பாவமாய் இருந்தாலும், இது பாவம் பார்க்கும் நேரமில்லை என்று நினைத்த அடுத்த நொடி தன் தலையை நிமிர்த்தி " எழுந்து நில்! சங்கமித்ரா! நாம் கிளம்பலாம்" என்றார் தேனம்மா ஆளுமையோடு.

அதுவரை இவள் உயிரோடு தான் இருக்கிறாளா? என்று அனைவரையும் நினைக்க வைத்த அந்தப் பெண்மை மெல்ல தலை நிமிர்ந்தது. கழுத்திலிருந்த மாலையை கழட்டி அருகில் வைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

அந்தோ பரிதாபம்! காலையில் கட்டிய அந்த மலர் மாலை தன் பூக்களை எல்லாம் இழந்து விட்டு வெறும் நாராய் காட்சியளித்தது.


தனக்கும் அந்த மாலைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று நினைத்த சங்கமித்ராவின் முகத்திலிருந்து எந்த ஒரு உணர்ச்சியையும் கிரகிக்க முடியவில்லை. கர்ப்பகிரகத்தில் இருக்கும் அந்த அம்மனே நேரில் வந்து அருள் தருவது போல் தெய்வீக முகத்துடன் இருக்கும் சங்கமித்ராவின் முகத் தசையில் ஒரு அசைவு கூட இல்லை.

இமை தட்டாத அந்த நேர் பார்வை, தேனம்மாவை உற்று நோக்கியது. அதில் அவரின் அடுத்த கட்டளைக்காக காத்திருப்பது புரிந்தது.

அர்ச்சகருக்கு அவர் வேண்டும் பொருளுக்கு மேல் பொருள் கொடுத்து விட்டு, முன்னே சென்ற தேனம்மாவை சத்தமில்லாமல் வெற்றுப் பாதத்துடன் பின்தொடர்ந்தாள் சங்கமித்ரா.

கண்ணாடி வளையல்கள் குலுங்கி அந்த நிசப்த இரவில் சத்தமிட தன் ஒரு கரத்தால் மற்றொரு கரத்தில் இருக்கும் கண்ணாடி வளையல்களை குலுங்க விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டே நடந்தாள்.

தன்னுடைய காரில் தன்னருகில் சங்கமித்ராவை அமர வைத்துக்கொண்டார் தேனம்மா.

டிரைவரின் முன்னிலையில் எந்த ஒரு பேச்சையும் வளர்க்க விரும்பாமல் வயது மூப்பின் காரணமாக சீட்டில் பின்னோக்கி சாய்ந்து உறங்க முற்பட்டு அதில் வெற்றியும் கண்டார் தேனம்மா.

காரின் முன் முகப்பு ஒளியைத் தவிர வேறு எந்த ஒளியும் இல்லாத அந்த கும்மிருட்டை தன் கரு வண்டு விழிகளால் அளவிட்டுக்கொண்டே வந்தாள் சங்கமித்ரா.

திறந்திருந்த ஜன்னலின் வழியாக காற்றின் வேகத்தில் பறந்து வந்த பூச்சி ஒன்று சங்கமித்ராவின் கழுத்திற்கடியில் விழ, அதனை விடுவிக்கும் பொருட்டு கழுத்தை நெருங்கியவளின் கைகளில் அவளது புது மஞ்சள் கயிறு தட்டுப்பட, தன் இரு கைகளாலும் திருமாங்கல்யத்தை தன் கண்முன்னே தூக்கி நிறுத்திப் பார்த்தாள்.

அதில் அம்மையும் அப்பனும் அவளைப் பார்த்து ஆசி புரிய, அதனை தன் உள்ளங்கைகளுக்குள் இறுக்கி மறைத்துக் கொண்டாள். கழுத்தில் இருந்த அந்த பூச்சியோ அவளது கழுத்தை கடித்து விட, எந்த ஒரு வலியையும் வேதனையும் வெளிப்படுத்தாமல் அதனைத் தட்டி விட்டு அமைதியாய் இருந்தது அந்த பூகம்பம்.

எந்த ஒரு வலியையும் வேதனையும் உணர்வையும் வெளிப்படுத்த விரும்பாத ஒரு பாவை. அவளை வலிக்க வைத்தே தீருவேன் என்று கட்டம் கட்டித் திரியப் போகும் மாயவன். மலருமோ... இல்லை உயிரில் கருகுமோ தூய நேசம்?

தூங்கிக் கொண்டு வந்த தேனம்மா ஒரு திருப்பத்தில் நிலை தடுமாறி, சங்கமித்ராவின் தோள் சாய்ந்து தன் உறக்கத்தை தொடர, மூடிய சங்கமித்ராவின் இதயக் கதவை ஓங்கி யாரோ தட்டுவது போல் இருந்தது அவளுக்கு.

புலர்ந்தும் புலராத அந்தக் காலைப் பொழுதில் இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர். அந்த மாளிகையை பார்த்த நொடி சங்கமித்ரா உணர்த்துக்கொண்டாள் தனக்கும் இந்த வீட்டிற்கும் சிறிதும் பொருத்தம் இல்லை என்று.

அடுத்த கட்டளைக்காக காத்திருக்கும் இயந்திரம் போல் தேனம்மாவின் வார்த்தைக்காக காத்திருந்தாள்.

" உள்ளே வாம்மா... " என அன்போடு அழைத்தவரை பின் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தாள்.


பூஜை அறைக்குள் அவளை அழைத்துச் சென்ற தேனம்மா, அங்கிருந்த உருவப் படத்தை சுட்டிக்காட்டி "இவர்கள்தான் உன் அத்தை மாமா நமஸ்காரம் செய்து கொள்" என்று ஆராவமுதனின் தாய் தந்தையரின் ஆளுயர உருவப்படத்தை காட்டினார்.

அடுத்த கணம் சங்கமித்ரா தன் தளிர் கரங்களைக் கூப்பி வணங்கினாள்.

அப்பொழுது தான் அந்த வித்தியாசத்தை தேனம்மா உணர்ந்து கொண்டார். நேற்றில் இருந்து இன்றுவரை சங்கமித்ரா ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை என்பதை அறிந்தவர் அவளது தலையை மெல்ல வருடி, "இனி இந்த வீடுதான் உன் வாழ்வு. அதில் உனக்கு எதுவும் வருத்தமா சங்கமித்ரா?"

பதில் எதுவும் வரவில்லை அவளிடம் இருந்து. கேள்வியாய் அவளை நோக்கிய தேனம்மா, " நீ நினைப்பது போல் இது பொம்மை கல்யாணம் இல்லை. இந்தத் திருமணத்தை நிலைக்க வைப்பது என் பொறுப்பு. இப்படி நீ வாய் திறக்காமல் அழுத்தமாக இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

என் பேரனை சமாளிக்க ஒரு வாய் பத்தாது பத்து வாய் வேண்டும். நீ இப்படி ஊமையாய் இருந்தால் உன்னை அள்ளி சாப்பிட்டு விடுவான்" என்று இயல்பு போல் அவளிடம் நடந்த திருமணத்தைப் பற்றியும் தன் பேரனை பற்றியும் மறைமுகமாக எடுத்துரைத்தார்.

அப்பொழுதும் அமைதியின் திருவுருவாய் நின்றிருந்தாள் சங்கமித்ரா.

" உன்னுடைய சித்தி எங்கள் சங்கமித்ரா மிகவும் அமைதியானவள் எதிர்த்து பேச மாட்டாள் என்று கூறினார். ஆனால் உன்னிடம் இருந்து இவ்வளவு அமைதியை நான் எதிர்பார்க்கவில்லை" என்று ஆச்சரியப்பட்டார் தேனம்மா.

போலியாக ஒரு புன்னகை கூட சிந்தவில்லை சங்கமித்ராவிடமிருந்து.

" சங்கமித்ரா நீ பேசுவாய் தானே? " என்று கடைசியில் தன் சந்தேகத்தை கேட்டே விட்டார் தேனம்மா.


பூக்கள் மொட்டவிழும் போது பூவிதழ்களில் ஏற்படும் பூகம்பம் போல், சங்கமித்ராவின் மெல்லிய உதடுகள் அசைந்தது.

ஆர்வத்துடன் அவள் வார்த்தைகளை கவனிக்க ஆரம்பித்தார் தேனம்மா.

" விதியின் வசத்தால் விலைக்கு வாங்கப்பட்ட பொருள் நான். இங்கே எந்தவித உறவுகளையும் உரிமைகளையும் நிச்சயம் நான் எதிர்பார்க்க மாட்டேன்.

எனக்குத் தெரிய வேண்டியது இரண்டு விஷயம் தான் " என்று கொக்கி போட்டு நிறுத்தினாள்.

தீர்க்கமாக பேசும் பெண்ணின் வார்த்தைகளின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் உயிர்மூச்சு சிக்கிக்கொள்ள, ஒரு பெண்ணின் பாவத்தை சம்பாதித்து கொண்டோம் என்ற பதைபதைப்பில் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின தேனம்மாவிற்கு.

தான் செய்தது தவறு தான் என்றாலும் அந்த தவறை சரி செய்யும் பொறுப்பும் தன்னையே சார்ந்தது என்பதை உணர்ந்தவர், "என்னம்மா? " என்றார் தன் படபடப்பை மறைத்துக் கொண்டு.

" இங்கு நான் எங்கு தங்க வேண்டும்? இங்கு என்னுடைய வேலைகள் என்னென்ன? " என்றாள் சங்கமித்ரா.


ஏதேதோ கேள்விகளின் கற்பனைகளில் ஆழ்ந்திருந்தவர் சங்கமித்ராவின் சாதாரண கேள்வியில் தன் இயல்பை மீட்டு இருந்தார்.

' இந்த மாளிகையையே ஆள வந்தவள் தான் என்ற கர்வம் சிறிதுமின்றி, உலகத்தையே சுற்றி வளைப்பவனின் சரிபாதி தான் என்ற நினைப்பு துளியுமின்றி எதார்த்தமாக பேசும் சங்க மித்ராவின் பேச்சில் கவலையும் நிம்மதியும் ஒருங்கே வரப்பெற்றவர் அவளுக்கான அறையினை காட்டினார்.

" வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு எண்ணற்ற வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் அதனால் என்னிடம் பேசும் வேலை மட்டுமே உனக்கு " என்று கூறி மெலிதாக சிரித்து அவளுக்காக தான் இருப்பேன் என்ற தைரியத்தை மறைமுகமாக ஊட்டினார் தேனம்மா.

தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தவளுக்கு கிடைத்த தனிமை இனிமை சேர்க்க கதவில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

பிறந்த வீட்டு சீராக வந்து அங்கே வீற்றிருந்த அவளது பையினை திறந்தாள். அதனடியில் சாயம் போன அந்த சிறு பையை எடுத்தாள். அவளது உலகம் விரிந்தது. அதில் தன்னை நுழைத்துக் கொண்டாள்.


காலை உணவு அவளது அறைக்கு அவளைத் தேடி வந்தது. உழைக்காமல் உண்ணும் உணவு யாசகம் பெற்று உண்பதற்கு சமம் என்பதை உணர்ந்தவள் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

தகவல் கிடைத்ததும் அவளை காண வந்த தேனம்மா, " ஏன் சங்கமித்ரா உனக்கு இந்த சாப்பாடு பிடிக்கவில்லையா? வேறு ஏதும் தயாரித்து தரச் சொல்லட்டுமா?" என்றார்.


அவரது கண்களை நேராகப் பார்த்து, " நான் சாப்பிட வேண்டும் என்றால், எனக்கு இந்த வீட்டில் ஏதேனும் வேலை வேண்டும்" என்றாள் உறுதியாக.

' என் பேரனுக்கு நான் பார்த்திருக்கும் பெண் என்றால் சும்மாவா?' என்று மனதிற்குள் அவளது தன்மானத்தை பாராட்டியவர் தன் முதல் ஆட்டத்தை ஆட அடி எடுத்து வைத்தார்.

" இதோ இந்த ஹாலில் இருக்கும் முருகன் சிலை எனது மருமகள் மிகவும் ஆசையாக வாங்கி பூஜித்து வந்தது "

தூசியடைந்து பளபளப்பு குன்றி, சருகாய் ஆன மாலையை அணிந்து அந்த மாளிகையின் ஆடம்பரத்தோடு ஒன்றாமல் தனித்து நிற்கும் அந்தக் குமரனைக் கண்டவளின் மனம் யோசனையை தத்தெடுத்தது.

" இதோ இந்த முருகனை அலங்கரித்து ஆராதனை செய்வதே உனது முதல் வேலை " என்று பூடகமாய் சிரித்தார்.


அந்தத் திருவுருவச் சிலையை தீண்டியதும் உடலெங்கும் புல்லரித்தது சங்கமித்ராவிற்கு. கொண்ட காரியத்தில் கண்ணாய் இருந்தவள் தன் உணர்வுகளை உதறிவிட்டு, சிலையை சுத்தப்படுத்திவிட்டு சந்தனத்தை கைகளில் குழைத்து குமரனின் நெற்றியில் பொட்டிடும்போது,

"ஏய்....." என்ற ஆராவமுதனின் உறுமல் குரலில் சிறிதும் பயம் கொள்ளாமல் அவனை திரும்பி ஒரு நேர் பார்வை பார்த்துவிட்டு வட்ட சந்தனத்தில் குங்குமத்தை சேர்த்தாள் அழகாய்.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அதிரடியான ஆரம்பம், ஆரா கிட்ட சங்கமித்ரா என்னென்ன பாடுபட போறாளோ 😲😲😲😲😲😲😲
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
ரெண்டு பேரும் என்ன மனநிலைல இருக்காங்க🤔

பாட்டிக்கு ஏன் வேர்த்துச்சு...

எனிவெ... ஹாப்பி மேரிட் லைப்... 🥰🥰

ரெண்டு பேரும் எப்படி சண்டை போட்டுக்குவாங்க னு பாப்போம்...😁

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
மௌனியவள் சிறு பேச்சும், அத்தனை அர்த்தமாய் 🙄🙄🙄

தேனம்மாவின் சதிராட்டம், பேரனை வென்றிடுமா 🥺🥺🥺

அந்தக் குமரனின் சிலை மேல் என்ன கோவமோ அமுதா 🤨🤨🤨 கோபம் மனையாள் மீதா அல்லது குமரனின் மீதா 🤔🤔🤔
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️அதிரடியான ஆரம்பம், ஆரா கிட்ட சங்கமித்ரா என்னென்ன பாடுபட போறாளோ 😲😲😲😲😲😲😲
கண்டிப்பாக கிடையாது தோழமையே...
சுற்றியடிக்கும் சுழல் நீரிலும் எதிர்நீச்சல் போடும் நங்கை இவள் 👍
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
ரெண்டு பேரும் என்ன மனநிலைல இருக்காங்க🤔

பாட்டிக்கு ஏன் வேர்த்துச்சு...

எனிவெ... ஹாப்பி மேரிட் லைப்... 🥰🥰

ரெண்டு பேரும் எப்படி சண்டை போட்டுக்குவாங்க னு பாப்போம்...😁

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
காரணங்களின்றி காரியமில்லை
காரியம் இன்றி காரணங்களும் இல்லை
( புரியும் ஆனா புரியாது 🤣🤣🤣)
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மௌனியவள் சிறு பேச்சும், அத்தனை அர்த்தமாய் 🙄🙄🙄

தேனம்மாவின் சதிராட்டம், பேரனை வென்றிடுமா 🥺🥺🥺

அந்தக் குமரனின் சிலை மேல் என்ன கோவமோ அமுதா 🤨🤨🤨 கோபம் மனையாள் மீதா அல்லது குமரனின் மீதா 🤔🤔🤔
மனையாள் என்றே அறியாத மன்னவன் மாகோபம் அந்த கோதேவியை அசைத்திடாதே 👍
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
ஆரம்பமே அடிதடி அட்டகாசம்
 
Top