• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

அத்தியாயம் - 3

சங்கமித்ராவிற்கு ஆயிரம் அறிவுரைகள் கூறிக் கொண்டிருந்தார் தேனம்மா.

" இதோ பார் மித்ரா! உங்கள் இருவருக்குமான பந்தத்தை விதி முடி போட்டு விட்டது. இனி அதை மாற்றுவதற்கு எந்த வழியும் இல்லை. ஆரா சற்று கடுமையானவன் தான். ஆனால் முற்றிலும் கெட்டவன் அல்ல.
ஒரு பெண் நினைத்தால் கண்டிப்பாக எந்த ஒரு ஆணையும் மாற்றிவிடலாம் எளிதாக" என்றார் உறுதியான குரலில்.

மெல்ல தன் தலையை நிமிர்த்திய சங்கமித்ரா, "அப்படி என்றால் நீங்கள் ஏன் நினைக்கவில்லை? " ஒரே கேள்வியில் தேனம்மாவின் உலகத்தை நொடியில் அவரைச் சுற்றி சுற்ற வைத்தாள்.

"அது... ஒரே பேரன் என்பதாலும், தாய் தந்தை இல்லாமல் இருப்பவன் என்பதாலும் அவனை அதட்டிப் பேசும் வழக்கம் என்னிடம் கிடையாது. சிறுவயதில் இருந்தே, இந்த வீட்டில் அவன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அவனுடைய தலையசைப்பில் இயல்பாகவே என் தலையும் அசைந்து விடுகிறது. அவனை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குள் நான் அவன் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டேன். என்ன இருந்தாலும் பாட்டியை விட பொண்டாட்டிக்கு அவன் மீது அதிகாரம் தூக்கல் தானே " என்று கூறிவிட்டு பெருமூச்சுடன் சிரிக்க முயன்றார்.

"சரி இந்தப் பொருந்தாத திருமணத்தில் என் மீதான உங்கள் எதிர்பார்ப்புதான் என்ன?" தெளிவான குரலில் வினவினாள் சங்கமித்ரா.

"பச்... இது பொருந்தாத திருமணம் இல்லை சங்கமித்ரா. என்னால் முற்றிலும் பொருத்தம் பார்க்கப்பட்டு நடைபெற்ற திருமணமே. ஊருக்கே தலைவனாக இருந்தாலும், பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக அவனை மாற்ற வேண்டும்.

அவனை அவனது குடும்பம் சகிதமாக நான் கண்ணார பார்த்து மகிழ வேண்டும். என் சொல்லிற்காக நான் கைநீட்டிய பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன். எனக்காக... என் சொல்லுக்காக... அவன் வாழாமல், அவனுக்காக ஆசை ஆசையாய் அவன் வாழ்வை அனுபவித்து குடும்பமாய் வாழ வேண்டும்" என்று கண்களில் ஆசை மிதக்க பேசிக் கொண்டிருந்தார் தேனம்மா.

"சரி..." வார்த்தைகளும் அளவாய் வந்தது சங்கமித்ராவிடமிருந்து. கண்ணைத் திறந்து கொண்டே காற்றில் தலைக்குப்புற கீழே விழத் தயாராகினாள்.

தேனம்மா சங்கமித்ராவை ஆராவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

"இது ஆராவின் பிரத்யோக அறை. தனது உடைமைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டான். தனது உரிமையை கடைசி வரை விட்டுத் தரவும் மாட்டான்.

இந்த குணத்தின் மேல் கொண்ட நம்பிக்கையால் தான் உன்னை அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். இருவரும் நன்றாக வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு மித்ராவின் சொற்ப உடைமைகளை வைப்பதற்கான இடத்தை காட்டினார்.

வீங்கிய கைகளுடன், அறையின் பிரம்மாண்டத்தை தூசு போல் பார்த்துவிட்டு, அசையாமல் நிற்கும் அந்த குவளை மலர் நிறத்தழகியின் நெஞ்சுரத்தை மனதிற்குள் ரசித்தார் தேனம்மா.

" வைரத்தை கண்ணாடியால் கீற முடியுமா? ஒரு வைரத்தை இன்னொரு வைரத்தால் தான் வெட்டி எடுக்க முடியும்" என்று கூறி அவள் தலை மீது தன் இரு கரங்களையும் வைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு வெளியேறினார்.

' அம்மாடி விட்டு விலகி ஓடிவிட ஒரு நிமிடம் போதும். வருவதை வைராக்கியத்துடன் எதிர்கொண்டால் அந்த மருட்டும் நிமிடம் நம்மை விட்டு விலகி ஓடும்' பெண்ணவளின் காதுக்குள் வார்த்தைகள் வந்து விழ, சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாரானாள்.

மாலை நேரம் வானம் கருகருக்கத் தொடங்கியது. எதிர்பாராத மண்வாசனை அவளின் காற்றுப் பையை நிரப்ப, அவளது கால்கள் அவளது அனுமதி இன்றி பால்கனி நோக்கிச் சென்றது.

சுவற்றில் சாய்ந்து கொண்டு, தெறிக்கும் மழைச்சாரலில் தன்னை கரைத்துக் கொண்டிருந்தாள். விழிகள் இமை மூடி சுகமாய் தூங்கியது.

உரசும் இடிச் சத்தமும் அவளுக்கு இன்பத்தாளமாய் இனித்தது. அவள் கட்டியிருந்த காட்டன் புடவையும் மழையில் நனைந்து அவளை கோவில் சிற்பமாய் எடுத்துக்காட்டியது.

நேரம் கரைவதையும் உணராமல்,கண்மூடி லயித்து இருந்தவளின் முன் சொடுக்குச் சத்தம் கேட்க, விழிமலர் மலர்த்தினாள்.


"என் தொடுகையைச் சகிக்காமல், நெருப்புக்கு இரையாகத் துணிந்தாயே. தொட்டால் மட்டுமல்ல. தொடாமலேயே அவமானப்படுத்தும் ஆயிரம் வழிமுறைகள் உள்ளன. இரவுக்கு ஒன்றாய் இன்பப் பாடம் படிப்போமா?" என்று அவளின் முன் நின்று ஆராவமுதன் கேட்டான்.

மீண்டும் கண்களை மூடி மழையின் சாரலை ரசிக்க ஆரம்பித்தாள் அமைதியாக.

அவளது கழுத்தோடு சரசமாடிக் கொண்டிருந்த மஞ்சள் சரடை வெளியில் எடுத்தான்.

விரல்கள் தீண்டாமல் உரசிய சரடு அவள் உயிரில் தீப்பற்ற " இது உனக்கு எத்தனையாவது திருமணம்?", அவனுடைய முதல் பானம் சரியாக தன் இலக்கை நோக்கி பாய்ந்தது.

குளிரில் நனைந்த உடல் சட்டென்று விறைக்க ஆரம்பித்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டோடின. அவளின் இதழோரம் துடிக்க ஆரம்பித்தது.

"ஓ.... பணத்திற்காக கட்டிக் கொள்வதால் கணக்கு வைக்கவில்லையோ?" இரண்டாவது பானமும் தன் இலக்கை நோக்கிப் பாய்ந்தது.

அவளின் கைவிரல்கள் தாமாக இறுக்க மூடிக்கொண்டன.

" நீ இப்படி விறைத்து நிற்பதால் உன்னை நான் பத்தினி தெய்வம் என்று நம்ப வேண்டுமோ?" என்று அவன் இடி இடி என நகை ஒலி எழுப்ப, மெல்ல உணர்வுகள் அற்ற பார்வையுடன் அவனைப் பார்த்தாள் சங்கமித்ரா.

" தரம் கெட்டவர்களின் வாயிலிருந்து, தரம் கெட்ட வார்த்தைகள் தான் வருமாம்" அழுத்தமாக வந்தது வார்த்தைகள் அவளிடம் இருந்து.

"ஏய்..." என்று கர்ஜித்து அவள் கழுத்தை நெரிக்கப் பார்க்க, "தொடாமலேயே பயிலும் இன்பம் பாடம் தீர்ந்து விட்டதா உங்களுக்கு?" தைரியமாய் எதிர்மொழி உரைத்தாள்.

"உன் நெஞ்சுரத்தை துணி கொண்டு துடைக்கிறேனா இல்லையா என்று பார்" என்று அவளை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்த்துவிட்டு,பால்கனி கதவை அடைத்தான்.

கொட்டும் மழை குளிரை ஊசியியாய் உடலில் குத்த ஆரம்பித்தது. விறைக்கத் தொடங்கிய உடம்பை நிமிர்த்தி தன் சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி நின்றாள் சங்கமித்ரா.

கடிகாரத்தில் நேரம் செல்லச் செல்ல குளிரில் நடுங்கியபடி சுருண்டு கிடக்கும் அந்த திமிர் பிடித்தவளைக் காண பால்கனி கதவைத் திறந்தான். அதிர்ந்தான்.

அங்கே சங்கமித்ரா வெறும் தரையில் பத்மாசனமிட்டு நிமிர்ந்த முகத்துடன், மூடிய விழிகளுடன் ஏகாந்தமாய் இருந்தாள். சீரான மூச்சுக்காற்று அவளின் மனோதிடத்தை காற்றோடு பறைசாற்றியது.

நிமிடத்தில் உணர்ந்து கொண்டான் அவன் அறிந்த பெண்கள் போல் இவள் இல்லை என்று. இந்த நிமிர்வு அவன் எந்த பெண்ணிடத்திலும் காணாதது. அந்த நொடியில் அவளின் நிமிர்வை உடைத்தெரிய அவன் உள்ளம் ஆவல் கொண்டது.

அவன் சீண்டித் தீண்டிய பெண்களைப் போல் அல்லாது, தான் சீண்டினால் தன்னையே சீண்டும் பெண்ணாய் இருப்பதைக் கண்டு, அவளை தன்னிடத்தில் விழ வைக்க, அழ வைக்க அவன் மனம் துடித்தது.

அவன் மனம் பரபரக்க, விரல்களுக்கு இடையே சிகரெட்டை பொருத்தி பற்ற வைத்தான். அவள் முன் குத்துக்காலிட்டு, புகையை அவள் முகத்தில் ஊதினான்.

அதிலும் அசையாது இருந்தாள். செந்தனல் முனையில் ஜொலிக்க, அவனுடைய கைகள் நீண்டு அவளுடைய இமை அருகில் சென்றது. வெம்மை இமையருகில் அதிகரிக்க, இமைகளைத் திறந்தவளின் விழிகளில் அந்த தனல் எதிரொளித்து செந்நிறமாய் ஒளிர்ந்தது.

தன்னை உறுத்து விழிப்பவளின் முன் சாவகாசமாக மீண்டும் சிகரட்டை இழுத்து புகையை அவள் முகத்தில் குப்பென்று ஊதினான்.

அதன் நெடியில் தொண்டை கமர இரும ஆரம்பித்தாள். 'என்ன?' என்பது போல் புருவம் உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

" இல்ல ரொம்ப நேரமா தவம் இருந்தியே. உன் தவத்தை கலைத்தால் எனக்கு சாபம் கொடுப்பாயோ என்று பார்த்தேன்" என்றான் படு நக்கலாக.

" அவரவர் செய்யும் பாவமே அவரவர்க்கு சாபம் தான்" என்று அவனை உறுத்து கூறியவள் மெல்ல தரையில் இருந்து எழ முயன்றாள்.

குளிரின் காரணமாக, கைகளில் ஏற்பட்ட விரைப்பில், தரையில் கைகளை ஊன்றி எழும் போது நிலை தடுமாறினாள்.

நிலை தடுமாறியவள் தன் முன்னே இருந்தவன் முன்பே சரியத் தொடங்கினாள். ஆனால் நொடி நிமிடத்தில் சுதாரித்து காற்றில் கைகளை நிறுத்தி முழங்காலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டாள்.

தன் முன்னே கைகள் தூக்கி நின்றபடி, பளபளத்த அவளின் இடுப்பு மழை நீரில் மினுமினுத்தபடி இருக்க , தன் மீது அவள் விழுவது உறுதி என கைகள் கொண்டு அவள் இடையருகே அவன் தாங்கயிருந்த நொடி, சிற்பமாய் அசையாது எதிரே இருந்தவளை தீண்டாமலேயே தீண்டிய உணர்வில் தவித்தான் ஆரா.

அவளைப் பற்றிய தனது கணிப்புகள் எல்லாம் தூள் தூளாய் சிதறுவதைக் கண்டு, அவன் மனம் அவளை ஆராய விழைந்தது.

தன்னை மீட்டெடுத்துக்கொண்டு நிமிர்ந்து நின்றவன் அவளைப் பார்த்து, "யார் நீ?" என்றான்.

" உறவைச் சொல்லவா? இல்லை உரிமையைச் சொல்லவா?" என்றாள் நிதானமாக நிமிர்ந்து நின்று அவன் விழிகளைப் பார்த்து.

ஹா... ஹா... என்று பெருங்குரல் எடுத்து நகைக்க ஆரம்பித்தான். "இந்தக் கயிற்றை கட்டியதால் அப்படி ஒரு எண்ணம் வருகிறதோ உனக்கு? " என்றான் ஒரு மாதிரி ஏளனமாய் சிரித்துக் கொண்டே.

"ம்... அப்படி இல்லை என்றால் இந்த அறையில் நுழைய எனக்கு அனுமதி ஏது?" என்று எதிர் கேள்வி கேட்டவளை அசையாது பார்த்தான்.

"ஓ... அறையில் நுழைந்து விட்டதால் அகத்தில் நுழைந்துவிடலாம் எளிதாக என்று நினைத்து விட்டாயோ? அந்தோ பரிதாபம்! என்றும் என் மனதில் குப்பை கூளங்களை சேமித்து வைக்கும் பழக்கம் எனக்கு இல்லை " என்று கூறிக் கொண்டே தன் நெற்றியில் அவளைப் பார்த்து சலாம் வைத்தான் ஏளனச் சிரிப்புடன்.

" ஏதோ காற்று என் பக்கம் வீசுவதால் தான் இந்த குப்பை இந்த கோபுரத்தின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறதோ? " அவன் தன்னை குப்பை என்று ஏளனமாய் எடுத்துரைத்த போதும் அசராது பதிலடி கொடுத்தாள்.

புருவங்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், "வார்த்தைக்கு வார்த்தை அசராது பதிலடி தருகிறாயே, இருவரும் இருக்கும் இந்த தனிமையில் நான் என்ன வேண்டுமானாலும் உன்னை செய்ய முடியும் என்ற அச்சுறுத்தல் உனக்கு இல்லையா? இல்லை பயமில்லாதது போல் நடிக்கிறாயா?" என்றான் அழுத்தப் பார்வையுடன்.

" நம்மைச் சுற்றிச் சுருட்டும் சூறாவளியோடு போரிடுவது மடத்தனம். அமைதியாக கடந்து விடுவதே புத்திசாலித்தனம்" என்றாள் நேர்கொண்ட பார்வையுடன்.

" உறவென்று வந்த பிறகு உங்கள் தீண்டலை என் சுண்டு விரலும் எதிர்க்காது. அதேபோல் உங்களை விரும்பி என் விழி கூட தீண்டாது " என்றாள் நெஞ்சுரம் கோர்த்த வார்த்தைகளோடு.

" நொடிக்கு நொடி உன்னைப் பற்றிய என் கருத்துக்களை பொய்யாக்கி கொண்டே வருகிறாய். சிறு நதி என்று உன்னை கடந்து போக எண்ணுகையில், பெருவெள்ளமாய் ஆர்ப்பரித்து நிற்கிறாய்.

அது எப்படி சூறாவளியை மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டாய்? வட துருவத்தில் ஏறினால் இடஞ்சுழியாகவும் , தென் துருவத்தில் ஏறினால் வடஞ்சுழியாகவும் தன்னை மாற்றி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில், எப்படி எப்படி தாழ்வு மண்டலத்தை நோக்கி பாய்ந்து வந்து சுருட்டி விடும். உருத்தெரியாமல் குலைத்து விடும். இடர் வரும் தடைகளை தகர்த்து விடும்" என்றான் ஆணவமாக.

தன் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றாமல் மௌனத்தை கலைக்காமல் நிற்பவளைக் கண்டு, அவளைச் சிதைத்து சுருட்டும் எண்ணத்துடன் ஒரு அடி முன்னெடுத்து வைத்தவன், பட்டென்று தன் குளிர் கைகளை முன்னே நீட்டி அவள் தளிர் இடை தொட அருகில் வந்து நிறுத்தியவன், இடைத்தொடாமலேயே கைகளை கசக்க, அவளின் இடையில் குடியிருந்த மெல்லிய ரோமங்களும் குத்திட்டு நின்றது.

கருமை வானில் இடி இடிக்க அதனோடு சேர்ந்து ஆராவின் நகை ஒலியும் சேர்ந்து அவளை இடித்தது.

" விழி கூட தீண்டாது என்ற உன் மொழியை உன் தேகம் கேட்கவில்லையே. அச்சச்சோ இயற்கையின் நியதியில் ஆண்மைக்கு பெண்மை மண்டியிடுவதே எழுதப்பட்ட சட்டமாயிற்றே.
உன் பேச்சை மீறி குறுகுறுத்த உன் இடைக்கு என்ன தண்டனை தரலாம்?" என்றான் அவளை சீண்டிய படி.

ஆராவின் குறுகுறுத்த பார்வை தன் மேனியை சல்லடையாய் துளைத்த போதும், நாணமின்றி நங்கை அவள் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

"ம்... இந்தப் பார்வை எல்லாம் எனக்கு போதாது. பெண்மை ஆண்மைக்கு வளைந்தே தீரும் என்ற அடுத்த கட்ட சோதனைக்கு போகலாமா?" என்றான் எள்ளல் தெறிக்கும் குரலில்.

" ஆண்மை நதியின் சங்கமம் பெண்மைக் கடலே. சங்கமமாகும் கடலில் செல்வம் மட்டுமே சேராது . அழுகி துர்நாற்றம் வீசும் சில பிணங்களும் தான்" என்றாள் சிறிதும் தயக்கமின்றி.

முகம் சினத்தால் சிவக்க, ஆராவின் புஜங்கள் பின் சென்று முன்னேறி முறுக்க, " இந்த திமிர் தான் உன்னை அடக்கி ஆளச் சொல்கிறது. இந்த நிமிர்வு தான் உன்னை பாதாளத்தில் புதைக்கச் சொல்கிறது.
விதி உன்னை என் கையில் சேர்த்தது. இனி அந்த விதியே நினைத்தாலும் உன்னை என்னிடம் இருந்து காப்பாற்ற முடியாது.
ஆராவமுதனாகிய நான் இன்று முதல் உனக்கு ஆலகால விஷமே.ரைட்.... " என்றான் தன் விரலை அவள் முன் சொடுக்கிட்டு.

" அமிலமே என் மீது மழையாக பொழிந்தாலும், என் முடிவு என்னோடு" என்றாள் அதிர்வின்றி.

இரையை கவ்விச் சென்ற சிங்கம் அதனை உடனே சுவைக்காமல், அதனை ஓடவிட்டு மிரட்டி, மருட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல், சங்கமித்ராவை தன் கட்டிற்குள் கொண்டுவர சிந்தனையை செயல்படுத்த தொடங்கினான் ஆரா.

ஒற்றைக் கண்ணை சுருக்கி, இதழ் கடித்து "பரவாயில்லை, எதிர்வாதத்தை ஆழ்ந்த பொருளில் தருகின்றாய். காரசாரமாகவும் இருக்கிறது. என் வினைகளுக்கான உன் எதிர்வினைகள் எனக்கு போதையை தருகிறது " என்றான் மயக்கும் வசீகர குரலில்.

முரணான அவன் தோரணையில் ஏற்பட்ட குழப்பத்தால் முன்னெற்றியை தேய்த்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

தன் முதல் முயற்சி வெற்றிக்கான பாதையில் சென்றதைக் கண்டவன், அவள் காதோரம் குனிந்து, நாசி வழி வந்த அனல் காற்றோடு, இதழ் வழி வந்த குளிர் வார்த்தைகளைச் சேர்த்து, " வேடனின் அறையைத் தேடி அடைக்கலமான பறவையே, உன் பெயர் என்ன? " என்றான் உயிர் உரச உல்லாசமாக.

மூடிய அவள் இதயக்கதவுகளை, அச்சத்தம் பறை போல் அதிர்ந்து, அதிரச்செய்து திறக்கச் சொல்ல, கண நேரத்தில் அந்த பிம்பங்களை உடைத்து அவள் இதழ் திறந்தது.
"சங்கமித்ரா..." என்றாள் அவனுக்கு சளைக்காத அதே குளிர் புன்னகையுடன்.

"சங்கமித்ரா..." அவனையும் அறியாமல் அவன் இதழ்கள் அவள் பெயரை ஓசை இல்லாமல் உச்சரித்துப் பார்த்தது.

" உன்னை மழையில் குளிரில் வாட்டி எடுத்தேனே, என் மீது கோபம் கரை புரண்டு வருகிறதா மித்ரா? " என்றான் சாதாரணமாக.

அந்தக் குவளை மலர் நிறத்தழகியின் மலர்முகம் காற்றில் இடவலமாய் அசைந்தது.

"ம்... ஏன்?"

" ஓடும் நீரின் வேகத்தோடு பயணிப்பது என்பது நான் பிறந்தது முதல் கற்றறிந்த கலை. என் பயணம் உங்களோடு என்று அறிந்த நொடி முதல் அதற்கு முழுவதுமாய் என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன்" என்றாள் சர்வ சாதாரணமாக.

" என் அறையில் நுழையும் போது அனைத்திற்கும் தயாராக உள்ளே நுழைந்தாய் அப்படித்தானே? " என்றான் அவளை ஆழ்ந்து நோக்கியபடி.

அவனை சலனம் இல்லாமல் பதில் பார்வை பார்த்தாள்.

" உன்னை மனைவி என்ற கோணத்தில் என்னால் ஒரு நாளும் பார்க்கவும் முடியாது. பழகவும் முடியாது"

'அப்படியா?' என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

" அவ்வளவு பொருள் கொடுத்து வாங்கிய உன்னை எளிதாக விடவும் முடியாது. அதனால்... " என்று கூறிவிட்டு அவளை மேலும் கீழுமாய் பார்த்தான்.

' நீயே பேசு' என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.

கைகளை மேலே நீட்டி சோம்பல் முறித்து, "உன்னை அடிமையாக ஆளலாம் என்று முடிவு செய்து விட்டேன் வா " என்று கூறிவிட்டு பால்கனி கதவைத் திறந்து அறையினுள் புகுந்தான்.

குளிர் காற்று ஊசி முனைகளாய் ஈர சேலையை துளைத்து உடலை குத்த, கைகளை கட்டிக்கொண்டு, கருமைவானை உற்றுப் நோக்கினாள். தான் தேடியது கிடைக்காமல் சலித்த முகத்துடன் அறையினுள் நுழைந்தாள்.

கட்டிலில் கால் நீட்டி ஒய்யாரமாக பள்ளி கண்ட திருமால் போல் படுத்துக்கொண்டு, "எனக்கு தூக்கம் வரவில்லை என்னை தொடாமல் தூங்கச் செய் " என்றான் மந்தகாச புன்னகையுடன்.

அதற்கு அவள் தந்த எதிர்வினையில் அவன் புன்னகை முகம் யோசனையை தத்தெடுத்தது.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
இத்தனை மனோதிடமா 😲😲😲

அவள் மனதில் ஏதும் இருக்கின்றதோ 🤔🤔🤔 அவனை குறித்து ஏற்கனவே அறிந்தது போலல்லவோ பேச்சும் இருக்கின்றது 🙄🙄🙄

அவள் குறித்த அவன் கருத்தும் எண்ணமும் சுக்கு நூறாய் போய் விட்டதே 😏😏😏
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
இத்தனை மனோதிடமா 😲😲😲

அவள் மனதில் ஏதும் இருக்கின்றதோ 🤔🤔🤔 அவனை குறித்து ஏற்கனவே அறிந்தது போலல்லவோ பேச்சும் இருக்கின்றது 🙄🙄🙄

அவள் குறித்த அவன் கருத்தும் எண்ணமும் சுக்கு நூறாய் போய் விட்டதே 😏😏😏
அவன் அவளைப் பற்றி நினைக்க நினைக்க அவனது எண்ணங்கள் தூள் தூளாய் சிதறும் அவளின்
உள்ளம் கொண்ட உறுதியுடன்....
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
Sema interesting
 
Top