• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
நீல வானம் தெள்ளத் தெளிவாக, வெண்ணிறப் பஞ்சு போன்ற மேகங்களை அங்காங்கே சிதற விட்டுக் கொண்டு அழகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

வானத்துச் சூரியனும் அளவான வெப்பத்தையே உமிழ்ந்து கொண்டிருந்தான்.

சூரியனது வெப்ப அளவில், நேரம் அப்போது பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அதே நேரத்தில் தான் காயத்திரியின் திருமண வைபவத்தில் நின்றிருந்த அனுவும், மகேந்திரன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் மகேந்திரன் இங்கே வந்து சேர்வதற்குள் மூன்று மணி நேரத்திற்கு மேலே கூட ஆகலாம் என யோசனை செய்த அனு, தானே அங்கிருந்து புறப்பட்டு, அவனைப் பாதித் தூரத்தில் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில், காயத்ரியிடம் சொல்லி விட்டுப் புறப்படக் காத்திருந்தாள்.

அவளது எண்ணம், காயத்ரியின் கழுத்தில் தாலி ஏறியதும், அவளை எப்படியும் அவள் கணவன் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்றும், கஸ்தூரி அங்கே இல்லத்தில் எப்போதும் போலப் பாதுகாப்பாக இருப்பாள் என்றும் ஓடிக் கொண்டிருந்தது. அதன்படி காயத்ரியின் கழுத்தில் தாலி ஏறியதும், அவளிடம் சென்று
"காயு... நான் அவசரமாக வெளியூருக்குப் போகிறேன்..." என்று சொல்லி விட்டு அனு புறப்பட்டு விட்டாள்.

தான் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதையும் மகேந்திரனுக்குத் தெரிவித்த அனு, பாதித் தூரத்திலேயே மகேந்திரனைச் சந்தித்து விட்டாள்.

"அனூ... உனக்கு என்னோடு பழத்தோட்ட வீட்டுக்கு வரச் சம்மதமா? சம்மதமா என்பதை விடவும் நீ வருவது தான் எல்லோருக்கும் நல்லது. அன்றொரு நாள் சொன்னாயே ஈஸ்வரமூர்த்தி என்று..."
எனத் தொடங்கி, அவன் தன்னைப் போதைப் பொருள் கடத்த வைத்தது வரை அனைத்தையும் அனுவிடம் ஒப்புவித்தான் மகேந்திரன். அனுவும் அவனுடன் பழத்தோட்டத்துக்குப் புறப்பட்டு வந்து விட்டாள்.

அங்கே தன் அத்தை மாமாவுடன் இருந்த அனுவிடம், கவிவர்மன் தான்,
"அனும்மா... நீ வெண்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு, இங்கே வருகிறாயா..."
எனச் சொல்லி மீண்டும் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். அதனால் மீண்டும் இல்லத்துக்கு வந்த அனுவை, கஸ்தூரி அழுது கொண்டே அணைக்க, அவளுக்கு மனது பாரமாகிப் போய் விட்டது. ஆனாலும் அங்கிருந்து போக வேண்டிய சூழ்நிலை அவளுக்கு இருந்தது.

வெண்பாவிடம் தகவல் சொன்ன அனு, கடிதமொன்றில்,
தான் விரும்பியவனோடு போவதாகவும், முடிந்தால் உங்களை வந்து சந்திக்கிறேன்... எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு, கஸ்தூரிக்குத் தெரியாமலேயே இல்லத்தில் இருந்து புறப்பட்டு வந்து விட்டாள்.

அனு மீண்டும் பழத்தோட்டத்துக்கு வந்ததும், தன் மகனையும் அனுவையும் தன்னருகே அமர்த்திக் கொண்ட காயத்ரி, அவர்கள் இருவரிடமும் தன் எண்ணத்தைச் சொன்னார்.

"மகிப்பா... அம்மா ஒன்று சொல்வேன். அதைக் கண்டிப்பாகச் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடு."

"என்னம்மா என்ன விசயம்... சத்தியம் எல்லாம் கேட்கிறீர்களே?"

"விசயத்தைப் பிறகு சொல்கிறேன். நீ சத்தியம் செய். அம்மா உனக்கு நல்லது தானே செய்வேன். யோசனை செய்யாமல் சத்தியம் செய்."

"சரியம்மா... சத்தியமாக நீங்கள் சொல்வதைச் செய்கிறேன்."

"என் மீது சத்தியம் செய்..."

"என்னம்மா இது... சரி உங்கள் மீது சத்தியமாக நீங்கள் சொல்வதைச் செய்கிறேன்."

"சரி... அனு நீ சத்தியம் செய். நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொல்லி..."

"நான் சத்தியம் செய்யாமலேயே நீங்கள் சொல்வதைச் செய்வேன் என்று உங்களுக்கே தெரியும். இருந்தாலும் சத்தியம் செய்து கொடுக்கிறேன் அத்தை. நீங்கள் சொல்வதைச் சத்தியமாகச் செய்து கொடுக்கிறேன்."

"சரி... மகிப்பா... வீட்டில் இந்த வருடத்து நாட்காட்டி ஏதேனும் இருக்கிறதா..."

"இருக்கிறதும்மா..."

"அதை என்னிடம் கொண்டு வந்து கொடு..."
எனக் காயத்ரி சொல்ல, மகேந்திரன் நாட்காட்டியைத் தாயிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

அந்த நாட்காட்டியில் ராகுகாலம், சுபநேரம், யமகண்டம், குளிகை என அனைத்தும் அழகாகப் போடப் பட்டிருந்தது. அதையே விரலால் கோடிழுத்தபடி காயத்ரி பார்க்க, அவர் அப்படி எதைப் பார்க்கிறார் என்பது போல மற்றவர்கள் பார்த்திருந்தனர்.

சில நொடிகள் அதையே பார்த்திருந்த காயத்ரி,
"மாமா... நாளைக்கு மறுநாள் தைப்பூசம்... திருமணத்திற்கு உகந்த நாள்... சுபநேரம் வேறு ஒன்பது ஐந்தில் இருந்து பதினொரு மணிக்குள் இருக்கிறது. அதனால் அப்போதே வைத்துக் கொள்ளலாம்"
என்று சொல்ல,
"நீ சொல்வது சரி தான்... அன்றே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்."
எனக் கவிவர்மனும் மனைவி சொல்வதை ஆமோதித்தார்.

பெரியவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை, ஒன்றும் புரியாமல் சின்னவர்கள் இருவரும் பார்த்த வண்ணம் நின்றனரே தவிர, என்ன? ஏது? யாருக்குத் திருமணம்? என்று ஒன்றும் கேட்கவில்லை.

சின்னவர்களது அமைதியைப் பார்த்த காயத்ரியோ தானே அவர்களுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தைப் பற்றி விளக்கினார்.

"என்ன? இருவரும் அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள். நாளை மறுநாள் வரும் தைப்பூசத்துச் சுப நேரத்தில் உங்கள் இருவருக்கும் தான் திருமணம் செய்து வைக்கப் போகிறோம்."

"என்னம்மா சொல்கிறீர்கள்?"

"ஆமாம் மகிப்பா... இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்."

"ஆனாலும் அம்மா... இப்போது திருமணத்திற்கு என்ன அவசரம்... அதோடு அண்ணாவுக்குத் திருமணம் ஆகாமல் எனக்கு எப்படியம்மா..."

"நீ இப்படிக் காரணம் சொல்லித் திருமணத்தைத் தள்ளிப் போடுவாய் என்று எனக்குத் தெரியும். அதனால் தான், அதற்காகத் தான் உன்னிடமும் அனுவிடமும் அம்மா சத்தியம் வாங்கினேன்."

"அது தானம்மா... ஏன் இந்தத் திருமணத்திற்கு அவசரம் என்று கேட்கிறேன்."

"இதோ பார் மகிப்பா... அனுவுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று தானே அவளை இங்கே அழைத்து வரச் சொன்னேன்."

"ஆமாம்..."

"வயதுப் பெண்ணை எப்படி நாம் வீட்டில் வைத்திருப்பது, யாராவது ஏதாவது கேள்வி கேட்கக் கூடும். அவளது இல்லத்திலேயே கேள்வி கேட்பார்கள். இதுவே நீ அவளைத் திருமணம் செய்து விட்டால், யார் என்ன கேட்டக முடியும். அனுவும் உன் மனைவியாக, எங்கள் இரண்டாவது மருமகளாக எங்களோடு எப்போதும் இருக்கலாம்."

"அதுவும் சரி தானம்மா... ஆனால்..."

"ஆனால் ஆவன்னால் எல்லாம் வேண்டாம். இன்னொரு விசயம் அனுவுக்கு இப்போது வரை ஈஸ்வரமூர்த்தி தான் இரண்டாவது தந்தையாக இருக்கிறான். நடுவிலே அவளை நாங்கள் தான் சொத்துக்காக அழைத்து வந்து விட்டோம். அது இதென்று கதை கட்டக் கூடும், அவனது கதையை யாரும் நம்பப் போவதில்லை என்பது வேறு கதை. இருந்தாலும் அவள் சட்டரீதியாக உன் மனைவியாக ஆகி விடுவது தான் அவளுக்கும் பாதுகாப்பு... இதுக்கு மேலும் கேள்வி கேட்காமல் அடுத்து நடக்க வேண்டியதைப் பார்ப்போம்."
எனக் காயத்ரி சொல்ல, அதன் பிறகு அனுவோ மகேந்திரனோ எதுவும் கேட்கவில்லை.

திருமணத்தை எளிமையாக முடிக்க வேண்டும் என விரும்பிய காயத்ரி, தங்கள் குலதெய்வமான அம்மனின் சந்நிதானத்திலேயே திருமணம் முடிப்பதற்கான ஆயத்தங்களைப் பார்த்தார்.

இதற்கிடையில் அண்ணனுக்கும் தம்பிக்கும் சொல்லி, அவர்களை இங்கே வர வைக்க வேண்டும் என நினைத்த மகேந்திரன் அதைத் தாயிடம் சொல்ல, காயத்ரியும் உடனேயே தன் மகன்களை அழைக்க அலைபேசி அருகே போக, அந்த நிகழ்வு நடந்தது.

பழத்தோட்டத்து வீடு அமைந்திருந்த வளவில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான், தார் போடப்பட்ட சாலை அமைந்திருந்தது. அந்தச் சாலையில் கறுப்பு நிறத்து வாகனங்கள் இரண்டு மூன்று போவதும் திரும்பி வருவதுமாகத் தோட்டத்து வீட்டை நோட்டம் விடுவது போல இருக்கவே, காயத்ரி அலைபேசி எடுப்பதை மறந்து, அந்த வாகனத்தைக் கவனித்துப் பார்த்தார்.

அந்த நேரத்தில் தாயருகே வந்த மகேந்திரனும், வீட்டினுள் இருந்தபடி தெரிந்த சாலையைப் பார்த்தான். அப்படியே சாலையில் மீண்டும் மீண்டும் வந்து போன கறுப்பு வாகனத்தையும் பார்த்து விட்டான். அவனை அறியாமலேயே அவனுக்கு அந்த முகமூடிக்காரர்கள் வந்திறங்கிய கறுப்பு வாகனம் மனதில் நிழலாடியது. அவனுக்கு உடனே தங்களை வேவு பார்க்க அவர்கள் வந்து விட்டார்கள் என்பது புரிந்து போய் விட்டது.

மகேந்திரன் சட்டென்று தாயை இழுத்துக் கொண்டு உள்ளறைக்குப் போய்,
"அம்மா... நீங்கள் அண்ணாவுக்கோ தம்பிக்கோ இங்கே வரச் சொல்லித் தகவல் கொடுக்க வேண்டாம்..."
என வேகமாகச் சொல்ல,
"ஏன் மகிப்பா..."
எனப் புரியாமல் காயத்ரி கேட்டார்.

"அம்மா... இப்போது வெளியே மூன்று கறுப்பு வாகனங்கள் போவதும் வருவதுமா இருந்ததே அதைக் கவனித்தீர்களா?"

"ஆமாமப்பா... யாரோ ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறார்கள் போல..."

"அது யார் தெரியுமா?"

"தெரியவில்லையேப்பா..."

"எனக்குத் தொல்லை கொடுக்கும் அந்த முகமூடிக்காரர்கள் தானம்மா..."

"ஐயோ அவர்களா? அவர்களுக்கு இந்த இடமும் தெரிந்து விட்டதா?"

"இடம் தெரிந்தாலும் பரவாயில்லை. அப்பாவுக்கு மூன்று மகன்கள் என்று தெரியவே கூடாதும்மா... அதனால் நீங்கள் அங்கே வீட்டுக்குத் தகவல் சொல்ல வேண்டாம்."
என்ற மகேந்திரன், வேகமாகப் போய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களிடம், வெளியே யாரோ தோட்டத்தில் திருட வேவு பார்க்கிறார்கள் என்று சொல்லி அவர்களைக் கிளப்பி விட்டான்.

அவ்வளவு தான் தடி, கல்லு எனக் கையில் பட்டதைத் தூக்கிக் கொண்டு வேலையாட்கள் சாலைக்கு ஓட, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு வாகனம் கூடச் சாலையில் இருக்கவில்லை.

ஒரு வழியாக அவர்களைத் தற்காலிகமாகவேனும் விரட்டி விட்டேனே என்ற திருப்தி மகேந்திரனுக்குக் கொஞ்சம் இருந்தது.

இப்படியே சில பல அழுத்தங்களோடு, தைப்பூசத்து நாளும் ஒரு இறுக்கத்தோடு விடிய, அந்தத் தவிர்க்க முடியாத சூழலால் ஆதித்யனும், சூரியனும் இல்லாமலேயே அவர்களுக்குத் தெரியாமலேயே மகேந்திரனது திருமணம், கவிவர்மனது குல தெய்வக்கோவிலில் நடைபெற்றது.

கவிவர்மனும் காயத்ரியும் ஆசிர்வாதம் செய்ய, மஞ்சள் கயிறெடுத்து அனுவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான் மகேந்திரன்.
கோவிலிலேயே திருவணத்தைப் பதிவுத் திருமணமாக்கி விட்டார் கவிவர்மன்.

எப்படி எப்படி எல்லாமோ நடக்க வேண்டிய திருமணம், என் பையன்கள் இல்லாமல் நடந்து முடிந்து விட்டதே என்ற கவலையில் காயத்ரியும், அண்ணன் இருக்க நான் திருமணம் செய்து கொண்டு விட்டேனே என்ற சங்கடத்தில் மகேந்திரனும், தன் காயுவும் கஸ்தூவும் இல்லாமல் தன் திருமணம் முடிந்து விட்டதே என்ற ஆற்றாமையில் அனுபல்லவியும் இருக்க, கவிவர்மன் தான் கோவிலுக்கு வருவோருக்கு அன்னதானம் ஒழுங்கு செய்து விட்டு வந்து சேர்ந்தார்.

ஒருவாறு கோவிலில் ஆக வேண்டிய விடயங்களை முடித்து விட்டு, தங்கள் வாகனம் ஏறி நால்வரும் வீட்டுக்கு வரும் வழியில் அந்தச் சம்பவம் நடந்தது.

கவிவர்மன் தான் வாகனம் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு திசைகளில் இருந்து, இரண்டு கறுப்பு வாகனங்கள் அவரது வாகனத்தின் முன்பாக வேகமாக வந்து நிற்க, அதைப் பார்த்ததும், கவிவர்மன் விபத்து ஏற்படாமல் இருக்க, தன் வாகனத்தை வேகமாக நிறுத்தினார்.

கறுப்பு வாகனத்தில் இருந்து, தன் அடியாட்கள் சூழ வர, முகமூடி ஏதும் அணியாமல் இறங்கி வந்தார் ஈஸ்வரமூர்த்தி.

கவிவர்மனுக்கு இறங்கி வந்தவரது முகம் கண்ட கணத்திலேயே உடலில் ஒரு அதிர்வு தோன்றியது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கல்யாணம் நடந்த அன்றைக்கே மூணுபேரையும் கடத்தீடானா ஈஸ்வரமூர்த்தி 😳😳😳😳😳😳
ஓம் ஓம் அவனுக்கும் பொழுது போகோணும் எல்லோ 😂😂😂
 
Top