ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?
ஊடல்! அதுவும் முதல் ஊடல்! இத்தகையதாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை தான்.
உள்ளம் இரண்டும் ஒன்றென அன்றில் பறவைகளாக சுற்றித் திரிந்தவர்கள் இருவரும். அவர்களை சுற்றி இருப்பவர்களே, ‘ஜோடிப் பொருத்தம் செம’ என்றும், ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்றும் பாராட்ட, இப்போது நினைத்தால் அதுவே திருஷ்டியாக மாறியிருக்க கூடுமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை அவனால்.
எப்போதும் சிரித்த முகமாக, எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் நேர்மறை எண்ணங்களுடன் அப்பிரச்சனைக்கான தீர்வை ஆராய்பவனுக்கு, இப்போது இதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை.
தீர்வை ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தான் அவள் தரவே இல்லையே!
“இன்னொரு முறை காதல்னு என் முன்னாடி வந்தா, இங்கிருந்து கண்காணாத தூரத்துக்கு போயிடுவேன்.” என்று மிரட்டியல்லவா வைத்திருக்கிறாள்.
ஏதோ இங்கிருப்பதால் அவளின் தரிசனமாவது கிடைக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டால், எங்கே என்று தேடுவான்?
அவன் மூளை இந்த நினைவுகளால் சூடாகிப் போக, அதை தணிக்கவும் அவளையே நாடினான்... நினைவுகளால்!
இருவரும் காதலித்த தருணங்கள்... அவர்களின் வாழ்க்கையின் வண்ணமிகு பக்கங்கள் அல்லவா?
தங்களது நண்பர்களுக்காக அந்த பிரபல குளம்பிக் கடையில் காத்திருக்க, இருவரின் நண்பர்களும் வராமல் சதி செய்ய, இறுதியில் இருவரும் அந்த முதல் சந்திப்பில் நண்பர்களாகிப் போயினர். காலவோட்டத்தில் காதலை பகிர்ந்த அந்நொடி, இந்த சந்திப்பே இருவரையும் இணைக்க கடவுள் போட்ட முடிச்சு என்றும் நினைத்தனர். அது பிழையோ?
காதலை பகிர்ந்த நொடி!
ஆம், நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக தங்களை உணரத் துவங்கியதுமே, அதை ரகசியமாக பாதுகாக்க எண்ணி மனதிற்குள் பதுக்க, அமிழ்த்த அமிழ்த்த வெளிவரும் தண்ணீரைப் போல, மூச்சு முட்டி வெளியே சொல்லியும் விட்டனர், அதே குளம்பிக் கடையில்!
அதில் ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பரிசுகளை கொடுத்து காதலை பகிர்ந்திருக்க, அந்த காட்சியும் அவன் கண்முன் விரிந்தது.
மேசையின் இரு பக்கமும் அமர்ந்திருந்தவர்களை மௌனத்துடன் தயக்கமும் ஆட்கொண்டிருக்க, அதை கலைத்தவாறு, அவர்கள் கேட்ட குளம்பியை எடுத்து வந்திருந்தார் அந்த பணியாளர்.
அவர் மாற்றி வைத்த கோல்ட் காஃபியையும், வென்னிலா லாட்டேவையும் தங்களுக்குள் பரிமாறியவரிகளின் காதலும் அங்கு பரிமாறப்பட்டது, கண்களினால் மட்டும்!
மற்றவரைப் பார்ப்பதும், பானத்தை விழுங்குவதுமாக அவர்கள் இருக்க, இம்முறை இருவரையும் கலைத்தது அவரவர்களின் அலைபேசி ஒலி.
இருவரின் நண்பர்களும், ‘காதலை சொல்லிவிட்டீர்களா?’ என்று அலைபேசியில் அனத்த துவங்க, அதை பொறுக்க முடியாமல், அவர்களின் அழைப்பை துண்டிக்காமலேயே வார்த்தைகளில் பரிமாறிக் கொண்டனர் காதலை!
“சகி (சகா), ஐ லவ் யூ!” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறி, தங்கள் கைகளிலிருந்த பரிசுகளை நீட்டியிருந்தனர்.
அவன் அவளுக்கென வாங்கியிருந்தது, இரு கரங்கள் கோர்த்தபடி இருக்கும் மோதிரம். அவள் அவனுக்கென வாங்கியிருந்தது, இரு கரங்கள் கோர்த்தபடி இருக்கும் காப்பு.
அந்நிகழ்வை எதிர்பார்க்காத இருவருமே, வியந்து, திகைத்து, சிரித்து, மகிழ்ந்து, வெட்கி என்று உணர்வுக்குவியலாக மாறிப்போக, அந்த குவியலிலிருந்து எப்படி மீண்டனர் என இருவருக்குமே நினைவு இல்லை.
இன்று வரை நினைவில் நிறைந்திருப்பது ஒன்று மட்டுமே, அது அவர்களின் கோர்த்த கரங்களே!
காதல் நினைவுகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவன், “என்னை இவ்ளோ காதலிச்சுட்டு, எப்படி டி அப்படி உன்னால பேச முடிஞ்சது?” என்று வாய் வலிக்க கத்தினான்.
அவனைக் கூறுபோடும் ஊடல் நினைவும் மெல்ல அவன் மனதிற்குள் விரிந்தது.
அதே குளம்பிக் கடை! எங்கே காதலை பரிமாறினரோ, அதே மேசை!
வித்தியாசம் என்னவென்றால், அன்றிருந்த பரவசம் இருவரின் வசமும் கிஞ்சித்தும் வாசம் செய்யவில்லை.
அவனே முதலில் வாய்ப்பூட்டை திறந்தான்.
“போன்ல என்ன சொன்ன?” என்றவனின் அனைத்து உறுப்புகளும் கோபத்தை கக்குவது போலிருந்தது.
அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல், “லெட்ஸ் பிரேக்கப்!” என்று வார்த்தை மாறாமல் அதை பகிர்ந்தாள்.
இலட்சம் பூக்களை தலைமீது கொட்டிய உணர்வை கொடுத்த அதே இடத்தில், எரிகங்குகளை உடல் முழுக்க வீசியிருந்தாள் பாவை.
அப்போதும் கோபத்தை வார்த்தைகளில் வெளியிடாமல், “திடீர்னு என்ன காரணம்?” என்று கேள்வியை சிறிதாக முடித்துக் கொண்டான்.
அவளோ, “எனக்கு பிடிக்கல.” என்று அவர்களின் உறவையே முடித்துக் கொள்ளும் முடிவில் பேச, அவன் கோபம் வாய் என்னும் எல்லையைக் கடந்து வார்த்தை வடிவை பெற்றது.
“ஊருக்கு போறதுக்கு முன்னாடி இருந்த பிடித்தம் இப்போ இல்லாம போச்சுன்னு சொன்னா, அதை நம்ப நான் முட்டாள்னு நினைச்சியா?” என்று ஆரம்பித்தவன், காதல்(லி) தந்த வலியினால், ஆற்றாமையில் திட்டித் தீர்க்க, அதையே காரணமாக பற்றிக் கொண்டாள் அவள்.
“ச்சே, இப்போவே என்னை இவ்ளோ திட்டி கேவலமா பேசுற, உன்கூட வாழ்க்கை முழுக்க இருக்கணும்னு நினைச்சாலே பயமா இருக்கு. இனிமே, என் பின்னாடி வந்து டார்ச்சர் பண்ணாத.” என்று அவள் அங்கிருந்து கிளம்பிவிட, அவனோ அவளின் இதழ் உதிர்த்த வார்த்தைகளால் காயப்பட்டு அதே இடத்தில் தேங்கி விட்டான்.
காயப்பட்ட புலியை போல, அவனும் மீண்டும் மீண்டும் ரணத்தை கீறி வலியை அதிகப்படுத்திக் கொண்டான்.
இதோ இந்த ஒரு வாரம், அவன் எப்படி கழித்தான் என்றால் அது அவனிற்கே தெரியாது.
மாடர்ன் தேவதாஸ் என்று கூறும் அளவிற்கு அவள் நினைவில் தன்னை புதைத்து தன்னிலை இழந்து இதே போல தான் பிதற்றிக் கொண்டிருக்கிறான்.
மதுவையும் புகையையும் மட்டுமே நாடவில்லை. அதற்கு காரணமும் அவள் தானே!
“நோ ஸ்மோகிங், நோ டிரிங்கிங்! நான் இருந்தாலும் சரி, இல்லாம போனாலும் சரி!” என்று கறாராக சத்தியம் வாங்கியதால், அதைக் காப்பாற்ற வேண்டி மட்டும் அந்த பக்கம் செல்லவில்லை.
அதை நினைத்தவன் சட்டென்று எழுந்தமர்ந்து, “இல்லாம போனாலுமா? இல்லாம.... போயிடுவளா..?” என்று எதையெதையோ பிதற்றியவனின் கைகளை தன்னிச்சையாக தன்னவளிற்கு அழைப்பு விடுத்தது.
போதை ஏற்றாமலேயே போதையில் இருந்தான் அவளின் நினைவால்!
மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “சகி... சகி, உனக்கு எதுவும் பிரச்சனையா? உடம்பு சரியில்லையா? அதான் பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டியா? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு சகி. நாம சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம். இதைக் கூட நீதான டி சொன்ன? பிளீஸ் டி, என்னை தனியா தவிக்க விட்டுடாத.” என்று பேசியபடி இருக்க, மறுமுனையோ அமைதியாக இருந்தது.
மௌனத்தை அவள் இல்லை என்று தவறாக மொழிப்பெயர்த்தவனோ, “ஹலோ சகி... சகி..” என்று கத்தியவாறே சோர்வில் தூங்கிப்போக, அவன் வார்த்தைகள் இப்போது அவளை வதைத்துக் கொண்டிருந்தது.
“சாரி டா சகா, என்னால... என்னால... உன் வாழ்க்கை பாழாகக் கூடாது. நான் உன் வாழ்க்கைல இல்ல டா. என்னை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடேன் பிளீஸ்.” என்று அவன் தூங்கி விட்டான் என்று நினைத்து, அவள் மென்குரலில் பேச, “எனக்குள்ள ஆழமா புதைஞ்சிருக்க உன்னை எப்படி டி மறக்க முடியும்?” என்று அவனின் குரல் கேட்க விதிர்த்து போனாள் அவள்.
சில நொடிகள் அமைதியில் கழிய, அப்போது தான் புரிந்தது அவன் தூக்கத்தில் பேசியிருக்கிறான் என்று!
உறக்கத்திலும் தன்னை நாடும் அவனை எண்ணி நியாயமாக கர்வப்பட வேண்டும். ஆனால், கஷ்டப்படுகிறாள் அவள்!
காரணம்? அவள் மனதிலும் உடலிலும் உண்டான ரணம்!