அகானா – 76
ஆரியனுக்கு இருந்த கடுப்பில், அவள் மூக்கை நன்றாக அழுத்திக் கடித்துவிட, “ம்மா..” என்று முனங்கியபடியே மெல்ல விழிகளை அசைத்தாள் மகிழினி.
மிகவும் சிரமப்பட்டு கண்ணிமைகளை மலர்த்தி பார்க்க, எதிரில் கடுப்புடன் ஆரியன்.
‘என்னாச்சு..?’ என குழம்பிய பார்வையுடன் விழிமணிகளை உருட்டியபடியே சுற்றிப் பார்க்க, அது மருத்துவமனை என்றவரை புரிந்தது. மெல்ல மெல்ல அன்றைய ஆக்சிடெண்டும் நினைவில் வர விழிகளில் கலக்கம் சூழ்ந்தது.
ஆகனும், அத்தையும் எப்படி இருக்கிறார்களோ? என்ற கேள்வி வேறு அவளைக் குடைய, விழி மலர்த்தி ஆரியனைப் பார்த்தாள். அவன் இன்னும் கடுப்புடன் தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவனுக்கு நான் விழித்தது பிடிக்கவில்லையோ? இல்லை என்னையே பிடிக்கவில்லையோ?’ என்று யோசிக்கும் போது தான் அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் ஒரு சத்தம், அவளுக்கு மிகவும் பிடித்த சத்தம் வேறு. உண்ணிப்பாக கவனிக்க, இப்போது ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே’ என பாடல் ஒலிக்க, கணவனின் கடுப்பான முகம் எதற்கென்று புரிந்துவிட பாவமாக பார்த்தாள் மகிழினி.
அதுவரை அவளது முகத்திலேயே தன் பார்வையை பதித்திருந்த ஆரியன், மனைவியின் முகத்தில் வந்து போன பாவனைகளில், அதிலும் கடைசியாக அவள் பார்க்கும் பார்வையில் மனம் கனிய, வாய்விட்டு சிரித்துவிட்டான்.
‘கிறுக்கி.. கிறுக்கி..” என அவளை அனைத்துக்கொண்டு “ரெண்டு நாளா முழிக்கலன்னதும் எவ்ளோ பயந்து போயிட்டோம் தெரியுமா? நீ என்னடான்னா குத்துப்பாட்டை கேட்டு முழிக்கிற,” என சிரித்தபடியே அவள் மூக்கை கிள்ள,
“ம்ச் வலிக்குது ப்பா..” என சினுங்கியவள், தன்னருகில் இருந்த கணவனின் முகத்தை ஆசையாக வருடி “ரொம்ப பயந்துட்டீங்களா?” என்றாள் குரல் அடைக்க,
“ஹ்ம்ம் ரொம்ப.. ரொம்ப பயந்துட்டேன்..” என்றான் அவனும் அதே குரலில்.
“ஹெட் இஞ்சுரி, ப்லட் லாஸ், நீ வேற மயங்கிட்ட” பயப்படாம எப்படி இருக்க முடியும்..” என்றான் வேதனையாக.
அத்தை எப்படி இருக்காங்க? ஆகனுக்கு என்னாச்சு?” என்றாள் பரிதவிப்பாக.
மஞ்சும்மாவுக்கு சர்ஜரி முடிஞ்சிருக்கு, ப்ராக்ஷர்.. தீக்காயம் அவ்ளோதான். சீனியருக்கு தான் கொஞ்சம் அடி பலம். ஆனா ஓக்கே ஆகிட்டார். அவருக்கு இன்டர்னல் இஞ்சூரி தான்.. அதுக்கான ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு..” என்றான் பொறுமையாக.
“அப்பா ரொம்ப பயந்துட்டாரோ? நாங்க ரெண்டு பேருமே இப்படி இருக்கவும் கண்டிப்பா பயந்திருப்பார்..”
“மனுசன் உடைஞ்சி போயிட்டார். சீனியருமே இன்னைக்கு மார்னிங்க் தான் மயக்கம் தெளிஞ்சார். அப்போ மாமாவோட நிலமையை யோசிச்சுப்பார்.”
“ஹ்ம்ம்ம் அம்மா வரலையா?”
“இப்போ உனக்கு எங்கேயாவது ஓவர் பெயின் தெரியுதா மகி. ஒரு கம்ப்லீட் செக்கப் முடிச்சிடலாம். மாமாவுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன், அவர் உடனே வந்துடுவார்..” என பேச்சை மாற்றிவிட்டான் ஆரியன்.
அது மகிழினிக்கு புரிய, விளங்காத பார்வையுடன் கணவனைப் பார்த்தாள்.
அந்த பார்வையில் அவனால் மனைவியிடம் கடுமைக் காட்டமுடியவில்லை.
அவளை நெருங்கி அமர்ந்தவன் “இனி..” என பெருமூச்சுவிட்டான்.
அதில் பெண்ணவளுக்கு மூச்சு தாறுமாறாக ஏறியது.
“ம்ச்..” என்றவன் “இனி மா.. நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சிக்கனும்.” என்று அவள் முகத்தை தனக்கு நேராக வைத்து “நீயும் நானும் இனிமேல் இங்க இருக்கப்போறது இல்ல மகி. நமக்கே நமக்கான வாழ்க்கையை நாம வாழப்போறோம். யாருக்காகவும் நம்ம வாழ்க்கையை காம்ப்ரமைஸ் பண்ணிக்க என்னால முடியாது. உனக்கு எப்படியோ, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது. நீதான் எனக்கு எல்லாம், என் வாழ்க்கை மொத்தமும் நீதான் வேணும்னு தான் உன் கழுத்துல இந்த தாலியைக் கட்டினேன். இப்போ இங்க சூழல் சரியில்ல. அதுக்காக நான் இப்படியே இருப்பேன்னு எல்லாம் கிடையாது. அகியோட வாழ்க்கையைப்பத்தின பயம், என்னை உங்கிட்ட நெருங்க யோசிக்க வச்சது. ஆனா இப்போ எனக்கு அந்த பயம் இல்ல. சீனியர் அவளை நல்லா பார்த்துப்பார் என்ற நம்பிக்கை வந்துடுச்சு. இதுக்குப் பிறகும் இங்க இருந்து இவங்க பின்னாடி ஓடினா, நம்ம வாழ்க்கை என்னாகும். எனக்கும், என் வீட்டுக்கும் நீ மட்டும் தான் ராணி.. சோ..” என இழுக்க, மகிழியின் விழிகள் கணவனின் பேச்சில் விரிந்து கொண்டே போனது.
“என்ன இப்படியே கண்ணாலயே முழுங்கிடலாம்னு ஐடியாவா?” என அவளைப் பார்த்து கண்சிமிட்ட,
“ஹ்ம்ம்..” என தன் தலையை உலுக்க, அதில் அவளுக்கு லேசாக வலியெடுக்க, முகத்தைச் சுருக்கினாள் பெண்.
“என்னாச்சு மகி…? பெயின் இருக்கா?” என பதட்டமானவன், உடனே நர்ஸை வரவைத்து, மீண்டும் ஒரு ஃபுல் செக்கப் செய்து, அவளுக்கு இனி பயப்பட ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகே சற்று ஆசுவாசமானன்.
அதற்குள் ஆரியனின் பெற்றோர் வந்துவிட, அவர்களைப் பார்த்ததுமே மகிக்கு பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.
அவளின் பயம் ஆரியனுக்குத் தெரியுமே, அதனால் “ம்மா..” என ஆரம்பித்து அவன் இதுவரை யோசித்ததைக் கூற, பெரியவர்களும் யோசனையாக பார்த்தார்களே தவிர, வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை.
“ம்மா.. நீங்க மகி கூட இருங்க. நான் போய் சீனியரைப் பார்த்துட்டு வந்துடுறேன்..” என்று மனைவியிடம் தலையசைத்துவிட்டு கிளம்ப, அவன் தந்தையும் அவனோடே கிளம்பினார்.
அவர்கள் சென்றதும் அந்த அறையில் இருந்த இருவரிடமுமே அமைதிதான்.
மகிழினிக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற பயமும் தயக்கமும் போட்டி போட்டது.
ஆனால் இப்போது அவள் பேசியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் வேறு.
“அத்தை..” என மெல்ல அழைக்க,
“மகி.. இப்போ எதையும் பேச வேண்டாம். வீட்டுக்கு போன பிறகு பொறுமையா பேசலாம். முதல்ல உன் ஹெல்த் சரியாகட்டும்..” என பட்டென சொல்லி முடிக்க,
“அதுவந்து அத்தை.. உங்க.. உங்களுக்கு என்னை பிடிக்கலன்னா, நான் வேணும்னா ஆரி சாரை டிவோர்ஸ் பண்ணிடட்டுமா.? எங்க வீட்டு ஆளுங்களாலத்தான் எல்லா பிரச்சினையும்.. அவங்க எங்களை நிம்மதியா வாழ விடுவாங்களான்னு தெரியல?” என்றாள் பொங்கிய அழுகையுடன்.
“சரி நீ ஆரியை டிவோர்ஸ் பண்ணுவ? உன் அண்ணன் என்ன பண்ணுவார்.? என் பொண்ணை டிவோர்ஸ் பண்ணுவாரா? முட்டாள்தனமா யோசிக்காத மகி..” என கண்டிப்புடன் சொல்ல,
“நான் தான் தேவையில்லாம ஆரி சாரை இதுல இழுத்து..” என அழுகையுடன் இழுக்கும் போதே,
“உன்னைப் பார்த்ததுமே நீதான் வேணும்னு ஆரி முடிவே பண்ணிட்டான். எங்களுக்கும் கூப்பிட்டு சொன்னான். அப்போ நீ ஆகனோட தங்கச்சினு தெரியாது. தெரிஞ்ச பிறகு ஒதுங்கத்தான் நினைச்சான். ஆனா அகி விடல. இப்போ அதெல்லாம் எதுக்கு நீ யோசிக்கிற.? நீ பயப்படற மாதிரி உன்னை யாரும் கஷ்டப்படுத்தமாட்டாங்க. நீயும் ஆரியும் கொஞ்ச நாள் சிங்கப்பூர் போயிட்டு வாங்க, அதுக்குள்ள அகி இங்க எல்லாத்தையும் சரி பண்ணிடுவா?” என்றார் பொறுமையாக.
மகிழினி அமைதியாக இருக்க “உங்கிட்ட இதை இப்போ சொல்ல வேண்டாம்னு தான் ஆரி சொன்னான். ஆனா சொல்லாம இருக்க முடியல.” என்றவன் மகியின் முகத்தில் தெரிந்த குழப்பத்தில் “உன்னோட தாத்தா இறந்துட்டார்.. அங்க போயிட்டு வரத்தான் லேட்டாகிடுச்சு. எல்லாரும் அங்க தான் இருக்காங்க. ஆரியும் இப்போ அங்க போயிட்டு வருவான்.” என்றார் அவள் கையைப் பிடித்து ஆதுரமாக.
ஆனால் கேட்ட மகிழினி எதுவும் பேசவில்லை.. விழிகள் மட்டும் கலங்கிக்கொண்டே இருந்தது.
“மகி..” என அவள் கண்ணீரைத் துடைத்த விஜயா.. “மனசைப் போட்டு குழப்பிக்காத. எல்லாம் சரியாகும்..” என்றார் பொறுமையாக.
“ஹ்ம்ம்” என்றவள் ஒன்றும் பேசவில்லை.
ஆகனிடம் வந்த ஆரியன் “ஆர் யூ ஓக்கே சீனியர்.?” என்றான் பொறுமையாக.
“ம்ம் ஓக்கே ஆரி. மகி எப்படி இருக்கா?”
“இப்போதான் கான்சியஸ் வந்தது சீனியர். கம்ப்ளீட் செக்கப் முடிஞ்சது. ஓக்கே தான்..”
“பேசினாளா?”
“ஹ்ம்ம்..” என்றவன் அவளின் பயத்தைக் கூறி, தன் முடிவையும் கூற,
“ஓக்கே தான் ஆரி.. அவளுக்கு ஒரு சேஞ்ச் கண்டிப்பா வேணும்.. போயிட்டு வாங்க. இங்க ஆல்மோஸ்ட் எல்லா பிரச்சினையும் முடிஞ்சதுனு தான் நினைக்கிறேன்.”
“என்ன சொல்றீங்க? நினைக்கிறீங்கன்னா? எனக்கு புரியல..”
“உன் தங்கச்சிக்கிட்ட இருக்குற வேகம், எல்லாம் ஃபைனல் ஸ்டேஜுக்கு வந்துடுச்சுனு தான் சொல்லுது. அவளே வந்து சொல்லுவா, அதுவரை அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ஆரி.”
“ஹ்ம்ம் ஆன..” என இழுத்தவன், ஆகனின் முகத்தில் தெரிந்த கடினத்தில் அமைதியாகிவிட்டான்.
“சீனியர்.. அகிக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு..”
“ஹ்ம்ம் பார்த்துக்கலாம் ஆரி.. அத்தைக்கு அதுதான் நல்லது. இங்க இருந்து இவங்களை எல்லாம் பார்த்துட்டே இருக்கிறதுக்கு, தூரமா போயிடலாம்.”
“அப்போ நீங்க..? இந்த ஹாஸ்பிடல்..”
“எனக்கு தெரியல ஆரி.. ஆனா கண்டிப்பா அவளை இனியும் விட்டுட்டு இருக்க முடியாது..”
“ஓக்கே சீனியர் நீங்க ரெஸ்ட் எடுங்க?” என்றவன் அறையை விட்டு வெளியில் வர, எதிரில் வேகமாக வந்து கொண்டிருந்தான் விமல்.
‘இவன் ஏன்.?’ என்று பார்க்க, “நீங்களும் வாங்க..” என அவனையும் இழுத்துக்கொண்டே ஆகனின் அறைக்குள் நுழைந்தான் விமல்.
குழப்பமும், பதட்டமுமாக வந்த இருவரையும் யோசனையாக பார்த்த ஆகன் “என்னெ உதய்..?” என்றான்.
“ஆகன்.. நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சிக்கனும்..” என்று ஆரம்பிக்க,
“ரொம்ப இழுக்காம சீக்கிரம் சொல்லு விமல்..” என அதட்டினான் ஆகன்.
“என்னாச்சு விமல் சார்..?” என ஆரியனும் கேட்க
“நாம எல்லாரும் நினைச்சிட்டு இருக்குற மாதிரி, நடந்த எல்லாத்துக்கும் காரணம் உங்க மைதிலி அத்தை இல்ல, அவங்களோட கோபத்தை தனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க..” என்றான் விமல்..
“வாட்..” என ஆரியன் அதிர்ந்து கேட்க, ஆகனுக்கு அந்த அதிர்வெல்லாம் இல்லை போல, அவன் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
“ஆகன்… அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா? நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்தா..?” என விமல் இழுக்க,
“சீனியர்..” என ஆரியனும் அதட்ட,
“ம்ச் தெரியும்… இப்போ என்ன செய்யனும் நான்.? அவளோட கோபமும் வெறியும் அப்போதான் தீரும். அது தீராம அவளால என் கூட வாழவே முடியாது..” என அந்த அறையே அதிருமளவிற்கு கத்த, யார் அதிகமாக அதிர்ந்தது என்றே தெரியவில்லை.
அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து வேகமாக எழுந்துவிட்டான் ஆரியன்.
‘அகியா.?’ அவனால் இதை நம்பவே முடியவில்லை..
எப்படி? எப்படி? என மூளை கேள்விகளால் சுழல ஆரம்பித்தது.
இங்கு “ஏய்.. நீ மட்டும் என்னை கடத்தினது என் பையனுக்கு தெரிஞ்சா, உன்னை சும்மாவே விடமாட்டான்..” என எதிரே கையைக் கட்டிக்கொண்டு நக்கலாக சிரித்தபடி நின்றிருந்த அகானாவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார் ரஞ்சனி.
1 comment
அய்யய்யோ..! எல்லாரும் சேர்ந்து அகானாவை இப்படி வில்லி மாதிரி மாத்திட்டாங்களே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797