Home Anti Heroineஅகானா – 86

அகானா – 86

by Vathani S

அகானா – 86

சுபாஷ் பேசி சென்ற பிறகு, மஞ்சரியிடம் யாரும் அதைப்பற்றி திரும்ப ஆரம்பிக்கவில்லை. 

ஏன் அகானாவே கூட அதைப்பற்றி பேசவில்லை. தன்னுடைய மனநிலையை புரிந்து கொண்டார்கள் என்று மஞ்சரியாலும் அமைதியாக இருக்க முடியவில்லை.

அவர்கள் கேட்பதற்கு முன் முடிவை கூற வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்தது.

இத்தனை நாள் மகளை நல்லமுறையில், எந்த குறையும் இல்லாமல் வளர்த்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டதே தவறோ என பயம் வேறு வந்தது..

அகானாவிற்கு அவள் அப்பாவின் மீதான அன்பு எத்தகையது என்று அவருக்குத் தெரியும். அதை அப்போதே மாற்றியிருக்க, இப்போது இந்த பிரச்சினையே வந்திருக்காதோ.!

அவர்களின் ஒவ்வொரு இன்பத்திலும், துன்பத்திலும் ‘அப்பா இருந்திருந்தா, அவர் என்ன சொல்லிருப்பார், என்ன செய்திருப்பார்’ என ஆரம்பித்து, அவரும் கூடவே வாழ்வது போல் ஒரு மாயை உருவாக்கி வளர்த்துவிட்டு, இப்போது அதெல்லாம் தவறு என மறுத்தால், அகனாவால் தான் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.

இந்த ஒரு வாரத்தில் மஞ்சரியின் முகம் யோசனையிலேயே தான் இருந்தது.

சில நேரம் மகளை மனதில் வைத்து, அப்போதே சுபாஷை திருமணம் செய்திருக்கலாமோ, இன்று மகள் இப்படி பழிவெறிப் பிடித்து அனைவரையும் கஷ்டப்படுத்தியிருக்கமாட்டாளோ என்றும் கூட யோசிக்க ஆரம்பித்திருந்தார். 

அப்படி யோசித்ததே  தவறு என்பது போல் வேகமாக தலையை அசைத்து அந்த எண்ணத்தை விரட்ட முயன்றார்.

மஞ்சரி இப்படியான யோசனையில் இருக்க, அவரை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துப் போக வந்திருந்தார்கள் விஜயாவும், ஆகனும்.

ஆரியன் மகிழினியை பார்க்க சென்றிருக்க, அகானா ஒரு கொலை சம்மந்தப்பட்ட விசாரனைக்காக பக்கத்து ஊரான ஆண்டிபட்டிக்கு சென்றிருந்தாள்.

“என்ன மஞ்சு கிளம்பலாமா? யோசனையெல்லாம் பலமா இருக்கு…” என கேட்டபடியே அனைத்தையும் எடுத்து வைக்க, அவரின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை மஞ்சரி.

‘கோபமாக இருக்கிறார்’ என்று புரிய, “அத்த… ஆன்டிக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. மாமா கேட்டதும், நான்தான் யோசிக்காம ஆன்டிக்கிட்ட சொன்னேன். முதல்ல வேண்டாம்னுதான் சொன்னாங்க. அப்புறம் உங்ககிட்ட பேசிட்டு சொல்றேன் சொன்னாங்க. உங்களுக்கு விருப்பம் இல்லன்னா விடுங்க அத்தை.. இதைப்பத்தியே நாம யோசிக்க வேண்டாம்..” என ஆகன் சமாதானப்படுத்த, மஞ்சரியால் சமாதானம் ஆகவே முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் விஜயா வந்து, ரவி தன்னிடம் பேச வேண்டும் என கேட்டதாக கூற, அதிர்ச்சியாகிப் போனார் மஞ்சரி.

‘முடியவே முடியாது’ என மறுத்ததும் இல்லாமல், விஜயாவிடமும் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். 

ஆனால் விஜயா அப்படியே விடுபவர் கிடையாதே, மஞ்சரியிடம் “அகியோட வாழ்க்கைக்காகனு கேட்கும் போது நான் என்ன சொல்ல மஞ்சு. அதனாலத்தான் சரின்னு சொல்லிட்டேன்..” என்றதும்,

“அக்கா.. இவங்க யாருக்கும் என்னோட கஷ்டம் தெரியாது. சொன்னாலும் புரியாது. ஆனா உங்களுக்குப் புரியும்ல.. இனி இந்த பேச்சை எப்பவும் எடுக்காதீங்க க்கா.. போனது போனதாகவே இருக்கட்டும்.. ப்ளீஸ்.” என்று முடிக்க,

“அப்போ சுபாஷ்..” என மீண்டும் ஆரம்பிக்க,

“அக்கா ப்ளீஸ்.. நான் பேசுறது சினிமாத்தனமா இருக்கலாம். ஆனா இது தான் நான். என் மனசும் இது தான். என்னால அவரை மறக்க முடியாது. அவரோட காதலையும், நாங்க வாழ்ந்த வாழ்க்கையையும் மறக்க முடியாது. கொஞ்ச நாள்தான் என்றாலும், ஒரு உண்மையான வாழ்க்கையைத்தான் அவர் கூட வாழ்ந்துருக்கேன். அந்த நினைவுகளே எனக்கு போதும். எனக்கு இப்படி இருக்கத்தான் ஆசை.. என்னை இப்படியே விட்டுடுங்க க்கா.. ப்ளீஸ்..” என்று மஞ்சரி கோபமாக பேச,

“அவன் உன்னை நடுத்தெருவுல விட்டுட்டு போனவன் மஞ்சு. அதுவும் எந்த நிலைமையில.. அதெல்லாம் மறந்துட்டியா..?” என விஜயாவும் பேச,

“அவரையும் மறக்கல, அவர் எனக்கு செஞ்ச துரோகத்தையும் மறக்கல. அவருக்கு வேணும்னா என்னோட காதலைத் தூக்கிப் போட்டுட்டு போக முடிஞ்சிருக்கலாம். ஆனா என்னால முடியாது. அவரும் நானும் ஒன்னு இல்ல க்கா. நான் மஞ்சரி.. நான் இப்படித்தான் க்கா. என் வாழ்க்கையும் இப்படித்தான்.. இதை யாரும் மாற்ற நினைக்காதீங்க..” என அழுகையில் ஆரம்பித்து ஆக்ரோஷத்தில் முடிக்க, விஜயாவால் கூட மஞ்சரியை சமாதானம் செய்ய முடியவில்லை.

அந்த வாக்குவாதத்தில் இருந்து வெளியில் வரவே இரண்டு நாட்கள் ஆனது மஞ்சரிக்கு.

விஜயாவும் அதன்பிறகு மஞ்சரியை கட்டாயப்படுத்தவில்லை. ஆகனிடமும் கூறிவிட்டார். ஆகனுக்கும் இது வருத்தம் தான் என்றாலும், மஞ்சரியின் முடிவை மாற்ற எண்ணவில்லை.

அவனுக்கு மஞ்சரியின் இந்த காதல் மீது அத்தனை மதிப்பு உண்டானது.

தன் மாமா எத்தனை பெரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டார் என அவருக்காக வருந்தவும் செய்தான்.

இதோ இப்போது வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டும். உம்மென்று இருக்கும் அத்தையை சமாதானம் செய்யத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

ஆகன் இப்படி தவித்துக் கொண்டிருக்க “கண்ணா…” என மஞ்சரியே பேச்சை ஆரம்பித்தார்.

மஞ்சரியின் அழைப்பில் அவரைப் பார்க்க, “நான் ஆரி கூட சிங்கப்பூர் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி இல்ல, என்னோட முடிவு. எனக்குமே இங்க இருந்து, இந்த பிரச்சினையில இருந்து தள்ளி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. அதனாலத்தான் இந்த முடிவு..” என தயக்கமே இல்லாமல் கூற, விஜயாவிற்கும் ஆகனுக்கும் முகமெல்லாம் மலர்ந்து போனது.

“ஆனா எனக்கு இதுல ஒரு கண்டிஷன் இருக்கு கண்ணா..” என்றதும் இருவரின் முகமும் யோசனைக்கு சென்றது.

“நான் போறதுக்கு முன்னாடி நீயும், அம்முவும் ஒன் வீக் வெளியே போய்ட்டு வாங்க. நீங்க வந்த பிறகு இதைப்பத்தி பேசலாம்..” என்றதும் மீண்டும் இருவரின் முகமும் மலர்ந்தது.

“சரியா சொன்ன மஞ்சு.. நானே இதை உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்.” என்றவர்,

“ஆகன்.. அகிக்கு மாலத்தீவு போகனும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா நாங்க கூப்பிட்டாலும் வந்ததில்ல.. அகிகிட்ட பேசிட்டு அங்க வேணும்னா போயிட்டு வாங்களேன். அவளும் சந்தோசப்படுவா.. இப்போ நடந்த பிரச்சினைல அவளுக்குத்தான் ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகிருக்கும். போயிட்டு வந்தா ரிலீஃபா இருக்குமில்ல..” என ஆகனிடமும் கூற, ஆகனுக்கும் இந்த ஐடியா சரியென்றுதான் பட்டது.

இவர்களுக்குப் பின்னே ஓடி ஓடி தங்கள் வாழ்க்கையை வாழ முடியாமல் போகுமோ என சில நாட்களாக ஒரு பயம் முளைத்தது உண்மை.

அந்த பயத்தை விரட்டியடிக்க ஒரு வழி இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தப்பு என தோன்ற, அவனும் இந்த திட்டத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

***

இங்கு மைதிலி வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. 

அன்று ஆகன் கையோடு மைதிலி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். அப்போது சென்று அறைக்குள் அடைந்தவர் தான் யாரிடமும் பேசவில்லை, ரவியின் முகத்தில் கூட விழிக்கவில்லை, பேச வந்த ரஞ்சனிடம் முன் பேச மறுத்தார்.

இதே ரவிக்காக தான் எந்த அளவிற்கு இறங்கிப் போயிருந்தோம் என்று நினைக்கும் போது இதயத்தில் ஒரு பெரும் வலி வந்து போனது மைதிலிக்கு.

இந்த திருமணம் வேண்டாம் என்று தன்னுடைய தாய் கூறும்போது, அதிலும் அவர் ‘பத்து வருஷம் காதலிச்சு, கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தி, புள்ளையை பெத்தவளையே விட்டுட்டு வந்திருக்கான். நாளைக்கு உன்னையும் விட்டுட்டு போயிட்டா, என்ன செய்வ?’ என்ற காரணத்தோடு கூறும் போது கேட்டிருக்க வேண்டுமோ என்று வேறு நினைக்கத் தோன்றியது.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? பச்சோந்தி போல் நேரத்துக்கு தகுந்தார் போல மாறிக்கொண்டிருக்கும், ரவியோடு வாழத்தான் வேண்டுமா? என்ற குழப்பம் வேறு அவரை பாடாய்படுத்தியது.

யாருக்காக தன் மொத்த சொத்தையும் தூக்கிக் கொடுத்தாரோ? யாருக்காக தன் வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு வந்தாரோ? இன்று அவரே தன்னை அவமதித்தது, தூக்கி எறிந்தது என எல்லாவற்றையும் யோசிக்கும் போது, மனதுக்குள் ஒரு பெரும்பயம் வந்து போனது.

அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள், இனி தன் நிலைமை என்ன? அனாதையாகி விடுவோமோ? என்று யோசிக்கும் போதே, இதயம் வேகவேகமாக துடிக்க தொடங்கியது.

இதயத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுத்திக் கொண்டார். முகமெல்லாம் வியர்த்து போக, மூச்சு மேலும் கீழும் தாறுமாறாக செல்ல, வேகமாக தன் ட்ராவில் இருந்த மாத்திரையை எடுத்து வாயில் போட்டு முழுங்கிக் கொண்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து தன்னை சமன் செய்ய முயல, அவரால் முடியாமல் போக அப்படியே மயங்கி சரிந்திருந்தார் மைதிலி.

**

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொண்ணை வீட்டுல வச்சிருப்ப.? உன் ரெண்டாவது பொண்ணுக்கு அழகான பையன் பொறந்துருக்கான். அவனை பார்த்தும் கூட இன்னும் உனக்கு மனசு இறங்கலயா? அந்த பொண்ணு பாவம்யா.. நீன் சொன்னாதான் கட்டுவேனு பிடிவாதமா இருக்கு. தாமு வீட்டுல வசதி இல்லதான்.. ஆனா வேற என்ன குறை சொல்ல முடியும் சொல்லு. அரசாங்க வேலையில இருக்கான். கவிதா உன் பொண்ணை தங்கமா பார்த்துக்கும். அது நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டாம்.. உன் ரெண்டாவது பொண்ணு வாழ்ந்த வாழ்க்கையிலயே புரிஞ்சிருக்கும். இன்னும் அதிகமா யோசிக்காம காலாகாலத்துல அந்த புள்ள வாழ்க்கையைப் பத்தி யோசிச்சு முடிவெடு..” என மாலினியின் அப்பாவிடம், அவரின் உறவில் ஒருவர் பேசிக் கொண்டிருக்க, சாப்பாட்டுக் கூடையுடன் உள்ளே வந்து கொண்டிருந்தனர் கவிதாவும் நவீனும்.

இவரைப் பார்த்ததும் கவிதா பளிச்சென சிரிக்க, நவீனும் சம்பிரதாயமாக சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டான்.

“வாங்க ண்ணா.. எல்லாருக்கும் சேர்த்து தான் சாப்பாடு கொண்டு வந்துருக்கேன். நீங்க சாப்பிட்டு அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. நான் ராகினி கூட இருக்கேன். வீட்டுல மாலினி தனியா இருக்கும்” என பேசிக்கொண்டே முன்னே நடக்க, அவரின் பெருந்தன்மையில் மாலினியின் தந்தைக்கு தான் பதில் பேச வரவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராகினிக்கு ஆண்குழந்தை பிறந்திருந்தது. அப்போது அவள் தாய் வீட்டில் இருக்க, அவர்களே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, குமரனுக்கு அழைத்து சொல்ல, அனைவரும் வந்துவிட்டிருந்தனர்.

அப்போதிருந்தே அனைத்தும் அவர்கள் தான் பார்க்கிறார்கள். பேருக்குதான் அங்கு பெற்றவர்கள் என இவர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் கவிதாவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில், ராகினியின் தந்தைக்கும் சிறு நிம்மதி உண்டானது.

எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார், அவருக்கு இந்த நிகழ்வு எத்தனை மகிழ்வை கொடுக்குமென்று அவருக்குத் தெரியாதா?

முன்னமே அவர்களைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் தான். இடையில் ரஞ்சனியின் பேச்சைக் கேட்டு பிரச்சினையை வளர்த்துக் கொண்டார். 

இப்போது அதெல்லாம் சின்னபிள்ளைத்தனமாக தோன்ற, கூடிய விரைவில் மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று முடிவே செய்துவிட்டார்.

You may also like

1 comment

M. Sarathi Rio May 17, 2026 - 9:34 am

Live, Let be Live.

😀😀😀

CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured