Home Love - Family - Romanceஓடங்கள் – 05

5

சஷ்டியுடன் அறைக்குள் முடங்கியிருந்தவளுக்கு நடப்பது எதையும் நம்பவே முடியவில்லை. அறைக்கு வெளியே அவர்களது பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. தீவிரமாய் எதையோ வாதிக்கிறார்கள் என்பதும், அது தங்களைப் பற்றித்தான் என்பதும் புரிகிறது. ஆனால் ஏன்? என்னைத் தான் வேண்டாம் என்று சொன்னார்களே? இப்போது என்ன புதிதாய் வந்திருக்கிறார்கள் என்று எண்ண, அவள் மனசாட்சியோ நீ இருக்குமிடம் மட்டும் தெரிந்திருந்தால் முன்னமே அவர்கள் வந்திருப்பார்கள். நீதான் யாரையும் உன்னை நெருங்கவிடவில்லையே என்று கூற, தலை தான் வலித்தது. இவர்களுக்கு என்னதான் வேண்டுமாம் என எரிச்சலாய் வந்தது.

குழந்தையைப் பார்த்தாள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனை நன்றாகப் படுக்க வைத்து ரஜாயை இழுத்து மூடியவள், தன்னையே ஒருமுறை பார்க்க முரட்டு ஜீன்சும் ஒரு குர்தியும், அதற்கு மேல் ஒரு ஓவர் கோட்டும் என மார்டனாய் தான் இருந்தாள். சிவகுருவை மனதில் வைத்து, அவர்முன் மரியாதையாய் நடக்க வேண்டும் என்பதால், ஒரு அவசரக் குளியலைப் போட்டு சுடிதாருக்கு மாறியிருந்தாள்.

நீண்ட, அடர்ந்த தலைமுடியை குழந்தை பிறக்கும் சமயம் பாப் கட்டிங்காக மாற்றியிருந்தாள். யாரையும் எதிர்பார்க்க வேண்டாம் என்ற எண்ணம், அதோடு தலைக்கு குளிக்கும் சமயம் குழந்தைக்கும் சளி பிடிக்கும் என்பதால் வெட்டியிருந்தாள். இப்போது வேலை காரணமாக, பார்லர் சென்று வருவதற்கு நேரமில்லாததால், முடியை வெட்டாமல் அப்படியே விட்டிருந்தாள். அது அவளுக்கு முதுகுக்கு கீழே வந்திருந்தது. அதை அப்படியே ஒரு போனிடெயிலில் அடக்கியவள், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அது நிர்மலமாய் இருந்தது. பெரும் யோசனைக்குப் பிறகு, சிறு கருப்பு பொட்டை நெத்தியில் வைத்தவள் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.

வெளியே செல்ல, அவர்களை எல்லாம் எதிர்நோக்க பெரும் தயக்கம் வந்தது. மருத்துவமனையில் சஷ்டியைத் தேடி வர, அங்கே சிவகுரு தன் பேரனை மடியில் வைத்துக் கொண்டு, செல்வினிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தார். சாருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இதெல்லாம் நடந்தது என்ற பெரிய கேள்வி, அகமும் புறமும் பெரும் குழப்பமாய் அவளை சூழ, அதற்குள் தாயைப் பார்த்த சஷ்டி, அவளிடம் வந்து காலைச் சுற்றியிருந்தான்.

மகனைத் தூக்கியவள் அனிச்சையாய் அவர்களிடம் செல்ல, சஷ்டியையே பார்த்திருந்தவர்கள் அவன் சாருவிடம் வந்ததைப் பார்க்க, இப்போது சாருவையே பார்த்திருந்தார்கள். அவள் நேராக சிவகுருவிடம் சென்று, “வாங்க அங்கிள், எப்படி இருக்கீங்க?” எனவும்,

“உங்களை பார்த்துட்டேன் இல்ல, இனி நல்லா இருப்பேன். ரொம்ப சந்தோசம் சாரும்மா, நீ என்கிட்ட பேசிட்ட. பேச மாட்டனு நினைச்சேன். என் மேலயும் உனக்கு கோபம் இருக்கும், உன் கோபமும் நியாயம் தான். என்னை மன்னிச்சுருடா தங்கம்…” என தழுதழுக்கப் பேச,

“ப்ளீஸ் அங்கிள், நீங்க இப்படியெல்லாம் பேசாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. அதோட, உங்க மேல என்ன தப்பு இருக்கு, நீங்க மன்னிப்பு கேட்க? பழசை எல்லாம் விட்டுடுங்க, நான் அதையெல்லாம் மறந்துட்டேன்.” என்று சிவகுருவை சமாதானப்படுத்த,

“சார் ப்ளீஸ், அதுதான் அவ அவ்வளவு சொல்றாளே, விடுங்க. இனி நடக்குறது எல்லாமே நல்லாதாவே நடக்கும். மனசை குழப்பிக்காதீங்க.” என செல்வின், அவரை ஆறுதல்படுத்தி சாருவைப் பார்த்து, “ருக்மாவை வீட்டுல விட்டுட்டு வந்துருக்கேன், எல்லாருக்கும் சமைக்கணும் இல்லையா? புகழ் வந்துடுவானா, இல்லை அவன் வர லேட்டாகுமா? லேட்டாகும்னா நீயும் சாரும் முன்னாடி போங்க, நான் அவனை அழைச்சுட்டு வரேன்.” அவள் பேச இடம் கொடுக்காமல் செல்வினே பேசி முடிக்க, சாருவின் முகம் குழப்பத்தைக் காட்டியது.

அவளது குழம்பிய முகத்தை கவனித்த சிவகுரு, “செல்வின் நாம கிளம்புவோம்.” அவனுக்கு கூறியவர் சாருவிடம், “என்னை வீட்டுக்கு அழைக்க மாட்டியா சாரும்மா?” என்றார்.

“அங்கிள், வாங்க போகலாம். இப்போ தான் இப்படியெல்லாம் பேசாதீங்க சொன்னேன். மறுபடியும் சொல்றேன், உங்க மேல எனக்கு கோபமோ, வருத்தமோ கொஞ்சம் கூட கிடையாது. இப்படி பேசுறது தான் கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் வாங்க…” என சஷ்டியோடு முன்னே நடக்க,

சிவகுரு, செல்வினிடம் சைகையில் எதையோ கூற, அவனும் சரியென்பது போல் தலையாட்டினான். சாரு கார் சாவியை செல்வினிடம் கொடுத்துவிட்டு பின்பக்கம் ஏறப்போக அவனோ, “டயர்டா இருக்காடா?” என்றான் சம்பந்தமே இல்லாமல். அவன் ஏன் கேட்கிறான் என்று புரியவில்லை என்றாலும், ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டி விட, “அப்போ நீயே டிரைவ் பண்ணு, எனக்கு சின்ன வேலை முடிச்சுக்குறேன்.” என, சரியென்று காரை எடுத்தாள்.

ஆண்கள் இருவரும் பின்பக்கம் ஏற, சஷ்டியை சிவகுரு வாங்கிக் கொண்டார். செல்வின் தன் மொபைலில் சாருவின் அட்ரசை மெஸேஜ் செய்துவிட்டு சிவகுருவைப் பார்த்தான். அவரும் சிறு தலையாட்டல் கொடுத்துவிட்டு பேரனிடம் லயித்து விட்டார். கார் கிளம்பிய சில நிமிடங்களிலேயே, சாருவின் போன் அடித்தது. காரை ஓரம் கட்டியவள் யாரெனப் பார்க்க, ‘டாக்டர் ஜித்’ என வரவும், இன்ஃபார்ம் பண்ணாம வந்துட்டோமே, அதுக்குத் தான் கால் பண்றார் போல என்று எண்ணியபடியே,

“ஹலோ டாக்டர்!”

“டாக்டர்… டாக்டர்… என்னாச்சு? லைன் போகுதே… ஏன் பேச மாட்டேங்குறாங்க?” என்று போனை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் காதுக்கு கொடுத்தவள், “ஹலோ டாக்டர்!” எனவும்,

“நான் புகழ் பேசுறேன்…” என்றதும், இவள் அதிர்ச்சியில் போனை கீழே விட,

இப்போது அவன், “ஹலோ… ஹலோ…” எனவும்,

இங்கு, “என்னாச்சுடா, போன் தவறிடுச்சா? எடுத்துப் பேசு.” என செல்வின் கூற, மற்றவர்கள் முன் எதையும் காட்டாமல் மீண்டும் போனை காதுக்கு கொடுத்து, “சொல்லுங்க டாக்டர்” என்றதும்,

“ம்ம்… அப்பா உன்கூட இருக்காங்கனு நினைக்குறேன், அவர்கிட்ட பேசணும், அவர் போன் ரீச்சாகல, கொஞ்சம் கொடு.”

“கால் பண்ணாதான் ரீச்சாகும், பண்ணாமலே ரீச்சாகலனு ஏன் சொல்றீங்க?” பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பியவள் சிவகுருவிடம் திரும்பி, “அங்கிள் உங்களுக்குத் தான் போன்.” என்றுவிட்டு வண்டியை எடுத்தாள்.

இரண்டு நிமிடங்கள் பேசியவர், போனை அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பேரனிடம் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார். அப்போது செல்வின், “சார் புகழ் கூட பேசுறீங்கள, எப்போ இருந்து?” என்றான்.

அவனை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவர், “இப்போ ஒன் மன்த்தா தான் பேசுறான். வசந்திக்கு முடியாம போனதுல இருந்து பேசுறான். அவனும் தன்னோட ரிசர்ச் எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டான். அவனோட ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்.” என்றார்.

“எனக்குத் தெரியவே இல்லை, நீங்க சொல்லவே இல்ல.” மிகுந்த குற்ற உணர்வுடன் செல்வின் சொல்ல,

“நான் உன்னை முழுசா நம்பினேன், நீ அதுக்கு உண்மையா இல்லை. எனக்கு உன்மேல நிறைய வருத்தம் இருக்கு. ஆனா கோபம் இல்லை. நீ செய்த எல்லாம் எங்களுக்காக தான்னு நினைக்கும் போது, உன்னை நினைச்சு பெருமையா இருக்கு. நீ இதை என்கிட்ட சொல்லிருக்கலாம், சொல்லல. இப்போவும் புகழ் உன்கிட்ட எதையும் கேட்க வேணாம் தான் சொன்னான். அவன் சொல்வது சரிதான், சுயநலமா செய்யல, ஏதோ கட்டாயத்துல தான் செய்திருப்பான். இதுல முழுசா பாதிக்கப்பட்டது புகழ்தான். அவன் உன்னை எதுவும் சொல்லாத போது, நான் என்ன சொல்ல? இனிமேலாவது இப்படி செய்யாதே.” என்றார் மிகுந்த வருத்தத்துடன் சிவகுரு.

ஒரு மகனைப் போல் நடத்தியவரிடம், தான் நடந்து கொண்ட விதம் தவறுதான். ஆனால் அதே நேரம், சாருவின் பக்கமும் யோசிக்க வேண்டுமே. புகழைத் தாங்கிக் கொள்ள அவனைப் பெற்றவர்கள் இருந்தார்கள். ஆனால் பணக்கார அனாதையான சாருவிற்கு அப்போது யாருமே இல்லையே. நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. நடக்க இருப்பதை மாற்ற முயற்சிக்கலாம் என்று எண்ணியவன், வேறெதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான், குற்றம் செய்த உணர்வில்.

பின்னால் இருந்த இருவரின் பேச்சையும் கேட்டவள், ‘என்ன, மாமா அவனோடு பேசுவதில்லையா? ஆனால் ஏன்? புகழுக்கு நாங்கள் இருக்கும் இடம் முன்னமே தெரிந்திருக்க வேண்டும், அது நிச்சயம். இல்லையென்றால் சரியாக இந்த தருணத்தை அவன் பயன்படுத்தியிருக்க முடியாது. முன்னமே என்றால் எப்போ? எப்போ? ஒருவேளை நாங்கள் இங்கு வந்த தருணத்திலேவா? இல்லை, அப்படியென்றால் இத்தனை நாட்கள் விட்டு வைத்திருக்க மாட்டான். வேறு எப்போது என்று பல யோசனையில் இருந்தவள், சிவகுரு பேசியதன் சாரம்சம் புரிய, செல்வின் குற்ற உணர்வினைப் பார்த்தவள், “அங்கிள் அண்ணாவை கோவிச்சுக்க வேண்டாம் ப்ளீஸ். இவர் செய்த எல்லாத்துக்கும் நான்தான் காரணம். நான்தான் என்னைப் பத்தியோ சஷ்டி பத்தியோ யாருக்கும் சொல்லக்கூடாது சொன்னேன். சொன்னா உங்களுக்கும் தெரியாம வேற எங்கயாச்சும் போயிடுவேன் சொன்னேன்.” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“வேண்டாம் சாரும்மா, பழசை பேசி யாரும் கஷ்டப்பட வேண்டாம், விட்டுடுவோம்.”

“இல்ல சார், அன்னைக்கு சாரு இடத்துல யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்துருப்பாங்க. அவள் செயல் தப்பு கிடையாது. ஆனால் எதையும் முழுசா தெரிஞ்சுக்கல, அதுதான் அவளோட தப்பு. இப்பவும் அங்க நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது. அவளோட இந்தக் கோபம் தப்பு. அவளுக்கும் இந்தப் பிரிவு சில உண்மைகளை உணர்த்தும்னு நினைச்சேன். அவளோட கோபமும் குறையும்னு தோனுச்சு. அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் எடுக்கவிடாம அமைதிப்படுத்த, அவளோட வழிக்கே நானும் போனேன். அவ கேட்டதை நான் செய்தேன். அவளுக்கு ஃபுல் சப்போர்டிவா நான் இருந்துருக்கேன், இனியும் இருப்பேன். ஒரு அண்ணனா என் கடமையை செய்வேன். அவளோட விருப்பம் போல ஒரு வாழ்க்கையை நான் கொடுப்பேன் நிச்சயமா…!”

“செல்வின் உன்னை இங்க யாரும் தப்பு சொல்லல. ஒரு அண்ணனா உன் தங்கை மேல உனக்கு இருக்குற பாசமும் உரிமையும் உண்மையானது. அதை யாரும் குறை சொல்லல. நீ டென்சன் ஆகாத விடு, இனி என்ன செய்றது என்பதை மட்டும் பார்க்கலாம். சரியா?

“கண்டிப்பா சார், இந்த மூணு வருஷமா, இவ சொன்னதை நான் கேட்டேன். இனி நான் சொல்றதை அவ கேட்பா, கேட்கணும். வேற வழி இல்ல. இவளுக்கு நான் வைக்குறது ஒரே கண்டிசன் தான். ஒன்னு இவ புகழோட வாழணும். இல்ல, அவனை மறந்துட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செய்யணும். இதுல இவளுக்கு ஆப்சனே நான் கொடுக்கல. இல்ல, நீங்க சொல்றது எல்லாம் என்னால கேட்க முடியாது, என் இஷ்டமாத்தான் செய்வேன்னு நினைச்சா, என்னை சுத்தமா மறந்துட வேண்டியது தான். நான் இனி இவளோட எந்த பேச்சும் வச்சுக்க மாட்டேன், இதுதான் என் முடிவு.” என்றான் செல்வின் ஸ்திரமாக.

பேச்சின் முடிவில் கார் சட்டென்று குலுங்கி நிற்க, மற்ற இருவருக்கும் பயம் வந்துவிட்டது. நாம் இப்போது அதைப் பத்தியே பேசியிருக்கக் கூடாதோ என்று முன்னாடி பார்க்க,

“வீடு வந்துடுச்சு அங்கிள், இறங்குங்க.” என்றபடியே தானும் இறங்கியவள், சிவகுருவின் மடியில் உறங்கிய மகனை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சாரு.

அவர்கள் பேசியதைக் கேட்டும் சாரு ஒன்னும் சொல்லாமல் சென்றதைக் கண்டவன், உடனே எதையும் திணிக்க வேண்டாம். அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும் என்று எண்ணியவன், “வாங்க சார்.” என்று சிவகுருவை அழைக்க, அவரது பார்வை அந்த வீட்டின் மேலேயே இருந்தது.

அவன் ஒருமுறை அழைத்தும், அவர் பார்வையைத் திருப்பாமல் இருக்க அவரைத் தொட்டு, “சார்!” என்றதும், “செல்வின் அது நம்ம கெஸ்ட் ஹவுஸ் தானே, இவ்வளவு நாளா சாரு இங்கேயா இருந்தா?” நம்பவே முடியாத ஆச்சர்யம், அவரது குரலிலும் பார்வையிலும்.

“உங்களோட கெஸ்ட் ஹவுஸ் தான் சார். சாருவை முழுக்க செக்யூர் பண்ணணும் நினைச்சேன். அவ ஃப்ரண்ட் இங்கே இருக்கிறதா முன்னாடி ஒரு டைம் சொல்லிருந்தா. சோ, அதையே அவளுக்கும் ஞாபகப்படுத்தி இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன். அவளோட சாய்ஸை சூஸ் பண்ணிருந்தா, இந்தியா மேப்லயே இல்லாத ஒரு குக்கிராமமா தான் இருந்திருக்கும். அவளை வேற எதையும் யோசிக்க விடாம, நைனிடாலை சூஸ் பண்ண வச்சுட்டேன்.”

“உன்னை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு செல்வின். நீண்ட ஆயுளோடு குடும்பம் குழந்தைனு சந்தோஷமா இருக்கணும். நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருந்தாங்க என்றால், அப்போ புகழுக்கு இவங்களை பத்தி முன்னமே தெரிஞ்சுருக்கணும், சரியா?”

“எஸ் சார், மே பி…” என்றபடியே இருவரும் உள்ளே சென்றனர்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 20, 2026 - 2:15 pm

அடோப் பா வி..! அப்படின்னா புகழுக்கு சாரு நைனிடால்ல இருக்கிறது, அதுவும் அவனோட கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கிறது, ஒரு குழந்தையோட இருக்கிறது எல்லாமே தெரிஞ்சிருக்கு..
அப்படித்தானே…?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured