பகுதி – 17.
அந்த திருமண மண்டபமே களை கட்டி இருந்தது. காலையில் பிரம்மா முகூர்த்தத்தில் திருமணம் என்பதால், நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. விடியற்காலையில் மூன்று மணிக்கு எல்லாம் அனைவருமே எழுந்து விட்டார்கள்.
திருமண மண்டபமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. மண்டபத்துக்கு அருகில்தான் வீடு என்பதால், கார்முகில் இரவு வீட்டிலேயே தங்கிவிட்டான். சுமித்ராவின் வீட்டில் இருந்து மண்டபம் கொஞ்சம் தூரம் என்பதால் அவள் மண்டபத்தில்தான் வந்து தங்கினாள்.
முந்தின தினம் இரவு நலங்கு, சடங்குகள் என இருந்தாலும், அதையெல்லாம் சீக்கிரமே முடித்துவிட்டிருந்தார்கள். உறவினர்களுக்கு என அங்கேயே மேல் தளங்களில் அறைகள் இருக்க, அங்கே அவர்கள் தங்கவைக்கப் பட்டிருந்தார்கள்.
சுமித்ராவின் சொந்தங்கள் எல்லாம் கோவையில் இருந்து வருகிறார்கள் என்பதால், அவர்களுக்கு என ஹோட்டல்களிலும் அறை ஏற்பாடு செய்து இருந்தார்கள். இரவில் அனைத்து சடங்குகளும் முடிய, கார்முகில் அவளிடம் சொல்லிக்கொண்டு போக வந்தான்.
அவனுக்கு ஏனோ அங்கே இருந்து செல்லவே கொஞ்சமும் விருப்பம் இருக்கவில்லை. அவனது பார்வையும், உடல்மொழியும் அதை அவளிடம் அப்பட்டமாகச் சொல்ல, அவளுக்குமே உள்ளுக்குள் அத்தனை தவிப்பு.
‘ஒருவருக்கு இது வேண்டும்’ என அவளுக்குத் தெரிந்துவிட்டால், அதைக் கொடுக்கும் வரைக்கும் அவள் ஓய மாட்டாள். அவர்களுக்குத் தேவையானதை கொடுத்த பிறகுதான் அவளால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியும்.
மற்றவர்களுக்கே அப்படி என்றால், தன்னவன் என வருகையில் அவளால் எப்படி நிலையாக இருக்க முடியும்? அதுவும் அவள் கரத்தை மென்மையாக பற்றிக் கொண்டு அவன் நின்ற விதம், அவளுக்குள் என்னவோ செய்தது.
‘இது உண்மை தானே? இது நடக்கிறது தானே?’ அவன் விழிகள் அவளிடம் மெளனமாக கேள்வி கேட்க, அதை மிகச் சரியாக அவள் படித்தாள்.
“இன்னும் ஒரு நாள்தான் நீங்க பேச்சிலர்… அதுக்குப் பிறகு இந்த சுமியோட தான் நீங்க வாழ்ந்தாகணும். அதுக்குத் தயாரா இருங்க” அவனைப் புரிந்தவளாக அவள் சொல்ல, அவன் இதயம் அப்போழுதுமே நிலையாக துடிக்கவில்லை.
‘என்னோடவே வந்துடேன்…’ அவன் பார்வை கெஞ்ச, இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி நின்றாள். சுற்றிலும் உறவுகள், பல பார்வைகள், எத்தனையோ விதமான விமர்சனங்கள் என அவர்களைச் சுற்றி எழுந்து கொண்டுதான் இருந்தது.
அதை இருவருமே கண்டுகொள்ளும் நிலையில் இருக்கவில்லை. சட்டென அவர்களைப் பார்க்கையில், அவர்களுக்குள் இருக்கும் அந்த வித்தியாசம் நிச்சயம் பளிச்சென தெரியவே செய்தது. ஆனால் இருவரின் கண்களில் இருந்த நேசம், பாசம்… அதை பெற்றவர்களால் மட்டுமே உணர முடிந்தது.
‘இவ எப்படி இவனைக் கட்டிக்க ஒத்துகிட்டா?”.
“புள்ளையை வளர்த்தது இப்படி பலி கொடுக்கவா? இல்லன்னா பழி வாங்கவா?” அனிதாவுமே அவர் சொந்தங்களின் வாய்க்கு அவலானார் என்பதுதான் உண்மை. பெற்றவர்கள் இருவருமே தங்கள் மகளை ஒரு நல்லவன் கரத்தில் ஒப்படைக்கவே நினைத்தார்கள்.
அவளது அருமை தெரிந்து, அவள் மனம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே நினைப்பாக இருந்தது. அப்படி இருக்கையில் இந்த விமர்சனங்கள் மனதை வருத்தினாலும், மகளது முகத்தில் தெரியும் சந்தோஷத்துக்காக அதைப் பொறுத்துக் கொண்டார்.
“நான் காலையில் வர்றேன்…” சூழ்நிலை தடுக்க, அவன் அங்கிருந்து சென்றாக வேண்டிய கட்டாயம். எவ்வளவு நேரம்தான் மணமகளது அறையின் வாசலுக்கு அருகே அப்படியே நிற்க முடியும்?
“நிம்மதியா தூங்கி எழுந்து வாங்க… உங்களுக்காக நான் காத்துட்டு இருப்பேன்” அவள் சொல்லி அனுப்ப, அப்படியுமே அவன் அரை மனதாகத்தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். அதையெல்லாம் யோசித்தவாறே அவள் இரவைக் கடத்தி இருக்க, தாமதமாகத்தான் உறங்கினாள்.
காலையில் இரண்டரை மணிக்கே கண் விழித்த அனிதா, முதல் வேலையாக சுபிதாவைத்தான் எழுப்பினார். “சுபி, எழுந்து சுமியை எழுப்பி விடு… அப்படியே அந்த மேக்கப் போடற பொண்ணுங்களையும் போய் பாரு…” அனிதா சொல்ல, சுபிதா உடனே எழுந்துவிட்டாள்.
“சுமி, எழுந்துக்கோ…” சுபிதாவின் ஒற்றை அழைப்புக்கே அவளுக்கு உறக்கம் கலைந்துவிட்டது. சோர்ந்த விழிகளோடு கண் திறந்தாள் சுமித்ரா. கண்கள் இரண்டும் சிவந்து போயிருக்க, கண்கள் உறக்கத்துக்கு கெஞ்சினாலும் மனம் விழித்துக் கொண்டது.
வேகமாக தன் அலைபேசியை எடுத்தவள், கார்முகிலுக்கு “Good morning” என குறுந்தகவலை அனுப்ப, அடுத்த நொடியே அவன் அதைப் பார்த்திருந்தான்.
‘என் மெஸ்சேஜ்ஜுக்காக காத்துட்டே இருந்தாரோ?’ அவள் நினைக்க, அதுதான் உண்மையும் கூட. அவனும் அவளுக்கு பதில் தகவல் அனுப்ப, “நான் கிளம்ப போறேன், நேர்ல வாங்க பார்க்கலாம். இனிய திருமணநாள் வாழ்த்துகள் புருஷா” என அனுப்ப, அவன் மனமோ வானுக்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருந்தது.
அதையே அவன் ஒரு குதிக்கும் எமோஜியாக அனுப்பி வைக்க, அதைப் பார்த்தவளின் இதழ்களிலும் ஒரு மென்னகை பூத்தது. அதற்கு மேலே அவளுக்கு நிற்க நேரம் என்பது இருக்கவில்லை. நான்கரை டூ ஐந்தரைக்குள் முகூர்த்தம். அப்படி இருக்கையில் எங்கே நேரம்?
அவள் மண்டபத்தில் கிளம்ப, தன் அலைபேசியோடு அமர்ந்து இருந்தவனைக் கலைத்தான் அதியன். “என்னடா மாப்ள, நைட் முழுக்க அந்த ஃபோனோடதான் குடும்பம் நடத்திட்டு இருந்த போல?” அவன் சின்னச் சிரிப்பில் கேட்க, கார்முகில் முகத்தில் அத்தனை பூரிப்பு.
அதைப் பார்த்த அதியன், “என்ன முகிலா, ரொம்ப சந்தோஷமா இருக்கற போல? உன்னை நான் இப்படி பார்த்ததே இல்லைடா” அவன் சொல்ல, கார்முகிலுக்கு நிஜமாகவே உள்ளம் பூரித்துக் கிடந்தது.
“அதியா, நிஜமாவே அவ இதையெல்லாம் பிரேன்க்ன்னு சொல்லிடுவாளோன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா? ஆனா இப்போ… அவளே எனக்கு மனைவியா வரப் போறா. என் அதிஷ்டத்தை என்னாலேயே நம்ப முடியலைடா” அவன் குதூகலிக்க, அவனது அந்த சந்தோஷம் அதியனையும் தொற்றிக் கொண்டது.
“என்னடா அதிஷ்டம், அது இதுன்னு உளறிகிட்டு இருக்க? உன் நல்ல மனசுக்கு கடவுள் எல்லாத்தையும் நல்லதாவே கொடுப்பார் டா. எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது, இப்போ பார்… அதே மாதிரி உனக்கு நடக்கும்போது, உன்னை விட எனக்கு ரொம்ப சந்தோஷம்டா.
“சில பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் அழகா இருந்துட்டாலே அவ்வளவு அலட்டல் போடுவாங்க. ஆனா சுமித்ரா அவங்க அப்படி இல்லைடா. என்கிட்டே கூட அவங்க நல்லா பேசறாங்கடா” அதியன் நம்ப முடியாமல் சொன்னான்.
“ஏன்டா? உனக்கென்ன குறை? எதுக்கு இப்படி பேசற?” கார்முகில் அவனைக் கடிந்தான்.
“நீ என்ன வேணா சொல்லு, நான் ஜஸ்ட் ஒரு மளிகைக் கடைக்காரன் தான். உனக்கு நான் ஃப்ரண்டா போயிட்டேன், அதுக்காக நீ என்கூட பேசலாம், பழகலாம். ஆனா அவங்களுக்கு அந்த அவசியமே கிடையாதுடா. அப்படியும் அவங்க என்கிட்டே ‘அண்ணா’ன்னு கூப்ட்டு பேசும்போது, அன்னைக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சுடா” அவன் நெகிழ்ந்து போனான்.
“அவ அப்படித்தான்டா…” கார்முகிலின் குரலில் அத்தனை பெருமிதம்.
“நீங்க ரெண்டுபேரும் ரொம்ப நல்லா, சந்தோஷமா இருக்கணும்டா. முகில்… இனிமேல் உன் வாழ்க்கை முழுக்கவே வசந்தம் தான்” அவன் நண்பனை கட்டிக் கொள்ள, கார்முகிலின் மனம் முழுக்க வண்ணக் கனவுகள் தான்.
எப்பொழுது அவளைக் காண்போம்? எப்பொழுது அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்வோம் என அவன் மனமும், தேகமும் பரபரத்தது.
கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தவன், ‘டேய் கருப்பா, இவ்வளவு லக்கி பெர்சனாடா நீ? என்னாலேயே நம்ப முடியலைடா’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
‘இந்த முகத்தில் அப்படி என்ன இருக்குன்னு அவளுக்குப் பிடிச்சிருக்கு?’ தன் மனதிடமே கேட்டான்.
‘உனக்கென்னடா குறை, கொஞ்சமே கொஞ்சம் நிறம் குறைவு அவ்வளவுதானே. மற்றபடி நீ லட்சணமானவன் டா…’ அவன் மனம் பரிந்துகொண்டு வர, அப்படியும் தன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டான்.
‘நீ என்னவோ சொல்ற… நானும் அதை நம்பறேன்’ அவன் மனதிடம் சொல்ல,
‘நம்புடா… நம்பிக்கைதான் வாழ்க்கை’ மனம் அவனுக்குப் பாடம் சொன்னது.
‘ஆனாலும் அவளால் எப்படி என்னை நேசிக்க முடியும்?’ அவனுக்குள் அந்த ஒரு வினா மட்டும் வண்டாக குடைந்துகொண்டே இருந்தது.
“முகி… நேரமாகுதுடா… நீயென்ன குளிக்க கூட செய்யாமல், உன் அழகை கண்ணாடியில் ரசிக்க ஆரம்பிச்சுட்ட?” அதியன் அவனைக் கலைக்க, அவனும் கலைந்தான்.
“அதியா… நிஜமாகவே இது நடக்குதாடா?” ஒரு வேளை இவையெல்லாம் கனவு என யாராவது சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவனுக்கு.
“முகிலா… தாலி கட்டப் போற நேரத்தில் உனக்கு சந்தேகமா?” அவனைப் போலியாக முறைத்தான்.
“இருந்தாலும் என் கலருக்கு அவ கொஞ்சம் அதிகம்டா” கார்முகில் மனதே கேட்காமல் சொன்னான். உள்ளுக்குள் மனமோ அவளை இனிமேல் விடவே முடியாது என கதறிக் கொண்டிருக்க, அவளோடு தான் காணும் வண்ணக் கனவுகள் வேறு இம்சித்தது.
“எங்கே அந்த தலையணையை பார்த்துட்டு சொல்லு” அதியன் சொல்ல, ஒரு மாதிரி அதிர்ந்து விழித்தான்.
“அதியா…” அவன் தயங்கி அழைக்க,
“அந்த தலையணை உன் கையை விட்டு நழுவிடக் கூடாதேன்னு நான் பயந்துட்டே இருந்தேன்டா… போடா… போடா… போய் குளிக்கப் போ… டைம் ஆகுது பார்…” அவன் சொல்ல, நண்பனின் முகம் பார்க்க முடியாமல் அங்கிருந்து ஓடியே போனான்.
பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். என்றைக்கு சுமித்ரா அவனை கட்டி அணைத்தாளோ அன்றுமுதல் அந்த தலையணையை அணைக்கும் பொழுதெல்லாம் அவனுக்கு அவள் நினைவுதான்.
அந்த தலையணையை அவளாக நினைத்து தானே அணைத்துக் கொண்டுள்ளான். தன் நினைவில் மூழ்க விடாமல் நேரமாகவே, வேகமாக குளித்து கிளம்பி வெளியே வந்தான்.
கார்முகில் வெளியே வர, அதியனும் குளித்து கிளம்பவே, “டேய் முகிலா, நீ முகத்துக்கு யூஸ் பண்ற சீரம் கொஞ்சம் ஒர்க் ஆகுது போல. நீ கலராயிட்டன்னு சொல்ல வரலை, ஆனால் ஸ்கின்ல கொஞ்சம் சேன்ஜ் தெரியுது” அதியன் சொல்ல, கார்முகில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான்.
“எனக்கென்னவோ ஒரு வித்தியாசமும் தெரியலை. யானைக்கு க்ரீம் போட்டா அது வெள்ளை ஆயிடும்னு நீ சொல்ற, அதை நான் எப்படி நம்ப” என்றவன் கிளம்பத் துவங்கினான். பட்டு வேஷ்டி, சட்டை அவன் நிறத்துக்கு அப்படி ஒரு பொருத்தமாக எடுப்பாக இருந்தது.
“முகிலா ரொம்ப அழகா இருக்கடா” அதியன் சொல்ல, கார்முகில் கடகடவென சிரித்துவிட்டான்.
“காமெடி பண்ணது போதும்… வா போகலாம்” இருவரது அலைபேசியும் விடாமல் இசைக்கவே, அதை எடுத்த கார்முகில், “வந்துட்டே இருக்கோம்மா… இன்னும் அஞ்சே நிமிஷம், நாங்க அங்கே இருப்போம்” என்றவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
இவர்கள் வந்த கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் ஐயரும் வந்துவிட, அவனை அமர்த்தி மந்திரங்களை ஓதத் துவங்கினார். ஆனால் கார்முகிலின் மனம் முழுவதும் தன்னவளை எப்பொழுது காண்போம் என்றே தவித்துக் கிடந்தது.
அவனை அதிக நேரம் சோதிக்க வைக்காமல், “பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ…” ஐயர் குரல் கொடுக்க, சுபிதா அவளை அழைத்துக் கொண்டு வந்தாள்.
கூரைப் பட்டுடுத்தி, கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல், இயற்கையான அழகோடு, கண்மை, மெல்லிய உதட்டுச் சாயத்தோடு அவள் இருக்க, அதற்கே அவள் அழகாக ஜொலித்தாள். கார்முகிலுக்கு தன் கண்களை அவள்மேல் இருந்து அகற்றவே முடியவில்லை.
“மாப்ளை மந்திரத்தை சொல்லுங்கோ…” ஐயர் இரண்டு மூன்று முறை சொல்லியும் அவன் கலையாமல் போக, அதியன் அவனைக் கலைத்தான்.
“மாப்ள… அவங்க உன்கிட்டதான் வந்து உட்காரப் போறாங்க. நீ மந்திரத்தைச் சொல்லு” அவன் காதுக்குள் சொன்னவன், விலகி நின்றுகொண்டான்.
அவன் அருகே அமர்ந்தவள், மாலையின் மறைவில் அவன் கரத்தை மென்மையாக அழுத்தி விடுவித்தாள். கார்முகிலுக்கு நேரம் செல்லச் செல்ல, ஒரு மாதிரி பதட்டமும், படபடப்புமாக இருந்தது.
“மாங்கல்ய தானம் பண்ணுங்கோ…” என ஐயர் சொல்லி, அவன் கரத்தில் திருமாங்கல்யத்தைக் கொடுக்க, கைகள் நடுங்க அதைப் பெற்றுக் கொண்டான். அதை கரத்தில் வாங்கியவன், சுமித்ராவின் முகத்தை தான் பார்த்தான்.
அவள் இமைகளை மூடித் திறக்க, அடுத்த நொடி அவள் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றைக் கட்டி அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொண்டான். அந்த நொடி என்னவோ அந்த உலகத்தையே வென்றுவிட்ட பெருமிதம் அவனிடம்.
அப்பொழுது பற்றிக்கொண்ட அவள் கரங்களை, பெரியவர்களிடம் ஆசீர் வாங்கிவிட்டு, அப்படியே மண மேடையில் அமர்ந்துவிட்ட பிறகும் அவன் விடவே இல்லை. அவளும் தன் கரத்தை விலக்கிக் கொள்ள நினைக்க கூட இல்லை.
அவனது சந்தோஷமும், நிம்மதியும், பூரிப்பும் அவன் முகத்திலேயே தெரிய, அதை ரசித்தாள். தான் அவன் வாழ்க்கைக்குள் வந்துவிட்டதில் அவனுக்கு அளவிட முடியாத ஆனந்தம் என்பதை அவனது ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு எடுத்துக் காட்டியது.
அதற்காக அவளிடம் வெளிப்படையாக வழிந்தான், பேசினான் என எதுவும் இல்லை. ஆனால் அவளை தனக்கு எவ்வளவு பிடிக்கும், அவள் தனக்கு எத்தனை முக்கியமானவள் என்பதை அவனது உடல்மொழியும் பார்வையுமே அவளுக்குச் சொன்னது.
“மச்சான்… என்னதான் இருந்தாலும் உனக்கு இவங்க கொஞ்சம் அதிகம்தான்” குமார் சொன்னது கூட அவனது சந்தோஷத்தை எல்லாம் குறைக்கவில்லை. அதியன் அவனைக் கட்டிக்கொண்டு வாழ்த்த, அதைப் பார்த்து புன்னகைத்தாள்.
“உங்க மச்சான் ஏன் இப்படி இருக்கறார்? அதியன் உங்க நண்பன் தானே அவருக்கு இருக்கும் புரிதல் கூட இவர்கிட்டே ஏன் இல்லை?” குமாரின் பார்வையும் பேச்சும் அவளுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகவே தன்னவனிடம் கேட்டுவிட்டாள்.
இன்றைக்கு வரைக்கும் அவள் யாரையுமே குறை சொல்லியோ, கீழாகவோ பேசியதே இல்லை. ஆனால் குமார் அவளைப் பேச வைத்தான்.
“அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான், விடு…” கார்முகில் அவளை சமாதானம் செய்தான்.
“எப்படி இவருக்குப்போய் அண்ணியை கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க?” குழலி அவளிடம் அத்தனை ஆசையாக, அன்பாக பேசியிருக்கவே தாள முடியாமல் கேட்டாள்.
முதல் பார்வையிலேயே அவரோட முழுக் குணமும் தெரியவில்லை என்றாலும், எங்களால் கொஞ்சம் புரிஞ்சுக்க முடிந்தது தான். ஆனா குழலிக்கு அவரை ரொம்ப பிடிச்சு போச்சு. அவருமே மத்தவங்க கிட்டே எப்படி நடந்துகிட்டாலும், அவகிட்டே ரொம்ப உயிராத்தான் நடந்துப்பார்.
“அதுக்கு வேண்டியே நாங்க யாரும் அவரை எதுவும் சொல்ல மாட்டோம். அதென்னவோ அவருக்கு என்னைக் கண்டாலே ஆவறது இல்லை. நானும் தங்கச்சி புருஷனா போய்ட்டாரேன்னு அவர் பேசினால் பேசிப்பேன் அவ்வளவுதான்.
“அவர் முறுக்கெல்லாம் நம்ம வீட்டுக்குள் செல்லுபடி ஆகாது. அவரை குழலியே சமாளிச்சுப்பா. அதனால் அவரைப்பற்றி யோசிச்சு உன் நேரத்தை வீணாக்காதே” என்றவனது கரம் அவளது கரத்தை அழுத்த அவன் முகம் பார்த்தாள்.
“வேற யாரைப்பற்றி யோசிக்கணுமாம்?” குறும்பாக அவள் கேட்டு வைக்க,
“அதை நான் சொல்லித்தான் உனக்குத் தெரியுமா என்ன?” என்றவன் அவள் இதழை அழுத்தமாக பார்க்க, ஒரு மாதிரி படபடத்துப் போனாள்.
அதன் பிறகு அங்கேயே நேரத்தை கொஞ்சமாக நெட்டித் தள்ளி, காலையில் டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டுக்கு கிளம்பினார்கள். அவன் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றி, பால் பழம் குடித்து முடிய, இருவரின் மலர் மாலையை வாங்கி பூஜை அறையில் வைத்தார்கள்.
“அம்மாடி… நீ கொஞ்ச நேரம் தூங்கி எழும்மா. குழலி அண்ணிக்கு மாடியில் இருக்கும் ரூமைக் காட்டு” தாய் சொல்ல, அவனிடம் கண்களாலேயே விடை பெற்றவள், குழலியின் பின்னால் போக, அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அந்த அறையில் ஏற்கனவே சுபிதா இருக்க, குழந்தையோ நல்ல தூக்கத்தில் இருந்தான். “படு சுமி… சாயங்காலம் ரிசப்ஷன் வேற இருக்கு” தாய் சொல்ல, அப்படியே படுத்துவிட்டாள். அவள் உறங்கி எழுகையில் மதியம் நேரம் இரண்டைத் தொட்டிருந்தது.
உறவுகளுக்கு எல்லாம் மண்டபத்திலேயே அனைத்தும் ஏற்பாடாகி இருக்க, இங்கே இவர்கள் இரு குடும்பம் மட்டுமே இருந்தது. கார்முகிலும், சுமித்ராவும் ஒன்றாக அமர்ந்து உண்ண, அவளுக்கு இரண்டு வாய் உணவை ஊட்டிவிட்ட பிறகே தான் உண்டான்.
“ஏய்… ஏலியன், மறுபடியும் ரெஸ்ட் எடுக்கணுமா? கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா?” அவளது காதுக்கு அருகே குனிந்து ரகசியமாகக் கேட்டான். அவளுக்கும் அந்த ஆசை இருக்கிறது தான். ஆனால் அது எப்படி முடியும் என அவளுக்கு தவிப்பாக இருந்தது.
“நான் மொட்டை மாடியில் இருக்கறேன், நீ அங்கே வா…” என்றவாறு அவன் விலகிச் செல்ல, அவளுக்குத்தான் அங்கே எப்படி செல்வது எனத் தெரியாத தடுமாற்றம். உணவை முடித்துக் கொண்டு அவள் மீண்டும் அறைக்குச் செல்ல, அங்கே வந்தாள் குழலி.
“அண்ணி… நீங்க கொடுத்த சர்ப்ரைஸ் சூப்பரா இருந்தது. உங்களுக்கு ஒன்று காட்டணும்… என்னோட வரீங்களா?” குழலி கேட்க, அவளோடு சென்றாள்.
“அண்ணா மேலே இருக்காங்க… போங்க…” அவள் மாடிப்படிகளை காட்டிவிட்டு விலகிச் செல்ல, அங்கே சென்றாள். படிகளில் ஏறுகையில் அத்தனை தடுமாற்றமாக இருக்க, முயன்று அங்கே சென்றாள்.
2 comments
வாவ், சூப்பர்👌👌👌, நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது,
நேத்திக்கு ரீல்ஸ்ல ஒரு அவார்ட் பங்க்ஷன்ல அட்லி, பிரியாவ பார்த்ததும் இவங்க நியாபகம் தான் வந்தது
இந்த சர்ப்ரைஸ்சால ஏதாவது பிரச்சனையை இழுத்து விடப்போகிறாளா..?