Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா- 29

காதல் கசக்குதைய்யா- 29

by Vathani S

அத்தியாயம் – 29

மருத்துவமனை களேபரங்கள் முடிந்து ஆதன் வீட்டிற்கு வர கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுதாக முடிந்திருந்தது. இந்த ஒரு மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத  பல திருப்பங்கள் நடந்து முடிந்திருந்தன.

அதில் ஒன்று ஆதன் – நிக்கியின் திருமணம். ஆம் அவர்கள் இருவரின் திருமணமும் முடிந்திருந்தது. வேண்டவே வேண்டாம், நடக்கவே நடக்காது, நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என பிடிவாதமாக இருந்த தாரணிதான் இவர்கள் திருமணத்தை முதலில் முடித்துவிடலாம் என உறுதியாகச் சொன்னார்.

அவரது பிடிவாதம் ஒரு தாயின் பயம் என்று அங்குள்ள எல்லோருக்கும் புரிந்தது. அதனால் யாரும் எந்த தடங்கலும் சொல்லவில்லை. முதலில் சங்கர் யோசித்தாலும் மகள் தன்னிடம் கூட இதைப்பற்றி ஒரு வார்த்தைப் பேசாமல் தற்கொலை முடிவெடுத்தது அவரை மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் காரணமாக அவரும் மனைவியின் முடிவுக்கு சரியென்று விட்டார். ஆனால் ஆதன் அவனுக்கு இன்னும் நிக்கியின் செயல் தெரியவில்லை. அவள் அவனோடு பேசாமல் நிராகரித்ததே மனதில் வாள் கொண்டு அறுக்க, இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மற்றவர்கள் கேட்காமல் போக, பெரியவர்கள் ஒரு முடிவோடுத்தான் இருக்கிறார்கள் என்று புரிய, வேறுவழியில்லாமல் திருமணத்திற்குச் சரியென்று விட்டான். ஆனால் நிக்கியின் மேல் இருந்த கோபம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.

சேலத்தில் இருக்கும் போதே, அந்த நேரப் பதட்டத்தில் பேசிவிட்டதாகப் பலமுறை ஆரணி நிக்கியிடம் மன்னிப்பை வேண்டியிருக்க,  ஆரணியின் சூழலும் பயமும் நிக்கிக்கும் புரிய, ‘உன் உணர்வுகள் எனக்குப் புரிந்தது’ என்பது போல வேரொன்றும் பேசாமல் தோழியை இறுக்கமாக அனைத்துக் கொண்டாள்.

என்னதான் நிக்கி மன்னித்திருந்தாலும், பாண்டியன் மகளை மன்னிக்கவில்லை. பெரியவர்கள் இருக்கும்போது மகள் செய்தது அதிகப்பிரசங்கித்தனமாகவேப் பட்டது. அதனாலே  தன்னிடம் இரைஞ்சும் மகளைக் கண்டுகொள்ளவில்லை அவர்.

ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு எந்த நேரமும் கோபம்,  எல்லோரிடமும் எரிச்சல் பேச்சு என சுற்றிக் கொண்டிருந்தான் ஆதித்யன். வேலைப்பளுவும் அவனுக்கு அதிகம் இருக்க வீட்டில் இருக்கும் நேரங்களை வெகுவாகக் குறைத்துக் கொண்டான்.  ஆதனின் திருமணப் பேச்சை எடுத்துவிட்டு, ‘பெரியவன் இருக்கும் போது சின்னவனுக்கு செய்றது சரியில்ல, வேனும்னா ரெண்டு பேருக்கும் ஒன்னா வச்சிடலாம்’ என்ற முத்துலிங்கத்தின் பேச்சைக் கேட்கவே இல்லை அவன்.

“இல்ல தாத்தா.. இப்போ அதுக்கான சூழல் இல்லை. என்னால லீவ் எடுக்க முடியாது. பர்ஸ்ட் அவனுக்கு முடிங்க. ஒரு த்ரீ மந்த்ஸ்க்கு அப்புறம் எனக்கு யோசிக்கலாம். அதுக்குள்ள அவனும் நார்மல் ஆகிடுவான். எங்களுக்கு ரிசப்ஷன் வைக்கும்போது அவனுக்கும் சேர்த்தே வச்சிடலாம்.” என்றவன், ஆருவிடம் திரும்பி “உனக்கு எதுவும் அப்ஜெக்ஷன் இருக்கா..” என அவளிடம் கேட்க, என்ன பதில் சொல்வாள் அவள். இருக்கின்ற பிரச்சினையில் தான் பேசி, அது ஒரு பிரச்சினையாகவா என்று எண்ணியவள், தலை குனிந்தவாறே இல்லையென்று அழுத்தமாகத் தலையசைக்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன் வெளியே சென்றுவிட்டான்.

ஒரு அண்ணனாக, வீட்டுக்கு மூத்த மகனாக எல்லாம் சரியாகத்தான் செய்தான், பேசினான். ஆனால் அவனின் மனதில் என்ன குழப்பம் இருக்கிறது, எதற்காக இப்படி இருக்கிறான் என்று யாரும் அறிய முற்படவில்லை. ஆரணிக்கு அவன் எதையோ போட்டு உழப்புகிறான் என்றுவரை புரிந்தது தான். ஆனால் அவனிடம் எப்படி கேட்க என்றுத் தயக்கம் தடைபோட, அவளும் அமைதியாகவே வேடிக்கைப் பார்த்தாள்.

பவித்ராவிற்கும் ஒரு தாயாக மகிழ்வுதான். ஆனால் தாரணியின் இடத்தில் இருந்து பார்க்கும்போது அவரது நிலைப் புரிய குற்ற உணர்வு கொன்றது. அதனால் தாரணியிடம் தானே சென்று பேசினார்.

“அண்ணி.. நடந்ததை நான் சரின்னு சொல்லி உங்களை கஷ்டப்படுத்தல, ஆனா நம்ம பிள்ளைங்களோட வாழ்க்கையைத் தவிர நமக்கு வேற என்ன பெருசா சந்தோசம் இருந்திடப் போகுது சொல்லுங்க. அதுக்காக நிக்கி செஞ்சதை சரின்னும் சொல்லல.. ஆனா அவ இடத்துல இருந்தும் கொஞ்சம் யோசிக்கலாமே” என யதார்த்தமாக பேச,

“உங்களுக்கு பேச சொல்லியா கொடுக்கனும், உங்களை மாதிரிதானே உங்க பிள்ளைங்க இருப்பாங்க, அதுதான் என் பொண்ணு மனசைக் கெடுத்து வச்சிட்டான். இப்போ என் பொண்ணு எனக்கு இல்ல..” எனக் கோபமாகப் பேச, இவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரம்யாவோ, பவித்ராவைப் பேசும் போதே “நிக்கிம்மா..” என்றுக் கத்த,

 அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத தாரணியோ “அவ உங்க வீட்டுல வந்து எப்படி வேணா இருக்கட்டும், உயிரோட இருந்தா சரி. கல்யாணம் முடிஞ்சதோட தலை முழுகிடனும்னு தான் நானும் இருக்கேன்..” என கொஞ்சமும் இரக்கமில்லமால் பேச, வாயடைத்துப் போனது பவித்ரா தான்.

“நிக்கிம்மா என்ன பேசுறீங்க. தப்பு நம்ம புள்ள மேலையும் இருக்கு. அதை விட்டுட்டு எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்னு சொல்லாதீங்க. அவங்களும் வருத்தத்துல தான் இருக்காங்க. அதுக்காக நீங்க பவியை இப்படி பேசுறது சரியில்ல..” என எடுத்துச் சொல்ல,

“ஆரும்மா.. எல்லாம் தெரிஞ்சும் நீங்களும் இப்படி பேசாதீங்க. எனக்கு எல்லாம் தெரியும். நீங்க உங்க சொந்தக்காரங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க. அவங்களை விட்டுக் கொடுக்கமாட்டீங்கன்னு எனக்குத் தெரியாதா..?” என்று பட்டென்று சொல்லிவிட, அதிர்ந்துவிட்டார் ரம்யா.

“அண்ணி பரவாயில்ல விடுங்க.. தாரணி அண்ணி மனசு கஷ்டத்துல பேசுறாங்க. அதை பெரிசா எடுத்துக்க வேண்டாம். நீங்க பேசிட்டு இருங்க நான் போய் ஆதுவைப் பார்த்திட்டு வர்றேன்..” என்று நாசூக்காய் அங்கிருந்து நகர்ந்துவிட, ரம்யாவிற்கு தான் என்னவோ போல் ஆனது.

திருமணப் பேச்சு என்றதும் அடுத்தடுத்து வேலைகள் நடக்க, அடுத்து வரும் பத்து நாள் கழித்து ஒரு முகூர்த்தம் இருப்பதாகச் சொல்லி, அன்றே திருமணத்தை முடித்துவிடலாம் என்று பேசி முடித்துவிட்டனர்.

அவர்களுடன் கிளம்பிய நிக்கியை வேண்டாமெனத் தடுத்துவிட்டார் தாரணி. “இங்கேயே இருக்கட்டும் ஆரும்மா.. அங்க வந்தா வீட்டுல துணைக்கு யாரும் இல்ல.. நாங்க கல்யாண வேலையா அலைவோம்.” என சரியான ஒரு காரணத்தைச் சொல்லி இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

நிக்கிக்கு இது பெரிய அடிதான். ஆனால் தான் செய்த தவறுக்கு இது தேவைதான் என்பது போல நினைத்துக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.

அவர்கள் கிளம்பியதும் ஆருவின் அறையில் இருந்த நிக்கிக்கு அழுகையும் மனவருத்தமும் தான். அழுதழுது ஓய்ந்தவளுக்கு பெரும் யோசனை. மருத்துவமனையில் இருக்கும் போது ஆதனிடம் பேசப் போனாலே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுக்க, தான் செய்த தவறை நினைத்து, அவன் கோபம் புரிந்து அமைதியாகிட்டாள்.

டிஸ்சார்ஜ் ஆகி அவர்கள் வீட்டிற்கு போகும் போது கூட முகத்தைப் பார்த்து பேசவில்லை ஆதன். அது இன்னும் அவளது வேதனையைக் கூட்டியது, யாருக்கும் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லையா.? இதுதான் அவளது வேதனைக்கான காரணம். ஏன் பிழைத்தோம் என்பது போலக்கூட அவள் எண்ணங்கள் பயணிக்கத் தொடங்கியிருந்தன.

அப்போது தான் அறைக்குள் வந்த ஆருவும், “என்னாச்சு நிக்கி, ஏன் இப்படி டல்லடிக்கிற, ஆதுக்கிட்ட போய் பேசு, அவன் இப்படி இருக்கும் போது நீ கவனிக்காம இருக்குறது தப்பு..” என சொல்ல,

“ம்ச்.. ஆரு. ஏற்கனவே எல்லோரும் என்மேல பயங்கர கோபத்துல இருக்காங்க. இந்த நேரத்துல நான் போய் அவன்கிட்ட பேசி, அது இன்னும் கோபத்தைதான் கொடுக்கும்.. அதோட அவனும் என்மேல கோபமா இருக்கான்ல..” என பதில் கொடுக்க

“அதெல்லாம் இல்ல நானும் அப்பத்தாவும் ஆதுவைப் பார்க்க போறோம், வர்ரியா.? நான் அம்மாக்கிட்ட கேட்குறேன்.” எனவும்,

“வேண்டாம் ஆரு.. அது சரிவராது. ஒரு தடவை தான் தப்பு நடந்துடுச்சு. இனிமேலும் அப்படி நடக்க வேண்டாம். அவங்க என் மேல நம்பிக்கை இல்லாம, எப்படியோ போன்னு விட்டுட்டு போயிருக்கலாம். ஆனா அதுக்காக நான் அப்படியே இருக்கமாட்டேன். அவங்க ஒதுக்கினாலும் நான் எப்படி ஒதுக்க முடியும்..” என்றவளுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெளிவர,

“ஹேய் நிக்கிமா என்னடி இது..” என அவளை அனைத்துக் கொண்டு, நிக்கியின் முதுகை வருடி விட்டவளின் முகத்தில் ஆயிரம் யோசனைகள். இனியும் தான் அமைதியாக இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தவள், நிக்கியை ஓரளவு சமாதானம் செய்துவிட்டு, குருவம்மாவோடு தேனிக்கு வந்திருந்தாள்.  அத்தையிடம் நலன் விசாரித்தவள் ஆதனின் அறையை நோக்கி நகர்ந்திருந்தாள்.

இங்கு அறைக்குள் அடைந்து கிடந்த ஆதனுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டிருந்தது. இந்த திருமணம் வேண்டுமா என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தான். ஆதித்யன் ஒருப்பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க, நிக்கியோ அவனிடம் ஆதரவாகக் கூட பேசாமலிருந்தாள். இதெல்லாம் சேர்ந்து அவனுக்கு முரட்டுத் தனத்தை விதைத்திருந்தது.

கண்ணை மூடி ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் கதவு தட்டும் சத்தத்தில் நினைவுக்கு வந்தான். கதவுப்பக்கம் திரும்பியவன் அங்கு ஆரணி நின்றிருந்ததைப் பார்த்து ‘என்ன’ என்பது போல் பார்க்க, முறைத்துக் கொண்டே வந்து அவனுக்கு அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள்.

ஆரணியின் முறைப்பைப் பார்த்தவன் யோசனையாக, ஒரு முடிவோடு வந்தவளோ “ஏன்டா இந்த ஆம்பளைங்க எல்லாம் இப்படித்தான் இருப்பீங்களா.? சுயநல பேய்களா..! ச்சே நீயும் அப்படித்தான்டா, உன் அண்ணனும் அப்படித்தான்டா. நீங்க லவ் பண்ணா உங்க பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி வந்துடனுமா.? அப்படி வரலன்னா என்ன பிரச்சினைன்னு கூட யோசிக்க மாட்டீங்களா..? அப்படி எல்லாம் யோசிச்சிருந்தா ஏன்டா முட்டைல ஆசிட் மூஞ்சில அடிக்கிறானுங்க..” எனப் படபடவெனப் பொரிந்துக் கொட்டினாள்.

“ஏய்.. எதுக்கு இப்போ இப்படி பட்டாசு மாதிரி பொரிஞ்சி தள்ளுற, உன் ப்ரண்டுக்கு சப்போர்ட் பண்ணி பேசனும்னுன்றதுக்காக எங்களைத் தப்பா பேசாத, லவ் சொல்லும் போதே தெரியாதா உங்களுக்கு ஒத்து வருமா வராதான்னு அப்போவே நோ சொன்னா நாங்க ஏன்டீ உங்க பின்னாடி அலையப் போறோம், தேவைன்னா  யூஸ் பண்ணிக்கிறது, தேவை இல்லைன்னா தூக்கி எறியிரதுக்கு நாங்க என்ன யூஸ் அன்ட் த்ரோ கப்பா..” என ஆதனும் பதிலுக்கு பதில் கொடுக்க,

“டேய்.. வேண்டாம். அப்புறம் என் வாயில நல்லா வந்திடும் பார்த்துக்கோ.. நீ நிக்கிகிட்ட லவ் சொல்லும் போது ஃபர்ஸ்ட் அவ வேண்டாம்னு தான் சொன்னா, அதை மறந்துடாத. அவ ஓக்கே சொல்றவரை அந்த ஆகாஷ் பரதேசி கூட சேர்ந்து அவளுக்கு தொல்லை கொடுத்தது நீதான். அதையும் மறந்துடாத..” என மூக்கு விடைக்க கத்தியவள், அவன் அதிர்ந்து பார்ப்பதைக் கூட பொருட்படுத்தாமல்,

“இந்த விசயத்தை உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு தான் நான் நினைச்சேன், நிக்கியும் சொல்லக்கூடாதுன்னு சொன்னா, ஆனா அதை சொல்லலன்னா உனக்கு அவளைப்பத்தி எதுவுமே தெரியாம போயிடும்,” என்றவள் நடந்த அனைத்தையும் ஒரே மூச்சாக சொல்லிவிட்டு, “அன்னைக்கு அவளை உயிரோட பார்ப்போமான்னு நாங்க எவ்வளவு தவிச்சோம் தெரியுமா.? ஆன்டியும், அங்கிளும் எந்தளவுக்கு வருத்தப்பட்டுருப்பாங்கன்னு யோசி, நிக்கி அவங்களுக்கு ஒரே பொண்ணு, அவ இல்லாம போயிருந்தா என்னவாகிருக்கும். அதனால தான் ஆன்டி உடனே கல்யாணம் வச்சிடலாம்னு முடிவெடுத்துட்டாங்க.”

“உனக்கு தெரியுமா..? ஆன்டியும் அங்கிளும் அவ கூட பேசுறதே இல்ல, அவங்களூக்கு இதுல விருப்பமே இல்ல, ஆனா அவ சூசைட் அட்டெண்ட் பண்ணதும் பயந்தே போயிட்டாங்க. இனியும் பிடிவாதம் பிடிக்கிறது சரியில்லன்னு தெரிஞ்சி,  மேரேஜ் முடிச்சிக் கொடுத்துட்டா, உயிரோடவாது இருப்பாளேன்னு நினச்சிதான் இந்த மேரேஜுக்கே ஓக்கே சொன்னாங்க.” என்றவள்,

“எல்லாருமே இருந்து யாருமே இல்லாம இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.? அவ அழுது நான் ஒருநாலும் பார்த்தது இல்ல, ஆனா இப்போ அவ சிரிச்சி நான் பார்க்கவே இல்ல.. அவளைப்பத்தி புரிஞ்சிக்காம, நீயா ஒரு முடிவு எடுத்திருக்க, இதுல நீ எப்படி அவளை உண்மையா லவ் பண்ணன்னு சொல்ற.. இது சீரியஸ் லவ் இல்ல.. ஏன் இது லவ்வே இல்ல, ஜஸ்ட் ஒரு இன்ஃபாஜுவேஷன் அவ்வளவுதான்..” எனஅவள் விடாமல் பேசிக்கொண்டே இருக்க, கனநேரத்தில் அவளைத் தன் பக்கம் திருப்பி ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தான் ஆதித்யன்.

‘ஆத்தி இவன் வீட்டுலையா இருக்கான். இவன் இருக்கான்னு தெரிஞ்சிருந்தா இங்க வரதுக்கு லீவு விட்டுருக்கலாமே, சும்மாவே ஆங்க்ரி பேர்டாட்டம் சுத்துவான், இப்போ.. அவ்வ்வ்’ என மனதுக்குள் புலம்பியவள், வெளியே அவனை முறைத்துப் பார்த்தாள்.

நிக்கியின் வீட்டிலோ தாரணியின் அண்ணன் குடும்பம் மற்றும் சங்கரின் கும்பத்தினர் எல்லோரும் இருக்க, அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றுத் தெரியாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தனர் இருவரும்.

தாரணியின் பெரியப்பா ஒருவர் “பொட்ட புள்ளைய எப்படி வளர்க்கனும்னு தெரியாம வளர்த்து வச்சிட்டு, இப்போ குத்துதே குடையுதேன்னா என்ன செய்ய, நாங்களூம் தான் உங்களை வளர்த்தோம், இப்படியா வளர்ந்தீங்க, அவ வயசுக்கு வரும்போதே சொன்னேன் மேலப்படிக்க வைக்காதன்னு கேட்டியா, இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல, போயி அந்த தரங்கெட்டவள இழுத்துட்டு வா, ராத்திரியோட ராத்திரியா நம்ம பையனுக்கு முடிச்சி வச்சிடலாம், அப்படி ஒத்துவரல, நான் கட்டிக்கமாட்டேன்னு அடம்பிடிச்சு சாவுறேன்னா சாகட்டும், நம்ம குடும்பத்துக்கு இப்படி ஒரு களங்கம் தேவையா சொல்லு..” என கர்ஜினை குரலில் பேச பெற்றவர்கள் இருவரும் ஒருசேர அதிர்ந்தனர்.

“தாத்தா என்ன பேசுறீங்க..” என அதிர்வில் இருந்து முதலில் வெளியில் வந்தது ஆகாஷ் தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured