Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 30

காதல் கசக்குதைய்யா – 30

by Vathani S

காதல் கசக்குதைய்யா – 30 

“போதும் தாத்தா என்ன பேசுறீங்க நீங்க, அவ நம்ம வீட்டுப் பொண்ணு. நீங்க தூக்கி வளர்த்த உங்க பேத்தி. அப்படி வளர்த்தவளை உங்களோட ஜாதி வெறிக்காக கொல்லனும்னு நினைப்பீங்களா.? என்ன ஒரு மூர்க்கத்தனம் உங்களுக்கு. நீங்க பேசுறதைக் கேட்டா அந்தப் பெத்தவங்க மனசு எவ்வளவு பாடுபடும். அவ சாகட்டும்னு நினைச்சிருந்தா தற்கொலை முடிவெடுத்து விசத்தைக் குடிச்ச அன்னைக்கே அப்படியே விட்டிருப்பாங்க. அவங்க பொண்ணு வேனும்னு தானே காப்பாத்திருக்காங்க, கையோட கொண்டு போய் விட்டுட்டும் வந்துருக்காங்க. உங்களுக்கு பிடிக்கலன்னா ஒதுங்கிகோங்க, அதை விட்டுட்டு நீங்க உங்க முடிவை இங்க சொல்லாதீங்க..” எனக் கோபத்தில் படபடவென பேச, 

“ஆகாஷ்..” என அவனைப் பெற்றவர்கள் சத்தமிட, “நீங்க கொஞ்சம் சும்மா இருங்கம்மா.. நாளைக்கு நானும் இப்படி யாரையாவது லவ் பண்ணிட்டு வந்து நின்னா இவர் சொல்றமாதிரி தான் என்னையும் உங்க ஜாதி வெறிக்காக கொன்னுடுவீங்களா.?” என கோபம் கொஞ்சமும் குறையாமல் பேச, 

“ம்ச்.. சும்மா இரு கண்ணா.. எல்லாம் பேசி முடிவு பண்ண பிறகு, இதுல மாத்திப் பேச ஒன்னுமே இல்ல. நிக்கி நல்லா இருந்தா போதும். உடனே எங்க மனசு சமாதானம் ஆகாதுதான். அவள் தப்பை ஏத்துக்காதுதான். ஆனா அவளைத் தவிர எங்களுக்கு யார் இருக்கா.? அவ உயிரோட இருந்தாலே போதும். கூடிய சீக்கிரம் எங்க மனசும் மாறும்னு நம்புவோம்..” என்ற சங்கர், இதுதான் எங்கள் முடிவு என்பது போல் அறிவித்துவிட்டார்.

கூட்டத்தில் சலசலப்பு வந்தாலும், ஆகாஷிற்கே நிக்கியின் திருமணத்தில் விருப்பம் எனும் போது, அடுத்து யாரும் மறுத்துப் பேசவில்லை. கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

தாரணிக்கும், சங்கருக்கும் மனதே ஆறவில்லை. எப்படி எப்படியோ நடத்த நினைத்த மகளின் திருமணம் இப்படி அவசரக் கோலத்தில் நடக்க இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் ரணமாய் வலித்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேலைகளைப் பார்க்க, அடுத்த பத்தாவது நாள் அவர்களது திருமணமும் தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் நடந்து முடிந்திருந்தது.

திருமணம் அதைத் தொடர்ந்து நடந்த அனைத்து சடங்குகளிலும் பெற்றவர்கள் ஒரு இறுக்கத்துடன் இருக்க, நிக்கியுமே அப்படித்தான் இருந்தாள். இவர்களின் மனநிலைப் புரிய, ஆதித்யனும் அவர்கள் வீட்டினரிடம் சொல்லி வைத்திருந்தான். மறுவீடு, ரிசப்சன் எதையும் இப்போதைக்கு வேண்டாம் என்றுவிட, அதுவே தாரணிக்கு போதுமானதாக இருந்தது. அதற்குள் மகளின் மேல் இருக்கும் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

பல நாட்களுக்குப் பிறகு திருமண நாள் இரவுதான் நிக்கியும், ஆதனும் சந்திக்கின்றனர். இருவருக்குள்ளும் ஒருவித அழுத்தம் தான் நிறைந்திருந்தது. பெரியவர்களை மிரட்டி இந்த திருமணத்தை நடத்திக் கொண்டதாகவே இருவருக்கும் தோன்ற, அதில் எங்கிருந்து மகிழ்ச்சியும் நிம்மதியும் வரும்.  

என்ன பேச, என்ன சொல்ல என தெரியாத ஒரு நிலை, ஆதன் கட்டிலில் அமைதியாக அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரே சோபாவில் நிகிதா அமர்ந்திருந்தாள். காலையில் இருந்து அருகருகே இருந்தாலும் இருவரும் ஒரு வார்த்தைக் கூட பேசிக் கொள்ளவில்லை. 

ஆதனுக்கு அவளிடம் எப்படி பேசி சமாதானம் செய்வது என்றேத் தெரியவில்லை. இருவரும் தங்கள் காதலுக்காக சாவின் விழிம்பைத் தொட்டுவிட்டு வந்தவர்கள். நினைக்கும் போது ஏன் இந்தக் காதல், யாருக்காக இப்படி.? என பெரும் கேள்வி இருவருக்குள்ளும். பெற்றவர்களை அழவிட்டு, கஷ்டப்படவிட்டு, தங்கள் துணையை கண்ணீர் விடவிட்டு அப்படியென்ன காதல் என்றுதான் தோன்றியது.

அன்றைய நாளுக்கான அலங்காரம் என எதையுமே ஆதன் வேண்டாம் என்று சொல்லிருக்க, அதுவே நிக்கிக்கு போதுமானதாக இருந்தது. குனிந்து அமர்ந்திருந்தவளின் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டுவது அமர்ந்திருந்த ஆதனுக்குத் தெரிய, இதற்குப் பிறகும் அவன் அமைதியாக இருந்தால், அவனுக்கும், அவன் காதலுக்கும், அவனை நம்பி வந்தவளுக்கும் சற்றும் மரியாதை இல்லை எனப் புரிய மெதுவாக எழுந்தவன், கட்டிலின் ஓரத்தைப் பிடித்தபடியே அவளுக்கு முன்னே வந்து நின்றான்.

அப்போதும் அவள் தலையை நிமிர்த்தாமல் இருக்க, தோளைத் தொட்டு மெதுவாகத் தூக்கியவன், அவள் என்ன என உணரும் முன்னே இறுக்கமாக அனைத்திருந்தான். முதலில் திமிறியவள் அவனது முரட்டுத்தனமான அனைப்பில் அடங்கிவிட, ஒரு பெரும் கேவலுடன் தானும் அவனை இறுக்கமாக அனைத்துக் கொண்டாள் நிக்கிதா.

“சாரி.. சாரி.. ப்ளீஸ் அழாத… என் செல்லம் இல்ல.. அழாதடி ப்ளீஸ்..” என அனைத்து ஆறுதல் சொன்னவனின் கண்களும் கலங்கியிருக்க, குரலுமே கரகரப்பிற்கு மாறியிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவனது சமாதானங்கள் எடுபடாமல் போக, அனைத்திருந்த கைகளில் மேலும் இறுக்கத்தைக் கூட்டினான். 

வார்த்தைகள் கொடுக்காத ஆறுதலை இந்த அனைப்புக் கொடுக்கட்டும் என்று நினைத்தானோ.? அவள் அழுது ஓய மட்டும் அனைப்பில் வைத்திருந்தவன், பின் மெதுவாக தன்னிடமிருந்து பிரித்து, முகத்தைத் துடைத்துவிட்டு மெத்தைக்கு அழைத்து வந்தான்.

இப்போது அனைப்பது அவளது முறை. கணவனது மார்பில் சாய்ந்திருந்தவளின் கைகள் நடுங்க, அவனது காயம்பட்ட இடங்களை மெதுவாக வருடிவிட்டன அவளது விரல்கள்.

அந்த நடுங்கிய விரல்களின் ஸ்பரிஷமே மனைவியானவளின் பயத்தைச் சொல்லாமல் சொல்ல, தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.

“சாரிடா.. சாரி என்னோட முட்டாள்தனத்தால தான் இவ்வளவு கஷ்டமும், உன்னைப்பத்தி யோசிக்காம தப்பு பண்ணிட்டேன்..” என அவளது நடுங்கிய விரல்களை உதட்டில் வைத்தபடி புலம்ப, அந்த விரல்களாலேயே கணவனது இதழ்களை மூடியவள், “நானும் தான் தப்பு செஞ்சிருக்கேன், ரெண்டு பேருக்குமே தப்புல சரிபங்கு இருக்கு. யாரும் யாரையும் குறை சொல்லிக்க வேண்டாம், சாவோட விளிம்புல பரிசா இந்த வாழ்க்கை கிடைச்சிருக்கு, இப்படி பேசிப்பேசியே அதைக் கெடுத்துக்க வேண்டாம். எனக்கு உங்ககூட நூறு வருசம் வாழனும். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை சேர்ந்து சமாளிச்சு கடந்து வரனும். நம்ம பெத்தவங்க முன்னாடி நாம தலை நிமிர்ந்து நிக்கனும் ஆது. அதுதான் நம்ம காதலுக்கு, நம்மை சேர்த்து வச்ச கடவுளுக்கு நாம செய்ற நன்றிக்கடனா இருக்கும்.” என்ற மனைவியை மேலும் மேலும் அனைப்பிற்குள் கொண்டு வந்தான் ஆதன். 

சில நிமிடங்கள் அதே நிலை நீடிக்க, இருவரும் உணர்ச்சிப்பிடியில் இருந்து வெளியில் வந்திருந்தனர். அவனுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்தவள், அவனுக்கு அருகே படுத்துக் கொண்டாள். ஆதனும் அவளை அனைத்தபடியே படுத்திருந்தான். நாளைய விடியல் இருவருக்கும் நல்லதாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டும் தான் இருவருக்கும்.

இங்கு ஆதி தன் அறையில் இறுக்கமாக அமர்ந்திருந்தான். ஆதன் செய்ததயே அவனால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனும் போது அதே தப்பை நிக்கியும் செய்திருக்கிறாள் என்று தெரிந்ததும் இருவர் மீதும் கண்மண் தெரியாதளவிற்கு கோபம் வந்தது. ஆனாலும் இப்போதைக்கு அதை இருவரிடமும் காட்ட முடியாத சூழலாகப் போய்விட, அதை அப்படியே ஆரணியிடம் காட்டிவிட்டான்.

வேண்டும் என்றெல்லாம் செய்யவில்லை. அவனுக்கு, அவனது கோபத்திற்கு, ஆற்றாமைக்கு, ஆதங்கத்திற்கு அவள்தான் வடிகால் என்பது போல நடந்து கொண்டான். அதிலிருந்து முகத்தைப் பார்ப்பது கூட பாவம் என்பது போல் உர்ரென்று அலைபவளை என்ன செய்வது என்றேத் தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு அலைந்தான்.

ஆதனின் பிரச்சினை ஓரளவிற்கு சரியாகி விடும் என்ற நம்பிக்கை வந்தபிறகே ஆரணியின் பக்கம் அவன் கவனம் திரும்பியது. பார்க்கும் போதெல்லாம் முறைத்துக்கொண்டு திரிபவளை எப்படி சரி செய்வது என்ற பெரிய கேள்வி அவனை திகைக்க வைத்தது.

அவளிடம் பேசப் போனாலே முகத்தைக்கூட பார்க்காமல் நகர்ந்துவிட, ‘அய்யோ ஏண்டா இந்த காதலில் விழுந்தோம்’ என நொந்து போனான்.

‘காதல் இவ்வளவு பலவீனமானதா, இப்படித்தான் காதலிக்கும் அனைவைரையும் முட்டாளாக்குமா?, பலவீனமாக்குமா..?’ இப்படித்தான் ஆதியின் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைய இரவு முழுவதும் அவளை எப்படி சமாதானம் செய்து வழிக்கு கொண்டு வருவது என யோசித்தவனுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

‘நமக்கு காதலிக்கவும் தெரியல, அவளை சமாதானம் செய்யவும் தெரியல, பேசாம யார் இருக்கா, இல்லைன்னு பார்க்காம அவ கால்ல விழுந்துட வேண்டியது தான்’ என ஒரு முடிவை எடுத்த பிறகுதான் அவனுக்கு சற்று ஆசுவாசம் ஆனது. ஆனால் அதுவும் விடியும் வரை மட்டுமே.

திருமண ஆர்ப்பாட்டங்கள் முடிய, பெண்வீட்டாரின் சொந்தங்கள் அனைத்தும் முதல்நாளேக் கிளம்பிவிட, அடுத்த நாள் காலையிலேயே சங்கரும், தாரணியும் கிளம்ப அவர்களுடன் ஆரணியும் செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அவளுக்கு அடுத்த நாளில் இருந்து கல்லூரியில் வேலை இருக்க, அவளது எச்ஓடி  வேறு வரச் சொல்லியிருந்தார். 

வேண்டாம் என மறுத்த மொத்தக் குடும்பத்தையும் ஒற்றைப் பார்வையில் சம்மதிக்க வைத்து, இரண்டு நாட்களில் வந்து விடுவாதாக சங்கரிடம் சொல்லி, மகளை அவர்களோடு அனுப்பி வைக்க முடிவு செய்து விட்டார் பாண்டியன்.

யாருக்குப் புரியாவிட்டாலும், மகளின் மனது ஒரு தந்தையாக அவருக்குப் புரியத்தான் செய்தது. தன்னுடைய நேசத்திற்கு ஆதித்யனிடம் சரியான எதிர்வினை இல்லை, தன்னுடையக் காதலை அவன் விளையாட்டாக எடுத்துக் கொண்டான் என்று குமுறும் மகளின் மனம் அவருக்குப் புரியத்தான் செய்தது. அதனால் தான் மகளை ஊருக்கு அனுப்பும் முடிவுக்கு வந்தார்.

அருகருகே இருந்தால் இருவருக்குள்ளும் ஒரு சரியான முடிவு வராமலேப் போகும். ஒரு பிரிவு இருவரது அன்பையும் இருவருக்கும் உணர வைக்கும் என்று நினைத்துதான் ஆரணியை அனுப்பி வைக்கும் முடிவை எடுத்தார்.

தாரணி கிளம்பும் வரைக்குமே மகளிடம் பேசவில்லை. சங்கர் மனைவியின் கோபம் புரிந்தாலும், அதை இந்த நேரம் மகளிடம் காட்டியிருக்க வேண்டாம் என்று உணர்ந்தவர், அதை ஈடு செய்யும் பொருட்டு, மகளின் அருகில் வந்து, “நீ தேடிக்கிட்ட வாழ்க்கை. அதுக்காக நீதான் உலகம்னு இருந்த எங்களை மறந்துட்டு, உயிரை விடுறளவுக்கு போய் வந்துருக்க, இந்த வாழ்க்கைல நாங்க சந்தோசப்படுற மாதிரி நீ வாழ்ந்து காட்டினாத்தான் இவ்வளவு கஷ்டப்பட்ட உங்களுக்கும், உங்க காதலுக்கும் பெருமை. பார்த்து இருந்துக்கோ..” என அவளின் தலையைத் தடவி விட, அந்த ஒரு செய்கை போதுமானதாக இருந்தது, அவள் “சாரிப்பா” என தந்தையின் தோளில் சாய்ந்து கதறியழ.

“ஸாரிப்பா.. சாரிப்பா..” என்ற நிக்கியின் கதறல் அங்கிருந்த அத்தனை பேருக்குமே ஒரு வகையான நெகிழ்ச்சியைக்கொடுத்தது. ஒருவழியாக மகளை சமாதானம் செய்து அனைவரும் கிளம்பும் வரைக்குமே ஆதித்யன் கீழே வரவில்லை. தலைவர் தான் விடிய விடிய தூங்காமல் யோசனையில் இருந்தாரே, அந்த யோசனைக்கு கொஞ்சமும் பலன் இல்லாமல் போனதை அறிந்தால் என்ன செய்வான் பாவம்! இந்தக் காதல் அவனைக் காசிக்கு அனுப்பாமல் விடாது போலிருக்கிறதே!

“ஏன்மா பவி.. எங்க எம்பேராண்டி பெரியவன், இன்னுமா எழுந்துக்காம கிடக்கான், போய் தட்டிவிடுமா எழட்டும்.. பசியோட தூங்கிட்டு இருப்பான்..” எனக் குருவம்மா மகளிடம் சொல்ல, அப்போதுதான் இறங்கி கீழே வந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.

வீடே அமைதியாக இருந்தது! பாண்டியனும் முத்துச்சாமியும் வயலுக்குச் சென்றிருக்க, ஆதன் அவன் அறையில் எடுத்துக் கொண்ட மாத்திரையின் விளைவால் உறங்கிக் கொண்டிருக்க, ரம்யாவும் நிக்கியும் கிச்சனில் வேலையாக இருக்க, முற்றத்தில் அமர்ந்து காயை நறுக்கியபடிதான் தாய்க்கும் மகளுக்கும் பேச்சு போய்க் கொண்டிருந்தது.

கண்களை சுழல் விட்டவாரே வந்தவன், அவனது பைங்கிளியைக் காணாமல் சோர்வுடன் தாயின் பக்கத்தில் அமர்ந்து “எங்கப் பாட்டி உங்க பேத்தி.. அவ இல்லையோ.. ஆளையே காணோம்..” என நூல் விட்டுப் பார்க்க,

“ஏன்.. உனக்கெப்படி தெரியுது..” என பெரியவரும் இழுத்தார்.

“ம்ம் வீடு இவ்ளோ அமைதியா இருந்தா, அவ இல்லன்னுதானே அர்த்தம், அதை கெஸ் பண்ணித்தான் கேட்டேன். சொல்லுங்க..” 

“சரிதான்.. அவ போயிட்டா..”

“எங்க மாமா கூட வயலுக்கா..”

“இல்ல..”

“அப்புறம் தாத்தா கூட சொசைட்டிக்கா..”

“இல்ல..”

“பிறகு அவகூட சுத்துற வானரங்களோட எங்கையாச்சும் தோப்புக்கு பிக்னிக் போயிருக்காளா..” 

“அடேய்.. அவ ஊர்லயே இல்லடா.. கிளி பறந்து போச்சு..” எனக் கிண்டலாகச் சொல்ல,

“என்னப் பாட்டி சொல்றீங்க.. தெளிவா சொல்லுங்க..” பக்கென்றானது பையனுக்கு.

“அத ஏன் கேட்குற.. அந்த சீமாட்டிக்கு நாளைக்கு காலேசு தொறக்குதாம், அதனால் அவ தாரணி கூடவே சேலம் போயிட்டா..” என இழுவையாக பாட்டி சொல்ல,

“என்ன சேலத்துக்கு போயிட்டாளா..? எங்கிட்ட சொல்லவே இல்ல. என்ன பாட்டி இதெல்லாம், யாரைக் கேட்டு முதல்ல அவளை அனுப்புனீங்க..” என எரிச்சலில் கத்த, பின்னே அவன் கஷ்டம் அவனுக்குத்தானேத் தெரியும்.. விடிய விடிய யோசிச்சு மண்ட காஞ்சது. சோகத்த..

“என்னலே என் பொண்டாட்டிக்கிட்ட குரலு உசருது.. நானே சத்தமா பேசமாட்டேன், நீ என்ன சவுண்ட கூட்டுற, யாரக் கேட்டு எம்பேத்திய அனுப்பனும்னு சொல்ற, அவளுக்கு விருப்பம், அவ அப்பனுக்கு விருப்பம். வேற யாருக்கிட்ட கேட்கனும்..” என தன் கிடா மீசையைத் திருகியபடி வந்து அவர்களுக்கு எதிரே அமர்ந்தார் முத்துச்சாமி.

“என்னவாம் எம்பேரன அதட்டுறீக, உங்க பேத்திக்கு இன்னும் பொறுப்பு வரல, அதுக்கு நாலு வார்த்தை எம்பேரன் கடுசா பேசக்கூடாதா.? உடனே கோச்சுக்கிட்டு போயிட்டா, இதெல்லாம் சரிப்பட்டு  வராது. எம்பேரனுக்கு நான் வெளியே பொண்ணு எடுத்துக்குறேன். நீங்க உங்க பேத்திக்கு முதல்ல  நல்லது கெட்டது சொல்லி வளர்ங்க.. என குருவம்மாவும் பதிலுக்கு தன் நையாண்டிய எடுத்து விட,

“எம்பேத்திக்கு வளர்ப்பு பத்தலையா சரிதாண்டி… நீ சொன்னா சரிதான். நீதான அவள வளர்த்த, அப்போ அது உண்மையாதான் இருக்கும். இனி நீ என்ன சொல்றது நானும் எம்மவனும் இதை முன்னாடியே முடிவு பண்ணிட்டோம், எம்பேத்தி, ராஜாத்தி அவளூக்கு இந்த உம்பேரன் வளர்ந்து கெட்டவன் சரிப்படமாட்டான். நாங்க வெளியவே ராசா கணக்கா மாப்பிள்ளையப் பார்த்துக்குறோம்.”

மற்ற அனைவரும் பார்வையாளராக கணவன் மனைவி இருவரும் தர்க்கமாகப் பேச ஆரம்பித்தனர்.

“பாருங்க.. பாருங்க.. உங்களுக்கு ஒரு ராசா கிடைக்கும்போது, எங்களுக்கு ஒரு ராணி கிடைக்க மாட்டாளா.. எம் பேரனுக்கு என்ன குறைச்ச, தொரசாணி மாதிரி பொண்ணு கிடைப்பா.. ஏம்ப்பு..” என ஆதித்யனைப் பார்க்க அவன் இருவரையும் முறைத்துக் கொண்டு, சாரி எரித்துக் கொண்டிருந்தான்.

“என்னப்பு.. அந்த ராங்கி வேணாம், நாம தொரசாணி கணக்கா…” என ஆரம்பிக்கும் முன்னே,

“ஒரு ஆணியும் வேணாம், ஆரணிதான் வேனும். உங்களுக்கு என்னைப் பார்த்தா லூசு மாதிரி இருக்கா. அவதான் பைத்தியம் பிடிக்க வைக்குறான்ன நீங்க வேற, என்னை விட்டுட்டு உங்க பேத்திக்கு வேற மாப்பிள்ளை பார்ப்பீங்களோ.. அப்படி மட்டும் நடந்துச்சு இந்த ஆதியை நீங்க வேறமாதிரி பார்ப்பீங்க அவ்ளோதான்.” என அங்கிருந்த அனைவரையும் கடித்து துப்பிவிட்டு வெளியேற, அவன் வெளியேறிவிட்டான் என்றுத் தெரிந்ததும் வெடித்துச் சிரித்தனர் அனைவரும்.

பீலிங்கா பேசிட்டு போன புள்ளைய பொசுக்குனு காமெடி பீசாக்கிருச்சுங்களே இதுங்க. பாவத்த.

You may also like

Leave a Comment

About Me

Featured