Home Antiheroதளிர் – 39

தளிர் 39

‘விக்ரம், என் வாழ்க்கையில நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் தேங்க்ஸ். இனிமேலாவது நான் என் வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன். ப்ளீஸ்… எங்களை விட்டுடுங்க.’ என்ற குறுஞ்செய்தியைப் பத்து முறைக்கும் மேலேப் படித்திருப்பான் விக்ரம். ஆனால் அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக என்னப் பிரச்சனையில் இருக்கிறாளோ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தான்.

அதற்கு மாறாக ஸ்வாதி குதித்துக் கொண்டிருந்தாள். “எவ்வளவு திமிர் இவளுக்கு, உங்ககிட்டயே எப்படி பேசிருக்கா? இவளுக்குப் போய் ஹெல்ப் செய்துருக்கீங்களே? உங்களை சொல்லணும், எதையோ குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும், அது தன்னோட புத்தியைக் காட்டத்தான் செய்யுமாம். அப்படித்தான் இருக்கு, அந்த நிசாவோட செயல். இனியாச்சும் அவ எப்படியோ போகட்டும்னு விட்டுட்டு இருங்க.” என விக்ரமின் மனதில் நிசப்தியின் செயலை, தப்பாகக் காட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அப்போதும் விக்ரம் அமைதியாகத்தான் இருந்தான். விக்ரமின் அமைதி ஸ்வாதியைக் கோபப்படுத்த, அதை வெளியில் காட்டமுடியாமல் பல்லைக் கடித்து அமர்ந்திருந்தாள். அப்போது சரியாக நரேன் வர, ரவியும் ரித்தியுடன் வந்திருந்தான். இவர்கள் அனைவருமே அந்த நிசப்தியின் பக்கம் இருக்கிறார்கள் என்பதையே ஸ்வாதியால் தாங்க முடியவில்லை.

அதிலும் இந்த ரித்தி தன்னுடைய ஒரு வார்த்தைக்கு நூறு ஆமாம் போடுபவள், இப்போது பேசுவது கூட இல்லை. அவளுக்கும் ஒரு செக் வைக்க வேண்டும் என்று, மனதில் நினைத்துக் கொண்டே மற்றவர்களின் பேச்சில் கவனமானாள்.

வந்ததில் இருந்து அமைதியாகவே இருந்த நரேனைப் பார்த்து, எதுவோ சரியில்லை என்று மட்டும் விக்ரமிற்குப் புரிய, “என்னடா?” என்றான் எரிச்சலாக.

“சீனியர், நாம நினைச்ச மாதிரி நிசா ஒன்னும் கோபத்துல எடுத்த முடிவு இல்லை இது. கொஞ்ச நாளாவே நல்லா யோசிச்சுத்தான் செஞ்சிருக்கா. அவ சொல்றது போல, அப்பா வாழ ஒரு வாய்ப்பு இருக்கும் போது ஏன் மிஸ் பண்ணணும்? போயிட்டு வரட்டும், அவ இதுவரைக்கும் இப்படியொரு பிடிவாதம் பிடிச்சது இல்ல. இதுதான் முதல் தடவை, அதுவும் அப்பாவுக்காக. போயிட்டு வரட்டும்.” என மிகவும் வருத்தமாகச் சொல்ல,

“ம்ச்! இடியட் மாதிரி லூஸ்டாக் விடாத, என்ன நடந்ததுனு தெளிவா சொல்லு.” என எரிச்சல் மேலோங்க கத்த, ‘என்ன இதெல்லாம்?’ என்பது போல் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் ரேணுகா.

“ம்ச்…” எனத் தலையைக் கோதியவன், “உங்க கான்வர்சேஷனை சரியா சொல்லு.” என விக்ரம் பொறுமையாகக் கேட்க,

“நிசா என்னை அவளோட வீட்டுக்கு வரச் சொன்னா, நானும் போனேன். அப்போ…” என்றவன், அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை சொல்ல ஆரம்பித்தான்.

நிசா கிளம்புவதற்கு முன் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஸ்வாதியிடம் சொல்லியிருக்க, அவளும் சரியென்றிருக்க, நரேனையும் உஷாவையும் வீட்டிற்கு வர வைத்திருந்தாள்.

“ஏன்டி இப்படியெல்லாம் பண்ற? நாங்க ரெண்டு பேரும் இருக்கும் போது, நீ ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்த? எவ்வளவு பெரிய முடிவு?” நாங்க இருக்கோம் என்பதையே மறந்துட்டியா?” என மிகவும் வருத்தமானக் குரலில் உஷா கேட்க,

“ம்ச்! எனக்காகவே பார்த்தா நீங்க எப்போ உங்க வாழ்க்கையை வாழப்போறீங்க உஷா? நாங்க யாருக்கும் பாரம் இல்லாம இருக்கணும்னு நினைக்கிறேன். ப்ளீஸ் உஷ்… என்னை ஸ்ட்ரெஸ் பண்ணாத.” என அவளை விட வருத்தமாகச் சொல்ல,

“நிசா என்னடா இது…” என நரேன் பேச ஆரம்பிக்கும் போதே, “அண்ணா ப்ளீஸ்! என்னை கம்பல் பண்ணாதீங்க. எனக்கு கொஞ்ச நாள் தனியா இருக்கணும்னு தோனுது. நானும் எல்லாத்தையும் தனியா ஸ்பேஸ் செய்யணும் இல்லையா? எல்லா நாளும், எல்லா நேரமும் நீங்க எங்கூடவே இருப்பீங்கனு நினைக்ககூடாது, அதை எதிர்பார்க்கவும் முடியாது இல்லையா? ப்ளீஸ்… எதுவும் சொல்லாதீங்க, எல்லாம் கொஞ்சநாள் தான். என்னால தனியா சமாளிக்க முடியாதுனு தெரிஞ்ச, அடுத்த செகன்ட் உங்கக்கிட்ட வந்து நிற்பேன்.” எனவும்,

“இது என்னடா பிடிவாதம்? என்னவா இருந்தாலும் நீ எங்ககிட்ட சொல்லிருக்கணும் தானே! இப்ப சொன்னதை அப்போதே சொல்லிருந்தா கூட நான் விட்டிருப்பேன். ஆனா நீங்க கானோம்னு தேடி, அதுக்குப்பிறகு நீ வந்து சொல்றதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு. என்ன நடந்தாலும் நாங்க உன்கூட இருக்கோம். தைரியமா சொல்லுடா, என்ன நடந்தது? எதுவும் பெரிய பிரச்சனையா?” என ஆதரவாகவும் ஆதுரமாகவும் நரேன் கேட்க, நிச்சயம் இல்லை என்று நிசாவால் அவனிடம் பொய் சொல்ல முடியவில்லை.

வெடித்து வந்த அழுகையை அடக்கி, தன்னை சமன்படுத்த அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீர்த்துவிட்டு, ஒருமூச்சு அழுதால் போதுமென்றிருந்தது. ஆனால் அவளுக்கு இப்போதைய சூழ்நிலை புரிய சட்டென்று மற்றதை ஒதுக்கிவிட்டு, “அப்படில்லாம் இல்ல நரேன், எனக்கு அப்பாக்கூட கொஞ்சநாள் இங்க இருந்து ரொம்ப தூரமா போய் இருக்கணும்னு தோனுது அவ்வளவுதான். அங்க போனாலாவது அப்பாவோட ஹெல்த் கன்டிஷன் இம்ப்ரூவ் ஆக சான்சஸ் இருக்குனு டாக்டர் சொல்றாங்க. சோ, அதுக்காக மட்டும் தான் இந்த ப்ளானே தவிர, வேற எந்த பிரச்சனையும் இல்ல.” அவ்வளவுதான் என அவள் முடிக்க,

“நிசாம்மா, என்னால நீ சொல்ற எதையும் நம்ப முடியலையே…” என முடிக்கும் முன்னே, “நீ திரும்ப திரும்ப அதையே பேசாத, இனி நீங்க எனக்காகப் பார்க்காம, உங்க வாழ்க்கையை பாருங்க போதும்.” எனப் பட்டென்று முடித்துவிட,

“என்னடி விட்டா பேசிட்டே போற? உனக்கு என்ன பிரச்சனையோனு நாங்க பயந்துட்டு வந்து கேட்டா, தேஞ்சு போன ரெக்கார்டர் போல சொன்னதையே சொல்லிட்டு இருக்க?” என உஷா கோபத்தில் கத்த,

“எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும், உங்க வேலையைப் பாருங்கனு நான் நாசூக்கா சொல்றது உங்களுக்குப் புரியலனா நான் என்ன பண்ண முடியும்?” எனச் சொல்லி முடிக்கும் முன்னே, அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்திருந்தாள் உஷா.

“ஏய் என்ன பண்ற?” என உஷாவின் கையைப் பிடித்த நரேனின் கையைப் பட்டென்று தட்டிவிட்டவள், “எல்லாம் உங்களாலதான்… அன்னைக்கு நான் அவ்வளவு தூரம் சொன்னேன், அவக்கூட இருங்க, போய் பாருங்க, இல்ல நான் போறேன்னு சொன்னேன். கேட்கலதானே? உங்க பிசினஸ் தான் பெருசா போச்சு. இப்போ என்னாச்சுனு பார்த்தீங்களா? அவளுக்கு யார் மேலயும் நம்பிக்கை இல்லாம போச்சு. இது எல்லாத்துக்கும் நீங்க மட்டும்தான் காரணம்.” என ஆவேசமாகக் கத்த,

“ஏய்…” என்றவன் இப்போது அவளை முறைத்துப் பார்க்க, “ஆமா அதுதான் உண்மை. உங்க மனசாட்சியைக் கேட்டுக்கோங்க, பதில் அதுக்கே தெரியும்.” என்றுவிட்டு, “இப்போ உன்னோட முடிவு என்ன? தெளிவா சொல்லு.” என நிசாவிடம் கேட்க,

“எனக்கு இங்க இருந்து போகணும். யாரும் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. எனக்கு அங்க பிடிக்கல இல்ல, பிரச்சனைனா இங்கதான் வருவேன். அதனால யாரும் பயந்துக்காம என்னை அனுப்புங்க.” எனவும்,

“சரி, நீ சொல்றது போலவே செஞ்சிக்கலாம். எனக்கு அது பிரச்சனை இல்லை. நீ ஒன்னும் பிரச்சனையைப் பார்த்து பயந்து ஓடுறவ கிடையாது. அந்த நம்பிக்கைல உன்னை அனுப்புறேன். ஆனா அந்த கமல் புதுசு புதுசா கதை சொல்றான். அப்போ அவன் சொல்றது எல்லாம் உண்மையா?” என நரேன் கேட்க,

“அவன் சொல்றதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது. இப்போ நாங்க போறது என்னோட தனிப்பட்ட முடிவு. இதுல யாரோட தலையீடும் வற்புறுத்தலும் இல்லை.” எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட,

“சரி, அதை நான் பார்த்துக்குறேன். ஆனா இப்போ நீ எங்க போற? யார் உனக்கு அங்க ஹெல்ப் செய்வா? இதெல்லாம் சொல்லலாம் இல்லையா?” எனவும்,

“நோ! இப்போ என்னை எதுவும் கேட்காத, அங்க போனதும் நானே உனக்கு கூப்பிட்டு சொல்றேன். அதுவரைக்கும் என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க.” என முடித்துவிட, அந்த இடமே அமைதியாகிவிட்டது.

எது சொன்னாலும் எடுத்தெறிந்து பேசும் நிசாவை என்ன செய்வது என்றே உஷாவிற்குப் புரியவில்லை. அவளை அப்படியே விடவும் முடியவில்லை. என்ன செய்யலாம் என்றாலும் அதற்கும் இறங்கி வராதவளை என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

இப்படி பிடிவாதமாக இருப்பவளைக் கட்டாயப்படுத்தவும் மனதில்லாமல், உஷாவை அங்கேயே விட்டுவிட்டு நரேன் மட்டும் விக்ரமைப் பார்க்க கிளம்பிவிட்டான்.

நரேன் சொன்னதைக் கேட்ட விக்ரம், “சரி இதுக்கு மேல நாம பண்ண என்ன இருக்கு? அவளுக்கு இவ்வளவு பிடிவாதம் இருந்தா எல்லாமே அவளேப் பார்த்துக்கட்டும்.” என்று முடித்துவிட்டு எழுந்தவன், “நாளைக்கு நான் ஒரு கேஸ் விஷயமா டெல்லி போறேன், வரதுக்கு டூ டேய்ஸ் ஆகும். ஸ்வே நீ வரியா?” என மனைவியைக் கேட்க,

“நாளைக்கா விக்கி, நாளைக்கு முடியாதே. நாங்க எங்க ஃப்ரண்ட்ஸ் கேங்க் எல்லாம் சேர்ந்து டூ டேய்ஸ் கேரளா ட்ரிப் ப்ளான் செஞ்சிருக்கோம். ரொம்ப முன்னாடி பண்ணது, சடனா கேன்சல் செய்ய முடியாதே…” எனப் பாவமாக முடிக்க,

“ஓ… இட்ஸ் ஓகே… நெக்ஸ்ட் டைம் பார்த்துப்போம். இப்போ நான் ஆஃபிஸ் போயிட்டு வரேன்.” என்றவன், நரேனிடம் கண்காட்ட அவனும் எழுந்து விக்ரமோடு வெளியேற, ரித்தி கணவனைப் பார்க்க, அவனோ ஸ்வாதியை யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை உணர்ந்தது போல ஸ்வாதியும், “என்ன ரவி?” என்றதும்,

“விக்கி எப்போ கூப்பிட்டாலும், நீ அவாய்ட் பண்ற மாதிரிதானே நடந்துக்கிற. ஏன் அவனுக்கே எப்போவாச்சும் தான் இப்படி ஒரு டைம் கிடைக்கும். அதை யூஸ் செஞ்சிக்க அவன் நினைச்சாலும், நீ விடுறது இல்ல. இது சரியா? கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல இன்னும் நீ இப்படியே இருக்குறது எந்த வகையில சரி? நீ அந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டு, விக்கி கூட போ.” என கட்டாயமாகக் கூற,

“ஹலோ, அது எனக்குத் தெரியும். நீ சொல்லணும்னு அவசியம் இல்ல. விக்கியே என்னை கேள்வி கேட்குறது இல்ல, நீ ஏன் இதெல்லாம் கேட்குற? உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போ.” என எரிச்சலில் திமிராகப் பேச,

“ஹேய்…” என கோபமாக எழுந்த ரவியை இழுத்துப் பிடித்த ரித்தி, “அவ சொல்றது சரிதானே, அண்ணாவே ஒன்னும் சொல்லல, நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க? கிளம்புங்க, டைம் ஆச்சு.” என கணவனிடம் கோபமாகப் பேச,

“ச்சே… எல்லாம் இந்த அம்மாவைச் சொல்லணும், நைட் வந்து பேசிக்கிறேன்.” என்று ரவியும் மனைவியின் கையை உதறிவிட்டு வெளியேறிவிட்டான்.

“என்ன, உன் புருஷன் உன் பேச்சை அப்படியே கேட்டுட்டு இருக்கான்னு, ரொம்ப திமிரா நடந்துக்குற போல? உன்னைப்பத்தி எல்லாத்தையும் நான் ரவிக்கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா?” எனக் கிண்டலாகக் கேட்க,

“தெரியும், அப்படி நீ சொல்லி தெரியக்கூடாதுனு தான் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவருக்கு எல்லாம் தெரியும். வேனும்னா நீயும் சொல்லு, சொல்லிப்பாரு.” என்ற ரித்தியின் இறுக்கமானக் குரல் ஸ்வாதிக்கு முற்றிலும் புதிது.

“ஹேய் என்ன திமிரா?” என ஆங்காரமாகக் கத்தியவளிடம், “ஏன் என் புள்ளைக்கு நீ சமைச்சுப் போட்டியா?” என ரேணுகாவும் வர,

“ஓ… எல்லாரும் ஒன்னு கூடிட்டீங்க போல? இருக்கட்டும், இருக்கட்டும்… ஆனா, நீங்க யார் என்ன சொன்னாலும் விக்கி நம்பமாட்டர் தெரியும் தானே? உங்களை எல்லாம் போயிட்டு வந்து வச்சுக்குறேன்.” என வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ஸ்வாதி.

அவளுக்கு இப்போது தன்னுடைய திட்டம் சரியாகி, நிசப்தி அவள் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டாளா என்றுத் தெரிய வேண்டும். முதலில் அவளை இங்கிருந்து அனுப்புவோம், பிறகு இவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்து, கோகிலாவிற்கு அழைத்துக்கொண்டே கெஸ்ட் ஹவுசிற்கு வண்டியை விட்டாள்.

இங்கு நிசப்தியின் வீட்டில் இருந்து நரேன் கிளம்பிய சில நிமிடங்களிலேயே, உஷாவின் அப்பாவிற்கு மாரடைப்பு என அவளுக்கு செய்தி வர,

“போய் பார்த்துட்டு வா உஷ்.” என்ற நிசாவை மேலும் கீழும் பார்த்தவள், “அவர் எனக்கு அப்பாவா என்ன செஞ்சிருக்கார், அவரைப் போய் பார்க்க?” என விரக்தியாக முடிக்க,

“அவர் செய்த தப்பையே நீயும் செய்யணும்னு நினைக்காத, அதை உன் அம்மாவோட ஆன்மா கூட மன்னிக்காது. போ, போய் பார்த்துட்டு வா.” என பலதும் பேசி அனுப்பி வைத்தவள், சற்றும் நேரத்தைக் கடத்தாமல் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, வீட்டின் சாவியையும் ஒரு கடிதத்தையும் நரேனுக்கு கொரியர் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பியிருந்தாள் நிசப்தி.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 23, 2026 - 4:47 pm

இந்த விக்ரமும், நரேனும் ஸ்வாதியை முன்னாடி போக விட்டு பின்னாடியே போய் கையும் களவுமா பிடிக்கணும் திருட்டு களவாணியை

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured