Home Antiheroதளிர் – 59

தளிர் 59

ரவி நைனிடால் வந்து சென்று, இன்றோடு இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அன்று ரவியைப் பார்த்து பயந்ததை நினைத்துப் பார்த்தால் இப்போதும் சிரிப்புதான் வந்தது நிசப்திக்கு.

“என்ன மேடம், முகம் பளிச்சுன்னு இருக்கு, என்ன நடந்தது?” என்றபடியே, கையில் காபியுடன் எதிரில் அமர்ந்தாள் சாரு.

“ஹான்…! அன்னைக்கு ரவி வந்துட்டு போனதை யோசிச்சிட்டு இருந்தேன். அவர் வந்த போது நான் எவ்வளவு பயந்து போயிருந்தேன், தெரியுமா?” என்றவளுக்கு அன்றைய நாளை நினைத்து மேலும் சிரிப்பு வந்தது.

“ஸ்வாதியோட அண்ணன் அப்படிங்கிறது ஒரு காரணம் இல்லையா?”

“உண்மைதான், ஆனா நான் நினைச்ச மாதிரி இல்ல. அவங்க வீட்டுல தப்பி பிறந்துட்டார் போல. பாப்பாவை கேட்டுருவாங்களோனு கூட பயந்துட்டேன்.”

“அதுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு அவங்களுக்கு? உருப்படாத தங்கச்சி… அவ என்ன செய்றா, ஏது செய்றானு கூட கவனிக்காத ஒரு அண்ணன், அம்மா. அப்புறம் அவளை மாதிரியே உருப்படாத புருஷன்…” என எரிச்சலில் முகத்தைச் சுருக்க,

“ப்ச்! சாரு ப்ளீஸ்… விக்ரம் பத்தி பேசாத…” என பட்டென்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவள், “நான் நினைச்சு பயந்த மாதிரி எல்லாம் இல்ல இந்த ரவி. கொஞ்சம் நல்லவன்தான் போல…” எனச் சிரிக்க,

“ஹான்! நானும்கூட பயந்துதான் போனேன். ஆனாலும் ஒரேடியா நல்லவங்கனு நம்பிட முடியாது. தசிரா குட்டிக்காக கூட உன்னை நெருங்கலாம். இல்ல, விக்ரம் மேல வச்ச பாசத்தால கூட வந்துருக்கலாம். ஏன், விக்ரமே கூட அனுப்பி வச்சிருக்கலாம். உடனே அவன் நல்லவன்னு சர்டிஃபிகேட் கொடுக்கணும்னு இல்லையே…”

“ம்ம்… உண்மைதான், பட் எங்கிட்ட இந்த விக்ரம் போல, ஸ்வாதி போல எகிறிட்டு வரல, பொறுமையா பேசினான். நரேனை ஏமாத்திட்டானு ரித்தி மேல எனக்கு அடக்க முடியாத கோபம். அவக்கூட எப்பவும் என்னால நார்மலா இருக்க முடியாது. அதனாலயே இந்த ரவியை எனக்குப் பிடிக்காம போச்சு. இப்போ அவன்கூட பேசிப் பழகவும் கொஞ்சம் பிடிக்கத்தான் செய்யுது.” என மெல்ல சிரித்தாள்.

“எனக்கும் அடிக்கடி தோனும் நிசா, இந்த ரவி எப்படி இவ்வளவு கூமுட்டையா இருக்கான்னு. அவனுக்கு வாச்ச யாருமே சரியில்ல. அம்மா, தங்கச்சி, பொண்டாட்டி, ஏன் ஃப்ரண்டான இந்த விக்ரம் இப்படி யாருமே சரியில்ல. பிறகு அவன் எப்படி உருப்படுவான்? எதோ இனியாச்சும் உருப்பட்டா சரி. அதுக்கு இந்த விக்ரம் கூட சேராம இருக்கணும்.” என சாருவும் சிரிக்க, நிசப்திக்கு ரவி வந்து சென்ற நாள் மனக்கண்ணில் வந்து போனது.

***

அன்று ரவியைப் பார்த்து அவள் பயந்தது எல்லாம் சில நொடிகள்தான். பிறகு, “ஹேய்! இங்கே எப்படி, ஏன் வந்த?” எனக் கத்த,

“ஷ்ஷ்…!” என வாயில் கை வைத்து கையில் இருந்த குழந்தையைக் காட்ட,

“ஷிட்…!” என்றவள், அவனை முறைத்தபடியே எதிரில் அமர, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் குழந்தையுடன் ஐக்கியமாகிவிட்டான்.

சில பல நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தவன், தன்னையே முறைத்துக் கொண்டிருந்த நிசாவிடம், “முறைச்சு முடிச்சிட்டா கொஞ்சம் பேசலாம்.” என்றான் அசால்ட்டாக.

“உங்கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல, முதல்ல நீ எப்படி இங்க வந்த? யார் உனக்கு இந்த அட்ரஸ் கொடுத்தது? ரேணுகாம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சா?” என படபடவென பேச,

“எனக்கு எப்படி தெரியும்னு உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அன்ட் அத்தைக்கிட்ட இனிமேல் தான் சொல்லணும். சொல்லலாமா, வேண்டாமானு உங்கிட்ட பேசின பிறகுதான் முடிவு பண்ணணும்.” என வார்த்தைகளில் காரத்தைக் கூட்ட,

“ம்ச்! உனக்கு இப்போ என்ன பேசணும்? சீக்கிரம் பேசிட்டு கிளம்பு.” என சிடுசிடுக்க,

“முதல்ல இப்படி எரிச்சலா பேசுறதை நிறுத்து, நார்மலா பேச உனக்கு என்ன கஷ்டம்?” என அவனும் சிடுசிடுக்க,

“ஊப்ஸ்…” என பெருமூச்செடுத்து தன்னை சமாதானம் செய்தவள், “சரி, சொல்லு.” என பல்லைக் கடித்து அமைதியாக கேட்க,

“நீ எப்போ அங்க வர?”

“வாய்ப்பில்ல, வேற?”

“ம்ச்! கோபப்படாம யோசிச்சு சொல்லு, எப்போ அங்க வர?”

“நான் வரல, வரமாட்டேன்.”

“விக்ரம் விட்டுடுவான்னு நினைக்கிறியா, கண்டிப்பா விடமாட்டான். அவன் மூளை எப்பவும் கிரிமினலாதான் யோசிக்கும்…” என முடிக்கும் முன்னே நக்கலாகச் சிரித்தாள் நிசப்தி.

“ப்ச்! எல்லோரும் எப்பவும் பெர்ஃபெக்டா இருக்க முடியாது நிஷா. ஏதோ ஒரு இடத்துல சறுக்கத்தான் செய்வாங்க. அப்படி விக்ரம் சறுக்கின இடம் ஸ்வாதிதான். அவளை உண்மையா நேசிச்சிட்டான். அதனாலதான் அவமேல சந்தேகப்படல. அதுதான் அவனோட தப்பு. இனியும் அப்படி இருப்பான்னு நினைக்காத.”

“தேவையில்லாத பேச்சே வேண்டாம், எனக்கு யாரைப் பத்தியும் தெரிஞ்சிக்க வேண்டாம். இப்போதான் நான் நிம்மதியா இருக்கேன். இதையும் கெடுக்கலாம்னு யோசிக்கிறீங்களா? நான், என் பொண்ணு, இந்த வாழ்க்கை போதும். இனியும் யாரையும் நம்பி ஏமாற நான் தயாரா இல்லை.”

“நீ சரி, உன் பொண்ணு எப்படி சரி? அவ விக்ரமுக்கும் பொண்ணு. அவன் எப்படி அவன் பொண்ணை விட்டுக் கொடுப்பான்? கண்டிப்பா விடமாட்டான், அதனால நீயே கிளம்பி வந்துடு. நான் உங்களைப் பார்த்துக்குறேன்.”

“தேவையில்லை, எங்களைப் பார்த்துக்க எனக்கு தெரியும். தேவையில்லாம எந்த பேச்சும் வேண்டாம்னு நான் சொல்லிட்டே இருக்கேன்…” எனக் கத்த,

“எதுக்கு இப்படி கத்துற? நான் நார்மலா பேசுன்னுதானே சொல்றேன். இங்க பாரு நிஷா, ஸ்வாதி செஞ்சதையோ, விக்ரம் செஞ்சதையோ நான் சரின்னு எங்கேயும் சொல்லல. இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் இருக்கட்டும், இனி எதுவும் செஞ்சிடக்கூடாது. அதுக்காகத்தான் நான் சொல்றேன், நீங்க இங்க இருக்கீங்கனு விக்ரமுக்கு இன்னும் தெரியாம இருக்குமா? ஹான்! தெரியும், தெரிஞ்சும் ஏன் அமைதியா இருக்கான்? ஏதோ ப்ளான் பண்றான், நீயே அங்க வரணும்னு ப்ளான் பண்றான். அதுக்காகத்தான் சொல்றேன், கிளம்பி அங்க வா பார்த்துக்கலாம்.”

“ப்ளீஸ் ரவி, நான் உங்களை எதிர்த்து பேசுறதா நினைக்க வேண்டாம். என்னை இப்படியே விடுங்க. எனக்கும் கொஞ்சம் யோசிக்கணும். இத்தனை நாளா யாருக்காகவோ ஓடி, ஒளிஞ்சி, பயந்து, இழக்கக்கூடாதது எல்லாம் இழந்து, அனாதையா நிக்குறேன். என்னைப்பத்தி நானே இன்னும் யோசிக்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள மறுபடியும் ஒரு ஓட்டம்னா என்னால முடியல.” என அயர்வாய் சொல்ல, ரவிக்குமே அவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

“ஓகே லீவிட்! இனி நான் இதைப்பத்தி பேசவே இல்லை. உனக்கு எப்போ என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னை கூப்பிடு. நான் உனக்காக வந்து நிற்பேன். இது ஸ்வாதி செஞ்ச பாவத்துக்கான பரிகாரம்னு நீ நினைச்சிடக்கூடாது. நான் உனக்காக மட்டும் தான் செய்யணும்னு நினைக்கிறேன், சரியா?” என ஒருவழியாக அவளைப் பேசி சமாதானம் செய்து கிளம்பியிருந்தான்.

ஆனாலும் அவன் சென்ற சில நாட்கள் வரை மிகவும் பயந்து போய்தான் இருந்தாள் நிசப்தி.

எங்கே ரேணுகாவையோ, விக்ரமையோ அழைத்து வந்துவிடுவானோ என்று. ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.

ஏன், சென்ற நாளில் இருந்து அவளுக்கு அழைத்துக்கூட பேசவில்லை. அதன்பிறகு தான் அவளுக்கு மூச்சே நிதானமாக வந்தது.

“என்ன ஃப்ளாஷ்பேக் போய் வந்தாச்சா?” எனச் சிரிப்புடன் கேட்ட சாருவைப் பார்த்து நிசாவும் சிரித்துக்கொண்டாள்.

***

இங்கு உஷா தன்னிடமிருந்த ஆதாரங்களை வைத்து, எப்படி விக்ரமை போலீசில் மாட்டிவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

இதில் விக்ரம் எங்கும் இல்லைதான். ஆனால் செய்தது அவன் பொண்டாட்டிதானே! அவனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லையே?! அதனால் கமிஷ்னரிடம் கொடுத்தால், சந்தேகத்தின் பேரிலாவது அவனை விசாரிப்பார்கள் என்று நினைத்து, கமிஷ்னர் அலுவலகம் சென்றுவிட்டாள்.

சில மணி நேர காத்திருப்பிற்கு பிறகு அவளை அழைத்த கமிஷ்னர் என்னவென்று விசாரிக்க, இப்போது இதை அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா என யோசித்து, வேறு வழியில்லாமல் அவரிடம் கூறிவிட்டு ஆர்வமாக அவரையே பார்த்தாள்.

“ஓகேமா, இது சீக்ரட்டாதான் ஹேண்டில் பண்ண முடியும். ஏன்னா அக்யுஸ்ட் இப்போ இங்க இல்லை. அவங்க எங்க இருக்காங்கனு முதல்ல கண்டுபிடிக்கலாம், அதுக்குப்பிறகு ஃபர்தரா மூவ் பண்ணிக்கலாம்.” என முடித்துவிட,

“சார், அவ்ளோதானா சார்? அந்த விக்ரமை கூப்பிட்டு விசாரிக்க மாட்டீங்களா?” என யோசனையாக கேட்க,

“கம்ப்ளைன்ட் கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சது. அடுத்து என்ன செய்யணும்னு நாங்கதான் முடிவு பண்ணுவோம். உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது இருந்தா, இன்ஃபார்ம் பண்ணுவோம். மற்றபடி நீங்க தேவையில்லாம இந்த கேஸ்ல மூக்கை நுழைக்க வேண்டாம்.” எனக் கண்டிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஹாய் வசந்த்!” என உள்ளே வந்தான் விக்ரம். அவனைப் பார்த்ததும் பட்டென்று எழுந்த உஷா தீயாய் முறைத்துப் பார்க்க, ‘என்ன?’ எனும் விதமாக விக்ரமும் கிண்டலாய் புருவத்தை உயர்த்த, இவளுக்கு ஏகத்துக்கும் பிபி எகிறியது.

“ஹேய்! வா… வா… விக்ரம், என்னய்யா ஊர்லயே இல்ல போல? க்ளப் பக்கம் கூட உன்னை காணோம்?” என கை குலுக்கி வரவேற்றான் வசந்த்.

“ஆமாப்பா, இந்த ஐபிஎல் வொர்க்தான். அதோட லீகல் ஃபார்மாலிடிஸ் முடிஞ்சாதான் ஃப்ரீ ஆவேன். இப்பவும் நரேனை விட்டுட்டுதான் நான் வந்துருக்கேன். சொல்லு, நீ எப்படி இருக்க, வீட்டுல எல்லாம் ஓகேவா?”

“ஓ… யெஸ், எல்லாரும் ஃபைன். அங்க எப்படி?” என கண்ணைச் சிமிட்ட, “நீ வேற ஏன்பா…” என சலித்தவன், பக்கத்தில் நின்றிருந்த உஷாவை கண் காட்டினான்.

“நீங்க இன்னும் கிளம்பலையா? அப்பவே போகச் சொல்லிட்டேனே…” என கமிஷ்னர் கூற,

“இவர் உங்க ஃப்ரண்டா?” என விக்ரமைக் காட்ட,

“அத தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறீங்க, கிளம்புங்க.” என விரட்ட,

“நான் கொடுத்த கேஸோட விசாரனை எப்படி இருக்கும்னு எனக்கு இப்பவே தெரியுது.” என நக்கலாக கூற,

“கெட் லாஸ்ட்!” என வசந்த் கத்த,

“ம்ம்… போறேன் போறேன்…” எனப் பல்லைக் கடித்தவள், விக்ரமைப் பார்த்து முறைத்துக்கொண்டே கிளம்பிவிட்டாள்.

“ஏன்டா ஒரு பொண்ணுகூட உன்னை லவ்வாங்கிள் பேஸ்ல லுக் விடாதா?” என வசந்த் சிரிக்க,

“ஹா… ஹா… இவதான் நரேனோட வொய்ஃப். ரெண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க. அவ முறைக்க காரணம் இருக்கு, இவ ஃப்ரண்ட் தான் நிசா.” எனச் சிரிக்க,

“அப்போ உன்னை அறைஞ்சிருந்தாலும் தப்பில்லதான்…” என தானும் சிரித்து, உஷா கொடுத்த ஆதாரங்களை விக்ரமிடம் கொடுக்க,

“அதை அப்படியே குப்பையில போடு, அவளுக்கு அனுப்பினதே நான் தான்டா.” என்றவன், “இவளைக் கொஞ்சம் உன் பார்வையிலயே வச்சுக்கோ. இனி விக்கியோ ஸ்வாதியோ அமைதியா இருக்க மாட்டாங்கனு எனக்கு தோனுது. என் பின்னாடி அலைஞ்சி இவளுக்கு பிரச்சனை ஆகிடப்போகுது. நான் பாப்பாவை பார்ப்பேனா, இல்ல அவ அம்மாவை பார்ப்பேனா, இல்ல இவளை பார்ப்பேனா?” என சோகமாக இழுக்க,

“டேய்… டேய்… நீ ரொம்ப நல்லவன் தான்டா…” எனச் சிரித்துவிட்டு, “அடுத்து உன் ப்ளான் என்ன? கமலை வச்சு இனி ஒரு யூசும் இல்லை. அவன் இனி விக்கிக்குத் தேவையும் இல்லை. இந்நேரம் அவனுக்குப் பதிலா வேற ஆள் செட் பண்ணிருப்பான், கவனமா இருக்கணும் விக்ரம்.” என யோசனையாக முடிக்க,

“ம்ம்… அதெல்லாம் நான் பக்காவா ப்ளான் பண்ணிட்டேன். எல்லாம் டூ வீக் தான், ரெண்டு பேரும் இண்டியா வந்துடுவாங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விக்ரம் யாருன்னு அவனுக்குத் தெரியும்.” என திடீரென்று ரௌத்திரமானான் விக்ரம்.

“விக்ரம் அதான் எல்லாம் பக்கா ப்ளான் சொல்றியே, விடு பார்த்துக்கலாம். அதுக்கு முன்ன உங்க வீட்டு இளவரசியை இங்க கொண்டு வந்து சேர்க்க பாரு.” என கிண்டலாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

“டேய், போதும்… போதும்… சிரிக்காத, என் பொண்ணு அந்த பைத்தியத்துக்கிட்ட இருக்காளேன்னுதான் அவளை சும்மா விட்டு வச்சிருக்கேன், இல்லைன்னா?” என பல்லைக் கடிக்க,

“இல்லைன்னா நீங்க டேஷ் பண்ணிருப்பீங்க சார். உன்னையும் ஒரு பொண்ணு ஓட விடுறானு நினைக்கும் போது அப்படியே ஃபுல் பீரடிச்சு மட்டையான ஃபீல்டா மாமா.” என வசந்த் சிரிக்க,

“சாவடிச்சிடுவேன்டா உன்னை… அந்த பைத்தியம் அப்படியே மூளையில போய் உக்காந்துகிட்டு, ஒரு வேலையும் செய்ய விடுறது இல்ல. வேதாளம் போல ஏறி உக்காந்துட்டு என் உயிரை எடுக்குறா.” என எரிச்சலில் கத்த,

“ஹா… ஹா… மாமா, உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குடா.” என கிண்டலடித்துவிட்டு, பின் சீரியசான குரலில், “இனியாச்சும் அவளை சந்தோசமா வச்சுக்க விக்ரம். இந்த வயசுல அந்த பொண்ணு அனுபவிக்காத வலியும் இல்ல, வேதனையும் இல்ல.”

“ம்ம்ம்…” எனப் பெருமூச்சுவிட்டவன், “சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன் வசந்த், தேங்க்ஸ்டா…” என மனப்பூர்வமாக சொல்ல,

“எல்லாம் சரியா முடிஞ்ச பிறகு இந்த தேங்க்ஸை சொல்லுடா, அதுவரை இதை நீயே வச்சுக்கோ.” என்றவன், அடுத்து வேறு விசயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

சிறிது நேரத்தில் விக்ரமின் மொபைல் ஒலிக்க, புது எண் என்றதும் யோசனையுடன் எடுத்து, “ஹலோ விக்ரம் ஸ்பீக்கிங்…” எனவும்,

“விக்ரம்… விக்ரம் நான் சாரு…” என பதட்டமானக் குரலில் சாரு பேச,

அதே பதட்டம் இங்கு விக்ரமிற்கும் தொற்றிக்கொண்டது. “என்ன, என்னாச்சு சாரு? பாப்பாக்கு என்ன?” என அவனும் கேட்க,

“பாப்பாவுக்கு தடுப்பூசி போட்டுட்டு திரும்பி வர வழியில, யாரோ நாலு பேர் வந்து நிசாவையும் பாப்பாவையும் கடத்திட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு விக்ரம். நான் என்ன பண்ணட்டும்? ப்ளீஸ்… பாப்பாக்கு இப்போ ஃபீவர் வேற…” என அழ ஆரம்பிக்க,

“ஓகே ஓகே… நான் பார்த்துக்குறேன், ரெண்டு பேரும் இன்னைக்கே வீட்டுக்கு வந்துடுவாங்க. நீ வீட்டுக்கு போ, தம்பி தனியா இருப்பான்.” என்று பேசிக்கொண்டே, வசந்திடம் கண்ணைக் காட்டிவிட்டு வெளியில் வந்தான்.

“விக்ரம், நிசா… நிசாவுக்கும் ரெண்டு நாளா ஃபீவர். அவளால எதுவும் செய்ய முடியாது. இப்போ பாப்பாவுக்கும் ஃபீவர்…” என அழ, “ம்ம்ச்ச்… அதுதான் நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டேன் இல்ல, முதல்ல அழுகையை நிறுத்திட்டு வீட்டுக்குப் போ, அவங்க வந்துடுவாங்க.” என்றவன், தன் போனில் அவர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த லொகேஷனை ஆராய்ந்தான். சிட்டியில் இருந்து சில கிலோ மீட்டர்தான் தூரம்.

அடுத்தடுத்து போன் செய்து, அங்குள்ள அவன் ஆட்களுக்கு கால் செய்ய, “பாஸ் நீங்க சொன்ன மாதிரியே ரெண்டு பேரையும் கிட்னாப் பண்ணிட்டேன்.” என இளித்துக்கொண்டே சொல்ல,

“ஓகே, நான் சொல்ற வரை பார்த்துக்கோ.” என்று வைத்தவன் முகத்தில், ‘என்கிட்டயேவா? ஹான், நான் விக்ரம்டா!’ என கர்வமான புன்னகை.

***  

You may also like

1 comment

M. Sarathi Rio April 16, 2026 - 5:39 pm

ஓ… அப்படின்னா, விக்கிக்கு முன்னாடியே விக்ரம் முந்திக்கிட்டு நிஷா, தர்ஷி ரெண்டு பேரையும் கடத்திட்டானா?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured