தளிர் 72
நிர்மலமான முகத்துடன் கண்களை மூடி படுத்திருந்த மதியழகியை, கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். சற்றுமுன் அவருக்கும் அவனுக்கும் நடந்த வாக்குவாதங்களை நினைத்துப் பார்த்தான்.
இன்ஸ்பெக்டர் கண்ணனை வரவைத்து அவனிடம் பேச, பணத்தையும் டாகுமெண்ட்ஸையும் கொடுத்து கூடவே ஸ்வாதியையும் அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வர, அவனை யோசனையாக பார்த்தார் மதி.
அவர் முகத்தைப் பார்த்தவன், “என்னாச்சு ஆன்ட்டி?” எனவும்,
“நீ யாரு? எதுக்கு என் பொண்ணை இப்படி கஷ்டப்படுத்துற? கட்டின புருசனை விட்டுட்டு உங்கூட வர அளவுக்கு, அவளுக்கு நீ யாரு?” என கோபமாக கேட்க,
“உங்க பொண்ணு உங்ககிட்ட என்ன சொல்லிருக்கா? எதுவரைக்கும் சொல்லிருக்கா?” என்றவனுக்கு கோபம் மெல்ல ஏற ஆரம்பித்தது.
“அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகும் போது, நீயும் உங்க குடும்பமும் காப்பாத்தினதா சொன்னா.” என்றவருக்கு மகள் மேல் அசாத்திய நம்பிக்கை, துளியும் சந்தேகம் வரவில்லை.
“ஓ…” என்றவன், “இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியலையே…” என யோசனையானவன் ஸ்வாதிக்கு அழைத்து, “ஸ்வீட்டி ஆன்ட்டிக்கு ஏன் நீ நம்மளைப்பத்தி சொல்லல?” என கேட்க,
“என்னாச்சு விக்கி? அம்மா உன்னை ஹர்ட் பண்ணிட்டாங்களா? நம்ம ப்ளான் எல்லாம் சக்சஸ் ஆனதும் சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.” எனவும்,
“கிழிச்ச…” என்றவன், “ஆன்ட்டி என்னை தப்பா நினைச்சிட்டு சந்தேகமா கொஸ்டின் பண்ணிட்டு இருக்காங்க.” என கத்த,
“நோ நோ விக்கி… நீ கத்தாத, நான் அம்மாக்கிட்ட பேசுறேன், டென்சன் வேண்டாம்.” எனக் கெஞ்சியபடியே சமாதானம் செய்ய, மதிக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
தன்னுடைய மகளா இது? அவளுக்கு இப்படி இறங்கி கெஞ்சியெல்லாம் பேசத் தெரியுமென்று அவருக்கே இப்போதுதான் தெரிகிறது.
யாரையும் மதித்ததில்லை, யாரிடமும் இரங்கி, இறங்கி பேசியதில்லை. திமிரான பேச்சு, திமிரான பாவனை, நடத்தை, அகம்பாவம் பிடித்தவள் இப்படித்தான் மகளைப் பார்த்திருக்கிறார், கேள்வியும் பட்டிருக்கிறார். ஆனால் இன்று எவனோ ஒருவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “ம்மா, உனக்கு என்ன தெரியணும்? எதுக்கு இப்போ விக்கியை ஹர்ட் பண்றீங்க? எனக்கு முன்னாடி இருந்தே விக்கியை மட்டும்தான் பிடிக்கும். என் காலேஜ் டேஸ்ல இருந்து விக்கியை லவ் பண்றேன். அவனுக்காகத்தான் எல்லாமே பண்ணேன். மீதியை நான் வந்து சொல்றேன்.” என கத்த, இப்போது அந்த திமிர் அவளுக்கு வந்திருந்ததைக் கண்டுகொண்டார்.
“அப்போ… அப்போ… அந்த ஆக்சிடென்ட்…?” என மதி அதிர்ச்சியில் கேட்க,
“ம்மா ஆக்சிடென்ட்டே நடக்கல, அது ஒரு ட்ராமா. நான் வந்து சொல்றேன்…” என வைக்கப் போக,
“ஸ்வீட்டி…” என்ற விக்னேஷின் குரல் இடையில் வர, “எஸ் விக்கி…” என இப்போது இந்தக் குரல் நிச்சயம் குழைந்து தான் வந்தது. அதையும் மதி அதிர்ந்துதான் பார்த்தார்.
“அங்க என்ன வேணும்னாலும் நடக்கலாம், உனக்கு எதிரே இருக்குறது விக்ரம். அடிபட்ட புலி, சோ கவனம்.” என்றவனிடம்,
“புலியா? அவனா? ஹா… ஹா… பூனைன்னு சொல்லலாம் விக்கி. ஹா… ஹா… அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் விக்கி, யூ டோன்ட் வொரி. அம்மா என்ன சொன்னாலும் கண்டுக்காத, ப்ளீஸ்…” என்றவளுக்கு சரியென்று வைத்தவன், இப்போது மதிக்கு எதிரில் வந்து நின்றான்.
“ஆன்ட்டி வாங்க, நாம உக்காந்து பேசலாம். உங்களுக்கு நான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன். அப்போதான் உங்க பொண்ணையும் புரியும், என்னையும் தெரியும்.” என சோபாவில் அமர வைத்து, எதிரில் அவனும் அமர்ந்தான்.
சில நொடி மௌனத்திற்குப் பிறகு “ஆன்ட்டி நான், ரவி, விக்ரம் ஒரே காலேஜ், க்ளாஸ்மேட்ஸ்…” என ஆரம்பித்து, நிசாவைக் கடத்தியது வரை சொல்லிவிட்டு அவர் முகம் பார்க்க, அது அதிர்ச்சியிலும் பயத்திலும் மொத்தமாக வெளுத்திருந்தது.
“ஆன்ட்டி… ஆன்ட்டி… இங்க பாருங்க, நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் நடக்கல. நீங்க இவ்வளவு பயப்படுறீங்க. அதனால மீதியை உங்க பொண்ணு வந்தே சொல்லட்டும்.” என அவரைப் பார்த்து சிரித்தபடியே நிதானமாக எழ,
“இல்ல இல்ல… நீ… நீங்க சொல்லுங்க, அவ எங்கிட்ட எல்லாமே சொல்வாளா தெரியாது.” என திக்கித் திணறியவர், “உங்களுக்குத்தான் அந்த நிசாவைப் பிடிச்சிருந்ததே, அவளையே கல்யாணம் செய்துகோங்களேன். என் பொண்ணை விட்டுடலாம் இல்ல. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு.” என மென்று முழுங்க,
“ம்ம்… உங்களுக்கு அந்த விக்ரமைத் தவிர வேற யாரையும் மாப்பிள்ளையா பார்க்க மனம் ஒப்பல இல்ல. நாங்க இங்க வந்த அன்னைக்கே அது எனக்குப் புரிஞ்சது.” என சிரித்துக்கொண்டே கிட்சனுக்குள் சென்றான்.
“எங்க… எங்க போற? இல்ல, போறீங்க…?” மதிக்கு பயத்தில் வாய் குளறியது. பயத்தில் மரியாதைத் தன்மை தன்னால் வந்தது.
“நீங்க ரொம்ப பயந்து போய் இருக்கீங்க. அதான் ஒரு காஃபி கொடுக்கலாம்னு… எனக்கும் இப்போ காஃபி குடிக்கணும்.” என்றவன், “நீங்க உட்காருங்க, நான் கொண்டு வரேன்.” என எழுந்த மதியை மீண்டும் இருக்கையில் வலுக்கட்டாயமாக அமர வைத்துவிட்டு, கிட்சனுக்கு நகர்ந்தான்.
விக்னேஷுக்குள் பல எண்ணங்கள், புதிதாக சில திட்டங்கள். அதை எப்படி செயலாற்ற என்ற யோசனையோடே பாலைக் காய்ச்சியவன் மீண்டும் ஸ்வாதிக்கு அழைத்தான்.
“எங்க இருக்க ஸ்வீட்டி?” என்றதும்,
“டென் மினிட்ஸ்ல அங்க ரீச்சாகிடுவேன் விக்கி, எனி ப்ராப்ளம்? அம்மா உன்னை என்ன சொன்னாங்க?” என வருத்தமாக கேட்க,
“அதெல்லாம் பிரச்சனையில்லை, ஆன்ட்டியை நான் பார்த்துக்கிறேன். உங்கிட்ட ஒன்னு கேட்கணும், நம்ம லைஃப்க்கு எதிரா யார் வந்தாலும், அவங்க எனக்கு தேவையே இல்லை. உனக்கு எப்படி?” என தீர்க்கமாக கேட்க,
“என்ன விக்கி, என்ன நடந்தது?” என ஸ்வாதி பதட்டமாக கேட்க,
“நான் கேட்டதுக்கு பதில் இன்னும் வரல…” என்றான் காட்டமாக.
“உனக்குத் தேவையில்லாத யாரும் எனக்கும் தேவையில்ல விக்கி. நீ இப்படி கோபப்படாதேயேன், இன்னும் ஹெல்த் சரியாகல இல்ல…” என பரிதவித்தவளிடம்,
“நீ பயப்படுற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கல ஸ்வீட்டி. அப்படியே நடந்தாலும் நீ என்னை விட்டுட்டு போகமாட்டனு எனக்குத் தெரியும். எனக்காக நீ எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க, உனக்காக நான் செய்ய வேண்டியது என்னோட கடமை ஸ்வீட்டி.” என கோபம் மொத்தமும் வடிந்த குரலில் பேச,
“விக்கி என்னோட லைஃப்ல எனக்கு எப்பவுமே நீ மட்டும் போதும். நீ இருந்தா மட்டும்தான் நான் சந்தோசமா இருப்பேன். உங்கூட மட்டும்தான் என்னோட லைஃப் முழுமையடையும்.” என தன் ஒட்டுமொத்த காதலையும் அவனுக்கு சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷுக்கு அந்த வார்த்தை, அவனை வானில் பறக்க வைத்தது எனலாம்.
“எஸ் பியூட்டி, எனக்கும் நீ மட்டும் போதும். நீ, நான், நம்ம பேபிஸ் இது மட்டும் போதும் நம்ம லைஃப்க்கு. இன்னைக்கு நைட் நமக்கு லண்டன் போக டிக்கட் போட்டுட்டேன். அதுக்குள்ள நீ உன்னோட ஒர்க் முடிச்சிட்டு வந்துடு, நானும் முடிச்சிடுவேன்.” எனவும்,
“ஓகே டார்லிங், இன்னைக்கு எல்லாமே முடிஞ்சிடும். இனி நம்மளை எதிர்த்த யாருமே நிம்மதியா இருக்க மாட்டாங்க. கண்டிப்பா அந்த நிசாவை கொல்லாம நான் இங்க இருந்து வரமாட்டேன்.” என சூளுரைத்தவளிடம்,
“அவ, அந்த நிசா என் கையால சாகணும்னு நான் நினைக்கிறேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவளை நான்தான் கொல்லணும்.” என்றவனின் குரல் சட்டென்று ரௌத்திரமாக மாற,
“ஓகே டன்! என்னோட விக்கி சொல்லி நான் செய்யாம இருப்பேனா? செஞ்சிடலாம், யூ டோன்ட் டேக் டென்சன்.” என்றவள் அவனை மேலும் சமாதானம் செய்துவிட்டு வைத்துவிட, விக்னேஷ் திரும்பி ஹாலை பார்த்தான்.
முகம் முழுக்க பதட்டமும் பயமுமாக அமர்ந்திருந்தார் மதி. அவருக்குத் தன்னை பிடிக்கவில்லை என்பதுகூட கோபமில்லை அவனுக்கு. அந்த விக்ரமை மட்டும்தான் பிடித்திருக்கிறது என்பது தான் கோபமே.
தன் தாடியைத் தடவியனின் விரல்கள் கழுத்துக்கு இறங்க, கண்களை மூடி தன்னை சமன்செய்தவன், ‘சாரி ஆன்ட்டி’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, தன் செயினில் இருந்த லாக்கெட்டை கழட்டி, அதிலிருந்த பொடியை அந்த காஃபி கப்பில் கொட்டி, பால், சக்கரை, காஃபி பொடி என அனைத்தையும் சேர்த்து மிக நிதானமாகக் கலக்கினான்.
மதிக்கு மகளின் இந்த மற்றொரு பக்கம் பெரும் பயத்தைக் கொடுத்தது. விக்ரம் மீதிருக்கும் ஆசையில்தான் நிசாவை பழிவாங்குகிறாள் என்று நினைத்து அவளுக்கு உதவி செய்தார்.
அவள் செய்த தவறுகளையும் கண்டிக்காமல் விட்டார். ஆனால் அவள் செய்தது விக்ரமிற்காக அல்ல, இதோ இங்கு நிற்கும் விக்னேஷிற்காக என்று தெரிந்ததும், அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு அடுத்து என்ன செய்வது, யாரிடம் கூறுவது என்றும் தெரியவில்லை. மகனுக்கு அழைத்து சொல்லலாம் என்றாலும், இவர்களுக்காக அவனையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது.
இப்போது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரம், காஃபியுடன் வந்தான் விக்னேஷ்.
“எடுத்துகோங்க ஆன்ட்டி, முதல்ல குடிங்க. கண்டிப்பா இப்போ உங்களுக்கு இது தேவை.” என காஃபி கப்பை நீட்ட,
பயத்தில் அதை எடுக்காமல் அவனையே விழித்துப் பார்க்க, “நான் அவ்வளவு மோசமான ஆளெல்லாம் இல்ல ஆன்ட்டி, உங்க பொண்ணை நான் ரொம்ப நல்லா பார்த்துக்குவேன். ப்ளீஸ்… இப்படி பயந்து பார்க்காம, நார்மலா இருங்க. அப்போதான் மீதியையும் சொல்லுவேன்.” எனவும்,
அவன் சொன்னதற்காக இல்லையென்றாலும், இந்த அதிர்ச்சிகளை விழுங்கி சரி செய்ய, அவருக்கு இந்த காஃபி தேவையாகத்தான் இருந்தது.
அதனால் மறுக்கத் தோன்றாமல் காஃபியை எடுத்துக் கொண்டார். அவருக்கு எதிரே அமர்ந்த விக்னேஷின் கையிலும் காஃபி கப் இருக்க, எந்த சந்தேகமும் இல்லாமல் குடிக்க ஆரம்பித்தார்.
“நிசாவை எனக்கு பிடிச்சதுதான், ஆனா அது காதலானு தெரில. காதலா இருந்திருந்தா எந்த விக்ரம் வந்து பிரச்சனை செஞ்சிருந்தாலும் அவளை விட்டுருக்க மாட்டேன். என்னை வேண்டாம்னு சொன்ன கோபம்தான், அவளைக் கடத்த வச்சது. அப்பவும் நான் அவளை எப்படியாவது கல்யாணம் செய்துக்கலாம்னு தான் கடத்தவும் சொன்னேன்.
ஆனா நடந்தது, அவளும் அந்த விக்ரமும் என்னை சாகுற மாதிரி அடிச்சி போட்டுட்டு, நான் செத்துட்டேன்னு கன்ஃபார்மும் செஞ்சி, அங்கேயே போட்டுட்டு போயிட்டாங்க. உங்க பொண்ணு, என்னோட ஸ்வீட்டி மட்டும் வராம போயிருந்தா…” என்று பெருமூச்சு விட்டவன்,
“அவ என்னோட ஏஞ்சல் ஆன்ட்டி. யாருக்கு எப்படியோ, எனக்கு அவ தேவதைதான். அவளை யாருக்கும் எப்பவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது ஆன்ட்டி. அவ வராம போயிருந்தா, நான் இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். எனக்காக அவ செஞ்சது எல்லாம் சாதாரண விஷயங்கள் கிடையாது.” என்றவன்,
மீண்டும் விட்ட இடத்திலிருந்து தங்களின் பழைய கதையை ஆரம்பித்தான். ஸ்வாதி வந்து காப்பாற்றியது, சொத்துக்களை விற்று அவனுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தது, நிசாவைப் பழிவாங்க விக்ரமை பயன்படுத்தியது, தன்னுடன் வருவதற்காக ஆக்சிடென்ட் ப்ளான் செய்தது, லண்டனில் நடந்தது என அனைத்தையும் விளக்கமாகக் கூறி அவரைப் பார்க்க, அவரது விழிகள் அவனைப் பார்த்தாவாறே சுருங்கிக் கொண்டிருந்தது.
பார்வை மங்கலாகத் தெரிய, உடலும் சோர்ந்து மயக்கத்திற்கு தள்ள ஆரம்பிக்க, “என் பொண்ணு அப்படியெல்லாம் இல்ல, அவளுக்கு இதெல்லாம் தெரியாது. நீ அவளை ஏமாத்திட்டிருக்க…” என கோபமாக பேச நினைத்தும் முடியாமல் பேச,
“ஹா… ஹா… ஆன்ட்டி, அவளுக்கு ஒன்னும் தெரியாதா? அவளுக்கு இருக்கிறது கிரிமினல் மூளை ஆன்ட்டி. உங்க பொண்ணைப் பார்த்துதான் நானே இறங்கி இந்த வேலையை செய்றேன்.” எனச் சிரிக்க,
மதிக்கு நம்பவே முடியவில்லை, தன் பெண் இவ்வளவு மோசமானவளா? அவளுக்காக நான் அனைவரையும் பகைத்து நிற்க, இவளானால்!? அடுத்து யோசிக்க முடியவில்லை.
தன் உடலிலும் சில மாற்றங்கள். இதயத்துடிப்பு வேகமானது. கை, கால்கள் எல்லாம் ஒரே பக்கமாய் இழுத்துக்கொண்டது. வாயிலிருந்து நுரையும் வெளியேற கருமணிகள் மேலேறிக் கொள்ள, அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவரின் அருகில் வந்து மண்டியிட்டவன்,
“ஸாரி ஆன்ட்டி, நீங்க எங்களைப் பிரிச்சிடுவீங்கனு எல்லாம் இதை பண்ணல. நானும் அவளும் புருஷன், பொண்டாட்டியா வாழ்ந்திட்டு இருக்கும் போது, நீங்க அவளை மறுபடியும் அந்த விக்ரம் கூட சேர்த்து வைக்கணும்னு யோசிக்கிறீங்க. ஒரு தடவைதான் விட்டேன், மறுபடியும் எப்படி விடுவேன்? அப்படி நடந்துடும்னு ஒரு சதவீதம் எனக்குத் தெரிஞ்சாலும், அதுக்குப்பிறகு நான் மனுஷனா இருக்க மாட்டேன். இப்பவும் ரொம்ப எல்லாம் யோசிக்கல, ஜஸ்ட் ஒரே செகண்ட் யோசிச்சேன், முடிச்சிட்டேன்.” என்றவன் அவர் உயிர் அந்த உடலைவிட்டு மெல்ல பிரிவதை, அவருக்கு எதிரில் அமர்ந்து மிகவும் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
***
1 comment
மதியையும் போட்டுத் தள்ளிட்டானா..? சூப்பர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797