Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 28

காதல் கசக்குதைய்யா – 28

by Vathani S

காதல் கசக்குதைய்யா – 28

ஒரு யுகமே கழிந்தது போல இருந்தது ஆதனுக்கு அளிக்கப்பட்ட  இருபத்தி நான்கு மணி நேர அவகாசம். வீட்டினர் அனைவருக்குமே மிகவும் கடினமாகத்தான் கழிந்தது அந்தக் கணமான கனங்கள்.

அதிலும் பவித்ராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், ஆதன் விழிப்பதற்குள் பலமுறை அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்திருந்தார்.  ஆதியும், முகுந்தனும் இறுக்கமாகவே இருந்தனர். யாரும் யாரிடமும் எதுவும் பேசவில்லை.

ஆதித்யன் அமைதியாக இருந்தாலும், கதிரின் மூலம் அனைவரின் தேவைகளையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.  கேசவனும், பாண்டியனும் முகுந்தனுக்கு இருபுறமும் அமர்ந்து ஆறுதல் சொல்ல, குருவம்மாவும் ரம்யாவும் பவித்ராவிற்கு ஆறுதல் சொல்ல, அவர்களிடமிருந்து தனித்து நின்றிருந்தான் ஆதித்யன்.

ஆதனை ரத்த வெள்ளத்தில் பார்த்த பிறகு அவர்களது உலகமே இருண்டது போலத்தான் இருந்தது ஆதிக்கு. அப்படியென்ன கவனக் குறைவு வாகனம் ஓட்டுவதில் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அவனைக் காப்பாற்றிய அந்த லாரி டிரைவர் ஆதியிடம் சில சந்தேகத்தைச் சொல்ல, அவனுக்கும் அப்படியும் இருக்குமோ என்றுத் தோன்றத் தொடங்கிவிட்டது. ஆதன் எழும்பி அது உண்மை என்று சொல்லிவிட்டால், அவனை நானே கொன்று விடுவேன் என்று ஆத்திர மிகுதியில் நினைத்திருந்தான். அந்தக் கோபத்தில் இருந்தவன், பக்கத்தில் வந்த அனைவரின் மேலும் கடுகடுவென பாய்ந்தான்.  கதிரும், ஆருவும் அவனை நெருங்க முடியாமல் தவித்து போய் நின்றிருந்தனர். அருகில் சென்றாலே காய்ந்தான் எனலாம்.

அன்றைய தினம் விபத்து நடந்து அவசர  ஊர்தியும் வந்து ஆதனை ஏற்றும் போதே அதில் இருந்தவர்கள் பரிசோதித்து விட்டு ‘ஸ்பாட் அவுட்’ என்றே சொல்லி சென்றனர்.

ஆனால் ஒரு வேகத்தடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்க, அதில் ஆதனின் உடலும் தூக்கிப்போட்டது, அப்போது அவனது மூச்சுக்குழாய் மூச்சுக்காக ஏறி இறங்கியது. தொண்டைக் குழியிலும் லேசாக காற்று அடைப்பது போலத் தெரிய, அதைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக அவசர  சிகிச்சையை அளித்து, மின்னல் வேகத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் கடவுளின் சித்தம் என்றுதான் சொல்ல வேண்டுமோ, மெடிக்கல் மிராக்கிள் என்ற வார்த்தை ஆதனின் வாழ்க்கையில் முற்றிலும் உண்மை ஆனது. 

புயல் போல் வந்த ஆதியிடம் விஷயம் தெரிவிக்கப்பட, அடுத்து அவன் பாண்டியனிற்கு அழைத்துச் சொல்லி, அவர்களை சமாளித்து மருத்துவமனை அழைத்து வரும்படி கூறிவிட்டு, மருத்துவரைச் சந்திக்கப் போனான்.

அவரோ ஆதனுக்கு உடல் மொத்தமும் அடிபட்டு இரத்த சேதம் அதிகமாகிருப்பதாகவும், எலும்பு முறிவும் இருப்பதால், தேவையான அளவிற்கு முதலுதவிகளை செய்துவிட்டதாகவும், உடனே மதுரைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறிவிட, ஆதித்யனுக்கும் அதுவே சரியெனப்பட்டது.

என்னதான் தேனி நகரம் ஒரு தனி மாவட்டமாக ஆகியிருந்த போதும், நவீன மருத்துவ வசதிகள் அதிகம் இல்லை எனலாம், அதை அறிந்தவன் நண்பன் கதிரை அழைத்து, அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை செய்து உடனே மதுரை மீனாட்சி மிஷனில் சேர்த்திருந்தான்.

அவனுக்குப் பின்னே வீட்டில் இருந்து அனைவரும் வந்திருக்க, ஆதனின் நிலையைப் பார்த்து அனைவருக்கும் பயம் சூழ்ந்து கொண்டது. மூன்று சர்ஜரி முடிந்து இருபத்து நான்கு மணி நேரங்கள் கழிந்துதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் குழு சொல்லிவிட, அதைக்கேட்டு நான்காவது முறையாக மயங்கி விழுந்தார் பவித்ரா.

இப்படியே நேரம் கழிய, யாரும் நிக்கியைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. அவளிடமும் விஷயம் தெரிவிக்கப்படவும் இல்லை. எல்லோரும் ஆதன் விழிப்பதற்காக காத்திருக்க, என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக சரியாக அதே நேரம் சங்கரிடம் இருந்து பாண்டியனுக்கு போன் வந்தது.

அப்போது தான் எல்லோருக்கும் நிக்கியின் நினைவே வந்தது. ஆனால் நிக்கியிடம் இங்கு நடந்ததைப்பற்றி யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே பாண்டியன் நினைத்தார். அதனால் நிக்கியும் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாள் என்றும் அவர் நினைக்கவில்லை.

அதனால் மிகவும் சாதாரணமாக போனை எடுத்து, “சொல்லுங்க சங்கர், எப்படி இருக்கீங்க.” எனக் கேட்கவும் தான், ஆரு வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். நேற்று நிக்கியிடம் கோபமாகப் பேசியதற்குப் பிறகு திருப்பி அவள் பேசவேயில்லை, நிக்கியும் திரும்ப அழைக்கவில்லை. ஏன் என்று இப்போது பயமும்,  யோசனையும் வர, கால்கள் தானாக தந்தையின் புறமாக நகர்ந்தது.

“நாங்க இங்க மதுரைல இருக்கோம்ப்பா, ட்வென்டி ஃபோரவர்ஸ் டைம் கொடுத்தாங்க, இன்னும் சீரியஸ் கண்டிஷன் தான்..” என்றவர் நடந்ததை விபரமாகச் சொல்ல,

கேட்டுக் கொண்ட பாண்டியன் “அவருக்கு ஆக்சிடென்ட் ஆனதை சொன்ன நீங்க பிழைச்சிட்டாருன்னும் சொல்லிருக்கலாம் சார்..” என்று வேறு எதுவும் பேசாமல் வைத்துவிட, பாண்டியனுக்கு புருவம் சுருக்கியது.

கேள்வியாக பக்கத்தில் நின்ற மகளைப் பார்க்க, அவளும் பயத்துடன் நேற்று நிக்கியிடம் பேசியதைக் கூற, சற்றும் யோசிக்காமல், அது மருத்துவமனை என்பதைக் கூட மறந்து ஓங்கி அறைந்திருந்தார் மகளை..

“ப்பா..” என்று ஆரு அதிர்ந்து பார்க்க, இப்போது எல்லோரும் பாண்டியனைப் பார்த்தனர். ஆதித்யன் வேகமாக வந்து ஆருவைத் தனக்குப் பின் இழுத்திருந்தான் எதற்காக இந்த அடி என்பது போல் ஒரு பார்வையப் பார்த்துக் கொண்டே..

ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல், உடனே தன்னுடன் பணி புரியும் மற்றொரு  நண்பருக்கு அழைத்து நிக்கிக்கு என்ன நடந்தது என்று கேட்க, அவரும் சங்கரின் வீட்டில் நடந்ததைச் சொல்ல, பாண்டியனுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது, அதோடு முட்டாள்தனமாக, முந்திரிக்கொட்டைத்தனமாக நடந்து கொண்ட தன் மகள் மீது மொத்தக் கோபமும் திரும்பியது.

அதேக் கோபத்துடன் ஆருவிடம் திரும்பி “என்ன பண்ணி வச்சிருக்கன்னு உனக்குத் தெரியுமா.. உன்னை யார் இப்படி செய்ய சொன்னா..?” என் மீண்டும் அடிக்க வர, இப்போது குறுக்கே வந்தார் முகுந்தன்.

“என்னப்பா.. பாப்பா என்ன செஞ்சா.. ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருது..” என நண்பனின் கையைப் பிடித்து பின்னே இழுக்க, அதற்கு பாண்டியனோ நடந்ததைச் சொல்லிவிட்டு, “உன்னை யார் இப்படி பேச சொன்னது, எப்போ தான் உனக்கு பொறுப்பு வரும்..  பொறுமையா எடுத்து சொல்லி புரிய வச்சிருக்கலாம். இப்போ உன்னோட அவசரத்தனத்தால அங்க ஒரு உயிர் ஊசலாடிட்டு இருக்கு..” என மேலும் கத்த, இப்போது அந்த இடமே அதிர்ச்சிக்கு வசமனாது.

எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி, அதிலும் ஆருவின் முகத்திலோ அதிர்ச்சியையும் தாண்டிய பயம், அது அவளுக்கு ஒரு நடுக்கத்தைக் கொடுக்க, கால்கள் இரண்டும் தளர்ந்துவிட, கண்கள் இரண்டும் இருள, அப்படியே ஆதித்யன் மீது சாய்ந்திருந்தாள்.

அடுத்து நொடி நேரம் கூட யாரும் யோசிக்கவில்லை. ஆருவுக்கு முதலுதவி கொடுத்து, உடனே மனைவியை அங்கேயே விட்டுவிட்டு மகளையும், கேசவனையும் அழைத்துக் கொண்டு சேலம் கிளம்பிவிட்டார் பாண்டியன்.

இங்கு யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்றேத் தெரியவில்லை, பயப்பட வேண்டாம் ஒன்றும் ஆகாது என்று ஆறுதலாக ஒரு இறுகிய அணைப்பு, அதோடு ஆருவை அனுப்பி வைத்தான் ஆதி. பயணத்தின் நான்கு மணி நேரமும் மகளிடம் திரும்பக் கூட இல்லை பாண்டியன். அழுது அழுது முகமெல்லாம் சிவந்து, மிகவும் சோர்ந்து போயிருந்தாள் ஆரணி. கேசவன் தான் அவளின் தேவையைப் பார்த்துக் கொண்டார்.

ஆதித்யன் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்து சங்கரிடம் பேசி நிலவரம் அறிந்து கொண்டுதான் இருந்தான்.  நிக்கி அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகச் சொன்ன பிறகே இங்குள்ளவர்களுக்கு சற்று நிம்மதி வந்தது. இன்னும் ஆதனுக்கு நினைவு திரும்பவில்லையே அதன் பிறகு தானே அவர்களுக்கு முழு நிம்மதி கிடைக்கும்.

சேலம் வந்தவர்கள் நேராக மருத்துவமனைக்குச் செல்ல, இன்னும் நிக்கி ஐசியுவில் தான் இருந்தாள். பாண்டியனைப் பார்த்து தாரணி அழ ஆரம்பிக்க, “அழாதம்மா எல்லாம் சரியாகிடும், நிக்கிக்கு தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே..” என்றவர், “ஆரணி அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டா, அவளோட தப்பால எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்க இருந்தது. நாம நம்ம பிள்ளைங்கள சரியா வளர்க்காம விட்டுட்டோம்..” என ஆறுதலாகப் பேச,

“நிக்கி இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கக் கூட இல்லண்ணா, இன்னும் அவ செஞ்சதை ஜீரனிக்க கூட முடியல, நேத்துப் பழகின ஒருத்தனுகாக பெத்தவங்களைப் பத்தி யோசிக்காம பண்ணிட்டாளே. இவளை விட்டா எங்களுக்கு யார் இருக்கா..” என அழ,

தாரணியின் கையை ஆறுதலாகப் பிடித்த ஆரு, “ஆன்டி.. சாரி சாரி ஆன்டி.. நான் தான், என் மேலத்தான் தப்பு, நான்தான் ஆதனுக்கு அப்படி ஆகவும், அதிலும் அவர் இறந்துட்டாருன்னு சொல்லவும் கோபத்துல நிக்கிக்கிட்ட அப்படி பேசிட்டேன், ஆனா நானும் நிக்கி இப்படி செய்வான்னு நினைக்கவே இல்ல ஆண்டி, என்னை மன்னிச்சிடுங்க ஆன்டி.. ப்ளீஸ் ஆன்டி..” என கேவல்களுக்கிடையேப் பேச, பதிலுக்கு தாரணியோ “ஒத்த பொண்ணு ஒத்த  பொண்ணுன்னு செல்லம் கொடுக்கப்போய் தான இப்படியெல்லாம் நடந்துக்கிட்டீங்க” என ஆதங்கமாய் சொன்னாரேத் தவிர அடுத்து வேறு ஒன்றுமே சொல்லவில்லை.

தாரணியின் அண்ணன் மற்றும் சில சொந்தங்களும் அங்கிருக்க, அங்கு வைத்து அதிகம் பேச வேண்டாம் என நினைத்து, ஆரணியையும் கேசவனையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பாண்டியன்.

நிக்கியைப் பார்க்க வந்த ஆகாஷோ, அவளது இந்த நிலையைப் பார்த்து அவளுக்கு உதவியிருக்கலாமோ என்று மனம் வருந்தினான். காலம் கடந்து வருந்துதல் பயணில்லை. ஆகாஷ் நிக்கியின் காதல் விவகாரம் எனக்கு முன்னமேத் தெரியும் என்று சொல்லிவிட, இனி அவளையோ அல்லது ஆகாஷையோ கட்டாயப்படுத்த முடியாது என்று எல்லோருக்கும் புரிந்து போனது பெரியவர்களுக்கு.

You may also like

Leave a Comment

About Me

Featured