அத்தியாயம் – 04
“பேய்க்கே வாடகை ஒப்பந்தம்!”
மாளிகையின் மேல்மாடி வழக்கம்போல் அமைதியாக இருந்தது.
ஆனால் அந்த அமைதி, காசிநாதனின் மனதில் மட்டும் இல்லை.
கபிலன் சுவரில் மாட்டியிருந்த பழைய புகைப்படத்தை துடைத்துவிட்டு, அதை இன்னும் நன்றாகப் பார்க்க இரண்டு அடிகள் பின்னால் நின்றான். அவன் முகத்தில் பயமோ, பதற்றமோ இல்லை. மாறாக, பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த ஒரு பழைய பொருள் கண்ணில் பட்ட ஆர்வம் மட்டும் இருந்தது.
காசி அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தவன் அவன்தான்.
அதே சிரிப்பு…
அதே மீசை…
அதே வெள்ளை சட்டை…
ஒரு கணம் அவன் மனதில் ஏதோ பழைய நினைவு மின்னியது.
ஆனால் அதைத் தொடர விடாமல் கபிலனின் குரல் மீண்டும் கேட்டது.
“இந்த வீட்டுல வாழ்ந்தவங்க ரொம்ப ரசனை உள்ளவங்க போல…”
காசியின் முகத்தில் மெதுவாகப் பெருமை தெரிந்தது.
“பார்த்தியா மல்லிகா… இவனுக்கு ரசனை இருக்கு.”
மல்லிகா சிரித்தபடி,
“இன்னும் இரண்டு நிமிஷம் காத்திரு.”
என்றாள்.
கபிலன் புகைப்படத்தின் சட்டத்தைத் தொட்டு பார்த்தான்.
மரச்சட்டம் ஆங்காங்கே உடைந்து இருந்தது.
“இதை ரெஸ்டோர் பண்ணணும்…”
என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
காசி பெருமூச்சு விட்டான்.
“சரி… படத்தையாவது காப்பாத்துவான்.”
அடுத்த நொடியே…
“Original Photo-வை Scan பண்ணி Digital Copy வச்சுக்கணும்.”
என்று கபிலன் சொன்னான்.
காசி புருவத்தைச் சுருக்கினான்.
“டிஜிட்டலா?”
“ஆமாம்.”
“அதென்ன?”
மல்லிகா சிரித்தாள்.
“நீ செத்ததுக்கப்புறம் உலகம் ரொம்ப மாறிடுச்சு காசி.”
காசி எதுவும் புரியாமல் நின்றான்.
அவன் பார்வை கபிலனின் மீது இருந்தது.
கபிலன் இப்போது அறையின் ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
பழைய மரப்பெட்டி.
சுவரோரமாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்.
தூசிபடிந்த கண்ணாடி.
மூலையில் கிடந்த பித்தளை விளக்கு.
ஒன்றையும் அவன் அலட்சியமாகப் பார்க்கவில்லை.
ஒவ்வொன்றையும் கையில் எடுத்துப் பார்த்து, மீண்டும் அதே இடத்தில் கவனமாக வைத்தான்.
அதைப் பார்த்த காசிக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.
“பொருளை உடைக்குற ஆள் இல்ல போல.”
“அதுக்குத்தான் இவ்வளவு சந்தோஷமா?”
“இப்போ வரைக்கும் வந்தவங்க எல்லாம் கதவு உடைச்சாங்க… ஜன்னல் உடைச்சாங்க… இவன் மட்டும் சாமானை கவனமா பிடிக்கிறான்.”
மல்லிகா சிரித்தாள்.
“அதனாலதான் உனக்கு இவன் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.”
“யாரு சொன்னா?”
“உன் முகம்தான் சொல்லுது.”
காசி உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“எனக்கு அவனைப் பிடிக்கலை.”
அதே நேரத்தில் கபிலன் பழைய மரப்பெட்டியின் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.
அந்தப் பெட்டி மீது தடிமனான தூசி படிந்திருந்தது.
மேலே பழைய இரும்புப் பூட்டு.
கபிலன் மெதுவாக பூட்டைப் பார்த்தான்.
“ஹ்ம்…”
என்று தலையசைத்தான்.
காசி பதறினான்.
அந்தப் பெட்டிக்குள்…
அவனுடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நினைவுகள் இருந்தன.
பழைய கடிதங்கள்.
சில பரிசுகள்.
ஒரு கைக்கடிகாரம்.
ஒரு வெள்ளி மோதிரம்.
யாரும் இதுவரை திறக்காத பெட்டி அது.
“அதைத் திறக்காத…”
என்று தெரியாமலே காசி கத்தினான்.
ஆனால் அந்தக் குரல் கபிலனுக்குக் கேட்கவில்லை.
கபிலன் மெதுவாக பூட்டைப் பிடித்து இழுத்தான்.
பூட்டு அசையவே இல்லை.
இன்னொரு முறை முயன்றான்.
இல்லை.
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.
“பரவாயில்ல…”
காசி நிம்மதியாக மூச்சுவிட்டான்.
“திறக்க முடியல.”
ஆனால் அடுத்த வார்த்தை…
“Locksmith-ஐ கூட்டிட்டு வந்தா போதும்.”
காசி அப்படியே உறைந்துபோனான்.
“மல்லிகா…”
“என்ன?”
“இவன்…”
“ம்?”
“வீட்டைப் பார்க்க வரல…”
“பின்ன?”
“குடியேற வர்றான் போல…”
மல்லிகா ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே மெதுவாகச் சிரித்தாள்.
“காசி…”
“என்ன?”
“நீ எழுபத்தைந்து வருஷமா இந்த வீட்டுல ஒருத்தனாத்தான் இருந்த.”
“ஆமா.”
“இப்போ…”
அவள் கபியைப் பார்த்தாள்.
“முதல் முறையா உனக்கு ஒரு ரூம்மேட் கிடைக்கப் போறான் போல.”
காசி அதிர்ச்சியில் அவளைப் பார்த்தான்.
“என்னது…?”
கபிலன் மரப்பெட்டியின் மேல் கை வைத்து சில நொடிகள் அமைதியாக நின்றான்.
அந்த அமைதியே காசிக்குப் பயமாக இருந்தது.
இதுவரை இந்த மனிதன் எடுத்த ஒவ்வொரு முடிவும், தன் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் தலைகீழாகத்தான் மாற்றியிருந்தது. ஜன்னல் பழுது பார்த்தான். படிக்கட்டில் எண்ணெய் தடவினான். பழைய பித்தளைத் தட்டை பழமையான பொருளாகப் பட்டியலிட்டான். இப்போது இந்த மரப்பெட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்ல அறிகுறியாக காசிக்குத் தெரியவில்லை.
கபிலன் மெதுவாக எழுந்து, அறையை இன்னொரு முறை சுற்றிப் பார்த்தான்.
பிறகு ஜன்னலருகே சென்று, வெளியே தெரிந்த தோட்டத்தை நோக்கி நின்றான்.
பல வருடங்களாக யாரும் பராமரிக்காததால், தோட்டம் முழுவதும் காட்டுச் செடிகளால் மூடப்பட்டிருந்தது. பழைய கிணற்றின் மேல் கொடிகள் படர்ந்திருந்தன. ஒருகாலத்தில் பூத்திருக்க வேண்டிய ரோஜாச் செடிகள், இப்போது முட்களாக மட்டுமே இருந்தன.
கபிலன் மெதுவாகச் சிரித்தான்.
“கொஞ்சம் வேலை இருக்கு… ஆனா இந்த இடத்துக்கு உயிர் இருக்கு.”
காசி புருவத்தைச் சுருக்கினான்.
“உயிரா? இங்க நாங்க ரெண்டு பேய்தான் இருக்கோம்.”
மல்லிகா அவனைப் பார்த்து,
“அவன் வீட்டைப் பற்றி சொல்றான். நீ உன்னைப் பற்றி நினைச்சுக்காத.”
என்றாள்.
கபிலன் தனது நோட்டுப் புத்தகத்தை மீண்டும் திறந்தான்.
அதில் இதுவரை எழுதியிருந்த பட்டியலுக்குக் கீழே புதிய வரிகளைச் சேர்த்தான்.
- ஜன்னல் கீல் மாற்ற வேண்டும்.
- தரை சமப்படுத்த வேண்டும்.
- படிக்கட்டு பராமரிப்பு.
- தோட்டம் சுத்தம் செய்ய வேண்டும்.
- பழைய பொருட்களைப் பாதுகாக்க வேண்டும்.
காசி மெதுவாக அவன் தோளுக்கு மேலே எட்டிப் பார்த்தான்.
“பாரு மல்லிகா… என்னை விரட்டுற List-ஆ?”
“இல்ல.”
“அப்போ?”
“உன்னை வசதியா வாழ வைக்கிற List.”
காசி உதட்டைச் சுழித்தான்.
“எனக்கு இந்த வசதி வேண்டாம்.”
அந்த நேரத்தில் கபிலன் கைபேசியை எடுத்தான்.
யாருக்கோ அழைத்தான்.
சில நொடிகளில் மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டது.
“ஹலோ முருகா…”
என்று கபிலன் பேச ஆரம்பித்தான்.
“நேத்து சொன்ன அந்த பழைய மாளிகை ஞாபகம் இருக்கா?”
காசியும் மல்லிகாவும் ஒரே நேரத்தில் அவனைப் பார்த்தார்கள்.
“ஆமா… அதுதான்.”
“வீடு செம்மயா இருக்கு.”
காசியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை.
“அப்படிச் சொல்லுடா…”
ஆனால் அடுத்த வாக்கியம் அவன் முகத்தை மீண்டும் சுருக்கியது.
“கொஞ்சம் வேலை பண்ணணும்.”
“பார்த்தியா?” என்று மல்லிகா சிரித்தாள்.
கபிலன் தொடர்ந்து பேசினான்.
“நான் யோசிச்சு பார்த்தேன்.”
அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.
“இதைக் காலியா விட்டா வீணா போயிடும்.”
காசி மெதுவாகத் தலையசைத்தான்.
“அது சரிதான்…”
“இதைப் புதுசா மாத்தி…”
காசி கவனமாகக் கேட்டான்.
“…வாடகைக்கு விடலாம்னு நினைக்கிறேன்.”
அந்த ஒரு வாக்கியம் மாளிகை முழுக்க எதிரொலித்தது.
காசி சில நொடிகள் அப்படியே நின்றான்.
அவன் சரியாகக் கேட்டானா என்ற சந்தேகத்தில் மல்லிகாவைத் திரும்பிப் பார்த்தான்.
மல்லிகாவும் சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டிருந்தாள்.
“மல்லிகா…”
“ம்?”
“இவன் என்ன சொன்னான்?”
“வாடகைக்கு விடலாம்னு சொன்னான்.”
“இந்த வீட்டையா?”
“ஆமாம்.”
காசி மெதுவாகச் சுவரில் சாய்ந்தான்.
“எழுபத்தைந்து வருஷமா…”
அவன் பெருமூச்சு விட்டான்.
“மனுஷன்களை இந்த வீட்டுக்குள்ள வராம தடுக்க நான் பாடுபட்டேன்.”
அவன் மீண்டும் கபியைப் பார்த்தான்.
“இவன்…”
அவன் குரலில் சோகமும் கோபமும் கலந்திருந்தது.
“காசு கொடுத்து மனுஷன்களைக் கூட்டிட்டு வரப் போறானே…”
மல்லிகா அவனைப் பார்த்தாள்.
“காசி…”
“என்ன?”
“இது ஆரம்பம் மட்டும்.”
“அப்போ இன்னும் என்ன பாக்கி இருக்கு?”
மல்லிகா சிரித்தபடியே கீழே வாசலை நோக்கி விரல் காட்டினாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல…”
“என்ன ஆகும்?”
“இந்த மாளிகை வாசல்ல…”
அவள் சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
காசி பதற்றமாகக் கேட்டான்.
“என்ன?”
மல்லிகா சிரிப்பை அடக்கிக்கொண்டு மெதுவாகச் சொன்னாள்.
“‘வாடகைக்கு வீடு‘ன்னு போர்டு மாட்டப் போறான்…“
அந்த நொடியே…
காசிநாதனுக்கு பேயாக இருந்தும் இதயம் நின்றுவிட்டதுபோல இருந்தது.
காசிநாதன் அப்படியே உறைந்து நின்றான்.
வாசலில் “வாடகைக்கு” என்ற பலகை தொங்கும் காட்சியை அவனால் மனதிற்குள் கூட கற்பனை செய்ய முடியவில்லை.
அந்த மாளிகை…
அவன் தந்தை கட்டிய வீடு.
அவன் சிரித்து விளையாடிய இடம்.
அவன் வாழ்ந்த இடம்.
அவன் இறந்த இடம்.
இப்போது…
அது “வாடகைக்கு” போகிறது.
“மல்லிகா…”
அவன் மெதுவாக அழைத்தான்.
“என்ன?”
“நான் இவ்வளவு நாளா ஒரு பெரிய தப்புப் பண்ணிட்டேனோ?”
“என்ன தப்பு?”
“மனுஷன்களைப் பயமுறுத்துறதுலயே கவனம் செலுத்திட்டேன்.”
“ஆமா.”
“இவனை முதல் நாளே கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளியிருக்கணும்.”
மல்லிகா சிரித்தாள்.
“முதல்ல கழுத்தைப் பிடிக்க கத்துக்கோ.”
காசி கோபமாக அவளைப் பார்த்தான்.
“நீ என் Friend-ஆ… இல்ல இவன் Team-ஆ?”
“நான் Comedy Team.”
அந்த பதிலைக் கேட்ட காசி வாயைத் திறந்தான்.
ஆனால் பதில் வரவில்லை.
கீழே கபிலன் இன்னும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
“ஆமாடா முருகா…”
“நாளைக்கே நாலு பேரை கூட்டிட்டு வா.”
காசி அதிர்ச்சியடைந்தான்.
“நாலு பேரா?”
“ஆமாம்.”
“Cleaning… Painting… Electrical… Plumbing…”
கபிலன் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே இருந்தான்.
காசி ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டபோது, அவனுடைய முகம் இன்னும் இன்னும் சுருங்கியது.
“Electrical…”
“Plumbing…”
“Painting…”
அவன் மெதுவாக எண்ண ஆரம்பித்தான்.
“மல்லிகா…”
“ம்?”
“இவன் வீடு ரிப்பேர் பண்ண வரல.”
“பின்ன?”
“என்னோட அமைதியை ரிப்பேர் பண்ண வந்திருக்கான்.”
மல்லிகா சிரித்தபடியே ஜன்னலில் சாய்ந்தாள்.
“காசி…”
“என்ன?”
“நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?”
“சொல்லு.”
“இந்த வீட்டுக்கு நீ ஓணர் பேய்.”
“ஆமா.”
“ஆனா இந்த வீட்டுக்கு இவன் Owner மாதிரி நடந்துக்கிறான்.”
காசி உடனே மார்பில் கை வைத்தான்.
“அதுதான் என் நெஞ்சே வலிக்குது.”
அதே நேரத்தில் கபிலன் போனை வைத்துவிட்டு மீண்டும் கீழே இறங்க ஆரம்பித்தான்.
படிக்கட்டில் சத்தமே இல்லை.
காசி ஒரு கணம் படிக்கட்டைப் பார்த்தான்.
“அடச்சே…”
“என்ன?”
“நேத்து வரைக்கும் இந்தப் படிக்கட்டு என்னோட சைடா இருந்தது.”
“இப்போ?”
“இப்போ அவனோட Side.”
மல்லிகா சிரித்தாள்.
“எண்ணெய் போட்டதிலிருந்து உன்னையே மதிக்க மாட்டேங்குது.”
கபிலன் கீழே வந்ததும், மாளிகையின் நடுக்கூடத்தில் நின்று சுற்றிலும் பார்த்தான்.
பிறகு இரு கைகளையும் இடுப்பில் வைத்து, பெரிய முடிவு எடுக்கிற மாதிரி ஆழமாக மூச்சை இழுத்தான்.
“சரி…”
என்று சொல்லிவிட்டு, பையிலிருந்து ஒரு வெள்ளைத் தாளை எடுத்தான்.
அதையும் கருப்பு மார்க்கரையும் பார்த்த காசிக்கு சந்தேகம் வந்தது.
“இப்போ என்ன எழுதப் போறான்?”
கபிலன் தரையில் இருந்த பழைய மேஜையைத் தூசி தட்டி சுத்தம் செய்தான்.
தாளை அதன் மேல் வைத்து எழுத ஆரம்பித்தான்.
வா…
முதல் எழுத்தைப் பார்த்தவுடன் காசி பதறினான்.
ட…
“ஐயோ…”
கை…
காசி இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டான்.
க்…
அவன் கண்களை மூடிக்கொண்டான்.
சில நொடிகள் கழித்து கபிலன் தாளைத் தூக்கிக் காட்டினான்.
அதில் பெரிய எழுத்துகளில்…
“வாடகைக்கு கிடைக்கும்”
என்று எழுதப்பட்டிருந்தது.
அதற்குக் கீழே…
“விரைவில் புதுப்பொலிவுடன்…”
என்ற வரியும் இருந்தது.
காசி மெதுவாக சுவரில் சாய்ந்தான்.
“மல்லிகா…”
“என்ன?”
“இது என் வீட்டுல தொங்கக் கூடாது.”
“அப்போ?”
“எப்படியாவது தடுக்கணும்.”
“எப்படி?”
காசி கண்களில் திடீரென்று ஒரு மின்னல்.
எழுபத்தைந்து வருடங்களாகத் தோற்றுப் போன பேயின் முகத்தில் முதல் முறையாக ஒரு திட்டம் தெரிந்தது.
“இந்த போர்டை…”
அவன் மெதுவாகச் சொன்னான்.
“…இராத்திரியே காணாம போக வைக்கிறேன்.”
மல்லிகா புருவத்தை உயர்த்தினாள்.
“உறுதியா?”
காசி நம்பிக்கையோடு தலையசைத்தான்.
“இந்த தடவை…”
அவன் ஆழமாக மூச்சை இழுத்தான்.
“நான் தோற்க மாட்டேன்.”
மல்லிகா அவனை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள்.
பிறகு சிரிப்பை அடக்கிக்கொண்டு மனதிற்குள் நினைத்தாள்.
“பாவம்… இந்த வசனத்தை எத்தனை தடவை சொல்லியிருப்பானோ…”
மாலை சூரியன் மலைக்குப் பின்னால் மறைந்ததும், மாளிகை மீண்டும் தனது பழைய அமைதியை அணிந்துகொண்டது.
பகலில் வேலை செய்த சத்தம், மனிதர்களின் பேச்சு, கபிலனின் காலடி ஓசை—எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாகக் கரைந்துபோனது.
இப்போது…
அங்கே மீண்டும் காற்றின் சலசலப்பும், இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே.
மேல்மாடி வராண்டாவில் நின்று கீழே பார்த்துக் கொண்டிருந்த காசிநாதனின் பார்வை முழுவதும் வாசலில் மாட்டப்பட்டிருந்த அந்த வெள்ளைப் பலகையின் மீதே இருந்தது.
‘வாடகைக்கு கிடைக்கும்‘
அந்த இரண்டு வார்த்தைகள் அவனுடைய எழுபத்தைந்து வருட பேய் வாழ்க்கையையே கேலி செய்வது போலத் தோன்றியது.
“மல்லிகா…”
“ம்…”
“இது இன்று ராத்திரி இருக்கக் கூடாது.”
“அப்படியா?”
“விடியற்காலைக்குள் இந்த பலகை காணாம போயிருக்கும்.”
மல்லிகா அவனை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள்.
“காசி… நன்றாக யோசிச்சு பண்ணு.”
“இந்த தடவை நான் தோற்க மாட்டேன்.”
அவனுடைய குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்பிக்கை இருந்தது.
இரவு இன்னும் ஆழமானது.
நிலவு மேகத்துக்குள் மறைந்தது.
முழு மாளிகையும் கருமையான நிழலுக்குள் மூழ்கியது.
காசி மெதுவாகக் கீழே இறங்கினான்.
வாசலுக்கு வந்தான்.
அந்தப் பலகையை இரு கைகளாலும் பிடித்தான்.
“இவ்வளவுதானே…”
என்று முணுமுணுத்தான்.
ஒரே இழுப்பில் பலகை ஆணியிலிருந்து கழன்று கீழே விழுந்தது.
“ஆஹா!”
அவன் முகம் மலர்ந்தது.
“ஒரு தடவையாவது என் திட்டம் வேலை செஞ்சிடுச்சே!”
மல்லிகாவே ஒரு கணம் ஆச்சரியப்பட்டாள்.
“அட… உண்மையாவே எடுத்துட்டானே!”
காசி குழந்தையைப் போல மகிழ்ச்சியுடன் பலகையைத் தூக்கிக்கொண்டு மாளிகையின் பின்புறம் நடந்தான்.
அங்கே, பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாத பழைய கிணறு இருந்தது.
கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான்.
“இங்க இருந்து யாராலும் எடுக்க முடியாது.”
என்று சொல்லிக்கொண்டு பலகையை உள்ளே விட்டான்.
தடாக்!
என்று சத்தம் கேட்டது.
காசி இரு கைகளையும் தட்டிக்கொண்டான்.
“முடிஞ்சது!”
அந்த இரவு முழுவதும் அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவே இல்லை.
காலை.
சூரிய ஒளி மாளிகை வாசலைத் தொட்டது.
வழக்கம்போல கபிலன் பைக்கில் வந்து இறங்கினான்.
காசி மேல்மாடி ஜன்னலருகே நின்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“தேடுடா…”
என்று மெதுவாகச் சிரித்தான்.
கபிலன் வாசலைப் பார்த்தான்.
பலகை இல்லை.
சில நொடிகள் சுற்றிலும் தேடினான்.
காசியின் முகத்தில் வெற்றி தெரிந்தது.
“காற்று அடிச்சுட்டு போயிருக்கும் போல…”
என்று கபிலன் அமைதியாகச் சொன்னான்.
காசி சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“அப்படித்தான்… அப்படித்தான்…”
அடுத்த நொடியே…
கபிலன் பைக்கின் டிக்கியைத் திறந்தான்.
அதிலிருந்து இன்னொரு புதிய பலகையை எடுத்தான்.
காசியின் சிரிப்பு பாதியிலேயே நின்றது.
“என்னடா…?”
புதிய பலகையை வாசலில் மாட்டிவிட்டு, கருப்பு மார்க்கரால் கீழே இன்னும் ஒரு வரி எழுத ஆரம்பித்தான்.
காசியும் மல்லிகாவும் கவனமாகப் பார்த்தார்கள்.
அவன் எழுதி முடித்ததும், ஒரு அடி பின்னால் நின்று ரசித்தான்.
அந்தப் பலகையில் இப்போது இவ்வாறு இருந்தது:
வாடகைக்கு கிடைக்கும்
பேய் இருப்பதாக வதந்தி!
உண்மையை நிரூபிப்பவர்களுக்கு ₹1,00,000 பரிசு!
காசிநாதன் பேச முடியாமல் நின்றான்.
அவனுடைய முகத்தில் இருந்த வெற்றிப் புன்னகை, மெதுவாக அதிர்ச்சியாக மாறியது.
மல்லிகா சிரிப்பை அடக்க முடியாமல் அருகிலிருந்த தூணில் சாய்ந்தாள்.
“காசி…”
அவள் மூச்சைச் சீர்செய்துக்கொண்டு சொன்னாள்.
“நேத்து வரைக்கும் உன்னைப் பார்த்து பயந்து ஓடினாங்க.”
சிறிது இடைவெளி.
“இன்னைக்கு…”
மீண்டும் சிரித்தாள்.
“உன்னைப் பார்க்கவே கூட்டம் வரப் போகுது.“
காசி மெதுவாக வாசலில் தொங்கியிருந்த பலகையைப் பார்த்தான்.
பிறகு வானத்தைப் பார்த்தான்.
ஆழமாகப் பெருமூச்சு விட்டான்.
“நான் பேயா இருக்கறது பெரிய பிரச்சனை இல்ல…”
அவன் தலையை ஆட்டினான்.
“இவன் உயிரோட இருக்கறதுதான் என் வாழ்க்கையிலேயே பெரிய பிரச்சனை…“
மாளிகை வாசலில் காற்று வீசியது.
அந்தப் பலகை மெதுவாக அசைந்தது.
காசியின் அமைதியான பேய் வாழ்க்கையும்…
அதோடு சேர்ந்து அசையத் தொடங்கியது.