Home Love - Family - Romanceமுத்தமழை – 47

முத்தமழை – 47

by Vathani S

முத்தமழை – 47

கரூரில் ஓரளவிற்கு பெயர் சொல்லும் செல்வந்தர்களில் ஜெகநாதனும் ஒருவர். தன்னுடைய தந்தையின் பெயரில் கல்வி நிறுவனங்களை கூட ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியும் வருபவர், நேற்றிரவும் தன்னறையில் தூக்க மாத்திரகளை அளவுக்கதிகமாக எடுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது அந்த துக்க வீட்டிற்குத்தான் கர்ணனும், ராஜலட்சுமியும் வந்திருந்தார்கள். 

சொக்கலிங்கத்திற்கு ஒரு வகையில் பங்காளி முறை வரும், அதோடு அவர்களது தொழில் எல்லாம் ஃபைனான்ஸ்தான் என்பதால் நிச்சயம் அங்குள்ள அனைவருக்குமே சொக்கலிங்கத்தையும் தெரியும், அவரின் மூத்த மகன் கர்ணன் என்பதும் தெரியும்.

ஜெகநாதனின் மனைவியும் ராஜலட்சுமியும் ஒருகாலத்தில் தோழிகளாக இருந்தவர்கள், சொந்தமும் கூட.. ராஜலட்சுமி அவரின் அருகில் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருக்க, கர்ணன் ஜெகநாதனின் மகனின் அருகில் அமர்ந்திருந்தான்.

“இப்படி பண்ணிட்டு போவாருன்னு நான் கனவுல கூட நினைக்கல ராஜி. பையனுக்கு இப்போதான் கல்யாணம் கூடி வந்துச்சு. அதுக்குள்ள இந்த மனுசன் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டு போய்ட்டாரே. என்ன பிரச்சினையா இருந்தாலும் மலை மாதிரி பையன் இருந்தானே, அவன்கிட்ட சொல்லிருக்கலாமே. என்ன சொன்னாலும் கேட்டுக்குற பையனாத்தான வளர்த்திருக்கோம், இப்போ அவன் மேல எல்லா சுமையையும் இறக்கி வச்சிட்டு போய்ட்டாரே..’ என அந்த பெண்மணி துர்கா அழ, ராஜியும் தன் வழிந்த கண்களை துடைத்துக் கொண்டார்.

“எப்படி உனக்கு தெரியாம போச்சு..?” என்றான் கர்ணன் அர்ஜுனின் கையைப் பிடித்தபடி.

“தெரியாம இல்ல ண்ணா.. எனக்கு தெரிஞ்சு நான் அப்பாவை வாட்ச் பண்ணிட்டே தான் இருந்தேன். அவர்கிட்ட இதெல்லாம் ஒன்னுமே இல்ல, நான் பார்த்துக்கிறேன்னு தைரியமும் சொன்னேன். ஆனா நேத்து ஆஃபிஸ்க்கு அக்காவோட மாமானார் வந்திருந்தார். அவர் வந்துட்டு போன பிறகு ரொம்பவே டிஸ்டர்பா இருந்தார் அப்பா. என்னனு கேட்டும் அப்பா சொல்லல, அக்காக்கிட்ட கேட்டதுக்கும் தெரியல. அப்பாவை தனியா விடாதீங்கன்னு அம்மாக்கிட்ட  சொல்லிட்டுதான் நான் ஈவ்னிங்க் ஆஃபிஸ் போனேன்.” என்றவன் கண்ணை இறுக மூடிக் கொண்டான்.

அந்த கொடிய நேரத்தைக் கடக்க முயல்கிறான் என்று புரிந்தது. அர்ஜுனின் கைகளில் அழுத்தத்தைக் கூட்ட, “ம்ச்..” என்றான் வேதனையாக.

“அர்ஜுன்.. இப்போ நீ தான் தைரியமா இருக்கனும். அக்காவைப் பார், அவங்க முகத்துல அழுகையைத் தாண்டி வேற ஏதோ பிரச்சினை இருக்கும்னு எனக்குத் தோணுது. முதல்ல அப்பாவோட கடமையை முடி. அதுக்குப் பிறகு பொறுமையா அக்காக்கிட்ட பேசு. அவங்களை உடனே அனுப்பிடாத. அங்க என்ன பிரச்சினையோ? என்னமோ.?” என்றான் கர்ணனும்.

“என்ன பிரச்சினை வரப்போகுது ண்ணா? அவங்க பொண்ணை எனக்கு கொடுக்கமாட்டேன்னு சொல்லிருப்பாங்க. அக்கா சண்டை போட்டிருப்பா..” என்றான் விரக்தியாக.

கர்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. “அப்போ இது சம்மந்தமாதான் அவர் வந்து பெரியப்பாவை பார்த்திருப்பாரா?” என்றான் கர்ணனும்.

“இருக்கலாம் ண்ணா.. ஆனா அது மட்டும் இல்லைன்னு நினைக்கிறேன்.. அக்காக்கிட்ட பேசினாதான் தெரியும்..” என்றவனை மற்றொருவர் அழைக்க, அவருக்கு தலையசைத்தவன் “அந்த ஜி.கே கிட்ட சுந்தர் அண்ணாவை கவனமா இருக்க சொல்லுங்க ண்ணா.. அப்பா நிலைமை வேற யாருக்கும் வந்துடக்கூடாது..” என்றுவிட்டு கர்ணனைத் தாண்டி செல்ல, கர்ணனுக்கும் அது தெரியும் என்பதால் உடல் இறுகிப் போய் நின்றான்.

அன்று வந்தனாவின் கடைத் திறப்புவிழாவிற்கு சென்று வரும்போதே வல்லியையும், யாழினியையும் அழைத்து வந்துவிட்டான் கர்ணன்.

தங்கையின் முகத்தில் தெரிந்த வேதனையும், கோபமும் அவர்களின் சண்டையை சொல்லாமல் சொல்ல, அவளிடம் என்னாச்சு என்று தோண்டித் துருவவில்லை.

தன்னிலை ஆராய்ந்து, தன்னை சரி செய்து அதன்பிறகு அவளாக சொல்லும் போது சொல்லட்டும் என்று தங்கைக்கு தனிமை கொடுத்துவிட்டான்.

வீட்டில் அன்றாட நிகழ்வுகள் தன்னைப்போலவே நடந்தன. சமையலுக்கென தனியாக, மிகவும் நம்பிக்கையான ஒரு ஆளை வைத்துவிட்டான் கர்ணன்.

வல்லிக்கு கொடுக்கப்படும் உணவுகள் ஒவ்வொன்றும் மிகவும் கவனமாக கொடுக்கப்பட, ராஜிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“எத்தனை நாளைக்கு இந்த கூத்தெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ..?” என வல்லியின் காது படவே ராஜி புலம்புவார். 

ஆனால் அதற்கெல்லாம் வல்லி பதிலே சொல்லமாட்டாள். ஏன் அதை கவனித்தேன் என்று கூட காட்டமாட்டாள்.

ஆனால் அந்த நேரத்தில் யாழியோ, பாட்டியோ இருந்தால் “நீ எதுக்கும்மா இதெல்லாம் பார்க்குற? ஒன்னு கண்ணை மூடிக்கோ, இல்லை உன்னோட ரூமுக்கு போ..” என பட்டென சொல்லி விடுவார்கள்.

இதில் சுமித்ரா யாரிடமும் சேராத கேஸ். அவளுக்கு ‘குழந்தையை அழிப்பேன்’ என்ற மாமியாரையும் பிடிக்கவில்லை. ‘நான் தான் மூத்த மருமக’ என்ற வல்லியையும் பிடிக்கவில்லை.

அவளைப் பார்த்தால் பாட்டிதான் ‘என்ன ஜென்மமோ?’ என பல்லைக் கடிப்பார்.  

கர்ணனுக்கு நிற்க நேரமில்லை. இப்போது யாழினியை ஆஸ்திரேலியா அனுப்பும் வேலையை வேறு பார்க்க வேண்டியிருக்க ஓடிக்கொண்டே இருந்தான்.

அப்படி ஓடிக்கொண்டே இருந்தவனை அதிர்ச்சியில் நிறுத்தியிருந்தது ஜெகநாதனின் இறப்புச் செய்தி.

மொத்தமாக கரூர் வந்த பிறகு அடிக்கடி அவனிடம் பேசுவார் ஜெகநாதன். சொக்கலிங்கத்தை மருத்துவமனையிலும், வீட்டிலும் கூட குடும்பமாக வந்து பார்த்து சென்றிருந்தார்.

இப்போது அவரின் இழப்பை அவனால் நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு மீட்டிங்கில் பார்த்து பேசியிருந்தான்.

அந்த மனிதரிடம் பேசிவிட்டு வந்த அர்ஜூனிடம் “அர்ஜூன் எந்த பிரச்சினையா இருந்தாலும் என்கிட்ட சொல்லனும், யாரும் இல்ல, வரலன்னு எல்லாம் யோசிக்கக்கூடாது. சொல்லவோ கேட்கவோ தயங்கக்கூடாது. சுந்தர் எனக்கு எப்படியோ, அப்படித்தான் நீயும்..” என மனதிலிருந்து கூற, கர்ணனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட அர்ஜுனின் விழிகள் கலங்கி வழிந்தன.

“அர்ஜூன்..” என அவன் தோளைத் தட்டி சமாதானம் செய்து, அவரின் இறுதி காரியம் முடியும் வரை இருந்து அனைத்தையும் பார்த்தே வீடு வந்திருந்தான் கர்ணன்.

பங்காளி என்பதால் கருப்பு முடியும் வரை இவர்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதால் வீட்டிலேயே இருந்தான் கர்ணன்.

சுந்தர் வேலையாக பாலாக்காடு சென்றிருந்ததால், மகளைப் பார்க்க சுமியின் அம்மா விமலா வந்திருந்தார்.

கர்ணன் அங்கிருப்பதைப் பார்த்து தயங்கியே வர, “வாங்க த்த..” என அவனே அழைத்தான்.

“வரேன் ப்பா..” என்று புன்னகைத்தாலும், உள்ளுக்குள் அத்தனை கோபம் அவருக்கு,. யாழினியின் திருமண பிரச்சினையில் அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் தான், அதற்காக யோசிக்காமல் எந்த இடமென்று கூட பார்க்காமல் மகனை அடிப்பானா?

அந்த கோபத்தைக் காட்டும் வழி தெரியாமல் திணறுகிறார். மருமகளிடம் இப்போது இந்த பேச்சை ஆரம்பித்தால் சொத்தை பிரிக்கிறேன் என்று நிற்பாள். தொழில் தனித்தனியாகி விடும். பின் மகளின் நிலை?

மகனுக்காக பார்த்து, மகளின் வாழ்க்கையில் பிரச்சினையைக் கிளப்ப முடியாதே.

இப்போதே சொத்தை பிரித்தால், சொக்கலிங்கம் கோபத்தில் தொழிலை கர்ணனுக்கு கொடுத்துவிட்டால்? 

அவர் இல்லாத போதுதான் இந்த பிரச்சினையை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார். அதனால் கர்ணனிடம் கோபத்தைக் காட்டாமல் அமைதியாக இருந்தார்.

“வனி எப்படி இருக்கா த்த..” என்றவன், “வல்லி அத்தை வந்துருக்காங்க.. காபி கொண்டு வா..” என மனைவியையும் அழைத்தான்.

“அவ நல்லா இருக்கா தம்பி, நீங்கதான் இங்க வரவே கூடாது சொல்லிட்டீங்களாம்?”

“வரவேக்கூடாதுனு சொல்லல அத்த.. முக்கியமான வேலையா இருந்தா மட்டும் வான்னு சொன்னேன்.. அதனால என் மேல கோபத்துல இருக்காளோ?” என்றான்.

“அதெல்லாம் இல்ல தம்பி. இப்போதான் கொஞ்சம் பொறுப்பா வீடு, புள்ளைங்க, குடும்பம்னு இருக்கா..” என அவன் மனசு குளிர கூற, கர்ணனும் சிரித்துக் கொண்டான்.

அப்போது “வாங்க அண்ணி.. எப்ப வந்தீங்க..” என்று வந்தார் ராஜலட்சுமி.

“இப்போதான் அண்ணி..” என்றவர் “ஜெகன் அண்ணா கருப்புக்கு, நம்ம மாப்பிள்ளைங்களுக்கு சீர் செய்யனுமில்ல, அதுதான் எப்போ எங்க வச்சு செய்யலாம்னு கேட்க வந்தேன். அர்ஜூன் வீட்டுல வச்சே செய்யவா?” என கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் அத்தை.. நல்ல முறையில இறந்திருந்தா கூட நீங்க சொல்றது சரி. இப்போ வேண்டாம் அத்த..” என கர்ணன் கூற, ராஜலட்சுமியும் “ஆமா அண்ணி.. ஏதோ இன்னும் அதை ஏத்துக்கவே மனசு வரல.. இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் வேண்டாம் அண்ணி..” என்றுவிட்டார்.

“காபி எடுத்துக்கோங்க ம்மா..” என்ற வல்லியிடம்., புன்னகை முகமாகவே அவளின் நலன் விசாரித்தவர் “சரி அதுதான் வேண்டாம்னுட்டீங்க. நாத்தனார் தானே முதல்ல சோறு ஆக்கிப்போடனும் வல்லிக்கு, அதையாவது என்னைக்குனு சொல்லுங்க. நாலு மாசம் பிறக்குறதுக்குள்ள வனி பண்ணிட்டா, அப்புறம் அவங்க வீட்டுல பண்ணிக்கலாம்ல..” என மீண்டும் கேட்க,

“அது ஜோசியர்கிட்ட கேட்டு சொல்றேன் அண்ணி.. நல்ல நாள் பார்க்காம செய்யக்கூடாது..” என்றதும் கர்ணனின் முகம் சுருங்க, வல்லியின் முகம் நிர்மலமாக இருந்தது.

“நானே சொல்லனும்னு நினைச்சேன் ம்மா, பாட்டியும் நேத்து தான் சொன்னாங்க.. ஜோசியர் கிட்ட கேட்டு நாள் குறிச்சுட்டு வனியை வந்து செய்ய சொல்லுங்க, அதுக்கு பிறகு தான் வல்லி வீட்டில் வந்து செய்வாங்க..” என்ற கர்ணனிடம்,

“ஆமா கண்ணா நல்ல நாள் பாக்கணும், கருப்பு முடியவும் நீயும் நானும் போயி நாள் குறிச்சிட்டு வந்துடலாம் உனக்கு தான் இப்ப எல்லாம் என் மேல நம்பிக்கை இல்லையே..” என மகனை குற்றம் சாட்ட, 

“அம்மா என்ன பேச்சு இது? நான் எப்போ உங்களை நம்பாமல் போனேன்.” என கர்ணன் ஆதங்கமாக கேட்க,

“விடு ப்பா இதெல்லாம் பேசி உனக்கு புரிய வைக்க என்னால முடியாது. உனக்கு எப்போ நம்பிக்கை வருமோ அப்போ சொல்லு, உன் பொண்டாட்டிக்கு நான் சமைச்சி கொடுக்கிறேன்..” என்று வருத்தமாக கூறவும், என்ன பிரச்சனை இன்று கர்ணனுக்கு புரிந்து போனது. 

“அம்மா இதை பத்தி நாம பேச வேண்டிய நேரம் இது இல்ல. இப்போ நம்ம அத்தை வந்துருக்காங்க, முதல்ல அவங்களை  கவனிங்க, நாம அப்புறமா பேசலாம்..”   என அந்த பேச்சை முடித்து எழுந்து சென்றுவிட, வல்லியும் கணவனின் பின்னே சென்றுவிட்டாள்.

இருவரும் அங்கிருந்து அகலும் வரை அமைதியாக இருந்த விமலா “என்ன அண்ணி நீங்க? நான்தான் இவ குடும்ப மானத்தை வாங்க நல்ல ஒரு சந்தர்ப்பத்தை கொண்டு வந்தேனே, அதை ஏன் நீங்க யூஸ் பண்ணிக்கல..” என்றார் சற்றே எரிச்சலாக.

“எனக்கும் முன்னாடி அப்படி தோணுச்சு தான் அண்ணி.. ஆனா அப்படி கூட்டத்துல வச்சு பேசினா, அது நமக்கே திரும்பிட வாய்ப்பிருக்கு, அதோட சுந்தரும் கொஞ்ச நாள் அவகிட்ட எந்த பிரச்சினையும் பண்ண வேண்டாம்னு சொல்லிருக்கான். அவன் ஏதோ பெருசா ப்ளான் பண்ணிருக்கான் போல அண்ணி. இப்படி சின்ன சின்னதா செஞ்சு, அவன் ப்ளானை சொதப்பிடக்கூடாது..” என முடிக்க, விமலாவிற்கு திக்கென்றானது.

“அண்ணி மாசமா இருக்க பொண்ணு?” என பதைபதைப்புடன் கூற,

“அதுக்கு நாம என்ன பண்ண முடியும் அண்ணி? உங்க பொண்ணும், பையனும் நிம்மதியா வாழனுமா, வேண்டாமா?” என கேட்க, விமலாவிற்கு இதயமே அந்த நொடி நின்றுதான் போனது.

You may also like

Leave a Comment

About Me

Featured