“ஏன்மா, உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலயா? போயும் போயும் ஒரு குடிகாரன் தான் கிடைச்சானா?” காலையிலேயே குக்கர் விசிலுடன் பெண்ணவளும் சீறிக் கொண்டிருந்தாள்.
“அவரு ஒன்னும் குடிகாரர் இல்லடி” என்றார் தாயார் தணிவாய்.
“பின்ன, மதுப் பிரியரா!”
“சொந்தமா பார் வச்சு நடத்துறாரு; அவ்வளவு தான். பக்கத்து வீட்டு அமுதாக்கு ஒரு வகையில சொந்தமாம். ரொம்ப நல்ல டைப்பாம்”
“அதெப்படி? ஊருக்கே ஊத்திக் குடுக்குறவன்; தனக்கு மட்டும் யோக்கியனாமா? இத என்னை நம்பச் சொல்றியா? போமா, வேலையப் பாத்துட்டு”
“உன் கல்யாணத்த இதுக்கு மேல தள்ளிப் போட முடியாதுடி. வயசு முப்பதைத் தாண்டிருச்சு. இந்த வருஷம் கல்யாணம் ஆகலைனா, இனிமே முப்பத்தெட்டுல தான் கல்யாணமாம். ஜோசியர் ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாரு”
“அம்மா, அந்தாளே ஒரு ஏமாத்துப் பேர்வழி; அதையும் இதையும் சொல்லி, கேக்குறவங்க வயித்துலப் புளியக் கரைச்சு, பரிகாரம் பணியாரம்னு ஆளுக்கு ரெண்டாயிரம் நாமத்தப் போடுறவன். அவன் பேச்சலாம் நம்பிட்டு! நேரமெடுத்து வேற நல்ல மாப்பிள்ளையா பாரேன்மா”
“உன் வயசுக்கு ரெண்டாவது தாரமா தான் கேக்குறானுவ; போறியா?”
“ச்சை… ஒரு லவ்வும் அமைஞ்சு தொலையல. சொட்டை விழுந்தவன், தொப்பை விழுந்தவனுக்குலாம் வாக்கப்படணும்னு விதி போல்ருக்குது” அவள் கைப்பைக்குள் தலையை விட்டபடி நொந்து கொண்டாள்.
“என்னடி மொணங்குற?” அவர் அவளின் பாவங்களைக் கண்களால் அளந்தார்.
மையிட்ட விழிகள் அவரை இயலாமையுடன் எதிர்நோக்கின “இதான் உன் முடிவா?”
“ஆமா, பையன் ஃபோட்டோ காட்றேன். பாக்குறியா?”
“அதப் பாத்தா இன்னும் தான் கடுப்பாகும். என்னோட நிம்மதியக் கெடுக்கணும்னு முடிவு பண்ணிட்ட. என்னத்தையோ பண்ணு. பசங்களுக்குப் பாடம் சொல்லித் தர லெக்சரருக்கும் பார் வச்சு நடத்துறவனுக்கும் கல்யாணம். இந்தளவு பொருத்தமா உங்களால மட்டுந்தான் வரன் பாக்க முடியும்!”
“சாயந்தரம் நேரத்தோட வீட்டுக்கு வா. பூ வைக்கணுமாம்”
“நான் எப்பவும் போல தான் வருவேன். உங்க இஷ்டத்துக்கு நானும் சேந்துட்டு ஆட முடியாது”
“இவ்ளோ எகத்தாளம் கூடாதுடி. முத நாளே வர்றவங்களக் காக்க வைப்பியா?”
“அவ்ளோ அவசரம்னா உன் தலைல பூவ முடிஞ்சுட்டுப் போகச் சொல்லு” அவள் வாய் நீளவும் தாயாரின் வாயும் வசவு பாடத் துடித்தன. அதற்குள்ளாக அங்கிருந்து நழுவி, தனது தம்பியை ஊறுகாயாய்த் தொட்டுக் கொண்டாள் அவள் “ஏ, தருதலை… மணி என்னாகுது? இப்போ தான் விசிலடிச்சுட்டு, பாட்டு பாடிட்டு இருக்க! ஒன்பது மணிக்கு முன்னாடி ஸ்கூலுக்குப் போனா, வானம் எதுவும் இடிஞ்சு விழுந்துடுமா? தருதலை, தருதலை…”
“ஏன்டி காலைலயே அவனை வையுற?” தாய் உணவுப் பொட்டலத்தை நீட்டி, அவளின் நெற்றியில் திருநீறு கீற்றிட்டார். அதே போல் அவர் இளையவனுக்கும் கீற்றிட, அவனோ வேகமாக அதை அழித்தான்.
உடனே தமக்கை அவனது புற மண்டையிலேயே ஓங்கித் தட்டினாள் “அது மண்டையப் பாத்தியா? சேவக்கோழி மாதிரி முன்னுச்சிலயும் பின்னாடியும் புடைச்சுட்டு நிக்குது. இந்த வயசுலயே மீசை வளத்துட்டுச் சுத்துது. பொறுக்கி பெத்த பொறுக்கி!”
வாயில் திண்ணையில் அவளைப் பெற்றெடுத்த புண்ணியவான் உட்கார்ந்திருக்க, தாயார் பதறினார் “புள்ளையே, வாய அடக்கு”
அவள் அதற்கெல்லாம் கட்டுப்படவில்லை “எப்படா கடையத் திறப்பானுங்கன்னு பாத்துட்டே இருந்து ஊத்திட்டு வரதுலாம் ஒரு பொழப்பு. இதுக்கு மரியாதை மட்டுந்தான் கொறச்சல்! இவரு தான் மாப்பிள்ளைக்குச் சிபாரிசா? நம்ம வீட்டுக்கு ஏத்த மாப்பிள்ளையோ, இல்லையோ; மாமனாருக்கு ஏத்த மூடி தான்! இனிமே கடன் வாங்க வேணாம்; மத்தவன் கால்ல விழுந்து கெஞ்ச வேணாம். நல்லா மருமகன் கடையிலயே நாளும் பொழுதும் ஓசி குடி குடிக்கலாம்” வெளியில் கிடந்த காலணிகளை அணிந்தபடி, தந்தையைச் சொல்லால் அடித்தாள்.
நடக்கும் கூத்தைக் கவனித்தவாறு பிள்ளைக்குச் சோறூட்டிக் கொண்டிருந்த அமுதா வாய் மலர்ந்தாள் “மது நல்லவருடி. உனக்கு ஏத்த பையன் தான். தங்கம்னா தங்கம்; அப்படி ஒரு தங்கம்”
அவள் இவளைப் புரியாமல் நோக்கினாள் “உனக்குப் பாத்துருக்குற மாப்பிள்ளைடி. பேரு மதுசூதனன். யக்கா, நீ சொல்லலயா?”
“அவ சொல்ல விட்டா தான!” என்று அலுத்துக் கொண்டார் அர்ச்சனா தேவி.
“பேருலயே மது, சூது, வாது எல்லாம் இருக்கு. ஆள் எப்படியோ? அமுதா அக்கா, நீ கேட்ட டைமுக்கு ப்ளௌஸ் தைச்சுக் கொடுக்கலங்கறதுக்காகப் பழிவாங்குற மாதிரியில்ல இருக்கு!” அவள் குதர்க்கமாகப் பேசினாள்.
“அடிப்பாவி! எதை எது கூடடி முடிச்சுப் போடுற?” என வாயைப் பிளந்தாள் அமுதா.
“அமுதா, என்ன இருந்தாலும் என் பொண்ணு பேரு மாதிரி வருமா? மாதுளை… இவ வயித்துல இருக்கும்போது இவங்க அம்மா வெறும் மாதுளம் பழமா தின்னுட்டுருந்தா. அதான் இப்படி ஒரு பேரு. அவ்ளோ மாதுளை தின்னதுக்கு நிறமா வந்து பொறக்கும்னு பாத்தா…” அவர் குடி போதையில் குளறலாய் இழுத்தார்.
“பெருசா ஒன்னுமில்ல. மாதுளை ஓவர்டோஸாகி, கருப்படிச்சுடுச்சு. இல்லப்பா?” என்றான் தம்பி முத்துமாரி காலணிக் கயிற்றைக் கட்டிய வண்ணம்.
தமக்கை குடையைச் சுருட்டி அவனை முறைக்க, அவன் தலை குனிந்து தன் நமட்டுச் சிரிப்பைப் பூமிக்குள் புதைத்தான்.
“அக்காவப் பாத்துக் கூட்டிட்டுப் போப்பா” தந்தை இராமசாமி அக்கறையில் கூறலானார்.
“இவரு ரொம்ப பெரிய மனுஷன் தான்; என்னைப் பத்திரமா கூட்டிட்டுப் போறதுக்கு. வரேன்” அவள் பார்த்தும் பாராமலும் கூற
“சூதானமா போயிட்டு வா, சாமி. அடிச்சுப் பிடிச்சுட்டு வர வேணாம். எவனுக்கும் வண்டி ஓட்டத் தெரிய மாட்டேங்குது. நாம தான் கவனமா போகணும்; வரணும். சரியா?” அவர் எழுந்து நின்று தள்ளாடினார்.
அவரின் நிலை கண்டு மீண்டும் கோபம் துளிர்க்க “வரேன்மா” என்றவள் தம்பியை இழுத்துக் கொண்டு போகலானாள்.
“யோவ், மதியம் மறுபடியும் ஊத்திக்கப் போய்டாத. பழைய சோறும் தொவையலும் இருக்கு. சாப்டு கம்முனு வீட்டுலயே கிட. நான் நேரமா போயிட்டு வந்துட்றேன்” என்ற அர்ச்சனா நாளை பிய்ந்து போகக் கூடிய செருப்பை அணிந்து கொண்டு, கலைந்து கிடந்த கூந்தலைக் கொண்டை முடிந்தபடி வேலைக்குப் புறப்பட்டார் “அமுதா, ஆளப் பாத்துக்க. கொஞ்சம் விட்டா, சாயந்தரம் சந்தனம் மணக்காது. இந்தாளு தான் சாக்கடைல விழுந்து மணப்பாரு”
“நீ கவலைபடாம போ, க்கா. நான் மாமாவ உள்ள வச்சுச் சாத்திர்றேன்” என்றவள் தன் தினசரி அலுவல்களைக் கவனிக்கச் சென்றாள்.
இங்கு நம் மாதுளையும் முத்துமாரியும் அமைதியாகப் பேருந்து நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
“டேய், உனக்கு ஏன்டா முத்துமாரின்னு பேரு வச்சாங்க? நீ வயித்துல இருக்கும்போது அம்மா முத்தை முழுங்கி, மழையைக் குடிச்சிருப்பாளோ!”
“இந்தக் கன்றாவியைத் தான் இவ்வளவு நேரம் யோசிச்சியா?” இளையவன் ஏளனமாகக் கேட்டான்.
“ம்ச்ச்… போடா” அவளின் குரல் திருமணச் சமாச்சாரத்தால் வாட்டமாக ஒலித்தது.
“அக்கா…”
“ம்ம்ம்”
“நீ எதைப் பத்தி யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியும். நீ கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா, உன் கட்டில் எனக்குத் தான?”
“அடிங்கொப்பத்தா!” என்று அவள் கையை ஓங்கிக் கொண்டு அவனை விரட்ட
“அக்கா…” சட்டென அவன் ஓர் ஒற்றை சிவப்பு ரோசாவை அவள் முன்னே நீட்டினான்.
அதைப் பார்த்ததும் அவள், அடைமழை பெய்து ஓய்ந்தாற்போல, சிலிர்க்கும் தென்றலானாள் “தேங்க்ஸ்டா, தம்பு. எங்கப் பறிச்ச?”
“அது வர்ற வழியில, ஒரு ஆன்ட்டி மண்டைல இருந்து விழுந்துடுச்சு. வேஸ்ட்டா போகுதேன்னு எடுத்து உனக்குத் தந்துட்டேன்” அவன் நக்கலடிக்க, அவள் சிணுங்கிக் கொண்டே அதைத் தலையில் சூடினாள்.
சேட்டையும் இரகளையுமாகப் பேருந்து நிலையம் வந்தவர்கள் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி பள்ளி, கல்லூரிக்குப் பயணமாயினர்.
அந்தத் தனியார்க் கல்லூரியின் உள்ளே நுழைந்த மாதுளை வருகையைப் பதிவு செய்துவிட்டு, ஆசிரியர் ஓய்வறையின் பக்கம் நடந்தாள். அந்த வழியில் தான் இரண்டாமாண்டு மாணவர்களின் வகுப்பறையும் இருந்தது. காலையிலேயே அவர்கள் ஒரு காணொளியைக் கண்டுவிட்டு அதிலிருந்த பெண்ணை எக்கு தப்பாக விமர்சித்துக் கொண்டிருக்க, அது இவளின் செவிகளிலும் வந்து விழுந்தது. அவள் உடனே வகுப்பறைக்குள் நுழைய, அவளைப் பார்த்து அந்த ஐந்தாறு மாணவர்களும் பதறியடித்து எழுந்தனர். அவர்களில் ஒருவன் மட்டும் சட்டமாக அமர்ந்திருந்தான்.
அவள் அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நேத்து அஸைன்மென்ட் எதுவும் கொடுத்திருந்தேனா?” என்று தெரிந்தும் தெரியாதது போல வினவினாள்.
“யெஸ், மேம்” அவர்கள் கூட்டாக ஆமோதித்தனர்.
“அஸைன்மென்ட் பேப்பர்ஸ்லாம் பதினொரு மணிக்கு என் டேபிளுக்கு வந்துடணும். இல்லைனா, இன்டெர்னல சுழிச்சு விட்ருவேன்” என்று அவள் கூறிவிட்டுச் செல்ல, அவர்கள் அரட்டையைக் கைவிட்டு பேனா, பேப்பரைத் தேட ஆரம்பித்தனர்.
அப்போதும் அந்த ஒருவன் மட்டும் அலட்சியத்தோடு ரீல்ஸ் பார்ப்பதைத் தொடர்ந்தான்.
மாலைவேளை அறைகளற்ற அச்சிறிய வீடு, மாப்பிள்ளை வீட்டினரால் அல்லோல கல்லோலப்பட்டது. அவர்கள் வந்தமர்ந்து அரை மணிநேரம் பேசிக் கழித்தும் பெண் வருகிற வழியைக் காணோம்.
“அப்பறம் என்ன? ரெண்டு வீட்டுக்கும் சம்மதம்னு ஆயிடுச்சு. பொண்ணைப் பாத்துடலாங்களா?” என்று சம்பந்தியார் சிந்தாமணி கேட்டார்.
“ரெடியாயிட்டுருக்கா. இதோ கூட்டிட்டு வரேன்” என்ற அர்ச்சனா அருகிலிருந்த அமுதா வீட்டிற்குப் பறந்தார் “என்ன, அமுதா? என்ன தான் பண்றீங்க?”
“இங்கப் பாருங்க, அத்தை. இந்தப் பொண்ணு கண்ணுல தண்ணி வச்சுட்டு நிக்குது. நான் என்ன சொல்லியும் சமாதானம் ஆகுற மாதிரி தெரியல” அமுதா கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
“என்ன, பிள்ளையே! எதுக்கு இப்படி நல்ல நாள் அதுவுமா ஒப்பாரி வச்சுட்டுருக்க?”
“நாந்தான் பிடிக்கலன்னு சொல்றேன்ல. ஏன்மா என்னைக் கட்டாயப்படுத்துறீங்க?” என்ற மாதுவின் விழிகள் நீர் கோர்த்துக் கொண்டிருந்தன.
“ஒத்த விஷயத்த வச்சு ஒருத்தர முழுசா எடை போடுறியா, பாப்பா? அவரோட வேலையக் காரணமா வச்சு, அவரை நீ குறை சொல்றது சரியில்ல; சொல்லிட்டேன். நீ முதல்ல அவரைப் பாத்துட்டுப் பேசு”
“முக அழகு மட்டும் போதாதுமா. நல்லவனா இருக்கணும்”
“பூ வச்சுட்டுப் போனதுக்கு அப்பறம் ரெண்டு மாசம் நல்லா பேசி, பழகித் தெரிஞ்சுக்கோயேன். யாரு உன்னைத் தடுத்தா? இதெல்லாம் நாங்க சொல்லித் தான் உனக்குத் தெரியணுமா?”
“அப்பறமா பிடிக்கலன்னா கல்யாணத்தையே நிறுத்திடுவியாக்கும்!” அவள் நாசியை உறிஞ்சியவாறே வினவினாள்.
“சரி, நீ ஒரு தடவை நேருல பாரு. பிடிக்கலைன்னா சொல்லு. இந்தக் கல்யாணமே வேணாம்” அவர் முடிவாகக் கூற, அவள் அமைதியாக நின்றாள் “அமுதா, இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும். கண்ணுலாம் செவந்து கிடக்கு. முகம் தெளிஞ்சதும் கூட்டிட்டு வா. இதப் பத்தி மாப்பிள்ளை வீட்ல எதுவும் சொல்லிட்டு இருக்காதுடி”
“நான் எதுக்குக்கா சொல்லப் போறேன். இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு தான் நானும் ஆசைப்பட்றேன்” என்று இவள் பேச, பெருமூச்சுடன் அகன்றார் அர்ச்சனா.
“ஏ, மதுவோட ஃபோட்டோ பாக்குறியா? அத்தை காட்டுனப்போ வேணாம்னு சொல்லிட்டியாம். ஒரே ஒரு தடவை பாரேன்” என்று இவள் அலைபேசியை உயர்த்த, மாது மறுத்தாள்.
“வேண்டாம். ஏன்க்கா, உன் புருஷன உனக்குப் பிடிக்குமா?”
“என்னடி கேள்வி இது? பிடிக்கும்”
“உனக்கு மூனாவதும் பொண்ணு பொறந்தப்போ, மாமா குடிச்சுட்டு வந்து பச்சை உடம்புக்காரின்னு கூட பாக்காம கண்டபடி பேசுனாரே. அப்போ?” அவள் குற்றப் பார்வை பார்த்தாள்.
இவளோ புன்னகை பூத்தாள் “நீ ஏன்டி என் வாழ்க்கைய உன்னோட சேத்துக்குற? அவர் அன்னைக்குப் பண்ணது அநியாயம் தான்டி. அடுத்த நாளே காலைப் பிடிச்சு மன்னிப்பும் கேட்டாரு. ஆம்பளைங்க ஒரு நாள் இப்படியும் தான் இருப்பாங்க; ஒரு நாள் அப்படியும் தான் இருப்பாங்க”
“உங்களலாம் பாத்துப் பாத்து, எனக்குக் கல்யாணம்னாலே அலெர்ஜியா இருக்கு” என்று அவள் அச்சமுற, அமுதா சிரித்தாள்.
“அமுதா… அமுதா… மாதுவ அழைச்சுட்டு வா” இவளின் பெயரைக் கணவன் ஏலமிட்டான் “அங்க என்ன அடைகாத்து குஞ்சா பொறிக்குறீங்க! இங்கக் கொஞ்சம் தலைய காட்டுங்களேன்”
“இதோ வரேங்க” இவள் பதிலுக்குக் குரல் கொடுத்தாள்.
“உன் புருஷனுக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தி!” என்றபடி மாது ஒருமுறை கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்தாள்.
“அங்கயும் போய் அழுது வச்சுடாதடி. நீ எவனையாச்சும் காதலிக்கிறேன்னு கதை கட்டிடுவாங்க” என்றதற்கு அவள் அவசரமாகத் தலையாட்டி வைத்தாள்.
மாது வந்திருந்தவர்களின் முன்னிலையில் போய் நிற்க, அனைவரும் ஒரே சமயத்தில் அவளை ஏறிட்டனர். அந்தக் கணமே அவளின் கரங்கள் நடுங்கத் துவங்க, வலக் கரத்தால் இடக் கரத்தை ஆதரவிற்குப் பற்றினாள். அப்போதும் உதறல் நிற்காமல் போகவே, அமுதாவிற்குப் பின்னால் கரத்தை மறைத்துக் கொண்டாள்.
“உனக்கு மாப்பிள்ளையப் பிடிச்சுருக்காமா?” மாப்பிள்ளை வீட்டாரில் ஒருவர் நேரடியாக அக்கேள்விக்கு வர, அவள் விழியாய் விழித்தாள்.
ஒருமுறை அங்கிருந்த அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசாதிருந்தாள்.
“மனசுல இருக்கறதச் சொல்லு, மாது” என்றார் இராமசாமி. காலையை விட இப்போது குரல் தெளிவாக ஒலித்தது. அவரின் கண்கள் மட்டும் அன்றாடக் குடியால் சிவந்து கிடந்தன.
“அக்கா... இதுல மாப்பிள்ளை யாரு?” என்றாள் அவள் அமுதாவின் காதில் கிசுகிசுப்பாய். கண் முன்னே இருபதிலிருந்து அறுபது அகவை வரை விதவிதமாய் ஆட்கள் உட்கார்ந்திருக்க, அவள் குழம்பித் தான் போனாள்.
மிக மிகச் சிறிய வீடு என்பதால் அவள் கிசுகிசுத்தது மாப்பிள்ளை வீட்டாருக்கும் கேட்டது. அதில் கொள்ளெனச் சிரித்தவர்கள் “இவன் தான்மா எங்க வீட்டு மாப்பிள்ளை. வெள்ளைச் சட்டை போட்ருக்கான் பாரு” என்று யாரையோ சுட்டிக் காட்டினர்.
அங்கே பலரும் வெள்ளைச் சொக்காய் அணிந்திருக்க, அவளுக்குச் சத்தியமாகப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.
“ஹலோ, ஹலோ… பார்வை எங்க அந்த மூலை வரைக்கும் போகுது? இது தான் எங்க அண்ணன்” என்று ஒரு பெண் கைவைத்துச் சுட்ட, அந்த அவன் வெள்ளைச் சட்டையும் ப்ளூ ஜீன்ஸும் அணிந்திருந்தான்.
அவள் பார்க்கும்போது அவன் அருகில் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் நேருக்கு நேர் பார்த்தால், அவளால் அதை எதிர்கொண்டிருக்க முடியாது என்பது வேறு கதை.
அடுத்ததாக, சிந்தாமணி தன் குடும்பத்தினரை ஒருவர் ஒருவராய் அறிமுகப்படுத்தலானார் “இது என் மூத்தப் பொண்ணு முல்லை. வீட்டுலயே ஆரி கிளாஸ் எடுக்குறா. இவரு மூத்த மாப்பிள்ளை மதிவாணன். நம்மூர்ல ஆர். ஐ. யா இருக்காரு. இவங்களுக்கு ரெண்டு பசங்க”
அந்த வருவாய் ஆய்வாளர் தான் முன்னர், பையனைப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டது என்பதை அவள் அடையாளம் கண்டாள்.
“இது ரெண்டாவது பொண்ணு ரம்யா. இவளும் மாப்பிள்ளை ரிஷிவர்த்தனும் சேந்து டௌன்ல சூப்பர் மார்க்கெட் வச்சுருக்காங்க. இவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க”
இந்த இரண்டாவது மகள் தான் தன்னை அதிகம் தேட விடாமல் தனக்கான வரனைக் குறிப்பிட்டுக் கூறியது.
“இவ மூனாவது மக சுதா. இன்ஸ்டாகிராமத்துல அவ பொழப்பு ஓடுது. இந்த மாப்பிள்ளை பேரு சுரேஷ்; சென்னைல ஒரு ஐ. டி. கம்பனில வேலை பாக்குறாரு. இவங்களுக்கு ஒரு பையன். இன்னொன்னு… இனிமே தான் தெரியும்”
அவர் கூறியதற்கேற்ப மூன்றாவது பெண் கர்ப்பமாயிருந்தாள்.
“இது எங்க கடைக்குட்டி சுலோச்சனா. காலேஜ் தேர்ட் இயர் படிக்குறா”
இது என்ன பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என மாது உள்ளுக்குள் கிறுகிறுத்தாள்.
“ஹாய், அண்ணி!” கடைக்குட்டி இயல்பாய் மொழிய, இதுவரை அனைவரையும் குனிந்து குனிந்து வணங்கிக் கொண்டிருந்தவள் முதுகுக்கும் கரங்களுக்கும் ஓய்வு கொடுத்து பாந்தமாய்ச் சிரித்து வைத்தாள்.
மேலும் அவர் தன் உற்றார் உறவினர்களை அறிமுகப்படுத்தி விட்டு, இறுதியாக மகனிடம் வந்தார் “இவன் தான்மா என் மூத்தப் புள்ள. வீட்டுக்கு ஒரே பையன். படிப்பு பத்தாவது தான். ஆனா, சொந்தமா தொழில் நடத்துறான். பஸ் ஸ்டான்ட் பின்னாடி இருக்குற மிஸ்டிக் பார் அவனோடது தான். என் பையனப் பொருத்தவரை தொழில் வேற; குணம் வேறமா. நானறிஞ்சு அவனுக்கு இதுவரை எந்தக் கெட்டப் பழக்கமும் இருந்ததில்ல. எங்க மூனு பொண்ணுங்களுக்கும் சொந்தத்துலயே மாப்பிள்ளை பாத்து முடிச்சுட்டோம். வெளிய சம்பந்தம் பேசுறது இது தான் முதல் முறை”
அவள் அவனை மீண்டும் பார்வையால் ஆராய, இப்போதும் அவன் அவளை ஏறிடவில்லை.
“இப்போ சொல்லுமா” என்றார் மூத்த மருமகன் மறுபடி.
அன்னை அர்ச்சனா அவளை நோக்கிட, அவளும் அவரை நோக்கி அரைகுறை மனதுடன் தலையசைத்து வைத்தாள்.
“பொண்ணுக்குச் சம்மதம் தானாம்” அவர் வாயெல்லாம் பல்லாக மொழிந்தார்.
இரு வீட்டாரும் திருமண காரியங்கள் குறித்து பேசத் தொடங்க, அமுதா அவளை அழைத்துக் கொண்டு தன்னகத்திற்கு வந்துவிட்டாள்.
சற்று நேரம் யோசனையில் இருந்த மாது “உன் ஃபோன் குடேன்” என்றாள் அமுதாவிடம்.
“ஏன்டி, மாப்ள ஃபோட்டோ பாக்கப் போறியா? அதான் நேர்லயே பாத்துட்டியே”
“நல்லா பாத்தேன்! அவரு நான் பாக்குறப்போ எங்கயோல்ல பாக்குறாரு. அவரு சோசியல் மீடியால இருக்காரா?”
“இருக்காரே” என்ற இவள் அவனது இன்ஸ்டா பக்கத்தை எடுத்துக் காண்பித்தாள்.
“பேக்கிரௌன்ட் லைட்டிங்லாம் பயங்கரமா இருக்கு. காசு கொடுத்து எடுத்த ஃபோட்டோவா இருக்குமா?”
“இது அவரோட கடை. அவரு கடையில நின்னு ஃபோட்டோ எடுக்க, அவரே ஏன்டி காசு தரப் போறாரு?”
“என்ன, இவ்ளோ பெருசா இருக்கு! நல்ல வருமானம் வரும் போலவே. ஆனா, அவங்களப் பாத்தா அந்தளவு பந்தாவா தெரிலயே”
“தெரியலல்ல! அவங்க அப்படித் தான். சிம்பிளா இருப்பாங்க. கேசுவலா பழகுவாங்க. அவங்க குடும்பம் மட்டும் இல்ல. அவங்க மாமா குடும்பமும் அப்படித் தான்”
“சரி, சரி. நீ அவங்க புராணம் பாடாத” அவள் முட்டுக் கட்டையிட்டாள்.
“அக்கா, பூ வைக்கக் கூப்புட்றாங்க. வா, வா, வா…” என்றபடி உள்ளே வந்தான் முத்துமாரி.
“டேய், உனக்கு உங்க மாமா வீட்டப் பிடிச்சுருக்காடா?” என்று கேட்டாள் அமுதா.
“எனக்குப் பிடிச்சு? நானா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!” என்றான் இவன் எகத்தாளமாய்.
“அக்காவும் தம்பியும் இருக்கீங்களே… இந்தக் கல்யாணம் சிறப்பா முடிஞ்ச மாதிரி தான்!” என்று இவள் முனகினாள்.
மாப்பிள்ளை வீட்டார் மாதுளைக்குப் பூ வைத்து முடித்து மகிழ்வுடன் விடைபெற்றனர். போகும்போது ஓர் ஓரப் பார்வை கூட மணவாளன் பார்க்கவில்லை. உண்மையிலேயே அவன் தான் மாப்பிள்ளையா என்று அவளுக்கு மீண்டும் குழப்பமாகிப் போனது.
“அடுத்த வாரமே கல்யாணமாம். ரெடியாகிக்க” என்று அர்ச்சனா கூறிட, உள்ளே கரப்பான்பூச்சி போகுமளவு வாயைத் திறந்தாள் மாது.
“என்னமா!” அவள் கை, காலை உதைத்துக் கொண்டு குழந்தை போல நடந்து கொள்ளவும் இராமசாமி சிரித்தார்.
“மாமாவுக்குத் தோஷம் இருக்காம். வெள்ளிக்கிழமைல தான் கல்யாணம் பண்ணணுமாம்” இளையவன் வாய்க்குள் நாவை உலாவ விட்டு கேலியாய்ச் சொன்னான்.
“அதுக்கு? வெள்ளிக்கிழமை வாரம் வாரம் தான் வருது” நியாயம் கேட்டாள் மாது.
“முகூர்த்தம் அமையணும்லடி. இந்த வெள்ளிக்கிழமைய விட்டா, அடுத்த வெள்ளி முகூர்த்தத்துக்கு மூனு மாசம் ஆகுமாம்” நீட்டி முழக்கினார் அர்ச்சனா.
“மூனு மாசம் தான? ஏதோ மூனு வருசம் மாதிரி பில்ட்அப் கொடுக்குறீங்க!”
“அடுத்த மாசம் மாப்பிள்ளை பையனுக்கு முப்பத்தாலு முடிஞ்சு, முப்பத்தஞ்சு வந்துடுமாம். அதுக்குள்ள கல்யாணத்த முடிக்கணும்னு…”
“ஜோசியர் சொன்னாராமா?”
“முழுசா கேளுடி. அவங்க தாத்தா முப்பத்து நாலுலயே கல்யாணத்த முடிச்சாகணும்னு ஒத்தக் கால்ல நிக்குறாராம்”
அதைக் கேட்ட மாதுவின் மூளைக்குள் எதுகையாக ஏகப்பட்ட எதிர்மறை வார்த்தைகள் தோன்றலாயின.
இங்கே ஒரு பெரிய வேனில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டினர், ஆளுக்கு ஒவ்வொரு வாய் மாதுளையை அவல் மென்றனர்.
“என்ன ஊருல இல்லாத பொண்ணு பாத்துருக்கு எங்க அம்மா! நிறமாவும் இல்ல. வளத்தியும் இல்ல. முடியும் கம்மியா இருக்கு” முல்லை சத்தமாக அலுத்துக் கொண்டாள்.
“முடியக் கட்டி லாரி எதுவும் இழுக்கப் போறானா உங்க அண்ணன்? சும்மா இருடி” என்று மனையாளை அடக்கினார் மதிவாணன்.
“பிரைவேட் காலேஜ்ல லெக்சரரா இருக்காங்களாம். ஒரு கவர்ன்மென்ட் வேலை கைல இருந்தா நல்லாருந்துருக்கும்” என்றாள் ரம்யா.
“மச்சான் படிச்ச படிப்புக்கு இது போதும். அலட்டாத” என்றான் ரிஷிவர்த்தன் பதிலுக்கு.
“வீடு ரொம்ப சிறுசா இருக்கு. அங்க எப்படித் தான் குடும்பம் நடத்துறாங்களோ! என்னால அஞ்சு நிமிஷம் கூட தாக்கு பிடிக்க முடியல” என்று சொல்லி, சேலைத் தலைப்பால் முகத்தை விசிறிக் கொண்டாள் சுதா.
“அப்டியே உங்க வீடு ரொம்ப பெருசு தான்! அந்தக் குருவிக் கூட்டுல நீங்க அஞ்சு பேரு பொறந்து வளர்லயா? ஏழைப்பட்ட குடும்பம்னா அப்படித் தான்மா இருக்கும்” என்று சுரேஷ் தட்டிக் கழித்தான்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு மதுசூதனன் மௌனமாக இருந்தான். தாயார் சிந்தாமணி அவர்களை அமர்த்தும் நோக்கில் வாய் திறவ, அவரை வேகமாகத் தடுத்தான் மகன். மகள்களும் மருமகன்களும் ஆளுக்கொரு பகுதியில் இறங்கிக் கொள்ள, இறுதியாக வாகனம் அவனின் மது விடுதியின் பின்னால் போய் நின்றது. அங்கிருந்து மீதி உறவினர்கள் வீட்டுக்கு நடந்தனர். தட்டுத் தாம்பாளங்களை இறக்கி வைத்துவிட்டு அவர்களும் புறப்பட்டுப் போயினர். தங்கை சுலோச்சனா அலைபேசியும் கையுமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
தாயார் சிந்தாமணி “டீ சாப்புட்றியாடா?” என்று கேட்டு சமையலறைக்குள் நுழைந்தார்.
“அம்மா, உனக்குப் பொண்ணைப் பிடிச்சுருக்கா?” என்று கேட்டான் மதுசூதனன் தயக்கத்துடன்.
“பிடிச்சுருக்கு, கண்ணா. நீ தங்கச்சிங்க சொன்னதலாம் பெருசா எடுத்துக்காத. அவளுங்க இப்போ ஒன்னு பேசுவாளுங்க; நாளைக்கு ஒன்னு பேசுவாளுங்க”
“அது தெரிஞ்சது தான்”
“வாழப் போறவன் நீ தானடா! உனக்குப் பிடிச்சுருந்தா போதாதா? உனக்குப் பிடிச்சுத் தான இவ்ளோ தூரம் போயிட்டு வந்துருக்கோம்” என்று அவர் பேச
முதலில் வெட்கச் சிரிப்பை உதிர்த்தவன், பின் அவரது வாயைப் பொத்தினான் “அம்மா, சீக்ரெட்… சீக்ரெட்… சுலோக்குத் தெரிஞ்சா ஊருக்கே வத்தி வச்சுருவா. இது நமக்குள்ளயே இருக்கட்டும்”
“கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி உன் பொண்டாட்டிகிட்டயாச்சும் உண்மையச் சொல்லுவியாடா?”
“வாய்ப்பிருந்தா பாப்போம்” அவனிதழ்கள் மாறாத புன்னகையைச் சூடியிருந்தன.
“ஊர், உலகத்துல இப்படி ஒரு காதலைப் பாத்ததே இல்லடா!”
“அம்மி, கண்ணு வைக்காதம்மி” அவன் சிறுபிள்ளை போல சிணுங்கி, தாயாரின் கன்னம் கிள்ளினான்.
“அட, கழுத!” என்று அதட்டியவர் அவனின் கையில் சுடச் சுட தேநீரைப் பரிமாறினார்.
***
2 comments
Ahaan.. ❤️
Ahnn ka 😂