Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 12

காதல் கசக்குதைய்யா – 12

by Vathani S

VVKK – 12

அன்றைய சம்பவம் நடந்து முழுதாக இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. என் அம்மா வீடு நான் ஏன் போகனும், போக மாட்டேன் என கொந்தளித்த ஆதித்யன் அன்று மருத்துவமனையில் இருந்தே கிளம்பியிருந்தான். ஆதனும் அடுத்தநாள் சென்னை கிளம்பியிருக்க, ஆதித்யனுக்கும் இப்படி ஆகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சி அழுத்த, அதன் பிறகு இருவரும் மீனாட்சிபுரம் வரவே இல்லை. 

செய்தி கேட்டு வந்த பாண்டியனும் தாயிடம் நலம் விசாரித்து, தன்னுடைய திருப்திக்காக மீண்டும் ஒருமுறை மருத்துவமனை அழைத்துச் சென்று முழுதாக ஒரு பரிசோதனையை முடித்திருந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகே அமைதியானார்.

முத்துலிங்கம் தான் ஆதித்யன் வந்து, பேசிச் சென்றதை சொல்லி, சொல்லிக் கொந்தளித்துக் கொண்டிருந்தார். “எவ்வளவு திமிரு அவனுக்கு.. ஓடிப்போனவளோட புள்ளைக்கு இவ்வளவு திமிரு, கோபம் இருக்கக்கூடாது. இனி அவங்க யாரும் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது. போனவ போயிட்டவளாவே இருக்கட்டும். இத்தனை நாள் நம்ம நினைப்பே இல்ல. இப்போ மட்டும் எங்க இருந்து வந்து குதிச்சானாம் பேரன்..” என எல்லோர் முன்னமும் கத்திக் கொண்டிருந்தார்.

விஷயம் கேள்விப்பட்டு வந்த தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் கூட, முத்துலிங்கத்தின் கோபத்தில் எதையுமே விசாரிக்காமல், இன்னும் எதுக்கு இவ்வளவு கோபம் இந்த கிழவனுக்கு என சொல்லிச் சென்றிருந்தனர். ரம்யாவிற்கு ஒரு பக்கம் கோபம் இருந்தாலும் மற்றொரு பக்கம் மிகவும் மகிழ்வாக உணர்ந்தார். அன்றைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்று காணாமல் தான் போயிருந்தது.

ஆனால் பாண்டியன் எப்பொழுதும் போல அமைதியாகவே இருந்தார்.  இதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் ஒரு தோற்றம். ஆதித்யனை ஒரு முறைப் பார்த்து வந்தார்.  அவரது நடவடிக்கைகளில் குடும்பத்தினர் தான் முழித்துக் கொண்டிருந்தனர். 

கேசவன் கூட தங்கையிடம் புலம்பித் தள்ளியிருந்தார். “உன் புருஷன் என்ன நினைக்கிறான், என்ன செய்யப் போறான் ஒன்னும் புரியல, உம்முன்னு இருந்தா எதுவும் பட்டம் கொடுப்பாங்களான்னு கேட்டு சொல்லு, நானும் இருந்து பார்க்குறேன். தப்பு செய்றது இயற்கை தான். யாரு தான் தப்பு செய்யாம இருக்கா.. ஆன அவங்க திருந்தி வந்து மன்னிப்பு கேட்கும் போது இப்படி அலட்சியப்படுத்துறது ரொம்ப தப்பு. அதோட தப்பு செஞ்சது  பெரியவங்க, இந்த சின்னப் பசங்க என்ன செய்வாங்க. நீயாச்சும் கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா..” எனப் பொருமியவரிடம்,

“அண்ணா.. உங்க குமுறல் எனக்கு புரியாம இல்லை. ஆனா அவரோட மனசை யாருமே புரிஞ்சிக்கல, நானும் புரிஞ்சிக்காம செய்யக்கூடாது இல்லையா.? அவர் என்ன செய்றாரோ செய்யட்டும். நான் இதுல தலையிடமாட்டேன். எனக்கும் பசங்க வந்ததுல சந்தோசம் தான். பவி போனதுல எல்லாரும் ஒரொரு வகையில பாதிக்கப்பட்டோம். ஆனா எல்லா வகையிலையும் பாதிக்கப்பட்டது அவர் தான். அவருக்குத் தெரியும் அண்ணா, என்ன செய்யனும்னு. நீங்க எதுவும் செய்யாதீங்க..” எனச் சொல்ல,

“ஏண்டா இப்படி சொல்ற, உங்க குடும்ப விஷயத்துல மூக்கை நுழைக்காதன்னு சொல்றியா.?” எனக் கேசவன் வருத்தமாகக் கேட்க,

“ச்சே.. ச்சே.. என்ன அண்ணா நீங்க, நான் அப்படி சொல்ல வரல. பவிக்காக யோசிச்சு, யோசிச்சுன்னு நாம செஞ்சது எல்லாம் போதும். இனி அவளுக்குத் தேவையானதை அவளேக் கேட்கட்டும். யாருக்கிட்ட கேட்க போறா.. அவங்க அண்ணங்கிட்ட, அவ பெத்தவங்ககிட்ட தான, இல்லைன்னு சொல்லவா போறாங்க.. அப்படியே சொன்னாலும் அடம்பிடிச்சு வாங்கட்டுமே. எப்பவும் யார் பின்னாடியோ ஒழிஞ்சிட்டே காரியம் சாதிச்சா, அதுல பாதிக்கப்பட்டவங்களோட நிலமை தெரிய வேண்டாமா.? நாம அமைதியா வேடிக்கை மட்டும் பார்ப்போம்..” என்று கணவருக்கு ஏதுவாக ரம்யா பேச,

“நீ சொல்றது ரொம்ப சரி… ஆனா பாண்டியன் இப்படி இருக்க நானும் ஒரு காரணம் இல்லையா.. அந்த குற்ற உணர்ச்சி என்னை தினம் தினம் கொல்லுது ரம்யா.. நான் நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா..” எனக் கலங்கியக் குரலில் கேசவன் பேச,

“அண்ணா.. விடுங்க எதையும் போட்டு மனசைக் குழப்பாதீங்க. நடக்குற எல்லாம் நல்லதுக்குன்னே நினைப்போம். அவரும் அப்படி ஒன்னும் தப்பான முடிவை எடுக்க மாட்டார். எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி இந்தப் பேச்சை விடுங்க. கதிர் எப்ப ட்ரெயினிங்க் போறான்.” எனப் பேச்சை மாற்ற,

“ம்ம்ம்..” என ஒரு பெருமூச்சு விட்டவர், “அடுத்த மாசம் போறான், உன் அண்ணிதான் புலம்பிட்டே இருக்கா. கல்யாணத்தை முடிச்சிட்டு அனுப்புங்கன்னு, அவன் போஸ்டிங்க் போடட்டும்னு சொல்றான். யாரு ஜெயிப்பாங்கன்னு எனக்குத் தெரியாது..” என சிறு புன்னகையோடு சொல்ல,

“ம்ம்ம்.. எப்படியும் கதிர் தான் ஜெயிப்பான். அவனுக்கு அவங்க அம்மாவை எப்படி சமாளிக்கனும்னு தெரியும்..” எனச் சொல்லிவிட்டு ரம்யாவும் சிரித்தார்.

ஆதித்யன் வந்து போனதில் இருந்தே ஆரணியின் ஜாதகத்தை பார்த்து வரும்படி குருவம்மா சொல்லிக்கொண்டே இருக்க, இன்று போய் வரலாம் என மனைவியை அழைக்க உள்ளே வந்த பாண்டியனின் காதில் இவர்கள் பேசியது மொத்தமும் விழ, அவர் முகத்திலும் இறுக்கம் தளர்ந்து சிறுபுன்னகை. மனைவி தன்னை சரியாகக் கணித்திருக்கிறாள் என்ற பெருமிதம் அந்த புன்னகையில் ஒழிந்திருந்தது என்னவோ உண்மை.

இங்கு மரத்தில் ஆளுக்கொரு கிளையில் முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர் ஆருவும் நிக்கியும். தோழியின் மேல் கொலைவெறியில் இருந்தாள் ஆரணி. இத்தனை வருடங்கள் கூடவே இருந்தவள் தன் காதலை மறைத்திருக்கிறாள் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள.? வீட்டினர் முன் இருவரும் சாதாரணமாக எப்பொழுதும் இருப்பதைப்போல் காட்டிக் கொண்டாலும், தனியில் இருவரும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

காரணம் அன்று ஆதித்யன் கிளம்பிப் போன பிறகே நிக்கியைத் தேட ஆரம்பிப்பத்திருந்தாள் ஆரணி. அவள் தேட ஆரம்பிப்பதற்கும், அப்போது தான் ஆதன் ஒருவழியாக சமாதானம் செய்து, சிரிக்க வைத்து அவன் கிளம்புவதற்கும் சரியாக இருக்க, ஆரணி பார்த்தது இந்தக் காட்சியைத் தான். உடனே மூளைக்குள் அலாரம் அடிக்க,  மண்டையில் மணி அடித்தது.

அட இந்த பக்கி அடிக்கடி ட்ரீம்ஸ்ல போறதுக்கு அந்த லூசுதான் காரணமா.? பார்த்தா ரெண்டும் லவ்ல மிங்கிளாகிருக்கும் போலயே, இது தெரியாம நாம இன்னும் நண்பனுக்கு கோவிலக் கட்டுன்ற ரேஞ்சுக்கு சிங்கிளாவே சுத்தியிருக்கோம், ச்சே வரட்டும் இன்னைக்கு அவளை ஒரு வழி பன்றேன்.. என கருவிக் கொண்டவள், நிக்கியையே முறைத்துக் கொண்டிருக்க, அதுவரை ஆதன் வந்தது, நடந்தது அனைத்தையும் பார்த்த்வள், அவன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டான் என அவனிலேயே உழன்று, அவன் மீதே கவனத்தை வைத்திருந்தவள் அப்போது ஆரணியை மறந்து போயிருந்தாள்.

ஆதன் ஒருவாறாக  உண்மையை சொன்ன பிறகே சற்று சமாதானம் ஆகியிருந்தாள் நிகிதா. அதன் பிறகே சுற்றம் உணர்ந்து பார்க்க, கண்ணில் கொலைவெறி தாண்டவமாட, ஆரு அவளை முறைத்துக் கொண்டிருந்தாள். ‘அய்யோ வசமா மாட்டிக்கிட்டோமா.. இனி இவக்கிட்ட எப்படி சொல்றது, சொன்னா புரிஞ்சிப்பாளா.. எப்படி சமாதானம் செய்றது..’ என்ற யோசனையோடே “ஆரு..” என அழைக்க,

“நீங்க லவ்வர்ஸா..” என்றாள் ஆரணி பதிலுக்கு, “அதுவந்து, அது  அப்படியில்ல ஆரு நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கனும், ப்ளீஸ் ஆரு..” என நிக்கி பேசப் போக,

“நோ.. எனக்குத் தெரியக் கூடாதுன்னு நினைச்ச தானே, அது எனக்குத் தெரியவே வேண்டாம். ப்ளீஸ் எதுவும் சொல்லாத..” என்றவள், “ஆரு.. ஆரு..” என நிக்கி பின்னே ஓடிவந்தும் கூட கண்டு கொள்ளாமல் தன் அப்பத்தா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள். பின்னாடியே பதட்டத்துடன் வந்த நிக்கி, உள்ளே வந்ததும் மற்ற அனைவரும் இருக்க, ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க வேண்டியதாகிப் போனது.

அப்போது மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களில் கூட நிக்கி சொல்ல வருவதை ஆரணி கேட்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் சொல்லப் போக, அவள் முறைத்துக் கொண்டு போக என இருக்க, அது நிக்கிக்கும் கோபத்தைக் கொடுக்க, இப்போது நிக்கியும் பதிலுக்கு முறைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று வீடே பரபரப்பாக இருந்தது. குருவம்மா சொல்ல, சொல்ல ரம்யா வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தார். திருவிழா பக்கம் வருவதால் இப்படி வேலை செய்வது சகஜம் என்பதால் இருவரும் வழக்கம்போல ஒரு பையில் நொறுக்குகளை அள்ளிக் கொண்டு, வழக்கம்போல தங்கள் மரத்தில் ஐக்கியமாகியிருக்க, வெளியில் முத்துலிங்கத்தை மருமகளிடம் சொல்லி குருவம்மா திட்டிக் கொண்டிருந்தார்.

“வர வர இந்த கெழவனுக்கு அறிவே இல்ல. வெண்ணெ தெரண்டு வர நேரம் பானையை உடைச்சானாம் ஒரு முட்டாப்பய, அந்த மாதிரி இருக்கு இவுக பன்றது. இன்னைக்கு வர மாப்பிள்ள வீட்டுல மட்டும் ஆருவை பிடிச்சிடுச்சுன்னு சொல்லட்டும், அந்தாளை உண்டு இல்லன்னு பன்றேன். என்ன நினைச்சிட்டு இப்படி நடந்துக்குறாங்களோ தெரில. என் பேரனுங்க மதுர வீரனுங்க மாதிரி இருக்க, எங்க இருந்தோ சீமையில மாப்பிள்ளை பார்க்குறாங்களாம். மாப்பிள்ளை. வரட்டும் நானே அவனைத் தொரத்தி விடுறேன்..”

குருவம்மாவின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகே ஆரணிக்கு எல்லாம் புரிய, வேகமாக தொங்கிக் கொண்டிருந்த மரத்தில் இருந்துக் குதித்தவள், நேராகத் தன் அப்பத்தாவிடம் சென்று “ஏய் கிழவி நீ சொல்றது நிஜமா. என்னை பொண்ணு பார்க்க வராங்களா.? யாரு.? எங்க இருந்து வர்ரான்.? என்ன படிச்சிருக்கான்.? யாரு இந்த வேலைப் பார்த்தது..” என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்க,

“எத்தனை தடவ சொல்லிருக்கேன் இப்படி குதிச்சு வைக்காதன்னு, கை காலு உடைஞ்சா தான் உனக்கெல்லாம் புத்தி வரும், அப்போதான் அடங்கி ஒடுங்கி ஒரு இடத்துல உக்காருவ.” என மகளை ரம்யா திட்ட, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டாள் அது ஆரணி அல்லவே, பதில் சொல்லாமல் இருந்த தன் அப்பத்தாவையே கீழ்மூச்சு, மேல்மூச்சு வாங்க முறைத்துக் கொண்டிருந்தாள்.

“அப்பத்தா சொல்லு..” என மீண்டும் பல்லைக் கடிக்க, “எங்கிட்ட வந்து ஏண்டி எகிறுர, போய் உன் அப்புச்சியைக் கேளு, அந்த மனுஷன் தான் இந்த வேண்டாத வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்குறது. என் மேலுக்கு மட்டும் நல்லா ஆகட்டும் அப்புறம் இருக்கு இந்த கெழவனுக்கு..” என ஆரணி விறுவிறுவென வீட்டுக்குள் செல்வதைக் கூட கவனிக்காமல் குருவம்மாள் பேசிக் கொண்டே இருந்தவருக்கு, அன்று மருத்துவமனையில் நடந்த சமபவங்கள் கண் முன்னே வந்து நின்றது.

அன்று குருவம்மாவை போய் பார்க்கலாம் என்று செவிலியர் வெளியே வந்து சொல்லவும், யாரையும் பொருட்படுத்தாமல் முதல் ஆளாக உள்ளே போனது ஆதித்யன் தான். அவனால் தான் இப்படியொரு நிலை என்ற குற்ற உணர்ச்சி அப்படி செய்ய வைத்தது.

உள்ளே வந்தவன் பாட்டையின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு “என்னை மன்னிச்சிடுங்க பாட்டி, நான் தப்பு பண்ணிட்டேன். கோபத்துல அப்படி பேசிட்டேன். இனி எப்பவும் இப்படி நடக்காது. நீங்க என்னை பார்க்கல அப்படிங்கிற கோபத்துல தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க பாட்டிம்மா..” என குற்ற உணர்ச்சியில் மிகவும் வருத்தமாக பேச,

“இல்லப்பு.. அப்படியெல்லாம் பேசாத சாமி, தப்பு என் பேர்ல தான். நானும் உன்னை விலக்கி வச்ச மாதிரி நடந்துருக்கக் கூடாது இல்ல. முதல் தட்வை வர் உங்களை அப்படி நடத்திருக்கக் கூடாது தானே. இதெல்லாம் டவுன்ல வளர்ந்த உங்களுக்கு ரொம்பவே கஸ்டமா இருக்கும்னு இப்போதான் புரியுது. நீ தான் என்னை மன்னிக்கனும் அப்பு. இந்த வயசானவ புத்திக்கெட்டு செஞ்சிட்டேன் மன்னிச்சிடுயா..” என்ற குருவம்மாவிற்கு அப்படி ஒரு அழுகை.

“என்ன பாட்டி இதெல்லாம்., நீங்க ஒரு தப்பும் செய்யல. நான் தான் லூசு போல பேசி உங்களை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டுவந்துட்டேன். நீங்க முதல்ல சரியாகுங்க, உங்க உடம்பு சரியாகட்டும். அப்புறம் மத்ததையெல்லாம் பேசலாம்..” என்றவன் முகத்தில் சிறுபுன்னகை.

பிறகு பேரனிடம் தன் மகளைப்பற்றி, அவர்களது வாழ்க்கைப்பற்றி பேசிக் கொண்டிருந்தவர், ஆரணி வந்து எட்டிப் பார்த்துவிட்டு, அப்பத்தாவை முறைத்துச் செல்லவும், மற்ற இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“ஏன் பாட்டி உங்க பேஸ்த்தி எப்பவும் மரத்துல தான் தொங்குவாளா..? அப்போ கல்யாணம் செய்துக்கப் போற மாப்பிள்ளைக்கு  வீடெல்லாம் வாங்கித் தரவேண்டாம். ரெண்டு மரத்தை வாங்கி கொடுத்தா போதும் போல” எனச் சிரிக்க,

பதிலுக்கு சிரித்த குருவம்மாவும், “அவ மட்டும் இல்லன்னா நானும் உங்க தாத்தனும் இந்நேரம் என்ன கதி ஆகிருப்போமோ தெரியாது. எங்களை உயிர்ப்பா வச்சுக்குறது அவ மட்டும் தான் ராசா.” என்றவர், “எங்க ஆருவை நீ கட்டிக்கிறியா சாமி. அவளும் நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த பிரச்சினையெல்லாம்  ஒரு முடிவுக்கு வந்துடும். உங்க தாத்தனும் வாயை மூடிட்டு இருப்பார்” என ஒரு எதிர்பார்ப்போடு கேட்க,

ஆதித்யன் நிமிர்ந்து ஒரு பெருமூச்சை விட்டு, “உங்கக்கிட்ட நானே ஒரு விஷயம் கேட்கனும்னு நினைச்சேன் பாட்டி, கதிருக்கு கொடுக்குறேன்னு சொல்லிட்டு, இப்போ இப்படி பேசினா நான் எப்படி எடுத்துக்க,” எனவும்,

“அப்படி எதுவும் இல்ல ராசா, கதிரோட மாமா பொண்ணை அவனுக்குப் பேசி முடிச்சிட்டாங்க. அவன் வேலையில சேரவும் கல்யாணம் வச்சுக்கலாமனு முடிவு பண்ணிருக்காங்க. பெரியகுளம் தான் அவங்க ஊரு. உனக்கு யாரு இதெல்லாம் சொன்னது” என கேட்க,

ஆதித்யனும் யோசனையோடே கேசவன் பேசியதைச் சொல்ல, குருவம்மா சிரித்துக் கொண்டே “அது சும்மா உன்னை ஆழம் பார்க்க சொல்லிருக்கான் அப்பு. நாங்க கூட முதல்ல இப்படி செய்யலாம்னு நினைச்சோம். அந்தக் குடும்பம் நம்மாளாலஒ பட்ட அசிங்கத்துக்கு ஒரு கைமாறா இருக்கட்டும்னு நினைச்சோம். சுந்தரி கூட சரின்னு தான் சொன்னா..?  ஆனா கேசவன் ஒத்துக்கவே இல்ல.”

“பெத்தவங்க இல்லாம வளர்ந்தவ சுந்தரி, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லன்னு அவ மனசுல எப்பவும் ஒரு எண்ணம். அந்த எண்ணத்தை மாத்தியே ஆகனும். அதுக்காகத்தான் என் புள்ளைங்க ரெண்டு பேருக்கும் அவ சொந்தத்துலையே முடிக்கலாம்னு இருக்கேன். அவளோட நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம். என் பிள்ளைங்களும் நான் சொன்னதைத்தான் கேட்பாங்க. நான் முடியாதுன்னு சொன்னதுக்கு என்னைத் தப்பா எடுத்துக்காதீங்கன்னு முகத்துக்கு நேரா சொல்லிட்டான். அதனால அப்படி ஒரு எண்ணம் எங்க  யாருக்குமே இல்லையே ராசா..” என குருவம்மா முடிக்க,

அதன் பிறகுதான் அவன் மூச்சே சீரானது. முகம் பளிச்சிட சற்று முன் ஆரணி தன்னிடம் பேசியதையும் சொல்ல, “அவளுக்கு ஆசை இருக்கா இல்லையா தெரியல, ஆனா உன்னை வம்பு பண்ணக் கூட அப்படி பேசியிருக்கலாம். எதுக்கும் நீ அவக்கிட்ட இதைப்பத்தி பேசாம இரு. அவளா வந்து உன்னைப்பத்திக் கேட்டா நான் சொல்றேன். கொஞ்ச நாள் கிறுக்கு பிடிச்சு சுத்தட்டும்..” என வாய் கொள்ளா புன்னைகையோடு பேச,

சட்டென்று கதவைத் திறந்து உள்ளே வந்த ஆரணியின் கண்ணில் இப்போது பட்டது இருவரும் சந்தோசமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது தான். வேகமாக உள்ளே வந்தவள் “ஏய் கிழவி மயக்கம் போட்டு விழுந்த மாதிரி நடிச்சியா.. இரு நான் அப்புச்சியைக் கூப்பிட்டு வரேன், அங்க என் அப்புச்சி எவ்வளவு வருத்தமா இருக்காங்க. நீ இங்க என் ஆளுக்கிட்ட உன் காவிப்பல்லக் காட்டிட்டு இருக்க.” எனப் பல்லைக் கடிக்க,

“என்னடி சொல்ற, உன் ஆளா.? வெளிய சொல்லாதடி, உன் அப்பனும் தாத்தனும் உன்னை உரிச்சு உப்புக் கண்டம் போடப் போறாங்க. பேசாம போயிரு. என் பேரனுக்கு மெட்ராசுல உலக அழகி மாதிரி ஒரு பொண்ணு பார்த்து பேசி முடிச்சிருக்காங்களாம், அந்த கல்யாணத்துக்கு நம்மள அழைக்க வந்துருக்காங்க..” எனப் பெரிய குண்டைத் தூக்கிப் பேத்தியின் தலையில் போட, குருவம்மாவின் பேச்சைக் கேட்ட ஆரணியோ ஆதித்யனை நோக்கி காளி அவதாரம் எடுத்திருந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

Featured