முத்தமழை- 39
தன் புகுந்த வீடு மற்றும் மாப்பிள்ளை வீடு சகிதம் உள்ளே வந்த வனிதாவைப் பார்த்ததுமே இது அவளுடைய திட்டம் என்று புரிந்து போனது கர்ணனுக்கு.
தங்கை மேல் அலையாய் பொங்கிய கோபத்தை அடக்கி, வந்தவர்களை சிரித்த முகத்துடனே வரவேற்று அமர வைத்தான்.
ரமேஷ் மட்டும் கர்ணனின் முகத்தைப் பார்த்து தயங்கியபடியே மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்திருந்தான்.
‘அந்த மாப்பிள்ளையை நேரில் பார்த்ததில்லை என்றாலும் வசந்த் கொடுத்த ரிபோர்டில் அவனுடைய புகைப்படத்தை பார்த்திருக்கிறான்… அதோடு.? ஹ்ம்ம்’ என்று தன்னை சமாளித்துக் கொண்டு மனைவியைப் பார்த்தான்.
அவள் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது. காரணம் அவர்கள் வந்த தோரனை. பெண் பார்க்கும் படலம் மட்டும் நடக்கப் போவதில்லையே. இதெல்லாம் யாழினிக்கு தெரிந்தால்.?
“வல்லி.. பாண்டியன்கிட்ட அப்பாவை அழைச்சிட்டு வர சொல்லு..” என்றான் சத்தமாக.
அந்த சத்தமும், அவனின் வார்த்தைகளும் வந்தவர்களை அவனை நோக்க வைத்தது.
அவன் பார்வையில் தெரிந்த கோபத்தில், ராஜலட்சுமியே சற்று ஆடித்தான் போனார்.
பின்னே இவர்கள் வந்து அரை மணி நேரமாகிவிட்டது, யாரும் சொக்கலிங்கத்தைப் பற்றியோ, அவரின் உடல்நிலைப்பற்றியோ கேட்கவோ விசாரிக்கவோ இல்லையே..
“இல்ல தம்பி.. அண்ணன் தூங்கிட்டு இருப்பாருனு தான்..” என விமலா இரங்கிய குரலில் கூற, அவருக்கு பதில் சொல்லாமல், வீல் சேரைத் தள்ளிக் கொண்டு வந்த பாண்டியனிடமிருந்து தன்னிடம் மாற்றி அவனே ஹாலுக்கு நடுவில் வந்து நிறுத்தினான் தந்தையை.
அவரைப் பார்த்ததுமே அனைவரும் நலம் விசாரிக்க, அவர்களுக்கு பேருக்கு பதில் சொன்னாலும் பெரியவரின் பார்வை மகளிடமே இருந்தது.
வனிதாவோ அவரை பார்க்கவே இல்லை.. அதை கவனித்த ராஜலட்சுமி “வனி..” என அதட்ட,
“ம்மா.. நான் போய் யாழியை பார்க்குறேன்..” என அங்கிருந்து சென்றுவிட, சட்டென அந்த இடமே அமைதியாகிப் போனது.
“அது.. அது அவளுக்கு ஒரு கோபம்.” என ராஜி சமாளிக்க, சொக்கலிங்கமோ மனைவியை வெற்று பார்வை பார்த்துவிட்டு, வந்தவர்களிடம் பார்வையத் திருப்பினார்.
காபி, பலகாரம் முடிந்து, பேச்சு வார்த்தை ஆரம்பித்து “பொண்ணுக்கு என்ன செய்வீங்க?” என்றதில் வந்து நிற்க,
“பொண்ணை பார்க்காமலே எல்லாம் பேசி முடிப்பீங்களா?” என கர்ணன் கேட்க,’’
“நம்ம யாழினி தான தம்பி..” என மாப்பிள்ளையின் அம்மா சொல்ல,
“ஆமாம்.. நம்ம யாழினி தான.. வனி மாதிரிதான யாழியும், அம்மா சொன்னதை அப்படியே கேட்குமே..” என வனிதாவின் மாமியாரும் பேச,
“மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார்? இப்போ என்ன வேலை..?” என கர்ணன் தனக்கு தெரிந்தும் கேட்டு வைக்க,
“எல்லாமே முன்னாடியே சுந்தர்கிட்ட சொல்லிருக்கோமே தம்பி..” என மாப்பிள்ளையின் அப்பா கூற,
“ஓ.. சுந்தர் தான் யாழினிக்கு அண்ணன், நான் இல்லைனு சொல்ல வரீங்களா? இல்ல சுந்தருக்கு தெரிஞ்சா போதும்னு சொல்றீங்களா?” என்ற கர்ணன் “எங்க வீட்டு பொண்ணைக் கொடுக்குறோம், எல்லாம் கேட்டு விசாரிச்சு தான் கொடுக்க முடியும். அவன்கிட்ட சொன்னா என்ன? என்கிட்ட சொல்லக்கூடாதா? என்கிட்டயும் சொல்லுங்க, இங்கேயே சொல்லுங்க..” என இறுக்கமாக கேட்க,
“தம்பி.. தம்பி..” என ராஜி கூட்டத்தில் எதுவும் பேச முடியாமல் திணற,
“கர்ணன் கேட்குறது சரிதானே, மாப்பிள்ளையைப்பத்தி எங்களுக்கு தெரிய வேண்டாமா? சும்மா பொண்ணைத் தூக்கி கொடுக்க முடியுமா?” என சொக்கலிங்கத்தின் பங்காளி ஒருவர் கேட்க, வந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை.
“அது தம்பி சொந்த தொழில் தான் பார்க்கிறார்.” என மாப்பிள்ளையின் அக்கா கூற,
“ஓ.. ஃபாரினெல்லாம் போய் படிச்சிருக்காரே… அப்போ ஏன் வேலைக்கு போகல…” இது பார்வதி பாட்டி.
“உங்க பேரனும் தான் பாரின் போய் படிச்சார், இங்க வந்து அப்பா தொழிலை பார்க்கலையா?” என்றது வேறு யாருமல்ல, சுமித்ராதான்.
அதில் வல்லபிக்கு கோபம் பொத்துக்கொண்டு வர, பொதுவில் எதுவும் பேச வேண்டாம் என பல்லைக் கடித்து அமைதியாக இருந்தாள்.
“என் பேரன் இங்கதான் படிச்சான், படிச்ச படிப்புக்கு சும்மா இருக்கக்கூடாதுனு வெளிநாட்டுல போய் வேலை செஞ்சான். அப்பன் சம்பாத்தியத்த அழிக்கல.. அவங்க அப்பாவுக்கு உடம்பு முடியலனுதான் இங்க வந்து சொந்த தொழிலை பார்க்குறான். அதை தப்புனு சொல்ல முடியுமா உங்களால..” என பாட்டி எகிறிக்கொண்டு வர, சுந்தர் பார்த்த பார்வையில் சுமித்ரா பக்கென்று வாயை மூடிக்கொண்டாள்.
பின்னே பேச ஆரம்பித்தால், இவர்கள் சூதாடி பணத்தை தோற்ற கதையெல்லாம் வெளியில் வருமே!
“பாட்டி… அவர் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப்போறாரு, நாம அந்த மரியாதையைக் கொடுக்கனும்…” என அவரை அடக்கிவிட்டு, தன் பங்காளி வீட்டு பெரியப்பாவிடம் கண்ணைக் காட்டினான் கர்ணன்.
கர்ணன் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தை ராஜலட்சுமிக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்தது. எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது என்று தெரிந்து, எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றுதான் சம்மதிக்கிறான் போல என்று நினைத்துக் கொண்டார்.
இப்போது அந்த பங்காளி பெரியப்பா “சரி கையில தொழில்னு ஒன்னு இருக்கே அதே போதும்..” என்றதும், மாப்பிள்ளை வீட்டாரிடம் மெல்ல ஒரு ஆசுவாசம் வந்தது.
“தம்பி அவங்க என்னதான் நம்ம யாழினியை பார்த்திருந்தாலும், சபைக்கு முன்னாடி நிறுத்தி கேட்க வேண்டியது நம்ம கடமை, அதனால மருமககிட்ட பொண்ணை அழைச்சிட்டு வர சொல்லு..” என்றார் அவர்.
‘இப்போது தாம் தூம் என எதுவும் பேசக்கூடாது’ என முடிவெடுத்த வனிதாவின் மாமியார், அவரின் ஓரகத்தியிடம் கண்ணைக் காட்டி அமைதியாக்கினார்.
இந்த நேரத்தில் யாழினியை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இல்லை வல்லபிக்கு, அதோடு ஏற்கனவே யாழினியின் அறையில் வனிதா இருக்க, அங்கு போகவும் அவளுக்கு விருப்பம் இல்லை, அதனால் மாமனாரின் அருகில் அமைதியாக நின்றாள்.
ஆனால் சுமித்ராவிற்கு அப்படியெல்லாம் எந்த உணர்வும் இல்லை போல, கூட்டத்தில் சொன்னதும், மகனை கணவனிடம் விட்டுவிட்டு, மகளோடு யாழினியின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
சொக்கலிங்கம் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் யாழினி அழைத்து வரப்பட, சம்பிரதாயத்திற்கு அவளை நிறுத்தி உடனே அழைத்துச் செல்ல, சரியாக அந்த நேரம் உள்ளே வந்தான் ஜோன்ஸ்.
“யார் இது?” என எல்லோரின் கேள்விக்கும் பதிலாக, “யாழி உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?” என அந்த இடமே அதிரும் அளவிற்கு கேட்டான் ஜோன்ஸ்..
“ஜோ..” என வல்லி ஏதோ சொல்லப் போக, அவள் கையைப் பிடித்து தடுத்துவிட்டார் சொக்கலிங்கம்.
அந்த செயலே இது கணவனின் திட்டம் என புரிய, நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் பெண்.
“ஏய் யாருப்பா நீ..? இங்க வந்து என்ன பிரச்சினை பண்ணிட்டு இருக்க.?” என அந்த பெரியப்பா கேட்க,
மற்ற ஆட்களும் ஆளுக்கொன்று கேட்க, “கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா, நான் தான் கேட்டுட்டு இருக்கேன்ல..” என்றவர், “சொல்லுப்பா யாரு நீ? எங்க பொண்ண எப்படித் தெரியும்..” என பொறுமையாக கேட்க,
“நாங்க சென்னைல ஒன்னா படிச்சோம், எனக்கு யாழினியை பிடிச்சிருந்தது. ஜாப் கிடைச்சதும் வீட்டுல வந்து பேசுறேன்னு சொல்லிருந்தேன், அதுக்குள்ள இவங்க அவளுக்கு கட்டாயக் கல்யாணம் பண்றாங்க..” என ராஜலட்சுமியைப் பார்த்து கூற,
“ஏய் யாருடா நீ? எங்க வீட்டு பொண்ணுக்கு எது நல்லதுனு எங்க அம்மாவுக்குத் தெரியாதா? அவளுக்கு பிடிச்சுதான் இந்த கல்யாணம் நடக்கப்போகுது.. நீ தேவையில்லாம பிரச்சினை பண்ணாம கிளம்பு..” என சுந்தர் அதட்ட,
“இங்க பாருங்க சார்… எனக்கு யாழியோட முடிவு தான் முக்கியம். நீங்க தேவையில்லாம பேசுறதை நிறுத்துங்க..” என சுந்தரிடம் எகிற,
“தம்பி.. இது முன்னாடியே பேசி வச்ச சம்மந்தம். யாழினி படிப்பு முடியட்டும்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்.. இப்போ நேரம் நல்லா இருக்குனு ஆரம்பிக்கிறோம். நீங்க பிரச்சினை பண்ணாதீங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடாதீங்க..” என ராஜலட்சுமி உருக்கமாக பேச, அவரை வெறித்துப் பார்த்தாள் யாழினி.
அவளுக்கு சற்று முன் வனிதா அவளிடம் பேசியதெல்லாம் மனக்கண் முன் ஓடியது.
“அப்புறம் புது பொண்ணு எப்படி இருக்கீங்க.?” என நக்கலாக கேட்டபடி வந்த வனிதாவை வெறித்துப் பார்த்தாள் யாழினி.
“நீ யாரை லவ் பண்ணிருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை யாழி, ஆனா அந்த வீட்டுப் பையனை பிடிச்சிருக்குனு வந்து நின்ன பாரு, அதுதான் எனக்குப் பிடிக்கல.. அவனெல்லாம் நமக்கு தகுதியான ஆளா சொல்லு, ஒழுங்கா மனசை மாத்திக்கிட்டு, என் கொழுந்தனை கல்யாணம் செஞ்சிக்கிற வழியைப் பாரு..” என்றாள் ஆத்திரமாக.
“நீ கூட மாமாவை விரும்பித்தான் மேரேஜ் பண்ண க்கா.. அவரும் நம்ம தகுதிக்கு தகுந்த ஆள் இல்லைதானே” என்றாள் வெறித்த குரலில்.
“ஹேய்.. யாரை யார் கூட கம்பேர் பண்ற. என் புருசனும், அந்த வக்கத்தவனும் ஒன்னா.. ச்சீ.. அந்தளவுக்கு அவன் மேல பைத்தியமா இருக்கியா.. நீ பேசுறதையெல்லாம் பார்க்கும் போது, வெறும் பேச்சு வார்த்தையோட மட்டும் உங்க காதல் இருந்திருக்காது போலையே.. இது மட்டும் வெளிய தெரிஞ்சா குடும்ப மானமே போயிடுமே.. அம்மாவுக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா..?” என நாக்கில் நரம்பில்லாமல் பேச,
“ஆமா.. நீ நினைச்சது சரிதான். நாங்க ரெண்டு பேரும் பெட் ஷேர் பண்ணிக்கிட்டோம், இப்போ வெற்றியோட குழந்தை என் வயித்துல இருக்கு.. போ போய் எல்லாருக்கிட்டயும் சொல்லு..” என யாழினி நிறுத்தி நிதானமாக பேச,
“என்னடி சொன்ன..?” என வனிதா அடிக்க பாய,
“ஆமாம் அதுதான் உண்மை. ஒரு டரக் அடிக்ட்க்கு என்னை கட்டி வச்சு, உங்க குடும்ப மானத்தை காப்பாத்திக்க நீங்க நினைக்கும் போது, எனக்கு பிடிச்ச வாழ்க்கையை காப்பாத்திக்க நானும் எந்த எல்லைக்கும் போவேன்னு உங்களுக்குத் தெரிய வேண்டாமா?” என்றாள் அடிக்க வந்த வனிதாவின் கையைப் பிடித்து முறுக்கியபடி, அதே நேரம் சுமித்ரா உள்ளே வர, தமக்கையின் கையை உதறித் தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள் யாழினி.
அதற்குள் வனிதா தன் தாயிடம் விசயத்தைச் சொல்லிவிட, அத்தனை பேர் முன்னும் “அடிப்பாவி.. என் குடும்ப மானத்தையே வாங்கிட்டியே..” என மகளின் கன்னத்தில் ஓங்கி அறைய, அதுவரை அமைதியாக இருந்த கர்ணன் சட்டென தங்கையை இழுத்து தனக்கு பின்னால் விட்டு, ராஜியை முறைத்தபடி அவருக்கு முன்னே நின்றான்.
அதற்குள் வல்லி வந்து யாழினியை தன்னோடு அனைத்துக்கொண்டாள்.,
“என்ன? என்ன?” என கூட்டத்தில் அனைவரும் சலசலக்க,
“பாவி.. பாவி.. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீங்களே.. எல்லாம் இந்த மனுசனை சொல்லனும், தொழில் பண்றேனு போய், எங்க குடும்பத்தை நடுத்தெருவுல நிறுத்திட்டாரே..” என சொக்கலிங்கத்தை பார்த்து கத்திக் கொண்டிருக்க, அதற்குள் மாப்பிள்ளை வீட்டினரிடம் சிறு சலசலப்பு.
கர்ணனுக்கு என்னவென்றுதான் தெரியுமே, அதனால் இறுகிப் போய் நின்றிருக்க, “ஒரு கஞ்சா குடிகாரனுக்கா எங்க வீட்டுப் பொண்ணை கேட்டு வந்தீங்க..” என பெரியப்பாவின் குரல் சத்தமாக கேட்க, ராஜலட்சுமியின் அழுகை சட்டென நிற்க, கூட்டத்தை விளக்கிப் பார்த்தவரின் விழிகள் அதிர்ச்சியில் நிலை குத்தி நின்றுவிட்டது.
அந்த மாப்பிள்ளையானவன் பிட்ஸ் வந்தது போல், நடுங்கிக் கொண்டிருந்தான்.
இங்கு வல்லபியின் தோளில் சாய்ந்தவளின் பாரம் அதிகமாகவே, வல்லி யாழினியை நகர்த்தப் பார்க்க, அதற்குள் “ஏய் யாழி..” என்ற ஜோன்சின் சத்தத்தில் அனைவரும் யாழினியைப் பார்க்க, விழி சொருக, வாயிலிருந்து நுரைப் பொங்க வல்லபியின் தோளில் இருந்து அப்படியே தரையில் விழுந்தாள் யாழினி.
1 comment
அச்சசச்சோ..! இந்தப் பொண்ணு அவசரப்பட்டு எதையோ குடிச்சு தொலைச்சிட்டாப் போலவே.
😔😔😔
CRVS (or) CRVS 2797