Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 13

காதல் கசக்குதைய்யா – 13

by Vathani S

வர வர காதல் கசக்குதைய்யா – 13

“உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா..” ஆதித்யனைப் பார்த்து நேரடியாகக் கேட்டாள் ஆரணி. அதுவரை இருவரையும் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், ஆரணியின் நேரடிக் கேள்வியில் சட்டென்று தடுமாறித்தான் போனான் அந்த ஆணவன்.

அவன் அமைதியாக இருக்கவும், “உன்கிட்டத் தான் கேட்குறேன், உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா..” என்றாள் கடுப்பாக.

அதற்குள் சுதாரித்தவன் “பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியாது, ஆனா எனக்கு செட் ஆவான்னு தோனுச்சு, அதோட என் அம்மாவுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு..” என அவன் அவளைப் பார்த்து ரசனையாகச் சொல்ல,

“அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு என்னை ஏன் இப்படி முழுங்குற மாதிரி பார்க்குற, கண்ணை நோண்டிடுவேன் பார்த்துக்கோ..” என அவனிடம் காய்ந்தவள், தன் அப்பத்தாளிடம் திரும்பி “இங்காரு அப்பத்தா.. எனக்கு அத்தானைப் பிடிச்சிருக்கு, ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன செய்வியோ, எப்படி பேசுவியோ தெரியாது. எங்க கல்யாணாம் நடக்கனும். இல்லைன்னு ஏதாச்சும் ட்ராமா போட்ட, அப்புறம் நீ என் கல்யாணத்தை எப்பவும் பார்க்க முடியாது..” என ஆவேசமாகப் பேச ஆரம்பித்தவள், இறுதியில் அழுகையில் முடிக்க,

“ஆத்தி.. ஏய் ஆத்தா என்னடி இப்படி..” எனக் குருவம்மா நெஞ்சில் கை வைக்க,

“போ.. என்கூட பேசாத, உனக்கு இன்னைக்கு வந்த பேரன் தான பெருசா போயிட்டாங்க.. ப்போ.. ப்போ…” என அழுத முகத்தை துடைத்தப்படியே அங்கிருந்த மற்றொரு சேரில் அமர, குருவம்மாவிற்கு ஒரு பக்கம் மனம் முழுவதும் மகிழ்வாக இருந்தாலும், மற்றொரு பக்கம் கணவரையும், மகனையும் நினைத்து பயமாக இருந்தது. அவர் என்ன சொல்வதென்று தெரியாமல், ஆதித்யனை சங்கடமாகப் பார்க்க, அவனுக்கும் அதே சங்கடம் தான்.

ஆரணி இப்படி பட்டென்று பேசுவாள் என அவன் நினைக்கவே இல்லையே. அவன் நினைத்து வந்ததைத் தவிற மற்ற எல்லாமே நடக்க, இங்கு நடந்ததைப்பற்றி, வீட்டில் பெற்றவர்களிடம் இன்னும் ஒன்றையும் சொல்லவில்லை. அப்படியிருக்க, இந்தப் பெண்ணிடம் என்ன சமாதான வார்த்தை சொல்வது எனத் தடுமாற, ஆரணி இன்னும் அழுது கொண்டுதானிருந்தாள்.

“ஆரும்மா.. என்னத்தா இப்படியெல்லாம் பேசுற, நீ எங்க வம்சத்துல பொறந்த குலசாமிடா ராசாத்தி. உன்னை கஷ்டப்பட வச்சிடுவோமா.? உன் அப்பனும் ஆத்தாளும் வரட்டும் பொறுமையா பேசுவோம்..” எனச் சொல்ல,

“நீ பொறுமையா பேசு, அதுக்குள்ள உன் பேரனுக்கு கல்யாணம் முடிஞ்சி புள்ளகுட்டியே பொறந்துடும்..” என மூக்கை உறிஞ்சியபடியே ஆதித்யனை முறைத்துக் கிண்டலாகச் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டான் ஆதி.

குருவம்மாவிற்கும் சிரிப்புத்தான். ஆனால் இப்போது சிரித்தால் இன்னும் கோபத்தில் மலையேறுவாள் என்பதால், அமைதியாக “அப்படியெல்லாம் உன் அப்பத்தா நடக்க விட்டுருவேனா.. உனக்குத்தான் முதல் உரிமை. முதல்ல உன்னை ஏன் பொண்ணு கேட்கலன்னு நானே உன் அத்தைக் கூட சண்டை போடுறேன். அவ வரட்டும் உண்டு இல்லைன்னு பன்றேன், நீ சங்கட்டப்படாத..” என அதையும் இதையும் பேசி ஒருவாறாக பேத்தியை சமாதானம் செய்ய, ஆதித்யன் எதுவும் பேசவில்லை அமைதியாகப் பார்த்திருந்தான் சிறு புன்னைகையோடு.

சில நிமிடங்களில் சுதாரித்த ஆரணி இப்போது ஆதித்யனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் திணற, அது அவள் அப்பத்தாவிற்கும் புரிய, அதோடு பேரனிடமும் பேச வேண்டியவைகள் வரிசையாக இருக்க, பேத்தியிடம் “ஆரும்மா முகத்தைக் கழுவிட்டு, அத்தானுக்கு காபி கொண்டுவாடா.. பாவம் வீட்டுக்கு வந்த புள்ளைக்கு ஒன்னுமே கொடுக்கல.” எனவும், ஆரணியும் இதுதான் சமயம் என்பது போல தலையை ஆட்டிவிட்டு, அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் ஓடிவிட்டாள்.

கதவு மூடப்படவும், “என்னப் பாட்டி இதெல்லாம்..” என குருவம்மாவைப் பார்த்து ஆதித்யன் சங்கடமாகக் கேட்க,

“இந்த கேள்விய நான் தானப்பு கேட்கனும். என்ன இதெல்லாம்.? என்ன நடக்குது, எம்பேத்திய முன்னாடியே உனக்கு தெரியுமா..? இல்லன்னு மட்டும் சொல்லாத, என் அனுபவம் தான் உன்னோட வயசு. உன் அம்மா விஷயத்துல தான் நான் கோட்டை விட்டுட்டேன். ஆனா ஆரு விசயத்துல அப்படி இருக்கமாட்டேன்..” எனப் பேரனிடம் நீ சொல்லியே ஆக வேண்டும் என்பது போல கராராகக் கேட்க,

“அப்படியெல்லாம்..” என ஆரம்பித்தவன், அவரின் பார்வை மாறுவதைக் கண்டு, “ஆமா பாட்டி எனக்கு அவளை முன்னாடியே தெரியும். அவ படிக்குற காலேஜுக்கு நான் ஒரு வேலையா ஒரு தடவைப் போயிருக்கேன். அப்போ எனக்கு அந்த வேலைக்கு ஹெல்ப் பண்ண இவளைத்தான் அவங்க காலேஜ்ல அனுப்பினாங்க. அப்படித்தான் தெரியும். ஆனா விருப்பம் அப்படியெல்லாம் எதுவுமில்ல அப்போ. அவளுக்கு எப்படின்னு எனக்குத் தெரியல, நீங்க கேட்டுப் பாருங்க..” என்றவன்,

ஒரு பெருமூச்சை விட்டு “இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலையே பாட்டிம்மா.. மாமாவுக்கும், தாத்தாவுக்கும் விருப்பம் இல்லைன்னா இது எதுவும் நடக்காது. எங்க அம்மாவால வந்த கஷ்டம் என்னாலையும் வந்துடக் கூடாது. அதுக்கு முதல்ல நான் என் அப்பா அம்மாக்கிட்ட பேசனும். இங்க நடந்ததை சொல்லனும். அவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியல, அப்பா இதுக்கு கண்டிப்பா ஓகே சொல்ல மாட்டாங்க. அம்மாவை கூப்பிட்டுப் போனதே உங்களுக்குத் துரோகம் செஞ்சமாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்கார். இப்போ நானும் அப்படி செய்றதைக் கண்டிப்பா அலோவ் பண்ணமாட்டார்.” எனவும்,

“அதை நான் பார்த்துக்குறேன், என்னை மீறி என்ன நடந்துடும். இப்போ என்னோட சந்தேகம் என்னன்னா நீங்க ரெண்டு பேரும் இப்போ தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையே எப்படி..?” என்றார் யோசனையோடு.

“எனக்கும் அதே டவுட் தான் பாட்டி, அவளை இங்க பார்த்ததும் எனக்கே ஷாக். அப்புறம் கொஞ்சம் சந்தோசம். ஆனா ஏன் அவ தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலன்னு எனக்குப் புரியல, ஒருவேளை ஆதன் என் கூட இருந்ததால இருக்குமோ..? இல்லை அவ பக்கத்துல நிகிதா இருந்ததால இருக்குமோ..?” என ஆதித்யனும் யோசனையாகச் சொல்ல,

“இல்ல.. அப்படி இருக்காது. உனக்கு அவளை அடையாளம் தெரியுதான்னு செக் பண்ணிருப்பாளா இருக்கும். எதுக்கும் அவக்கிட்ட சூதானமா இரு. அதுதான் உனக்கு நல்லது. அப்புறம் உன் அம்மாக்கிட்ட பேசி எப்போ வரா என்னன்னு கேளு.. இந்தப் பிரச்சினையோட சேர்த்தே கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சிடலாம்.” என குருவம்மா சொல்ல,

“பாட்டி நீங்க ரொம்ப அவசரப்படுறீங்களோன்னு தோனுது. அம்மா மனசு எவ்வளவு முக்கியமோ.? அதைவிட எனக்கு முக்கியம் அப்பாவோட மனசும். அவர் வருத்தப்படுற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்.” என்றான் ஆதித்யன் உறுதியான குரலில். 

“அப்பு.. இதுவரை பொறுமையா இருந்தது எல்லாம் போதும். அதனால நாங்க இழந்தது எல்லாம் போதும். உன் மாமனை என்னால சரிகட்ட முடியும். ஆனா அந்த கெழவன முடியாது. அதை எம்பேத்தி பார்த்துப்பா.. மத்தபடி எந்தப் பிரச்சினையும் இல்ல. எனக்கு ஒன்னே ஒன்னு சொல்லு. உனக்கு எம்பேத்தியை பிடிச்சிருக்கா இல்லையா..? உனக்குப் பிடிச்சிருக்கு, இதுல முழு சம்மதம்னு சொன்னா மட்டும் நான் அடுத்த வேலையைப் பார்க்குறேன். இல்லைன்னா விட்டுடலாம். அடுத்தவங்களுக்காகப் பார்த்து உன் அம்மா மாதிரி உனக்கும் கஷ்டமாகிடப் போகுது..” என்றவர், பேரனை ஆழ்ந்து பார்த்தார்.

“எனக்கு உங்க பேத்தின்னு தெரிய முன்னாடியே பிடிச்சிருந்தது. அவளோட காலேஜ் போயிட்டு வந்த பிறகு கொஞ்ச நாள் ஆரா நினைப்பாவே இருந்தது. எப்பவும் சந்தோசமா ஒரு துள்ளலா இருக்குறது, தன் கூட இருக்குற, தன்னைச் சுத்தி இருக்குற எல்லோரையும் சந்தோசமா வச்சுக்குறது, எல்லோராலையும் முடியாது. அது அவளால தான் முடியும். இதுதான் ஆராக்கிட்ட எனக்குப் பிடிச்சது. அப்புறம் கொஞ்ச நாள்ல வேலை வேலைன்னு ஓடவும் அந்த நினைப்பே இல்லை. இப்போ இங்கே பார்க்கவும் என்ன சொல்லன்னே தெரியாத அளவுக்கு மனசு முழுக்க ஒரு நிம்மதி சந்தோசம்..” என்று ரசனையாக சொல்ல,

“இது போதுமப்பு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ தைரியமா போ. நான் சொல்லும் போது ஏன் எதுக்குன்னு கேட்காம உன் அம்மா அப்பாவக் கூப்பிட்டுட்டு இங்க வரனும்.. சரியா..?” என்று முடிக்கவும், கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

காஃபி ஃப்ளாஸ்குடன் ஆரணியும், கூடவே இறுகிய முகத்துடன் முத்துலிங்கமும் வர, ஆதித்யன் எழுந்து கொண்டான். நேராக குருவம்மாவைப் பார்த்தவன் “அடுத்த மாசம் எங்க அம்மா அப்பாவோட கல்யாண நாள் வருது. அதுக்காக நான் இங்க தேனில ஒரு வீடு வாங்கிருக்கேன். வெட்டிங்க் டேக்காக எங்களோட கிஃப்ட் அந்த வீடு. அந்த வீட்டு கிரகப்பிரவேஷமும், என் கல்யாணமும் ஒன்னா நடக்கும். கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க..” என்றவன் கிளம்பப் போக,

“அவ எங்களை ஏமாத்திட்டு ஓடிப்போன நாளுதானடா அது. நாங்க எல்லாம் அழுது ஓஞ்சிக் கஷ்டப்பட்ட நாள் உங்களுக்கு சந்தோசமா.?” என பேரனிடம் எகிறியவர், “இதோ பாரு குருவு இவனை இங்க இருந்து முதல்ல வெளியப் போகச் சொல்லு.. இல்ல இங்க ஒரு கொலை விழும் பார்த்துக்கோ. இவனைக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகக்கூட தயங்கமாட்டேன்..” என முத்துலிங்கம் காட்டமாகப் பேச,

“என்ன மனுஷன்யா நீரு, கட்டைல போற வயசுல ஜெயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்கீரு, அதுவும் எம்பேரனைக் கொன்னுட்டு. உமக்கு எம்புட்டு எகத்தாளம் இருக்கனும். அப்படி அவனைக் கொல்லனும்னா முதல்ல என்னைக் கொல்லும். அப்புறம் அவன் மேலக் கைய வையும்..” என குருவம்மாள் ஆவேசமாகப் பேச,

“அப்பத்தா..” என ஆரணி அவரிடம் வர, “நீ சும்மா இருத்தா.. என்ன பேச்சு பேசுறாரு இந்த மனுஷன்..” என அழுகையில் குழுங்க,

“ம்ப்ச்ச் பாட்டி எதுக்கு இப்போ இவ்வளவு டென்சன், நான் பார்த்துக்குறேன் விடுங்க. உங்க உடம்ப பாருங்க. என் கல்யாணத்துக்கு ஓடி ஓடி வேலை செய்யனும்ல..” என்று அவரை சமாதானப்படுத்தியவன், முத்துலிங்கத்தைப் பார்த்துக் கொண்டே ஆரணியிடம் “ஆரா இங்க வா..” என அழைத்தான்.

ஏற்கனவே அத்தனை தூரம் பேசியும் அவன் திருமணம் என்றதில் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தாள் பெண். இப்போது அவன் கூப்பிடவும் ஏன் எதற்கென்று கேள்விகள் வரிசைக்கட்டி வந்தாலும், மறுக்கத் தோன்றாமல் பொம்மை போல் அவனருகில் வந்து நிற்க, அடுத்த நொடி அவள் தோலைச் சுற்றிக் கையைப் போட்டு மேலும் தன்னருகில் இழுத்துக் கொண்டவன், “என்னைக் கொன்னுட்டா உங்க பேத்திதான் வாழ்நாள் முழுசும் விதவையா இருப்பா. அதுதான் உங்களுக்கு வேணும்னா தாராளமா செய்யலாம். எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்லை..” என்றவன்,

 பெரியவரைக் கிண்டலாகப் பார்த்து “என்னைத் தவிர வேற யாரையும் அவளால மேரேஜ் செய்ய முடியாது. வேணும்னா உங்க பேத்தியவே கேளுங்களேன்” என்றான் சவால் விடும் தொனியில்.

கடுங்கோபத்துடன் முறைத்துக் கொண்டே பேத்தியைப் பார்க்க, அவரை நிமிர்ந்த் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை பெண்ணுக்கு. அதே நேரம் அவன் கூறியதை மறுக்கவும் முடியவில்லை. அதை அவருக்கு உணர்த்தும் பொருட்டு மேலும் அவனோடு நெருங்கிக் கொண்டாள். அதுவே பேத்தியின் எண்ணத்தை உணர்த்த, மூவரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு விடுவிடுவென வெளியேறிவிட்டார் முத்த்லிங்கம்.

அவர் கிளம்பவும் ஒரு பெருமூச்சை விட்டவன் அப்பத்தாவைப் பார்க்க அவரோ “ஆவென” அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்து பார்வையில் அவனுக்கு சிரிப்பு வர, தன்னோடு இருந்தவளையும் சேர்த்து அவர் காலில் விழுந்து வணங்கியவன் “பாட்டிம்மா.. நீங்க மட்டும் தான் ஷாக் கொடுப்பீங்களா, நாங்க கொடுக்கமாட்டோமா..?” என்று அவரைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு,

 தன்னுடைய விசிடிங்க் கார்ட் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டியவன், “என்னோட நம்பர் இதுல இருக்கு, வீட்டுல என்ன பிரச்சினை நடந்தாலும் எனக்கு கூப்பிட்டு சொல்லுங்க. அம்மா அப்பா வந்ததும் கூப்பிட்டு வரேன். அதுவரை என் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்க. அவ உங்க பொறுப்பு..” என்றவன் ஆரணியை விட்டு விலக,

“அட படவா ராஸ்கல்.. என் பேத்திக்கு இதுல இஸ்டமா இல்லையான்னு கேட்காமாலே நீ ஒரு முடிவுக்கு வந்தா எப்படி..?” என அவனை ஆழம் பார்க்க,

“அதை எங்கிட்ட ஏன் கேட்குறீங்க, உங்க பேத்தியவே கேளுங்க. கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க… நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்கோங்க..” என அவரிடம் பகிடி பேசிவிட்டு, ஆரணியிடம் ஒரு தலையசைப்போடு கிளம்பிவிட்டான்.

அன்று நடந்ததை யோசித்துக் கொண்டே இருந்தவர் தனக்கு அருகில் முறைத்துக் கொண்டு நின்றிருந்த பேத்தியைப் பார்த்து, “ஆரு ப்போ ப்போ போய் ரெடியாகு.. மாப்பிள்ளை வீட்டுல வந்துடுவாங்க. நல்ல பளிச்சுனு இருக்குற கலரா பார்த்து சேலையைக் கட்டு.. நீ பாட்டுக்கு அங்கியை மாட்டிட்டு வந்துடாத.” எனவும்,

“அப்பத்தா உனக்கு என்ன பைத்தியமா.? அன்னைக்கு நீயும் தானா ஆஸ்பத்திரியில இருந்த. இப்போ ஏன் மாத்தி மாத்தி பேசுற..” என அழும் குரலில் கேட்கவும்,

“பெத்தவங்க நமக்கு கெட்டது செய்யமாட்டாங்க தங்கம்மா.. அழிச்சாட்டியம் செய்யாம ரெடியாகு. மாப்பிள்ளை வீடு நல்ல இடமா இருந்தா முடிச்சிடுவோம்..” என்று முடிக்கும் முன்னே “கெழவி.. உன்னை..” எனக் கத்தியபடியே அவர் மேல் பாய்ந்திருந்தாள் ஆரணி.

You may also like

Leave a Comment

About Me

Featured