முத்தமழை – 40
ஜோனிடமிருந்து பிரித்த யாழினியை, தன் கையில் வாங்கிக்கொண்டு, “பாண்டியன்.. அப்பாவை உள்ள கூப்பிட்டு போங்க,”
“வல்லி அப்பாவுக்கும், பாட்டிக்கும் சாப்பிட கொடு..”
“பாட்டி.. வல்லியை சாப்பிட வச்சு, டேப்ளட் கொடுங்க.. நான் அங்க பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்..” என யாழினியை அள்ளிக்கொண்டு காருக்கு ஓட, டிரைவர் சீட்டில் ஏற்கனவே அமர்ந்திருந்த ஜோன்சை யோசனையாக பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமல், தங்கையை பின்னால் கிடத்தி வேகமாக தானும் ஏறிக்கொண்டான்.
“யாழி.. யாழிமா..” என கன்னத்தை தட்டிக் கொண்டே வந்த கர்ணன் சுற்றத்தை உணரவில்லை.
கார் ஒரு சிறு மருத்துவமனை முன்னே நிற்க, “டேய் ஏண்டா..?” என்று பல்லைக் கடித்த கர்ணனிடம்,
“பாஸ்.. முதல்ல ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு வேற ஹாஸ்பிடல் சிப்ட் பண்ணிக்கலாம்..” என்றான் ஜோன்ஸ்.
கர்ணனுக்குமே அதுவே சரியெனப் பட, கேசுவாலிடிக்குள் அனுப்பிவிட்டு ஓய்ந்து போய் வெளியில் அமர்ந்துவிட்டான்.
தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவனுக்குள், நடந்ததெல்லாம் படமாக ஓட, சட்டென எழுந்து கேசுவாலிடிக்குள் செல்ல, அங்கு ஜோன்சும், வந்தனாவும் யாழினிக்கு இருபுறமும் நிற்க, மருத்துவருக்கு பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள் யாழினி..
“ஊப்ஸ்..” என தன் பயத்தையும், பதட்டத்தையும் ஒரு பெருமூச்சில் விட்டுவிட்டு மூவரையும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்க,
முதலில் அதை கவனித்தது வந்தனா தான்.. “அய்யோ மாமா..” என வாய்க்குள் பயத்துடன் முனக,
“எத..” என அரண்டு போய் திரும்பிய ஜோன்சின் கன்னத்தில் இடியென இறங்கியது கர்ணனின் கரம்.
“பாஸ்..” என்றவன் “இப்போ எதுக்கு என்னை அடிச்சீங்க பாஸ். இப்படி ஒரு மொக்க ப்ளானைப் போட்டுக் கொடுத்ததே அந்த சோத்து மூட்டைதான். கண்டிப்பா நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க, தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு சொன்னேன். இந்த பைத்தியம் கேட்டாத்தானே..” என ஜோன்ஸ் வந்தனாவாய் வாய்க்கு வந்தபடி திட்ட,
“ஷ்ஷ்ஷ்..” என வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தவன, வந்தனாவை திரும்பி பார்க்க,
“அம்மாடியோவ்.. நான் இல்லப்பா..” என ஒரே ஓட்டமாய் வெளியில் ஓடிவிட, யாழினிதான் கர்ணனைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.
“யாழி..” என கண்டிப்புடன் அழைக்க,
“ண்ணா.. தனா தான்..” என விழிகள் நிறைய கூற,
“உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல பாப்பா.. அங்க வீட்டுல எல்லாரும் எவ்ளோ பயந்துட்டாங்க தெரியுமா?” என்றான் கோபமாக.
“அவங்க யாரும் என்னைப்பத்தி நினைக்கல ண்ணா..” என்றவளுக்கு தளும்பிய நீர் வழிய ஆரம்பித்தது.
“பாப்பா.. அவங்கதான் உன்னோட குடும்பமா? நானோ அப்பாவோ, இல்ல வல்லியோ இல்லையா? நேத்திருந்து வல்லி எந்தளவுக்கு வேதனைப்பட்டா தெரியுமா?” என்றான் வருத்தமாக.
“அண்ணா ப்ளீஸ்.. நீங்க இப்படியெல்லாம் பேசாதீங்க.. நீங்க பார்த்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும். வல்லியும் சொன்னாதான். ஆனா அவங்களை பயம் காட்டனும்னு தான் இப்படி பண்ணிட்டேன், தப்புதான் சாரி ண்ணா…” என்றவளுக்கு அழுகை கேவலாக மாறியது.
“யாழி மா.. என்னால முடியாத எதையும் உனக்கு ப்ராமிஸ் பண்ணமாட்டேன். உனக்கும் வெற்றிக்கும் தான் கல்யாணம், அதை யாரும் தடுக்க முடியாது. தடுத்தாலும் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டேன். என்னை நம்பு..” என்றான் பொறுமையாக.
“அண்ணா.. உங்களை நம்பாம இப்படி செய்யல..” என்றாள் பரிதாபமாக.
“சரி விடு.. இனி இப்படி எந்த முட்டாள்தனமும் செய்யக்கூடாது. முக்கியமா இந்த ரெண்டு கூமுட்டைங்க கூட சேர்ந்து ப்ளான் பண்ணவே கூடாது, புரியுதா.?” என்றான் சிரிப்புடன்.
“ண்ணா.. தனா எனக்காக வீட்டுல சொல்லாம கூட இங்க வந்துருக்கா.. அவளை தப்பா சொல்லாதீங்க..” என வந்தனாவைப்பற்றி பெருமையாக பேசுவதாக நினைத்து, போட்டுக் கொடுக்க,
“அடியே யாழி எரும.. உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு, என்னைச் சொல்லனும்.. அந்த கஞ்சா குடிகாரன் கூடவே குடும்பம் நடத்துனு விட்டுருக்கனும்..” என தன் பாண்டா பேகை வைத்து, யாழினியைப் போட்டு மொத்திக் கொண்டிருந்தாள் வந்தனா.
“சாரி டா தம்பி..” என ஜோன்சின் தோளில் கை போட்டபடி கர்ணன் பேசிக்கொண்டே வெளியில் செல்ல,
“மாமா.. மாமா..” என வேகமாக கர்ணனுக்கு முன்னே வந்து நின்ற வந்தனா “வல்லியை வீட்டுக்கு அனுப்புறீங்களா? அவ ரொம்ப ஸ்ட்ரெசா இருக்குற மாதிரி இருக்கு, பேபி பத்தி கூட பேசமாட்டேங்கிறா, பயமா இருக்கு..” என வருத்தமாக கூற, கர்ணன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
வீட்டின் சூழ்நிலை ஒருபக்கம் அப்படித்தான் இருக்கிறதென்றாலும், சாதாரணமாக கூட வல்லி குழந்தையைப்பற்றி அவனிடமும் பேசவில்லையே!
ஏன்? என்ற கேள்வியுடன் அவன் நிற்க,
“அண்ணா…” என்ற யாழினியின் குரலில் திரும்பி அவளைப் பார்க்க, அவள் முகமோ தயக்கமும், பயமும், கோபமும் என்ற உணர்வுகளைப் போட்டி போட்டுக் காட்டிக்கொண்டிருந்தது.
“என்ன யாழி..?” என்றவன் தங்கைக்கு அருகில் வர,
“அது ண்ணா..” என்றவள் ராஜலட்சுமி பேசிய அனைத்தையும் அவனிடம் அழுகையுடன் கூற, தங்கையை தோளோடு அனைத்துக் கொண்டவனின் உடல் இரும்பென இறுகிப் போனது.
“தனு.. நீங்க கிளம்புங்க.. நாளைக்கு யாழியையும், வல்லியையும் கொண்டுவந்து விடுறேன்..” என்றான் இறுக்கமாக.
“மாமா..” என வந்தனா ஏதோ சொல்ல வர,
ப்ளீஸ் தனு.. எனக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் வேணும், அப்புறம் இதெல்லாம் வல்லிக்கிட்ட யாரும் சொல்லாதீங்க, ஏற்கனவே ஓவர் டிப்ரெஷன்ல இருக்கா, இதுவும் கேட்டா இன்னும் அதிகமாகிடும்.” என்ற போது, வந்தனா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
“தனு.. என்ன இது? நீ தான் இவங்க ரெண்டு பேரையும் பத்திரமா பார்த்துக்கனும், நீயே அழுதா எப்படி?” என சமாதானம் செய்ய,
“உங்க தாய்க்கிழவிக்கு என் கையாலதான் பாயாசம். எவ்ளோ திமிரு இருந்தா என் வல்லியோட பாப்பாவை கொல்ல பார்ப்பாங்க..” என கோபமாக கத்த,
“வந்தனா..” என சத்தமாக அதட்டினான் கர்ணன். அவளின் பேச்சில் கர்ணனின் உடலே நடுங்கிப் போனது. அவன் குழந்தை, அவனின் ரத்தம், அவன் காதலுக்கு கிடைத்த பரிசு. இன்னும் இந்த உலகத்தையே பார்க்கவில்லை.
ஏன் தாய் தந்தையான தாங்களே இன்னும் குழந்தையைப் பற்றி சந்தோசமாக பேசி மகிழவில்லை. அதற்குள் அந்த குழந்தையை எத்தனை பேர் சபிப்பார்கள்.
தளர்ந்து போய் ஓரமாக அமர்ந்துவிட்டான் கர்ணன். அதற்குள் அவனுக்கு வல்லி, சுமித்ரா, ராஜி, சுந்தர் என அனைவரும் வரிசையாக அழைக்க ஆரம்பித்தனர்.
“எந்த ஹாஸ்பிடல்னு தெரியாம சுத்திட்டு இருப்பாங்க..” என முணுமுணுத்தவன், சுந்தருக்கு அழைத்து “வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன், நீங்க கிளம்புங்க நான் வந்துடுவேன்..” என்று வைக்க,
“அண்ணா அது.. அதுக்கில்ல ண்ணா.. அந்த மாப்பிள்ளையோட ஃபேமிலி ஸ்டேஷன்ல போய் நம்ம மேல கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க..” என்றான் படபடப்பாக.
“என்ன..?” என அதிர்ந்தவன் “சரி நான் அங்கேயே வரேன்..” என வைத்தவனுக்கு தலைவலி எடுத்தது.
‘அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்’ என்று முன்னமே கணித்திருந்தான் தான். அதற்கு சற்று நேரம் எடுப்பார்கள் என்று நினைத்திருந்தான். இப்படி உடனே செல்வார்கள் என யோசிக்கவில்லை.
“ண்ணா…” என்ற யாழிக்கு பயத்தில் உடல் நடுங்கியது.
“ம்ச்.. ஒன்னுமில்ல யாழி.. பார்த்துக்கலாம் விடு..” என தங்கையை சமாதானம் செய்தபடியே ஏதோ யோசித்தவன், பின் அவளை அழைத்துக்கொண்டு நடந்தான்.
“ஜோன்ஸ்.. பில் பே பண்ணிட்டு, தனாவை சேஃபா வீட்டுல விட்டுடு. தனா இன்னைக்கு நடந்த எந்த பிரச்சினையும், வெற்றிக்கோ, வீட்டுக்கோ தெரியக்கூடாது புரியுதா?” என அதட்ட, பேய் முழி முழித்தாள் பெண்.
அதிலேயே அவள் யாருக்கோ சொல்லிவிட்டாள் என புரிய, “யாருக்கு..” என்றான் கடுப்பாக.
“வெற்றிக்கு..” என்றாள் அவளும் கடுப்பாக.
“நீ எப்போதான் திருந்துவ..” என்றான் பல்லைக் கடித்து,
“ஹான் என் பிரியானி கடையை திறந்து வச்சா, நான் ஏன் வெட்டி வேலைக்கு பஞ்சாயத்து செஞ்சிட்டு இருக்கப் போறேன்..” என அவளும் பல்லைக் கடிக்க,
“எவ்ளோ செல்வானாலும் பரவால்லடி.. முதல்ல உனக்கு அந்த ஹோட்டலை ஓபன் பண்ணித் தந்துடுறேன். அதுவரைக்கும் உன் வாலை சுருட்டிட்டு எந்த பிரச்சினயும் பண்ணாம, ஒரு இடத்துல இரு..” என பல்லைக் கடித்தபடியே கிளம்பிவிட்டான்.
“ஏய் தனா.. யாழினி அம்மா பேசினதை வெற்றிக்கிட்ட சொல்லிடாத, அப்புறம் கர்ணன் சாருக்கும், வெற்றிக்கும் பிரச்சினை வந்துட போகுது..” என்றான் ஜோன்ஸ் பொறுப்பாக.
“ஹ்ம்ம்ம் எனக்கு மனசே ஆறல ஜோ.. இந்த கிழவிக்கு எவ்ளோ கொழுப்பு பார்த்தியா..” என ஆத்திரமானாள் வந்தனா.
“அதுதான் சார் பார்த்துக்கிறேனு சொல்லிருக்காரே, மறுபடியும் நீ மூக்கை நுழைக்காம இருந்தா போதும்..” என அவனும் தன் பங்கிற்கு தோழியை கலாய்க்க,
“டேய்..” என்றபடியே அவனைத் துரத்த, அவனும் ஓட அப்படியே ஹாஸ்பிடலை விட்டு தள்ளி வந்து நின்று, வேகமாக மூச்சு வாங்கினர்.
“எம்மா தாயே.. எப்படிடி உனக்கு மட்டும் மூளை இவ்ளோ ஃபாஸ்டா வேலை செய்து.. நல்ல வேலை ஓடி வந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தா பில் பே பண்ண சொல்லிருப்பாங்க, என் மானமே போயிருக்கும். பணம் இல்லைன்னு சொல்லிருந்தோம், நம்ம கிட்னியை உருவிட்டு விட்டிருப்பாங்க..” என வந்தனாவை இழுத்துக் கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தான் ஜோன்ஸ்.
இங்கு ஸ்டேஷனில் “இங்க பாருங்க சார், அவங்க அம்மா வந்து கெஞ்சினதுனாலதான் நாங்க பொண்ணு பார்க்க போனோம். இப்போ முடியாதுனு சொன்னா எப்படி சார்.? நீங்களே பேசி இதை முடிச்சி விடுங்க..” என மாப்பிள்ளையின் அம்மா இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருக்க, ராஜலட்சுமியோ வனிதாவை தீயாக முறைத்துக் கொண்டிருந்தார்
1 comment
இந்த அசிங்கம், அவமானம்
ராஜிக்கும், லனிதாக்கும் தேவையா…?
😀😀😀
CRVS (or) CRVS 2797