வர வர காதல் கசக்குதைய்யா – 10
“வா கேசவா.. சுந்தரிக்கு சொகமில்லையாமே, சொல்லிருந்தா பார்க்க வந்திருப்பேன்ல, இந்த கிறுக்கியும் அங்க வீட்டுக்கு வந்துட்டு வந்தாளே, ஒரு வார்த்தை கூட என்னுக்கிட்ட சொல்லல. இப்போ எப்படி இருக்கா சுந்தரி..? என்னவாம் மேலுக்கு..” கேசவனிடம் மோரைக் கொடுத்துக் கொண்டே குருவம்மா கேட்க,
“வழக்கம்போலத்தான் அத்த, பனியில எந்திருச்சு வேலை செய்யாதன்னு சொன்னா கேட்டாதானே, ஆஸ்துமா போட்டு படுத்துது. மூச்சிழுக்க சிரமம், இப்ப கொஞ்சம் நல்லாருக்கா.? தொடர்ந்து ஒரு வாரத்துக்கு ஆவி பிடிக்கனும் (நெபுலேசர்) சொல்லிருக்காங்க, அதான் ஆசுபத்திரிக்கும் வீட்டுக்கும் அலைச்சல்.. பாண்டியனும் ரம்யாவும் எப்போ வந்தாங்க, எப்போ கிளம்பினாங்க..” என்றார் கேசவன் ஆதித்யனுக்கு வசதியாக எதிரில் அமர்ந்தபடி.
“அது சரி வீட்டுல பொம்பள வேலை செய்ற மாதிரி வருமா சொல்லு, அதான் இழுத்துப்போட்டு செய்யுறா, நீ கொஞ்சம் அவளை சூதானமா பார்த்துக்க சாமி, பொம்பள போனா குடும்பம் ஒன்னுத்துக்கும் இல்லாம போயிடும். பாரு இல்லாட்டி இங்க கொண்டு வந்து விடு, அப்பனாத்தா இல்லாத புள்ள, யாருமில்லன்னு வருத்தப்பட போகுது” என்றவர், “பாண்டி முந்தாநாள் வந்துட்டு, பிள்ளைங்கள விட்டுட்டு நேத்து காலையிலேயே கிளம்பிட்டான். உன் தங்கச்சியும் ஒட்டுப்புல்லு மாதிரி கூடவே போயிட்டா, அதான் திருவிழாவுக்கு வருவாங்கள்ல, என்ன இன்னும் பத்து நாள்தானே இருக்கு. சரி போன்னு நானும் விட்டுட்டேன்.”
“சரித்த, பாண்டிக்கும் வேலை இருக்குமில்ல, போயிட்டு வரட்டும். சுந்தரியை அப்படில்லாம் விட்டுடமாட்டேன் அத்த, இப்ப நல்லாருக்கா, அவ அண்ணி ஆசுபத்திரிக்கு கூட வந்துட்டு போனாங்க. ஆமா திருவிழாவுக்கு வருவாங்கள்ள, அப்போ பார்ப்போம். பாண்டி இந்த வருசமும் பூ மிதிக்கனுமா? என்ன..? அதுதான் அவன் வேண்டுதல் நடந்துடுச்சே..” என்றார் ஆதித்யனைக் கண்ணால் காட்டியபடி.
“ஆமாப்பு. இனி எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறேன் அப்பு, நான் கும்பிட்ட ஆத்தா கைவிடல, என் புள்ளையோட வேண்டுதலும் பலிச்சிடுச்சி. சீக்கிரம் எல்லாம் சரியாகும்” என்று கண்ணில் பூத்த நீரை, முந்தானையால் துடைத்துவிட்டு, ஆதனையே விழியெடுக்காமல் பார்த்தார்.
உள்ளே சென்ற பிள்ளைகள் மூவரின் சத்தமும் கேட்க, அவர்களுக்கு இப்போது எதுவும் தெரிய வேண்டாம் என்று நினைத்த கேசவன், “அத்த கதிருக்கிட்ட ஆருவைக் கூட்டிட்டு வரச் சொன்னா சுந்தரி, போயிட்டாங்களா, இல்லையா. கூட்டிட்டு போக கதிரு வந்தானே.” என்றபடியே “கதிரு, ஆருக்குட்டி” என அழைக்க,
“எல்லாம் பின்னாடி கொட்டமடிக்குதுங்க, இந்த பிள்ளைங்க வந்தாங்கன்னு நான் தான் அவங்களை உள்ள அனுப்பிட்டேன். இரு அவங்கள அங்கன அனுப்பிட்டு, மதிய சாப்பாட்டுக்கு சொல்லிட்டு வந்துர்ரேன்..” என்றவர் அங்கிருந்து நகரவும் தான், அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை இயல்பாக விட்டான் ஆதித்யன்.
குருவம்மா நகர்ந்ததும், கேசவன் மற்ற இருவரையும் பார்க்க, “சாரிப்பா நாங்க வேலையா எல்லாம் வரல, நான் ஆதித்யன், இவன் ஆதன் என்னோட தம்பி, நாங்க..” என இழுக்க,
“நீங்க எங்க பவித்ரா – முகுந்தனோட பசங்க.. பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன்,” என முடிக்க, அதிர்ச்சியில் இருவரும் உறைந்தே போனார்கள். ‘எப்படி? எப்படி தெரியும் இவங்களுக்கு? நம்மளைப்பத்தி இங்க யாருக்குமே தெரியாதே. எப்படி கண்டுபிடிச்சாங்க..’ அதே அதிர்ச்சியுடன் கேசவனைப் பார்க்க, புன்னகைத்தபடியே அவரும் இவர்களைத் தன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நான் மட்டுமில்ல அத்தையும் உங்களை சரியா கண்டுபிடிச்சிட்டாங்க.” என மேலும் புன்னைக்க
“எப்படி, எப்படி.? எங்களைப் பார்த்ததும் எப்படி கண்டுபிடிச்சீங்க அங்கிள்.. அப்பா நாங்க வர்ரதை சொல்லிட்டாரா.?” என்று ஒருவாரு தைரியம் வந்து தன் பெரும் சந்தேகத்தை ஆர்வமாகக் கேட்டான் ஆதன். ஆதித்யனுக்கு எப்படி கண்டுபிடித்தார்கள் என்று கொஞ்சம் லேட்டாகவே புரிந்தது. ஆனால் அவனுக்கு புரிந்துவிட்டது. ஆதனுக்கு புரியவில்லை, அதனால்தான் கேட்டான்.
“நான் உனக்கு பதில் சொல்றேன். ஆனா ஆதி மாதிரி நீயும் அப்பான்னு கூப்பிடு, அதுதான் முறையும். அப்போ சொல்றேன்..” என கேசவ் டீல் பேச,
“வாவ்… சூப்பர்ப்பா.. எஸ் டீல்.. சொல்லுங்கப்பா எப்படி கண்டுபிடிச்சீங்க..” என உடனே அப்பா போட்டு கேட்க,
“ஆஹான்…” என்று சிரித்தவர், “நீங்க உங்க முகத்தைக் கண்ணாடில பார்ப்பீங்களா இல்லியா, ஆதி அப்படியே முகுந்தன் ஜாடை, நீ பவி ஜாடை.. ரெண்டு பேரும் உரிச்சு வச்ச மாதிரி இருந்தா யாரா இருந்தாலும் கண்டுபிடிச்சிடுவாங்க.” என்றவர், “நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு தெரியுமா..? இப்படி ஒரு நாள் எங்க வாழ்க்கையில வராதுன்னே நினைச்சோம்.. அப்படி எதுவும் நடக்கல, நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க, அப்பா அம்மா என்ன பன்றாங்க..” என விசாரிக்க,
‘அடப்பாவாமே.. மண்டைய மறைச்சியே கோப்பால், மண்டைக்கு மேல இருந்த கொண்டையை மறைக்கலயே..” என ஆதன் மனசுக்குள் முணுமுணுத்தான்.
“அப்பா ஸ்டேட் பேங்க்ல மேனேஜர், ட்ரிப்ளிகேன் ப்ராஞ்ச். அம்மா தனலட்சுமி பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜர், தாம்பரம். அம்மாவுக்கு இன்னும் ஃபைவ் மந்த்ஸ் தான் சர்வீஸ், வீஆரெஸ் வாங்கிட்டாங்க. அப்பாவுக்கு இன்னும் 8 யேர்ஸ் இருக்கு சர்வீஸ். நான் அக்ரி காலேஜ்ல ப்ரஃபசர் அன்ட் அனலைசர். இவன் ஐடி ஃபீல்ட்ல இருக்கான். இவ்ளோதான் நாங்க. வேற சொல்ல ஒன்னுமில்ல, உங்களைப்பத்தி இங்க அத்தை மாமா பத்தி சொல்லுங்க.” என ஆதித்யன் தயக்கமாகக் கேட்க,
“எங்களைப்பத்தி சொல்ல என்ன இருக்கு, வாழ்க்கை போறபோக்குல நாங்க போயிட்டு இருக்கோம். எனக்கு ஒரு பையன் கதிரவன், ஒரு பொண்ணு சைந்தவி. பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பையனுக்கு வேலை கிடைச்சதும் கல்யாணம். அவன் இப்போ ஐபிஎஸ் ட்ரெயினிங்க் போகப் போறான். போஸ்டிங்க் போட்டதும் கல்யாணம். பொண்ணு நம்ம ஆரணி தான்..” எனப் பேச்சுவாக்கிலே ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அதில் ஆதித்யன் ஜெர்க்கானானோ இல்லையோ ஆதன் ஜெர்க்கானான். ‘என்ன ஆல்ரெடி ஃபிக்ஸுடா, அப்படின்னா இந்த குடும்பம் சேர வாய்ப்பே இல்லையா.’ என யோசித்தவன் ஆதியைப் பார்க்க, அவனோ அதைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கேசவனைப் பார்த்து புன்னைகத்துக் கொண்டிருந்தான்.
இவனுக்கெல்லாம் ஒரு பொண்ணு செட்டாயிட்டா மழை வந்துடாது. மூஞ்சைப் பாரு, சரியான சாமியாரா இருப்பான் போல, நாம ரூட் போடலாம்னு பார்த்தா, ஜில்லு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா, நாம அவளுக்கே ரூட் விடுவோம். இவங்க எப்படியோ போகட்டும்..’ என நினைத்தவன் நிக்கி தலை கீழாகத் தொங்கியதை நினைத்துப் பார்த்தான்.
“சரி சொல்லுங்க என்ன விசயம், இவ்வளவு நாள் கழிச்சு எங்களையெல்லாம் தேடி வந்துருக்கீங்க, என்னாச்சு முகுந்தனுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே, பவி நல்லாத்தானே இருக்கா..” என கேசவன் யோசனையாகக் கேட்க,
“அதெல்லாம் இல்லப்பா, யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல. அம்மாவுக்குத்தான் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் மனசளவுல ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இங்கே வரனும், உங்களை எல்லாம் பார்க்கனும், முக்கியமா மாமாவைப் பார்க்கனும்ன்னு அவங்களுக்கு ஆசை, இத்தனை நாளா அமைதியா எதையும் வெளிக்காட்டாம இருந்துட்டாங்க, அதுவே குற்ற உணர்ச்சியா அவங்களைப் போட்டு அழுத்துது.”
“அம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியுமே, முன்னமே அமைதி அதிகமா பேசமாட்டாங்க. இப்போ இன்னும் அமைதி. உங்களை அவமானப்பட வச்சுட்டோம்னு அவங்களுக்கு ரொம்பவே குற்ற உணர்ச்சி. அப்பாவுக்கும் சேம் தாட். இது எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்துல தள்ளிடுச்சு. ப்ரெசர் அதிகமாகிடுது.. திடீர்னு மயங்கி விழுந்துடுறாங்க. இதெல்லாம் பார்த்து எங்களுக்குப் பயம். ”
“ஏன் எதுக்குன்னு விசாரிச்ச பிறகு தான் எல்லாமே சொல்றாங்க. அவங்கள மாதிரியே நாங்களும் அமைதியா இருக்க முடியாதே, அதுதான் என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு, யார் சொல்லியும் கேட்காம கிளம்பி வந்துட்டோம். இனி நாங்க என்ன செய்யனும்னு நீங்க தான் சொல்லனும்..” என ஆதித்யன் முடிக்க, ஆதனின் பார்வை வீட்டைச் சுற்றியது.
ஆதித்யன் சொன்னதைக் கேட்ட கேசவன் ஒரு பெருமூச்சைவிட்டு, “பவித்ர போனதுல ரொம்பவே காயப்பட்டது பாண்டியன்தான். இந்த இருபத்தியெட்டு வருசத்துல அவனை சரி செய்யவே முடியல..” என்றவர், “அன்னைக்கு உன் அப்பாவையும் அம்மாவையும் அனுப்பினது நான் தான்னு இங்க யாருக்கும் தெரியாது. தெரியவேக் கூடாதுன்னு உன் அம்மா என்னுக்கிட்ட சத்தியம் வாங்கினா, ஆனா அந்த சத்தியத்தை முழுசா என்னால ஒரு மாசம் கூட காப்பாத்த முடியல,..” என்றார் சிறு குற்ற உணர்ச்சியோடு.
“பவித்ராவை ஓடிப்போயிட்டான்னு சொல்லி ஊர்ல எல்லாரும் ரொம்பவே அசிங்கமா பேச ஆரம்பிச்சாங்க. அதுவும் வேறு இனமான உங்க அப்பா கூட போனது தான் பெரிய பிரச்சினையே..” எனவும்,
“என்ன அப்பாக் கூடவா, அப்பாக் கூட வந்தது எப்படித் தெரியும், நீங்களும் சொல்லல, வேற யாருக்கும் தெரியாது. பிறகெப்படி ஊர்ல தெரியும்..” என ஆதன் கேட்க, ஆதியன் எதுவும் கேட்கவுமில்லை, பேசவுமில்லை. அவர் சொல்லி முடிக்கட்டும் என அமைதியாக இருந்தான்.
“நான் அவங்க ரெண்டு பேரையும் மதுரையில் மும்பை போற ட்ரெயின்ல ஏத்தி விட்டுட்டுத்தான் ஊருக்கு வந்தேன். ஆனா யாரோட துரதிருஷ்டமோ தெரியல, அவங்க ரெண்டு பேரும் போன ட்ரெயின்ல எங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச ஒருத்தர் மெட்ராசுக்குப் போயிருக்கார். அவர் அங்க போகாம திண்டுக்கல்ல இறங்கி நேரா ஊருக்கு வந்து எல்லாருக்கிட்டயும் சொல்லிட்டார். அப்படியே ஊருக்குள்ள அது பெரிய பிரச்சினை ஆகிடுச்சு. கிட்டத்தட்ட இனக் கலவரம்னு வச்சுக்கோயேன். அதெல்லாம் முடிஞ்சி முகுந்தனோட குடும்பத்தையே ஊரை விட்டு அனுப்பிட்டாங்க. சம்மந்தப்பட்ட எங்களால எதுவும் செய்ய முடியல. இது எங்களையும் மீறி நடந்தது. இது எல்லாம் சேர்ந்து பாண்டியனை மொத்தமா இறுக்கிடுச்சு.”
“அதெல்லாம் விட, அவனுக்கு என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு கவலை. எனக்கு ரம்யா பத்தி கவலை. வீடு வீடாவே இல்லை. என் பேரன்ட்ஸ் என்னை கார்னர் செய்ய ஆரம்பிக்க, நான் ஒத்துக்கலன்னு சொன்னதும், உடனே பாண்டியன் மூலமா பேசினாங்க. எனக்கு அப்போ இந்த முடிவை எடுக்குறது தப்புன்னு தோனல, நான் கல்யாணம் பண்ணனும்னா நீயும் என் தங்கையும் கல்யாணம் செய்யனும்னு சொன்னேன்.”
“என்ன நினைச்சான்னு எனக்கு இப்போ வரத் தெரியாது. ஆனா உடனே சரின்னு சொல்லிட்டான். நானும் ஒரே மாசத்துல எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு, கல்யாணத்தையும் முடிச்சிட்டேன். ஆனா நான் செஞ்ச ஒரே தப்பு கல்யாணம் முடிஞ்சதும் பாண்டியன்கிட்ட எல்லா உண்மைகளையும் சொன்னது தான். அன்னைக்கு என்கிட்ட பேச்சை நிறுத்தினது தான். அப்போ இருந்து இப்போ வரை அவன் என்கிட்ட பேசுறது இல்லை.”
“அன்னைக்கே ரம்யாவையும் கூட்டிட்டு வந்து எங்க வீட்டுல விட்டுட்டு போயிட்டான். அது எங்களுக்கு எல்லாம் ரொம்பவே அவமானமா போகிடுச்சு, என் அப்பா போய் போலிஸ் ஸ்டேஷன் வரைப் போயி, பேசி சமாதானம் செஞ்சி விட்டுட்டு வந்தார். அது இன்னமும் அவனுக்குள்ள கோபத்தை ஏத்திடுச்சு. எங்க குடும்பத்துல யாருக்கிட்டயும் பேசுறது இல்ல. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்க, அத்தையும் இந்த கோபத்தை ரம்யா மேலக் காட்ட, பிரச்சினைகள் ரொம்பவே பெருசாகிடுச்சு..” எனப் பெருமூச்சு விட,
ஆதித்யனுக்கு என்ன பதில் சொல்வது என்றேத் தெரியவில்லை. அவரவர் பார்வையில் அவரவர் செய்தது சரி. ஆனால் இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டது பாண்டியனும் ரம்யாவும் தான். மன்னிப்பென்று கேட்க வேண்டும் என்றால் அது அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என யோசித்தபடியே இருக்க, ஆதனுக்கும் அதே எண்ணம் தான். இருவரும் அந்தப் பேச்சை அடுத்து தொடரவில்லை.
கேசவனுக்கு தொடரும் எண்ணமில்லை. ஆதித்யனுக்கும் கேட்கும் எண்ணமில்லை. அமைதியாக கடந்த சில நிமிடங்களில், குருவம்மா திரும்பி வந்திருந்தார். வந்தவர் ஆதனின் அருகில் அமர்ந்து அவன் கையை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டார்.
“உன் அம்மாவை நாங்க எல்லாம் விட்டுட்டோம்னு நீங்க நினைக்கிறீங்களா.? இந்த வயித்துல அவளை பத்து மாசம் சுமக்கல, ஆனா அப்படித்தானே வளர்த்தேன். அவ அனாதைன்னு அவளா சொல்றா வரைக்கும் நாங்க யாருமே அப்படி நினைக்கலையே ராசா.. எப்படி எங்களை எல்லாம் விட்டுட்டு இத்தனை நாள் இருந்தா.? நாங்க இருக்கோமா, இல்லையான்னு கூட அவ தெரிஞ்சிக்க விரும்பலையே, அப்படி நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம் சொல்லுங்க சாமி.”
“நாங்க எல்லாம் ரொம்ப பழைய ஆளுங்க, எங்களூக்கு இதெல்லாம் புதுசு தான். எங்களால இதை ஏத்துக்க முடியாது தான். அதுக்காக அப்படியே இருந்துடுவோம்னு நினைச்சாளா..? அவளை நினைச்சு நினைச்சு என் வீட்டு ஆம்பளைங்க எப்படி ஆகிட்டாங்க தெரியுமா.? ஊர்ல தலைகாட்ட முடியல.? அவமானம் அசிங்கம் அதையும் மீறி அவளைத் தேடினோம். எங்க போய் எப்படி கஷ்டப்படுறாளோன்னு வயித்துல தினம் தினம் நெருப்பை சுமந்துட்டு இருந்தேன் தெரியுமா.? ஆனா அவ..” என்றவர் குழுங்கி குழுங்கி அழ,
“இங்க என்ன நடக்குது குருவம்மா..? யாரைக் கேட்டு வீட்டுக்குள்ள விட்ட.? இவங்க யாரு..? நான் கொலைகாரான மாறுரதுக்கு முன்னாடி இவங்களை வெளியே போகச் சொல்லு.?” என்று அந்த வீடே அதிரும்படி கர்ஜித்திருந்தார் முத்துலிங்கம்.