Home Antiheroதூரம் – 09

தூரம் 9

நந்தினி கத்தியதில் பயந்து போன கந்தவேல், “கொடி… கொடி தண்ணி கொண்டு வாம்மா…” என்றவாறே திரும்பி கொடியைப் பார்க்க, அவளோ கண்களை மூடி கீழே சாய்ந்திருந்தாள்.

“தம்பி அங்க பாரு… கொடியை பாரு…” என கந்தவேலின் சத்தத்தில் அனைவரும் கொடியைப் பார்க்க, அதற்குள் மனைவியிடம் வந்திருந்தான் இளங்கோ.

“கொடிம்மா கொடி…” என இளங்கோ கன்னத்தைத் தட்ட,

“அண்ணி… அண்ணி…” என நந்தினியும் உலுக்க, மெதுவாக கண்ணைத் திறந்தவள் கணவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஒன்னுமில்ல என தலையசைக்க, மொத்தமாக உடைந்து போனான் அந்த நாற்பது வயது ஆண்மகன்.

“கொடிம்மா… ஹாஸ்பிடலுக்கு போகலாம், தம்பி காரை எடு.” என கந்தவேலு பயத்தில் சத்தம் போட,

மனைவியை தூக்க போனவனிடம் வேண்டாமென தலையசைத்தவள் நந்தினியிடம், ‘தூக்கம் வருது நந்தினி, மாத்திரை போட்டதும் படுக்கணும். இப்போ லேட்டாகிடுச்சுதானே? படுத்தா போதும்…’ என சைகையில் சொல்ல, இளங்கோவிற்கு இதயம் வேகமாகத் துடித்தது.

“சாப்பிடாம மாத்திரை போட வச்சது என் தப்புதான். மன்னிச்சிடுங்க அண்ணி…” என்றவள், அங்கிருந்த யாரையும் கணக்கில் எடுக்காமல் வேகமாக கிச்சனுக்குள் சென்று சாதத்தை மிக்ஸியில் அரைத்து நீர்விட்டு கஞ்சியாக்கி, எடுத்துக்கொண்டு கொடியிடம் வந்தாள்.

“அண்ணி முதல்ல இதை குடிங்க…” என வேண்டாமென மறுத்தவளை, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து கையோடு தண்ணீரையும் குடிக்க வைத்தாள்.

பின் தன் அண்ணனைப் பார்த்து, “அண்ணியை படுக்க வைங்க.” எனவும், அதுவரை நந்தினியின் செயலைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த இளங்கோ, மனைவியை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து அறைக்குள் இருந்த கட்டிலில் படுக்க வைத்தான்.

பல மாதங்களுக்குப் பிறகு அந்த அறையில், அந்தக் கட்டிலில் படுக்கிறாள். சந்தோஷமோ, வருத்தமோ எதுவுமே அவள் முகத்தில் இல்லை. ஏனென்றால் அவள் உறக்கத்தின் பிடியில் இருந்தாள். விழித்திருந்தால் நிச்சயம் இந்த மெத்தையில் படுத்திருக்கமாட்டாள்.

காத்தாடியை வேகமாக சுழல விட்டவன், மனைவியின் காலை நேராக நீட்டி புடவையை சரி செய்து விட்டு, அவள் காலைத் தூக்கி தன் மடியில் வைத்து மெல்ல அழுத்தத் தொடங்கினான்.

நடந்தவைகளை பார்த்திருந்த இளங்கோவின் உடலும் உள்ளமும் பயத்தில் வேகமாக நடுங்கத் தொடங்கியது.

‘என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்?’ என்ற கேள்விதான் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது.

நந்தினி அழுது கொண்டே அனைவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைக்க, சாப்பிடும் எண்ணம்தான் அங்கு யாருக்கும் இல்லை.

நர்த்தனா சுப்பை விட்டு அகலவில்லை. அவள் முகம் பயத்தில் வெளிறிபோய் இருந்தது. நவீனோ கொடியின் அருகில் போய் அமர்ந்தவன் தான், அன்னையின் கையைப் பிடித்தபடி, பயத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கந்தவேலோ யாருக்கு சமாதானம் சொல்வது என்று தெரியாமல், தன் மருமகளின் நிலையை எண்ணி கலங்கிப் போய் நின்றிருந்தார்.

சுப்புதான், “நந்தினி அவளுக்கு என்னாச்சு?” என்றார் தவிப்பாக.

அவர் கேள்விக்கு முதலில் எந்த பதிலும் கூறவில்லை நந்தினி.

இளங்கோவும் கந்தவேலும் அவளையே பார்ப்பதை உணர்ந்த பிறகு தான், “எனக்கும் சரியா தெரியல, ஆனா அண்ணிக்கு ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியும்.” என்றாள் கோபமாக.

“கண்ணு நீ சொல்ல வர்றத தெளிவா சொல்லு, கொடிக்கு என்ன ஆச்சு? அவளுக்கு உடம்புக்கு என்ன?” என கந்தவேல் மகளிடம் அதட்டிக் கேட்க,

“பெரிப்பா, அண்ணியை ஒரு நாள் என்னோட காலேஜுக்கு எதிர்ல இருக்கிற ஹாஸ்பிடல்ல பார்த்தேன்.” என்றவளுக்கு அன்றைய நாள் நினைவில் ஓடியது.

***

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. தலைவலி என்று பெர்மிசன் போட்டு கல்லூரியில் இருந்து வெளியில் வந்த நந்தினியின் பார்வையில் விழுந்தாள் கொடி.

‘அண்ணி இங்க என்ன பண்றாங்க?’ என யோசித்தபடியே ரோடை க்ராஸ் செய்து அவளிடம் செல்ல, “ஏய் நந்தினி, இங்க என்ன செய்ற?” என கொடி கேட்கவும்,

“நானும் அதத்தான் அண்ணி கேட்குறேன், நீங்க இங்க என்ன பண்றீங்க? நீங்க மட்டுமா வந்தீங்க?” என சுற்றி பார்வையை ஓட்டியபடி கேட்க,

“ஆமாப்பா… ஆஸ்பத்திரிக்கு வந்தேன், பார்த்தாச்சு, கிளம்ப வேண்டியதுதான்.” என கொடியும் பதில் சொல்ல,

“என்னாச்சு அண்ணி, உடம்புக்கு என்ன? வீட்டுக்கு தெரியுமா?” என பதட்டமாக கேட்க,

“ஏய், எனக்கு ஒன்னுமில்ல ராசாத்தி, தம்பி பிறந்த நேரம் தைராய்டு இருந்துச்சு. அப்போ இருந்து ஒவ்வொரு மாசமும் செக் பண்ணி மாத்திரை வாங்கி சாப்பிட்டு இருந்தேன். இடையில விட்டு போச்சி. இப்போ மறுபடியும் வலி, பேசவும் முடியல. அதா செக் பண்ண வந்தேன்.” என சிரித்தபடியே கூற,

“ஓ… என்ன சொன்னாங்க?” என நந்தினி கேட்க,

“ரொம்ப நாளாச்சு, அதனால ஒரு MRI Scan எடுக்க சொன்னாங்க. ஃபுல்பாடி செக்கப் ஒன்னு பண்ணிக்க சொன்னாங்க.” என்றாள் கொடி.

“ஏன் அண்ணி பண்ணலையா?” என யோசனையாக கேட்க,

“இல்ல ராசாத்தி, நான் தனியா வந்துருக்கேன். ரெண்டு நாள்ல வீட்டுக்காரரை கூட்டிட்டு வந்து எல்லாம் பண்ணிக்கிறேன். இப்போதைக்கு வலிக்கு மட்டும் மாத்திரை கொடுங்கன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்.” என கழுத்தை தடவியபடியே சொல்ல,

“ஏன் அண்ணி, அதுதான் நான் இருக்கேனே, வாங்க எல்லாமே பண்ணிட்டு போயிடலாம்.” என நந்தினி மருத்துவமனைக்குள் இழுக்க,

“இல்லம்மா, அதெல்லாம் வேண்டாம். MRIக்கு மட்டுமே பண்ணெண்டாயிரம் சொல்றாங்க. மத்ததுக்கு எல்லாம் எவ்வளவு ஆகுமோ? செக் பண்ணிட்டு எப்படியும் ஒன்னுமில்லன்னு தான் சொல்லப் போறாங்க. அதுக்கு ஏன் காசை கரியாக்கிட்டு… வா, இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ஊருக்கு பஸ் இருக்கு. விட்டுட்டா அப்புறம் ஆறு மணிக்குத்தான் பஸ்.” என தன் வலியை மறைத்து பேசியபடியே கொடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

***

அன்று நடந்த அனைத்தையும் சொன்னவள், “அன்னைக்கு உங்கக்கிட்ட சொல்லத்தான் வந்தேன், நீங்கதான் அண்ணியைப் பத்தி பேசினா எங்கிட்ட பேசாதன்னு சொன்னீங்க. அதனாலத்தான் சொல்லல. அதுக்குப் பிறகு நான் கேட்கும் போதெல்லாம் பரவாயில்ல, நல்லாருக்குனு தான் சொன்னாங்க. போன வாரம் மறுபடியும் வலி அதிகமாகிருக்கு. அப்போ அந்த ஹாஸ்பிடல் போக பணமில்லன்னு நம்ம ஊர் பெரியாஸ்பத்திரில பார்த்துருக்காங்க.

அவங்க என்ன சொன்னாங்கனு எல்லாம் அண்ணி எங்கிட்ட சொல்லல. ஆனா மாத்திரை வேற கொடுத்துருக்காங்க, அது தூங்குறதுக்கு ஐஞ்சு நிமிசத்துக்கு முன்னாடிதான் போடணும்னு சொன்னதா சொன்னாங்க.” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழ,

“நான் மாமாக்கிட்ட சொல்ல போறேன். அவர் வந்து அண்ணியை கூப்பிட்டு போகட்டும். இங்க அவங்க நல்லா இல்லை. அவங்களை யாரும் பத்திரமா பார்த்துக்கல.” என சிறு பிள்ளை போல் தேம்பி தேம்பி அழுதாள்.

கந்தவேலுதான், “அழாத கண்ணு, மாமாவுக்கு இப்போ சொல்ல வேண்டாம். விடிஞ்சதும் கொடிக்கிட்ட விசாரிச்சிட்டு சொல்லிக்கலாம். நீ அழுது உடம்ப கெடுத்துக்காத…” என மகளை சமாதானம் செய்ய,

“எனக்கு இப்படியொரு நிலைமை வந்தா நீங்க எல்லாம் இப்படித்தான் இருப்பீங்களா? மாமா நேத்து வந்து அப்பத்தாக்கிட்ட எவ்வளவு வருத்தப்பட்டு பேசிட்டு போனாங்க, தெரியுமா? இங்க அவங்களுக்கு எந்த மரியாதையும் இல்ல. கட்டினவரும் சரி, பெத்ததுங்களும் சரி அவங்களை புரிஞ்சிக்கல. இனி அவங்க இங்க யாருக்காக இருக்கணும்? மாமாவை வரச்சொல்லி அனுப்பி வச்சிடுங்க பெரியப்பா. அங்க இருந்தா உயிரோடவாவது இருப்பாங்க.” என்று விட்டாள்.

அந்த குரலில் அத்தனை கோபம், அழுகை, ஆற்றாமை.

“கண்ணு போதும், அழுகையை நிப்பாட்டு. வீட்டுக்கு போய் அப்பத்தாக்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது.” என்க,

“நான் சொல்வேன்…” என வீம்பாக சொன்னவளைப் பார்த்து கந்தவேலு முறைக்க, “அப்பத்தாக்கிட்ட சொல்லமாட்டேன், ஆனா அம்மாக்கிட்ட சொல்லுவேன்.” என்றவள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்கு சென்றுவிட, இடிந்து போய் அமர்ந்துவிட்டார் கந்தவேலு.

மகள் சொல்வதெல்லாம் உண்மை என்று புரிகிறது. மருமகளின் நிலையும் புரிகிறது. ‘ஆஸ்பத்திரி செலவுக்கு காசில்லன்னு சொன்னாளா?’ அதிலேயே அவர் மனம் துடிக்க ஆரம்பித்தது.

ஊர் முழுக்க சொத்து இல்லையென்றாலும், ஓரளவிற்கு சொத்துள்ளவர்கள்தான். மகனும் சென்ட்ரல் கவர்மென்டில் வேலை. கஷ்டம் என்று எதுவுமே இல்லை. ஆனால் மருமகள்? நினைக்கவே முடியவில்லை.

மருமகள் சொல்லாமல் விட்டதற்கு காரணங்கள் தேட வேண்டியதில்லை. மகனின் பேச்சும் நடவடிக்கையும்தான் என்று அவருக்குத் தெரியாதா?

‘இந்த பெண் எங்களிடம் சொல்லவில்லை என்றாலும், அவர்கள் வீட்டிலாவது சொல்லிருக்கலாமே?’ என்றுதான் சுப்பு நினைத்தார்.

இப்படி ஆளுக்கொரு நினைவில் அமர்ந்திருக்க, தாயின் சேலையை இழுத்து கைக்குள் சுற்றிக்கொண்டு அவளை ஒட்டி படுத்துக்கொண்டான் நவீன்.

அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது மிகவும் பயந்துவிட்டான் என்று. அப்படியே திரும்பி மகளைப் பார்த்தான் இளங்கோ. அவளும் சுப்புவின் மடியில் படுத்தபடியே கொடியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தந்தையின் பார்வையை உணர்ந்தவள் இப்போது அவனை பார்க்க, ‘இங்க வா’ என்பது போல் தலையசைக்க, வேகமாக எழுந்து வந்தவள், “சாரிப்பா… சாரிப்பா…” என அழ ஆரம்பித்தாள்.

அக்காவை பார்த்து நவீனும் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “அம்மா பாவம்! நான்தான் தப்பு பண்ணிட்டேன், அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் அவங்களை அவாய்ட் பண்ணிட்டேன். அம்மா முழிச்சதும் நான் சாரி சொல்லணும்…” என அழ, பிள்ளைகள் இருவரையும் அணைத்துக்கொண்ட இளங்கோவின் கண்களும் கலங்கத்தான் செய்தது.

நந்தினி பேசி சென்ற ஒவ்வொரு சொல்லும் அவன் இதயத்தில் ஆணியாய் இறங்கிக் கொண்டிருந்தது. என்ன தான் காரணங்கள் சொல்லி தன்னை நியாயப்படுத்திக் கொண்டாலும், இன்றைய மனைவியின் நிலைக்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று புரிந்தது.

எப்படி அவளிடம் பேசுவது? என்ன பேசுவது? சிறு பிள்ளையாக இருந்தவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என வீட்டில் இருக்கிறவர்களிடம் பேசி, சண்டையிட்டு திருமணமும் செய்து அவள் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டேன்.

‘அய்யோ! அவளுக்கு பெரிதாக எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. அவள் இல்லையென்றால் நானும் பிள்ளைகளும் தவித்து போவோமே…’ என பிள்ளைகளுக்கு தெரியாமல் மனதுக்குள்ளே கதறியவன், இரு பிள்ளைகளையும் அணைத்தபடியே அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு மகளைத் தன்னிடமிருந்து பிரித்தவன் அவளை நேராக பார்க்க, “ப்பா…” எனத் திணறினாள் நர்த்தனா.

“நான் பேசினது தப்புதான் ப்பா. அது ரொம்ப தப்பு… நான் அம்மாக்கிட்ட சாரி கேட்குறேன் ப்பா… ப்ளீஸ்ப்பா… எனக்கு பயமா இருக்குப்பா…” என அழுது கொண்டே பேச,

“எப்போ இருந்து ரெண்டு பேரும், ‘அம்மா’ன்னு கூப்பிடுறதை நிறுத்துனீங்க?” என்றான் அமைதியாக. அந்த குரலில் இருந்த கோபமும் இறுக்கமும் கந்தவேலுக்கு பயத்தைக் கொடுக்க, மகன் அருகே வந்துவிட்டார்.

“ப்பா…” என தந்தையின் முகத்தைப் பார்க்க முடியால் நர்த்தனா தலையைக் குனிய,

“இவதான் ப்பா அப்பாவே அவங்களை மதிக்கல, நீ ஏன் அம்மான்னு கூப்பிடுற? அப்படி கூப்பிடாதனு சொன்னா…” என நவீன் அழுதுகொண்டே சொல்ல, யாரும் எதிர்பார்க்காத நேரம் மகளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான்.

“அம்மா…” என அலறி கீழே விழும் முன் பிடித்திருந்த கந்தவேலு, “சின்ன பிள்ளையை ஏன்டா அடிக்கிற? அவ பேசினதுல என்ன தப்பு? கட்டின பொண்டாட்டிக்கு நீ என்ன மரியாதை கொடுத்த? நாற்பது வயசான உனக்கே பொண்டாட்டியை மதிக்கத் தெரியல, சின்ன பிள்ளைங்க அதுங்களுக்கு என்ன தெரியும்?” என மகனிடம் கத்தியவர், பேத்தியை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

தந்தையின் கோபத்தில் அரண்டு போன நவீன் மீண்டும் கொடியிடம் ஒட்டி அமர்ந்து கொள்ள, தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான் இளங்கோ.

“ம்மா… ம்மா சாரிம்மா… என்னை பாரும்மா… ம்மா…” என நவீன் முனங்கிக்கொண்டே கொடியின் முகத்தை வருட, தந்தையாக, ஒரு ஆண்மகனாக படுமோசமாக தோற்றுவிட்டிருந்தான்.

“புள்ளைய உள்ளே கூப்பிட்டு போய் படுக்க வை, நான் வீட்டை பூட்டிட்டு வரேன். இனியாச்சும் அவளுக்கு நல்லதை சொல்லி வளர்க்கப்பாரு. உன்னோட வளர்ப்புக்கு கிடைச்ச மரியாதை தான் இந்த அடி…” என மனைவியிடம் எரிந்து விழுந்த கந்தவேலு பின்பக்கம் செல்ல, கணவரின் பேச்சில் இடிந்து போனார் சுப்புலட்சுமி.

அவர் சொல்வதும் உண்மைதான். அவருடைய வளர்ப்புத்தானே பேத்தி. பெண் பிள்ளைகள் இல்லாத வீடு. முதல் வாரிசு, அதிலும் பெண் வாரிசு என்றால் சொல்ல வேண்டுமா? எங்கள் வீட்டு மகாலட்சுமி என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, கொடியையோ அவள் குடும்பத்தையோ பக்கத்திலே விடாமல் வளர்த்தவராச்சே?!

முன்னெல்லாம் மகளைப் பற்றி தப்பாக யார் சொன்னாலும் தாயிடம் வந்து கத்துவான். சமீபமாக அவனும் எதுவும் கேட்பதில்லை என்றான பிறகு, பேச்சுக்கும் செல்லத்துக்கும் சொல்லவும் வேண்டுமா? இன்று நர்த்தனா சொன்ன, எங்களுக்கு சமைச்சிப் போடத்தான் அவங்க இருக்காங்க என்ற வார்த்தை சுப்புவிடமிருந்து வந்ததுதான்.

‘உன் அம்மாக்காரிக்கு என்ன பெரிய வேலை? மூனு நேரமும் உங்களுக்கு ஆக்கிப்போடுறத விட பெரிய வேலை என்ன பார்க்குறா?’ என ஒரு நாளைக்கு பத்து தடவையாவது பேத்தியிடம் சொல்லிவிடுவார். அது அவள் மனதில் அப்படியே பதிந்து போய்விட்டது.

இனி வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை என உணர்ந்தவர், பேத்தியின் கன்னத்தில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தார். இந்த வாழ்க்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு பாடத்தை நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. அதை புரிந்து கொள்கிறோமா? அல்லது வெறுமையாக கடக்கிறோமா? அதனை பொருத்தே, வாழ்வின் மீதி பக்கங்களில் இன்பம், துன்பம் என்ற மார்க் விழபோகிறது. பார்ப்போம், இளங்கோவின் மார்க்குகளை… இனி அவன் வாழ்க்கை, அவன் கையில்!

***

You may also like

Leave a Comment

About Me

Featured