வர வர காதல் கசக்குதைய்யா – 8
பார்த்தாலே உள்ளுக்குள் நடுக்கம் பிறக்கும் அளவிற்கு, உயர்ந்து நின்ற அந்தக் கடவுளின் சிலையையேப் பார்த்துக் கொண்டிருந்தார் கேசவன். நொடியில் ஒரு முடிவு எடுத்து விட்டார்தான். ஆனால் அதை செயல்படுத்தத் தான் அவரால் முடியவில்லை. வெளியில் தெரிந்தால் எத்தனை எத்தனை அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். தனக்குப் பின் தன்னையே நம்பியிருக்கும் குடும்பம், அவனது ஆசைத் தங்கை அவர்களை எல்லாம் நினைக்கும் போது இந்த முடிவைத் தூக்கி எரிந்து விட்டு, பவித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பும் வெறிதான்.
முகுந்தனை சமாதானம் செய்து விடலாம் தான். ஆனால் இன்று உயிரை விடத் துணிந்தவளை, எந்த வகையில் சமாதானம் செய்வது. இப்போது காப்பாற்றியாகி விட்டது. மீண்டும் இதே வேலையைச் செய்யமாட்டாள் என்று என்ன நிச்சயம். வேண்டாம் அவள் போகட்டும், அவளுக்குப் பிடித்தவனோடு போகட்டும். அவள் வாழ்வாவது நிம்மதியாக இருக்கட்டும் என ஒருவழியாகத் தன்னையே சமாதானம் செய்தவர் முகுந்தனிடம் திரும்பினார்.
தான் எடுத்த அந்த முடிவை அவரிடம் சொல்லப் போக, “என்னை மன்னிச்சிடு கேசவ். என்னால தான் இவ்வளவு பிரச்சினையும். சினேகிதன் வீட்டுக்கு வந்தா, வந்த வேலையை மட்டும் பார்த்திருக்கனும், ஆனா நான்.. நான் என்ன வேலை பார்த்திருக்கேன். ஒரு நல்ல நட்புக்கு தகுதியானவன் நான் இல்ல கேசவ். உங்க தெருவுல எங்காளுங்கள வீட்டு வாசலைக் கூட மிதிக்க விடமாட்டாங்க. ஆனா நீங்க என்னை நம்பி வீட்டுக்குள்ள வரை விட்டீங்க. அந்த நம்பிக்கையை உடைச்சி உங்களுக்குத் துரோகம் செய்திருக்கேன். அந்த துரோகத்துக்கு பலனா இந்த வலியை, இந்த வலியை நான் தாங்கிக்குறேன். நீ இவங்களை அழைச்சிட்டுப் போ.. போய் இவங்க கூட உன்னோட வாழ்க்கையைத் தொடங்கு. ப்ளீஸ் கேசவ்..” என்ற முகுந்தனை அதிர்ந்து பார்த்தனர் மற்ற இருவரும்.
“ஏய் முட்டாள் மாதிரி என்ன பேச்சு பேசுற, தியாகமா..? நீ எனக்கு பிச்சை போடுறியா..? எனக்கு விட்டுக்கொடுத்து நீ என்ன செய்ய போற.? இதோ இவ, இன்னைக்கு செஞ்ச மாதிரி இன்னொரு நாள் செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம். முதல்ல இப்படி முட்டாள் மாதிரி பேசாத, இனி இவ கூட வாழ எனக்கு துளியும் விருப்பம் இல்ல. நீ கூட்டிட்டுப் போயி வாழுவியோ இல்ல சாவையோ என்னமோ பண்ணு. ஆனா என்னை இவ கூட வாழச் சொல்லாத, அது என்னால எப்பவும் முடியாது.” என கேசவன் கோபமாகச் சொல்ல, அருகில் நின்ற பவித்ரா பயத்தில் தானாக இரண்டடி பின்னடைந்தார்.
“கேசவ் என்ன பேசுற.. அவங்க உன்னோட மனைவி. உன்னோட மனைவி மட்டும் தான். அதை மறந்துடாத..?” என பதிலுக்கு கேசவும் கத்த
“வேண்டாம்.. யாரும் எனக்காக சண்டை போட வேண்டாம். நான் தான். என்னால தான் பிரச்சினை. நான் இருக்கிறது தான் பிரச்சினை. நான் இல்லைன்னா இது எதுவும் இல்ல. நான் போறேன். செத்துப் போறேன். எனக்கு இப்படி வாழவே வேண்டாம். போங்க.. ரெண்டு பேரும் போங்க..” என முகத்தில் அடித்தபடி பவித்ரா இப்போது ஆவேசமாகக் கத்தினாள்.
அவள் கத்தலில் ஆண்கள் இருவரும் அதிர்ந்து நிற்க, அடுத்து சில நிமிடங்கள் பவித்ராவின் அழுகையைத் தவிர வேறு சத்தமே அங்கு இல்லை. எதுவும் செய்ய இயலாமல் மௌனமாகக் கையைப் பிசைந்துக் கொண்டிருந்தனர் மற்ற இருவரும்.
அவள் அழுகையைப் பார்த்ததும் அங்கிருந்து நகர்ந்து, அந்த உயர்ந்த சிலையின் முன்னே சென்று நின்றார் கேசவன். சற்று முன் பயம் கொடுத்த அந்த சிலை தற்போது சாந்தமாக நிற்பது போல் தோன்றியது. அந்த கண்கள் கூட புன்னகையைக் கொடுப்பது போல, அவருக்கு ஏதோ செய்தி சொவது போல கூட இருந்தது. அக்கடவுளின் முன்னே சில நொடிகள் கண் மூடி நின்றார்.
பின் ஒரு முடிவோடு வேகமாக பவித்ராவிடம் வந்தார். “பவி எனக்கு உண்மையா, என்னைப் பார்த்து நேரா நேர்மையா பதில் சொல்லனும். நீ பொய் சொல்ல மாட்டன்னு எனக்குத் தெரியும். அது வரவும் வராது. நான் கேட்குறதுக்கு பதில் சொல்றியா.?” எனக் கேட்க,
‘என்ன’ என்பது போல் பார்க்க, “இவனை மறந்து என் கூட உன்னால வாழமுடியுமா.? நான் தப்பா நினைக்க மாட்டேன் சொல்லு..” எனவும் பவித்ராவின் பார்வை வேகமாய் முகுந்தனைத் தொட, அவர் தலையை நிமிர்த்தவே இல்லை.
சில நொடிகள் பார்வையை அங்கேயே நிலைக்க விட்டவர், “இல்ல, முடியாது. அவரைத் தவிர வேற யாரையும் நினைக்க முடியல, முடியாது. எப்பவும் முடியாது. நான் என்ன செய்யட்டும்..” எனச் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கழுத்தில் அன்று காலையில் தான் கட்டிய மாங்கல்யத்தை வெடுக்கென்று அத்து எடுத்தவர், வேகமாக உள்ளேச் செல்ல,
அவர் மாங்கல்யத்தை அத்தெடுத்ததிலேயே முகுந்தனும் பவித்ராவும் அதிர்ந்து நிற்க அடுத்து அவர் செய்த செயலில் சிலையாகி விட்டனர். கோவிலுக்குள் சென்ற முகுந்தன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை ஒரு நொடி உற்று நோக்கினார். ஒரு நொடி தான். அடுத்த நொடி அதை அங்கிருந்த உண்டியலில் போட்டுவிட்டு அவர்களுக்கு முன்னே வந்து நின்றார்.
“டேய்.. என்ன பண்ணி வச்சிருக்க. பாவம் பண்ணாதடா, ஏண்டா இப்படி..” என பலவாறாக முகுந்தன் புலம்ப, பவித்ரா இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஆனால் கேசவன் அப்படியே நிற்கவில்லை.
வீட்டில் இருந்து வந்து வெகுனேரமாகிவிட்டது. அங்கு இல்லை என்றதும் தேட ஆரம்பித்து விடுவார்கள். யாரேனும் பார்த்தால் நிச்சயம் பிரச்சினைதான். மேலும் முகுந்தனோடு, அதுவும் திருமணமான அன்றேத் தாலி இல்லாமல் பார்த்தால் அவனோடு பார்த்தால் பிரச்சினைகள் முற்றி இருபிரிவினருக்கும் இடையே ஜாதிக்கலவரமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது என்று புரிய, அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தார்.
அங்கு இருந்த கோவில் மரத்தில் கட்டியிருந்த மஞ்சள் கிழங்குடன் கூடிய மஞ்சள் கயிறைக் கழட்டி வந்தவர், அதை முகுந்தனின் கையில் கொடுத்து பவித்ராவின் கழுத்தில் கட்ட சொன்னார். முகுந்தன் ஒரு பக்கம் முடியாது என்க, பவித்ரா ஒருபக்கம் தப்பு.. தப்பு எனக் கத்த, இருவர் பேச்சையும் கேசவன் பொருட்படுத்தவே இல்லை.
இருவரையும் உருட்டி, மிரட்டி அந்த நள்ளிரவில் காத்தவராயனின் சன்னதியின் முன் அவர் சாட்சியாக இருவருக்கும் திருமணத்தை நடத்திக் கையோடு மதுரை வரை அழைத்துச் சென்று, அங்கிருந்து வடக்கே செல்லும் ஒரு ரயிலில் ஏற்றிவிட்டு ஊர் திரும்பினார்.
ஊருக்குள் வந்ததுமே தெரிந்தது பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டது என்று. அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாண்டியனுக்கு சொல்ல வேண்டுமே, அவரிடம் என்ன சொல்ல.? எப்படி சொல்ல.?” என யோசித்தவாறே வீட்டுக்குள் செல்ல அங்கு பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, ஆண்கள் அனைவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
பாண்டியன் மட்டும் தன் கையில் இருந்த சிறு பேப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டதும் வேகமாக பாண்டியனிடம் சென்று வாங்கி பார்க்க, “அண்ணா அப்பா அம்மா நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, உங்க கூட பிறக்கலன்னாலும், கூட பிறந்தவ மாதிரி தான் என்னை பார்த்துக்கிட்டீங்க. பிறந்ததுமே பெத்தவங்களை முழுங்கின என்னை, அப்படி ஒன்னு நடந்த மாதிரியே காட்டிக்காம, அந்த குறையே தெரியாம வளர்த்தீங்க. நான் இந்த வீட்டு பொண்ணு இல்லன்னு இங்க யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டீங்க. ஆனா அதுக்கு எல்லாம் நான் எத்தனை ஜென்மம் எடுத்து நன்றி சொன்னாலும் பத்தாது.
“ஆனா நான் நன்றி செய்றதுக்குப் பதிலா துரோகம் செஞ்சிட்டேன். நானும் உங்க யாரையும் வருத்தப்படுத்தக் கூடாதுன்னு முடிவெடுத்து இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். சீக்கிரம் என் மனசும் மாறும்ன்னு நம்பினேன். இந்த வாழ்க்கையை ஏத்துக்கனும்னு நினைச்சேன். ஆனா அது மட்டும் நடக்கவே இல்லண்ணா. உங்கக்கிட்ட சொல்லிருக்கலாம். நீங்க எனக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பீங்க. ஆனா ரம்யா அவ வாழ்க்கையும் உன்னோட வாழ்க்கையும் பாழாகிடுமே. அதுதான் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் தாங்கிக்கலாம்னு நினைச்சு சரின்னு சொன்னேன்.”
“ஆனா இப்போ என்னால முடியலன்னா.. என்னால வேற யார் கூடவும் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது அண்ணா. அப்படி வாழ்ந்தா நான் பொணம். பொணத்துக்கு சமம். என்னைப் புரிஞ்சிக்கங்க அண்ணா. அதுக்காக அவர் கூட போய் வாழப்போறேன்னு சொல்லல, இந்த உலகத்தை விட்டே போறேன். என்னை மன்னிச்சிடுங்க அண்ணா. தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். என்மேல இருக்குற கோபம் எல்லாம் போய் என்னை மன்னிச்சிட்டா நீங்க ரம்யாவை கல்யாணம் செய்துக்கனும்.”
“அவ உங்களை உயிரா விரும்புறா. எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்னு அவளுக்குத் தெரியாது. ஆனா அவ விரும்புறது உங்களுக்குத் தெரியும். என்மேல இருக்குற கோபத்தை உங்க வாழ்க்கையில காட்டிடாதீங்க. நீங்க நல்லா இருக்கனும். குடும்பம் குழந்தைன்னு சந்தோசமா இருக்கனும். அம்மா அப்பாவைப் பார்த்துக்கனும். எனக்கு வாழ ஆசையே இல்லை அண்ணா. அப்படி ஒருவேளை உயிரோட இருந்தா என்னைக்காவது ஒருநாள் உங்களைத் தேடி வருவேன். அப்போ நீங்க என்னை ஏத்துக்குவீங்களா..? ஏத்துக்கோங்க அண்ணா.. உங்களை விட்டா இந்த அநாதைக்கும் யார் இருக்கா..?” என்ற வார்த்தைகளோடு அந்த கடிதம் முடிந்திருந்தது.
“பாண்டியா..” நண்பனின் கையைப் பிடித்தக் கேசவனிடம், “போயிட்டா.. அவ போயிட்டா.. போகட்டும். இனி அவளைப்பத்தி யாரும் பேச வேண்டாம். இத்தனை நாள் அவ மனசுல எங்க மூனு பேரையும் வேறையா தான் நினைச்சிருக்கா இல்லையா.? ஆனா நாங்க யாரும் அப்படி நினைச்சதும் ஏன் அந்த நினைப்புக் கூட வந்தது இல்லையே. சித்தி இறந்ததும் அம்மா இவளை இங்க தூக்கிட்டு வந்தப்போ என்னைவிட யாரும் சந்தோசப்பட்டிருக்க மாட்டாங்க. ஆனா அதுக்காக இப்போ ரொம்ப ரொம்ப வருத்தப்படுறேன் கேசவா. துரோகி அவ. ஒரு காதலுக்காக எங்களைத் தூக்கி எறிஞ்சிட்டு போன துரோகி. அவளைப் பத்தி யாரும் இங்க பேசக்கூடாது.” என்றவர், நேராக பெற்றவர்களிடம் சென்று, “அவளைப்பத்தி பேசினா இனி இங்க நான் இருக்கமாட்டேன். அவ இருந்தாலும் செத்தாலும் எனக்கு ஒன்னும் இல்லை. இனி அந்த துரோகிக்கு இந்த வீட்டுல இடம் இல்லை.” எனக் கட்டளையாகச் சொன்னவர்,
நண்பனிடம் திரும்பி, “உங்க வீட்டையும் இந்த பிரச்சினையில இழுத்து விட்டுட்டேனே கேசவா, என்னை மன்னிச்சிடுடா..” என யார் இருக்கிறார்கள் இல்லையென்றும் பாராமல் காலில் விழ, கேசவன் “ஏய் என்னப்பா நீ..” என சட்டென பின்னோக்கி நகர்ந்து விட, குருவம்மாள் ஓடிவந்து மகனை மடியில் தாங்கிக் கொள்ள, பாண்டியன் அதுவரை அடக்கியிருந்த அழுகையை அந்தத் தாயின் மடியிலேயே கரைத்தார்.
ஒரு சில நிமிடங்கள் கழிய முத்துலிங்கம் தான் கேசவனின் அப்பாவிடம் பேசினார். “மாப்பிள்ள யாரும் எதிர்பார்க்காத ஒன்னு நடந்துருச்சு. இன்னைக்கு உங்களுக்கு நடந்த இந்த அவமானத்துக்கு நாங்க தான் காரணம். உங்களுக்கு சொல்ல எந்தப் பதிலும் எங்கக்கிட்ட இல்ல மாப்பிள்ள, இதுக்கு எங்களுக்கு நீங்க என்ன தண்டனைக் கொடுத்தாலும் சரிதான்..” எனச் சொல்ல
முத்துலிங்கத்தின் கையைப் பிடித்த கேசவனின் அப்பா “விடுங்க மச்சான் நடக்கக் கூடாதது என்னென்னவோ நடந்துருச்சு. இனி அதைப்பத்தி பேசி என்ன ஆகப் போகுது. இதுல எங்களுக்கு வருத்தம் தான். ஊருக்குள்ள அவமானம் தான். ஆனா அதுக்காக என்ன செய்ய முடியும். எனக்கு மட்டும் இல்ல, எங்க யாருக்குமே நீங்க யாரும் பதில் சொல்ல வேண்டாம். இந்த பேச்சை இத்தோட விடுங்க. நீங்க முதல்ல இதுல இருந்து வெளிய வாங்க. தம்பியை ஊருக்கு அனுப்பி வைங்க. கொஞ்ச நாள் போனதும் எல்லாம் சரியா போகும். அப்புறம் மத்த விசயங்களைப் பேசலாம்..” என அவர் முடித்துவிட்டு தன் வீட்டு ஆட்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
ஆனால் அதில் இருந்து மீள்வதற்கு பாண்டியனால் முடியவே இல்லை. மேலும் மேலும் தன்னை தன் உணர்வுகளை இறுக்கிக்கொண்டார். எது எதையோ சொல்லி அவரைத் தேற்றுவதற்குள் ஒருவழியாகிவிட்டனர்.
ஊரில் அங்கொன்றும் இங்கொன்றும் என பாண்டியனின் குடும்பத்தையும், பவித்ராவின் செயலையும் பேசி பேசியே அவர்களை கூனிக் குறுக வைத்தனர். அவள் வீட்டை விட்டுச் சென்று, தற்கொலை செய்து கொண்டாள் என்று தெரியப்படுத்தவும் தான் அமைதியாகினர். ஆனால் பெரியவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதிலிருந்து மீளவே பல வருடங்கள் ஆனது. அவள் உயிரோடு இருக்கிறாள் என்ற எண்ணத்தை அந்த பெற்றவர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
இதில் தேவையில்லாமல் தோழியைக் காப்பதாக நினைத்து தன் அண்ணனின் வாழ்க்கையை கெடுத்து விட்டோமே என ரம்யாவிற்குத்தான் மிகுந்த குற்ற உணர்ச்சி. கேசவனை அவரால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. காதலுக்காக யாரைப்பற்றியும் யோசிக்காமல், தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே யோசித்து, ஒரு குடும்பத்தையே அசிங்கப்பட வைத்துச் சென்ற பவித்ராவின் மேல் கோபம் கட்டுங்கடங்காமல் வந்தது. இனி அவரைத் தன் வாழ்நாளில் பார்த்து விடவேக் கூடாது என ஒவ்வொரு நாளும் கடவுளிடம் கோரிக்கை வைத்தாள்.
ஏதேதோ யோசனைகள் ஓட, முகுந்தன் தன்னிடம் சொன்ன நிகழ்வுகளை மனதில் ஓட்டிக் கொண்டிருந்தான் ஆதித்யன். காதலிக்குறவங்க வாழ்க்கை எப்பவும் சந்தோசமா இருந்ததே இல்ல போல. நமக்கு இந்த காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம். ஏன் கல்யாணமே வேண்டாம். இப்படியே வாழ்க்கையை ஓட்டிடலாம்.
இந்தக் காதல் ஒரு போதை. போதையின் மயக்கம். இந்தப் போதைக்கு அடிமையானவனைத் திருத்தும் மார்க்கமே இல்லை. பட்டுத் தெளிந்தால் மட்டுமே அந்த மார்க்கம் உண்டு. காதலில் இருக்கும் இனிப்பை மட்டுமே உணர்ந்து கசப்பை மறந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் காதலின் உணர்வு கசப்புத்தான்.
எனக்கு இந்தக் காதலும் வேண்டாம், அந்தக் காதல் கொடுக்கும் போதையும் வேண்டாம். அந்தப் போதைக் கொடுக்கும் மயக்கமும் வேண்டாம். என உறுதியே எடுத்து விட்டான் ஆதித்யன். இவன் உறுதியினால் ஆரணி படப்போகும் துன்பங்களைப் பற்றித் தெரியாமல்..
காத்திருப்போம் ஆதித்யனோடு நாமும்..
அதீத அன்பெல்லாம்
மனதுக்கு கெடுதலே..
மிதமான அன்பே வாழவைக்கும்.
எந்த அதீதமும் எரிச்சலையே ஏற்படுத்தும்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்களே அது போல..
ஒரு குறிப்பிட்ட மணித்துளி தான் கையில் தூக்கி வைத்திருக்கலாம்.
எப்போதும் தூக்கி வைத்துக்கொள்ள கரங்கள் ஒப்புக்கொள்ளாது.
வலிக்க தான் செய்யும்.
மரத்து தான் போகும்.
கொஞ்சம் கீழே இறக்கி விடேன் என ‘அதுவே’ இரைஞ்சும் கெஞ்சும்.
அதீதமாக கொடுப்பவருக்கு வேண்டுமானால் ஏதோ ஒரு தியாக தீபம் போல கொட்டலாம்.
காட்டிக்கொள்ளலாம்.
ஆனால் வாங்குபவருக்கு ஒரு நிலைக்கு மேல் சென்றால் நெருடலையே ஏற்படுத்தும்.
அது அடிமையாக்கி அழகுபடுத்துமே தவிர
மனதார உணர வைக்காது.
எல்லா காதல் கதைகளிலும் யாரோ ஒரு இணை இப்படிதான் அதீதத்தை
வாரி வழங்கி விட்டு
அழுகையில் மிதந்து கொண்டிருக்கும்.
அன்பினால் அழுதது தான் மிச்சமென முடங்கி போயிவிடும்..
அன்பை மிகாமலும் குறையாமலும் மெனக்கெடாமலும் நம் இணைக்கு வழங்கினாலே போதும்,
மெய்யன்பு அதில் தான் உள்ளது.
விரல் பிடித்துக்கொண்டே
நடை பயில்வதுதான் நல்லதே தவிர
‘பிடித்துக்கொண்டே’ அல்ல.
“எங்கு வேண்டுமானாலும் போ
என்ன வேண்டுமானாலும் செய்
ஆனால் என்னில் இரு என்பதும் அன்பின் வெளிப்பாடு தான்..”