முத்தமழை – 37
வனிதா வீட்டில் நடந்த பிரச்சினையில் ராஜி மேலும் மூர்க்கத்தனமான கோபத்துடன் காணப்பட்டார்.
வல்லியைப் பார்க்கும் போதெல்லாம் வார்த்தைகளால் வதைக்கத் தொடங்கினார். வல்லியும் பதிலுக்கு பதில் கொடுத்தாலும் ஏன் இப்படி என்ற எரிச்சல் மெல்ல மெல்ல அவளிடம் வரத் தொடங்கியது.
அடுத்த சில நாட்களில் வனிதாவின்ன் வீட்டில் போய் பேசியும் பார்த்தார், ஆனால் விமலா தன் பிடியிலிருந்து இறங்கவே இல்லை.
மேலும் ‘அப்படி அழைச்சிட்டு போனா மொத்தமா கொண்டு போய் வச்சிக்கோங்க..’ என முகத்தில் அடித்தது போல பேச, ராஜலட்சுமிக்கு அங்கு நிற்கவே முடியவில்லை.
அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே வந்தவருக்கு, அந்த நேரம் கர்ணனும் வீட்டில் இருப்பதைப் பார்த்து அத்தனை கோபம்.
“அப்படி என்ன தப்பு பண்ணிட்டா என் பொண்ணு.? அம்மா வீட்டுக்கு வர்ரது எல்லாம் ஒரு தப்பா.? என் பக்கத்துலயே வச்சிக்கனும்னு தான், நம்ம அளவுக்கு வசதி இல்லைன்னாலும் பரவாயில்லைனு பக்கத்துலயே சம்மந்தம் பார்த்தேன். அப்போ எல்லாத்துக்கும் சரின்னு மண்டையை ஆட்டிட்டு, இப்போ வந்து ஆகாதுனு குதிச்சா என்ன திமிர் அவங்களுக்கு, இதை நான் சும்மா விடமாட்டேன்.. நீதான் எல்லாத்துக்கும் காரணம், நீ போய் அவங்ககிட்ட பேசு..” என அவனிடம் ஆங்காரமாக கத்த,
“அப்படியெல்லாம் போய் பேச முடியாது. இப்பதான் அங்க ஒழுங்கா இருக்கா.. அதையும் கெடுத்து, அவ வாழ்க்கையையும் நாசம் பண்ண போறீங்களா? நல்ல நாள், விஷேசம்னா வந்து போகட்டும், மத்த நாள் தேவையில்லாம எதுக்கு..?” என கர்ணனும் கண்டிப்புடன் கூற,
“ஓ.. உன் திட்டம் என்னனு எனக்கு தெரிஞ்சு போச்சு.. என் பிள்ளைங்களை ஒவ்வொருத்தரா என்கிட்ட இருந்து பிரிச்சு, மொத்தமா இந்த வீட்டையும், சொத்தையும் முழுங்கி ஏப்பம் விட பார்க்குற, அதுக்கு நான் விடமாட்டேன்..” என்றதும்,
“போதும் நிறுத்துங்க.. என்ன பேச்சு இதெல்லாம்… சொத்து, பணம் இது மட்டும் தான் உங்க மண்டைல ஓடிட்டே இருக்குமா? உங்க புள்ளைங்க வாழ்க்கையைப் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா? மாமா இப்படி ஆனது எதனாலன்னு கூட நினைக்க மாட்டேங்குறீங்க.. அப்போ சொத்துக்காக தான் மாமா கூட இருக்கீங்களா? அவருக்கு என்ன ஆனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லையா?” என வல்லபியும் கோபமாக பேச,
“ஏய் என்ன பேசுற?” என்ற ராஜலட்சுமியின் கோபத்தில் சிவந்து போனது.
“ஏன் நான் பேசினது என்ன தப்பு இருக்கு..?” என வல்லியும் எகிற,
“போதும் வல்லி.” என கர்ணன் மனைவியை அதட்ட, அவனை முறைத்துக்கொண்டே அமைதியானள் வல்லபி.
“ஆமாடா… பொண்டாட்டியை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு, இப்போ வந்து அதட்டினா நான் உன்னை நம்பிடுவேனா?” என கத்திவிட்டு,
“பணத்துக்காகன்னு சொல்றா, நீ பார்த்துட்டு, கேட்டுட்டு சும்மா இருக்க.. உன் வாழ்க்கைக்காக, உன்னை வளர்க்க, என் வாழ்க்கையை பணயம் வச்சேன்ல எனக்கு இந்த வார்த்தையெல்லாம் தேவைதான்..” என அழுது கொண்டே பேச,
மாமியாரின் நாடகத்தில் வல்லி பல்லைக் கடித்தாள்.
கர்ணனுக்கு இந்த நாடகத்தை பார்த்து சலித்துவிட்டது. “ம்மா.. நான் சொல்றது உங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும்.. ஆனா நான் வனியோட நல்லதுக்குத்தான் சொல்றேன், கொஞ்ச நாள் அவளை அப்படியே விடுங்க..” என கண்டிப்பான குரலில் சொல்லிவிட, ராஜலட்சுமி இருவரையும் முறைத்தபடி அவர் அறைக்குச் செல்ல, அதன் பிறகே தன் அறையிலிருந்து வெளியில் வந்தாள் சுமித்ரா.
அன்றைய பிரச்சினைக்குப் பிறகு வல்லியிடம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் பேசாமலும் இருப்பதில்லை.
வல்லி ஹாலில் இருந்தால், குழந்தைகளை அவளுடன் இருக்க விடுவாள், ஆனால் ராஜிக்கு அது பிடிக்காது. இப்போதெல்லாம் அதை கண்டுகொள்வதுமில்லை.
வல்லி குழந்தைகளுடன் நன்றாக பார்த்துக்கொள்ள, குழந்தைகளும் அவளுடன் நல்லபடியாக ஒட்டிக்கொண்டனர்.
“ஸாரி மாமா.. என்னால தான் இந்த பிரச்சினை எல்லாம்…” என சுமித்ரா கர்ணனிடம் கூற,
“இல்ல சுமி.. உனக்கு பிறந்த வீடு இருக்கு. உன் பிரச்சினைகளை அவங்ககிட்ட சொல்றது தான் சரியும் கூட. அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும். நான் தப்பா நினைக்கல சுமி..” என்றவன் வெளியில் செல்ல,
“நீயும் தப்பா நினைக்காத வல்லி..” என்றாள் வல்லபியிடமும்.
“அக்கா.. பாவா சொன்னது தான் சரி.. நீங்க இதெல்லாம் நினைச்சு சங்கடப்படாதீங்க..” என்று சமாதானம் செய்தாள் வல்லியும்.
அன்று இரவு யாழினி வெற்றியுடன் போனில் பேசிக்கொண்டிருக்க, அதை கவனித்த ராஜி இத்தனை நாள் அமைதியாக இருந்ததே பெரிது என்பது போல, அவள் போனை வாங்கி விசிறியடித்து உடைத்ததும் இல்லாமல், “நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது. இத்தோட உன் ஆசைக்கு முழுக்கு போட்டுட்டு நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற பொழப்ப பாரு..” என ஆங்காராமாக கத்த, அதிர்ச்சியில் உறைந்து போனாள் பெண்.
‘அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு.. அதனாலத்தான் நான் குன்னூர்ல இருந்த இத்தனை நாள்ல என்கூட சரியாவே பேசல.. நான் தான் தப்பா நினைச்சு அமைதியா இருந்துருக்கேன். இப்போ என்ன செய்ய? வெற்றி.. வெற்றிக்கிட்ட சொல்லனும்.. அண்ணாக்கிட்ட சொல்லனும்.. அம்மா இனி அமைதியா இருக்கமாட்டாங்க.. தெரியும்.. எனக்குத் தெரியும், இவங்க சும்மா இருக்கமாட்டாங்க..’ என மூளை வேக வேகமாய் வேலை செய்தது.
அடுத்த நாள் காலையில் வல்லியிடம் சொல்லலாம் என்று பார்க்க, அவளுக்கு முன்னே கர்ணன் வந்து நிற்க, வேறுவழியில்லாமல் அவனிடம் அனைத்தையும் பயத்துடன் சொல்லிவிட்டாள்.
கர்ணனுக்கு தாயின் பிடிவாதமும் கோபமும் புரிய “நீ இதைப்பத்தி வல்லிக்கிட்ட சொல்ல வேண்டாம் யாழி, அவ உடனே வெற்றிக்கு சொல்லிடுவா.. அப்புறம் நாம சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்சினை பெருசாகிடும்.. என்கிட்ட சொல்லிட்ட இல்ல.. நான் பார்த்துக்குறேன்..” என தங்கைக்கு தைரியம் சொல்லிவிட்டாலும், அவனுக்கே சற்று பயமாகத்தான் இருந்தது.
இரண்டு நாட்கள் மிகவும் அமைதியாக இருந்தார் ராஜலட்சுமி.
அனைவருக்குமே ஆச்சரியம்தான்.. வல்லிக்குத்தான் இந்த அமைதிக்குப் பின் ஏதோ ஒரு பிடிவாதமான முடிவு இருக்கிறது என்று புரிந்தது.
அது என்ன ? என்ன? என மண்டையை உடைக்க அவள் தயாராக இல்லை.
அவளுக்கு கணவனின் ஓய்வில்லாத ஓட்டமும், சோர்வும் தான் பெரும் கவலையாக இருந்தது.
அடுத்தநாள் சொக்கலிங்கம் வீட்டிற்கு திரும்பும் நாள், மீண்டும் குன்னூர் போகலாம் என்ற மகனிடம் மறுத்துவிட்டார்.
“நீ என் கூட இருந்த நாட்கள் ரொம்பவும் கம்மி தம்பி.. இப்போதான் அதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு, அதை என்னால மிஸ் பண்ண முடியாது.” என்று உறுதியாக சொல்லிவிட, வல்லிக்கும் அவர் இங்கேயே இருப்பது தான் சரி என்று தோன்ற, அவளும் கணவனிடம் இருக்கட்டும் என்று விட்டாள்.
அன்று தான் வெற்றியும் விடுமுறையில் வந்திருந்தான். இங்கு நடந்த பிரச்சினைகளை வல்லி சொல்லாவிட்டாலும், கர்ணன் சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் யாழினி கூறியிருக்க, வீட்டிற்கு வந்தவுடனே பெற்றோர்களுடன் கரூர் வந்துவிட்டான்.
திடீரென வந்து நின்றவர்களைப் பார்த்ததும் வல்லபிக்கு ஏதோ சரியில்லை என்று தெரிந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர்களை உபசரித்தாள்.
இப்படி ஒரு நாள் இவர்கள் வந்து நிற்பார்கள் என்று ராஜலட்சுமி முன்னமே கணித்திருந்தாரோ என்னமோ, அவர்களை ஒரு மிதப்பான பார்வையுடன் எதிர்கொண்டார்.
‘வாங்க’ என்று வாய் வார்த்தைக்காக கூட அழைக்கவில்லை.
வெற்றிக்கு கோபம் தான். ஆனால் இப்போது அதைப்பற்றி பேச, இது நேரமில்லை என்று புரிந்து தன் தந்தையைப் பார்த்தான்.
அவரோ மகனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அத்தனை கோபம், வெறுப்பு மகன் மேல். அவன் சொன்ன செய்தியும் அப்படித்தான்.
விடியற்காலை வீட்டிற்கு வந்தவன், எந்த ஒழிவும் மறைவுமின்றி யாழினியை விரும்புவதாக கூறி, இப்போது இருக்கும் பிரச்சினையையும் கூற, “என்ன வெற்றி இதெல்லாம்..” என்றார் ஆற்றாமையாக.
“ப்பா.. வந்து.. எனக்கு யாழினியை ரொம்ப பிடிச்சிருக்கு ப்பா..” என்றான் நிமிர்வாகவே..
ஆனால் மகனின் இந்த நிமிர்வில் அவரால் பெருமைப்பட முடியவில்லை.
“விடு சிவா வெற்றிக்கிட்ட கோச்சுக்காத, ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்கு, பேசி பார்ப்போம்.” என ராமசாமி கூறி நண்பனை சமாதானம் செய்தார்.
சீதாவிற்கு யாழினியை விட மனமில்லைதான். ஆனால் ராஜலட்சுமியை நினைத்து மிகவும் பயந்தார். அதனால் இந்த பேச்சில் அவர் தலையிடவே இல்லை.
வந்தனாவிற்கும் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்ததால், தன் வால் தனத்தை சுருட்டி அமைதியாகவே இருந்தாள்.
“வாங்க மாமா.. இப்போதான் அப்பாவை அழைக்க ஹாஸ்பிடல் போறோம்..” என கர்ணன் கூற,
“ஹான் தம்பி.. லிங்காவும் வந்துட்டா பேச வசதியா இருக்கும்.. நீங்க போய் அழைச்சிட்டு வாங்க. நாங்க வெய்ட் பண்றோம்..” என சிவகுரு கூற, கர்ணன் கிளம்பவே தயங்கினான்.
ஆனால் இவன் தாமதம் செய்யும் ஒவ்வொரு நொடியு, ராஜலட்சும்யின் பொறுமை சிதற வாய்ப்பிருக்க, வெற்றியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவர்கள் கிளம்பவுமே பெரியவர்கள் மூவருக்கும் ராஜலட்சுமி முன் அமரவே சங்கடமாக இருந்தது.
சீதாவிற்கு வந்தனா ஏதேனும் வாய்விட்டு விடுவாளோ என்று பயந்தார்.
“அப்புறம்.. நான் நினைச்சது தான் நடந்திருக்கு போல..” என மூவரையும் பார்த்து ராஜலட்சுமி நக்கலாக கேட்க, வந்தனா பல்லைக் கடித்தாள்.
“நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சம்மந்தி..” என சிவகுரு பேச வர,
“யாருக்கு யார் சம்மந்தி.. உங்க வீட்டு பொண்ணா எங்க வீட்டுக்கு மருமகளா வந்துருக்கா.. இல்ல உங்க பொண்ணுதானா?” என்று வார்த்தைகளில் வரம்பு மீறி கேட்க,
“ம்ம்மா என்ன பேசுறீங்க.?” என யாழினியும்,
“போதும் இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசக்கூடாது” என வல்லபியும் கத்த, சுமித்ராவும், சுந்தரும் வேகமாக வெளியில் வந்தனர்.
“ராஜி.. பெரிய மனுஷி மாதிரி பேசு.. வார்த்தைகளை வரம்பு மீறி விடக்கூடாது. என்ன நினைச்சிட்டு நீ இப்படி பேசுற..” என பாட்டியும் பேச,
“என்ன வரம்பு மீறுச்சு..” என அடுத்து ஏதோ ராஜி பேச வரும் முன்னே சிவகுரு எழுந்து வாசலை நோக்கி நடக்க, சீதாவும் மகளை இழுத்துக்கொண்டு கணவருக்குப் பின்னே நடக்க, ‘நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்ற இயலாமையுடன் மகளைப் பார்த்து நின்றார் ராமசாமி.
எந்த ஒரு தந்தைக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது.. “ப்பா…” என்றாள் பெண் கேவலாக.
“நீ சொன்ன.. நான் தான் கேட்கல, என்னை மன்னிச்சிடு பாப்பா..” என்றவரின் குரல் கரகரத்து ஒலிக்க, பெண்ணுக்கு அழுகை மீறி ஆத்திரம் பொங்கியது.
ஆனால் வார்த்தைகளை விடவில்லை. இது அதற்கான இடமும் இல்லை என்று புரிந்து போனது.
“ப்பா.. இப்போ நீங்க கிளம்புங்க.. பாவா வந்ததும் நாங்க அங்க வரோம்..” என வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தவளின் மனதில் ஏகப்பட்ட கணக்குகள்.
நடந்த அனைத்தையும் அதிர்வு விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த யாழினிக்கு, இனி வெற்றியில் வீட்டிலிருந்து யாரும் வந்து பேசமாட்டார்கள் என்று புரிந்து போனது.. அடுத்து என்ன? என்ற கேள்வியோடு ஓய்ந்து போய் சோபாவில் விழுந்தாள்.
1 comment
இதுக்குத் தானே அந்தம்மா இம்புட்டு ஆட்டம் போட்டது.
😔😔😔
CRVS (or) CRVS 2797