வர வர காதல் கசக்குதைய்யா – 9
ஆதித்யனின் கார் மீனாட்சிபுரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஆதன் தொனதொனத்துக் கொண்டே இருக்க, ஆதித்யனின் முகம் யோசனையிலேயே இருந்தது.
“டேய் அண்ணா.. உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது. நான் இப்போ என்ன சொன்னேன். ஹிட்லருக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னாங்க, உனக்கு ஓகேன்னா பாரு, இல்லைன்னா நான் பார்க்குறேன் சொன்னேன். அதுக்கு ஏன் உன் ஃபேஸ் இப்படி போகுது..”
“ஆது கீப் கொயிட். அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எதுவும் பேசக்கூடாது. நாம அங்க போறது நம்ம குடும்பத்தை ஒன்னு சேர்த்து வைக்க, நம்ம அம்மாவைப்பத்தி அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நமக்கு தெரியனும். அதுக்குப் பிறகு தான் மத்தது எல்லாம். அதுவரைக்கும் நீ கொஞ்சம் உன் வாலை சுருட்டி வை. சரியா..” என்றவன் சாலையில் கவனமானான்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஆதன் பேசியிருக்க, அப்போது இந்த வீக்கென்டில் மீனாட்சிபுரம் போவதாக ஆதித்யன் சொன்னதும் உடனே கிளம்பி தேனி வந்திருந்தான். தினமும் காலையும் இரவும் தாய்க்கு அழைத்து பேச வேண்டும். இல்லையென்றால் அவரால் அங்கு நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால் ஊருக்குப் போவதைப்
நடந்த அனைத்தையும் முகுந்தன் மூலம் தெரிந்து கொண்ட ஆதித்யனுக்கு யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இதில் பாண்டியன் தான் மிகவும் பாவமாகத் தெரிந்தார். அவர் மற்றவர்கள் மேல் வைத்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்யாகிப் போனதில் தான் மிகவும் ஒடுங்கியிருப்பார் என்று புரிந்து கொண்டான்.
மீனாட்சிபுரத்திற்குள் கார் நுழையும் போதே, மூச்சுக்குழாய் மொத்தமாய் அடங்குமளவிற்கு அந்தக் காற்றை உள்ளிழுத்து வெளிவிட்டான் ஆதித்யன். தன்னுடைய சொந்த ஊர். பிறந்தது, வளர்ந்தது எங்கிருந்தாலும், தன்னுடைய வேர் பதியப்பட்டது இங்குதானே, என்ற வண்டியை நிறுத்தி அங்கிருந்த ஒரு பெரியவரிடம், முத்துலிங்கம் வீடு எது என்று கேட்க, “அந்த ஆலமரத்து வீடா.?” என்றுக் கேட்டுக் கொண்டே வழி சொன்னார். அவர் சொன்னதைப் போலவே வந்தவர்கள் அந்த வீட்டைப் பார்த்து அசந்து தான் போனார்கள். வீடே தெரியவில்லை. அந்த ஆலமரத்தின் கிளைகள் வீட்டை மொத்தமாக மூடியிருந்தது போல் இருந்தது.
“ஆதி இதுல வீட்டை எங்கடா தேட.” என்றபடியே ஆதன் இறங்க, ஆதித்யனுக்கும் அதே சந்தேகம் தான். அந்த வீட்டைப் பார்த்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது. இந்த வீட்டில் தானே தன் அம்மா பிறந்து, வளர்ந்தது. இங்கே தானே அவரது மகிழ்ச்சி, இன்பம், துன்பம் எல்லாம் கலந்திருக்கும். கொஞ்சம் யோசித்திருந்தால் ஒற்றுமையாக அனைவருடனும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் காதல் எனும் போதை அவர் கண்ணை மறைத்துவிட்டது. ஒரு பெருமூச்சோடு காரை விட்டு இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே நகர, அப்போது அவன் முன் திடீரென வந்து குதித்தாள் அவள். அவள் ஆரணி.!
முதலில் எதுவோ தன் முன்னால் விழுந்து விட்டதோ என்ற பயத்துடன் இரண்டெட்டு பின்னே நகர்ந்தவன் அது ஆரணி எனவும் முறைத்துப் பார்த்தான்.
“ஏய் அறிவில்ல, இப்படி பேய் மாதிரி வந்து குதிக்குற, கையும் காலும் உடைஞ்சா என்ன பண்ணுவ..” எனக் கடுப்பில் கத்த,
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ.. பார்த்து பேசுங்க, எங்க வீட்டுக்கு வந்து என்னையவே பேசுவீங்களா..? கை காலெல்லாம் உடைஞ்சா அது என் பிரச்சினை. அதைப்பத்தி கவலைப்பட என் பேரன்ட்ஸ் இருக்காங்க, என் ஃபேமிலில ஆளு இருக்காங்க. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம் சரியா.? ஆமா நீங்க யாரு, இங்க என்ன பன்றீங்க..? எனப் பதிலுக்கு ஆரணியும் கடுப்பாகக் கேட்க,
“ஏய்..” என்று எதுவோ பேச வந்த அண்ணனை நிறுத்திய ஆதன், “ஹாய் டால், நான் ஆதன், இவர் ஆதித்யன். நாங்க அக்ரி காலேஜ்ல இருந்து வரோம். இங்க பாண்டியன்..” என இழுக்க
“ம்ம.. என் அப்பாதான்..” என சந்தேகமாக இழுத்தாள் இருவரையும் கீழேயும் மேலேயும் பார்த்தபடி.
‘பார்க்குறத பாரு லூசு, சரியான கேடியா இருப்பாளோ’ மனசுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான் ஆதித்யன்.
“ரம்யாங்குறது..” – ஆதன்
“ம்ம் என் அம்மா தான்..” – ஆரணி
“முத்துலிங்கம்..” – ஆதித்யன்
“என் அப்புச்சி தான்..” – ஆரணி
“குருவம்மா..” – ஆதன்
“என் அப்பத்தாதான்..”
“அப்பத்தா ன்னா..?” – ஆதித்யன்
“ம்ம்.. என்ன.. என்ன கேட்டீங்க..”
“இல்லங்க, அப்பத்தான்னா யாருன்னு கேட்டேன்..”
“அப்பாவோட அம்மாவைத்தான் அப்பத்தான்னு சொல்லுவோம்..” என்றாள் ஆதித்யனைக் கிண்டலாகப் பார்த்தபடி. அதில் கடுப்பாகி அவன் முகத்தைத் திருப்பிக்கொள்ள,
“ஓ.. அப்போ அம்மாவோட அம்மாவை எப்படி கூப்பிடுவீங்க..” என்றான் ஆதன் ஆர்வம் தாங்காமல்.
“ஹலோ மிஸ்டர் என்ன லந்தா, என்னைப் பார்த்தா எப்படி தெரியுது, ஏதோ பார்க்க டீசன்டா இருக்கீங்களேன்னு நிக்க வச்சு பேசிட்டு இருந்தா, ரேசன் கார்டுக்கு பேரு சேக்குற மாதிரி விலாவாரியா எங்க குடும்பத்தைப்பத்தி விசாரிச்சிட்டு இருக்கீங்க. வந்த வேலையை மட்டும் பாருங்க. எங்க அப்பா யாரு தெரியும்ல இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்..” என மிரட்டல் தொனியில் பேச,
“பார்க்க குரங்கு மாதிரி தெரியுது..” என ஆதித்யன் நக்கலடிக்க,
“ஆதி சும்மா இரு..” என தமையனை அடக்கிய ஆதன், ஆரணியிடம் திரும்பி, “ஹேய் டால்.. டோன்ட் ஆங்க்ரி வித் மீ, நான் சீரியசா தான் கேட்டேன். எங்களுக்கு எல்லாம் இப்படி யாருமே இல்லம்மா.. அதோட நாங்க பார்த்த வரைக்கும் என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரெண்டு வீட்டாலுங்களையும் பாட்டி, தாத்தான்னு தான் சொல்லுறாங்க. நீங்க அப்பத்தா அப்புச்சின்னு சொல்லவும் டவுட் வந்துடுச்சி..” என்று சொல்ல,
“அச்சோ பாவம் நீங்க.. சாரி தெரியாம சொல்லிட்டேன். சாரி உங்களுக்கு மட்டும் தான். உங்க பக்கத்துல நிற்கிற ஆளுக்கு இல்லை. அம்மாவோட அம்மாவை அம்மத்தான்னு சொல்லுவோம்..” என்றவள், “ஆமா நீங்க எதுக்கு இங்க வந்துருக்கீங்க, அப்புச்சிய பார்க்கன்னா, அவரு இல்ல, வயலுக்கு போயிட்டாங்க. சாயங்காலம் தானே வருவாங்க.” என முடிக்க,
“ஓ.. அம்மத்தா.. அம்மத்தாவா.. ம்ம்ம் இதுவும் நல்லத்தான் இருக்கு” என தனக்குள்ளேப் பேசிக்கொண்டவன், “வயலுக்கு போயிட்டாரா, ஆமா உங்க வயல் எங்க இருக்குன்னு சொன்னா நாங்களே போய் பார்க்குறோம். நீங்களும் வேணும்னா வாங்களேன் எங்க கூட..” என்றான் ஆதன் ஆர்வமாக.
“ஓய்..” என்று ஆரணியும், “ஆது” என்று ஆதித்யனும் அரட்ட, இருவரையும் புரியாமல் பார்த்தான் இளவல்.
“தம்பி இது ஒன்னும் உங்க சிட்டி இல்ல, யாருன்னே தெரியாத உங்க கூட, உங்க கார்ல வர்ரதுக்கு. இது கிராமம். நீங்க இங்க வந்து பத்து நிமிசம் ஆச்சு, இன்னேரம் எங்க ஊர்ல எல்லாருக்கும் உங்களைப்பத்தி தெரிஞ்சிருக்கும். உங்களைப்பத்தி தான் எல்லாரும் பேசிட்டும் இருப்பாங்க. உங்களை மட்டும் இல்ல எங்களையும். நான் உங்க கூட வந்தா என்னையும் தான் பேசுவாங்க. அதனால தெரியாம் எதுவும் பேசாதீங்க. உங்க வாலையும் இங்க ஆட்டாதீங்க சரியா..” என நக்கலாய் பதில் அளிக்க, அதில் ஆதனின் முகம் பட்டென சுருங்கி விட்டது.
தம்பியின் சுருங்கிய முகத்தைப் பார்த்ததும், ஆதித்யனுக்கும் வருத்தமாகிவிட, “ஸாரி.. அவன் தப்பான எண்ணத்துல கேட்கல, நீங்க எதுவும் தப்பா புரிஞ்சிக்காதீங்க..” என இறங்கிப் பேச,
“நானும் தப்பா ஒன்னும் பேசலங்க ஆஃபிசர், இங்க இருக்குற பழக்கவழக்கத்தை சொன்னேன் அவ்வளவுதான். ஆமா இங்க என்ன வேலையா வந்துருக்கீங்க..” என்றவள் விசாரிக்க ஆரம்பிக்க, அப்போது “ஆரு.. அடியே எருமை, என்னை இங்க விட்டுட்டு அங்க என்ன பன்ற.. எங்கம்மா அப்பவே சொல்லுச்சுடி உங்கூட சேராதன்னு, நாந்தான் கேட்கல” என்ற நிக்கியின் குரல் கேட்க, என்னவென்று மேலேப் பார்க்க, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தாள் நிகிதா.
“அய்யோ..” எனத் தலையில் தட்டியவள், வேகமாக நிமிர்ந்து மேலேப் பார்த்து “சாரி மச்சான்.. இதோ வந்துட்டேன்” என்றவள், தனக்கு முன்னே நின்ற இருவரையும் பார்த்து “டூ மினிட்ஸ் ப்ளீஸ்..” என்றுவிட்டு இமைக்கும் நேரத்தில் காற்றைவிட வேகமாக மரத்தில் ஏறி, நிக்கியின் அருகில் அமர்ந்திருந்தாள்.
கீழே இருந்த இருவரும் ‘ஆ’வென்றபடியே மேலேப் பார்த்துக் கொண்டே, “என்ன ஆதி இவ இவ்ளோ ஸ்பீடா மரம் ஏறுரா, ஹிட்லர் பொண்ணை எப்படி வளர்த்து வச்சிருக்கார் பாத்தியா.. கிராமத்துல இருக்குற பொண்ணுங்க, அடக்க ஒடுக்கமா, குடும்ப குத்துவிளக்கா இருப்பாங்கன்னு நம்ம பவி டார்லிங்க் சொன்னது பொய்டா.. இங்க இருக்குற எல்லாம் சரியான அராத்து கேசா இருக்கும் போல..” என ஆதன் ஆரம்பிக்க,
“ஸ்ஸ்.. ஆது கீப் கொயிட், அவ காதுல விழுந்தது பிரச்சினை தான். வந்த அன்னைக்கே பிரச்சினைய ஆரம்பிக்க வேண்டாம்னு பார்க்குறேன். கொஞ்ச நேரம் உன் வாயை மூடிட்டு இரு..” என அடக்கினான்.
அதற்குள் மேலே இருந்த இருவரும் மரத்தின் கிளை வழியே வீட்டின் மெத்தில் இறங்கி உள்ளே சென்றிருந்தனர்.
நீ கொஞ்ச நேரம் சும்மா இரு ஆதி.. மேலத் தொங்கிட்டு இருந்த ரெண்டு குரங்கையும் காணோம். ஒருவேளைத் திருட வந்திருப்பாங்களோ.. எனக்கு சந்தேகமாவே இருக்கு” எனத் தன் சந்தேகத்தைக் கேட்கும் போதே, பெண்கள் இருவரும் குருவம்மாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்திருந்தனர்.
“அப்பத்தா இவங்க தான் அப்புச்சியைத் தேடி வந்திருக்காங்க. எதோ வயலைப்பத்திக் கேட்கனுமாம்..” என ஆரணி சொல்ல,
“யாரு அப்பு நீங்க, கெழவன எதுக்கு பார்க்கனும். மனுஷன் வயக்காட்டுக்கில்ல போயிடுச்சு, பொழுது சாயதான் வரும். என்னவாம் வெவரம், எங்கிட்ட சொல்லுங்க, நான் அவுரு வந்ததும் சொல்லிடறேன்..” என குருவம்மா கேட்க, ஆண்கள் இருவரும் பட்டென்று அவர் காலில் விழுந்துவிட்டனர். அதில் பெரியவர் மட்டுமல்ல ஆருவும், நிக்கியும் கூட இரண்டடி பின்னாடி தள்ளி நகர்ந்திருந்தனர்.
“ஏய் என்னப்பா இதெல்லாம்..” என நெளிந்தபடியே குருவம்மா கேட்க, “அதுங்க அம்மத்தா.. உங்களைப் பார்க்கவும் எங்க அம்மத்தா மாதிரியே இருக்கீங்க. அதான் அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குற மாதிரி உங்க கால்லயும் விழுந்துட்டோம். தப்பா எடுத்துக்காதீங்க அம்மத்தா..” என ஆதன் ஈயென இழித்தபடி சொல்ல, ஆதித்யன் விழி பிதுங்க, ஆரணியோ அடப்பாவி எப்படி பொய் சொல்றான், இப்பத்தான என்னுக்கிட்ட பாட்டி தாத்தாவே இல்லன்னு சொன்னான் எனக் காண்டாகப் பார்த்தாள்.
“அட அப்படியா அப்பு, நல்லா இரு சாமி! நல்லா இரு.. வாங்க உள்ளாற வாங்க, வந்து எவ்வளவு நேரமாச்சு வெளியவே நிக்கீங்க, உள்ளாற வாங்க, மோரு குடிச்சிட்டே மத்தத பேசுவோம். நான் பெருசுக்கு சொல்லிவுடுறேன், மனுஷன் இன்னைக்காச்சும் நேரமா வீட்டுக்கு வரட்டும்..” என்றவர் வேலையாளிடம் இருவருக்கும் மோர் கொண்டு வரச் சொல்லிவிட்டு, மற்றொரு ஆளை வயக்காட்டிற்கு அனுப்பினார் முத்துலிங்கத்தை அழைத்து வர,
“மச்சான் என்னடி அம்மத்தா இப்படி செய்யுது, யாருன்னேத் தெரியாம வீட்டுக்குள்ள விடுது..” என நிக்கி ஆருவின் காதைக் கடிக்க, “எனக்கு மட்டும் என்ன தெரியும், இவனுங்க ரெண்டு பேரு முழியும் சரியில்ல, ஒருவேளை திருட வந்த திருட்டுப் பசங்களா இருப்பாங்களோ, யூ நோ மச்சி, இப்பல்லாம் திருடனுங்க இப்படி டிப்டாப்பா தான் வர்ராங்க, கொஞ்சம் பொறு எதாவது தெரியும்..” எனப் பதிலுக்கு கடித்துவிட்டு ஆதனை முறைத்துப் பார்க்க, அவன் எங்கே நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
வீட்டின் முற்றத்திற்குள் நுழைந்ததில் இருந்து இருவரது பார்வையும் அந்த வீட்டையே அளந்து கொண்டிருந்தது. முற்றத்தின் ஒரு பகுதியில் சுவரில் படிக்கட்டுகள் தனியாகக் கட்டப்பட்டிருந்தது. அது வித்தியாசமாக இருக்க, “அம்மத்தா இதென்ன புது டிசைனா படிக்கட்டு, இந்த படிக்கட்டு எதுக்கு..” என ஆதித்யன் தான் கேட்டான்.
“அதுவா அப்பு எங்க பேத்தி இருக்காளே அவளுக்கு இந்த மரத்துல ஏற வசதியா இருக்கட்டுமேன்னு எங்க கெழவன் கட்டிவிட்டுருக்கார். இந்த வீட்டுக்கு வாசக்கதவு எதுக்கு வச்சிருக்கோம்ன்னு எங்களுக்கே தெரில, ஒரு நாள் கூட அந்த வழியா இவ வீட்டுக்குள்ள வந்ததில்ல.. கொரங்கு மாதிரி உள்ளேயும், வெளியேயும் கிளைக்கு கிளை தாவ வேண்டியது” என குருவம்மா சிரித்துக் கொண்டேக் கூற, ஆண்கள் இருவரும் பக்கென்று சிரித்துவிட,
“மச்சான் கெழவி மொத்தமா மானத்த வாங்குறதுக்குள்ள இங்க இருந்து இடத்தைக் காலி பண்ணுவோம்..” என ஆரணியின் காதில் நிக்கி முணுமுணுக்க,
“இரு மச்சி க்ளைமாக்ஸ் பார்க்காம போய் என்ன செய்ய போற, வெயிட் அன்ட் வாட்ச்..” எனச் சொல்லி முடிக்குமுன்னே, “யாரு அம்மத்தா வந்துருக்கா, யாரோ ஆஃபிசருங்க வந்துருக்காங்களாம் ஊருக்குள்ள சொல்லிட்டு இருக்காங்க. நம்ம வீட்டுக்கு ஏன் வந்தாங்க, மாமாவுக்குத் தெரியுமா..?” என்றபடியே உள்ளே வந்த ஆளைப் பார்த்து இருவரும் எழுந்து நிற்க, ஆரணியோ “கதிரத்தான்..” எனக் கத்தியபடியே துள்ளிக்கொண்டு அவனிடம் ஓடியிருந்தாள்.
“ஆருக்குட்டி எப்ப வந்தீங்க, நீ வந்ததை யாருமே சொல்லவே இல்லையே..” என அவள் கையைப் பிடித்து நடந்தபடியேக் கேட்க,
“பொய் சொல்லாத அத்தான், நான் உன்மேல செம கோவத்துல இருக்கேன். நான் நேத்து அங்க வந்தேனே, நீ தான் மதுரைக்குப் போயிட்டன்னு அத்தை சொன்னாங்களே.” என அவனோடு சண்டையிட்டபடியே வர, ஆதித்யனின் காதில் புகை வராதக் குறை தான். இருவரையும் எரிச்சலாகப் பார்க்க, ஆதனோ சுவாரஸ்யமாகப் பார்த்தான்.
“ஆதி யாருடா இந்த முரட்டு பீசு, உனக்கே டஃப் கொடுப்பான் போல..” என முணுமுணுக்க, “ஷட் அப் ஆது..” என ஆதித்யன் வார்த்தையைக் கடித்து துப்பினாலும், உள்ளுக்குள் புகைச்சல் இருந்து கொண்டே தான் இருந்தது என்பது உண்மை.
“அட கதிரு நீ எப்படா மதுரைல இருந்து வந்த, படிப்பு சோலி எல்லாம் எப்படி போவுது. எங்க உன் அப்பன ரெண்டு நாளாக் காணோம். எனக் போயிட்டான்.” எனக் குருவம்மா கேட்க, “அதுவந்து அம்மத்தா, அம்மாவுக்கு கொஞ்சம் மேலுக்கு சொகமில்ல, அதான் ஆசுபத்திரிக்கு போயிட்டு வந்தாங்க. அப்பா இப்ப வர்ரேன்னு சொன்னாரு, ஆமா இவங்க ரெண்டு பேரும் யாரு..” என நின்றிருந்த ஆதியையும் ஆதனையும் கேட்க,
“இவங்க நம்ம தாத்தனப் பார்க்க வந்துருக்காங்க கதிரு, நம்ம வயலுல பூச்சியடிக்குதுன்னு நேத்து தாத்தா அவுங்க ஆஃபிசுக்கு போயிட்டு வந்தாங்க. அது விசயமா வந்திருப்பாங்க போல, தாத்தனுக்கு சொல்லி விட்டுட்டேன் இப்போ வந்துடுவாக, நீயும் உக்காரு எல்லாரும் சாப்பிட்டு பேசுவோம்..” என குருவம்மா சொன்னதும் ஆதனுக்கு திக்கென்று இருக்க,
“டேய் ஆதி இவங்க என்ன சொல்றாங்க, பொய் சொல்றாங்கடா… ஏதோ ப்ளான் போலடா, பவி டார்லிங்க் சொல்ற மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கட்டி வச்சு அடிக்கப் போறங்கடா, வாடா ஓடிப்போயிடலாம்..” என்று குசுகுசுக்க, “ஷட் அப் ஆது.. அவங்களுக்கு நாம யாருன்னு தெரிஞ்சிடுச்சி, அவங்களேப் பேசட்டும், அதுவரை நீ வாயைத் திறக்காதே, நான் பார்த்துக்குறேன், நார்மலா இரு..” என இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்க்க, அப்போது தான் அவர் வீட்டுக்குள் நுழைந்தார். பார்த்ததுமே அது யாரென்று ஆதித்யனுக்கு புரிந்து விட்டது. வாய் தானாக ‘கேசவ் ப்பா..’ என்றது.