காதல் – 36
“என்ன இது உலக அதிசயமா மூனு பொம்பளைங்களும் ஒன்னா, அதுவும் ஒரே இடத்துல இருக்கீங்க, என்ன நடக்குது இங்க..” என உள்ளே வந்த குருவம்மா வழக்கம் போல தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு மூவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“ஒன்னுமில்ல அத்த சும்மாதான் பேசிட்டு இருந்தோம், உங்களுக்கு எதுவும் வேணுமா அத்த, நீங்க சொல்லுங்க..” என ரம்யா வேகமாகக் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் வேனாம், உங்க மாமா சாவடிக்கு போய் பந்தி வேலையைப் பார்க்கலாம்னு சொன்னாரு, கதிரும், ஆகாஷும் போய்ட்டாங்கதான, ஆதி பையன் எங்க, அவன் இருந்தா இந்த கிழவர் கூட போவான்ல, கொஞ்சம் கூப்பிடு..” எனத் தெரிந்து கொண்டே கேட்க, தாய்மார்கள் இருவரும் விழிக்க ஆரம்பித்தனர்.
“அதான் வீட்டு ஆம்பளைங்க எல்லாம் அங்கதான அத்த இருக்காங்க, பத்தாதுக்கு ஆகாஷும் அங்கதானே இருக்கான். அவன் பார்த்துப்பான், நீங்க வேனும்னா மாமாகூட சும்மா போயிட்டு வாங்களேன்.” என இருவரையும் காப்பாற்ற நினைத்து தாரணி பேச,
“அதுசரி.. வயசான கிழடுங்க நாங்க போய் பார்த்துட்டு வரனும், வயசு கொமரனுங்களும், கொமரிங்களும் படுத்து தூங்கனும். நல்லா இருக்கு உங்க நியாயம். எப்படியோ இப்படியே கடைசி வரை ஒன்னுமன்னுமா ஒத்துமையா இருந்தா சரிதான். எனக்குத்தான் வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல..” என அப்போதும் மருமகளை குறைச் சொல்லியபடியே வெளியேறியவர், பின் நின்று “பவிம்மா இங்க வா..” என மகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட, ரம்யாவோடு சேர்ந்து தாரணியும் ‘ஷப்பா’ என பெருமூச்சுவிட, அதைப் பார்த்த இருவருக்கும் அப்படியொரு சிரிப்பு.
“அத்தை ரொம்ப நல்லவங்க ஆரும்மா.. நான்கூட கொஞ்சம் பயந்துட்டே இருந்தேன்.” என்ற தாரணியிடம்,
“உண்மைதான் நிக்கிம்மா, அத்த எது செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும், முன்ன கல்யாணம் ஆன புதுசுல நான்தான் முட்டாள்தனமா அவங்கள தப்பா நினைச்சு, நெறைய பிரச்சினை பண்ணிட்டேன்.”
“ஆனா அதை இப்ப வரைக்கும் எங்கேயும் சொல்லிக்காட்டினதோ, குத்திக்காட்டினதோ இல்லை, ஏன் ஆரு அப்பா என்கூட பேசாம இருந்த போதும், அவரைத்தான் ஏன் இப்படி இருக்கன்னு திட்டி சத்தம் போடுவாங்களே தவிர என்னை ஒரு வார்த்தை பேசமாட்டாங்க. அதனாலேயே அவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குவேன்.” என்றவருக்கு பழைய ஞாபகத்தில் கண்கள் கலங்கியது.
என்னதான் இன்று எந்த பிரச்சினையும் இல்லாமல் எல்லோரும் சுமூகமாக தன்னிடம் நடந்து கொண்டாலும், அன்று தான் நடந்து கொண்டது மிகவும் தவறு என்று ரம்யாவுக்குத் தெரியுமே. அதற்கான தண்டனையைத்தான் போதும் போதும் என்றளவிற்கு பாண்டியன் பேசாமல் மௌனமாகவே மனைவிக்கு கொடுத்து விட்டாரே.
“புரியுது ஆரும்மா, விடுங்க அதான் எல்லாம் சரியாகிடுச்சே, பார்த்துக்கலாம்..” என்றதும், ‘ஆமாம்’ என்று ரம்யாவும் தலையாட்ட, இருவரும் பேசியபடியே மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
மதிய உணவிற்குத்தான் இரு ஜோடிகளையும் எழுப்பினார் பவித்ரா. அதன்பிறகு சாப்பிட வைத்து ரிசப்ஷனுக்கு கிளப்பி என வேலைகள் தாய்மாருக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
வீட்டில் சாமி கும்பிட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி மண்டபம் நோக்கி தம்பதிகள் கிளம்ப, அவர்களோடு கதிரும் ஆகாஷும் கிளம்பினர்.
மிகவும் பிரமாண்டமான அந்த திருமண மண்டபம் மக்கள் திரளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல வருடங்கள் கழித்து அந்த வீட்டில் நடக்கும் சுபகாரியம் என்பதால் முத்துச்சாமி ஒருவரையும் விடாமல் அழைத்திருந்தார்.
சங்கரின் சொந்தங்கள் ஒருபக்கம், தாரணியின் சொந்தங்கள் ஒருபக்கம், முகுந்தனின் சொந்தங்கள், அவருடன் வேலை பார்ப்பவர்கள், ஆதி, ஆதனின் நண்பர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள் என கூட்டம் அலை மோதியது.
மேடையில் ஏறியதில் இருந்து சேர்ந்தார் போல் சில நிமிடங்கள் கூட யாருக்கும் ரெஸ்ட் இருக்கவில்லை. நின்று, விழுந்து வணங்கி என அனைவருக்கும் இடுப்பே ஒடிந்தது போலானது.
இதில் ஆதித்யன் வேறு கதிருடன் சேர்ந்து ஆராவைச் சீண்டிக்கொண்டே இருக்க, கடுப்பாகிப் போனாள் பெண். ஆகாஷ் இடையில் வந்து சமாதானம் செய்தாலும் அடங்காமல் அவளை வம்பிழுக்க, பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் கூட்டத்தின் மூலையில் ஒழிந்து ஒழிந்து கதிரை சைட் அடித்துக் கொண்டிருந்த அவனுக்குப் பார்த்திருந்த பெண் கலைவாணியைப் பார்த்து ‘வா’ என்று அழைத்தாள்.
முதலில் மறுத்தாலும், கதிரிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் அவளும் மேடைக்கு வர, கதிரும் அவள் வருவதைப் பார்த்து ‘ஆவென்று’ ஜொல்லை வடிக்க, அருகில் வந்த கலையை தனக்கும் கதிருக்கும் இடையில் நிறுத்திய ஆரணி, “கலை உங்கிட்ட அன்னைக்கு ஒன்னு சொல்லனும்னு சொன்னேன்ல, ஞாபகம் இருக்கா..” எனக் கதிரைப் பார்த்துக் கொண்டே கேட்க, அதில் அலார்ட்டாக வேண்டியோ கதிரோ ஈஈ மோடில் இருக்க, ஆதித்யன் அலார்ட்டாகி கதிருக்கு ஜாடை காட்ட, அவனோ கண்டுகொண்டால் தானே.
அதில் தலையில் கை வைத்தவன், “ஆரா.. நோ அவனைப் பத்தி ஏடாகூடமா எதாச்சும் சொல்லி வைக்காத, பாவம் அவன்..” எனப் படப்படவெனச் சொல்ல, அதில் கலை யோசனையாக ஆதியையும், கதிரையும் பார்க்க, ஆகாஷூம், நிக்கியும், ஆதனும் கதிரைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.
தனக்கு முன்னே நிற்கும் நால்வரது பாவனைகளும் வித்தியாசமாக இருக்க, அப்போதுதான் ஆரணியின் கைக்குள் சிக்கியிருந்த கலையின் கைகள் பட, ‘ராட்சசி ஏதோ எக்குத்தப்பா நம்மள பத்தி போட்டுக் கொடுக்க போறா’ என உள்ளுக்குள் அலறியவன், வெளியே அவளைக் கெத்தாகப் பார்த்துவிட்டு, தன் வருங்கால மனைவியைப் பார்த்து,
“இங்க என்ன பண்ற, கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தான் இருக்கு. ஏன் இப்படி வெளியே எல்லாம் வர, உன்னைக் கூப்பிட்டு வரக்கூடாதுன்னு அம்மா சொன்னாங்களே..” என ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக கேட்க, அதுவரை அவனை காதலாகவும், பின் ஆரணியின் பேச்சில் யோசனையாகவும் பார்த்தவள் இப்போது கோபமாகப் பார்த்து, “நைட்டெல்லாம் எப்பாடியாச்சும் வந்துடு கலைக்குட்டின்னு கால்ல விழுந்து கெஞ்சினது எந்த மானஸ்தன்னு தெரில..” என கலை பல்லைக் கடிக்க, “அந்த மானஸ்தன் நைட் மட்டும் தான் ரெமோ மாதிரி வருவான்..” எனக் கெத்துக் காட்ட,
ஆண்கள் மூவரும் தலையில் கைவைத்துக் கொள்ள, ஆரணி ‘நீயெல்லாம் திருந்தவே மாட்டடா நைன்டிஸ் கிட்ஸு’ எனக் கேவலமாகப் பார்த்தாள்.
“என்ன என்ன லுக்கு, இதெல்லாம் எங்கிட்ட வேனாம் சரியா.” என ஆரணியிடம் கதிர் எகிற, அவனை அப்படியே விட்டவள், கலையைப் பார்த்து “நீ சொல்லு கலை உங்கிட்ட அன்னைக்கு ஒன்னு சொல்லனும்னு சொன்னேன்ல, ஞாபகம் இருக்கா..” எனவும்,
“ஆ..ஆமாம்.. ஏன்.? அப்போ நான் கெஞ்சி கேட்டப்ப கூட நீ சொல்லலதானே, உங்க கதிர் மாமா பாவம்னு சொன்ன, இப்போ என்ன..” எனக் கதிரைப் பார்த்துக் கொண்டே ஆரணியிடம் கேட்க,
“எங்க கதிர் மாமா பாவம் தான் கலை. முன்ன நான் கூட அப்படித்தான் நினைச்சேன், ஆனா இப்போ இந்த ஐபிஎஸ் ட்ரையினிங்க் போயிட்டு வந்ததுல இருந்து ஒரே ஜலபுல ஜங்குதான், ஒரே ஹிந்தி சாங்க்தான், அதும் டூயட் சாங்க்தான் கேட்குறார். என்னனு தெரில. எனக்கு என்னமோ அங்க ஒரு லடுக்கிகிட்ட மனசை பறிகொடுத்துட்டாருன்னு நினைக்கிறேன்.” என கலை நம்பும் விதமாகச் சொல்ல,
“ஏய்.. ஏய் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி. இவ சொல்றதையெல்லாம் நம்பாத கலை. கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள நமக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துருவா..” எனக் கதிர் அலற,
அதைக் காதில் வாங்காத கலை, “நீ எப்படி சொல்ற, உனக்கு எப்படி தெரியும்..” என அங்கேயே நிற்க, கதிருக்கு உண்மையிலேயே பயம் பிடித்துக் கொண்டது.
‘சோலி முடிஞ்ச்’ எனும் பாவனையுடன் அரண்டு போய் ஆரணியைப் பார்க்க, அவளோ “இல்ல கலை. உனக்கு அவனைப் பார்க்கனும்னு எவ்வளவு ஆசை. அதனலாத்தானே வீட்டுல வேண்டாம்னு சொல்லியும் கேட்காம சண்டைப் போட்டு வந்த, ஆனா இவன் உன்னைப் பார்த்து லவ் லுக் கூட விடாம, ‘அடியாத்தி இது என்ன ஃபீலு’ன்னு ஒரு பாட்டுக்கு டூயட்கூட பாடாம ஏன் வந்தன்னு கேட்குறான். உன் மேல லவ் இருந்தா அப்படி சொல்லுவானா சொல்லு..” என முடிக்க,
“ஆமாமில்ல.. நைட் என்னைத் தூங்க கூட விடாம, வா வான்னு கெஞ்சி வர வச்சார். இன்னைக்கு கிளம்பும் போது கூட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை என்னால, ஆனா இவர் என்னைப் பார்க்கவே இல்ல.. நான் பார்க்கும் போது கூட கண்டுக்கவே இல்ல, அவருக்கு என்மேல இஷ்டமே இல்ல. நான் போறேன்..” என்றவள் கதிரைப் பார்த்து முறைத்துவிட்டு இறங்கிச் சென்றுவிட, அங்கிருந்த மொத்தக் கூட்டமும் ஆரணியை ‘பிசாசே’ எனும் விதமாகப் பேச, கதிரோ அவளை கொலை செய்யும் வெறியில் முறைத்துக் கொண்டு முன்னே வர, அதை உணர்ந்த ஆகாஷ் வேகமாக அவனைப் பிடித்துக் கொண்டான்.
“விடுடா.. என்ன விடுடா முதல்ல இவளை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன், நைன்டீஸ் கிட்ஸ்க்கு ஒரு பொண்ணு செட்டாகறது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். ஒரு செகன்ட்ல மொத்தமா தீயை வச்சு கொழுத்திட்டாளே பிசாசு, டேய் ஆதி உன்னைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்குடா.. இப்படியே இவளை விட்டுட்டு ஓடிரு. உன் வாழ்க்கை தப்பிச்சிரும். இல்ல நீ புகார் ஜெயில்ல தான் இருப்ப..” எனக் கொந்தளிக்க,
“மாமா அது திகார் ஜெயில் மாத்தி சொல்றீங்க..” என அதுவரை அமைதியாக இருந்த நிக்கி டக்கென்று கவுன்டர் கொடுத்துவிட்டு ஆரணிக்கு ஹைஃபை கொடுக்க,
“ஏய் வாயை மூடு. அவளுக்கு சப்போர்ட் பண்ண, உன்னையும் கொல்லுவேன்..” எனக் திமிறித் திமிறி சண்டை போட்டவனை சட்டை செய்யாமல் ஆரணி கேவலமான லுக்கை விட, ஆண்கள் மூவரும் தான் “டேய் முதல்ல போய் கலையை சமாதானம் செய்.. இவளை எப்போ வேனும்னாலும் கவனிச்சிக்கலாம்.” என அனுப்பி வைத்தனர்.
ஆகாஷிடமிருந்து வெளியில் வந்தவன், சட்டையை நன்றாக இழுத்துவிட்டு, “அந்த பைத்தியக்காரி மட்டும் மேரேஜ் வேணாடாம்னு கட்டையைப் போடட்டும், அப்புறம் இருக்கு உங்க மூனு பேருக்கும்..” எனக் கீழே இறங்க, ‘கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்’ என்பது போல் ஆரணி தோளைக் குழுக்க, “ச்சீ ப்பே” என்று போய்விட்டான் கதிரவன்.
அவன் போனதும் பெண்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க, மற்ற மூவரும் அவர்களை பார்த்து ‘திருந்தாத ஜென்மங்க’ என்ற லுக்கை விட, அதையும் தூசு போல் தட்டிவிட்டனர் ஆரணியும் நிகிதாவும்.
கீழே சென்ற கதிரோ கலையின் பின்னாலே சுற்ற, அவளோ அவனை முறைத்துக்கொண்டே தன் தாயின் பின்னால் சுற்ற, கண்களால் கெஞ்சியும் மனமிறங்காதவளை பாவமாகப் பார்த்தான் கதிரவன்.
மகளின் பின்னால் சுற்றும் மருமகனின் எண்ணம் புரிந்த கலைவாணியின் தாய் புவனாதான் “சீக்கிரம் பேசிட்டு வா கலை. எல்லாரும் பார்க்குறாங்க பாரு..” என்று நகர்ந்துவிட்டார்.
அவர் சென்றதும் பெருமூச்சு விட்டவன், “கலைக்குட்டி அவ சொல்றதெல்லாம் நீ நம்பாத செல்லம், அவ நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க பார்க்குறா. அவ சொல்றதை நம்புற பார்த்தியா” எனப் பாவம் போல பேச,
“அவ சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன செஞ்சீங்க, என்னை வரச்சொல்லிட்டு, எங்கூட பேசல. என்னைப் பார்க்கல. அப்போ அவ சொல்றமாதிரிதானே.. எனவும்,
“அய்யோ அது அப்படி இல்லடி தங்கம், மாமா போலிஸ் ஆகிட்டேனா.. அந்த கெத்த மெயின்டன் பண்ணலாம்னு நினைச்சு கொஞ்சம் சொதப்பிட்டேன். ஆனா நீ உள்ள வந்தது, என்னைத் தேடினது. என்னைப் பார்த்தது உன் முட்டக்கண்ணு ரெண்டும் விரிஞ்சது எல்லாம் பார்த்தேன் தெரியுமா.. நீ அங்க வராம இருந்திருந்தா நானே கொஞ்ச நேரத்துல வந்திருப்பேன்..” என்றவனை மேலும் கீழும் பார்த்தவள், “ஓ போலிஸ்ன்னா கெத்து காட்டனுமா..” எனக் கைகளைக் கட்டிக் கொண்டு நேராய் கேட்க,
“ச்சே..ச்சே யார் அப்படி சொன்னது. எந்த முட்டாளோ அப்படி சொல்லி வச்சிருக்கான். அனுபவம் அப்படி இல்லன்னு இப்போ புரிஞ்சிடுச்சே. இனி பொண்டாட்டிக்கிட்ட கெத்தாவது, ஒன்னாவது. அதெல்லாம் அப்பவே காக்கா தூக்கிட்டு போயிடுச்சு. இனி பொண்டாட்டி முன்னாடி நான் வெறும் புருஷன் போதுமா..” என அந்தர் பல்டி அடித்தவனை வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தாள் கலைவாணி.
அவள் முகத்தைப் பார்த்து “கலை.” எனப் பாவமாக இழுக்க, அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை விடுத்து கலகலவெனச் சிரித்தவள், “எனக்கு எல்லாம் தெரியும். ஆரு சும்மா உங்களைக் கடுப்பாக்கத்தான் அப்படி செஞ்சான்னு, நீங்க டென்சன் ஆகவேண்டாம்.” எனவும்,
“ஷப்பா.. கொஞ்ச நேரத்துல எவ்ளோ டென்சன் பண்ணிட்டா..” எனப் பெருமூச்சு விட்டவன், அடுத்து வந்த சில நிமிடங்களை அவனுக்கு அவனுக்கேயான காதல் நிமிடங்களாக மாற்றிக் கொண்டான் கதிரவன்.
கூட்டம் ஓரளவிற்கு குறைய ஆரம்பிக்கவும், ஆதனின் உடல்நிலை வேறு அனைவரையும் யோசிக்க வைக்க, அவர்களை மட்டும் விரைவாகவே ரம்யாவுடன் வீட்டுக்கு அனுப்பியிருந்தனர். அதோடு இன்று நாளும் நன்றாக அமைத்திருக்க, இரு ஜோடிகளுக்கும் அன்றே சாந்தி முகூர்த்த ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தார் குருவம்மா. அந்த வேலைகளும் இருக்க, தாரணியும் உடன் கிளம்பிவிட்டார்.
விருந்தினர்கள் அனைவரும் கிளம்பவே நேரமெடுக்க, அதிலும் வெளியூர்காரகளுக்கு தேவையான வசதிகளைப் பார்த்து தங்க வைத்து என ஆண்கள் நால்வருக்கும் வேலை நெட்டி முறித்தது. ஆதி மற்றும் ஆதனின் நண்பர்களை ஆகாஷும் கதிரும் பார்த்துக்கொள்ள அந்தப் பிரச்சினையும் தீர்ந்தது.
நேரம் பத்தைக் கடக்கவும் தான் ஆண்கள் சற்று ஆசுவாசமானார்கள். அவர்கள் நால்வரையும் அமரவைத்து உணவு கொடுத்து, அனைத்தையும் ஒதுக்கி எடுக்க என பவித்ரா இங்கேயே இருந்து கொண்டார்.
திருமண வேலைகள் ஆரம்பித்த பிறகு இரவு நண்பர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவது. சங்கர் ஊரிலிருந்து வந்தால் அவரும் கலந்து கொள்வார். இன்றும் அவர்கள் நால்வருமே இருக்க, பேச்சுக்கள் எங்கெங்கோ சுற்றி ஆதனிடம் வந்து நின்றது.
“சங்கர் மருமக மேல இன்னும் கோபம் போகலையா..” என முகுந்தன் கேட்க, பாண்டியனும் சங்கரைத்தான் பார்த்தார்.
“அவங்க செஞ்சதை தப்புன்னு சொல்லலப்பா, ஆனா அதுக்காக இப்படியே இருக்க முடியுமா சொல்லுங்க. அவளைப் பிரிஞ்சி கஷ்டப்படுத்தி நீங்களும் நிம்மதியாவா இருக்கீங்க..” என கேசவனும் பேச,
“ம்ம்ம்.. இன்னைக்கு தாரணி முகத்துல தெரிஞ்ச சந்தோசம் எல்லாம் சரியாகிடுச்சுன்னுதான் நினைக்க வச்சது சங்கர். அவங்க உங்ககிட்ட பேசுனாங்களா..” எனப் பாண்டியனும் கேட்க,
“இல்ல… இதைப்பத்தி ஒன்னும் சொல்லல, ஆனா ரொம்பவே சந்தோசமா இருந்தா.. ஆகாஷ் வேற ஏதோ சொல்லிட்டு இருந்தான். எனக்கும் அவ சமாதானம் ஆகிட்டா பரவாயில்லன்னு தான் தோனுது. அவளாலத்தான் நான் என் பொண்ணுக்கிட்ட தள்ளி நிக்கிற மாதிரி ஆகுது.” என்ற சங்கரின் குரலில் இருந்த வேதனையை எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அப்போது இவர்களுக்கு உணவு பரிமாறிய பவித்ராதான் மதியம் நடந்ததைக் கூறி, “அண்ணி எல்லாம் புரிஞ்சிக்கிட்டாங்க அண்ணா.. சீக்கிரம் உங்கக்கிட்டயும் சொல்வாங்க பாருங்க. நீங்க டென்சன் ஆகாம சாப்பிடுங்க..” எனவும் அவரும் சரியெனத் தலையாட்ட, மற்றவர்களும் சாப்பாட்டை முடித்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.