Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 34

காதல் கசக்குதைய்யா – 34

by Vathani S

காதல் – 34 

இரு வீட்டிற்கும் முதல் வாரிசு. ஊரே அறியும்படி நடக்கப் போகும் முதல் விஷேஷம். ஊர் மக்கள் அத்தனை பேரும் அதிசயித்து போகுமளவிற்கு சிறப்பாக நடத்த வேண்டும், மேலும் பவித்ராவையும் முகுந்தனையும் தன் மகள் மருமகன் என்று ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்ற முத்துச்சாமியின் எண்ணம் அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்தது.

அதனாலேயே மிகவும் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த திருமணத்தை முடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் அனைவரும் நினைத்தனர்.

ஆதனின் திருமணத்தால் உடைந்து போன பெரியவர்களின் மனதை இவர்களின் திருமணப் பேச்சு சற்று இலகுவாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். 

திருமணப் பேச்சு என்று ஆரம்பித்ததுமே வேலைகள் ஜெட் வேகத்தில் நடக்க ஆரம்பித்தது. அடுத்து வரும் மாதத்தில் உள்ள ஒரு முகூர்த்தநாளில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் முடிவெடுக்க, வேலைகள் தன்னைப்போல நடந்தது.

இரு வீட்டாருக்கும் தங்கள் பிள்ளைகள் மீது அத்தனை நம்பிக்கை. எந்த நேரம் என்ன சண்டையைப் போட்டு, பிரச்சினையை ஆரம்பிப்பார்களோ என்ற பயத்திலேயே விரைவாகத் திருமண நாளைக் குறித்திருந்தனர். 

இதில் பாண்டியனால் அப்போது சேலத்தில் இருந்து நகர முடியாமல் போக, மகளை அழைத்துக் கொண்டு பெரியவர்களோடு ரம்யா மீண்டும் போடிக்கு வந்துவிட, பத்திரிக்கைகள் மற்றும் இதர வேலைகளை பாண்டியனை எதிர்பார்க்காமல் முகுந்தனும் கேசவனும் பார்க்க ஆரம்பித்தனர்.

இங்கு ஆகாஷிற்கும் அவர்கள் இனத்திலேயே ஒரு பெண் அமைந்துவிட, இரு கல்யாணத்திற்கும் பத்து நாட்கள் முன்ன பின்ன இருக்க, தாரணியும் சங்கரும் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தனர்.

அதிலும் முறுக்கிக் கொண்டு திரிந்த தாரணியை, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, தன் பேச்சாலேயேக் கரைந்திருந்தான் ஆதன். முதலில் எரிச்சலாகவும், கோபமாகவும் பேசியவர் பின் அவனது அனுகுமுறையில் தன் கோபத்தில் இருந்து இறங்கி வந்திருந்தார். 

அதோடு ஆராவிற்கு நடக்கும் திருமண ஏற்பாடுகளைப் பார்த்து அவர் மனம் சுணங்க, இரு ஜோடிகளுக்கும் ரிசப்ஷன் ஒன்றாக வைப்பதாக ஏற்கனவே முடிவு செய்ததை பெரியவர்கள் கூற, அதன்பிறகு தான் அவர் முகம் சற்று தெளிவடைந்தது. 

மகளுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் அவர்களும் வாங்க செய்ய என ஆரம்பிக்க, பெரியவர்கள் அனைவரும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையாத குறைதான். 

இதில் எதிலும் ஈடுபடாமல் யாருக்கோ திருமணம் என்பது போல இருந்த ஆதியையும் ஆராவையும் பார்த்து சிறியவர்கள் பல்லைக் கடித்தனர். முகூர்த்தப் புடவை எடுக்க ஆதியை அழைக்க, ‘எனக்கு வேலை இருக்கு’ என்றவனிடம், காளியாட்டம் ஆடிவிட்டாள் ஆரா.

‘ஷப்பா’ எனத் தலையைத் தேய்த்துக் கொண்டவன் வேறுவழியில்லாமல் எல்லோருடனும் மதுரைக்கு கிளம்பினான். ஆதனுக்கு துணையாக நிக்கி வீட்டிலேயே இருந்துவிட, பெரியவர்கள் அனைவரும் ஒரு காரில் வர, கதிரும் ஆதியும் ஆராவும் ஒரு காரில் என ஒரு பயணம்.

இதில் வைகை அணையைத் தாண்டியதும் முக்கிய வேலை என கதிர் கழண்டு கொள்ள, பல்லைக் கடித்த ஆதியைக் கண்டு கொள்ளாமல் ஆராவிற்கு ஹைஃபை கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.

இப்போது இருவர் மட்டுமே காரில் இருக்க, “என்ன மாமா சௌக்கியமா..” என பருத்தி வீரன் கார்த்தி போல ஆரா ஆரம்பிக்க, அவளைக் கண்டு கொள்ளவே இல்லை ஆதித்யன். 

“ஓ.. கோபம் போல..” எனத் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போலச் சொல்லி, அவனைக் கடுப்பாக்கியவள் “ஏன் மாமா இந்த ‘ஐ லவ் யூ’ ங்கிற வார்த்தை அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தையா..?” எனச் சந்தேகம் போலக் கேட்க,

“ம்ச்.. என்னதாண்டி பிரச்சினை உனக்கு.. மனுஷனை படுத்தி எடுக்குற.”  என அவனும் கடுப்பாகவேக் கேட்டான்.

“என்ன பிரச்சினையா.? ஏன் சாருக்கு தெரியாதா..? உங்களுக்கு என்ன பிரச்சினை அத சொல்லுங்க, அதை விட்டுட்டு எப்போ பாரு இஞ்சி தின்ன மங்கி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு சுத்துறது..”

“எல்லாம் திமிர்டி, அதான் இப்படி பேச வைக்குது. உனக்கென்ன நீ பாட்டுக்கு கல்யாணத்த முடிச்சிட்டு ஜாலியா அங்க போய் உக்காந்துக்குவ, நான் தானே திண்டாடனும். உனக்கு என்ன.? மனுஷனோட நிலம தெரியாம.”

“என்ன நிலமை.. உங்களுக்கு தான் என் மேல லவ்வெல்லாம் இல்லையே, அப்புறம் எதுக்கு ஓவர் ஃபீலிங்கு.. தொல்ல விட்டது போனா போறான்னு விட்டுட்டு ஜாலியா இருக்கலாமே.”

“ஓ.. குத்திக் காட்டுறியா என்ன.? ஆமா எனக்கு இந்த லவ்வு மேல எல்லாம் நம்பிக்கை இல்லதான். அத சொல்ல எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. அதுக்கு காரணம் அந்த லவ்வ பண்ணிட்டு முட்டாள் தனமான முடிவெடுத்த ரெண்டு பேர நான் பார்த்துருக்கேன், பார்த்துட்டும் இருக்கேன். அப்படி இருக்கும் போது இந்த காதல் எனக்கு கசப்புதான், இல்லைன்னு சொல்ல சொல்றியா..”

“அது உங்க விருப்பம் மாமா.. இன்னைக்கு பாவக்கா மாதிரி கசப்பா இருக்குறது, நாளைக்கு பலாப்பழம் போல இனிக்கும். அப்பவும் இப்படி டைலாக் விடுவீங்களா என்ன.? ஆனா இப்படி ஒரு எண்ணம் வச்சுருக்குறவரை நான் எப்படி மேரேஜ் பண்ணிக்க முடியும். நான் உங்களை லவ் பன்றேன் மாமா, பைத்தியம் மாதிரி காதலிக்கிறேன். ஆனா அதோட பிரதிபலிப்பு கொஞ்சமும் உங்ககிட்ட இல்லன்னா அது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம். யோசிச்சுப் பாருங்க. எனக்கு வாழ்க்கை கொடுங்கன்னு உங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்குற மாதிரி ஃபீலாகுது, இதுக்கு இந்த கல்யாணம் நடக்காமலே இருக்கலாம்..” என்று காரமாக பேசிக் கொண்டிருந்தவளின் குரல், கடைசியில் கரகரப்பாக முடிந்திருந்தது.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கும் வருத்தம் தான், வலிதான். ஆனால் இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்லி இனியும் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க மனமில்லை அவனுக்கு. அவளைப் பிடிக்கும், ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதை காதல் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியவில்லை அவனால். காதல் என்றால் மனமும் மூளையும் இன்னும் காத தூரம் தான் ஓடுகிறது. அவனும் என்னதான் செய்வான்.

அன்று நண்பனோடு பேசியதை அந்த துரோகி இவளிடம் போட்டுக் கொடுக்க, அன்றிலிருந்து அவனைப் பார்த்தாலே சீண்டுவதும், எரிந்து விழுவதும், திடிரென்று பாவமாக பேசுவதும் என்றுதான் இருக்கிறாள் ஆரணி. 

தன் இயலாமையை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் தான், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் போல சுற்றிக் கொண்டிருக்கிறான் ஆதி. அவளும் தான் என்ன செய்வாள் பொறுத்துப் பார்த்துவிட்டு இன்று பிடித்து தன் கோபத்தையும் ஆற்றாமையையும் காட்டுகிறாள். அவள் நிலையும் அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் பெண்டுலமாக ஆடும் தன் மனதை என்ன செய்வதென்று தெரியவில்லையே.

இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்ப்பதற்கு அவளையும், அந்தக் கசப்பான காதலையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியது அவனது பெரும் தவறுதான். இல்லையென்று அவன் எப்போதும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. பிரச்சினைகள் எல்லாம் முடிந்து அனைவரும் ஒன்று சேர்ந்ததும் ஆரணியிடம் இதைப்பற்றி பேசி தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்திருக்க, அவளோ அதற்கு முன்பிருந்தே அவனை விரும்பியிருக்கிறாள் என்று தெரிந்த போது தன்னையே நொந்து கொண்டான்.

என்ன செய்வது என அவன் திணறிய இடம் அதுதான். அதன்பிறகு ஒருவழியாக  தன் மனதை  கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்காகத் தயார் படுத்தலாம் என்று நினைக்கும் போது ஆதன் நிக்கியின் முட்டாள்தனமான செயல் ஆதியை மொத்தமாக முடங்க செய்துவிட்டது. மீண்டும் காதல் மீது அவனுக்கு நம்பிக்கையே போய்விட்டது.

அவனுக்கு மட்டும் என்ன அவளைக் காதலிக்கக்கூடாது என்ற தலையெழுத்தா.? இல்லையே, எல்லோரும் போற்றும் அந்தக் காதல் அவனுக்கு மட்டும் அவன் வசத்தில் சிக்கவில்லையே. பெருமூச்சு விட்டவன் “ஆருமா.. நீ என்னைப் புரிஞ்சிக்கனும்னு நான் கட்டாயப்படுத்தல, ஆனா இப்போ உன் மேல காதல் இல்ல, இனி வருமா தெரியல. ஆனா மனைவின்னு வர்ர ஒருத்தியை எப்படி நான் வெறுத்து, ஒதுக்கி வாழ்வேன்னு நினைக்கிற. இப்போ எத்தனையோ கல்யாணம் வீட்டுல, பெரியவங்க பார்த்து நடக்கலையா.? அவங்க எல்லாம் நல்லபடியா வாழலையா.? இதையும் அப்படி நினைச்சிக்கக்கூடாதா.?” என்றவனின் குரல் இயலாமையில் இரங்கிப் போனது.

எத்தனை முறைதான் அவளிடம் ‘என்னைப் புரிஞ்சிக்கோ ஆரு’ என்று சொல்வது, அவளும் எவ்வளவைப் பொறுத்துப் போவாள். ஒவ்வொரு முறையும் இப்படி ஆரணியிடம் சொல்லும் சூழல்,  அது அவனுக்கே கோபத்தைக் கொடுக்கும் போது அவளுக்கு எப்படியான எரிச்சலையும், கோபத்தையும் கொடுக்கும் என அவனுக்குப் புரியாதா.? இல்லைத் தெரியாதா.?

இதில் ஆரணி சொல்வதைப் போல இந்த திருமணம் வேண்டுமா.? என்றெல்லாம் ஆதி யோசிக்கவில்லை. ஏன் அந்த எண்ணமே அவனுக்கு வரவில்லை. எப்படி தனக்குள் அவள் மீதான காதலைக் கொண்டு வருவது என்ற நினைப்பு மட்டும் தான். 

இப்படியாக மனதுக்குள் மொத்தமாகக் குழம்பிப் போய் கிடந்தவன், பலநாள் கதிரிடம் புலம்பியபடியே ஆரணியிடம் சிக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். இப்படியே விட்டால் அவனும் பைத்தியம் பிடித்து, தனக்கும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவான்  என்று புரிந்தவள், இன்று கதிர் மூலமே அவனைப் பிடித்திருந்தாள்.

காரை செலுத்திக் கொண்டிருந்தாலும் ஆதித்யனின் எண்ணவோட்டங்கள் எல்லாம் இவளை எப்படி சமாளிக்க என்பதில் இருக்க, ஆரணியின் எண்ணங்களும் இவனை என்னதான் செய்வது என்பதாகத்தான் இருந்தது. 

அமைதியாக கழிந்த நிமிடங்களை வெறுத்தவள் போல, “அந்த கடைல கொஞ்சம் காரை நிறுத்துங்க..” என எரிச்சலாகச் சொல்ல, 

“ஏற்கனவே லேட்.. இதுல இன்னேரம் நீ கடை கடையா நின்னு மொக்கிட்டு வந்தா விடிஞ்சிடும்..” என எரிச்சலாக ஆதித்யன் சொல்ல,

“ஆமா இப்போ நீங்க கடை கடையா ஏறி இறங்கி எனக்கு வாங்கிக் கொடுத்த மாதிரி எதுக்கு இவ்வளவு சீனு, நிறுத்துங்க முதல்ல..” எனக் கத்த, அந்தக் கத்தலில் வேகமாக அவனும் வண்டியை நிறுத்த, அதைவிட வேகமாக வெளியே வந்தவள் ‘ஏய் ஏய் பார்த்து பார்த்து’ என அவன் கத்தியதையும் கேட்காமல் ரோட்டைக் கடந்தவள், சாலையோரமாக இருந்த டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்து “அண்ணா ஒரு மசால் டீ, அப்படியே ஒரு கோல்ட் ஃப்ளேக்” என அதிர்ந்து நின்றவரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு, பக்கத்தில் ஆவென பார்த்திருந்த மற்றவனை “வாய மூடுடா கொரங்கு, உள்ளார போர கொசு எல்லாம் உன் வாய் நாத்தத்துல சூசைட் பண்ணிக்க போகுது, கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்..” என குடித்துவிட்டு வடிவேல் நடிக்கும் பாணியில் தன் சேட்டையை ஆரம்பிக்க, காரை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாக ஓடிவந்த ஆதி இவள் செய்யும் சேட்டையில் தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான்.

“அண்ணே டீ இன்னும் வரல..” எனக் கடைக்காரருக்கு ஞாபகப்படுத்தியவள், அருகில் நின்றிருந்தவன் கழுத்தில் கிடந்த துண்டைப் பிடித்து இழுத்து தனக்கு அருகில் அமரவைத்து “ஏன்ப்பா தம்பி நான் பார்க்க எப்படி இருக்கேன்..” எனக் கேட்க,

“ஏன் க்கா..” என்றவன் முறைத்த ஆதியைப் பார்த்து எச்சில் விழுங்கினான்.

“அட ஏன் தம்பி சும்மா சொல்லு, அவங்க எல்லாம் முறைக்க மட்டும் தான் செய்வாங்க..” என ஆதியைப் பார்த்து உதட்டைச் சுழித்தவள், “சொல்லு..” என அவன் துண்டை இறுக்க,

“ஹான்.. ஹான்” என் இறுமியபடியே எச்சில் விழுங்கினாலும், “சூப்பர் ஃபிகர்க்கா” என கவுன்டர் கொடுக்க,

“இந்தப் பையன் எப்படி இருக்கான்..” எனத் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த ஆதியைக் காட்டி கேட்க, “சுமார் ஃபிகர் தான்க்கா..” என அடுத்து யோசிக்காமல் கவுன்டர் கொடுக்க,

“கரெக்ட்.. கரெக்ட் நீ சொன்னது சென்ட் பெர்சன்ட் கரெக்ட். இந்த சுமார் மூஞ்சி குமாருக்கு, இந்த சூப்பர் ஃபிகர்  ஆரணியைப் பிடிக்கலையாம்டா தம்பி.” என சோகமாக கூற, 

“என்ன பிடிக்கலையா.. அவனவன் பொண்ணு கிடைக்காம, கல்யாணம் பண்ணாம நைன்டி கிட்ஸ்னு பட்டம் கொடுத்துருவாங்களோன்னு பயந்துட்டு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தா, ஒரு சூப்பர் ஃபிகர பிடிக்கலன்னு சொல்றானே” என வாய்விட்டு சத்தமாகச் சொல்லி, “நெசமாவே இந்த அக்காவ உங்களுக்கு பிடிக்கலையா சகோ” என பல்லைக் காட்டி கேட்க,

“அடிங்க்.. அவளுக்கு எனக்கும் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம், சரக்கடிச்சிட்டு வந்து இப்படி புலம்பிட்டு இருக்கா குடிகாரி, அதை நம்பிட்டு நீயும் எங்கிட்ட கேட்டுட்டு நிக்கிற, இன்னும் ஒரு செகன்ட் என் முன்னாடி நின்ன, முன்னே தெத்திக்கிட்டு நிக்கிற அத்தன பல்லும் கொட்டிடும் பார்த்துக்க..” எனப் பல்லைக் கடித்தபடியே ஆதித்யன் பேச,

“எத சரக்கடிச்சிருக்கா.. எக்கா என்னக்கா நீயி..” என மற்றவன் அதிர்ந்து பார்க்க,

‘அட அற்ப பதரே’ என்று கேவலமாக ஒரு லுக்கை ஆதித்யனுக்கு பார்சல் செய்துவிட்டு, “லவ் ஃபெயிலியர் பங்கு, அதான் லைட்டா சரக்க உள்ள விட்டிருக்கேன்” என்றவள், “அண்ணே இன்னும் டீ வரல” என மீண்டும் டீ கடைக்காரரை வம்புக்கிழுக்க, “ஏன்மா இன்னைக்கு உனக்கு நான் தான் கிடைச்சேனா..” என அவரும் புலம்பியபடி ‘இழுத்துட்டு போறியா, இல்ல சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தவா’ என்றப் பார்வையோடு ஆதியைப் பார்க்க, 

‘ஷப்பா இவள வச்சிக்கிட்டு’ என காண்டானவன், அவளை அப்படியேத் தூக்கி தோளில் போட்டு, திமிறியவளின் முதுகில் பட்டென்று ஒரு அடியைப் போட்டவன், திமிறத் திமிற விடாமல் தூக்கிக்கொண்டு போய் தொப்பென்று தன் காருக்கு அருகில் கீழேப் போட்டான்.

“அம்மா என் இடுப்ப உடைச்சிட்டானே” என்றக் கதறலைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் காரில் ஏறியமர்ந்தவன், ஹாரனை அலறவிட, ‘பாவி.. பாவி.. இடுப்பு எலும்ப சுக்கு நூறா நொறுக்கிட்டான் போல’ எனப் புலம்பியபடியே வந்து அவள் சீட்டில் அமர, அதற்காகவே காத்திருந்தவன் போல, மொத்தமாக வாரியணைத்துக் கொண்டான் தன்னவளை.

‘அம்மு அம்மு’ என்றவனின் புலம்பல்கள் தொடர்ந்து கொண்டே இருக்க, கைகள் அவளை நொறுக்கி விடுவது போல இறுக்கிக் கொண்டே போக, அவளோ அவனது முதுகை வருடியபடி, அந்த வருடலில் தன்னில் பாதியானவனின் வலியைக் குறைத்துக் கொண்டிருந்தாள். அவனது போராட்டாங்கள் அவளுக்குப் புரியாமல், தெரியாமல் இருக்குமா.? இன்று அதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்றுதான் தனியாகப் பிடித்ததே.

ஓரளவுக்குத் தெளிந்தவன், முகத்தைத் துடைத்தபடி தள்ளி அமர. அவனிடம் வாட்டர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு, “இப்போ சொல்லுங்க என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றுக் கேட்டவளை ஆசையாகப் பார்த்தான் ஆதித்யன்.

You may also like

Leave a Comment

About Me

Featured