காதல் – 33
திமிறி திமிறி ஓய்ந்து போய், பின் அவன் மேலயே சாய்ந்து விட்டாள் ஆரணி. அப்போதும் அவளது மேனி அழுகையில் தான் குழுங்கியது. விழிகளில் வழிந்த நீர் அவன் உதட்டையும் பதம் பார்க்க, வேகமாக அவளைத் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு, “ஆரா.. ஏய் ஆரா.. என்னாச்சு.. ஏன் உனக்கு பிடிக்கலையா..? நான் வேனாமா உனக்கு.. இன்னும் என்மேலக் கோபமா..? சாரி வெரி சாரி தவுசன்ட் டைம் சாரி, ப்ளீஸ் இப்படி அழாத..” என ஆதி சமாதாணம் செய்தாலும் ஆரணியின் அழுகை குறையவே இல்லை.
அதில் கடுப்பானவன் “அடச்சே வாயை மூடு.. எதுக்கு எப்படி கரட்டுல சுத்துற ஓணானாட்டம் ஒய் ஒய்ன்னு கத்திட்டு இருக்க..” எனக் கத்த,
‘எத கத்துறனா, அதுவும் ஓணானாட்டாம்… மவனே செத்தடி எவ்வளோ ஃபீலிங்க்ல குமுறிட்டு இருக்கேன், எரும கத்திட்டு இருக்கேன்னு சொல்றான்’ எனக் கடுப்பானவள் “டேய் வேணாம்… கொலைவெறில இருக்கேன், எதாச்சும் பேசுன.. உன்னை காவு கொடுக்கக்கூட தயங்கமாட்டேன் பார்த்துக்கோ..” என்றவளின் கையைப் பிடித்து பின்னால் முறுக்கியவன், “நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், என்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, மாமன வாடா, போடா அவன் இவன்னு ஏகவசனத்துல பேசிட்டு இருக்க..” எனக் கோபம் கொண்டு பேச நினைத்தாலும், குரல் நிஜத்தில் கொஞ்சியது.
“பின்ன நீங்க செஞ்சதுக்கு உங்களைக் கொஞ்சுவாங்களா..?” என மேலும் கடுப்பில் கத்தியவளிடம் “ஏன் கொஞ்சக் கூடாதா.? இல்ல என்னைக் கொஞ்சமாட்டியா..” என சரசமாகக் கேட்டு, அவளின் கன்னத்தை உரச,
“ம்ச்.” என அவனைத் தள்ளிவிட்டவள், “எப்பவும் கொடுத்துக்கிட்டே இருக்கக்கூடாது எரிச்சல் வந்துடும். ஆமா வாங்கிட்டே இருக்குற உங்களுக்கு போர் அடிக்கல..” என நக்கலாகக் கேட்டு அவனை முறைக்க,
“என்னமோ நான் வச்சிக்கிட்டு கொடுக்க மாட்டேங்கிற மாதிரி கிண்டல் செஞ்சிட்டு இருக்க, எலி சைஸ்க்கு இருந்துட்டு என்ன பேச்சு பேசிட்டு இருக்க.?” என முறைத்துக் கொண்டிருந்தவளின் மூக்கு நுனியைத் திருகியவன், அப்படியேக் கட்டிக் கொள்ள,
“ஆனா நான் இன்னும் சமாதானம் ஆகல, நீங்க என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டீங்க..” என்று முனங்கினாலும் அவனின் அனைப்பில் அவளும் அடங்கித்தான் போனாள்.
“சாரி.. சாரி அம்மு.. சாரி..” என்றவன் இதழ்களால் நொடியில் நூறு முத்தங்களை கொடுத்து அவளது மனக்காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தான் ஆதித்யன்.
அப்போது “என்னைய்யா சீக்கிரம் வந்துட்ட..” என்ற அப்பத்தாவின் குரலும்,
அதைத் தொடர்ந்து “ஆமாம்மா.. இன்னைக்கு நைட் டியூட்டி, அதான் இப்போ வந்தேன். ஆரா எங்க.. ஆதியும் இங்கையா இருக்கான். ரமி ஒரு டீ குடுமா..” என பாண்டியனின் குரலும் கேட்க, அடித்துப் பிடித்து அவனைத் தள்ளிவிட்டவள், வேகமாகக் குளியலறைக்குள் நுழைந்து விட்டாள் ஆரணி.
சட்டென்று விலகி ஓடியவளின் முதுகை வெறித்தவனுக்கு வெகுநேரம் ஆனது நிகழ்வுக்கு வர, தலையைக் கோதி தன்னை நிலைப்படுத்த முயன்று வெற்றியும் கண்டவன், ஆரணி வருவதற்குள் அறையில் இருந்து வெளியில் வந்திருந்தான்.
அப்போது அவனைப் பார்த்த பாண்டியன் சிறு புன்னைகயுடனே பேச ஆரம்பிக்க, அவனும் அவரிடம் பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. முகத்தை இறுக்கமாகவே வைத்துக் கொண்டான். மகிழ்வாகக் காட்டி, அது ஆரணிக்குப் பிரச்சினை ஆகிவிடக்கூடாதே என்ற பயம் தான் காரணம்.
சிறிது நேரத்தில் முகத்தைக் கழுவியபடி, அதே அறையில் இருந்து வந்த மகளைப் பார்த்து புருவம் சுருக்கியவர், டீ கொண்டுவந்த மனைவியைக் கேள்வியாக நோக்கினார்.
அந்தப் பார்வையில் தெரிந்த கோபத்தில், “அத்தைக்கும், அவளுக்கும் சண்டை, ஆதிதான் சமாதானம் செய்ய ..” என இழுக்க,
“ம்ம்..” என்றவர், “உங்களுக்கு எப்பவுமே அவளை வம்புக்கு இழுத்துட்டே இருக்கனுமா..?” என தாயைக் கடிந்தவன், ஆரணியிடம் “என்ன அம்மு இது, எப்ப பாரு பெரியவங்ககிட்ட வம்பிழுத்துக்கிட்டே இருக்க..” எனக் கடிய,
“ப்பா.. ஷீ இஸ் சூனியம் கிழவி.. ஐ டோன்ட் லைக் தட் கிழவி..” என முகத்தைச் சுருக்க,
“ஆரா.” எனப் பெற்றவர்கள் இருவரும் அவளைக் கண்டிக்க, ஆதித்யனோ சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அமர்ந்திருக்க, முத்துச்சாமியோ வாய்விட்டு சிரித்துவிட்டார்.
“இப்ப இவ என்னமோ சொன்னாதானே, எனக்குத் தெரியும், அடியே வரவர ரொம்ப இவளாட்டாம்தான் பன்ற, இங்கிலிபீசுதான் பேசுவீகளோ.. பெரிய தொரசாணியம்மா..” என நாடியைத் தோள்பட்டையில் இடித்துவிட்டு, “இந்தாம்மா மருமகளே.. வந்ததுல இருந்து இன்னும் எங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி கூட கொடுக்கல, நெனப்பு இருக்கா இல்லையா.?” என தான் இன்னும் மாமியார் தான் என்று காட்ட,
“போட்டுட்டேன் அத்த, எடுத்துட்டு வரேன், ஆரா இங்கவா கொண்டு போய் கொடு..” என்ற ரம்யா மகளையும் தன்னோடு அடுப்படிக்கு அழைத்துக்கொள்ள,
“ஆதி.. இந்த மாசமே உங்க கல்யாணத்தை வச்சுட்டா என்ன..?” என யோசனையாகப் பாண்டியன் கேட்க,
“ஏன் மாமா எதுவும் பிரச்சினையா.. இன்னும் ரெண்டு மாசம்தானே இருக்கு..” என ஆதியும் கேட்க,
“இல்லப்பா.. ஆரா படிப்பு முடிஞ்சது இல்லையா.. அவளுக்கு பின்லாந்து யுனிவர்சிடில ஸ்காலர்ஷிப் ஷீட் கிடைச்சிருக்கு. உங்க கரஸ் கூப்பிட்டு சொன்னார். நீங்க அங்க இருந்து வந்ததும் தான் மெயில் வந்ததாம். ஆராவுக்கும், உனக்கும் மாறி மாறி கால் பண்ணிருப்பார் போல, நீங்க எடுக்கலன்னதும் எனக்கு அடிச்சிட்டார்.” என்றார்.
“ஓ..” என்றவன், “ஆருவை அனுப்புற ஐடியால இருந்தீங்களா மாமா.?” என்றான் சற்றே ஏமாற்றமானக் குரலில்.
“ம்ம்.. அவளுக்கு அங்க போக விருப்பம். அதுக்காக என்ட்ரன்ஸ் எல்லாம் முடிச்சிட்டா.. இப்போ அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும் போய்த்தான் ஆகனும். அவளோட லட்சியம் நிறைவேறனும் இல்லையா..” என்றார் பாண்டியனும்.
“ம்ம்ம்… எப்போ போகனும் அங்கிள்.. எப்படியும் டூ மந்த்ஸ் டைம் இருக்குமே..”
“ஆமா இன்னும் ரெண்டு மாசம் இருக்கு.. உங்க மேரேஜை அதுக்குள்ள முடிச்சிடலாம்னு பார்க்குறேன். முகுந்தன்கிட்டயும் பேசிட்டேன். நீ என்ன சொல்ற..” என நேரடியாகக் கேட்க,
“நான், எனக்கு என்ன அங்கிள். எனக்கு ஓக்கேதான். ஆனா ஆரா அவ போய்த்தான் ஆகனுமா.?” என்றான் சிறிதாகிப் போனக் குரலில்.
“ம்ம்.. அவ போனா அவளுக்கு நல்லது. அப்புறம் அவ விருப்பம் தான்..” என்று பாண்டியன் முடித்துவிட, காஃபியோடு வந்த ஆரணியோ “எனக்கும் விருப்பம் தான் ப்பா.. ஒரு வருஷம் தானே..” என்று தன் விருப்பத்தை சொல்லிவிட, அதற்கு மேல் ஆதி எதுவும் பேசவில்லை.
முத்துச்சாமி தான் மகனிடம் மற்ற விவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். குருவம்மாவும் போனை எடுத்துக் கொண்டு மகளிடம் திருமணம் பற்றி பேசி அடுத்து செய்ய வேண்டியதைப் பேசச் சென்றுவிட, ரம்யாவும் சமையலைப் பார்க்கச் சென்றுவிட, ஆதியும் ஆரணியும் தனித்து விடப்பட்டனர்.
முகத்தை இறுக்கமாக வைத்து அமர்ந்திருந்த ஆதியைப் பார்க்க பயமாக இருந்தாலும், சற்று வருத்தமாகத்தான் இருந்தது ஆரணிக்கு. ஆனாலும் தானாக எதையும் ஆரம்பிக்க வேண்டாம் என்று அமைதியாக நிற்க, சில நிமிடங்கள் மௌனம் மட்டுமே அந்த இடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது.
பின் என்ன நினைத்தானோ, முகத்தை இயல்பாக்கி, “கன்கிராட்ஸ் அம்மு, உனக்கு கிடைச்ச இந்த ஆப்பர்ச்சுனிடி பத்தி பேசாம, ஏதேதோ பேசி.. சாரி அம்மு.. மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டி..” என அவள் கையைப் பிடித்துக் குழுக்க, அதுவரை ஒரு பயத்துடன் இருந்தவள், “தேங்க்ஸ் மாமா.. தேங்க்ஸ் மச்.. உங்களுக்கு இஷ்டமில்லையோன்னு நினைச்சேன்..” என சிரிப்பும் அழுகையுமாகச் சொன்னவளைத் தோளோடு அனைத்து விட்டவன்,
“இஷ்டம் இல்லன்னு சொல்ல முடியாது.. கொஞ்சம் கஷ்டமா இருக்கு அவ்வளவுதான். சரி நான் கிளம்பறேன். நைட் பார்க்கலாம்..” என்றவன், மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
இங்கு ஆதனோ நிக்கியின் பெற்றோரை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். என்னதான் அந்த வீட்டில் சிரித்த முகத்துடன் மனைவி வலம் வந்தாலும், அவள் அடி மனதில் இருக்கும் வலியை உணர முடியாதவன் அல்லவே. சந்தோசமாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தவளை, காதலெனும் காட்டுக்குள் இழுத்து, அவள் சிறகுகளை பிய்த்து எரிந்துவிட்டதைப் போல் உணர்ந்தான் ஆதன்.
அதனாலே அவர்கள் என்னதான் திட்டினாலும், சண்டை போட்டாலும் பரவாயில்லை என்று தினமும் அவர்களிடம் பேசிவிடுகிறான். முதலில் சிடுசிடுவென தாரணி பேசிவிட்டாலும், இப்போதெல்லாம் அவரிடமும் ஒரு தயக்கம் இருப்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். அந்த தயக்கம் அவரது குற்றவுணர்ச்சி என்று அவனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் அவரிடம் அவன் பேசாமல் இருந்ததில்லை.
ஆகாஷிற்கும் இப்போது தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக நிக்கி சொல்லியிருந்தாள். அந்த திருமணத்திற்குப் போகும் முன்பே அனைத்தும் சரியாகியிருக்க வேண்டும், தான் சரிசெய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.
அவன் யோசனைகளில் இருக்க, மதிய உணவை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் நிகிதா. அவளைப் பார்த்தவன் ‘இங்கே வா’ என கையை நீட்ட, ‘என்ன’ எனும் கேள்வியோடு நீட்டிய அவன் கரத்தைப் பிடித்தவளை இழுத்து அருகில் அமரவைத்து மடியில் தலையை சாய்த்துக் கொண்டான்.
நிக்கியும் கணவனின் செயலில் திகைத்துப் பின் ஒரு முறுவலோடு, அவன் கேசத்தை வருடியபடியே “என்னாச்சு ஆது..” என்றாள் ஆதுரமாக.
“நத்திங்க் பேபி.. மாமியாரை எப்படி மடக்கலாம்னு தீவிரமா திங்கிங்க் பேபி. உனக்கு எதுவும் ஐடியா இருந்தா சொல்லேன்..” என முடிக்கும் முன்னே, வருடிக் கொண்டிருந்த கையாலே அவன் தலையில் கொட்டு வைத்தவள், “என்ன பேச்சு இதெல்லாம்..” எனச் சிரிக்க,
“ஐம் சீரியஸ் பேபி. உங்கம்மாவை எப்படி கரெக்ட் பன்றதுன்னே தெரில. எந்தப் பக்கம் போனாலும் லாக் பண்ணிடுறாங்க..” எனப் பாவமாக முகத்தை வைத்துச் சொல்லவும், பக்கென்று சிரித்து விட்டாள் நிகிதா.
“ஏய் நான் சீரியசா பேசுறேன், நீ சிரிக்கிற.. ஆகாஷ் மேரேஜுக்குள்ள எப்படியும் எல்லாத்தையும் சரி செய்யனும் பேபி.. நீ பழையமாதிரி துருதுருன்னு எனக்கு வேனும், அதுதான் எனக்கு பிடிக்கும், நிம்மதியும் கூட.” என்றவனின் நெற்றியில் இதழ் பதித்தாள்.
பின் “தேங்க்ஸ் ஆது. நீங்க இப்படித்தான் யோசிச்சிட்டு இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா சிலதை காலம் தான் நடத்தி வைக்கும். நம்ம விஷயமும் அப்படித்தான் ஆது. நாம செஞ்சது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லையே, இன்னைக்கு திட்டி நாளைக்கே நம்மளை மன்னிச்சு சேர்த்துக்க… அவங்களுக்கும் கொஞ்சம் டைம் வேனும் தானே. நடந்ததை எல்லாம் மறந்து நம்மளை ஏத்துக்க அவங்களுக்கு அவகாசம் கொடுக்கனும் தானே. இதுக்கெல்லாம் காலம் தானே பெருமருந்து. பொறுமையா இருக்குறதுனால நாம எங்கையும் குறைஞ்சி போயிடப் போறோமா.. பொறுத்தார் பூமியாழ்வார் சரியா..? அதனால அதையெல்லாம் தூக்கி தூரமா வச்சிட்டு சாப்பிடுங்க, சாப்பிட்டு மாத்திரை போடுங்க..” என அவனுக்கு உணவை எடுத்து முன்னே வைக்க, ஆதனும் மனைவி சொல்வதை சிறு சிரிப்புடன் கேட்டபடி சாப்பிட ஏதுவாக அமர்ந்தான்.
“ஆது உங்களுக்கு சொல்ல எங்கிட்ட ஒரு மேட்டர் இருக்கு.. அப்பவே வந்தேன், நீங்க தூங்கிட்டு இருந்தீங்க..” எனச் சிரிப்புடன் ஆரம்பிக்கவும், ‘என்ன’ என்பது போல் பார்த்தான் ஆதன்.
“நம்ம ஆரு இருக்காள்ள..” என ஆரம்பித்து அனைத்தையும் சொன்னவள், “ஆகாஷ் மாமா மேரேஜ் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடியே எங்க அம்மா கோபம் குறைஞ்சி வந்துடுவாங்கன்னு தோனுது..” எனச் சிரிக்க,
“என்ன சொல்ற பேபி.. அப்போ ஆதி ஆரு கால்ல சாஸ்டாங்கமா விழுந்துட்டான்னா..” என ஆச்சரியமாகக் கேட்க,
“எஸ்.. எஸ்.. ஆனா அங்கையும் ஒரு ட்விஸ்ட் இருக்கு பார்த்தீங்களா.. ஆருவை மாமா டென்சன் பண்ணதுக்குத்தான் கடவுள் இப்படி அவரை வச்சு செய்றார் போல.. ஹாஹா.. நல்லா வேனும்..” என இப்போது பெரிதாகவேச் சிரிக்க, ஆதனுக்கும் சிரிப்புத்தான்.
சிரித்தவன், “எனக்கு என்னமோ ஆதி இதெல்லாம் ஆராவுக்காகத்தான் சொல்றான்னு நினைக்கிறேன்..” என யோசனையாக சொல்ல,
“புரியல.. நீங்க என்ன சொல்றீங்க..”
“ம்ம் நீ நல்லா யோசிச்சிப்பாரேன், அந்த யுனிவர்சிடில சீட், அதுவும் ஸ்காலர்ல கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம். அதுவும் ஆதி அதுக்கு டரை செஞ்சிருந்தான். அவனுக்கு கிடைக்கல. அது ஆருவுக்கு கிடைக்கும் போது எப்படி வேண்டாம்னு சொல்வான். ஐ திங்க் இவன் சரின்னு சொல்லியிருந்தா ஆரா போக மாட்டேன்னு சொல்லிருவாளோன்னு பயந்து தான், ஆதி வேண்டாம்னு சொல்லிருப்பான். அது அப்படியே க்ளிக்காகிருக்கு..” எனத் தமையனைப் பற்றித் தெரிந்தவனாகச் சொல்ல, நிக்கிக்கும் ஆருவின் குணம் தெரியுமாதலால் ‘சரிதான்’ என்று ஒத்துக் கொண்டாள்.
இங்கு கல்லூரியில் நண்பனுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஆதியும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தான். “நான் மட்டும் சூப்பர் போயிட்டு வான்னு மட்டும் சொல்லியிருந்தேன்னு வைடா மாப்பிள்ளை, மறுபடியும் வேதாளம் முருங்கமரத்துல ஏறிருக்கும். ஏதோ என் மாமனார் முன்னாடியே எனக்கு ஹின்ட் கொடுத்ததால அந்த நேரம் சரியா போச்சு. இல்லைன்னா கல்யாணம் ஆகாமலே டைவர்ஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்..” எனச் சோகமாகச் சொல்ல, வயித்தைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் எதிரில் இருந்தவன்.
“ஆனாலும் உனக்கு இப்பவும் மாமனார் தயவுதான் தேவைப்பட்டிருக்கு பார்த்துக்கோ. எல்லாருக்கும் மச்சான் தயவுதான் தேவைப்படும் உனக்கு மாமனார் தயவு..” என்று மீண்டும் சிரிக்க,
“சிரிடா.. சிரி.. நல்லா சிரி… என் பாடு உனக்கு சிரிப்பா இருக்குல்ல.. ஆனாலும் இந்தக் காதலை எப்படித்தான் ரசிச்சி செய்றானுங்களோ தெரியல…” என்றவன் முகத்தில் தோன்றிய பாவத்தில், நண்பனின் சிரிப்பு உடனே அடங்கியது.
“என்ன மச்சான் சொல்ற.. இன்னும் உனக்கு இந்தக் காதல் மேல எல்லாம் நம்பிக்கை வரலையா.. உங்க வீட்டுல ரெண்டு மேரேஜ் லவ் மேரேஜ் தான் மறந்துடாத..” எனவும்,
“அதனாலத்தாண்டா அந்த கன்ட்ராவி மேல சுத்தமா நம்பிக்கை வரல..” என்று இறுக்கமாகச் சொல்ல, எதிரில் இருந்தவனோ ‘என்ன சொல்றான் இவன்’ என அதிர்ந்து பார்த்திருந்தான் ஆதித்யனை.