காதல் – 35
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற முதுமொழிக்கேற்ப, இம்மலைக்குன்றில் வேலப்பராக வீற்றிருந்து முருகப்பெருமான் காட்சி தருகிறார். குகைகள் நிறைந்துள்ள இம்மலையில் தற்போதும் பல சித்தர்கள், முனிவர்கள் தவமிருப்பதாக செவிவழிச் செய்திகள் உண்டு.
எழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் குன்றின் மீது வீற்றிருக்கும் வேலப்பனை வேண்டிக் கொண்டால், திருமணத் தடைகள் நீங்கி, நினைத்தக் காரியங்கள் கைகூடும் என்பது இக்கோவிலின் ஐதீகம்.
தன் பேரப்பிள்ளைகளின் திருமணம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக முடியவேண்டும், அப்படி நடந்தால் இத்திருத்தலத்திலேயேத் திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்ற வேண்டுதலை வைத்திருந்தார் குருவம்மா. அதைத் தொடர்ந்து அவர்களின் திருமணம் மாவூற்று வேலப்பர் கோவிலில் இன்று காலை நடந்து முடிந்திருந்தது.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ஆதித்யன் – ஆரணி திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்க, மணமக்கள் இருவரும் கோவிலை வலம் வந்து கொண்டிருக்க, நிக்கியும் ஆகாஷும் அவர்களை வம்பிழுத்துக் கொண்டு உடன் நடந்து கொண்டிருந்தனர்.
ஆதனின் உடல்நிலை ஓரளவிற்கு சரியாகிவிட்டது என்றாலும், கோவிலைச் சுற்றி அதிகம் நடக்க வேண்டாம் என்பதால், அவனை ஓரிடத்தில் அமரவைத்துவிட, அவனுக்கு துணையாக கதிர் இருந்து கொண்டான்.
நிக்கியை கண்டு கொள்ளாமல் ஆரணியிடம் மட்டும் பேசிக்கொண்டு சென்ற ஆகாஷைப் பார்த்து பெருமூச்சு வந்தது ஆதனுக்கு. அதைப் பார்த்த கதிர் “என்னடா மூச்செல்லாம் பெருசா இருக்கு, ஒழுங்கா இருந்திருந்தா இன்னைக்கு உன் பொண்டாட்டி கூட நீயும் ரவுண்ட்ஸ் போயிருப்ப இல்ல..” எனக் கிண்டலடிக்க,
“டேய் நீ வேற, எல்லாரும் மறந்து போனத ஞாபகப்படுத்தாத, ஆதி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா எங்கிட்ட பேசுறான், மறுபடியும் நீ அவனை முருங்கை மரத்துல ஏத்தி விட்டுடாத, என்னோட வருத்தமெல்லாம் ஆகாஷை வச்சு தான். பாவம் அவன் எங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தான், அத நாங்களே கெடுத்துட்டோம், அதுலயும் நான் செஞ்சது தான் மன்னிக்கவே முடியாத தப்பு, யாரைப்பத்தியும் யோசிக்காம செஞ்சிட்டேன், கொஞ்சம் யோசிச்சிருந்தாலும் நிக்கியும் அந்த தப்பை செஞ்சிருக்க மாட்டா. இப்போ வேற வழியே இல்லாம, எல்லாரும் ஒரு வருத்தத்துல கோபத்துல எங்க கல்யாணத்த நடத்தின மாதிரி ஆகிடுச்சு. அதுதான் நிக்கியை ரொம்பவே கஷ்டப்படுத்துது. ஆரம்பத்துலயே ஆகாஷ் இப்படியெல்லாம் ஆகும்னு சொன்னான்தான். ம்ச் நான்தான் முட்டாள் மாதிரி.” என என்ன சொல்ல என்றுவிட்டு வருத்தப்பட,
“விடு ஆது எல்லாம் சரியாகும், இந்த நிலையை நீங்கத் தாண்டித்தான் வரனும். நீயும் நிக்கியும் வாழ்ற வாழ்க்கைதான் அவங்களுக்கு சரியான பதிலா இருக்கும், ரொம்பவே குழப்பிக்காம லைஃப ஸ்டார்ட் பண்ணுங்க ஆது, ஆகாஷ் அவன் சீக்கிரம் சரியாகிடுவான். அதெல்லாம் நிக்கி சரிபண்ணிடுவா.. சோ நோ டென்சன், நோ வொரிஸ் சரியா…” என நண்பனை ஆறுதல் படுத்த,
இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு நிக்கி ஆகாஷைப் போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த இருவரும் “ஆரம்பிச்சுட்டாடா..” என சிரித்துக் கொண்டனர்.
“ஹேய் விடுடீ.. விடுடீன்னு சொல்றேன்ல, எங்கிட்ட உன்னை யார் பேசச் சொன்னா, நீ யார் முதல்ல..” என நிக்கியின் அடியில் இருந்து தப்பித்துக் கொண்டே ஆகாஷ் அவளிடம் சீற, ஆதியும் ஆரணியும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதில் கடுப்பானவள் “இப்போத்தானே இப்படி பேசாதன்னு சொன்னேன், ஒருதடவை சொன்னா கேட்கமாட்டியா.. என்னைப்பத்தி எல்லாம் மறந்துடுச்சு போல உனக்கு, சரி நாம செஞ்சதும் தப்புத்தானேன்னு உங்கிட்ட வந்து கெஞ்சிக்கிட்டே இருந்தா ஓவரா மிஞ்சிட்டு போற.. என்ன திமிரா? திமிர்தானே உனக்கு. சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ..” என ஆதித்யனின் பின்னால் நின்றிருந்தவனின் தலையில் நங்கென்று கொட்ட,
அது கொடுத்த வலியில் “ப்பிசாசு.. ஒழுங்கா ஓடிரு.. உங்கிட்ட நான் பேசவே வரல. உன்னை மாதிரி ஒரு கோழைக்கிட்டயும், சுயநலம் பிடிச்சவக்கிட்டயும் பேச எனக்கு பிடிக்கவே இல்ல. ஒன்னுமே நடக்காத மாதிரி சும்மா சீன் போட்டுக்கிட்டு” என ஆகாஷ் பட்டென்று சொல்ல, அதுவரை இருந்த அழகான சூழல் சட்டென்று இறுக்கமாக மாறியது.
அதில் நிக்கியின் முகம் இயலாமையையும், குற்றவுணர்ச்சியையும் காட்ட, பொங்கி வந்த அழுகையை அடக்கி “ஸாரி..” என்றபடியே ஆதனை நோக்கி திரும்பப் போக, அதற்குள் அவளின் கையைப் பிடித்து இழுந்திருந்தாள் ஆரணி.
“அறிவிருக்கா உனக்கு.. இப்படியே நீ அழுது வடிஞ்சிட்டு போனா ஆது என்ன நினைப்பான், இந்த சோக மூஞ்சியப் பார்த்து அவன் ஃபீல் பண்ணவா, கொஞ்சமும் அறிவே கிடையாது, எல்லாத்துக்கும் அவசரம். இப்போ இவன் என்ன சொன்னான்னு நீ மூஞ்ச மூனு மீட்டருக்கு அப்பர்ல வச்சிருக்க, ஆகாஷ் சொன்னதுல என்ன தப்பு. நீயே சொல்லு..” என ஆரணியும் ஆரம்பிக்க. நிக்கியின் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தே விட்டது.
கண்களைத் துடைத்தபடியே “ஸாரி..” என மீண்டும் சொல்லிவிட்டு முன்னே நடக்கப்போக.
“ம்ச்.. ஆரு அவளே தப்பு செஞ்சிட்டோமேனு வருத்தத்துல தானே இருக்கா.. அந்த நேரம் ஆதுக்கு ஆக்சிடென்ட்ன்னு தெரிஞ்சதும், அவளுக்கு என்ன செய்யன்னு தெரியாம செஞ்சிட்டா, அதுவும் அத்தை அவக்கிட்ட சண்டைப் போட்டு பிரச்சினை செஞ்சிக்கிட்டு இருக்கும் போது அவளும் என்ன செய்வா. அவ செஞ்சது தப்புன்னு அவ உணர்ந்தா போதும். இப்படி எல்லாரும் சேர்ந்து அவளை சொல்லி, குத்திக் காட்டாம இருந்தா போதும், தப்பு செய்யாதவங்க யாரும் கிடையாது. செஞ்ச தப்பை உணர்ந்து வர்ரவங்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது.. இனி நீங்க ரெண்டு பேரும் அவக்கிட்ட இப்படி பேசாதீங்க.” என ஆதித்யன் கண்டனமாகச் சொல்ல, “ஸாரி நிக்கி..” என ஆரு உடனே அவளிடம் கேட்க, அவளோ ‘பரவாயில்ல’ என்பது போல் ஒரு தலையசைப்புடன் நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
ஆகாஷோ நிக்கியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். எந்தக் கவலையும் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருந்தவள், அழுகை என்றால் என்னவென்றேத் தெரியாமல் வளர்ந்தவள், இன்று சாதாரண ஒரு பேச்சுக்கு கூட முனுக்கென்று அழுது விடுகிறாள்.. எல்லோரும் சேர்ந்து ரொம்பத்தான் படுத்தி விட்டோமோ என்று யோசிக்க, ‘ஆம்’ என்றுதான் விடை கிடைத்தது.
ஆனாலும் அவள் செய்த முட்டாள்தனத்தை இப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தையும் அவர் பங்குக்கு அவளை மிகவும் வாட்டியெடுத்து விட்டார். எல்லோரும் அவளிடம் பாராமுகம் காட்டியிருந்தாலும், நானாவது அவளுடன் இருந்திருக்க வேண்டும். நிச்சயம் என்னை அதிகம் தேடியிருப்பாள். அதைச் செய்யாமல் நானும் கஷ்டப்படுத்திவிட்டேனே, முதலில் அதை சரிசெய்ய வேண்டும் என நினைத்த, அடுத்த நொடி நிக்கியை நோக்கி ஓடியவன், அவள் திமிரத் திமிர தோளைச் சுற்றி கைகளைப் போட்டு நெறுக்கிக் கொண்டான்.
“என்ன கத்திரிக்கா மேடம் ஒரு வார்த்தை சொன்னா பொறுத்துக்க மாட்டீங்களா.. உடனே கிளம்பி போறீங்க..” என வம்பிழுக்க,
“நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணேன் தெரியுமா.? நீ பேசக்கூட இல்ல, சாரி நான் செஞ்சது தப்புத்தான், அதுக்காக நீ என்னை விட்டுடுவியா.” என்றவளுக்கு அடக்கி வைத்த கண்ணீர் மீண்டும் கொட்ட ஆரம்பித்தது.
“ஸாரி நிக்கி.. இதெல்லாம் நீ சொல்லனும்னு அவசியமே இல்ல, எனக்குப் புரிஞ்சதுதான். ஆனா நீ செஞ்சது.. ம்ப்ச் விடு இனி எந்த சூழ்நிலையிலயும் இப்படி ஒரு முடிவை நீ எடுத்திடக்கூடாது. புரியுதா..” என்றவன் அவள் கண்களைத் துடைத்துவிட்டு, அவளை சிரிக்க வைத்து, அதன்பிறகுதான் ஆதனிடம் அழைத்து வந்தான்.
மனைவியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும் தெளிவும் அனைத்தும் சரியாகிவிட்டது என்பதை உணர்த்த, அவன் முகத்திலும் புன்னகைத் தோன்றியது. அதற்குள் மணமக்களும் வந்துவிட, அந்த இடமே கலகலப்பாக மாறிவிட்டது.
அதிகாலைத் திருமணம் என்பதால், ஊர் பெரியவர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே வந்திருந்தனர்.
ஏற்கனவே பேசி வைத்தது போல காலையில் திருமணம், மாலையில் இரு ஜோடிகளுக்கும் வரவேற்பு என்றிருக்க, அதற்கான வேலைகள் வேறு இருக்க, கோவிலில் இருந்து உடனே கிளம்பியிருந்தனர்.
கதிர் காரை ஓட்ட அவனுக்கு அருகில் ஆகாஷ், முன்பக்கம் ஆதித்யன் – ஆரணி பின்னே வசதியாக ஆதன் ஒரு சீட்டிலும், எதிரில் நிக்கியும் அமர்ந்து கொள்ள பயணம் வீட்டை நோக்கி பறந்தது.
நேரத்திலேயே அனைவரும் எழுந்து விட்டதால் பின்னே இருந்த இருவரும் ஆளுக்கொரு பக்கம் தூங்க ஆரம்பிக்க, கதிரும் ஆகாஷும் தொழில்பற்றி பேசிக்கொண்டே வர, ஆதித்யனின் தோளில் சாய்ந்தபடி ஆரணிக்கும் நல்ல உறக்கம்.
மனைவி மேலிருந்து வந்த மல்லிகையின் மனமும், மஞ்சளின் வாசமும் அவனுக்குள் மெல்லிய சலனத்தை உண்டாக்க, அவளது காதோர முடிகளை ஒதுக்கியவன் அந்த முகத்தையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
காதல்! அது இந்த நிமிடம் வரை ஆரணியின் மேல் அவனுக்கு இருக்கிறதா இல்லையா தெரியாது. ஆரணியை நான் ஏமாற்றுகிறேனா என்றால் இல்லை. கடைசி வரைக்கும் இப்படியேதான் இந்தக் குழப்பத்துடனே தான் என் நாட்கள் கழியுமா என்றாலும் இல்லைதான். காதலனாக நான் தோற்றுப் போனாலும், ஒரு நல்ல கணவனாக நான் நடந்து கொள்வேன். நிச்சயம் சரியாகிவிடும், இல்லை சரியாக்கிக் கொள்வேன். என மனதில் ஆயிரம் கேள்வி பதில்கள்.
ஆனால் அதையெல்லாம் தற்போது ஒதுக்கி தூரமாய் வைத்துவிட்டு தனக்காக இல்லையென்றாலும் தன்னையே உயிராக நினைக்கும் தன்னவளுக்காக, தன் மனைவியானவளுக்காக இந்த திருமணத்தை ஆவலாகத்தான் எதிர்பார்த்தான் ஆதித்யன்.
தனக்காகவே தன் இயல்பைவிட்டு மெனக்கெடுகிறான் என்பது ஆரணிக்கும் புரியத்தான் செய்தது, அவளது இந்த புரிந்தன்மையே கூடிய விரைவில் அனைத்தையும் சரியாக்கிவிடும் என்ற நம்பிக்கையை மெல்லத் துளிர் விட செய்தது அவனுக்குள். அதனாலோ என்னவோ மிகவும் இயல்பாகவே திருமண நிகழ்வில் இருந்தான் ஆதித்யன்.
சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து உறவுகள் புடைசூழ வீட்டிற்கு வந்தவர்களை, ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து பாலும் பழமும் கொடுத்து அமர வைத்தார் குருவம்மா.
சில நிமிடங்களில் “அப்பத்தா எனக்கு கொஞ்ச நேரம் படுக்கனும், இடுப்பு வலியே எடுத்துடுச்சு ப்ளீஸ்” என அவர் காதைக் கடித்தாள் ஆரணி.
“வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் உக்காரு, ஊர்க்காரங்க எல்லாம் வந்து போய் இருப்பாங்க, எல்லாம் சாப்பிட போனதும் ரெஸ்ட் எடுக்க போவியாம்” என அப்பத்தாவும் அவள் காதைக் கடிக்க,
“ம்ச்.. கெழவி மூனு நாளா என்னைத் தூங்கவிடாம சடங்கு, நலுங்குன்னு உயிர எடுத்துட்டு இப்பவும் காரணம் சொல்ற..” என்றால் எரிச்சல் கொஞ்சமும் குறையாமல்.
“ம்ம்.. என்னமோ எனக்குத்தான் கல்யாணம் மாதிரி இந்த அலுப்பு அலுத்துக்குற, உனக்குத்தான் கல்யாணம். நீதான் கஷ்டப்படனும். சிரமம் பார்க்காம மூனு நாளோட சேர்த்து நாளாவது நாளா இன்னைக்கும் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ, நாளைல இருந்து உன் இஷ்டம்தான்” என்றார் அவரும்.
“ப்ச்.. எரிச்சல் பண்ணாம போ கெழவி” எனப் பல்லைக் கடித்தாலும் முகத்தில் எதையும் காட்டவில்லை. காலையில் தோன்றிய அந்த புன்னகையும் வாடவில்லை.
அவள் சொல்வதும் உண்மைதான் மூன்று நாட்களாக, சடங்கு நலுங்கு என பாடாய்படுத்தியிருந்தனர். அதிலேயே பெண் அலண்டு போய்விட்டாள். இன்று கண்டிப்பாக ஓய்வு தேவை என்பதை வலித்த இடை சொல்ல, வேறுவழியில்லாமல் தான் அப்பத்தாவிடம் கேட்டாள். முகத்தைச் சுருக்கி வலியை என்ன செய்ய என்பது போல் நெளிய, அதைக் கவனித்த ஆதி தன் தாயை அழைத்தான்.
“என்ன கண்ணா..” என வந்தவரிடம்,
“ம்மா இவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. பாருங்க நெளிஞ்சிட்டே இருக்கா..” என்றான்.
“கண்ணா இப்போ எப்படி…”
“பரவாயில்ல அத்த, மேனேஜ் பண்ணிக்கிறேன்..” முகத்தைச் சுறுக்கியபடியேதான் பதில் தந்தாள் பெண்.
“கிழிச்ச.. எவ்ளோ நேரம் பெயின் தாங்குவ, வாயை மூடிட்டு சொல்றதை மட்டும் கேளு..” என மனைவியிடம் காய்ந்தவன், “ம்மா முதல்ல கூட்டிட்டு போய் சாப்பிட கொடுத்துட்டு, பெயின்கில்லர் கொடுங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும், வர்ரவங்களுக்கு நீங்க பதில் சொல்லுங்க.. இல்ல அம்மத்தாவை விடுங்க. வலிக்குதுன்னு சொல்றா ஆளாளுக்கு ரீசன் சொல்லிட்டு இருக்கீங்க.. போங்க” என முடித்துவிட, அவருக்குமே ஆரணியைப் பார்த்து பாவமாகத்தான் இருந்தது. அதனால் அழைத்துக் கொண்டு அறையில் விட்டவர், ரம்யாவிடம் சென்று சொல்லி, சாப்பிட வாங்கி சென்றார்.
“என்ன அம்மு..” என அவரின் பின்னே ரம்யா வர,
“ம்மா.. நத்திங்க்.. கொஞ்சம் பெயின் உக்கார முடியல அவ்வளவுதான். ஸ்ட்ரெயிட்டா படுத்தா பெட்டரா இருக்கும் அவ்ளோதான்.” எனவும்,
“சரி சாப்பிடு. நான் அப்பாக்கிட்ட சொல்லி மாத்திரை கொண்டு வர்ரேன்..”
“ம்மா. அவரையும் பயப்படுத்தாதீங்க, நான் வச்சிருக்கேன், அதையேப் போட்டுக்குறேன்..”
“சரி அப்பத்தாவை வரச் சொல்லவா..”
எத அந்த கெழவியா சோலி முடிஞ்ச், தேச்சி விடறேன்னு என்ன பஞ்சராக்கி விட்டுடும் என மனதுக்குள் அலறியவள் “நோ ம்மா.. நான் பார்த்துக்குறேன். நீங்க போங்க..” என்று அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டாள்.
“சரி எதுவும் வேனும்னா கூப்பிடு..” என்று பவித்ராவும், ரம்யாவும் வெளியில் வர, அதற்காகவே காத்திருந்தது போல உள்ளே நுழைந்தான் ஆதி கையில் அயோடக்ஸ் டப்பாவுடன்.
“இந்த புடவையை மாத்திக்கலாம்ல, இப்படியே இவ்வளவு நகையோட எப்படி படுக்குறது. அழுந்தும்..”
“மாத்த முடியாது. யாராச்சும் வந்துட்டே இருப்பாங்க.. அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.”
“ம்ம்.. இந்த ஆயின்ட்மென்ட் தடவினா பெட்டரா இருக்கும்னு நினைச்சேன். இப்போ எப்படி தடவ..” என அவளையும், புடவையையும் மேலும் கீழும் பார்க்க,
“ம்மச் வேண்டாம். பிறகு தைலம் வாசனை வேற வரும். அப்படியே அமுக்கிவிட்டா நல்லாருக்கும், அப்பத்தாவை இல்லைன்னா அம்மாவை வரச் சொல்றீங்களா..” என வலியில் முனங்க.
“என்னடி வலி அதிகமாகுதா.. டாக்டர்கிட்ட போலாமா.?”
“வேண்டாம்.. சரியாகிடும்.”
“என்ன சரியாகும். எப்படி சரியாகும். ஈவ்னிங்க் ரிசப்ஷன் வேற, அதுலயும் நிக்கனும்..” எனவுமே அவள் முகம் ஒரு இயலாமையைக் காட்ட, “சரி திரும்பி படு நான் அமுக்கிவிடறேன், எப்படி இருக்குனு பார்த்துட்டு ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றவனின் முகத்தில் தெரிந்த சீரியஸ்னஸில் வேண்டாம் என்று சொல்ல வந்தவள் அமைதியாகத் திரும்பிப் படுக்க, ஒட்டியானத்தை மட்டும் கழட்டியவன், புடவையை லேசாகத் தளர்த்தி மெல்ல அவளது முதுகுப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.
முதலில் வலியில் உடலைக் குறுக்கியவள், கணவனது வருடலிலும், அழுத்தத்திலும் வலி குறைய ஆரம்பிக்க, உடலும் மெல்ல தளர கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, தானாக உறக்கத்தின் பிடிக்குள் சென்றாள்.
சிறிது நேரம் அமர்ந்திருந்த ஆதி, அங்கே இருந்த சோபாவில் சென்று படுத்து அவனும் உறங்கிவிட்டான். அப்போது உள்ளே வந்த குருவம்மாவின் கண்களில் இது பட, யோசனையாகப் பார்த்தவர், சத்தம் வராமல் கதவைச் சாற்றிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
இங்கு ஆதனின் அறையில் அவனது அனைப்புக்குள் இருந்தாள் நிகிதா. வந்த நேரம் தொட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் மனைவியை தன் கையணைப்பிலேயே தான் வைத்திருக்கிறான் ஆதன். சில நொடிகள் என்றாலும் அவள் கலங்கிய விழிகளைப் பார்த்ததில் இருந்து மனம் வேதனையின் உச்சத்தைத் தொட்டு வந்தது என்னமோ உண்மை.
தன்னால் தான் இத்தனையும் என்ற குற்றவுணர்ச்சி வேறு. ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும், கேட்டாலும், புரிந்தாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்தது.
மனைவியின் கண்ணீருக்கு காரணமான ஒரு கணவன், தான் ஒரு நல்ல கணவன் என்ற தகுதியை இழந்து விடுகிறான். நானும் ஒரு நல்ல கணவன் இல்லையோ என்ற யோசனை. தன் மனைவிக்கு அப்படி ஒரு அங்கீகாரத்தை வாங்கிக் கொடுக்கவில்லை என்ற நிதர்சனம் வேறு மனதை கிழித்தது.
அனைப்பில் வைத்திருந்தவனின் உடல் அடிக்கடி நடுங்குவதைக் கண்டவள், அவன் மார்பில் தன் தலையால் மெல்ல முட்ட ஆராம்பித்து, ‘இப்போ என்னாச்சு’ என அவனின் நெஞ்சில் இதழ் வைத்துக் கேட்க,
அதில் ஆதனின் உடல் சூடேற, இதுவரை இருந்த இறுக்கம் சற்று தளர, “நான் உனக்கு ரொம்ப கஷ்டத்தக் கொடுத்துட்டேன் நிக்கி, அது எனக்கு எவ்வளவு குற்றவுணர்ச்சியா இருக்கு தெரியுமா.? என்னாலத்தானே உங்க வீட்டுல உனக்கு கெட்ட பெயர். அத்தையும் மாமாவும் இப்போவரைக்கும் உங்கிட்ட முகம் கொடுத்து பேசல, ஆகாஷ் கூட உன்னை அவாய்ட் பண்ணான் இல்ல.”
“நிம்மதியா சந்தோசமா இருந்த உன்னை காதல் அதுஇதுன்னு சொல்லிக் கஷ்டப்படுத்தி, உன் குடும்பத்துல இருந்தே பிரிச்சிட்டேன். பெத்தவங்களோட சாபம்தான் போல, நம்ம வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. சாரிடி. வெரி சாரி நிக்கி.” என்றவனின் இதழைத் தன் விரல்களால் மூடியவள், “ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற, இது நமக்கான வாழ்க்கை. இந்த வாழ்க்கையை எல்லாரும் பயந்த மாதிரி இல்லாம, அதிசயமா பார்க்குற மாதிரி, வியந்து பார்க்குற மாதிரி வாழனும் ஆது. அம்மா எங்கிட்ட பேசாதது எனக்கும் கஷ்டம் தான். ஆனா எங்கிட்ட பேசாம இருக்குறதுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா.? அந்தக் கஷ்டத்தை அவங்களுக்கு கொடுத்துட்டேன்னு தான் எனக்கு மனசு வலிக்குது. என்னை நல்லா வளர்க்கனும்னு எனக்கு அப்புறம் குழந்தையே வேண்டாம்னு அப்பா சொல்லிட்டாராம், அவங்களுக்கு நான்தான் உலகம். அந்த உலகத்தை அழிச்சிட்டா கோபம் வராதா சொல்லு,”
“எனக்காக அவங்க செய்த தியாகத்துக்கு நான் அசிங்கத்தைதான் தேடிக் கொடுத்துருக்கேன். மத்தது எல்லாம் கூட மன்னிச்சிடலாம். ஆனா இதை எப்படி மன்னிக்க முடியும் அவங்களால. அவங்க மனசும் ஒருநாள் மாறும் ஆது. அப்போ கண்டிப்பா நம்மக்கிட்ட நல்லா, அன்பா நடந்துப்பாங்க. அதுவரைக்கும் அவங்களுக்கு நாம டைம் கொடுத்துதானே ஆகனும். முடிஞ்சதைப் பத்தி பேசி ஏன் ரெண்டு பேரும் இந்த நாளோட இனிமையைக் கெடுத்துக்கனும். எல்லாம் சரியாகும்னு நம்புவோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்கு இருக்கா.? இருந்தா இவ்ளோ ஃபீல் பண்ணமாட்ட..” என்றவள் அப்போதும் அவன் மார்பில் உதடுரசத்தான் பேசிக் கொண்டிருந்தாள்.
மனைவியின் பேச்சில் அவனுக்கும் அனைத்தும் புரியத்தான் செய்தது. எல்லாம் உடனே சரியாகுமா என்றால் இல்லைதான். அதற்காக சிலகாலம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொறுத்துக் கொள்ள முடிவு செய்தவனுக்கு அப்போதுதான் மனைவியின் இதழுரசல் கவனத்தில் பட, முகம் புன்னகையைப் பூசியது.
இப்போதெல்லாம் அதுதான் அவள் இடம் போல, அறைக்குள் இருக்கும் போதெல்லாம் தன் மார்பிலேயேதான் சாய்ந்து கொள்கிறாள். அவனுக்கும் அதுவே தேவை என்பது போல அனைத்துக் கொள்கிறான். இப்போதும் அதுவே நடக்க, மனைவியின் பின்னங்கழுத்தில் விரலால் வருடியவன் காதோரமாய் கொண்டுவர, அதில் அவள் உடல் கூசிச் சிலிர்த்து, உதடு துடிக்க அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் துடித்த இதழ்களைத் தனக்குள் மொத்தமாக விழுங்கியவன், மனைவியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆரம்பித்தான்.
மகளுக்கும், மருமகனுக்கும் உணவை எடுத்துக் கொண்டு வந்த தாரணியின் காதில் இவர்களின் பேச்சு விழ, மகளை நினைத்து வருத்தம் உண்டானாலும், பெருமைதான். தன் ஒரே மகள் இப்படி செய்துவிட்டாளே என்ற கோபம் அது இப்போதும் உண்டுதான். ஆனால் அதற்காக உயிரை விடும் அளவிற்கு சென்றதுதான் பெற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. யாரோ ஒருவனுக்காக ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றவர்களை மறந்து உயிரை விடுவதா என்ற கோபம். தங்களை உதாசீனப்படுத்திவிட்டு, தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாளே என்ற வருத்தம்.
அப்படியானால் அவளுக்கு நாங்கள் முக்கியம் இல்லையா என்ற ஆதங்கம், சரி போகட்டும் இனி அவளுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற கோபம் எல்லாம் சேர்ந்துதான் மகளைத் தள்ளி வைத்தது.
ஆனால் திருமணப் பேச்சை எடுத்த நாளில் இருந்து, அதே வீட்டில் ஆரணிக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் பார்க்கும் போது ஒரு தாயாக அவருக்கு மிகுந்த வருத்தமும் கோபமும். அதற்காக ஆரணியின் பொறாமை எல்லாம் இல்லை. தன் ஒற்றை மகளுக்கு இப்படி செய்து பார்க்க முடியவில்லையே ஆதங்கம்தான் மிஞ்சிருந்தது.
அதனாலே இருவருக்கும் ஒன்றாகவே வரவேற்பு வைக்கலாம் என்று பாண்டியன் சொல்லும் போது மறுக்கத் தோன்றவில்லை. அதோடு ஆதனும் சரி அவன் வீட்டில் உள்ளவர்களும் சரி தங்கள் கோபத்தை மதித்து நடந்து கொள்வது புண்பட்ட நெஞ்சை இதமாக்கியது எனலாம். அதனாலே இந்த விழாவில் கோபத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மகளுக்கு செய்ய வேண்டியதை நல்லமுறையில் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டனர் நிகிதாவின் பெற்றோர்.
அதுமட்டுமில்லாமல் காலையில் ஆகாஷும் கோவிலில் நடந்ததைச் சொல்லியிருக்க மகள் மேல் இருந்த கோபமெல்லாம் சுத்தமாக வடிந்தே போயிற்று. இனியும் அவளை ஒதுக்கி வைக்கக்கூடாது என மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்ட பிறகே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் தாரணி.
எடுத்துச் சென்ற உணவு அப்படியேத் திரும்பியிருப்பதைப் பார்த்த ரம்யா, தாரணியைக் கேள்வியாகப் பார்க்க, “ரெண்டு பேரும் தூங்கிட்டாங்க போல ஆரும்மா, தட்டிப் பார்த்தேன் திறக்கல, அதான் வந்துட்டேன்..” என்றவர், பக்கத்தில் நின்றிருந்த பவித்ராவின் கையைப் பிடித்து “உங்ககிட்ட மன்னிப்பு கேட்கக்கூட எனக்கு தகுதியில்ல, ஆனாலும் கேட்குறேன் என்னை மன்னிச்சிடுங்க அண்ணி. அன்னைக்கு ஏதோ கோபத்துல அப்படி பேசி நடந்துக்கிட்டேன், இன்னைக்குப் பார்க்கும் போது என் பொண்ணுக்கு இதை விட நல்ல குடும்பம் கிடைக்காதுன்னு மனசு அடிச்சு சொல்லுது. நான் என்ன பேசியிருந்தாலும் அதை மறந்து, மனசு இருந்தா மன்னிச்சிடுங்க அண்ணி..” எனவும்,
“அட என்ன என்ன நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க, எனக்கு ஏன் கோபமெல்லாம் வரனும், கண்டிப்பா இல்ல அண்ணி. நெறைய நெறைய வருத்தம் இருக்கு, அதுவும் ஆதன் மேல மட்டும்தான். நீங்க எங்களைப் புரிஞ்சிக்கிட்டதே போதும் அண்ணி. மத்தபடி மன்னிப்பு அதெல்லாம் எதுவும் வேண்டாம். நடந்த எல்லாத்தையும் மறந்துடலாம். இனிமேலாச்சும் எல்லாரும் சந்தோசமா இருக்கலாம்.” என பவித்ராவும் சொல்ல,
“உண்மையை சொல்லனும்னா நிக்கிம்மா, ஆருக்கு ஒவ்வொரு சடங்கும் செய்யும் போதும் நான் எவ்வளவு வேதனைப்படுவேன் தெரியுமா. அந்த வலி உங்களுக்கும் எந்தளவுக்கு இருக்கும்னு தெரியும். அதனாலயே என்னால எதுக்கும் முன்ன நின்னு செய்ய முடியாம போகும். என்ன இருந்தாலும் நிக்கியும் எனக்கு ஒரு பொண்ணுதான, அவளைப் பார்க்க வச்சு இவளுக்கு செய்றது ரொம்ப கொடுமை. இனி அப்படி எதுவும் இருக்காது. எல்லாம் முடிஞ்சி போச்சு. இப்போதான் நிம்மதியா இருக்கு..” என ரம்யாவும் சொல்ல, தாரணியின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் கட்டுப்பாட்டையும் மீறி வழிந்தது.