முத்தமழை – 38
இரண்டு நாட்கள் எப்படி கழிந்ததென்று தெரியவில்லை யாழினிக்கு. இந்த வீடே சூனியமாகிப் போன உணர்வு பெண்ணுக்கு.
ராஜலட்சுமி யாழினியிடம் பேசுவதே இல்லை. சொக்கலிங்கமும், பாட்டியும் யாழினியை முடிந்தளவு சமாதானம் செய்து பார்த்தனர்.
ஆனால் அனைத்தும் தோல்வியைத்தான் தழுவியது.
சுந்தரும், சுமியும் இதில் பெரிதாக எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவர்களுக்கு வெற்றியின் மேல் நல்ல அபிப்ராயம் இருந்தாலும், தங்களுக்கு சமமானவர்கள் இல்லையென்று ராஜலட்சுமியை ஒட்டிய எண்ணம்தான் அவர்களுக்கும்.
அதனால் எதிலும் தலையிடாமல் அமைதியாகவே இருந்தனர்.
அன்று வீட்டில் நடந்ததை வல்லி அழைத்து மருத்துவமனையிலிருந்த கர்ணனுக்கு சொல்லியிருக்க, உடனே அவர்களை மருத்துவமனைக்கு வர வைத்து பேசி சமாதானம் செய்து, தன் அன்னை பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுத்தான் அனுப்பியிருந்தான் கர்னன்.
“வெற்றி அவ செஞ்சதை சரின்னு சொல்லல, அதே நேரம் தப்பும் கிடையாது, அடுத்து என்ன செய்யன்னு தெரியாம பயத்துல உனக்கு கூப்பிட்டு சொல்லிட்டா,.. ஆனா நீயாவது எனக்கு சொல்லிருக்கலாமே. நான் என்ன செய்றதுனு உனக்கு சொல்லிருப்பேன்..” என வெற்றியிடம் சற்று கோபமாகத்தான் கர்ணன் பேசியிருந்தான்.
அதோடு அடுத்தநாளே மனைவியை அழைத்துச் சென்று, சிவகுருவிடம் மீண்டும் பேசி, மனைவியை விட்டு சீதாவையும் சமாதானம் செய்து தான் வந்திருந்தான்.
ஆனால் அன்றிருந்து வெற்றியிடம் ஒரு ஒதுக்கம், அவன் யாழினிக்கு அழைத்துப் பேசவே இல்லை. அவனுக்கு, ராஜலட்சுமி தன் பெற்றோரை அவமதித்தது தான் அதீத கோபத்தைக் கொடுத்தது.
யாழினி பேச்சைக் கேட்டு உடனே வந்திருக்கக்கூடாதோ, கர்ணனிடமும், வீட்டிலும் பேசி பின் வந்திருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து யோசித்தான்.
அதனால் அன்றிரவே மீண்டும் சென்னை கிளம்பிவிட்டான். வந்தனாதான் அங்கு நடந்ததை யாழியிடமும், வல்லியிடமும் கூறியிருந்தாள்.
இத்தனை களேபரத்தில் வல்லியால் தன் கர்ப்ப காலத்தை மகிழ்வாக கொண்டாட முடியவில்லை.
திடீரென இத்தனை பொறுப்புகளை சுமப்பது அவளுக்கும் சிறு சுனக்கத்தைக் கொடுக்கத்தான் செய்தது.
கணவனின் அன்பும், அரவனைப்பும் இல்லையென்றால் அவளால் நிச்சயம் தாக்குப் பிடித்திருக்க முடியாது.
வெற்றி வீட்டினர் வந்து சென்ற அடுத்தநாள் காலையில் கிளம்பிச் சென்ற ராஜலட்சுமி அன்று மாலைதான் வீடு வந்தார்.
மனைவியின் மூலம் வெளியில் சென்றிருக்கிறார் என்று தெரிந்தாலும், வசந்தின் மூலம் எங்கு சென்றிருந்தார் என்று தெரிந்துகொண்டான் கர்ணன்.
இனி அமைதியாக இருக்கமாட்டர் என்று கர்ணனுக்கு புரிந்தது.
அன்று காலை மிகவும் பரபரப்பாக கிச்சனில் நின்று ஆட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார் ராஜலட்சுமி.
இன்று ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்று மட்டும் வல்லபிக்கு புரிந்து போனது.
கணவனுக்கான காபியுடன் அமைதியாக மாடியேறினாள். அவளின் முகத்தில் தெரிந்த குழப்பமும், யோசனையும் ராஜலட்சுமிக்கு குதுகலமாக இருந்தது.
‘என் பொண்ணை கைகுள்ள போட்டு, எங்க எல்லார் மூஞ்சிலயும் கரியைப் பூசனும்னு நினைச்சல்ல, இன்னைக்கு உன் மூஞ்சுல நான் கரியை பூசுறேன் பாருடி..’ என மனதுக்குள் கருவிக்கொண்டே வேலைகளைப் பார்த்தார்.
எப்போதும் உற்சாகமாக அறைக்குள் வரும் மனைவி இன்று அமைதியாக வருவதே கர்ணனுக்கு உறுத்தலாக இருந்தது.
அவளே சொல்லட்டும் என கார்த்திருக்க, வாயைத் திறக்கவே இல்லை வல்லபி.
“என்ன அம்மு..?” என மனைவியின் கரம் பற்றி தன்னோடு அமர வைத்தான்.
‘சொல்லலாமா? வேண்டாமா?’ என நொடி நேரம் யோசித்து பின் கீழே நடக்கும் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள் வல்லபி.
“எனக்கு ரொம்ப பயம இருக்கு பாவா.. அத்தை ஏதோ பெருசா ப்ளான் பண்ணிட்டாங்க. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு நடக்குது. சுமிக்காவுக்கும் தெரியும் போல, ஆனா வாயையே திறக்கல.. ஏற்கனவே யாழி உடைஞ்சு போயிருக்கா.. இந்த நேரத்துல இதெல்லாம் தேவையானு தோணுது பாவா. வெற்றிண்ணாவும் யாழி கூட பேசலன்னு நினைக்கிறேன்… அவளுக்கு டைம் கொடுக்கனும் பாவா.. அவளை சரி பண்ணிட்டு என்ன செஞ்சாலும் ஓக்கே.. ஆனா இப்படி சடனா எல்லாத்தையும் செய்றது சரியில்ல பாவா..” என்றவளுக்கு குரல் இப்போதே உடைந்து விடுவேன் என்று சொல்லாமல் சொன்னது.
“வனியோட ரிலேடிவ்னு அம்மா சொல்லிருந்தாங்கல்ல, அங்க இருந்து வராங்க, நம்ம யாழியைப் பொண்ணு பார்க்க. எல்லாம் அவங்களே பேசி முடிவு பண்ணிட்டாங்க. அப்பாவுக்கு கூட தெரியாதுனு நினைக்கிறேன். இது சும்மா ஒரு ஃபார்மாலிடிக்காகத்தான் பண்றாங்க..” என்றவனுக்கும் இப்போது யாழினியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
“என்ன பாவா சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்..? யார் சொன்னா? இது தெரிஞ்சா யாழினி உடைஞ்சு போயிடுவா பாவா..” என தத்தளித்தாள் பெண்.
“அம்மு.. முதல்ல நீ இப்படி டென்சன் ஆகாத. அப்படியெல்லாம் யாழினியை நான் விட்டுடமாட்டேன். அவங்க என்ன நினைச்சாலும் அது நடக்காது. வெற்றிக்கும் யாழிக்கும் தான் கல்யாணம் நடக்கும். நீ இதெல்லாம் கண்டுக்காம கீழ போய் அப்பா கூட இரு.” என்றான் பொறுமையாக.
கணவனின் பொறுமையும் நிதானமும் மனைவிக்கு இல்லை. “பாவா.. உங்க பொறுமை அவளை கஷ்டபடுத்திடக்கூடாது, தப்பான முடிவை எடுக்க வச்சிடக்கூடாது..” என்றாள் காரமாக.
“அம்மு சொன்னா புரிஞ்சிக்கனும், அம்மா கோபத்துல பண்ணிட்டு இருக்காங்க, நாமளும் அதையே செஞ்சா சரியா வருமா? பொறுமையா எல்லாமே பண்ணலாம். நீ அமைதியா வேடிக்கை மட்டும் பாரு.. இப்போ அவங்க என்ன செய்யனுமோ செய்யட்டும்..” என்றான் இறுக்கமான குரலில்.
அந்த குரலை எதிர்த்து பேச முடியாமல் கீழே வந்தவள், யாழினியின் அறைக்குச் செல்ல அங்கு விடிந்தது கூட தெரியாமல் பால்கனியில் நின்று தொடுவானை வெறித்துக் கொண்டிருந்தாள் பெண்.
தான் வந்ததை கூட உணராமல் நிற்கிறாள் என்றால், எத்தனை மணி நேரமாக நிற்கிறாளோ என்ற எண்ணம் வர, “யாழி.. யாழி..” என தோழியை உலுக்க,
“ஹான்..” என திடுக்கிட்டு திரும்பிய யாழினி புரியாமல் வல்லபியைப் பார்த்தாள்.
“நீ இவ்ளோ பயந்துக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்காது யாழி, நீ தைரியமா இருக்கனும். உன் அண்ணா இருக்கார், அவர் உன்னை அப்படியே விட்டுட மாட்டார்.. அதை நீ நம்பனும்..” என தைரியம் சொல்ல, வல்லபி என்ன சொல்கிறாள் என்று மொழி புரியாத குழந்தைப் போல் தவித்து நின்றாள் யாழினி.
தோழியின் நிலை வல்லபியை வருத்த, “யாழி..” என்று அடுத்து பேசும் முன்னே “இப்படித்தான் பேசி பேசியே என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து விட்டுருக்கீங்க நீயும், உன் குடும்பமும். அது நடக்க ஒருநாளும் நான் சம்மதிக்கமாட்டேன். என் பொண்ணுக்கிட்ட நான் தனியா பேசனும், நீ முதல்ல வெளியே போ..” என முகத்திலடித்தாற் போல பேச, வல்லபிக்கு கோபத்தில் வார்த்தைகள் வாய் வரை வந்துவிட்டது.
“நீ போ வல்லி..” என்ற யாழினியின் குரலில் இருந்த இறுக்கமும், உறுதியும் கோபத்தை அடக்கி, வல்லபியை அமைதியாக வெளியேற வைத்தது.
“சொல்லுங்க..” என்ற மகளை நேருக்கு நேராகப் பார்த்தவர், “இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க.. பொண்ணு மட்டும் தான் பார்க்க வராங்க. அமைதியா அவங்க முன்னாடி வந்து நின்னுட்டு வந்துட்டா உனக்கு கொஞ்சம் டைம் கொடுப்பேன். இல்ல முடியாதுனு ஏதாவது ஏடாகூடம் பண்ணினா, இன்னைக்கு நிச்சயம் பண்ணி அனுப்பிடுவேன். உனக்கு எது வசதினு நீயே முடிவு பண்ணிக்கோ..” என்றார் தீர்க்கமாக..
“என்ன மிரட்டுறீங்களா? நான் இதுக்கு சம்மதிக்கலன்னா என்ன பண்ணுவீங்க..” என்றாள் யாழினியும் உறுதியோடு.
“உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்.. உன் அப்பாவை என்றதும் யாழினியின் விழிகள் பயத்தில் விரிந்தது.
“அவரையும் ஒன்னும் பண்ணமாட்டேன்.. ஆனா உன் அண்ணன், அவனோட பொண்டாட்டி, அவ வயித்துல இருக்குற குழந்தை இவங்களை நான் என்ன வேணும்னாலும் பண்ணலாம். நாளைக்கே உன் அண்ணிக்கு சூப்ல மருந்தை கலந்து கொடுத்து, அந்த மூனு மாசக் கருவை கூட கலைக்கலாம்..” என நக்கலாக கூற,
“ச்சீ.. நீங்க எல்லாம் மனுச ஜென்மமா? எப்படி கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம இவ்ளோ கொடூரமா பேச முடியுது.. அது நம்ம வீட்டு வாரிசு இல்லையா?” என்றாள் அழுகையும் வேதனையுமாக.
பயத்தில் வார்த்தைகள் திணறலாகத்தான் வந்தது.
“ஹான் நம்ம வீட்டு வாரிசா? என் வீட்டுக்கு ஏற்கனவே வாரிசு வந்தாச்சு. அந்த குழந்தை என் வீட்டு வாரிசு இல்ல.. என் வாரிசுன்னு நீயே முடிவு பண்ணிட்டா ஆச்சா..” என்றவர், “எதுக்கு இந்த செண்டிமெண்ட்? நான் சொன்னதை நீ கேட்கலன்னாதான், நான் இதெல்லாம் செய்வேனு சொல்றேன்.. நான் செய்யமாட்டேனு நினைக்காத, இங்க பார்த்தியா கருக்கலைப்பு பொடி, இப்பவே என்னால அந்த கருவை அழிக்க முடியும்..” என தன் புடவை முந்தானையிலிருந்து ஒரு மடிக்கப்பட்ட பேப்பரை எடுத்துக்காட்ட, சர்வமும் ஒடுங்கிப்போய் நின்றுவிட்டாள் யாழினி.
அடுத்து எதுவும் பேசவில்லை யாழினி. தாயின் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் நிச்சயம் சொன்னதை செய்வாள் என்று தெரிந்து போக, அமைதியாக அவர் சொன்னதைக் கேட்டு நடந்தாள்.
கர்ணனும் கிளம்பி கீழே வர, “யாழினியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க கர்ணா..” என பொதுவான ஒரு செய்தியாக அறிவித்தார் ராஜலட்சுமி.
“ராஜி நீ செய்றது எதுவும் சரியில்ல..” என்ற பாட்டியை,
“விடுங்க பாட்டி.. அம்மா செஞ்சா சரியாத்தான் இருக்கும். அவங்க பொண்ணுக்கு அவங்க செய்றாங்க, அதை தப்பு சொல்லாதீங்க..” என அடுத்து அவரை பேசவிடாமல் தடுத்தவன் “எப்போ வராங்க ம்மா..” என்றான் ராஜலட்சுமியிடம்.
“பத்து மணிக்கு மேல தான் நல்ல நேரம் இருக்குனு ஜோசியர் சொன்னார். அந்த டைமுக்கு இங்க இருப்பாங்க..” என்று பதில் சொன்னாலும், மூளை ‘இவன் ஏன் அமைதியா இருக்கான், வேற ப்ளான் பண்றானோ?’ என யோசித்தது.
“சுமி.. நீ போய் யாழி கூட இரு..” என மருமகளை மகளுக்குத் துணையாக அனுப்பிவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க, கணவனும் மனைவியும் அமைதியாக சொக்கலிங்கத்தின் அறைக்கு சென்று விட்டனர்.
மகனைப் பார்த்ததும் அந்த பெரியவருக்கு கண்கள் கலங்கிவிட, “ப்பா.. நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்காது.. தைரியாம அங்க வந்து உட்காருங்க..” என பொறுமையாக அவர் பயம் போக்கும்படி பேச, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார்.
சரியாக பத்து மணி, வீட்டின் ஹாலிங்க் பெல் அடிக்க “வந்துட்டாங்க..” என பரபரப்புடன் வெளியில் சென்று அவர்களை வரவேற்று அழைத்து வந்தார் ராஜலட்சுமி.
சுமியும், சுந்தரும் கூட ஆர்வமாய் வரவேற்றார்கள்.
ராஜலட்சுமியோடு வந்தவர்களைப் பார்த்ததும், வல்லிக்கும் கர்ணனுக்கும் கோபம் தலைக்கேறியது. சொக்கலிங்கம் இனி இதை தடுக்க முடியாது என்ற இயலாமையுடன் மகனைப் பார்க்க, மகனோ வந்தவர்களை கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இது யாருடைய திட்டம் என நொடியில் அனைத்தும் புரிந்து போனது அவனுக்கு..