Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 14

காதல் கசக்குதைய்யா – 14

by Vathani S

வர வர காதல் கசக்குதைய்யா – 14

தேனிக்கே வரமாட்டேன் என பயந்த பவித்ராவை ஒரு வழியாக பேசி, உருட்டி, மிரட்டி அழைத்து வந்திருந்தனர் ஆண்கள் மூவரும். தேனிக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. இங்க வந்த அவரால் இன்னும் மீனாட்சிபுரம் செல்லும் அளவிற்கோ, குடும்பத்தினரை எதிர்கொள்ளும் அளவிற்கோ தைரியம் இருக்கவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் கிளம்பிவிட்டு, நாளை நாளை என எல்லோரையும் டென்சன் ஏற்றிக் கொண்டிருந்தார். அவரது பயத்தை உணர்ந்தவர்களும், வேறு வழியில்லாமல் பொறுமையாக இருந்தனர்.

பவித்ரா இங்க வந்த மறுநாளே ஆரணியை அவருடன் பேச வைத்திருந்தான் ஆதித்யன். அவளும் அவர் வருத்தத்தைப் போக்கும்படி தன் பாணியில் கிண்டல் கேலி எனப் பேசி அவரை சந்தோசமாக மாற்ற முயற்சிப்பாள். அது ஒரு வகையில் நன்றாக வேலை செய்தது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அந்த மாற்றங்களை உணர்ந்த ஆதித்யன் அதனால் தான் அவரை இன்று வரச் சொல்லும் முடிவை எடுத்து அவளுக்கு அழைக்க, முழு அழைப்பும் போய் முடிந்தும் அவள் எடுக்கவில்லை.

‘கண்டிப்பா அந்த மரத்துலதான் தொங்கிட்டு இருப்பா, பார்த்துட்டு கூப்பிடட்டும், அப்புறம் இருக்கு.’ என மனதுக்குள் கருவியனுக்கு, பத்து நிமிடங்கள் கழித்து அவளே அழைக்கவும் புன்னகை பூத்தது, தன் மீசையை லேசாக வருடியவன் பக்கத்தில் இருந்த தம்பியிடம் கண்ணைக் காட்ட, ஆதனும் போனை வாங்கி ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டான். மொத்தக் குடும்பமும் அங்குதான் குழுமியிருந்தது.

போன் அட்டெனாகவும் “ஹலோ இந்தப் பக்கம் மிசஸ் ஆதித்யன் Here, Who is there speaking..” என்ற ஆரணியின் குரலில் அத்தனை துள்ளல்.

“ம்ம்ம் இந்தப் பக்கம் மிஸ்டர் ஆரணியோட பிரதர் ஸ்பீக்கிங்க், What do you want..” என்ற ஆதனின் குரலில் மொத்தமும் கிண்டல் நிறைந்திருந்தது.

“ஓ.. சின்னப் பக்கெட்டா.. இருக்கட்டும் இருக்கட்டும். எனக்குப் பெரிய பக்கெட்டுக்கிட்டத் தான் பேசனும் இருந்தா கொடுக்கலாமே..” எனத் தன் பாணியில் கிண்டலில் இறங்க

“என்னது சின்னப் பக்கெட்டா.? பெரியவங்களை எப்படி பேசனும்னு தெரியாதா.? கொஞ்சம் கூட மரியாதை தெரியாத பொண்ணா இருக்க.? உன்னை எப்படி எங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்ரது. முதல்ல எப்படி பேசனும்னு கத்துக்கோ..” என ஆதன் அவளிடம் வம்பைத் தொடர,

“அச்சச்சோ… நீங்க வயசான பெரியவரா..? இது தெரியாம போச்சே.. அச்சோ.! சாரி தாத்தா, சாரி தாத்தா நீங்க அத்தானை விடவும் பெரியவரா.? ஆனா பார்த்தா ஜிம்முக்கு போற சிம்பன்சி மாதிரி இருக்கீங்க. உண்மையை சொல்லுங்க, உங்களோட இந்த இளமைக்கு ‘அந்த’ லேகியம் தான காரணம்.” எனக் குசுகுசுவென சொல்ல,

“ஏய் லூசு..” என அவளிடம் கத்தியவன், பக்கத்தில் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த மொத்தக் குடும்பமும் சிரிக்க, “இதோ பாரு ஆதி, இந்த மந்தி மட்டும் எனக்கு அண்ணியா வந்தா நான் கண்டிப்பா சன்னியாசம் போவேன். புள்ளைய பெத்து வைக்க சொன்னா, ஹிட்லர் குட்டிச் சாத்தானைப் பெத்து வச்சிருக்கார்..” எனக் கத்த,

“ஹலோ மிஸ்டர் ஆரணியோட தம்பி… நீங்க சன்னியாசம் போறது கன்ஃபார்மானு எனக்கு கன்ஃபார்ம் பண்ணுங்க, அப்போதான் நாங்க நிக்கிக்கு வேற இடத்துல மாப்பிள்ளைப் பார்க்க முடியும்..” என மேலும் சீண்ட,

“ஏய்.. நீ ஆணியே கழட்ட வேணாம். ஒரு பொண்ணைக் கரெக்ட் பன்றது எவ்வளவு கஸ்டம்னு உனக்கு எங்க தெரியப் போகுது. என்னோட லைன்ல நீ க்ராஸ் ஆகுறது எனக்குப் பிடிக்கல. நீ மரியாதை இல்லாம பேசினதை கூட நான் பெரிய மனசு பண்ணி மன்னிச்சிட்டேன், இனி இப்படியெல்லாம் பேசக்கூடாது சரியா.? இந்தா உங்க பெரிய பக்கெட் பக்கத்துல தான் இருக்கு. அவன்கிட்டயே பேசு.” என பெருந்தன்மையாகப் பேச,

“ஓஹோ… சாருக்கு கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல, இது தப்பாச்சே என்ன பண்ணலாம்.” என  சத்தமாகப் பேசியபடியே யோசிக்க,

“ஆத்தா நீ ஒன்னியும் பண்ண வேணாம்.. ஆள விடு..” எனக் கதற,

“ஆந்தப் பயம் இருக்கனும் மிஸ்டர் ஆரணியோட தம்பி, ஓகே உங்க பெரிய பக்கெட் இருந்தா இப்பவாவது கொடுக்கலாமே..” என இழுக்க

“நான் எங்க கொடுக்க.. நீ பேசுற எல்லாத்தையும் எல்லாரும் கேட்டுக்கிட்டுத்தான் இருங்காங்க, அப்படியே பேசு..” என எரிச்சலாகச் சொல்ல

“என்னது.. எல்லாரும் கேட்டுக்கிட்டு இருந்தீங்களா..” என ஷாக்கானவளின் போன் கீழே விழும் சப்தம் இங்கு எல்லோருக்கும் கேட்க, எல்லோர் முகத்திலும் புன்னகை.

“அவ என்னை அந்த ஓட்டு ஓட்டுறா… நீ ஈஈன்னு இழிச்சிட்டு இருக்க, நாளைக்கு ஒரு கஷ்டம்னா உன்னை எப்படி கூப்பிடுறது,” என ஆதித்யனிடம் காய்ந்தவன், பெற்றவர்களிடம் திரும்பி “ம்மா உன் மருமகக்கிட்ட சொல்லி வச்சுக்கோ எங்கிட்ட வால ஆட்டக்கூடாதுன்னு, அப்படி எதுவும் வம்பு பண்ணா..” என ஆவேசமாக ஆரம்பித்தவன்,

“வம்பு பண்ணா..” என ஆரணியின் குரல் மீண்டும் கேட்க, ‘அய்யோ இவ இன்னும் போகலையா..’ என மனதுக்குள் அரண்டவன், “வேணாம் வலிக்குது” என வடிவேல் பாணியில் சொல்ல அந்த இடம் மீட்டும் சிரிப்பலையில் நிறைந்தது.

தம்பியின் செயலை சிரிப்புடன் பார்த்தவன், டீப்பாயின் மேல் இருந்த மொபலை எடுத்துக் காதுக்கு கொடுத்து  “சொல்லுங்க மிஸஸ் ஆதித்யன்..” என ஆதி பேச ஆரம்பிக்க

“அத்தான்..” என இழுத்தவள், “அது அத்தான் நீங்க கால் பண்ணும் போது போன் என்கிட்ட இல்ல, அதான் எடுக்கல, ஏன் போன் செஞ்சீங்க..” என தப்பு செய்தவளைப் போல் பேச,

“போன் உன்கிட்ட இல்லன்னா, அந்த மரத்துல தொங்கிச்சா இல்ல நீ அந்த மரத்துல தொங்குனியா..” எனக் கிண்டலாகக் கேட்க,

“ம்ம்ச்ச்.. அத்தான் அது போன் சார்ஜர் போட்டுருந்தேனா, உங்க ரிங்க்டோன்  கேட்டு போனா அங்க அப்பா உக்காந்திருக்கார். போன ஸ்பீட்ல திரும்பி ஓடிவந்துட்டேன். உங்க போன் ரிங்க்டோன்னு தெரிஞ்சதும், மரத்துல இருந்து வேற குதிச்சேன் தெரியுமா” எனச் சீரியசாகச் சொல்ல, இங்கு ஆதித்யனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

வாய்விட்டுச் சிரித்தவன், “அடி ஒன்னும் படலையே.” எனக் கேட்க, “என்ன கிண்டலா..” என அவள் கடுப்பாகக் கேட்க, மீண்டும் மீண்டும் சிரிக்கத்தான் தோன்றியது ஆரணியின் ஆதித்யனுக்கு.

“சரி சொல்லுங்க அத்தான் எதுக்கு கால் பண்ணீங்க, அத்தை மாம எப்படி இருக்காங்க, எப்போ வரீங்க..” என படபடவென கேட்க

“சொல்றேன்… சொல்றேன்… அதைச் சொல்லத்தான கூப்பிட்டேன். உன் அத்தை வழக்கம்போலத்தான் கிளம்பிட்டு ரூமுக்குள்ள போனாங்க, அப்புறம் நாளைக்கு போலாம்னு உக்காந்துட்டாங்க. உன் மாமா உன் அத்தைக்கு தலையாட்டுற வேலையை சரியா செஞ்சிட்டு இருக்கார்..” என வீட்டில் நடந்ததை சொன்னவன்,

“அம்மா கொஞ்சம் மூட் ஆஃப்ல இருக்காங்க. நீயும் நிக்கியும் வந்தா சரியாகிடுவாங்கன்னு நினைக்கிறேன். வரீங்களா..? போடி வரைக்கும் நான் கார் கொண்டு வரேன்..” என ஆதி கேட்க,

அவன் முடிப்பதற்குள்ளாகவே “நோ.. நோ.. நோ… நோ… போன்ல பேசுறதே தப்பு.. அதுவும் வீட்டுக்குத் தெரியாம பேசுறதே தப்பு.. இதுல யாருக்கும் தெரியாம ஊருக்கு வந்து உங்களப் பார்க்குறது ரொம்ப தப்பு.. நோ.. நோ.. நோ.. நோ… நோ.. ஆரு அந்தத் தப்பை எப்பவும் பண்ண மாட்டா.. நோ.. நோ.. நோ.. நோ..” என அவள் முடிக்க

‘இதுவும் குக் வித் கோமாளி பைத்தியம் போலடா ஆதி’ என மனசுக்குள் நொந்து கொண்டவன், “நீ ரொம்ப பயந்தவன்னு எனக்குத் தெரியும்டி.. ஒழுங்கா நான் சொல்றதைக் கேட்டு கிளம்பி வா.. நீ வராம உன் அத்தை இங்க இருந்து நகர மாட்டாங்க. இன்னும் டூ டேஸ்ல உன் அப்பா சேலம் போயிடுவார்.. அவர் போயிட்டா நம்ம கல்யாணப் பேச்சை யாருக்கிட்ட பேச..” என வெகுவாக பேசி, அவள் மனதைக் கரைத்து தேனிக்கு வர சம்மதிக்க வைத்தப் பிறகே அவனுக்கு மூச்சு விட முடிந்தது.

இங்கு ஆரணியோ எப்படி பாண்டியனிடம் சம்மதம் வாங்குவது என மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அப்போது தான் ரம்யா தன் அத்தையிடம் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, ஐடியா கிடைத்த நிம்மதியில் வேகமாக குருவம்மாவை நோக்கி ஓடினாள்.

“அப்பத்தா… அப்பத்தா. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். நீ உடம்பு சரியில்லாம அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்து நடிச்சியே, நாங்க கூட பயந்தோமே..” என படபடவெனப் பேச,

வேகமாக சுற்றும் முற்றும் பார்த்த குருவம்மாள், அவள் வாயிலேயே இரண்டு அடியைப் போட்டு “எடு அந்த தொடப்பக்கட்டைய.. அடிக் கிறுக்குப் பிடிச்சவளே, பகல்ல பக்கம் பார்த்து பேசு, நைட்டு அதுவும் பேசாதன்னு சொல்லுவாங்க. மொத்தக் குடும்பமும் உள்ள இருக்கும் போது என்ன பேச்சு பேசுற, எம் மவன் என்ன நினைப்பான்..” என சாமியாட

“ஏய் கெழவி, அன்னைக்கு நீயும் உம்பேரனும் என்னை எவ்வளவு டென்சன் பண்ணீங்க, நீ போட்ட ட்ராமவை உம் மவனுக்கு சொன்னா என்னாகும் தெரியுமா.? நான் சொல்லக்கூடாதுன்னா நீ எனக்கு ஒரு உதவி செய்யனும். செஞ்சே ஆகனும்..” என மிரட்ட

“வாடி ஏஞ்சீமத் தக்காளி, யாருக்கிட்ட பேசுறன்னு தெரிஞ்சி தான் பேசுறியா, ஒதவியும் கிடையாது ஒன்னும் கிடையாது. திரும்பிப் பார்க்காம அப்படியே ஓடிப்போயிடு..” எனப் பேத்தியிடம் கத்தியவர், “பாதகத்தி நம்மள மறுபடியும் ஆசுபத்திரியிலப் படுக்க வச்சுடுவா போலையே..” என புலம்பியவரிடம் வந்து சேர்ந்தனர் ரம்யாவும், நிகிதாவும்.

“என்ன அத்த, என்ன செய்யுது. ஏன் முகமெல்லாம் ஒருமாதிரி வேர்த்துப் போயிருக்கு, உடம்புக்கு என்ன.? ஆசுபத்திரிக்கு போவமா..? மாமாவக் கூப்பிடவா.? ஆரு அப்பாவுக்கு போன போடு..” என ரம்யா பதற, சற்றுமுன் தான் நினைத்ததையே மருமகள் பேச, பேத்தியைத் தீப்பாரவைப் பார்த்தார் குருவம்மா.

“என்ன மச்சான் பண்ண, கெழவி ரொமாண்டிக்கா லுக் விட்டுட்டு இருக்கு..” என நிக்கி ஆருவின் காதைக் கடிக்க,

“பேரனப் பார்த்ததும் கெழவிக்கு நம்ம மேலப் பயம் போயிடுச்சி மச்சி, அதுக்குத்தான் ட்ரீட்மென்ட் கொடுத்துருக்கேன்.”  என்றவள், ரம்யாவிடம் திரும்பி , “ம்மா.. அப்பத்தாவுக்கு ஒன்னும் இல்ல. அவங்க உடம்பு சரியில்லாம இருந்தாங்க இல்ல, அப்போ வீரபாண்டி கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து மாவிளக்கு போடுறேன்னு வேண்டிக்கிட்டேன். அதான் இன்னைக்கு போலாமான்னு கேட்டேன், உன்னைக் கூப்பிட்டு போகச் சொல்லிச்சு. நீ வேற கோவிலுக்கு வரக்கூடாதா.? அத சொல்லி அப்பத்தாவை வரச் சொன்னா இப்படி கத்திட்டு இருக்காங்க.” என அப்பாவியாக சொல்ல, பேத்தியின் பேச்சைக் கேட்ட குருவம்மாவிற்கு மயக்கம் வராத குறைதான். நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பத்தாவின் ரியாக்ஷனைப் பார்த்து பேத்திகள் இருவரும் வாய்க்குள் சிரிப்பை அடக்க, ரம்யா தான், “ஏன் அத்த கூட போயிட்டு வாங்க. இந்த தடவ வந்து கோவிலுக்கே போகல. இவளுக்கே எப்போவோதான் புத்தி வரும். அப்படி வரும்போதே போயிட்டு வந்துடுங்க. நான் மாமாக்கிட்ட சொல்லிடுறேன். கதிரு ப்ரண்டுக்கிட்ட சொல்லி காரு கொண்டு வரச் சொல்றேன். நீங்க கிளம்புங்க.. நான் அர்ச்சனை எல்லாம் எடுத்து வைக்கிறேன்..” என உள்ளே நகர்ந்துவிட,

“மாமியார் எள்ளுண்ணா, மருமக எண்ணெய் தான்” என ஆரு சொல்ல, ஆக மொத்தம் ஒருத்தரும் மாமியார் பேச்சைக் கேட்குறது இல்ல, அப்படித்தான..” என நிக்கியும் பதில் கொடுக்க, “எடு அந்த தொடப்பக்கட்டய..” என குருவம்மா கீழேக் கிடந்த விளக்குமாறைத் தேட, பெண்கள் இருவரும் சிட்டாகப் பறாந்திருந்தனர்.

பேத்திகள் இருவரும் ஓடுவதைப் பார்த்துக் கோபம் வருவதற்குப் பதிலாக சிரிப்புத்தான் வந்தது குருவம்மாவிற்கு. இதுங்க மட்டும் இப்படி துருதுருன்னு இல்லைன்னா எங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். என் வீட்டு குலசாமிங்க இவங்க ரெண்டு பேரும்.’ என நினைத்தவருக்கு மனம் நிறைந்திருந்தது.

அன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்று முத்துலிங்கம் ஏற்பாடு செய்திருக்க, எவ்வளவு பேசியும் அவரை மலை இறக்கவே முடியவில்லை. பாண்டியன் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், ஒதுக்கவும் இல்லை. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று அமைதியாகவே அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்.

அவரது போலிஸ் மூளை முழித்து அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று யாரும் அறியவில்லை. அன்று ஆதித்யன் வந்து சென்ற பிறகே இந்த வேலைகள் துரிதமாக நடப்பது அவருக்கு புரிந்தது. இப்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை வாடாமல் அப்படியே குடி புகுந்திருந்தது.

மாப்பிள்ளை வீடென வந்தவர்கள் முத்துலிங்கத்திற்கு மிகவும் நெருங்கிய உறவில் தான். வந்ததுமே டாம்பீகமாக பேச ஆரம்பிக்க, முதல் பார்வையிலேயே மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காமல் போனது. ஆருவோ என்ன செய்யலாம் என் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க, நிக்கிதான் இங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் ஆதன் மூலம் ஆதித்யனுக்கு ஒலிபரப்பிக் கொண்டிருந்தான்.

இது எதையும் கண்டு கொள்ளாமல் வந்தவர்களுடன் ஆர்ப்பாட்டமாக பேசிக் கொண்டிருந்தார் முத்துலிங்கம். அவரது செயலைப் பார்த்து எதுவும் பேச முடியாத சூழலில் குருவம்மா பல்லைக் கடிக்க, பாண்டியன் அமைதியாகத் தான் இருந்தார்.

“பொண்ணைக் கூப்பிடுங்க” என வந்த பெண்களில் ஒருவர் சொல்ல, ரம்யாவும் வேறுவழியில்லாமல் மகளை அழைத்து வர, அந்த நேரம் உள்ளே வந்திருந்தான் ஆதித்யன் ஆதனுடன்.

ஆதியைப் பார்த்ததும், அதுவரை சந்தோசமாகச் சிரித்துக் கொண்டிருந்த முகம் இறுகிவிட, பாண்டியனின் முகம் யோசனையானது.

வந்தவன் நேராக மாப்பிள்ளையின் அருகில் போய் “சாரி மச்சான், கொஞ்சம் லேட்டாகிடுச்சு..” என்றான். ஒரு கை தன் மீசையை நீவ, மற்றொரு கை மாப்பிள்ளை என்ற நண்பன் ராகுலுக்கு கை குலுக்கியது.

ஆரணி உட்பட அனைவரும் “ஆ”வெனப்  பார்க்க, ராகுலோ பரவாயில்ல மச்சான், கரெக்ட் டைமுக்குத் தான் வந்துருக்க, இப்போ தான் பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகுது..” என சிரித்தபடியே சொல்ல

“ஓ.. ஒகே… ஓகே..” என்றவன் சோஃபாவில் வசதியாக சாய்ந்தபடி அமர, அதுவரைக்கும் பொறுமையாக இருந்தது போது என்று நினைத்த ஆரணி, வேகமாக முன்னால் வந்து யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல், “உனக்கு என்னைப் பார்த்த பைத்தியம் போல இருக்கா..? அன்னைக்கு நீதான் என் பொண்டாட்டின்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு, இன்னைக்கு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி உக்காந்து ஷோ பார்த்துட்டு இருக்க. உன் மண்டையைப் பொழக்குறேன் பாரு..” என அவனுக்கு  கீழே இருந்த தட்டில் வைத்திருந்த தேங்காயை எடுக்க,

“ஏய்..” என்று ஆதன் தடுக்க, ரம்யா, குருவம்மாள், நிகிதா என எல்லோரும் முன்னே வர, தன்னிடமிருந்த அவளை நிதானமாகப் பிரித்தவன், “எங்கிட்ட சொன்னதை உங்க வீட்டுல சொல்லிருந்தா இவ்வளவு பிரச்சினையே வந்திருக்காதே. உன் தாத்தாவுக்கு இந்த இடத்துல வச்சு சொன்னாத்தான் புரியும் போல..” என்றவன் எழுந்து அவளையும் எழுப்பித் தன் கைவைளைக்குள் வைத்துக் கொண்டு முத்துலிங்கத்தைப் பார்க்க,

அவரோ “விடுடா எம்பேத்தியை. எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள வந்து, என் முன்னமே என் வீட்டுப் பொண்ணைக் கட்டிப்பிடிப்ப..” என ஆங்காரமாகக் கத்த,

“இவ உங்க பேத்தின்னா.. நாங்க யாரு..? நாங்க என்ன வானத்துல இருந்தா குதிச்சோம்..” என நக்கலடித்தவன், பாண்டியனை நேராகப் பார்த்து “எனக்கு ஆரணியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளுக்கும் தான். உங்களுக்கு எப்போ எங்க மேல இருக்குற கோபம் போய், எங்க கல்யாணத்தை நடத்தனும்னு நினைக்கிறீங்களோ, அப்போ நடந்துங்க. அந்தக் காலம் வரும் வரை வெயிட் செய்றோம். ஆனா அதை விட்டுட்டு மாப்பிள்ளை கீப்பிள்ளை ன்னு எவனையாவது கொண்டு வந்தீங்கன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன். என் உடம்புல முகுந்தனோட ரத்தம் மட்டுமில்ல உங்க குடும்ப ரத்தமும் ஓடுதுங்கிறதை மறந்துடாந்தீங்க” என்றதும்,

பாண்டியன் “முதல்ல பொண்ணை விடு” என்றார் அழுத்தம் திருத்தமாக. இத்தனை பேர் முன்னிலையில் தன் பெண் இப்படி நிற்பது அவருக்கு கோபத்தைக் கொடுக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகத் தான் சொன்னார். அது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

ஆனால் ஆதித்யனோ அதைக் கண்டுகொள்ளாமல் ராகுலிடம் திரும்பி, “ஏண்டா ஊரு உலகத்துல பொண்ணை இல்லையா உனக்கு.? என் பொண்டாட்டி தான் கிடைச்சாளா..” என நக்கலாகக் கேட்க,

“டேய்… இவங்களத்தான் பார்க்க வர்ரேன்னு எனக்குத் தெரியாது. ஆனா உனக்குத் தெரியும் இல்ல. அப்போ நீ சொல்லிருக்கலாம்ல, என்னை வச்சு கமெடி பன்றியா..” என ராகுல் கடுப்பாகக் கேட்க, அதை அப்படியே விட்டவன் சுற்றிலும் பார்வையை ஓட்ட, அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்து ஏதோ கிசுகிசுக்க, அதை பாண்டியனும் கவனித்தார்.

ஆதித்யனை சொல்ல அவருக்கு விருப்பமில்லை, அதனால் மகளைப் பார்த்து  “ஆரு..” என அதட்டலிட, அந்த அதட்டல் சரியாக வேலை செய்தது. வேகமாக அவனிடமிருந்து பிரிந்தவள் யாரையும் பார்க்காமல் அறைக்குள் ஓடிவிட, “உங்க வீட்டு பெரியவங்களை முறைய வந்து பேசச் சொல்லு, இப்போ கிளம்பு..” என இப்போது ஆதித்யனிடம் சொன்னவர், மாப்பிள்ளை வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்க, அவர்களும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட, வீடே அமைதியானது.

குருவம்மாவும் ரம்யாவும் ஒன்றும் சொல்லாமல் இருக்க, மேலும் அங்கு இருந்து யாரையும் சங்கடப் படுத்தாமல் ஆதித்யனும், ஆதனும் கிளம்பிவிட, அங்கிருந்த சோபாவில் தொய்ந்து அமர்ந்தார் பாண்டியன்.

பவித்ரா வீட்டை விட்டு போன போது சில சமயங்கள் இப்படி மகன் அமர்ந்து பார்த்திருக்கிறார் குருவம்மா. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே போல் சோர்ந்து இருந்தைப் பார்த்து, “பாண்டி..” என அருகில் வர,

“எனக்கு என் பொண்ணூ வாழ்க்கை ரொம்ப முக்கியம்மா.. அவங்க வீட்டுல பேசிட்டு என்னனு சொல்லுங்க. நான் சேலம் போறதுக்குள்ள வந்து பேசச் சொல்லுங்க. இது என் பொண்ணுக்காக எடுத்த முடிவு என்றுவிட்டு வெளியே சென்றுவிட, முத்துலிங்கம் தான் ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டார்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பேரனுக்கு விசயத்தைச் சொல்ல, ஆதித்யனும் வீட்டில் பேசி பெற்றோரை தேனிக்கு வர வைத்திருந்தான். அவர்கள் வீட்டு வேலையும் ஒருவாறு முடிந்திருந்தது. அவர்களின் திருமண நாளுக்கும் இன்னும் சில நாட்களே இருக்க பவித்ராவின் பிடிவாதம் அழும் குழந்தையை ஒத்திருந்தது. எப்படி எல்லாவற்றையும் சமாளிக்க என யோசனையில் இருந்த அப்பத்தாவின் முன் வந்து நின்ற பேத்திகளைப் பார்த்து, “இப்படி தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டு வந்தா எல்லாம் கூப்பிட்டு போகமாட்டேண், ஒரு கோவிலுக்கு எப்படி போகனும் தெரியாது. நான் சீலையை மாத்திட்டு வரதுக்குள்ள ரெண்டு பேரும் தலை பின்னி பூ வச்ச் நிக்கனும்..” என அதட்டலாக சொல்லிவிட்டு உள்ளே செல்ல

“மச்சான் இந்த அப்பத்தாவுக்கு சீக்கிரம் ஒரு பாயசத்த போடனும் போலடா,..” என நிகிதா பல்லைக் கடிக்க,

“கல்யாணம் முடியட்டும் மச்சி முதல் வேலையே அதுதான்..” என இரண்டும் வில்லி ரேஞ்சுக்குப் பேசிக் கொண்டிருக்க, இரண்டு பேர் தலையிலும் நங் நங்கென்று கொட்டு வைத்தார் ரம்யா.

“பெரிய பி.எஸ் வீரப்பாவும், நம்பியாரும். வில்லன் மாதிரி ப்ளான் போட்டுக்கிட்டு. அப்பவே சொன்னேன் தலையைப் பின்னுங்கன்னு, பத்ரகாளியா போகாதீங்க, உங்க அப்பத்தா பத்ரகாளீயா மாறிடுவாங்கன்னு.. சொன்னா கேட்டாதானே..” என இருவருக்கும் தலையை வாரி பூவை வைத்து விட,

“மம்மி. ஒரு குடும்பத்துல ஒரு ஹிட்லர் தான் இருக்கனும். இப்படி குடும்பமே ஹிட்லரா இருக்கக்கூடாது” என அவரிடம் வம்பு பேசி ஒருவழியாக பூஜை சாமான் முதற்கொண்டு காரில் ஏறி வீரபாண்டி நோக்கி பயணித்தனர் அப்பத்தாவும் பேத்திகளூம். நடக்கப் போவதை அறியாமல் குருவம்மாவும் பேத்திகளுடன் சந்தோசமாக போய்க் கொண்டிருந்தார்.

You may also like

Leave a Comment

About Me

Featured