முத்தமழை – 42
“வந்தனாவின் பேச்சைக் கேட்டு கர்ணன் அதிர்ந்ததெல்லாம் ஒரு நொடிதான். அடுத்த நொடியே வெடித்து சிரிக்க, வீட்டினரின் முகத்திலும் கூட புன்னகைதான்.
அதிலும் சீதாவிற்கு மகளை நினைத்து அழுவதா சிரிப்பதா என்ற நிலைதான்.
“நான் சொல்லல தம்பி, இப்படித்தான் ஏதாச்சும் ஒரு கிறுக்குத்தனம் பண்ணிட்டே இருப்பா.. இவளை நம்பி காசை போடுறீங்களே, முழுசா திரும்பி வருமான்னும் தெரில, சொன்னாலும் கேட்கமாட்டேங்குறீங்க.. என்ன பேர் இது?” என சீதா வழக்கம் போல புலம்ப,
“அத்தை.. இந்த பேருக்கு என்ன? ரொம்பவே வித்தியாசமா இருக்கு.. இப்போ எல்லாம் இந்த மாதிரி ட்ரெண்டியா, கேட்சியா வச்சாதான் கஸ்டமர்சும் வராங்க.. அதெல்லாம் தனு நல்லா பண்ணுவா.. அவ மேல நம்பிக்கை இருக்கப் போய்தான் நான் இந்த முடிவை எடுத்துருக்கேன்..” என சீதாவை சமாதானம் செய்திருந்தான்.
இப்படி வீட்டில் எல்லோரிடமும் பேசி, ஒரு சுமூக நிலையை ஒருவாறு கொண்டு வந்து விட்டான்தான். ஆனால் வெற்றியைத் தான் அவனால் சமாளிக்க முடியவில்லை.
சுதந்திர தின விழாவிற்கான பயிற்சியில் இருந்ததால் அவனால் உடனே எங்கும் வர முடியவில்லை.
இவன் போன் செய்தால் யாழினி எடுப்பதில்லை, கோபம் குறைந்து அவள் போன் செய்தால் வெற்றி எடுப்பதில்லை, இப்படித்தான் இந்த பத்து நாட்களும் ஓடிக் கொண்டிருக்க, விழாவிற்கு முதல் நாள் தங்கையை மனைவியோடு இருக்கச் சொல்லியிருந்தான்.
வல்லிக்கும் யாழினி மீது கோபம் இருக்க, இன்றைய இரவில் அவர்கள் பேசி சரி செய்து கொள்ளட்டும் என்று தான் இந்த முடிவு.
“சார்.. அந்த கருப்பட்டி காஃபில காரை நிறுத்துவீங்களாம்..” என்ற பாண்டியனின் குரலில் மீண்டும் நிகழவுக்கு வந்த கர்ணன், “என்னாச்சு பாண்டியன்? யாருக்கு?” என்று காரை பார்க்கிங்கில் விட,
“சார் தான் நிறுத்தச் சொன்னார்.. நீங்க காபி குடிச்சிட்டு வருவீங்களாம்..” என்ற பாண்டியனிடம்,
“சரி எல்லாருக்குமே வாங்கலாம்..” என இறங்கி நடக்க, பாண்டியனும் அவனோடு நடந்தான்.
“சார்.. சார்..” என்று மெல்ல அழைத்த பாண்டியனை திரும்பி பார்க்காமல் “சொல்லுங்க பாண்டியன்..” என்றதும்,
“சுந்தர் சாரை தேடி இன்னைக்கு அந்த GK வந்தார் சார், அவர் பெரியளவுல ஃபினான்ஸ் பண்றவர்.” என்றதும் கர்ணனின் புருவம் சுருங்க,
“ஆக்சுவல்லா.. இந்த மாதிரி ஃபினான்சியர்ஸ்கிட்ட வாங்கிதான் மத்தவங்க ஃபினான்ஸ் பண்ணுவாங்க.. இது ஃபிலிம் இன்டஸ்ட்ரிக்கு செட்டாகும், பட் இங்க ஏன் வந்தாங்க தெரில.. என்ன பிரச்சினைனும் தெரியல.. அவர் வரும் போது லிங்கா சாரும் ஹால்ல தான் இருந்தார். அவரைப்பத்தி தெரிஞ்சதுனால, சாருக்கு ரொம்ப பயம்.. சுந்தர் சார் எதுவும் பிரச்சினையில மாட்டிக்கிட்டாரோனு பயப்படுறாரு..” என இதுதான் பிரச்சினை என பாண்டியன் மேலோட்டமாக கூற,
கர்ணன் அமைதியாக கேட்டுக் கொண்டானே தவிர பதில் சொல்லவில்லை.
நால்வரும் காபி குடித்து முடிய, மீண்டும் கோவையை நோக்கி பயணம் தொடங்கியது.
தந்தையின் முகத்தில் தெரிந்த வேதனையில் “ப்பா.. நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் பெருசா எந்த பிரச்சினையும் இருக்காது. என்னை மீறி எதுவும் நடந்திடாது. நீங்க தைரியமா இருங்க..” என அவர் கையைப் பிடித்து ஆறுதலாக கூற,
“அது இல்ல தம்பி.. அந்த GKவால எத்தனையோ பேர் பிசினசை க்ளோஸ் பண்ணிட்டு போயிருக்காக. எத்தனையோ பேர் ஒன்னுமில்லாம நடுத்தெருவுல நின்னுருக்காங்க. ஏன் நம்ம வனிதா மாமனார் அவன்கிட்ட மாட்டித்தான் பாதி சொத்தை விட்டாங்க. எனக்கே அவன்கிட்ட இருந்து ஏகப்பட்ட ஆஃபர் வந்தது. இதெல்லாம் பார்த்து, நமக்கு ஒத்தே வராதுனு ஒதுங்கிட்டேன். இப்போ இவன் ஏன் தம்பி புதுசா பண்றான். உன்கிட்டயாச்சும் சொல்லிருக்கலாம்ல..” என்றார் வேதனை ததும்ப,
“சார் இதை நான் சொல்லக்கூடாது, ஆனா சொல்லாமலும் இருக்கக்கூடாது. கர்ணன் சார் என்னோட பாஸ். அவருக்கு நான் நம்பிக்கையா இருக்கனும்..” என்றவன், லிங்காவின் முகத்தில் தெரிந்த பயத்தில், ”சார் பயப்படுற மாதிரி இல்ல. ஆனா சுந்தர் சார்கிட்ட இப்போ ஈகோ அதிகமாகிடுச்சு சார், இத்தனை வருசம் அவர் பார்த்த தொழில் திடீர்னு கர்ணன் சார் பார்க்குறதை அவரால தாங்கிக்க முடியல, அதனால பிசினஸ்ல என்ன குளறுபடி செய்யலாம்னு பார்த்துட்டு இருக்கார். அதுக்காக கூட GK சார்கிட்ட டீல் பேசியிருக்கலாம்..” என்ற பாண்டியனின் கூற்றில் இருந்த உண்மையில் சொக்கலிங்கத்தின் இதயம் தாறுமாறாக துடித்தது.
“எவ்வளவு திமிர் அவனுக்கு? இந்த சுந்தரை சும்மா விடக்கூடாது கர்ணா. இத்தனை நாள் ஆண்டு அனுபவிச்சதெல்லாம் பத்தாதா? மொத்தமா முழுங்கலாம்னு பார்க்குறானா? நாளைக்கு தொழில்ல பிரச்சினைனா உன்னை கை காட்டி விட்டுட்டு ஒதுங்கிப்பான். எல்லாரும் உன்னைத் தான் கேள்வி கேட்பாங்க.. இதெல்லாம் ஆரம்பத்துலயே தட்டி வைக்கனும்..” என பார்வதி பாட்டி தான் சுந்தரை திட்டிக்கொண்டே வந்தார்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்துவிட்டார் சொக்கலிங்கம். அதனால் அமைதியாகிவிட்டார்.
யாருக்கும் கர்ணன் எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாகவே சிவகுருவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.
பின் பாண்டியனிடம் “நீங்க எல்லாரையும் ஹோடலுக்கு அழைச்சிட்டு போங்க பாண்டியன். நானும் வல்லியும் பின்னாடி வரோம்..” என்றபடியே உள்ளே செல்ல, யாழினியையும், வல்லியையும் அழைத்துப் போக ரெடியாக இருந்தார் ராமசாமி.
இவர்களைப் பார்த்ததுமே மூவரும் வெளியில் வர, கர்ணன் மனைவியைப் பார்த்தபடியே அவளின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
‘என்ன இது? ஏன் இவ்ளோ டல்லா இருக்கான்? ஃபங்க்ஷன் போக வேண்டாமா?’ என யோசித்தபடியே, மாமனாரையும் பாட்டியையும் வரவேற்க,
“ஒன்னுமில்ல வல்லி.. அவனுக்கு அவங்க அம்மா ஞாபகம்னு நினைக்கிறேன். கொஞ்ச நாளாவே அவன் அப்படித்தான் இருக்கான். நாங்க கிளம்புறோம்.. நீங்க கொஞ்சம் கழிச்சு வாங்க.” என்ற பாட்டி எல்லாரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
‘அம்மா ஞாபகமா?’ அதிலேயே பெண்ணவள் உறைந்து நின்றுவிட்டாள்.
திருமணத்திற்கு முன் ஒருமுறை இப்படித்தானே அப்செட்டாக இருந்தான், மறுபடியுமா? அப்போ வீட்டில் ஏதேனும் பிரச்சினையா இருக்குமோ?’ என பயந்தபடியே அவனுக்கு டீ போட்டு எடுத்துக்கொண்டு அறைக்குள் செல்ல, வலக்கையால் கண்களை மூடியபடி கட்டிலில் சரிந்திருந்தான் கர்ணன்.
டீயை அங்கிருந்த ட்ரெசிங்க் டேபிளில் வைத்துவிட்டு “பாவா..” என்றபடி அவனருகில் அமர்ந்து நெற்றியை வருட, வருடிய கையை இழுத்து நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டான்.
“என்ன ப்பா..? என்னாச்சு..?” என தவிப்புடன் கேட்க,
“ஹ்ம்ம் நத்திங்க்..” என்றவன் அவளை நகர்த்தி, தான் எழுந்து அமர்ந்து, அவளைத் தன்னிடம் கொண்டு வந்தான்.
அவனிடம் டீயைக் கொடுக்க, “என்னாச்சு.. பூ ரொம்ப கம்மியா இருக்கு..” என அவளின் கூந்தலில் பூ வாசத்தை நுகர்ந்தபடியே கேட்க,
“சீதாம்மா அங்க வந்து வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க பாவா.. அவங்களே எடுத்துட்டும் போயிட்டாங்க.. இப்போ அதுதான் பிரச்சினையா?” என்றாள் சற்றே அதட்டலாக.
“என்னடி நீ? எனக்கு எது பிரச்சினையோ அதைத்தான கேட்க முடியும்..” என்றான் சிரிப்புடன்..
“உலகமே இடிஞ்சி விழுந்த மாதிரி மூஞ்சை தூக்கி வச்சிட்டு வந்துட்டு, இப்போ என்னையே கலாய்க்கிறீங்க..” என அவனின் கையில் கிள்ள,
“அதெல்லாம் ஒன்னுமே இல்ல அம்மு.. சரியாக கூடிய பிரச்சினை தான். நான் பார்த்துப்பேன், மேனேஜ் பண்ணிப்பேன்.. நீ என்கூட அங்க வீட்டுக்கு வர்ரியா, இல்ல இங்க இருக்கியா..” என்றபடியே டீயை உறிஞ்ச,
“தலைவர் என்னை விட்டுட்டு ரொம்ப ஜாலியா இருக்குற மாதிரி தெரியுது.. நீங்க இன்னும் ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ மொமென்ட்ல இருந்து வெளில வரலன்னு நினைக்கிறேன்..” என சிரிக்க,
“ஹ்ம்ம் என் பொண்டாட்டியை நான் எவ்ளோ தேடுறேன்னு அவக்கிட்ட மட்டும் தான் சொல்ல முடியும், காட்ட முடியும். அத வெளியே காட்ட முடியுமா? அப்படி சொல்லிட்டா கர்ணன் கெத்து என்னாகுறது..” என அவனும் சிரிக்க,
“கர்ணனுக்கு கெத்தா? இந்த வல்லியை கல்யாணம் செஞ்ச பிறகு கர்ணனுக்கு கெத்தெல்லாம் இருக்கா என்ன?” என அவனிடம் புருவத்தை உயர்த்த,
“ஆஹான்.. கர்ணனுக்கு கெத்தா.. அப்படி ஒன்னு இருக்கா என்ன?” என்றதுமே இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
டீ கப்பை மேஜையில் வைத்தவன் மனைவியை பின்னிருந்து அனைத்து தன்னிடம் கொண்டு வந்து “இந்த வல்லிக்கண்ணை கல்யாணம் செஞ்ச பிறகுதான் கர்ணனுக்கு கெத்தே வந்துருக்கு..” என்றான் கிசுகிசுப்பாக.
“ஹ்ம்ம்.. என்னாச்சு? ஏன் டல்லாகிடீங்க? அங்க இன்னும் பிரச்சினை சரியாகலையா?” என்றாள் வருத்தமாக..
“ம்ச்.. அதை விடுப்பா.. சுந்தர் கொஞ்சம் பிரச்சினை பண்ணிட்டு இருக்கான். அதை சரி பண்ணிடலாம். ஜோன்ஸை இனி அவன் ஆஃபிஸ்ல வச்சுக்க முடியாது.. வேற ஆள் பார்க்கனும், வசந்த்கிட்ட சொல்லிருக்கேன் பார்க்கலாம்..”
“ம்ம் எல்லாம் சரியாகிடும் ப்பா.. இதெல்லாம் உங்களுக்கு பழக்கமில்லதானே.. மெல்ல மெல்ல சரி பண்ணலாம். அதுக்காக அப்செட் ஆகக்கூடாது சரியா? நமக்கு இன்னுமே லைஃப் இருக்கு.. குட்டீஸ் வந்தா அவங்களை பார்க்கணும் அவங்க லைஃபை பார்க்கணும். இப்பவே இவ்ளோ டென்சன் ஆனா என்னாகுறது.. ஏற்கனவே உங்களுக்கு வயசாகிடுச்சு..” என்று சொல்லிவிட்டு பக்கென சிரித்துவிட,
“அடியேய்..” என அவளின் காதைப் பிடித்து திருகியவனுக்கும் அடக்கமாட்டாமல் புன்னகை வந்துவிட்டது.
“நான் கூட நம்ம ஃபியூச்சர் பத்தி எவ்ளோ பொறுமையா பேசுறா, என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்ளோ அக்கறைன்னு ஒரு நிமிசம் பெருமைப்பட்டுட்டேண்டி..” என சிரிக்க,
“பாவா.. நான் ஒன்னும் பொய் சொல்லல..” என்றவள் “நான் சொன்னது என்னோட பயம் பாவா.. இப்போ எல்லாம் நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிடுறீங்க.. இப்படி இருந்தா ஹெல்த் என்னாகும் சொல்லுங்க. இந்த சொத்து, பணம் இதெல்லாம் நமக்கு வேண்டாம் பாவா.. நமக்கே நமக்கா சம்பாதிச்சு, அதுல லைஃப் மூவ் பண்ணா போதும். உங்க ஹெல்த்த நினைச்சு எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என்றவளுக்கு குரல் உள்ளே போய்விட்டது.
“ம்ச் அம்மு..” என அவளைத் தன் மார்போடு அழுத்திக் கொண்டவன் “உன்னை பார்த்த இந்த மூனு வருசமா தான் வாழனும், அதுவும் இங்க வந்து அப்பா கூட இருக்கனும், ரெண்டு, மூனு பிள்ளைங்க பெத்துக்கனும்னு ஆசையெல்லாம் வந்தது. அந்த ஆசையை நான் எப்போதும் வேண்டாம்னு மறுக்கவே இல்ல. எனக்குள்ளும் வாழனும்னு ஆசையை விதைச்ச, உன் கூட திகட்ட திகட்ட வாழனும் அம்மு.. அதனால நான் கவனமா இருப்பேன்.. நீ இதெல்லாம் நினைச்சு கவலைப்படாத.. நான் பார்த்துக்குவேன்..” என்று பொறுமையாக எடுத்து சொல்ல, அவளும் “ம்ம்.. ம்ம்..” என்றபடி மார்போடு ஒன்றிக் கொண்டாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு “போலாம் அம்மு.. நமக்காக அங்க எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க. என் மச்சினிச்சி எனக்காக காத்துட்டு இருப்பா.. அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்..” என்றவாறே, மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
இருபது நிமிட பயணத்தில் கார் அந்த ஹோட்டலின் முன் நிற்க, அந்த போர்டை பார்த்ததுமே உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு சென்றுவிட்டான் கர்ணன்.
“என்னடி இது..?” என அதிர்ந்தே கேட்க,
“என்ன பாவா..?” என வல்லியும் புரியாமல் கேட்க,
“என்ன பேர்டி.. நிஜமாவே இந்த பேரைத்தான் இவ வச்சிருக்காளா? நான் ஏதோ காமெடி பண்றான்னு நினைச்சேன், அப்போ என்னோட பணமெல்லாம் ஹோஹையாவா?” என அதிர்ச்சி மாறாமலே கேட்க, வல்லபியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
மூன்று மாடியில் அழகான பூந்தோரணங்களால் அலங்காரமாய், கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது வந்தனாவின் ஹோட்டல் திண்ணை.
1 comment
நல்ல வேளை, திண்ணைக்கு வாங்க,, மொக்கிட்டு போங்கன்னு எழுதி வை க் காதல் போனான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797