Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 19

காதல் கசக்குதைய்யா – 19

by Vathani S

காதல் கசக்குதைய்யா – 19

பீனிக்ஸ் மால் :

சென்னையில் தன் மாமாவின் வீட்டிற்கு வந்த நிக்கி, அவர் மகன் ஆகாஷுடன் அடம்பிடித்து, பீனிக்ஸ் மால் வந்திருந்தாள். அப்போது அவனது நண்பன் வரவே, நிக்கியின் முன் பேச வேண்டாம் என நினைத்து, பாதுக்காப்பான ஒரு இடத்தில் அமரவைத்து, அவளுக்குப் பிடித்த கசாட்டாவையும் ஆர்டர் செய்துவிட்டு, நண்பனுடன் பக்கத்தில் தான் சென்றிருந்தான்.

நிக்கியும் ஐஸ்கிரீம் மட்டுமே உலகம் என்பது போல சுற்றும் முற்றும் கவனிக்காமல் தனியாக அமர்ந்து வழக்கம்போல கசாட்டவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

அன்று ஒரு அரசியல் தலைவரை அரஸ்ட் செய்து விட்டதாக, வெளியில் கலவரங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த ரவுடிகள் எப்போதும் உள்ளேயும் வரலாம் என நினைத்த சிலர் கடைகளை மூடிவிட்டு கிளம்ப ஆயத்தமாயினர்.

அவர்கள் நினைத்தது போலவே அந்த அரசியல் கட்சியின் ஆட்கள் மாலுக்குள்ளும் வந்து அராஜகம் செய்ய, மக்கள் சிதறிக் கொண்டு ஓட, அதைப் பார்த்துக் கலவரமாக எழுந்தவள் அப்போதுதான் சுற்றுப்புறத்தைக் கவனித்தாள்.

ரவுடிகளின் அராஜகம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. முடிந்தளவு அங்கிருந்த கடைக்காரர்கள் பெண்களையும், குழந்தைகளையும் உள்ளேயே வைத்து கடைகளை அடைத்து காப்பாற்றிக் கொண்டிருந்தனர்.

சிலர் அங்கிருந்து பதறிக் கொண்டு ஓடினர். அப்படி ஓடும் போது நிக்கியின் அருகில் இருந்த அவளது ஹேன்ட்பேகை ஒருவன் எடுத்துக் கொண்டு ஓடிவிட, என்ன செய்ய வேண்டும் என புரியாமல் இயல்புக்கும் வராமல் பேந்த பேந்த விழித்தவளை ஒரு கரம் இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தது.

கையைப் பிடித்ததும் திமிறியவளை இழுத்துக் கொண்டு ஓடுவது பெரும் சிரமாமானது அந்தக் கரத்தின் சொந்தக்காரனான ஆதனுக்கு. ஆனாலும் விடாமல் இழுத்துக் கொண்டு வந்தவன், உள்ளே விட்டு ஓங்கி ஒரு அறை அறைய, அப்படியே மயங்கி சரிந்திருந்தாள் பெண்..

ஏற்கனவே நடந்த கலவரத்தில் பயமும் பதட்டமுமாக இருந்தவள், உடன் வந்த ஆகாஷை காணாமல் தவிப்பாக தேடிக் கொண்டிருக்க, யாரென்றேத் தெரியாத ஒருவன் வந்து கையைப் பிடித்து இழுக்கவும் பயம் மேலும் அதிகரிக்க, அந்தப் பயத்தில் தான் அவனிடமிருந்து திமிறினாள். ஆனால் அவனோ விடாமல் இழுத்துக் கொண்டு வந்ததும் இல்லாமல் அறைந்தும் விட, மயங்கிவிட்டாள் பெண்.

அவள் விழவும், “ச்சே இது வேறையா..” எனச் சலிப்பாக முனங்கிக் கொண்டவன், பக்கத்தில் இருந்த ப்யுரிஃபையரில் இருந்து தண்ணீரைப் பிடித்து அவளுக்குத் தெளித்து எழுப்பி விட்டான். எழுந்தவளோ “ஓவென்று” அழ ஆரம்பித்துவிட்டாள்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் “அடச்சீ நிறுத்து, இப்ப நிறுத்தல இங்கேயே உன்னை ரேப் பண்ணிடுவேன் பார்த்துக்க..” என அவளுக்கும் மேலக் கத்த, அதிர்ச்சியில் அழுகையை நிறுத்தியவள், தன் இரு கைகொண்டும் கப்பென்றுத் தன் வாயை மூடிக் கொண்டாள்.

வாயை மூடிக் கொண்டாலும், அதிர்ந்த விழிகளில் இருந்து கடகடவென நீர் வழிய, உடலும் தேம்ப ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் மேலும் கடுப்பானவன் “ஏய் என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது.. ம்ஹ்ம்ம் பொண்ணுங்களைப் பார்த்ததும் அப்படியே பாஞ்சிடுற மாதிரி தெரியுதா..?” எனக் கத்த, மனதில் அப்படித்தான் எனத் தோன்றினாலும், வாயைத் திறக்கவில்லை பெண்.

அவளது அழுத விழிகள் ‘அப்படித்தான் நினைத்தேன்’ என்றுக் காட்டிக் கொடுக்க, “உன்னைப் போய் காப்பாத்த நினைச்சேன் பாரு என்னைச் சொல்லனும், பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி  பேக்கு போல நிக்குதேன்னு அந்த ரவுடிங்கக்கிட்ட இருந்து காப்பாத்தி கொண்டு வந்தேன்ல, எனக்கு இது தேவைதான். அடி வாங்கட்டும்னு விட்டுருக்கனும்..” என மேலும் கடுகடுக்க,

அதை நினைத்துப் பார்த்தவளுக்கு உடல் தூக்கிப்போட, கைகாலெல்லாம் ஒவ்வொரு பக்கமாய் இழுத்துக் கொள்ள, அதுவரை அவள் தன்னைத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாளே என ஆதங்கத்தில் கத்திக் கொண்டிருந்தவன், அவளுக்கு ஃபிட்ஸ் வரவும் பயந்துவிட்டான்.

ஏற்கனவே பயத்தில் இருந்தவளைத் தானும் மிரட்டியது புரிய, ‘ச்செ’ என தன்னையே நொந்தவன், பக்கத்தில் காலியாக இருந்த ஒரு ஸ்டீல் செல்ஃபை கீழேக் கிடத்தி, நிக்கியின் இரு கைகளையும் அதில் இறுக்கமாகப் பிடிக்கும்படி தன் கையோடு சேர்த்துப் பிடித்தான்.

சில நிமிடங்களில் நிக்கியின் வலிப்பு நின்றிருந்தாலும், உடல் சோர்வும் மன சோர்வும் அதிகமாகத் தாக்க, அது அவளை மயக்கத்திற்கு கொண்டு போனது. முடிந்தளவு அவளுக்கு முதலுதவி செய்தவன் உள்ளிருந்தே ஆம்புலன்சுக்கும் அழைத்துவிட, அதற்குள் காவல்துறையினரும் வந்து அந்த இடத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து அழைத்த பிறகே கதவைத் திறந்தவன், யாரையும் கவனிக்காமல் நிக்கியை அள்ளிக் கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி, அவனும் ஏற பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு பறந்தது.

இங்கு ஆகாஷோ நிக்கியைக் காணாமல் தேடி, அவள் அம்ர்திருந்தக் கடையில் விசாரிக்க, அதோடு கலவரமும் இருக்க வீட்டில் சொன்னவன் அந்த மாலிலேயே தேடிக் கொண்டிருந்தான். ஆகாஷின் அப்பா ஒரு காவலதிகாரி என்பதால் கூடுதல் கவனமாகத் தேட ஆரம்பித்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவளின் பெயர் கூடத் தெரியாமல் அவளருகே அமர்ந்திருந்தான் ஆதன். ஆதித்யனுக்கு அழைத்துச் சொன்னவன், அந்தப் பெண் விழித்ததும் விசாரித்து வீட்டிற்கு சொல்லலாம் என்றுவிட்டான்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து விழிப்பாவையைத் திறந்தவள் ஆதனைப் பார்த்து புருவம் சுருக்க, அதில் கடுப்பானவன் “அம்மா சாமி நான் உன்னை ஒன்னுமே பண்ணல, சும்மா போயிருக்கனும், அதைவிட்டு உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சு எதோ செய்ய போய், எதுவோ ஆகிடுச்சு.. நீ இப்போ நல்லா இருக்க.. உன் வீட்டு அட்ரஸ், போன் நம்பர் இருந்தா சொல்லு, அவங்களுக்கு தகவல் சொல்றேன்..” எனவும், மீண்டும் உதடு பிதுக்கியவளைப் பார்த்து தலையில் கைவைத்தவன் “இல்ல.. இல்ல உன்னை ஒன்னுமே சொல்லல சரியா.. ஒன்னுமே சொல்லல. இப்போ  உங்க வீட்டு போன் நம்பர் மட்டும் கொடு போதும்..” எனவும்,

அவளும் மூக்கை உறிஞ்சியபடியே ஆகாஷின் மொபைல் நம்பரைக் கொடுக்க, வங்கியவன் அழைத்து விபரம் சொன்னவன் உடனே வரச் சொல்லிவிட்டான்.

அவளுக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, கண்களைத் திறப்பதும், மூடுவதுமாக இருக்க, “உனக்கு தூக்கம் வந்தா தூங்குமா. உங்க வீட்டு ஆளூங்க வந்ததும் நான் சொல்லிட்டு போறேன்..” என ஆதன் சொல்ல,

“இல்ல.. அதெல்லாம் இல்ல.. சிஸ்டர் யாராவது இருந்தா வரச் சொல்லுங்களேன்,” எனக் கொஞ்சம் கெஞ்சலாகச் சொல்ல,

எதற்கு சொல்கிறாள் என்று புரிய, எழுந்தவன் கையிலிருந்த ட்ரிப்ஸைக் கழட்டி, அவள் இறங்க உதவி செய்து, ரெஸ்ட் ரூம் வரைக்குமே அழைத்துச் சென்றான்.

நிக்கி ஆச்சரியமாகப் பார்க்க, இங்க இருந்த சிஸ்டர் இன்னொரு வார்டுக்கு போறேன், கொஞ்சம் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு போனாங்க, அப்புறம் எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது இதெல்லாம் நான் செஞ்சிருக்கேன்..” என அவன் பட்டும் படாமல் பேச,

ரெஃப்ரெஷ் ஆகி வந்தவளுக்கு, பயமும் பதட்டமும் குறைந்து கொஞ்சம் நார்மலாகியிருக்க, அதோடு அவன் செய்கையின் அர்த்தங்களும் புரிய “சாரி..” என்றாள் மெல்ல.

எதற்கென்று எல்லாம் கேட்கவில்லை, “இட்ஸ் ஓக்கே. பட் இனி கவனமா இருங்க..” எனவும்

“ம்ம்.. நானும் என் அத்தானும் தான் வந்தோம், அவங்க ப்ரண்ட்ஸ் வரவும், என்னை இன்ட்ரோ கொடுக்கனும், எதுக்கு தேவையில்லாத பிரச்சினைன்னு என்னை அங்க உட்கார வச்சிட்டு பக்கத்துலதான் போனாங்க, அதுக்குள்ள இவ்வளவும் ஆகிடுச்சு..”

“ஏன் ஃப்ரண்ட்ஸ் க்கு இன்ட்ரோ கொடுத்தா என்ன.? அதோட நீ தனியா உக்காந்து ஐஸ்கிரீம் தான சாப்பிட்டு இருந்த”

“ம்ம் அது… அப்பாவும் மாமாவும், போலிஸ். அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. சேஃப் இல்லன்னு சொல்லுவாங்க.

“ஓ.. போலிஸ் ஃபேமிலியா சுத்தம். ஆனா ஒரு செல்ஃப் டிஃபென்ஸ் கூட தெரியல, என்ன வளர்த்து வச்சிருக்காங்க, இப்போ எல்லாம் பொண்ணுங்க எவ்வளவு பாதுகாப்பு கலைகள் கத்து வச்சிருக்காங்க, உன் ஃபேமிலியே போலிஸ்ன்னு சொல்ற, ஆனா ஒரு எழவும் தெரியல,” எனத் தன்பாட்டிற்குத் திட்ட,

“ஹலோ… எனக்கு கராத்தே தெரியும், நான் ப்ளாக் பெல்ட் சேம்பியன்..” என ரோசமாகச் சொல்ல.

“சேம்பியன் அதுவும் ப்ளாக் பெல்ட் சேம்பியன். எது உங்க வீட்டு ஜிம்மி போட்டுருக்குமே அந்த ப்ளாக்பெல்ட்டா, வெளியச் சொல்லிடாத சிரிச்சிடுவாங்க, அதுதான் நான் பார்த்தேனே உன்னோட  உதவாத கராத்தேவ..” எனக் கிண்டலடிக்கவும்,

“அது.. அது அங்க பயங்கரமா கலவரம் வரவும், அதோட இதுதான் ஃபர்ஸ்ட் டைம் நான் அந்த மாலுக்கு வந்தது. என்ன பண்ணனும், எப்படி போகனும் தெரியல, அதான் அப்படியே நின்னுட்டேன்..” என விளக்கம் கொடுக்க,

“சரி.. புது இடம், பயம் எல்லாம் ஓகே தான், ஆனால் கையிலிருந்த பேகை ஒருத்தன் பிடுங்கிட்டு ஓடுனானே, அதையாச்சும் பத்திரமா வச்சிருக்கனும் இல்ல..” என நக்கல் குரலில் கேட்க

“நான் கவனிக்கல.. அதோட அந்த பேக்ல ஒன்னும் இல்ல, அதான் போனா போகட்டும்னு விட்டுட்டேன்..” எனக் கொஞ்சம் ரோசமாகச் சொல்ல,

“சுத்தம்” எனச் சத்தமாக முணுமுணுக்க,

“ஹலோ.. என்ன நீங்க என்னைத் திட்டிட்டே இருக்கீங்க, நானே பாவம் உடம்பு சரியில்லாம இருக்கேன், பசிக்கிது வேற, சாப்பிட எதுவும் வாங்கிக் கொடுப்போம்னு எந்த எண்ணமும் இல்லாம, பேசிட்டே இருக்கீங்க..” எனக் கடுப்பாக நிக்கி சொல்ல,

“என்ன பாவம், அரை கிலோ கசாட்டவ மொத்தமா ஒரு ஆளா முழுங்கிட்டு இருந்தியே, அதுவும் அவ்வளவு சண்டையிலும், ஐஸ்கிரீம் முடியவும் தான தலையையே நிமிர்த்தின..” என அவனும் தன் கிண்டலைக் கொஞ்சமும் குறைக்காமல் சொல்லவும் ‘நீ ஆணியேப் புடுங்க வேனாம்’ என்ற ரீதியில் முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

நிகிதாவின் செயலில் அதுவரை இருந்த டென்சன், கோபம், பதட்டம் எல்லாம் பறந்துவிட, முகம் முழுக்க ஒரு வசீகரப் புன்னகை, கை தன்னைப் போல தலையைக் கோதிக் கொள்ள, மீண்டும் அவளைச் சீண்டும் எண்ணம் தோன்ற, அதை எண்ணி அதிர்ந்தவன் அங்கிருக்க முடியாமல் எழுந்து வெளியில் வந்துவிட்டான்.

அப்போது தான் உள்ளே நுழைய இருந்த சிஸ்டரிடம் சாப்பிட என்ன கொடுக்கலாம் எனக் கேட்க, “சூடா பால், காஃபி மாதிரி கொடுங்க, ஒன்லி லிகியூட் ஐடம்ஸ் மட்டும் இப்போ போதும்” எனவும்,

‘லிகியூட் ஐடம்ஸா அதெல்லாம் அந்த ஜீவனுக்கு எந்த மூலைக்குப் பத்த போகுது’ என மனதுக்குள் நினைக்க, மீண்டும் அவள் பேசியதை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது.

தனக்கு ஒரு காஃபியை வாங்கி அவசரமாகக் குடித்தவன், அவளுக்கு ஒரு ஹார்லிக்ஸோடு உள்ளே வந்தான்.

முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு படுத்திருந்தவளைப் பார்த்து மீண்டும் சீண்டும் எண்ணம் வர, “ஏன்மா… பாவம், பசிக்கிதுன்னு எல்லாம் டைலாக் விடுறியே முதல்ல உன்னோட பேரச் சொன்னியா..” எனக் கேட்க,

“ஹான் நான் தான் சொன்னேனே… நீங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணும் போதே என் பேர சொன்னேன்..” என கோபமாகச் சொல்ல,

“ஓ.. சொன்னியா… நான் தான் கவனிக்கல போல சரி விடு.. இந்தா ஹார்லிக்ஸ். லிக்வீடா தான் எடுத்துகனுமாம்..” என்றுவிட்டு அவளின் அடுத்த டைலாக்கிற்காக ஆவலாக காத்திருக்க,

அவன் எண்ணத்தைப் பொய்யாக்காத நம் நாயகியும் “என்னது வெறும் ஹார்லிக்சா… நோ.. நோ.. நோ.. இதெல்லாம் எனக்கு பத்தாது ஜென்டில்மேன், கொலப்பசில இருக்கேன்.. நானே பாவம் உடம்பு சரியில்லாம இருக்கேன்” என விட்டால் அழுதுவிடுவது போல சொல்ல, அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை, வாய்விட்டு சிரித்தான் ஆதன்.

“எதுக்கு இப்படி லூசு மாதிரி சிரிக்கிறீங்க.. ச்ச்சே.. நானே பாவம்” எனத் தலையைச் சிலுப்ப,

“பாவம் தான்.. ஆனா நீ இல்ல நான். நான் தான் பாவம். உன்னைப்பத்தி தெரியாம உங்கிட்ட மாட்டிட்டு இருக்குற நான் தான் பாவம்..” என அவளை மேலும் கடுப்பாக்க,

“ம்க்கும்..” என ஆதனின் பேச்சில் முகத்தை சுழித்துக் கொள்ள, அவனோ வேகமாக நிக்கிக்கு அருகில் வந்து முன்னும் பின்னும் தேட,

“ம்ச்.. எதுக்கு இப்படி பன்றீங்க, ஃபர்ஸ்ட் அந்த ஹார்லிக்ஸ எங்கிட்ட கொடுங்க, அதையும் கொட்டி விட்டுறாதீங்க..” என்றவள் அதை வாங்க கையை நீட்ட,

“இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தவங்களுக்கு பயத்துல தன்னால கையும், காலும் ப்ரேக் டான்ஸ் ஆடிட்டு இருந்திச்சு, இப்போ அவங்கள காணோம்,” என்றபடியே அந்த ஆறிப்போன ஹார்லிக்ஸை நிக்கியிடம் கொடுக்க, அவன் பேச்சில் அப்போதுதான் தன்னிலையும் புரிய, அதிர்ச்சியில் கையிலிருந்த அந்த டம்ளர் கீழே விழுவது கூடத் தெரியாமல், ஆதனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிகிதா.

You may also like

Leave a Comment

About Me

Featured