Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 17

காதல் கசக்குதைய்யா – 17

by Vathani S

வரவர  காதல் கசக்குதைய்யா – 17

முகுந்தன்  இப்படி செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, அங்கிருந்த அனைவரும் அப்படியே அதிர்ந்து நிற்க, தன் கோபத்தையெல்லாம் தூக்கி எரிந்துவிட்டு பாண்டியன் தான் வேகமாக முன்னே வந்து “ஏய் முகுந்தா என்னப்பா இப்படி பண்ணிட்ட..” என அவரைத் தூக்க, முகுந்தனும், பவித்ராவும் வந்திருப்பதை அப்போது தான் அறிந்து கேசவனும் அங்கு வர, அவரும்  நண்பனின் இந்தச் செயலைப் பார்த்து அதிர்ந்து வேகமாக முகுந்தனைப் பிடித்து தூக்கியிருந்தார்.

தந்தையின் செயலில் உண்டான கோபத்தில் உடல் இறுக, அங்கிருந்தால் எதுவும் பேசி விடுவோமோ என்று நினைத்த ஆதித்யன் எதிரில் நின்றப் பெண்களை ஒருப் பார்வை பார்த்துவிட்டு, தம்பியை இழுத்துக் கொண்டு, அந்த இடத்திலிருந்தே  வெளியேற, அவனின் பார்வையின் அர்த்தம் உணர்ந்த ஆரணியும், நிக்கியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து விட்டாள்.

கணவரின் செய்கையில் மனம் பதற, தான் செய்த தவறுகளெல்லாம் தன் கணவனைப் பாதிப்பதை உணர்ந்த பவித்ராவோ “ஓவென்று” கதறியழ, மகள் அழுவதைப் பார்த்து குருவம்மாவும் அழ, இந்தச் சத்தத்தைக் கேட்டு முத்துலிங்கமும் என்னவோ ஏதோவென்று தன் அறையிலிருந்து வெளியில் வந்திருந்தார்.

“ஏன்டா..? ஏன்டா இப்படி செஞ்ச, நீ என்னத் தப்பு செஞ்சன்னு இந்த மாதிரி ஒரு செய்கையைச் செஞ்ச..” எனப் பாண்டியன் நண்பனை உலுக்க, கேசவனும், “முட்டாளாடா நீ.. என்னக் காரியம் பண்ணிட்ட..” எனத் தன் பங்குக்கு திட்ட ஆரம்பிக்க,

“நான் செய்தது தப்புன்னு எனக்குத் தோனல, பவி என்ன தப்பு செஞ்சிருந்தாலும், அது எனக்காகத்தான் செஞ்சிருப்பா. அப்படி இருக்கும் போது நான் மன்னிப்புக் கேட்டாலும், அவ மன்னிப்புக் கேட்டாலும் ஒன்னுதான்” எனவும்,

“பைத்தியக்காரன் போல பேசாதடா… இப்படி எல்லாரும் அவளைத் தாங்குறதுனால தான், அவ  என்னத் தப்பு செஞ்சாலும் அதை அவ பெருசா எடுத்துக்குறது இல்ல. அதனால என்ன பாதிப்பு வருது, யார் பாதிக்கப்படுறா இதெல்லாம் அவ  யோசிக்கறதே இல்ல. தப்புத்தான்.. ரொம்ப பெரிய தப்புத்தான் இப்படி வளர்த்தது எங்கத் தப்புத்தான். ஆனா இருபத்தியெட்டு வருஷம் கூட வாழ்ந்துருக்கியே நீயாவது அவளை மாத்திருக்கலாம் இல்ல, அவளுக்காக நீ ஏன்டா இப்படி செஞ்ச..” என்னதான் முகுந்தனின் மேல் கோபமும் வருத்தமும் அளவுக்கு மீறி இருந்தாலும், சிறு பிள்ளைகள் இருப்பதைக் கூட உணராமல் எல்லோர் முன்னும் அவர் விழுந்ததைப் பாண்டியனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த வருத்தம் ஆதங்கமாக வெளிவந்து கொண்டிருந்தது.

“என் மேலையும் தப்பு இருக்கு தானே.. நானும் அன்னைக்கு ஒரு சுயநலவாதியா மாறி முடிவெடுத்துட்டேன். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டேன். அந்த நேரம் மூளை சொன்னதை ஏத்துக்காம மனசு சொன்னதை மட்டும் கேட்டு முடிவெடுத்துட்டேன்.  என்னதான் பவியைக் காப்பாத்த நான் கல்யாணம் செய்துக்கிட்டாலும், இந்த சந்தர்ப்பத்தை விட்டா அடுத்து பவியை கல்யாணம் செஞ்சிக்கவே முடியாதுன்னு தோனுச்சு, அதனால அந்த சூழ்னிலையை எனக்கு சாதகமா மாத்திக்கிட்டேன், இது என் தப்புத்தானே, உன்னோட நட்புக்கு நான் துரோகம் தான பண்ணிருக்கேன்.” என்றவர்,

“என் மனசு முழுக்க அவதான் பாண்டி, அவளை என்னால மறக்க முடியாம தான் இந்த ஊரைவிட்டு, எங்கேயோ போய் காடுமேடெல்லாம் சுத்தினேன். ஆனா நாளுக்கு நாள் அந்தக் காதல் கூடிச்சே தவிர குறையவே இல்லை. யாருக்கும் அவளை விட்டுக் கொடுத்துடக் கூடாதுங்கிற வெறியே வந்துடுச்சு. அந்த வெறி ஒருப்பக்கம், உனக்குத் துரோகம் செய்திடக் கூடாதேன்னு பயம் ஒருப்பக்கம்ன்னு எனக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். சரி கடைசியா ஒரு தடவை போய் பார்ப்போம். அவளை ஒருதடவையாச்சும் பார்த்துட்டு வந்துடுவோம்ன்னு இங்க வந்தேன்.”

“அப்போ தான் எனக்கு முன்னாடியே போய் கிணத்துல விழுந்தா, அதுவும் எனக்காக. எனக்காக ஒரு பொண்ணு, எந்த தகுதியுமே இல்லாத எனக்காக ஒரு பொண்ணு தன்னோட எல்லா உறவுகளையும், சந்தோசத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு சாகப் போகும் போது நான் என்ன செஞ்சிருக்க முடியும். அந்த நொடி யாரைப்பத்தியும் எனக்கு நினைக்கத் தோனல. நீயோ, இந்தச் சாதியோ, என்னோட சமூகமோ எதுவும் எனக்குக் கண்ணுக்குத் தெரியல, அவளை இங்க இருந்து எங்கையாச்சும் கூட்டிட்டுப் போய் நல்லா வாழனும்னு முடிவு பண்ணேன்.”

“இதெல்லாம் எனக்குத் தப்பா தெரியல பாண்டி, அவ எனக்காக என் கூட வந்ததுக்கு, என் வாழ்க்கைத் துணையா வந்ததுக்கு இந்த உலகத்தையே அவ காலடியில் வைக்கனும் போல ஒரு எண்ணம். அவளை ராணி மாதிரி பாத்துக்கனும்னு ஒரு வெறி, அதுக்காக கடுமையா உழைச்சேன், உழைச்சிட்டேப் படிச்சேன், அவளையும் படிக்க வச்சேன். இன்னைக்கு நல்ல நிலைமையில் இருக்கோம். அன்னைக்கு அவ எடுத்த முடிவு தப்புன்னா, அது தப்பாவே இருக்கட்டும். அவ செய்த தப்புல கிடைச்ச வரம் தான் இந்த வாழ்க்கை..” என மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காமல் பேச, அவர் பேசி முடிக்கும் வரை அவரையேப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா, அவர் மேல் சாய்ந்து விட்ட அழுகையைத் தொடர ஆரம்பித்தார்.

அங்கு இருந்த மற்ற அனைவரும் என்ன பதில் சொல்வெதென்றேத் தெரியாமல், முகுந்தனின் பேச்சில் வாயடைத்துப் போயிருந்தனர், எல்லோரும் அமைதியாக இருக்க, இத்தனைப் பேர் இருக்கிறோம் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் கணவரின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்த மகளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் முத்துலிங்கம். தன் மகள் நல்லமுறையில் ஒரு நல்லவனிடம் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதில் உண்டான மகிழ்ச்சியில், அவர் முகத்தில் நிம்மதியான ஒரு புன்னகை மலர்ந்தது.

கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த பவித்ராவின் பார்வையில் அவரது தந்தைப் பட, பெண்ணின் முகம் குற்ற உணர்ச்சியில் கசங்கிப் போனது. தாயைத் தேடும் கன்றைப் போல, அவரிடம் ஓடத் துடிக்கும் மனதை இழுத்துப் பிடிப்பது பெரும்பாடானது பவித்ராவிற்கு.

ஆனால் பெற்றவருக்கு அப்படியெல்லாம் இல்லைப் போல, “பவிம்மா..” என்ற முத்துலிங்கத்தின் ஒற்றை வார்த்தை அந்த இடத்தில் மாயம் செய்தது. ‘அப்பா’ என்ற வார்த்தைக் கூட காற்றாகிப் போக, மூச்சுக்குமே திணறும் அளவிற்கான மகிழ்ச்சியில் அவரிடம் சென்றவள் “என்னை மன்னிச்சிடுங்கப்பா, மன்னிச்சிடுங்கப்பா… நான் அப்போ. என்ன செய்யனும், யாருக்கிட்ட சொல்லனும் ஒன்னும் எனக்குத் தெரியலப்பா.. யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்கக் கூடாதுன்னுதான் என் உயிரை விடப் போனேன்..” எனச் சொல்லி முடிக்க, அவர் கை மகளின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

“யாத்தீ, அப்பா… ஐயா, மாமா” என்று ஒவ்வொருவரின் குரலும், ஓங்கி ஒலிக்க, “நான் என் மகக்கிட்ட பேசிட்டு இருக்கேன்..” என அழுத்தமாகச் சொல்லிவிட்டு பவித்ராவை அழைத்துக் கொண்டு தனதறைக்குச் செல்ல, குருவம்மாவும் ‘ஐய்யோ இந்த மனுஷன் என்ன செய்யப் போறாகளோ..’ எனப் பதபதைத்த மனதுடன் அவர்களுக்குப் பின்னோடு சென்றார்.

உள்ளே சென்றவர்களைப் பார்த்து புன்னகைத்த பாண்டியன், ரம்யாவிடம் “மாமியாரும் மருமகளும் விருந்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டீங்களா.?” எனப் புன்னகையுடன் கேட்க,

அவரும் “ம்ம்.. எல்லாம் ரெடியாதான் இருக்கு, எடுத்து வைக்கவா..?” எனவும்

“இல்ல.. நாங்க தோப்புக்கு போர்ரோம், பவி வெளிய வந்ததும்  ரெண்டு பேரும் சாப்பாட்ட எடுத்துட்டு, சுந்தரியையும் அழைச்சிட்டு அங்க வந்துடுங்க, இப்போ மாப்பிள்ளைங்களக் கூப்பிட்டு சாப்பிட வை..” என்றவர் முகுந்தனைப் பார்க்க, அவர் முகத்திலோ தடுமாற்றம்.

பாண்டியன் இப்படி இயல்பாக பேசியதை நினைக்க நினைக்க  அவரது குற்ற உணர்ச்சி மேலும் பெருகியது. அதனால் நண்பனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. ஆனால் கேசவனுக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இந்த தருணத்தை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தவர், இருவருக்கும் இடையில் இருவரையும் அனைத்துக் கொண்டார். மிகவும் கணமான நிமிடங்கள் தான். ஏனோ மூவருக்கும் கண் கலங்கும் போல இருந்தது..

அந்த சூழ்னிலையை இலகுவாக்கும் பொருட்டு, “மாமா நீங்க விரதம் இருக்கீங்க, மறந்துடாதீங்க.” என மெல்லக் கிண்டல் குரலில் சொல்ல,

“எல்லாம் தெரியும் போடி.. இன்னைக்கு விரதமெல்லாம் கிடையாது, நல்லா எலும்புக் கறியா ஒரு பிடி பிடிக்கப் போறேன்.” என அவரும் கிண்டலாகச் சொல்லிவிட்டு முன்னே நடக்க, கேசவனும் முகுந்தனை “வாடா மாப்ள..” என இழுத்துக் கொண்டு நகர, முகுந்தனுக்கு என்ன முயன்றும் தன் தயக்கத்தை விடமுடியவில்லை.

வெளியில் வந்த ஆதித்யனோ கொஞ்சமும் கோபம் குறையாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான், அங்கிருந்த மரத்திற்கடியில் அமர்ந்திருந்த ஆதனுக்கும் வருத்தம் தான் தந்தை இப்படி செய்து விட்டாரே என்று.

எந்த வயதிலும் பிள்ளைகளுக்கு தன் முதல் ஹீரோ  தன் தந்தைதான். இங்கும் அப்படியே பிறந்ததில் இருந்து அவர்களுக்குத் முகுந்தன் என்பவர் ஹீரோதான். அந்த இமேஜை எந்த இடத்திலும் அவர்கள் கழட்டவே இல்லை. அவரது அறிவு, உழைப்பு, சிந்தனை, அன்பு, மனைவி மேல் கொட்டும் காதல், அக்கறை எல்லாமே மகன்களுக்கு அவரை ஒரு பன்முகத் திறமைக் கொண்ட கதாநாயகனாகவேக் காட்டியது.

அப்படி ஒரு பிம்பத்தில் வைத்திருந்தவர் இன்று செய்த செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனை சமாதனங்களைக் கூறினாலும் மனம் ஏற்க மறுத்தது. அந்த ஆற்றாமை கோபாமாக மாற, அதைத் தன்மேலேக் காட்டிக் கொள்ளும் எண்ணத்தோடு தான் நடந்து கொண்டிருந்தான்.

அப்போது ரம்யா வர, அவரைப் பார்த்து என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை, அமைதியாக இருந்தனர் இருவரும். ஆனால் அனுபவசாலியான அவருக்குப் புரிந்தது. இரு ஆண்களின் உணர்வும். சிறு புன்னகையோடு, “வாங்கய்யா சாப்பிடலாம், அவங்க மூனு பேரும் தோப்புக்கு போயிட்டாங்க..” என இயல்பாக பேச,

“இல்ல.. இல்லத்த… கொஞ்சம் நேரம் போகட்டும் நீங்க போங்க..”  என எங்கேயோப் பார்த்து பேச, அவருக்கும் என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை. முகுந்தன் இப்படி செய்வார் என்று அவரும் தான் எதிர்பார்க்கவில்லையே.

“ஆதி.. அப்பா இப்படி நடந்துப்பாருன்னு இங்க இருக்குற யாருமே எதிர்பார்க்கல, அவர் முன்னமே இதெல்லாம் யோசிச்சுத்தான் வந்துருக்கனும். அவரோட தப்பை சரி செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கு. அத அண்ணா செஞ்சிருக்கார்.  ஆனா அதுக்காக இப்படி செஞ்சது ஏத்துக்க முடியாதுதான். எல்லாருக்கும் வருத்தம் தான். ஆனா முடிஞ்சதைப் பேசியோ, யோசிச்சோ என்ன ஆகப் போகுது சொல்லுங்க. இனிமேலாச்சும் எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருக்கலாமே..” எனக் கொஞ்சம் குரல் இரங்கி ரம்யா பேச,

ஆதனோ, “அத்தை இங்க இருக்குற யார் மேலையும் கோபம் இல்ல எங்களுக்கு, அப்பா மேல வருத்தம் அவ்வளவுதான். நீங்க இதுக்காக வருத்தப்படாதீங்க, அவன் கொஞ்ச நேரத்துல சரியாகிடுவான். நீங்க சாப்பாடு எடுத்து வைங்க, அவனை அழைச்சிட்டு வர்ரேன்..” என அத்தைக்கு சமாதானம் சொல்லி அனுப்பி விட்டு அண்ணனிடம் வந்தான்.

“ஆதி..” என அழைக்க, “இந்தப்பா ஏண்டா இப்படி செஞ்சார்..?” என்றான் ஆதங்கம் கோபம் கலந்த குரலில்.

“உனக்குத் தெரியாதது ஒன்னுமே இல்ல, அப்பா பிரச்சினையை சுமுகமா முடிக்க நினைச்சிருக்கார். அதோட செஞ்ச தப்புக்கு மன்னிப்பும் கேட்கனுமே..” என தமையனின் தோளில் தட்ட,

“ம்ப்ச்ச் போடா….” என்ற மூத்தவனின் குரலில் சலிப்புத்தான் மிதமிஞ்சியிருந்தது.

“ப்ச்ச் வாடா..” என்ற ஆதன் ஒருவழியாக அண்ணனை சமாதானம் செய்து சாப்பிட அழைத்து வந்திருந்தான்.

வீட்டுக்குள் நுழையும் முன்னே “ம்மா ஏன் இப்படி டார்ச்சர் பன்ற, காலையிலயும் அவங்க வர்ராங்கன்னு சாப்பிட விடல, இப்பவும் சாப்பிட விடமாட்டேங்குற ப்போ..” என ஆரணியின் குரல் கேட்க, ஆதன் பக்கென்று சிரித்துவிட, ‘இவளை’ எனப் பல்லைக் கடித்த ஆதித்யன் நேராக அவளுக்கு எதிரில் போய் அமர்ந்து, பிரியாணியை முழுங்கிக் கொண்டிருந்தவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“அத்தான் மம்மி மாதிரி நீங்களும் திட்டாதீங்க ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப பசிக்கிது..” என சிறு பிள்ளையாய் கெஞ்ச, அதுவரை இருந்த இறுக்கமெல்லாம் அவளது கிள்ளை மொழியில் பறந்தோட, சிறு புன்னகையுடன் அவள் தலையில் தட்டிவிட்டு “ஒன்னும் சொல்லாதீங்கத்த சாப்பிடட்டும்..” என்றவாரே அவளுக்கு அருகில் அமர்ந்தான்.

“இலை போடட்டுமா தம்பி, உக்காருங்க. நான் போய் நிக்கியை கூட்டிட்டு வர்ரேன்..” என நகரப் போக,

“ம்மா.. அவளுக்கு தலை வலிக்குதாம், டேப்லட் போட்டுட்டுப் படுத்துருக்கா, எழுப்ப வேண்டாம்..” எனச் சாப்பாட்டில் இருந்த கவனத்தைக் கலைக்காமலே சொல்ல, ஆண்களின் புருவம் யோசனையில் சுருங்கியது.

“என்னடி.. ரெண்டு பேரும் நல்லாத்தானே இருந்தீங்க..” எனச் சந்தேகமாகப் பார்க்க, “ம்மா.. உடனே உன் டிடக்டிவ் மூளை செர்லக் ஹோம்ஸ் வேலையை ஆரம்பிச்சிடுமே, நாளைக்கு தாரு அத்த வர்ராங்கல்ல, வந்து கூப்பிட்டு போயிடுவாங்கல்ல, மேடம் நம்மள விட்டுட்டு போகனுமேன்னு பீலிங்குல இருக்காங்க..” என ஏற்ற இறக்கமாய் சொல்ல, அது தனக்கான செய்தி என்பதைப் புரிந்து  கொண்ட ஆதன் தன் மொபலை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

“அதுக்கா இப்படி இருக்கா.. தாரு வரட்டும் பேசி இருக்க சொல்றேன்..” என ரம்யா முடிக்க, “அப்போ அவளுக்குப் பதிலா நீ காலேஜ் போவியா..” என மகள் கேட்க,

“என்ன காலேஜ் இருக்கா, அப்ப நீயும் தான போகனும்” என சந்தேகமாக இழுக்க, “ம்ம் அதுவந்துமா.. அது வந்து” என இழுக்க,

“பொய்.. பொய் வாயத் தொரந்தாலே பொய். வாத்தியார் புள்ள மக்கு மாதிரி, போலிஸ்காரன் புள்ள பொய்க்காரி..” என மகளின் தலையிலயேக் கொட்டியவள், “உங்கப்பா வரட்டும், அவருக்கிட்ட உன் கதையெல்லாம் சொல்லு, என்னை நீ ஏமாத்திடுவ..” என்றவர் ஆதித்யனுக்கு இழையைப் போட, தாயும் மகளும் வம்புக் கட்டுவதை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் ஆதித்யன்.

வெளியில் வந்த ஆதனோ நிக்கிக்கு அழைத்துக் கொண்டே இருந்தான். மூன்றாவது அழைப்பில் எடுத்தவள் ஒன்றும் பேசாமல் அழுது கொண்டே இருக்க, “நிதாம்மா என்னடா.. எதுக்கு இப்படி அழற, என்னடா..” என அவளிடம் கேட்க

“அம்மா வராங்க ஆது, வந்து கூடவே அழைச்சிட்டுப் போயிடுவாங்க, அங்க… அங்க..” என்றவள் தேம்பி தேம்பி அழுதாள்.

“ம்ச்.. குட்டிம்மா என்னனு சொல்லாம அழுதா எனக்கு ஒன்னும் புரியாது, நீ எழுந்து பின்னாடிப் பக்கம் வா. நான் அங்க இருக்கேன்..”  என மிகவும் தன்மையாகப் பேசினான்.

“இல்ல.. இல்ல வேண்டாம், எல்லாரும் இருக்காங்க, யாரும் பார்த்துடுவாங்க, நான் வர மாட்டேன்.” என்றவள் நான் அன்னைக்கே சொன்னேன் இந்தக் காதல் கன்றாவி எல்லாம் வேண்டாம்னு கேட்டியா, பாரு எவ்வளவு கஷ்டம்னு..” என மேலும் அவனிடம் கத்திவிட்டு, போனை அனைத்து தூக்கி எறிந்தாள், அதற்கு பிறகு பலமுறை அழைத்தும் அவள் எடுக்காமல் போக,  என்னவென்றும் சொல்லாமல் எதற்கு இப்படி அழுகிறாள் என்றும் தெரியாமல் போக கோபம் உச்சிக்கு ஏரியது. “ச்சே..” என்றுக் காலை உதைத்துவிட்டு உள்ளே வர,  “ஏன் அத்தான்..” எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “லவ் பன்றவங்களப் பத்தி என்ன நினைக்குறீங்க..” எனக் குசுகுசுவெனக் கேட்க,

எலும்பை உறிஞ்சியபடியே “நான் நினைக்குறது இருக்கட்டும், நீ ஏன் இப்ப இதைக் கேட்குற, நீ யாரையும் லவ் பன்றியா..” என சாவதானமாகக் கேட்க, “லூசு மாதிரி பேசாதீங்க, நாம தான் லவ் பண்றோமே..” எனக் கொஞ்சம் எரிச்சலாகக் கேட்க, “என்ன நாம லவ் பண்றமா, நீ லவ் பன்ற ஓகே, பட் நான் எப்போ அப்படி சொன்னேன் உன்னை லவ் பன்றேன்னு..” என அழுங்காமல் குழுங்காமல் அவள் தலையில் அணுகுண்டைப் போட்டான்.

அவன் சொல்வதைக் கேட்டு, “விளையாடாதீங்க அத்தான்..” என்றபடியே சாப்பாட்டை வாயில் வைக்க, “நோ.. நோ… ஐம் வெரி சீரியஸ்.. எனக்கு இந்த லவ் எல்லாம் செட்டாகாது.. காதல்னாலே எனக்கு வெறுப்புதான் வருது. அப்படி இருக்கும் போது நான் எப்படி லவ் பண்ணுவேன்..” என மிகவும் சாதாரணமாக விளக்கம் சொல்ல, கேட்டப் பெண்ணோ வாயில் இருந்த உணவை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், அதிர்ச்சியில் விரிந்த விழிகள் இரண்டும் கலங்க,  அப்படியே அதிர்ந்து நின்றிருந்தாள் ஆரணி. அதிர்ந்து நின்றது ஆரணி மட்டுமல்ல உள்ளே வந்த ஆதனும் தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured