Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 16

காதல் கசக்குதைய்யா – 16

by Vathani S

வர வர காதல் கசக்குதைய்யா – 16

அன்றைய நாள் மிகவும் பரபரப்பாக விடிந்தது. வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் அதை செய் இதை செய் என பாடாய் படுத்திக் கொண்டிருந்தார் குருவம்மா. இருக்காதா பின்னே பல வருடங்களுக்குப் பின் தன் மகள் பிறந்த வீட்டிற்கு வருகிறாளே. அவள் இளவரசியாக சுற்றித் திரிந்த இடமல்லவா இந்த வீடு. இப்போதோ மஹாராணியாக வருகிறாள். மனம் முழுக்க மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க, வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்க, கைகள் அதன்பாட்டிற்கு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தது. அவர் செய்யும் அட்டகாசங்களை ஒரு எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் முத்துலிங்கம். 

“ஏன்டீ குருவு.. ஓடிப்போனவளுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஆகாதுடி, நீ பண்ற அலும்புக்கு அளவே இல்லாம போகுது. நான் அவளையே இந்த வீட்டு வாசப்படிய மிதிக்கக் கூடாதுன்னு சொன்னா, நீ அந்த ஓடுகாலி குடும்பத்தையே உள்ளக் கொண்டுவரப் பார்க்குறியா..” எனக் கோபத்தில் கத்த,

“என்னய்யா பேசுறீர், கடைசிக் காலத்துல என் பொண்ணு முகத்தைக் கூட பார்க்க விடமாட்டிகளா.? அதுக்கு கூட எனக்கு கொடுத்து வைக்கல போல, அந்த ஏக்கத்துலயே என் கட்டைப் போய் சேரனும்னு நினைக்கீக என்ன.? என்ன மனுஷன்யா நீரு.? எனப் புடவைத் தலைப்பை எடுத்து வாயை மூடி அழுவது போல் குருவம்மா செய்ய, 

“ச்சே.. பொம்பளையா டீ நீ.. நயன்தாரா தோத்துப் போவா உங்கிட்ட, நடிப்பு.. நடிப்பு அம்புட்டும் நடிப்பு..”  எனக் கடுகடுவெனக் கத்திவிட்டு நகர,

“போய் சேர வேண்டிய வயசுல கெழவனுக்கு எம்புட்டு வீராப்பு, நயந்தாராவாம், நயந்தாரா… என்னத்த நயஞ்சாலோ. இந்த நடிப்பு மட்டும் இல்லன்னா உம்மக் கூட இத்தன வருசம் குப்பைக் கொட்டிருக்க முடியுமா.. இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறைச்ச இல்ல..” என முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்த்தார் குருவம்மா.

ஆனால் முத்துலிங்கம் அமைதியாக இருக்கவில்லை, பவித்ராவின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த மருமகளிடம் சென்று “ஏம்மா மருமகளே நீயாச்சும் சொல்ல வேண்டாமா உம் மாமியக்காரிக்கிட்ட.? பாரு எம்புட்டு அலப்பற பண்ணிட்டு இருக்கான்னு, அவள வூட்டுக்குள்ள விட்டாலே இந்த ஊரு என்ன பேசும் என்னை.. முத்துலிங்கத்துக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லன்னு பேசாது, என் கௌரவம், மரியாதை என்னாகுறது” எனவும், 

“மாமா..  நீங்க சொல்லியே அத்தை கேட்கல, இதுல நான் சொல்லியா கேட்கப் போறாங்க, விடுங்க மாமா.. அவங்களும் பாவம்தான.. உடம்பு சரியில்லாதவங்க வேற” என ரம்யாவும் சொல்ல, “உன் அத்தை சொல்றதுக்கு மறுவாத்த பேச மாட்ட நீ… உங்கிட்ட வந்து சொன்னேன் பாரு..” என அவரையும் திட்டிவிட்டு நகர, ரம்யாவின் முகம் புன்னைகையைப் பூசிக் கொண்டது.

மனைவியும் மருமகளும் கைவிட்ட நிலையில் முத்துலிங்கம் அடுத்து வந்து நின்றது மகனிடம். “பாண்டியா” என ஆரம்பிப்பதற்குள்ளாகவே, “அப்பா எதுக்கு இப்போ இந்த வேலை பார்த்துட்டு இருக்கீக, வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க, நாமதான் அவங்கள வரச் சொல்லிருக்கோம், இப்போ வேண்டாம்னு சொன்னா என்ன நினைப்பாக நம்ம குடும்பத்தைப் பத்தி.” எனச் சற்றுக் காரமாகப் பதில் கொடுக்கவும் தான் அமைதியாக போய் ஒரு இடத்தில் அமர்ந்தார், ஆனாலும் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்காமல் இல்லை. 

பாண்டியனுக்கு முதல் நாள் இரவு குருவம்மாள் பேசியது நினைவில் ஆடியது. அன்று கோவிலுக்குப் போய் வந்ததுமே அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. விட்டால் அப்போதே மகளை கையோடு அழைத்து வந்திருப்பார். ஆனால் அப்படி வந்தால் அதற்கான மரியாதைக் கிடைக்காது என்பதால் அமைதியாக வந்துவிட்டார். அதோடு இங்கு முத்துலிங்கத்தை சமாளிக்க வேண்டிய மிகப்பெரும் சவாலும் காத்திருந்தது.

அவர் பேசினால் மட்டுமே கொஞ்சத்திற்கு கொஞ்சமேனும் இறங்கி வருவார். அதனால் தன் ஆசையை அடக்கி மகளிடம் நாளைக்கு வந்தே ஆகவேண்டும் என்று உறுதியாகச் சொல்லியே அனுப்பி வைத்தார். 

வீட்டுக்கு வந்தவர் நேராக மகனிடம் சென்று நிற்க, அவருக்கும் தெரிந்திருந்தது என்னப் பேசப் போகிறார் என்று. “என்னம்மா மகளையும் மருமகனையும் பார்த்துட்டு வந்துட்டீங்க போல..” என அவரே ஆரம்பிக்க,

“அது பாண்டி.. அதுவந்து கோவிலுக்குப் போனோம், போன இடத்துல பவியும், மாப்பிள்ளையும் வந்திருந்தாங்க, பார்த்துட்டு எப்படி பேசாம வர்ரது” என வார்த்தைகளை மென்று விழுங்க,

“ம்ம்ம்.. பேசிட்டீங்க  போல, அப்புறம் என்னம்மா..” என அவர் வாயிலிருன்ட்ஹே வரட்டும் என பேச்சை இழுக்க,

“அது தம்பி, உங்கிட்டயும் அப்பாருக்கிட்டயும் கலந்து பேசாம ஒரு முடிவு எடுத்துட்டேன், தப்பா எடுத்துக்காத தம்பி, இது தாய் மனசு கேட்காது, எல்லா புள்லைகளும் எனக்கு ஒன்னுதான், அதுவும் பவி பொண்ணு என் உசுருக்கும் மேல, அவளை இத்தன நாள் பார்க்காம இருந்ததே எனக்கு கஷ்டமா இருக்கு, இன்னைக்கு நம்மள தேடி வந்துருக்கும் போது எப்படி தள்ளி வைக்கிறது, அதான்..” என இழுக்க்,

“சரிம்மா.. நான் இப்போ இதெல்லாம் இல்லைன்னு சொன்னேன், நீங்க எதுக்கு சுத்தி வளைக்கிறீங்க, என்ன சொல்லனுமோ சொல்லுங்க, நான் என்ன செய்யனும், வெத்தல பாக்கு தாம்பூழம் வச்சு உங்க பொண்ணையும், மருமகனையும் முறையா போய் அழைச்சுட்டு வரட்டுமா..?” எனக் கொஞ்சம் குரலில் கிண்டலை ஏற்றிக் கேட்க,

“எய்யா.. என்னைய்யா இப்படியெல்லாம் பேசுத, உன் தரத்தை நான் எங்கேயும் இறக்கி விடமாட்டேன்யா, எனக்கு நீ ஒரு கண்ணுன்னா, அவளும் ஒரு கண்ணுதானைய்யா, என் வயித்துல பொறக்கலன்னாலும், அவ எம்பொண்ணுதான்யா.. அதை யாராலையும் இல்லைன்னு சொல்ல முடியாதுல்ல..” என அவருக்கும் பேசத் தெரியும் என்று பேச,

“எதுக்கு இவ்வளவு இழுத்துப் பேசுறீங்க, நான் என்ன செய்யனும்..” என அலுப்பானக் குரலில் கேட்க,

“எய்யா.. என்ன இருந்தாலும் அவ உந்தங்கச்சி அப்பு, இப்படி வெட்டேத்தியா பேசாத ராசா, மனசு கெடந்து வலிக்குது, ஏதோ புத்திக் கெட்டத்தனமா தப்பு பண்ணிட்டா, ஆனா நம்ம முன்னாடி வந்து கண்ணக் கசக்கலையே, அந்த மவராசனும், அவரு புள்ளைங்களும் அவள ராணி மாதிரி வச்சுருக்காங்க, நம்ம பொண்ணுக்கு அதைவிட வேறென்ன வேணும் சொல்லு.”

“அன்னைக்கு நீ வரதுக்கு முன்ன அவ உசுரு போயிருந்தா என்ன செஞ்சிருப்போம், வாயிலயும் வயித்துலயும் அடிச்சிட்டு அழுதுருப்போம். அந்த பாவம் நம்ம வம்சத்தவே தொடர்ந்திருக்கும். ஆனா அன்னைக்கு நடந்தது என்ன, நான் கும்புடுற அந்தக் கந்தனே நேர்ல வந்து காப்பத்தின மாதிரி, நீ வந்து எம்பொண்ணு உசுர காப்பாத்தின, அப்படி காப்பாத்தி எதுக்கப்பு, இப்படி அவ அநாதையா கெடக்கவா, சொல்லுய்யா.. இத்தன வருஷத்துல உங்கோவம் கொஞ்சமும் கொறையலயா, எங்க காலத்துக்கு அப்புறம் சொந்தம்னு சொல்லிக்க, அவளுக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா சொல்லுய்யா..” என்றவர் முகத்தை மூடிக் கொண்டு அழ,

அவர் பேசப்பேச பாண்டியனுக்குள்ளும் அந்த இறுக்கம் மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்தது. அப்போது காஃபியோடு ரம்யா உள்ளே வர, அந்தக் காபியை எடுத்துத் தாய்க்கு கொடுத்தவாறே “எனக்கு கோபமெல்லாம் இல்லம்மா, வருத்தம் தான். அது நிறைய இருக்கு. அவ எனக்கு தங்கச்சிதான், அதனால எங்கிட்ட மறைக்க காரணம் இருக்கு, ஆனா இவளுக்கு,” என மனைவியைக் காட்டியவர், “இவளுக்கு என்னம்மா.. உயிரா பழகின சினேகிதி. அவளுக்காகவாச்சும் உண்மையா இருந்திருக்கலாம் தான. தேவையில்லாம கேசவனையும் இழுத்துவிட்டு, அவங்க குடும்பத்துக்கும் அசிங்கம்..” எனவும்,

“மாமா முடிஞ்சதைப் பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல, அதோட அண்ணனுக்கு இப்ப இன்னொரு குடும்பம் இருக்கு, நாம பேசுறதுக்கு அவங்களுக்கும் கஷ்டம், நாம நம்மக் குடும்பத்தைப் பத்தி பேசுவோம்.” என்று கணவரிடம் சொன்னவர், “காஃபியைக் குடிச்சிட்டு போய் கொஞ்ச நேரம் படுங்கத்தை,  நான் பேசிக்குறேன்” என்றதும், குருவம்மாவிற்கும் அடுத்து என்ன பேச வேண்டும் என்று புரியவில்லை, அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டார். 

“என்னடி… மாமியாருக்கு சப்போர்ட்டா, இல்ல உன் ப்ரண்டுக்கு சப்போர்ட்டா..” என்றார் பாண்டியன்.

“அப்படியெல்லாம் இல்லை மாமா, ஆனா அப்படித்தான்..” என்றதும், புருவ சுருங்க மனைவியைப் பார்த்தார். “எனக்கு ஃப்ரண்ட் ஓக்கே, உங்களுக்கு யாரு. பவித்ராவை விட்டுருவோம். முகுந்தன் அண்ணா என்ன பண்ணார். சொல்லுங்க மாமா அவர் என்ன பண்ணார், அவர் மேலத் தப்பே இருக்காது. அவ உயிரை நீங்க ஒரு தடவைக் காப்பத்திருக்கீங்கன்னா, அண்ணா ஒரு தடவைக் காப்பாத்திருக்காங்க, அதை மறந்துட்டீங்க போல. நம்மக்கிட்ட சொல்ல அவளுக்கு தைரியம் இல்லாமத்தான சாகப்போனா, அதை மறந்துட்டீங்க. அவளுக்குப் பாசத்தைக் கொட்டுன எல்லாரும், கூடவே பயத்தையும் கொட்டிருக்கோம். அதுதான் அவளை இப்படிக் கொண்டு வந்து நிறுத்திருக்கு.. ஆனா அண்ணா பவித்ராவை நினைச்சுப் பயந்துதான் இங்க வராம இருந்துருக்கனும். அவ பயத்தை நினைச்சு அண்ணனுக்கும் பயம். அதுதான் அவங்களை இங்க வர விடாம செய்திருக்கு. இதுக்கு யாரும் காரணம் இல்ல, காலமும், சூழ்நிலையும் தான்.” எனப் பொறுமையாகச் சொன்னவர், “இன்னும் எதுக்கு மாமா கோபத்தை இழுத்து வைக்கனும், நமக்கு இருக்குறதே ஒரு பொண்ணு,  நாளைக்கு அவளைக் கொடுத்துட்டு இப்படி முகத்தைக் காட்டிட்டு இருக்க முடியுமா சொல்லுங்க.?” எனவும் பாண்டியன் முகத்தில் புன்னகை.

“அன்னைக்கு உன் அண்ணங்கிட்ட வேற என்னமோ பேசுன, இப்போ வந்து இப்படி பேசுற, மாத்தி மாத்தி பேசுதே வாய்..” எனச் சிரிக்க,

“அப்போ எனக்கு அண்ணன் செஞ்சது தப்புன்னு தோனிச்சு, அதோட பவித்ராவும் எப்பவும் யார் பின்னாடியும் நின்னுதான் தன்னோட காரியத்தை சாதிச்சிப்பா, அதனால தான் இந்த விஷயத்துல அவரைத் தலையிட வேண்டாம்னு சொன்னேன்..” என்றதும், “ம்ம்.. அம்மாவைப் பார்த்துக்கோ, நான் கொஞ்சம் வெளியப் போயிட்டு வர்ரேன், நாளைக்குத் தேவையானது இருக்கான்னு பார்த்துட்டு போன் பண்ணு, வரும்போது வாங்கிட்டு வந்துடுறேன்.” என்றவர் காஃபியைக் குடித்துவிட்டு வெளியில் வர, அவர் முன்னே மரத்திலிருந்து தொப்பென்றுக் குதித்திருந்தாள் அவரது அருமை மகள்.

திடீரென்று குதித்ததும், மூச்சு வாங்க இரண்டெட்டு பீனே நகர்ந்தவர் “ஆரு..” எனப் பல்லைக்  கடிக்க, “சாரிப்பா, சாரிப்பா..” என்றவள் வீட்டுக்குள் ஓட, அதற்குள் பட்டென்று அதே இடத்தில் நிக்கியும் குதிக்க, பாண்டியனுக்கு இதயம் துடிப்பதே நின்று விடும் போல் இருந்தது. 

படபடவென அடித்த இதயத்தை சமன்செய்தபடியே நிக்கியைப் பார்க்க, அவளும் “சாரி அங்கிள், சாரி அவ என்னோட சாக்லேட்டத் தூக்கிட்டு வந்துட்டா..” எனப் பிராது வாசித்தபடியே உள்ளே ஓட, “ஷப்பா இதுங்கள வச்சிட்டு” எனத் தலையில் கைவைத்துக் கொண்டார். 

நேற்று நடந்தவைகளை யோசித்தபடியே ஒரு புன்னகையோடு தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஆதித்யனுக்கும், ஆதனுக்கும் அறையை ரெடி செய்து கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும், “ஏன் மச்சான்.. அப்பத்தா அப்படி என்ன பேசிருப்பாங்க அத்தைக்கிட்ட, இங்க வந்து தங்குற அளவுக்கு ரெடியாகிட்டாங்க..” என நிகிதா கேட்க,

பில்லோ கவரைத் தட்டியபடியே “எனக்கும் அது தெரியல மச்சி, கேட்டா இந்த அப்பத்தா உனக்கெதுக்குன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுதுடி..” எனவும்

“ஆமா நீ ஏன்டீ உம்முன்னு இருக்க, உங்க அப்புச்சி வேற எல்லாரையும் டென்சன் பண்ணிட்டு இருக்கார்..” என்றவாரே வார்ட்ரோபை நகர்த்த, 

“ம்ச்.. அவருக்கு அவரோட கஷ்டம், அவர் செய்றதையோ, சொல்றதையோ தப்பு சொல்ல முடியாது மச்சி, இந்த் காலத்துல லவ் மேரேஜ், அதுவும் இன்டர்காஸ்ட் லவ் மேரேஜ் சாதாரணமா போச்சு, ஆனா அப்புச்சியோட அந்த காலம் அப்படி இல்லையே, ஒரே சாதிக்குள்ளக் கூட லவ் மேரேஜ் அக்செப்ட் செய்துக்க மாட்டாங்களாம், அப்படி இருக்கும்போது அத்த்தை செஞ்சதோ இன்டர்காஸ்ட் லவ் மேரேஜ். அப்புச்சி அதை எப்படி ஏத்துப்பாங்க. அவரோட ஃபீலிங்க்சும் சரிதானேடா, அவரையும் நாம புரிஞ்சிக்கனும்..”

“இப்போ என்ன சொல்ல வர்ர, உங்க அத்தையை இங்க வரவேணாம்னு அப்புச்சி சொல்றது சரின்னு சொல்றியா.?” கடுப்பாகக் கேட்டாள் நிகிதா.

“நான் அப்படி சொல்ல வரல, அப்புச்சியோட பார்வையில அது சரிதான மச்சி” எனத் திடமாகச் சொன்னாள் ஆரணியும்.

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைஞ்ச மாதிரி, எல்லாம் சரியாகும் போது நீ குழப்பம் செய்யப் போறியா..” எனச் சற்றே பயத்துடன் கேட்க,

“ம்ச்ச்.. அப்படி இல்ல பிசாசே, அப்புச்சியையும் நாம கன்சிடர் செய்யலாம்னு சொன்னேன்..” எனும் போது வாசலில் கார் சத்தம் கேட்க, வேகமாக பெண்கள் இருவரும் அறையிலிருந்து வெளியில் வர, மாமியாரும் மருமகளும் வாசலுக்கே வந்துவிட்டனர்.

பவித்ரா தன் குடும்பத்தோடு வாசலில் நிற்க, மருமகளை வைத்து நால்வருக்கும் ஆரத்தி எடுத்ட்ஹே உள்ளே அழைத்தார் குருவம்மா. ரம்யாவோ எல்லாரையும் பார்த்து ‘வாங்க வாங்க’ என்றாலும் பவித்ராவின் புறம் திரும்பக் கூட இல்லை. அது பவித்ராவுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

தன் தோழி ஓடிவந்து தழுவிக் கொள்வாள் என்றெல்லாம் எதிர்பார்த்து வரவில்லைதான். ஆனால் இப்படி முகத்தைக் கூட பார்க்கமாட்டாள் என்று நினைக்கவில்லை. மனைவியின் சோர்வான முகத்தைப் பார்த்த முகுந்தன், அவர் கையியப் பிடித்து லேசாக அழுத்த, அதில் நிமிர்ந்தவர் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை ஒட்டவைத்துக் கொண்டார்.

இவர்கள் வருவது ஊருக்குள் தெரிந்துவிட, ஊரில் உள்ள பெரிய தலைகள் எல்லாம் வர ஆரம்பித்திருந்தனர். இந்த நேரத்தில் பேசி எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்ற முத்துலிங்கமும், அவர்களைப் பார்த்ததும் தன் அறைக்குள் போய் நுழைந்து கொண்டார்.

சிறுவயதில் முகுந்தனைப் பார்த்த மக்கள் இப்போது அவர் இருக்கும் நிலையைப் பார்த்து வாயில் கைவைத்தனர். “பரவாயில்லையே பொண்ணைக் கூப்பிட்டு போய் ராணியாட்டம் தான் வச்சிருக்கான்” என வந்தவர்கள் எல்லாம் சொல்ல, குருவம்மாவிற்கு வாயெல்லாம் பல்லாகிப் போனது.

பவித்ராவும், முகுந்தனும் வந்தவர்களிடமேப் பேசிக் கொண்டிருக்க, வீட்டாட்கள் யாரும் அவர்களுடன் பேசவில்லை. குருவம்மா மட்டும் தான் சுழன்று சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கூடவே ரம்யாவையும் ஒருவழி செய்திருந்தார். 

சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து வெளியாட்கள் கிளம்பி, வீட்டாட்கள் மட்டும் இருக்க, அங்கே அசாதாரன அமைதி. யார் முதலில் தொடங்க என்பது போல் ஒரு சூழல். தப்பு செய்தவர்கள் இது தனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து பயனபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த முகுந்தன், தன் பதவி, மரியாதை வயது எதையும் யோசிக்காமல், அந்த வீட்டின் முற்றத்தில் அத்தனை பேர் முன்பும் நெடுஞ்சாண்டையாக விழுந்திருந்தார்.

You may also like

Leave a Comment

About Me

Featured