வர வர காதல் கசக்குதைய்யா – 18
“முகுந்தா என்னப்பா.. வந்ததுல இருந்து ஒன்னும் பேசாம இருக்க..” எனக் கேசவன் கேட்க,
“என்ன பேசனும்னு தெரியல கேசவ்.. பெரிய மனுசங்க பெரிய மனுசங்க தான். நான் தான் பவியை யோசிச்சு இவங்களைத் தப்பா நினைச்சிட்டேன்..” என முகுந்தன் வருத்தமாகச் சொல்ல
“போனதெல்லாம் போகட்டும் விடுடா… இப்பவாச்சும் இங்க வந்தீங்களே, அதுவே ரொம்ப சந்தோசம். இனி பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு நிம்மதியா இருங்க..” என்றார் கேசவன்.
“ம்ம்.. சின்னவன் ஒரு பொண்ணை விரும்புறான் போல, ஆதி தான் ஆரணியைக் கட்டி வைக்கச் சொல்லிக் கேட்டான். பேச்சு வார்த்தை நல்லபடியா முடிஞ்சா ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம்..” என்றார் முகுந்தனும் இலகுவாகவே.
“ரெண்டு ஏன் மூணா கூட வச்சுக்கலாம், கதிருக்கும் கல்யாணம் செய்யனும்னு சுந்தரி ஒத்தக் கால்ல நிக்கிறா, அவன் ட்ரெயினிங்க் போக முன்னாடி செய்யனும். கதிருக்கிட்ட பேசி சம்மதம் வாங்கி அவன் கல்யாணத்தையும் சேர்த்து மூணா வச்சிடலாம்.” எனக் கேசவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கைக்கொன்றாக இரண்டு இளநிகளை எடுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார் பாண்டியன்.
இருவரிடமும் கொடுத்தபடியே “என்னப்பா தீவிரமா ஏதோ பேசிட்டு இருக்கீங்க போல ரெண்டு பேரும்,” எனக் கேட்டவாறே பின்னாடி வேலையாள் வைத்திருந்த ஒரு இளநீயை தான் வாங்கிக் கொண்டு அவனை அனுப்பினார்.
“அட ஏன்ப்பா நீ வேற, பசங்க கல்யாணத்தைப் பத்தி தான் பேசிட்டு இருக்கோம். நீ இல்லாம என்ன பேச,” எனக் கேசவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாண்டியனுக்கு போன் வர, எடுத்துப் பார்த்தவரின் முகத்தில் சிறு புன்னகை. “சேலத்துல இருந்து நிக்கிப் பொண்ணோட அப்பாதான், என் கூட செர்விஸ்ல இருக்கார்..” எனத் தகவல் சொல்லிவிட்டு காதில் வைத்தார்.
“சொல்லுங்க சங்கர் கிளம்பிட்டீங்களா..” எனவும்
“ஆமா பாண்டியன் சார், இங்க இருந்து எதுவும் திங்க்ஸ் வாங்கிட்டு வரனுமான்னு கேடகத்தான் கூப்பிட்டேன், நிக்கி நேத்து இருந்து சரியாவே பேசல, வாய்ஸும் அவ்வளவா சரியா இல்லை, உடம்பு சரியில்லையா, இல்ல எதுவும் பிரச்சினையா.?” என மிகவும் தயக்கமாகக் கேட்க,
“இல்லையேப்பா, இங்க என்ன பிரச்சினை. எங்க வீட்டுல ஒரு பிரச்சினை. நான் சொன்னேன்ல என் தங்கச்சி, அவ அவங்க குடும்பத்தோட வந்துருக்கா, அதுதான் ஓடுது. வேற என்ன நிக்கி கவலைப்படுற மாதிரி நடந்துச்சு..” என்றவர், “நீங்க எப்போ பேசுனீங்க, என்ன பேசுனீங்க..” என யோசனையாகக் கேட்க,
“ரெண்டு நாள் முன்னாடி தான் தாரணி பேசியிருக்கா, சென்னைல இருக்க அவ அண்ணன் பையனுக்கு நிக்கியைக் கேட்டு வர்ரதா சொன்னாங்க, அதை நிக்கிக்கிட்ட சொல்லிருக்கா..” எனச் சொல்லிக் கொண்டே வந்தவருக்கும் விசயம் புரிய, “நிக்கிக்கு இந்த கல்யாணப் பேச்சுப் பிடிக்கலையோ.?” என்றார் யோசனையாக.
பாண்டியனும் ஒரு பெருமூச்சுடன் “வாய்ப்பிருக்கு, அவளுக்கு வேற யார் மேலயாச்சும் விருப்பம் இருக்கலாம்..” என முகுந்தனைப் பார்த்து சொன்னவர், “அதெல்லாம் பார்த்துக்கலாம், நீங்க கிளம்பி வாங்க, இங்க வச்சுப் பேசிப்போம்..” என வைத்துவிட்டார்.
“என்னப்பா..” எனக் கேசவன் கேட்க, முகுந்தனும் அதேக் கேள்வியுடன் பார்க்க, “நம்ம நிக்கி வீட்டுல அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்களாம், தாய் மாமா பையன் தான், அவனும் போலிஸ் தான். நானும் பார்த்துருக்கேன். அதனால நிக்கியை அழைச்சிட்டு போக வர்ராங்க..” எனவும்,
“அப்படின்னா ஆது..” என இழுத்த முகுந்தன், “ஆது விரும்புற பொண்ணு நிக்கி தான், ரெண்டு வருஷமா பழக்கம். அந்தப் பொண்ணு சென்னை வந்ததுல இருந்து ரெண்டு பேருக்கும் விருப்பம்..” என விசயத்தைச் சொல்ல, கேசவனுக்கு ‘ஐய்யோ மறுபடியுமா’ என்றிருக்க, முகுந்தனோ யோசனையாகிவிட்டார்.
இங்கு வீட்டிலோ “ப்பா..” என பவித்ரா மீண்டும் அழைக்க,
“என்னைக்காவது உன்னை எடுத்து வளர்த்த பொண்ணு மாதிரி உங்கிட்ட வித்தியாசம் காட்டிருக்கமா நாங்க, ஆனா உன் மனசுல அதுமட்டும் தான் பதிஞ்சிருக்கு இல்லையா.?” என மிகவும் நிதானமாக முத்துலிங்கம் கேட்க
“அப்பா.. அப்படில்லாம் இல்லப்பா… எனக்கு பயம் உங்கக்கிட்ட சொல்ல எனக்குப் பயம்..” என வார்த்தைகளைத் தேட,
“பயமா.. உனக்கா.. நம்புற மாதிரி இல்லையே, ரெண்டு தடவை சாகப் போனவளுக்குப் பயம்னா? அதை நம்ப நான் என்ன முட்டாளா.?” என இப்போது கொஞ்சம் காரம் ஏறியக் குரலில் கேட்க,
“இல்லப்பா..” என ஏதொ சொல்ல வந்தவரைத் தடுத்தவர், “உன்னை முதன்முதலா இந்தக் கையில வாங்கி உன் அம்மா கையில கொடுக்கும் போது,” அங்கிருந்த குருவம்மாவைக் காட்டி, “இவ சொன்னா, நமக்கு ஆணொன்னு, பொண்ணொன்னு அமைஞ்சிடுச்சி, இனி குழந்தைகளே வேணாம். அப்படி பொறந்தா இவ மேல வைக்கிற பாசம் கொறைஞ்சிடும், அதனால நான் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிறேன்னு சொன்னா. அவ செஞ்ச தியாகத்தைக் கூட உன்னால நினைச்சுப் பார்க்க முடியல இல்ல..” என இப்போது இன்னும் காட்டமாகப் பேச, பவித்ராவால், அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே பேசமுடியவில்லை.
“என்னப்பா நீரு, என்ன பேசறீரு, புள்ள அழறா பாருங்க, அவ அழறதைப் பார்க்க எம் மனசுலயும் தெம்பில்ல, உடம்பிலையும் தெம்பில்ல, எத்தன வருஷம் கழிச்சு வந்துருக்கா, அவளப் போய் அழ வைக்கிறீரே..” என்றக் குருவம்மாவிற்கும் அழுகை தான்.
பவித்ராவிற்கோ என்ன சொல்ல, என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை. எப்போதும், யார் பின்னும் நின்றே பழகியவர், இப்போது தனக்கு பின்னே யாரும் இல்லை, உதவவும் யாரும் இல்லை என்றுப் புரிந்து கொண்டார். தான் செய்த தவறுகளுக்கான மன்னைப்பைத் தானேக் கேட்க வேண்டும் எனக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டார்.
அமைதியாக முத்துலிங்கத்திடம் வந்தவர் “நான் செஞ்சதெல்லாம் தப்புதான் ப்பா.. ஆனா எதுவும் தெரிஞ்சி செய்யல, உங்களை எல்லாம் அவமானப்பட வச்சிடக்கூடாதேன்னு தான் இப்படி நடந்துக்கிட்டேன், அதெல்லாம் தப்பா போயிடுச்சு.. என்னை மன்னிச்சிடுங்கப்பா, தயவுசெஞ்சி மன்னிச்சிடுங்கப்பா..” என விக்கியவர் அப்படியே அவர் காலில் விழுந்து கதற, குருவம்மா தான் ஓடிவந்து தூக்கியிருந்தார்.
“என்னங்க இது.. நம்ம பொண்ணுங்க.. அவளை இப்படி கஷ்டப்படுத்துறீங்களே..” எனவும்,
“அப்பா கேட்டது சரிதான், நான் தான் எல்லாரையும் கஷ்டப்படுத்திருக்கேன், எல்லா தப்பும் என்னோடதுதான், யாரையும் தப்பு சொல்லாதம்மா, அப்பாவுக்கு என் மேல இருக்குற கோபம் நியாயம் தான். அதை தப்பு சொல்ல முடியாது. இதுவரைக்கும் இந்த வீட்டுப் பொண்னா நான் ஒன்னும் செய்யல, இனிமேலாவது நான் பொறுப்பா இருக்க முயற்சி செய்றேன்” என்றவர், “ப்பா.. அவர் அவர் ரொம்ப நல்லவர் ப்பா, என்னை உயிரா விரும்புறார். கண்ணுல வச்சிப் பார்த்துக்குறார். அவரை உங்களுக்குப் பிடிக்கலையா..” என சிறு குழந்தைப் போல, வார்த்தைகளை முழுங்கி முழுங்கிப் பேசும் மகளைப் பார்த்ததும் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த கோபமெல்லாம் பறந்துவிட, “நாங்களே பார்த்திருந்தாலும் இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளையைப் பார்த்திருக்க முடியாது.” என முத்துலிங்க சொல்ல, “தங்கமான மனுஷன் தான்” என குருவம்மாவும் ஒத்து ஊத, மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பல நாட்கள் கழித்து அந்த வீட்டில் மகிழ்ச்சி நங்கூரமாக இறங்கியது.
ஆதித்யன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ஆரு “என்ன அத்தான் எல்லாத்துலையும் விளையாட்டா.?” எனக் கேட்க,
“ஹேய் லூசி… நான் ஏன் விளையாடப் போறேன். சீரியஸ்லி எனக்கு உன் மேல லவ்வெல்லாம் இல்ல, ஆனா மேரேஜ் செய்துக்குறேன். என் மாமா பொண்ணு, எனக்கு முறைப்பொண்ணு, உன்னை மேரேஜ் பண்ணா எங்கம்மா ஹேப்பியா ஃபீல் பண்ணுவாங்க, அதோட இந்த ரெண்டு ஃபேமிலியும் ஒன்னாகிடும்னு நினைச்சுத்தான், உன்னைக் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவே பண்ணேன்..” என சாதாரணமாகச் சொல்ல, ஆரணியின் கண்கள் கலங்க ஆரம்பிக்க, ஆதனுக்கு கடுப்பாகிவிட்டது.
நேராக ஆரணியிடம் சென்றவன், “ஆரு அவன் லூசு மாதிரி பேசுறான், நீ எதையும் மனசுல வச்சுக்காத, நான் என்னன்னு கேட்குறேன், உள்ள உன் ஃப்ரண்ட் அழுதுட்டே இருக்கா, என்னன்னு பாரு..?” எனச் சமாதானமாகப் பேசி அனுப்ப முயற்சிக்க,
ஆரணியும் ஆதியை முடிந்தளவு முறைத்துவிட்டு, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைய, “ஹேய்… தட்டை வச்சிட்டு, கை வாஷ் பண்ணிட்டு போ.. இப்படியே எங்க போற..” என அவள் மறந்து போய் எடுத்துச் செல்கிறாளோ என ஒரு ஆதங்கத்தில் ஆதன் கேட்க,
“அப்புறம், அப்புறம் எனக்கும் பசிக்குமில்ல..” என அவனின் ஆதங்கத்தில் ஒரு லோடு மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, “தேங்க்ஸ், வாட்டர்பாட்டில் எடுக்க மறந்த்துட்டேன்..” என மற்றொரு கையால் அதை எடுத்துக் கொண்டு ஆரணி சொல்ல, ஆதனோ “சரியான சோத்துப் பண்டாரம்” எனத் தலையில் கைவைத்துக் கொண்டான்.
ஆனால் ஆதியோ அவளது செயலில் அடக்கப்பட்ட புன்னகையுடன், தன்னைப் பார்த்து முறைத்தவளைப் “போடி” என உதடசைக்க, “இனி கிஸ் பன்றேன்னு பக்கத்துல வா, உன் வாயைக் கடிச்சி வக்கிறேன், ப்ளடி தக்காளீ..” எனக் கடித்துத் துப்பிவிட்டு உள்ளேப் போக, வாய்விட்டுச் சிரித்தான் ஆதித்யன்.
“என்ன ஆதி இதெல்லாம், அவ ஹர்ட் ஆகிருக்கப் போறா பாரு.. ஏன் இப்படி விளையாடுற..” என சலிப்பாய் கேட்க,
“அவ ஹர்ட்டான நான் பார்த்துக்குறேன். அதை விடு உனக்கு என்னாச்சு, நீ ஏன் டல்லடிக்கிற..” என விசாரிக்க,
“ம்ச் என்ன சொல்ல, நிக்கி வீட்டுல அவளுக்கு அலைன்ஸ் வந்துருக்கும் போல, அதப்பத்தி பேசிட்டு நிக்கியை அழைச்சிட்டுப் போக அவ பேரண்ட்ஸ் வராங்கன்னு நினைகிறேன், அது தெரிஞ்சதுல இருந்து மேடம் பயங்கர மூடவுட், என்கூடவும் சண்டை, ஏன் என்னை லவ் பண்ணன்னு.. ம்ச்.” சலிப்பாகவே பேசினான் ஆதன்.
“இதெல்லாம் ஒரு பிரச்சினையா.. விடுடா பார்த்துக்கலாம், முதல்ல அவ பேரண்ட்ஸ் வரட்டும், அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிப்போம், சரி வா உள்ள என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..” என முத்துலிங்கத்தின் அறைக்குள் நுழைய, இதையெல்லாம் சாப்பாடு எடுக்க வந்த ரம்யாவிற்கு கேட்க, ‘ஐய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா.?’ எனக் கேசவனைப் போலவே இவரும் நினைத்தார்.
உள்ளே நுழையும் போதே “என்னம்மா சொல்றார் உங்கப்பா..” என ஆதிக் கேட்டுக் கொண்டே வர,
“பவி டார்லிங்க் அஸ்வின் வந்ததும் புகழை மறந்த சிவாங்கி மாதிரி, உங்கப்பாக்கிட்ட வந்ததும் எங்களை மறந்துட்டப் பார்த்தியா..?” என வழக்கம்போல ஆதன் கிண்டலில் இறங்க,
“டேய்.. ஆரம்பிச்சிட்டியா.? கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்டா..” என பவித்ரா இரு மகன்களையும் மிரட்ட, அவர் மிரட்டுவதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர். அப்படியே அனைவரும் தங்களை மறந்து பழங்கதைகளைப் பேசிக் கொண்டே இருக்க, தோட்டத்தில் இருப்பவர்களுக்கு சாப்பட்டை எடுத்துத் தனியாக வைத்த ரம்யா, இப்போது உள்ளே வந்தார்.
வந்தவர் யாரையும் பார்க்கவில்லை, மாமியாரை மட்டும் பார்த்து “அத்த ரொம்ப நேரமாகிடுச்சு, சாப்பிட்டு பொறுமையா பேசலாம், தோட்டத்துக்குப் போனவங்களுக்கும் சாப்பாடு எடுத்துட்டுப் போகனும், நீங்க சாப்பிட்டா நான் கிள்மபுவேன்..” எனச் சம்பிரதாயமாகப் பேச, அங்கிருந்த அனைவருக்கும், குறிப்பாக பவித்ராவிற்கு தோழியின் ஒதுக்கம் புரிந்தது. அதை எப்படி சரி செய்வது என்று தயக்கம் வேறு வந்து ஒட்டிக்கொண்டது.
அந்த இடமே அமைதியாக, யாரும் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும் அப்படியே திரும்பப் போக, “அத்த நீங்க எடுத்து வைங்க, நானும் வர்ரேன் போகலாம், கதிர் இருந்தா வரச் சொல்லுங்க, அவன் வந்தா எனக்கும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும், ஆது நீயும் வாடா, ம்மா நீங்களூம் வர்ரீங்களா..?” என எல்லோரையும் அழைத்து அந்த சூழ்நிலையை மாற்ற, எல்லோரும் போகலாம் என்றே சொல்ல, ரம்யாவாலும் மறுக்க முடியவில்லை.
வேறுவழியின்றி அனைவருக்கும் சேர்த்தே சாப்பாட்டை எடுத்து வைக்க ரம்யா அங்கிருந்த நகர, “போ மம்மி, போய் அத்தைக் கூட பேசு. இன்னும் என்னத் தயக்கம், நீதான் பேசனும். போ அத்த கிச்சன்ல தான் இருப்பாங்க..” என ஆதித்யன் பேசியபடியே அழைத்து வந்து வெளியில் விட, அங்கோ ரம்யா ஆரணியிடம் போராடிக் கொண்டிருந்தார்.
“இப்ப என்னதாண்டி சொல்ற, வர்ரியா இல்லியா..” எனக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கேட்க,
“ம்மீ.. நிக்கிக்கு தலைவலி, அவளை விட்டுட்டு எப்படி வர, நீங்க போயிட்டு வாங்க நான் அவ கூட இருக்கேன், அப்பத்தா வீட்டுல தானே இருக்கும்.” என அவள் கடுப்பாகச் சொல்ல,
“எல்லாம் உங்கப்பத்தா கொடுக்குற செல்லம், என்னக்காச்சும் நான் சொல்றதைக் கேட்டுருக்கியா.. எனக்குன்னு வந்து வாய்க்குறது எல்லாம் இப்படியே இருந்தா கூடிய சீக்கிரம் சன்னியாசம் போக வேண்டியது தான்..” எனப் புலம்பிக் கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தார்.
“இவளோட..” எனத் தலையில் அடித்துக் கொண்டவன் “ஏய் எதுக்கு இப்படி எல்லாரையும் டென்சன் பண்ணிட்டு இருக்க லூசு, நிக்கிப் பிரச்சினை எல்லாம் ஒன்னுமே இல்ல.. நீ டென்சனாகி அவளையும் குழப்பி விடாத..” எனக் கடுப்புடன் சொல்ல,
“எல்லாம் எனக்குத் தெரியும் உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க, பெருசா பேச வந்துட்டாங்க, நானே இப்பத்தான் அவ லவ் ஸ்டோரியக் கேட்க ஆரம்பிச்சேன், அதுக்குள்ள எத்தன டிஸ்டர்பன்ஸ், பேசாம நம்ம மரத்துல ஏறிட வேண்டியதுதான்..” என முன்னதைச் சத்தமாகவும், பின்னதை முணுமுணுப்பாகவும் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து முறைக்க, இப்போது ஆதித்யன் பதிலுக்கு முறைத்துப் பார்த்தான்.
“லூசு.. அவளே எத்தன வருத்தத்துல இருக்கா, அவக்கிட்ட போய் லவ் ஸ்டோரி கேட்டுட்டு இருக்க..” என முறைத்துக் கொண்டே சொல்ல,
“ஆமாக் கேட்டேன், அதுக்கு என்ன இப்போ..? அது தெரிஞ்சாதான ஹெல்ப் பண்ண முடியும்” எனக் கெத்தாகச் சொல்ல, அருகில் நின்றிருந்தவளின் காதைப் பிடித்துத் திருகியவன், “நீயெல்லாம் திருந்தவே மாட்டடி, அந்தப் பொண்ணைப் போட்டு டார்ச்சர் பண்ணி அப்படியே ஓட விட்டுடாத..” எனப் பொங்கியச் சிரிப்புடன் சொல்ல, “தோடா.. கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்..” என அவனுக்குப் பழிப்புக் காட்டியபடியே உள்ளே ஓடிவிட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டு ஆதித்யனுக்கும் சிரிப்புத்தான், ‘நல்லவேலை நாம சொன்னதை பெருசா எடுத்துக்கல, அது மட்டும் மேடம் சீரியசா எடுத்துருந்தா என்னை எவ்ளோ நாள் வச்சு செய்வாளோ..’ என மைன்ட்வாயிசில் புலம்பிக் கொண்டிருந்தான், அதற்கு ஏற்கனவே திட்டம் போட்டுவிட்டாள் என்பதை அறியாமல்.