Home Love - Family - Romanceகாதல் கசக்குதைய்யா – 20

காதல் கசக்குதைய்யா – 20

by Vathani S

காதல் கசக்குதைய்யா – 20

“ஹேய் அறிவிருக்கா.? கண்ணை எங்க வச்சிட்டு வாங்குற..” என எரிச்சலாகத் திட்டியவன், நிக்கியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து, யோசனையாக ‘என்ன’ என புருவம் உயர்த்த,

“ஹான்..” என்றவள், “எங்க வீட்டுல எப்ப வருவாங்க.?” என மெல்லமாகக் கேட்க,

இதுவரைப் பட்டாசாக பொறிந்தவள், இப்போது அமைதியாக பேசவும் ‘என்னாச்சு இந்த பொண்ணுக்கு’ என யோசனையாகிவிட்டான். ஆனாலும்
“சொல்லிட்டேன், இப்போ வந்துடுவாங்க… நான் உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வர்ரேன்..” எனச் சொல்லிவிட்டு நகரப் பார்க்க,

“இல்ல.. இல்ல வேண்டாம், பசி போயிடுச்சு” என அவசரமாகச் சொல்லிவிட்டு, தப்பு செய்தது போல முழிக்க,

வெளியேப் போக போனவன், அவளது செயலில் “ஏன் இப்பத்தான பசிக்கிதுன்னு அவ்வளவு திட்டு என்னைத் திட்டின, அதுக்குள்ள என்னாச்சு..” என கோபமாகக் கேட்க,

‘அய்யோ இவன் வேற,  இஞ்சி தின்ன மங்கி மாதிரியே கோவமா பேசிட்டு இருக்கான், இப்படி பேசினா நான் எப்படி பேச, என பாவமாக மூஞ்சை வைத்துக் கொண்டு பார்க்க,

“இப்போ சொல்றியா இல்லியா..” எனக் கர்ஜனையாகக் கேட்க, அதுவரை பொறுமையாக இருந்த நிக்கி, அவன் கர்ஜணையில் கடுப்பாகி, “அடிங்க.. நானே போனா போகுதுன்னு விட்டா, ரொம்பத்தான் கத்துற, நான் என்னமோ உன் பொண்டாட்டி மாதிரி இவ்ளோ சீன் போடுற, செம காண்டுல இருக்கேன் ஒழுங்கா ஓடிரு..” எனக் கத்திவிட, இப்போது அதிர்ச்சியில் வாய் பிளப்பது ஆதனின் முறையானது.

அடுத்து என்ன பேச என ஆதன் முழிக்க, நிக்கியோ இன்னும் அவனை முறைத்துக் கொண்டுதான் இருந்தாள். அப்போது கதவைத் திறந்து வந்த ஆகாஷ், நேராக நிக்கியிடம் சென்று “ஏன்டீ தீனிபண்டாரம் உன்னை என்ன சொல்லி உக்கார வச்சிட்டு போனேன், நீ என்னடி பண்ணி வச்சிருக்க, உன்னால இன்னைக்கு எத்தனை பேருக்கிட்ட திட்டு..” என வந்ததும் வராததுமாகக் கத்த, வாழைப்பழத்தை திருடிய செந்திலைப் போல நிக்கி திருதிருவென முழிக்க,

“பதில் சொல்லுடி..” என மீண்டும் கத்த.

“ப்ரோ விடுங்க நான் சொல்றேன், ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருக்காங்க” என அவள் சொன்ன டைலாக்கைச் சொல்லி நமுட்டுச் சிரிப்பு சிரிக்க,

“சாரி ப்ரோ உங்களைக் கவனிக்கல, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ.. நீங்க எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா..? நீங்க செஞ்ச உதவியை எப்பவும் மறக்க மாட்டோம் ப்ரோ.. கண்டிப்பா ஒருநாள் வீட்டுக்கு வரனும்..” என நெகிழ்ந்து மனதார சொல்ல,

“அட என்னங்க நீங்க.. எதுக்கு இத்தன தேங்க்ஸ். ஜஸ்ட் டைமிங்க் ஹெல்ப், அவ்வளவுதான். நீங்க ஃபீல் செஞ்சி தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நான் சாதனை செஞ்சிடல, விடுங்க. முதல்ல அவங்களுக்கு சாப்பிட எதுவும் வாங்கிக் கொடுங்க..” எனப் பேசிக்கொண்டே நிக்கியைப் பார்க்க, ‘ஐ ஜாலி ஜாலி இப்போ இதை சாக்கா வச்சு ஒரு பிரியாணி ஆட்டய போடுறோம்’ என கண்கள் பளபளக்க அவள் தலையைச் சுற்றி குருவிகள் பறப்பது ஆதனுக்கு புரிந்தது.

‘மவளே என்னையவே மிரட்டின தானே உனக்கு வைக்குறேன் ஆப்புன்னு’ மனதுக்குள் நினைத்த ஆதன், “ப்ரோ டூ டேஸ்க்கு லிக்விட் ஐட்டம்ஸ் தான் கொடுக்கனுமாம், மோர், தயிர், கம்மங்கூழ், ராகிக்கூழ் இப்படி கொடுக்க சொன்னாங்க, ஸ்பைசி கண்டிப்பா அவாய்ட் பண்ணனும் சொல்லிட்டாங்க..” என மிகவும் சீரியசாகச் சொல்ல,

“என்ன..” என அதிர்ந்த நிக்கி. ‘முதலுக்கே மோசம் பண்ணிட்டானே பாவி..’ என ஆதனை முடிந்த மட்டும் முறைக்க, அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரிக்க,

‘கொலகாரப்பாவி  போற போக்குல ஒரு மட்டன் பிரியாணிக்கு ஆப்பு வச்சிட்டு போயிட்டானே.’ என மனதுக்குள் கொந்தளித்தாலும், வெளியில் பாவம் போல் முகத்தை வைத்துக் கொள்ள, அவளது ரியாக்ஷனை நினத்துச் சிரித்துக் கொண்டே கிளம்பிவிட்டான்.

அடுத்த இரண்டு நாட்களும் மந்த கதியில் கழிய, அன்று பிரதோசம் என்று காலையில் இருந்தே பவித்ரா நச்சரித்துக் கொண்டிருக்க, வேறுவழியில்லாமல் மயிலாப்பூர் சிவன் கோவிலுக்கு தாயை அழைத்து வந்திருந்தான் ஆதன்.

அப்போது அவர்களுக்கு எதிர்த்த வரிசையில் பிரசாத லைனில் நின்றிருந்தனர் ஆகாஷும் நிகிதாவும். அதைப் பார்த்ததும் உள்ளுக்குள் சாரல் எல்லாம் அடிக்கவில்லை பையனுக்கு. ‘என்னடா இது இப்படி தின்னுட்டே இருக்கா’ என நொந்துதான் போனான்.

தாயைக் கோவிலுக்குள் அனுப்பியவன் நேராக இருவரிடமும் வந்து நிக்கியை முறைத்துப் பார்க்க, ‘ஹாய் ப்ரோ’ என ஆகாஷ் கை கொடுக்கவும், அதைப் பற்றியவன் ஹாய் கூட சொல்லாமல், “உங்க கசின் இப்போ ஓகேவா.. அதுக்குள்ள சரியாகிட்டாங்களா..?” எனக் கொஞ்சம் கோபமாகக் கேட்க,

அந்தக் கேள்வியில் திருதிருவென இருவரும் விழிக்க, ஆதனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இருவரையும் கூர்மையாகப் பார்க்க, “அதுவந்து ப்ரோ… அன்னைக்கு இந்தம்மாவுக்கு ஃபிட்ஸ் எல்லாம் இல்ல, நீங்க திட்டிட்டே இருந்தீங்கன்னு..” என இழுக்க,

“நடிச்சியா..” என அவளைப் பார்த்து கோபமாகக் கேட்க, “ம்ஹ்ம்ஹ்” என்று சொல்லி இல்லையெனும் விதமாக, வேகமாகத் தலையாட்ட, “அப்புறம்..” என அதேக் கடுமையுடன் கேட்க

“நீங்க என்னை அடிச்சீங்க தானே..” என சிறுபிள்ளை போல அழ ஆரம்பிக்க,

“அப்போ நீ செஞ்சது சரின்னு சொல்ல வர்ர அப்படித்தானே,” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க,

அந்தக் குரலில் மிரண்டு விழித்தவள் “இல்ல.. நீங்க என்னை அடிச்சீங்க, திட்டுனீங்க. அப்போ எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பிச்சிட்டு, நீங்க வேற எலக்ட்ரிக் ட்ரெயின் மாதிரி நிறுத்தாம திட்டிட்டே இருக்கவும், பயத்துல..” என அப்போது இழுக்க,

“பயத்துல.. பயத்துல நடிச்சிருக்க அப்படித்தானே, இனி யாரும் இப்படி ஆபத்துல இருந்தா ஹெல்ப் செய்ய தோனுமா சொல்லு, நிஜாமாவே அவங்க ஒரு பிரச்சினையில் இருந்தாலும், நடிக்கிறாங்கன்னு நினைச்சு எந்த உதவியும் செய்ய தோனாது. ஷிட்.. நீயெல்லாம் என்ன பொண்ணு, இனி உன்னைப் பார்க்கவேக்கூடாது, என் மூஞ்சியிலேயே முழிக்காத ப்போ.. கொஞ்சம் கூட அறிவே இல்ல..” என அவளிடம் கொஞ்சமும் குறையாத கோபத்துடன் கத்திவிட்டு விடுவிடுவென நடந்துவிட்டான்.

“எரும ஏன்டா சொன்ன..” என ஆகாஷைக் கத்தியவள், “இப்போ என்னடா பன்றது..” என பரிதாபமாகக் கேட்க,

“ப்ரோ எவ்வளவு நல்ல எண்ணத்துல செஞ்சிருக்கார். யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும். அவரா இருக்கப்போய் இப்படி அமைதியா போறார், நானா இருந்தா நாலு அப்பு அப்பிருப்பேன்,” என நேரம் காலம் தெரியாமல் சூழுரைக்க,

‘இவன் வேற, கமலுக்கு சப்ஸ்டியூட் மாதிரி ஆக்ட் பண்ணிட்டு” எனக் கடுப்பானவள், “டேல் லூசு, அவன் நல்லவன் வல்லவன்னு எனக்கெப்படித் தெரியும், போர்ட் மாட்டிட்டா திரியிறான். ஏதோ அந்த நேரம் அவனைப் பத்தி தெரியாம பண்ணிட்டேன், இப்போ என்ன பன்றதுன்னு சொல்லித் தொலை, அதைவிட்டுட்டு டைலாக் பேசிட்டு இருக்க” என அவனிடம் கத்திவிட்டாள்.

“எங்கிட்ட ஏன்டீ பாயுற, தப்பு செஞ்சது நீ.. நீ தான் என்ன செய்யனும்னு யோசிக்கனும், எப்படியும் இங்கதான் இருப்பார், தேடிப்பார்த்து ஒரு சாரி சொல்லிட்டு வரலாம் வா..” எனக் கையைப் பிடித்து இழுக்க,

“இருடா புளியோதரையை வாங்கிட்டு போயிடலாம், அப்படியே சாப்பிட்டுக்கிட்டே தேடலாம், இப்போ போனா இவ்வளவு நேரம் கியுல நின்னது எல்லாம் வேஸ்டா போயிடும்..” என அப்போதும் அங்கிருந்து நகராமல் பேச,

“சோத்து மூட்டை சோத்து மூட்டை, உன்னையெல்லாம் எவன் கட்டிட்டு கஸ்டப்பட போறானோ..” என்று கத்திவிட்டு இழுத்துக் கொண்டு கோவிலைச் சுற்றித் தேட ஆதனை எங்கேயும் காணவில்லை.

கோவிலையே சுற்றி அலசியவர்கள் அவன் இல்லை என்றதும், மீண்டும் ஆகாஷ் அவளைத் திட்ட ஆரம்பித்துவிட்டான். ஏற்கனவே நடித்து ஏமாற்றிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவள், இப்போது அவனுக்குத் தெரிந்து மேலும் கோபமாகப் போகவும் வருத்தமாகிவிட்டது.

இங்கிருந்து போவதற்குள் அவனிடம் ஒரு மன்னிப்பைக் கேட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஆகாஷை வம்புக்கட்டி மாலுக்கு இழுத்து வந்திருந்தாள், ஆனால் ஆதனோ அவள் கண்ணிலே சிக்கவில்லை. அவன் தான் ப்ராஜெக்ட் சம்மந்தமாக பெங்களூர் சென்றிருந்தானே அது தெரியாமல் பெண் சென்னையையே அலசிவிட்டு சோர்ந்துவிட்டாள்.

‘அவன் தப்பாக நினைத்து விட்டானே’ என்ற எண்ணமே அவளாய் அடுத்து எதையும் செய்ய விடாமல் இருக்க, அன்று வெளியில் சென்றிருந்த ஆகஷிடமிருந்து வீட்டு லேன்ட்லைனுக்கு போன் வர, எடுத்தவள் “இப்பவா.. நான் மட்டுமா.. பயமா இருக்குடா பக்கி.. நீ வந்து பிக்கப் பன்றியா” என வரிசையாகக் கேட்க,

“உனக்கு அந்த மனுஷனைப் பார்க்கனும்னா உடனே கிளம்பி வா.. இல்லாட்டி போடீ..” என போனை வைத்துவிட, வாயிக்குள் கெட்டவார்த்தையில் அவனைத் திட்டியவள், வேகமாகக் கிளம்பி ஆகாஷ் சொன்ன மெரீனா பீச்சிற்கு வந்துவிட்டாள்.

ஆகாஷ் சொன்ன அடையாளத்தை வைத்து அங்கே போக, இருவரும் ஜூச் கப்புடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர், மாமன் மகனை மூரைத்துக் கொண்டே ஆதனுக்கு எதிரில் அமர்ந்தவள், ஆகாஷின் கையிலிருந்த ஜூசை பிடுங்கி ஒரே மூச்சாகக் குடித்துவிட்டு, இப்போது ஆதனை முறைத்துப் பார்த்தாள்.

அவனும் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் அவளையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை என்னவோ செய்ய “சாரி..” என்ற வார்த்தைகள் தானாக வர, கண்களூம் கலங்க ஆரம்பித்தது.

“ப்ரோ..” என ஆகாஷ் ஏதோ பேச வர, “நான் கொஞ்சம் இவங்கக்கிட்ட தனியா பேசனும் ஆகாஷ். தப்பா எடுத்துக்கலன்னா பெர்மிஷன் கொடுக்குறீங்களா..” எனப் பார்வையை பெண்ணிடம் வைத்துக் கொண்டே கேட்கவும், ஆகாஷ் மறுக்க முடியவில்லை.

தலையசைத்தவன் எழுந்து கடலை நோக்கி நடக்க, “ம்ம் சொல்லுங்க மேடம்.. என்னைத் தேடிட்டே இருந்தீங்களாம்..” என கிண்டலாகக் கேட்க,

“ம்ம்… அதுவந்து சாரி கேட்க..” என வார்த்தைகளை மென்று விழுங்க

“ம்ம் க்கே கேளுங்க..” என அவனும் பட்டென்று சொல்ல,

அதில் அதிர்ந்தாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் “சாரி நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது, வெரி சாரி.. ஆனா..” என அடுத்துப் பேசப்போனவள் ஆதனின் “ஸ்டாப்பிட்… ஜஸ்ட் ஸ்டாப்பிட்..” என்றக் கடுமையான வார்த்தையில் நிறுத்திவிட்டாள்.

கலங்கிய கண்களில் இருந்து இப்போது நீர் வழியத் தொடங்க, அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் அவனையேப் பயத்துடன் பார்க்க, “சாரி மட்டும் தான கேட்கனும் சொன்னீங்க, விளக்கம் சொல்லனும்னு சொல்லலையே. கிளம்புங்க..” என நக்கலாகச் சொல்ல,

“ஏன் இப்படி பன்றீங்க, நானே பாவம்..” என்றதும்

“ஏய் இப்ப வாயை மூடல, உன் மூஞ்சிலயே நாலுக் குத்து விடுவேன்.. என்னா டைலாக் இது. நானே பாவம். நானே பாவம்னு சொல்லிட்டு இருக்க. நீ பாவம்னா அப்போ நீ நடிச்சி ஏமாத்தின நான் பாவமில்லையா..” என்றுக் கடுப்பாகக் கேட்க,

“என்ன நீங்க.. ஏமாத்தினேன் ஏமாத்தினேன்னு சொல்லிட்டு இருக்கீங்க, என்ன ஏமாத்தின்னேன், ஃபர்ஸ்ட் டைம் உங்களைப் பார்க்குறேன், உங்களைப்பத்தி எனக்கு என்னத் தெரியும்.. அதுவும் எனக்கு சென்னைன்னாலே பயம். இங்க பசங்க எல்லாம் மோசமா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன், அப்படி இருக்கும்போது நீங்க நான் அசந்த நேரம் என் கையைப் பிடிச்சி இழுத்துட்டு வந்து கதவை அடைச்சா எனக்குப் பயம் வராதா..? உங்களை நம்பனும்னு எனக்கு எப்படித் தெரியும். பார்த்து பழகின பிறகுதானே தெரியும்.”

“அதான் உங்கக்கிட்ட இருந்து, அந்த இடத்துல இருந்து வெளிய வரனும்னு அப்படி செஞ்சேன். நான் செஞ்சது தப்புன்னு இப்போ வரைக்கும் எனக்குத் தோனவே இல்ல, உங்க இடத்துல இதே ஒரு மோசமான ஆம்பள இருந்து நான் நடிச்சிருந்தா எல்லாரும் என்ன சொல்லிருப்பீங்க, அடடே பரவாயில்லையே நல்லா நடிச்சி, அவனை ஏமாத்திட்டு தப்பிச்சிட்டியேன்னு பாராட்டிருப்பீங்க தானே..”

“அதையெல்லாம் யோசிக்காம சும்மா நடிச்சேன் ஏமாத்தினேன்னு மட்டும் சொல்லிட்டு இருக்கீங்க..” எனப் படபட பொட்டாசகப் பொரிந்தவள், அப்போதும் ஆத்திரம் குறையாமல் “ஏமாத்தினேன்னா நான் என்ன உங்களை லவ் பண்ணிட்டா ஏமாத்திட்டு போனேன். அந்த மாதிரி போன பொண்ணுங்கக்கிட்ட கூட இவ்வளவு கோபப்பட மாட்டாங்க..” எனப் புசுபுசுவென மூச்சுவிட்டுக் கொண்டிருந்தவள் ஆதன் அடுத்து சொன்ன, “சரி நாம எப்போ லவ் பண்ணலாம், சாரி நாம இல்ல நீ.. நீ எப்போ ஸ்டார்ட் பன்ற, நான் ஆல்ரெடி உன்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன். நீ எப்போ பன்ற..” என ஏதோ டாஸ்கை செய்து முடிக்கச் சொல்வது போல சொல்ல,

“என்ன..” என அதிர்ந்தவள் “லூசு.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன சொல்ற…” எனக் கோவமாகக் கேட்க,

“எஸ் பேபி.. லூசுதான்.. நான் லூசுதான், உன்னை அந்த ஐஸ்கிரீம் பார்லர்ல பார்த்ததுல இருந்து லூசாதான் ஆகிட்டேன். அன்னைக்கு உன்னையே கவனிச்சிட்டு இருந்ததால தான், உடனே உன்னை சேவ் பண்ண முடிஞ்சது. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கு என்னை எப்போ பிடிக்குமோ அப்போ கால் பண்ணு.. இது என்னோட கார்ட். இது என்னோட பெர்சனல் நம்பர். நிதானமா யோசிச்சு சொல்லு.. நான் கிளம்பறேன்..” என்று அதிர்ந்த அவள் முகத்தில் சொடக்கிட்டு, தன் கார்டை அவளிடம் கொடுத்து போய்விட்டான்.

அதன் பிறகு ஆகாஷ் வந்ததோ பேசியதோ, அவன் அவளைத் திட்டிக்கொண்டே வீட்டுக்கு அழைத்து வந்ததோ எதுவும் தெரியாது. மனம் அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே உழன்றது.

You may also like

Leave a Comment

About Me

Featured