Home Love - Family - Romanceமுத்தமழை – 44

முத்தமழை – 44

by Vathani S

முத்தமழை – 44

“ஏய் என்னடி?” என தங்கையின் கோபம் புரியாமல் வெற்றியும் பதிலுக்கு கோபப்பட,

“உன்னை போய் ஒருத்தி லவ் பண்ணா பாரு, அவளை முதல்ல கொல்லனும். ஒரு பிச்சைக்காரன் கூட தன்னோட லவருக்கு பிரச்சினைன்னா முதல் ஆளா அங்க வந்து நிற்பான், அவனால முடியுமோ முடியாதோ ஆனா அவளுக்காக நிற்பான். ஆனா நீ..?”

“வந்தனா எல்லை மீறி பேசுற?”

“என்ன எல்லை மீறி பேசுறேன்.. உங்கிட்ட பேச எனக்கு எந்த எல்லையும் இல்ல புரியுதா? அதோட இப்போ நான் உன்னோட தங்கச்சியா பேசல, யாழினியோட ஃப்ரண்டா, உன் லவ்வுக்கு ஏண்டா சப்போர்ட் பண்ணோம்னு தினம் தினம் வருத்தப்படுற ஒரு ஆளா பேசுறேன்..”

“வந்தனா போதும்..”

“என்ன போதும்? அவ குடும்பத்தை பத்தி எல்லாம் உனக்குத் தெரியுமில்ல, அப்போ நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணிருக்கனுமில்ல.. ஒரு பிரச்சினைல இருக்கா, நீ கூட இருக்கனும்னு எவ்ளோ ஏங்கிருப்பா.. அவங்க அம்மாவும், அக்காவும் எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்பாங்க. அதெல்லாம் உனக்கு புரியலையா? கர்ணன் மாமா மட்டும் இல்லைன்னா, யாழி உனக்கு இல்ல புரிஞ்சிக்கோ, இதுல இந்த வல்லி வேற அவக்கிட்ட பேசாம கஷ்டப்படுத்துறா?”

“என்ன நடந்ததுனு எதுவும் சொல்லாம எதுக்கு இப்படி பொரிஞ்சிட்டு இருக்க, நான் இப்போதான் வந்து நுழையுறேன். கால் பண்ணா யாரும் எடுக்கல? நான் என்னதான் நினைக்க?”

“நீ எதுவும் நினைக்காத, பண்ணாத.. ஆனா யாழியை மறந்திடு. அவளுக்கு ஜோன் தான் சரி. உன்னை ப்ரேக்கப் பண்ணிட்டு, அவனை பிக்கப் பண்ணட்டும்..” என கோபத்தில் ரைமிங்காக பேச, வெற்றிக்கு இந்த வானரத்தை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அப்போது அவனை காப்பதற்காகவே வந்தது போல, வசந்த் வர இப்போது அவனையும் சேர்த்து முறைத்தாள்.

‘சோத்து மூட்டை எதுக்கு என்னை முறைக்குது?’ என யோசித்தபடியே “வாங்க வெற்றி.. இப்போதான் வந்தீங்களா?” என சாதாரணமாக கேட்க,

“ஆமா.. அவன் இப்போதான் வந்தான், வரல. உங்களுக்கு என்ன? நாங்கதான் சீரியசா பேசிட்டு இருக்கோமில்ல..” என்று வந்தனா இடையில் புகுந்து வசந்தை கடுப்பாக்க,

“வந்தனா..” என வெற்றி தங்கையை அதட்டி முறைக்க,

“போடா.. மட மாங்கா.. இன்னைக்கு உனக்கு மட்டும் காக்ரோச் பிரியானிடா என் தக்காளி..” என அவனிடம் கத்திவிட்டு, வசந்தை முறைத்தபடியே அங்கிருந்து நகர,

“சாரி வசந்த்.. அவ ஏதோ கோபத்துல கத்திட்டு இருக்கா.. நீங்க தப்பா நினைச்சிடாதீங்க..”

“ஹேய் என்னப்பா நீ? எனக்குதான் உங்க சிஸ்டரை தெரியுமே.. ரொம்ப முன்னாடி இருந்தே உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு இருந்தோம்.. கர்ணன் சார் தான் வந்தனாகிட்ட இருந்து உங்களை காப்பாத்த சொன்னாரு..” என சிரித்தபடியே கர்ணன் இருக்கும் இடத்தைக் காமிக்க, அவன் முகத்திலும் கிண்டல் புன்னகை.

“இன்னைக்கு நான் தான் இங்க என்டர்டெய்ன்மென்ட் போல பாஸ்.. ஆளாளுக்கு என்னை வச்சு செஞ்சிட்டு இருக்காங்க..” என புலம்பியபடியே கர்ணனிடம் சென்றான்.

“என்ன டா..?” என கர்ணனும் சிரித்துக்கொண்டே கேட்க,

“உங்களுக்கு சிரிப்பு என்ன?” என கடுப்பானவன், “என்னாச்சு? ஏன் வல்லி, யாழி கூட பேசுறது இல்லயாம், அந்த வானரம் சொல்லிட்டு போகுது..” என்றான் யோசனையாக.

“ம்ச்.. அவங்க ரெண்டு பேரும் செஞ்ச வேலை அப்படி. அதெல்லாம் விடு, ரெண்டு நாள்ல சரியாகிடும்.. நீ சாப்பிட்டு வா..”

“இல்ல மாமா.. நான் வல்லியைப் பார்த்துட்டு போறேன்..”

“ம்ம் லீவ் எத்தனை நாள்? எப்போ கிளம்பனும்..?”

“நைட் கிளம்பனும் மாமா.. நான் இல்லைன்னா ரெண்டு பேரும் டல்லாகிடுவாங்க, அதுதான் லீவ் கிடைச்சதும், உடனே ஓடி வந்துட்டேன்..”

“ஓ.. அப்போ அவங்க ரெண்டு பேருக்காக மட்டும் தான் சார் வந்தீங்க போல, உங்களுக்காக ஒருத்தி வீட்டையே எதிர்த்து போராடிட்டு இருக்கா, அவளுக்காக வரல. அப்படித்தானே..” என்ற கர்ணனின் குரலில் சற்று கோபம் தெரிந்தது.

“மாமா.. அதுவந்து அது எப்படி நான் யாழியைப் பார்க்காம போவேன்..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் பாண்டியன்.

“விட்டுட்டீங்களா பாண்டியன். ஓக்கே ஆகிட்டாளா?” என்றான் கர்ணன்.

“ஆகிட்டாங்கனு தான் நினைக்கிறேன் சார். இடைல ஒரு காபி குடிச்சிட்டு தான் போனோம். தலைவலின்னு சொல்லிட்டே ஆபிஸ்குள்ள போனாங்க..” என்ற பாண்டியனின் பேச்சில் வெற்றியின் முகம் யோசனையில் சுருங்கியது.

“யார் வசந்த்?” என வெற்றி வசந்தின் காதை கடிக்க,

“யாழினி தான்.. ஃபங்க்ஷன் முடிஞ்சதும் ஆஃபிஸ் கிளம்பிட்டாங்க..” என்றான் அவனும் மெல்ல,

“ஓ..” என்றவனுக்கு முதல் முறையாக தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தீயாக தோன்றியது.

“மாமா..” என வெற்றி தயக்கமாக அழைக்க,

“உள்ள போ வெற்றி.. எல்லாரும் உன்னை பார்த்தா சந்தோசப்படுவாங்க..” என்று மேம்போக்காக சொல்லிவிட்டு பாண்டியனுடன் கிளம்பிவிட, வெற்றிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

“பாஸ்… இதெல்லாம் ஜஸ்ட் சின்ன பிரச்சினை. இதுக்கு போய் சோர்ந்து போகலாமா? முதல்ல யாழினி சிஸ்டர்கிட்ட பேசுங்க. இப்போ அவங்களுக்கு உங்களோட ஆறுதல் ரொம்ப முக்கியம்..” என்றூ வசந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜோன்சும், வந்தனாவும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு வந்தனர்.

அதிலும் வந்தனா வெற்றியை முறைத்து முறைத்து ஜோன்சிடம் பேச, சற்று முன் அவள் ப்ரேக்கப் பற்றி பேசியது ஞாபகத்திற்கு வர, அள்ளு விட்டது போலிஸ்காரனுக்கு.

அதனால், அவர்களை கடந்த ஜோன்சின் சட்டையைப் பிடித்து நிறுத்தி “என்ன டா.?” என கடுப்பாக கேட்க,

“யாழி பேபிக்கு லஞ்ச் கொண்டு போக சொல்லிட்டு இருந்தா தனு.. அதான் என்ன மெனுன்னு கேட்டுட்டு இருந்தேன்.. யாழிக்கு மட்டன் கிரேவி, ஈரல் ஃப்ரை தான் ரொம்பப் பிடிக்கும்” என மிகவும் கூலாக சொல்ல,

‘எத லஞ்சா..’ என இருவரையும் முறைத்துவிட்டு, “நீ போக தேவையில்ல, நான் போய் அவளை அழைச்சிட்டு வரேன்..” என எரிச்சலில் கூற,

“நீ எதுக்கு போற? உனக்கு வேலை இருக்கும், அதைப்பாரு. இந்த வேலைக்கு ஜோன்ஸ்தான் செட்டாவான்..” என வந்தனா பட்டென சொல்லி, ஜோனை இழுத்துக்கொண்டு போக,

“போறபோக்க பார்த்தா, இவ சொன்னதை செஞ்சிடுவா போல.” என வெற்றி புலம்ப, 

‘அப்படி என்ன சொன்னாங்க?’ என வசந்த் யோசனையாக கேட்க,

சற்று முன் அவனிடம் சண்டையிட்டதை கூறியவன், “நிஜமாவே ப்ரேக்கப் பண்ண வச்சிருவா போல பாஸ். அந்த பைத்தியமும் இவ என்ன சொன்னாலும் கேட்கும்..” என தலையில் கை வைக்க, வசந்திற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“பாஸ்.. என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா? இன்னைக்கு அவளுக்கு இருக்கு..” என யாழினியை மனதில் திட்டியபடியே வாசலுக்கு நடந்தான்.

இவர்களின் அலப்பறையை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் விழிகள் வந்தனா எங்கே என தேடியது.

அப்போதுதான் ஒருவரிடம் ஹோட்டலைப்பற்றி சொல்லிவிட்டு, ரிசப்ஷன் ஹாலில் தனியாக அமர்ந்தாள்.

 “ஓணர் மேடம்.. ஓணர் மேடம்..” என்றபடியே தன் முன் வந்து நின்ற வசந்தை கண்கள் சுருக்கி பார்த்தாள் பெண்..

“உங்களுக்கு ஒரு கிப்ட்..” என தன் கையில் இருந்ததை நீட்ட, 

‘வாங்கலாமா? வேண்டாமா? என ஒரு நொடி தான் யோசித்திருப்பள், அடுத்த நொடி அதை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டவ்ள் “தேங்க் யூ..” என்று அங்கு வைத்தே பிரிக்க ஆரம்பித்தாள்.

பிரித்தவளின் விழிகளில் தோன்றிய நர்த்தனத்தை தன் மனமெனும் பெட்டகத்தில் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தவன், கடைசியாக அந்த பொருளைப் பார்த்ததும் அவள் விழிகளில் தெரிந்த கோபத்தையும் சேர்த்தே படம் பிடித்துக் கொண்டான்.

அந்த பரிசுப் பெட்டியை பிரித்து, அதிலிருந்த பொருளைப் பார்த்ததுமே “டேய் மலமாடு இன்னைக்கு செத்தடா..” என கோபத்தில் கத்திக்கொண்டே அவனை துரத்த ஆரம்பிக்க, சிரித்துக்கொண்டே அவனும் அவளுக்கு போக்குக் காட்டி ஓட ஆரம்பித்தான்.

இங்கு சீதாவோடு அமர்ந்திருந்த பார்வதி பாட்டி “ராஜி பேசுறதை எல்லாம் மனசுல வச்சிட்டு யாழினியை தப்பா நினைச்சிடாதீங்க சீதா.. அது தங்கமான பொண்ணு.. அன்னைக்கு என்ன நடந்ததுனு உங்களுக்கே தெரியும்.. அம்மாவும் பொண்ணும் அவளை கண்ல பார்த்துடக்கூடாது. உடனே அவளை பேசிபேசியே சங்கடப்படுத்துறாங்க. நல்லவேளை வல்லியை இங்க விட்டுட்டான் கர்ணன். இல்லைன்னா வயித்துப் புள்ளக்காரினு கூட பார்க்காம அவளையும் கரிச்சுக் கொட்டுவாங்க..” என்றார் வருத்தமாக.

“அம்மா லிங்கா அண்ணா கேட்டும் கூட எங்களுக்கு வல்லியை கொடுக்க விருப்பமே இல்ல.. ஆனா கர்ணாவுக்கும் வல்லிக்கும் விருப்பம் இருக்குனு தெரிஞ்ச பிறகு அதை மறுக்க எங்களால முடியல. வல்லியோட விருப்பம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு எங்களுக்கு வெற்றியோட விருப்பமும் முக்கியம். அதனால தப்பா எந்த முடிவும் எடுக்கமாட்டோம். ஆனா அதுக்கு அவங்க சும்மா இருக்கனுமே..” என்றார் சீதாவும்.

“எனக்கு இதெல்லாம் புரியாம இல்லமா.. மாப்பிள்ளைக்கு இந்த பிள்ளைங்களோட கவலைதான் அதிகம். வல்லியோட பயம் நியாயமானது தானே மா.. ஒரே நாள்ள எவ்ளோ பிரச்சினைகளை அவன் சமாளிப்பான் சொல்லுங்க.. இதெல்லாம் அவனுக்கு புரியவே கொஞ்சநாள் ஆகும். அதுக்குள்ள அடுத்தடுத்து வந்தா என்ன செய்வான். ஏதோ வல்லி அவன் வாழ்க்கையில வந்ததுனால அவன் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியா இருக்கான். இல்லைன்னா அவன் நிலைமையை யோசிச்சுப் பாருங்க..” என்ற பார்வதி பாட்டியின் பேச்சில் சொக்கலிங்கத்திற்கு வேதனை அடி நெஞ்சு வரை இறங்கியது.

“என்னால, எனக்காகனு வந்தான். சொத்து சேர்த்து வச்ச அளவுக்கு, அவனுக்கு நான் நிம்மதியை சேர்த்து வைக்கல ராமு. அதுதான் அவனுக்கு இவ்ளோ கஷ்டம்..”

“விடு லிங்கா.. எல்லாம் சரியாகிடும். மாப்பிள்ளை எல்லாத்தையும் சரி செய்வார்னு நம்பு.. நீ இப்படி வருத்தப்படுறது அவருக்கு தெரிஞ்சால கஷ்டப்படுவார்.. அடுத்து என்ன செய்றதுனு யோசிக்கலாம். யாழினி பிரச்சினையை கொஞ்சநாள் ஆறப்போடலாம். வல்லிக்கு குழந்தை பிறந்த பிறகு இவங்க பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டலாம்..” என ராமசாமி சொல்ல, சிவகுரு எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதை கவனித்த பார்வதி பாட்டி “என்ன சிவா.. ராஜியை நினைச்சு பயப்படுறீங்களா?” என கேட்க,

“அப்படியெல்லாம் இல்ல ம்மா.. வெற்றியை நினைச்சுத்தான் பயப்படுறேன். வல்லிக்கு ஒரு கஷ்டம்னா அவன் சும்மாவே இருக்கமாட்டான். வல்லிக்கு ஒரு பிரச்சினைனா யாழியை விட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டான். அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு..” என தன் பயத்தை கூற,

“அப்படி நடக்க வல்லி விடுவாளா? அவளுக்கு வெற்றி எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு யாழியும் முக்கியம். அதனால நாம பயப்பட வேண்டியதே இல்லை..” என சீதா சொல்லிக் கொண்டிருக்க, யாழினியை அழைக்க வந்த வெற்றி, சிவகுரு எதற்கு பயந்தாரோ அதைத்தான் செய்யப்போகிறான் என அவர்களுக்குத் தெரியவில்லை.

தெரிந்தால்?

You may also like

Leave a Comment

About Me

Featured