Home Love & Romanceஇதழ் 1

அது சென்னையில் உள்ள இன்னதென்று சொல்ல முடியாத, பல வீடுகள் இடைவெளியற்று அமைந்துள்ள சேரிப் பகுதி. அங்கே ஒரே கூச்சல்களும் குழப்பங்களும் நிலவுகிறது; காவல் வாகன சைரன்களும் செய்தி நிருபர்களின் அணிவகுப்புமாக விளங்குகிறது. இரு கும்பல்களின் மோதலில் ஒரு கும்பலைச் சேர்ந்த இருவர் மடிந்து விட, அழுகையும் மேள தாளங்களும் ஆட்டமுமாக இருக்கிறது அந்த இடம். அதில் ஓர் உயிரற்றக் கூட்டின் அருகில் அமர்ந்து அரற்றல் இல்லாமல் தன் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீரோடு அமர்ந்து இருக்கிறார் ஒரு தாய்.

தன் வாழ்வின் போக்கு இனிமேல் எந்தப் பக்கம் எனக் கூட தெரியாமல் அமைதியாக இருக்கிறார் அத்தாய். யாரை நம்பி உற்றார் உறவினரை மறந்து, தாய் தந்தையரைப் பிரிந்து, இத்தனை இன்னல்களிலும் மகளுடன் வாழ்ந்தோமோ அவன் இப்போது உயிரற்றுக் கிடக்கிறான். வாழ்க்கையின் கண்கட்டு விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ? முட்களின் இடையில் சிக்கிக் கொண்ட மூன்று பறவைகளில், துணைப் பறவையின்றி குஞ்சை எங்கனம் காப்பாற்றுவது என்ற நினைப்பே மனத்தை மேலும் மேலும் அழுத்தியது கற்பகத்திற்கு.

காவல் துறையினரிடம் புகாரும் அளிக்காமல், தன் கணவன் பணிபுரிந்த தாதாவிடம் நியாயமும் கேட்காமல், தன்னைப் படைத்த கடவுளிடம் மன்றாடிக் கொண்டு இருந்தார் சத்தமில்லாமல். நாட்கள் கடந்து செல்ல, அவருடைய பெற்றோரும் உயிரோடு இல்லாததால், எங்காவது வீட்டு வேலைக்காவது செல்லலாம் என்று அலைந்து திரிந்து கொண்டு இருந்தார் தன் மகளுடன். அழகான பெண்ணிற்கும் அவளுடைய பதின்வயது மகளுக்கும் யார்தான் முழு மனதாக வேலைக் கொடுக்க முன் வருவார்கள்? ஏதோ அங்கே, இங்கே என்று உழைத்து சேர்க்கும் காசு அவர்கள் இருவரின் கால் வயிற்றுக்குக் கூட போதவில்லை.

இரண்டு மூன்று வருடங்கள் கடந்து…

ஒரு நாள் தெருவில் சென்று கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய விபத்து நடந்தேறுவதைக் கண்டார் கற்பகம். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குடிபோதையில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான அந்த நபரை, அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார் கற்பகம். ஆட்டோவிற்குத் தரக் கூட பணமில்லாமல், விபத்தான அந்நபருடைய பர்ஸைத் தேடி அதிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார். பணக்காரர் போன்று தோற்றமளித்த அந்நபரை மட்டும் ஏதேதோ காரணம் சொல்லிக் கெஞ்சி, அண்மையிலிருந்த ஓர் ஆடம்பர மருத்துவமனையின் உள்ளே அனுப்பி விட்டு, தாயும் மகளும் சொல்லிக் கொள்ளாமல் வீடு திரும்பினர்.

மறதியில் அந்த நபரின் பர்சையும் கையோடுக் கொண்டு சென்றுவிட்ட கற்பகம் தன்னையே நொந்து கொண்டார். அதைத் திருப்பிக் கொடுக்கும் நோக்கில் அடுத்த நாள் மருத்துவமனைக்குச் செல்ல, கொஞ்சம் நல்ல புடவையாகத் தேடி உடுத்திக் கொண்டு போனார். அப்போது தான் மருத்துவமனையின் உள்ளே செல்லவே அனுமதி கிடைக்கும் நிலை. நேற்று விபத்து ஏற்பட்டதன் காரணமாக அனுமதிக்கப்பட்ட நபரைப் பற்றி விசாரித்து, முன்னேறிச் சென்றார் கற்பகம். அங்கு விபத்துக்குள்ளானவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டின் முன்பு ஒரு பதின்வயது சிறுவன் நின்று கொண்டு இருந்தான்.

“தம்பி, இங்க ரவீந்திரன் எங்க இருக்காருப்பா?” என்றார் கற்பகம் அங்கிருந்த சிறுவனிடம்.

“அவர் எங்க அப்பா தான். உள்ள தான் இருக்காரு. நீங்க ஏன் அவரப் பாக்கணும்?” என்றான் அவன் தெளிவான‌ குரலில்.

“அவரோட பர்ஸ தெரியாம எடுத்துட்டு போய்ட்டேன். அதான் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்தேன்பா” என்றார் கற்பகம்.

“நீங்க அவர எப்போ பாத்தீங்க?” என்றான் அவன் சந்தேகமாய்.

“நேத்திக்கு நாங்க தான் ஆக்சிடென்ட் ஆகிக் கிடந்தவர ஆட்டோல கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணோம். அப்போ தான் இந்த பர்ஸு என் கைக்கு வந்துடுச்சு” என்றவர் சற்றே தடுமாறினார்.

“சரி, சரி, இங்கயே இருங்க. ஏதாவது காசு மிஸ் ஆயிடுச்சானு பாக்க சொல்லி அப்பாகிட்ட கேட்டுட்டு வரேன். நேத்திக்கு மாதிரி திருட்டுத்தனமா போய்டாதீங்க” என்றான் அவன் எரிச்சலோடு.

“ஹலோ! யாரப் பாத்து என்ன பேசுற? பெரியவங்கள்ட்ட மரியாதையா பேச கத்துக்கோ” என்று கொதித்தாள் அருகேயிருந்த கற்பகத்தின் மகள்.

“ஆரு, ஏன் கோவப்படுற? யார் என்னனு தெரியாம இப்படிலாம் எதிர்த்துப் பேசுறத நிறுத்து. நான் தான் பேசிட்ருக்கேன்ல” என்று கண்டித்த கற்பகம் “நாங்க இங்கேயே இருக்கோம்பா. நீ போய் உங்க அப்பாகிட்ட கேட்டுட்டு வா” என்றார் சமாதானமாக.

“இது யாரு, இந்தப் பொண்ணு ஓவரா பேசுது. உங்க வீட்டு வேலைக்காரியா?” என்றான் அவன்‌ விடாமல் நக்கலாய்.

பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ பேச முயன்ற ஆருத்ராவை தடுத்த கற்பகம் “அவ என் பொண்ணு தான்பா. எங்களுக்கு வேலை கிடக்கு. நாங்க கிளம்பணும். நீ உங்க அப்பாகிட்ட பேசிட்டு வா” என்றார் அவசர கதியில்.

அதற்குள் அங்கு வந்த செவிலியர் “மேம், உங்கள மிஸ்டர் ரவீந்திரன் கூப்புட்றாரு” என்று கூறிவிட்டு அகன்றார்.

சரியென்று கற்பகம் உள்நுழைய, ஆருத்ரா அந்த சிறுவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்தாள். அதில் ஒருவித வன்மம் எதிரே நின்ற ராகேஷ் ரவீந்திரனுக்கும் கிளர்ந்ததை மறுப்பதற்கில்லை.

உள்ளே நுழைந்த கற்பகத்தை ரவீந்திரன் நன்றியுடன் நோக்க, அப்போது ராகேஷ் “டேடி, இது உங்க பர்ஸ். எல்லாம் கரெக்ட்டா இருக்கானு செக் பண்ணிக்கங்க” எனக் கூற முயன்றான்.

அவனை இடைமறித்த ரவீந்திரன் “பணத்தை விட உயிர் தான் பெருசு, ராக்கி. இப்படி கர்ட்டசி இல்லாம நடந்துக்க யார் கத்துக் கொடுத்தா உனக்கு?” என்று மகனைக் கடிந்து கொண்டார்.

“சின்ன பையன் தான. வளர வளரக் கத்துப்பான். இப்போ உடம்பு பரவால்லையா?” என்றார் கற்பகம் சம்பிரதாயமாய்.

“பெட்டரா தான் இருக்கேன். நேத்து நேரத்துக்கு வந்ததால அதிக பிளட் லாஸ் ஆக விடாம உடனே காப்பாத்திட்டாங்க. நான் இன்னைக்கு உயிர் பொழைச்சதுக்கு நீ தான் காரணம். உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரில. ஆமா, பக்கத்துல இருக்கறது யாரு?”

“அவ என் பொண்ணு தான்” என முந்திக் கொண்டார் கற்பகம்; ராகேஷ் போல் ரவீந்திரனும் தன் மகளை ஆடையை வைத்து மதிப்பிடுவதற்குள் உண்மையை உடைத்திருந்தார்.

“உங்களப் பத்தி நான் இன்னும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன், மிஸ்… உங்க பேரென்ன?” என்று இழுத்தார் ரவீந்திரன், கற்பகம் திருமணமானவர் என்ற அதிர்ச்சியுடனே.

கற்பகம் எதற்கும் பதில் சொல்ல விருப்பமின்றி “எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். உங்க பர்ச திருப்பிக் கொடுக்கத் தான் வந்தேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

ரவீந்திரனும் மனமின்றி தலையாட்டி வைத்தார். அவருக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்தன. கல்யாணமானதிற்கும் சாட்சி இல்லாமல் இருக்கிறாள்; ஆனால், தனக்கு மகள் இவள் தான் எனக் கூறுகிறாளே என கற்பகத்தை எண்ணிக் குழப்பத்தில் ஆழ்ந்தார். ஏதோ ஒன்று அவரை கற்பகத்தின் பக்கமாய் இழுத்தது. தன் மனைவியை இழந்து இத்தனை ஆண்டுகளில் தன்னையே அவர் இழந்திருந்தார்; சில நாட்களாக போதைக்கும் அடிமையாகிக் கொண்டு வந்தார். அதன் பலனே நடந்தேறிய இந்த விபத்து‌. அவர்முன் தன் மனசாட்சியும் மகனின் எதிர்காலமும் கேள்வி கேட்டு அச்சுறுத்தும் இந்நிலையில் கற்பகத்தின் புறமாக அவரின் கவனம் சிதறியது.

“டேடி, அந்த ஆன்ட்டி தான் உங்கள நேத்திக்குக் காப்பாத்துனாங்களா? அவங்க நல்லவங்களா இருந்தா, அப்புறம் ஏன் உங்க பர்ஸ எடுத்துட்டுப் போனாங்க?” என்றான் ராகேஷ்.

“என்ன நடந்துச்சுனு முழுசா தெரியாம அவசரப்படறதால தான் நிறைய உறவுகள் உடைபடுது, ராக்கி. அதனால, எப்பவும் நிதானத்தோட இருக்கணும்” என்றார் அவர் தன் மகனைக் கவலையுடன் நோக்கி.

நேற்றைய சம்பவம் அவரது மனதை வேறு திசையில் பயணிக்க வைத்தது. ஒருவேளை அந்த விபத்தில் தன் உயிர் போயிருந்தால்… தன் மகனின் நிலை என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே அவரை மறுதிருமணத்திற்கு சிந்திக்க வைத்தது. மருத்துவமனையில் இருந்து தேறி வந்தவர் அந்த விபத்து நடந்த சாலையில் அடிக்கடி பயணித்தார். காலம் கடந்த ஓர் அடிமன ஈர்ப்பு அந்த நாள் கண்ட பெண்ணை மீண்டும் தேட வைத்தது.

அவரின் தேடலுக்குப் பயனாக, கற்பகமும் ரவீந்திரனின் கண்களில் சிக்கினார். கற்பகமோ அவரைக் கண்ட விநாடியில் பயந்தே போனார்; உதவி புரிகிறோம் என்ற பெயரில் தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ என்று பதற்றமுற்றார். இவரின் படபடப்பை உணர்ந்திருந்தும் ரவீந்திரன் இவரைப் பின்தொடர்வதை விட்ட பாடாக இல்லை. என்ன முயன்றும் இவரின் வீடு இருக்கும் பகுதியை மட்டும் ரவீந்திரனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் கற்பகம் கோபத்துடன் ரவீந்திரனை நெருங்கி “என்ன பிரச்சனை உங்களுக்கு? எப்போ பாத்தாலும் இந்த ரோட்டுல நின்னுட்டு என்னை நோட்டம் விட்டுட்டே இருக்கீங்க. ச்ச்ச… அன்னைக்கு உங்களக் காப்பாத்துனது தான் நான் பண்ண பெரிய தப்பே” என்றார், அருகில் யாருக்கும் கேட்காத வகையில்.

“உங்களப் பத்தி நான் தெரிஞ்சிக்கணும். அதுக்குத் தான் இப்படித் தவம் கிடக்கேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் பிசினெஸும் குடியும் மட்டும் தான். ஏனோ அடுத்தவங்க விஷயத்துல நான் மூக்க நுழைக்கறது இல்ல. ஆனா, உன் விஷயத்துல எல்லாம் தலைகீழா நடக்குது. உன்ன பாக்காம இருக்க முடில. நிஜமா. உன்ன டெய்லி பாக்கும்போதே தெரியுது. எதுக்காகவோ தாயும் மகளும் அல்லாடிட்டு இருக்கீங்கனு புரிஞ்சுக்க முடியுது. உன் கவலை படிஞ்ச முகத்துக்குக் காரணம் என்னனு மட்டும் சொல்லு. நான் இதுமாதிரி கீழ்த்தரமா நடந்துக்கிட்டதே இல்ல. உன் விஷயம் மட்டும் விதி விலக்கா அமைஞ்சுடுச்சு” என்று தன் மீதே வெறுப்புடன் பேசிக் கொண்டிருந்தார் ரவீந்திரன். கற்பகம் போலவே யார் கவனத்தையும் ஈர்க்காத வகையில்.

“ஒன்னு தெரிஞ்சுக்கங்க. யார்கிட்டயும் அனுதாபம் தேடிட்டு நிக்கிறது என் பழக்கமில்ல. நீங்க உதவி செய்ய முன்வந்தாலும் எனக்கு அது வேணாம். எனக்கு எல்லாமே… என் பொண்ணு தான். ஆனா, அவள… எங்கள நாங்க பாத்துக்குறோம்” என்று தொண்டை விக்கித்துப் பேசினார் கற்பகம்.

“சரி. எதுவா இருந்தாலும், ப்ளீஸ், ஒரு பத்து நிமிஷம் என் கூட உக்காந்து பேசிட்டுப் போ. இங்க வேணாம். அதோ, அந்த பார்க்ல கூட்டமும் இருக்கு. உக்காந்து பேச இடமும் இருக்கு” என்றார் ரவீந்திரன் கெஞ்சும் தொனியில்.

மற்றவர்களின் பார்வையில் கோள்விக்குறியாகாமல் இருப்பதற்காக கற்பகமும் அவரின் சொல்லுக்கு சம்மதித்தார்; எதிரே தெரிந்த பூங்காவில் சென்று அமர்ந்தார். ஆருத்ராவை விளையாட அனுப்பிவிட்டு, யாரிடமும் பகிர இயலாமல் மனதை அழுத்திக் கொண்டு இருந்த சோகத்தைக் கூறத் தொடங்கினார் அந்தப் புது உறவிடம்.

“என் புருஷன் எங்க ரெண்டு பேரையும் தனியா இந்த நரகத்துல விட்டுட்டுப் போய் சேந்துட்டாரு. அதுக்கு அப்பறம் எங்க தேடியும் எனக்கு வேலை கிடைக்கல. எங்கயாச்சும் ஏதாச்சும் வேலை அமைஞ்சாலும் அந்தக் காசு சாப்பாட்டுக்கே சரியா போகுது. ஆருவைப் பழையபடி ஸ்கூல் படிக்க வைக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, முடியல. வேலையைப் பாக்கறதா, இவளைப் பாக்கறதானே தெரியல” என்றார் கண்களில் நீர் தளும்ப.

“ப்ளீஸ்! கன்ட்ரோல் யுவர்செல்ஃப்” என ரவீந்திரன் சமாதானப்படுத்த முயன்றார். “என்னால புரிஞ்சிக்க முடியுது. ஒரு பொண்ணு தனியா தன் குழந்தைய, அதுவும் பொட்டைப் புள்ளைய, வளத்துக் காப்பாத்துறது எவ்ளோ கஷ்டம்னு சொல்லித் தான் தெரியணுமா? உங்கள கம்பேர் பண்ணும்போது எனக்கு அவ்ளோ கஷ்டம்லாம் இல்ல. என் இறந்து போன மனைவியோட பழைய நினைவுகள்லயே ஊறிப் போயிட்டு என்னால வெளில வர முடியல. நீங்க எப்புடி உங்க பொண்ணு தான் முக்கியம்னு நினைக்கிறீங்களோ. அது மாதிரி தான் எனக்கும். என் பையன் தான் இப்போ எனக்கு மிஞ்சுன ஒரே உறவு‌. அவனுக்காக எல்லாம் செய்ய என்கிட்ட காசு இருக்கு. ஆனா, அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு நினைச்சாலே… அவன் பேச்சுல, செயல்ல அவங்க அம்மாவோட ஞாபகம் தான் மறுபடி மறுபடி. இத யார்கிட்டயும் நம்பி சொல்லவும் முடில. மனசுல போட்டு மூடவும் முடியல. சரி… நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும். நீங்க அதைத் தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல” என்று கற்பகத்தின் முகத்தைப் பார்த்தே தொடர்ந்தார் அவர்.

“சொல்லுங்க. இன்னையோட எல்லா கணக்கையும் முடிச்சுக்கலாம்” என்றார் பெண்மணி எங்கோ வெறித்தபடி.

“யு ஸீ. நீ ரொம்ப அழகாயிருக்க. உன் அழகே உனக்கு ஆபத்தா முடிய ஏகப்பட்ட சான்ஸ் இருக்கு. நெகட்டிவா ஆரம்பிக்குறேன்னு நினைக்காத. அதான் ஃபேக்ட். நீயும் தனியாள் தான். நானும் தனியாள் தான். நாம கல்யாணம் பண்ணிக்கலாம். எல்லா பிரச்சனையும் சரி ஆகலைனாலும், உன் பொண்ண நான் படிக்க வைக்கிறேன். என் பையன நீ பத்திரமா பாத்துக்கோ. இப்போ நான் பேசுன பேச்சுனால உனக்குக் கோவம் வந்தா என்னை மன்னிச்சிடு” என்றார் அவர் தீர்க்கமாக.

அப்போது அங்கு வந்த பூக்காரப் பெண் ஒருவர் “ராசா, உன் வூட்டுக்காரியா இது? பூ வாங்கி வச்சா மகாலட்சுமியாட்டம் இருக்கும்பா” என்று அவர் கையில் ஒரு முழம் பூவைத் திணித்து விட்டுப் போனார்.

மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டவர் “என்னைக் கேவலமா நினைக்காத. அவ்ளோ அவசர புத்தி எனக்கில்ல. இது என் வொய்ஃப் ஃபோட்டோக்குப் போடறதுக்காக வாங்கினது” என்றார் புன்னகை பொங்க.

கற்பகம் மௌனத்தை உடைத்து ரவீந்திரனுக்கான பதிலை மொழிவாரா?

You may also like

Leave a Comment

About Me

Featured