தூரம் 8
பேச்சியம்மாள், மூக்கையன் தம்பதியினருக்கு கந்தவேலு, கதிர்வேலு, தேவி என மூன்று பிள்ளைகள். ஆரம்பத்தில் கந்தவேலின் வீட்டில்தான் பேச்சி இருந்தார். இளைய மகனின் இறப்பிற்கு பிறகே அங்கு சென்றார். அப்போதிருந்தே சந்திராவிடம் தான் இருக்கிறார் பேச்சி.
சந்திரா, கதிர்வேல் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் நடேசன், இளையவள் நந்தினி. இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். நடேசன் ராணுவத்தில் இருக்க, வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்லும்போது, குடும்பத்தைப் பிரிந்து மகன் படும் கஷ்டத்தைப் பார்த்து குடும்பமாகவே இரு என்று மருமகளையும் பேத்திகளையும் நடேசனோடே அனுப்பிவிட்டார் சந்திரா.
அந்த குடும்பத்தில் மிகவும் சிறியவள் நந்தினி. இரண்டு குடும்பத்திற்கும் அவள் ஒருத்தியே பெண் வாரிசு. நந்தினியின் இருபது வயதில், மிகவும் ஆடம்பரமாக அவளுக்கு திருமணம் நடந்தது.
யார் கண் பட்டதோ…? மூன்று மாதத்தில் கணவரும் இறந்து விட, காரியங்கள் முடியவும் கையோடு அழைத்து வந்து விட்டான் இளங்கோ.
ஊர் என்ன பேசும் என்ற கேள்விக்கு, “பேசுறவன் பேசிட்டுதான் இருப்பான். அவனுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. எனக்கு நந்தினியோட வாழ்க்கைதான் முக்கியம். அவளை அப்படியே விட்டுட சொல்றீங்களா? அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நாங்க பார்த்துக்கிறோம்.” என பேச வந்த அனைவரின் வாயையும் அடைத்து விட்டான்.
இளங்கோவின் முடிவுதான் அந்த வீட்டில் கடைசி. அதனால் அவன் பேச்சை யாரும் தட்டவில்லை.
ஒரு வருடம் வீட்டில் இருந்தவளை, மதுரையில் விடுதியுடன் கூடிய ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் சேர்த்து விட்டான். படிப்பு முடிய வேலை செய்துகொண்டே மேலும் படிக்க ஏற்பாடும் செய்தான்.
இப்போது நந்தினி தேனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணித பேராசிரியை.
ஊருக்கு பயந்து பெண்ணை விட்டிருந்தால், இன்று இவ்வளவு சந்தோசமாக தன் மகளைப் பார்த்திருக்க முடியாது. என்னதான் நடேசன் தங்கைக்கு செய்வான் என்றாலும், இளங்கோ அளவிற்கு கிடையாது. அதை நடேசனே ஒத்துக்கொள்வான்.
மூன்று பெண்களை தனியாக விட்டிருக்கிறோம் என்ற பயம் நடேசனுக்கு எப்போதுமே கிடையாது. தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை இளங்கோ பார்த்துக்கொள்வான் என்று அவனுக்குத் தெரியும்.
அதோடு எல்லையில் ஏதேனும் விபரீதங்கள் நடந்து தனக்கு எதுவும் ஆனால் கூட, தன் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொள்வான் என்றும் தெரியும்.
இளங்கோ என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று அனைவருமே நம்புவார்கள். அதில் சந்திராதான் முதலில்.
“சித்தி!” என்ற சத்தத்துடன் வீட்டுக்குள் நுழைந்த இளங்கோவை, “வா ண்ணா! இப்பதான் அப்பத்தாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.” என சிரித்தபடியே வரவேற்றாள் நந்தினி.
“வரேன் ராசாத்தி, சித்தி எங்க போனாங்க?” என்றபடியே வீட்டை நோட்டமிட,
“வந்ததும் உன்னோட சிஐடி வேலையை ஆரம்பிக்காத, உள்ள அப்பத்தாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்காங்க.” என சிரித்தபடி முறைக்க,
அதில் சிரித்தவன், “சரி, அப்போ உள்ளேயே போயிடலாம்.” என உள்ளறை நோக்கி நடக்க,
“சாப்பிட்டியா ண்ணா? இல்ல, சாப்பாடு எடுத்து வைக்கவா?” என நந்தினி கேட்க,
“அதெல்லாம் வேண்டாம்ப்பா, உங்க அண்ணி அங்க சமைச்சிருப்பா. பசங்க இப்போ வந்துடுவாங்க, பசங்க கூட சாப்பிட்டுக்கிறேன்.” என்றதும்,
“சரி, அப்ப டீ வைக்கட்டுமா?” என விடாமல் கேட்க,
“அதுவும் வேண்டாம் ராசாத்தி, இப்பதான் காபி குடிச்சிட்டு வந்தேன். தண்ணி மட்டும் கொடு, போதும்.” என்றபடி அவளின் மண்டையில் தட்ட,
“உங்களை…” என பல்லைக் கடித்தவள், “போங்க…” என்றுவிட்டு தண்ணியெடுக்க சென்றுவிட, பேச்சி இருக்கும் அறைக்குள் சென்றான் இளங்கோ.
“வா தம்பி…” என சிரித்த சந்திராவிடம் தலையை அசைத்தவன், அப்பத்தாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவரின் கைகளை வருடியவாறே அவனும் அவரை பார்க்க, பெரியவருக்கு கண்ணில் நீர் இறங்கியது.
“என்ன அப்பத்தா… என்ன செய்யுது? ஆஸ்பத்திரிக்கு போலாமா? இல்ல, டாக்டரை வர சொல்லட்டா?” எனவும், ‘வேண்டாம்’ என பேச்சி தலையசைக்க குழப்பமாக சந்திராவைப் பார்த்தான்.
“கொடியோட அப்பா வந்து பார்த்துட்டு போனதுல இருந்து இப்படித்தான் இருக்கு தம்பி. என்னனு சொல்லவும் மாட்டேங்குது. அழுதுட்டே இருக்கு…” என சந்திரா சொல்ல, “ம்ம்…” என்றவன் அப்படியே அமைதியாகிவிட்டான்.
பேரனின் அமைதி அவருக்கு மேலும் கண்ணீரைத்தான் கொடுத்தது. கொடியை விரும்புவதாக முதலில் அவரிடம்தான் சொன்னான்.
முதலில் சுப்புவைக் கொண்டு அவர் யோசிக்க, சுப்பு மகளிடம் சென்று சண்டையிடவும்தான் இதில் தீவிரமானார் பேச்சி.
வேண்டவே வேண்டாமென்ற மருமகனை பேசியே சமாளித்து திருமணத்தை முடித்தார். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்து அத்தனை பெருமை அந்த பெரியவருக்கு.
அவர் கண்ணே பட்டுவிட்டது போல, அதுதான் அப்படியொரு பிரச்சனை வந்து, அவர்கள் வாழ்க்கையே சோதனையாகி போனது.
“என்ன தம்பி?” என்ற சந்திராவிடம்,
“ஒன்னுமில்ல சித்தி, நான் உங்ககிட்ட நந்தினி பத்தி பேசலாம்னுதான் வந்தேன்.” எனவும், நந்தினி வரவும் சரியாக இருந்தது.
“என்னைய்யா…?” என்றவரிடம், வெங்கடேஷ் கூறியதை சொல்ல, “எனக்கென்னய்யா, நீ பார்த்து எது செஞ்சாலும் சரிதான். அவளுக்கு விருப்பமானு கேட்டுக்கோங்க.” என்றுவிட்டார் சந்திரா.
“அதெல்லாம் பார்த்துக்கலாம் சித்தி, ராசாத்தி நீ சொல்லு உனக்கு என்ன தோனுது?” என சந்திராவிடம் ஆரம்பித்து நந்தினியிடம் முடிக்க,
“அது ண்ணா… என்னைப்பத்தி எல்லாமே அவங்களுக்கு தெரியுமா? தெரியலன்னா எல்லாமே சொல்லிட்டு, அதுக்குப் பிறகும் இது சரி வரும்னா செய்யலாம்.” என்றாள் தயங்கியபடி.
“வெங்கட் அதை சொல்லாம இருந்திருப்பானா? மாப்பிள்ளைக்கு எல்லாம் தெரியும். நானும் விசாரிச்சேன். உனக்கு பிரச்சனை இல்லைன்னா சொல்லு, நான் நடேசனுக்கு பேசிட்டு மாப்பிள்ளை வீட்டுலயும் பேசணும்.” என்றான்.
“அண்ணி என்ன சொன்னாங்க, அண்ணிக்கிட்ட கேட்டீங்களா?” என்றாள் நந்தினி.
“இல்லையே… ஏன், நீயே கேளேன்.” என இளங்கோ கூற,
“நானா? நான் எப்படி கேட்க? நீங்களே அண்ணிக்கிட்ட கேளுங்க.” என நந்தினி தயக்கமாக கூற,
“ராசாத்தி, அண்ணிக்கிட்ட என்ன தயக்கம்? அவ உன்னை தப்பா நினைப்பாளா?” எனவும்,
“இல்ல… இல்ல… அண்ணி அப்படியெல்லாம் இல்ல, நான் கேட்குறேன்…” என தன் போனை எடுத்து கொடிக்கு அழைக்க, போன் அடித்துக்கொண்டே இருந்தது.
“அண்ணி எடுக்கலையே, வீட்டுல இல்லையா?” என நந்தினி கேட்க,
“பசங்க வந்துருப்பாங்க, சரி நீயும் வா. அவக்கிட்ட சொல்லிட்டு, அப்படியே என்ன சொல்றான்னு கேட்டுட்டு போ.” என அழைக்க,
“போயிட்டு வா, போகும் போது இந்த காயை எடுத்துட்டு போ. பெரியம்மாவுக்கும் சேர்த்து எடுத்துட்டு போ.” என சந்திரா சொல்ல,
“சரிம்மா.” என்றபடியே இருவரும் கிளம்பி இங்கு வீட்டுக்கு வர, பிள்ளைகள் இன்னும் வரவில்லை. இளங்கோ எப்படி விட்டு சென்றானோ அப்படியே அமர்ந்திருந்தாள் கொடி.
அதைப் பார்த்து யோசனையாகவே உள்ளே வந்தவன், இருவருக்கும் பேச தனிமை கொடுக்கும் பொருட்டு, “ராசாத்தி நீ இரு, நான் டியூசன் போய் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரேன்.” என கிளம்பிவிட,
இளங்கோ கிளம்பும் வரை அமைதியாக இருந்த நந்தினி, அவன் தலை மறையவும், “என்ன… என்ன அண்ணி, ஏன் இப்படி உக்காந்துருக்கீங்க? மறுபடியும் வலி வந்துடுச்சா? மாத்திரை போட்டீங்களா? என்ன செய்யுது அண்ணி…?” என பதட்டமாக கேட்க,
‘ஒன்னுமில்ல நந்தினி, ரொம்ப பேசிட்டேன் அதான் வலி. சாப்பிட்டு மாத்திரை போடுறேன். நீ சாப்பிட்டியா?’ என சைகையில் பேச,
அதை கண்டுகொள்ளாத நந்தினி கிச்சனுக்குள் சென்று கொடி எடுத்துக்கொள்ளும் மாத்திரையையும் தண்ணீரையும் கொடுத்து, “முதல்ல மாத்திரையை போடுங்க அண்ணி. வலி வந்ததுமே போட சொன்னாங்க இல்ல? ஏன், இப்படி பண்றீங்க அண்ணி?” என நந்தினி அழவே ஆரம்பித்துவிட,
நந்தினியிடமிருந்து வாங்கிய மாத்திரையை போட்டு, அவளை சமாதானம் செய்த கொடியை முறைத்து, “நீங்க இப்படியே செஞ்சிங்க, நான் அண்ணாக்கிட்ட சொல்லிடுவேன். இதுக்கு மேல நான் பொறுமையா இருக்கமாட்டேன்.” என கத்தவும்,
இளங்கோ பிள்ளைகளோடு உள்ளே வரவும் சரியாக இருக்க, இருவரையும் வித்தியாசமாக பார்த்தபடியே வந்தான் இளங்கோ.
அவனைப் பார்த்ததும் இருவர் முகமும் பதட்டமாக, அதை கவனித்தவன், “என்ன ராசாத்தி?” எனவும்,
“நந்தினி வா, இன்னைக்கு இடியாப்பம் உனக்கும் சேர்த்துதான் செஞ்சேன். வா எடுத்து வைக்கலாம், நீயும் சாப்பிட்டு கிளம்பு.” என தன் வலியையும் மீறி கொடி வேகமாக பேச,
“என்ன இடியாப்பமா? எனக்கு வேண்டாம், நான் சப்பாத்தி கேட்டேன்.” என நர்த்தனா கத்த, மகளின் இந்த சத்தத்தை யோசனையாக பார்த்தான் இளங்கோ.
“ஹேய் என்னடி வாய் நீளுது? நேத்து தானே சப்பாத்தி செஞ்சாங்க. இன்னைக்கும் எப்படி செய்ய முடியும்? வர வர அம்மான்னு கொஞ்சமும் பயமும் இல்ல மரியாதையும் இல்ல…” என நந்தினி சத்தம் போட,
“அவங்களே ஒன்னும் சொல்லல, நீங்க ஏன் இப்படி கத்துறீங்க? எனக்கும் இடியாப்பம் வேண்டாம்.” என நவீனும் கத்த,
“அப்படியா? ரொம்ப சந்தோசம்! உங்கப்பாவை கூப்பிட்டு போய் ஹோட்டல்ல சாப்பிடுங்க. அண்ணி செய்யமாட்டாங்க.” என இப்போதும் பதில் கொடுத்தது நந்தினிதான்.
“ஏன், இவங்க என்ன செய்றாங்க? எங்களுக்கு சமைச்சு கொடுக்குறதுதான வேலையே…” என நர்த்தனா சொல்லி முடிக்கும் முன்னே, அவளை ஓங்கி அறைந்திருந்தாள் நந்தினி.
மகளின் இந்த பேச்சில் அதிர்ந்துதான் போயிருந்தான் இளங்கோ. என்ன செய்கிறார்கள் இவர்கள் என அதிர்ச்சியில் பிள்ளைகள் இருவரையும் பார்த்துக் கொண்டே, மனைவியைத் தேட கொடி அங்கில்லை.
கிச்சனில் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.
“எவ்வளவு திமிர்டீ உங்களுக்கு? வாயை உடைச்சிருவேன் பார்த்துக்கோங்க. என்ன பயம் போயிடுச்சா? ஹ்ம்ம்… எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்தது? அம்மாவை மரியாதையா பேசணும்னு தெரியாதா? மூனு நேரமும் ஆக்கிப்போட்டு உங்களை பார்த்துக்குறாங்க இல்ல, அந்த திமிர். இத்தனை பேர் இருக்கும் போதே இவ்வளவு திமிரா பேசுறீங்களே, நாங்க இல்லைன்னா எவ்வளவு பேசுவீங்க?” என நந்தினி கோபத்தில் கத்த, சத்தம் கேட்டு கந்தவேலும் சுப்புவும் வந்துவிட்டனர்.
“என்ன… என்ன கண்ணு…” என நந்தினியிடம் கந்தவேலு விசாரிக்க,
“அப்பத்தா, இந்த அத்தை என்னை அடிச்சிட்டாங்க.” என சுப்புவிடம் புகார் வாசித்தாள் நர்த்தனா.
மகன் இருக்கும்போதே நந்தினி கை நீட்டியிருக்கிறாள் என்றால், பேத்தி மீதுதான் தவறு என புரிந்த சுப்பு, நந்தினியைப் பார்க்க,
“எல்லாம் உங்களால வந்ததுதான். அவ ஆரம்பத்துல இப்படி பேசும் போதே கண்டிச்சிருந்தா, இன்னைக்கு இவ்ளோ திமிரா பேசுவாளா? அவ கெட்டதும் இல்லாம, அவனையும் சேர்த்து கெடுத்து வச்சிருக்கா.” என கோபம் கொஞ்சமும் குறையாமல் பேச,
என்ன சொல்வார் சுப்பு, மகள் உண்மையை புட்டு புட்டு வைக்கும் போது. அமைதியாக மகனைப் பார்க்க, அவனின் பார்வையோ கிச்சனில் இருந்தது.
யாரிடம் தன் கோபத்தையும் இயலாமையையும் காட்டுவது என தெரியாமல், அந்த மாவில் காட்டிக் கொண்டிருந்தாள் கொடி.
அண்ணனின் பார்வையைத் தொடர்ந்த நந்தினிக்கு கொடியைப் பார்த்ததும் கோபம் உச்சிக்கு ஏறியது. வேகமாக கிச்சனுக்குள் சென்று கொடியின் கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்கி தூரமாக வைத்துவிட்டு, “நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம், போய் ரெஸ்ட் எடுங்க.” என பல்லைக் கடித்தபடி மெதுவாக கூற,
‘பரவாயில்ல நந்தினி, இதெல்லாம் எனக்கு பழக்கம்தானே… நான் பண்றேன், பசியில இருப்பாங்க..” என சைகையில் சொல்லிவிட்டு வேலையைத் தொடர,
மீண்டும் அதை பிடுங்கியவள் அப்படியே இளங்கோவிடம் வந்து, “அண்ணிக்கு உடம்பு சரியில்ல, மாத்திரை போட்டுருக்காங்க. அதுவும் சாப்பிடாம… அவங்களால் நிக்ககூட முடியல. அப்படியிருந்தும் இவ்வளவு வேலை செஞ்சி வச்சிருக்காங்க. அதுவும் பத்தலனு என்ன பேச்சு பேசுறா. இவளை பேசவிட்டு இப்படித்தான் வேடிக்க பார்ப்பீங்களா? நாளைக்கு எனக்கு வர மாப்பிள்ளையும் இப்படியே இருந்தா என்ன செய்ய? அதனால எனக்கு கல்யாணமும் வேண்டாம் எந்த கருமாதியும் வேண்டாம்.” என்று ஆக்ரோசமாக கத்த, அதில் இளங்கோவே சற்று பயந்துதான் போனான்.
இளங்கோவே பயந்தான் என்றால், பிள்ளைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இருவரும் சுப்புவின் இருபக்கமும் ஒட்டிக்கொள்ள, கந்தவேலும் இளங்கோவும் நந்தினியைப் பிடித்துக்கொள்ள, அதிர்ச்சியில் மயங்கி சரிந்த கொடியை யாருமே கவனிக்கவில்லை. துயரங்கள் வெளிப்படும் நேரம் குறுகுகிறதோ…
***